வேதங்கள்
ஆல்மா 61


அதிகாரம் 61

அரசாங்கத்திற்கு விரோதமாய் நடந்த போராட்டத்தையும் கலகத்தையும் குறித்து மரோனியிடம் பகோரன் சொல்லுதல் – ராஜ மனுஷர் சாரகெம்லாவைக் கைப்பற்றி லாமானியரோடு ஒன்றாய்க் கூடிச்சேருதல் – கலகக்காரருக்கு விரோதமாய்ப் போக படைபல உதவியை பகோரன் நாடுதல். ஏறக்குறைய கி.மு. 62.

1 இதோ, இப்பொழுது, அந்தப்படியே, மரோனி தன் நிருபத்தைப் பிரதான விசாரணைக்காரனுக்கு அனுப்பிய உடனே, அவன் பிரதான விசாரணைக்காரனாகிய பகோரனிடத்திலிருந்து ஒரு நிருபத்தைப் பெற்றான். அவன் பெற்ற வார்த்தைகளாவன:

2 இத்தேசத்தின் பிரதான விசாரணைக்காரனாகிய, பகோரன் என்னும் நான், இவ்வார்த்தைகளை சேனையின் பிரதான சேர்வைக்காரனாயிருக்கிற மரோனிக்கு அனுப்புகிறேன். இதோ, மரோனியே நான் உனக்குச் சொல்லுகிறேன், நான் உனது மிகுந்த உபத்திரவங்களிலே சந்தோஷப்படுவதில்லை. ஆம், அது என் ஆத்துமாவைத் துக்கப்படுத்துகிறது.

3 ஆனாலும் இதோ, உன் உபத்திரவங்களில் சந்தோஷப்படுவோரும் உண்டு, ஆம், அவர்கள் எனக்கும், சுதந்திர மனுஷரான என் ஜனங்களுக்கும், விரோதமாக கலகத்தில் எழும்பினார்கள். ஆம், எழும்பியிருக்கும் அந்த கலகக்காரர் மிகவும் அநேகராயிருக்கிறார்கள்.

4 இந்த நியாயாசனத்தை என்னிடத்திலிருந்து பறிக்க வகைதேடின அவர்களே மிகுந்த அக்கிரமத்திற்குக் காரணமானவர்கள்; ஏனெனில் அவர்கள் மிகவும் முகஸ்துதியாய்ப் பேசி, அநேக ஜனங்களின் இருதயங்களை புறம்பே வழிநடத்திப் போனார்கள், அதுவே எங்களுக்குள்ளே மிகவும் உபத்திரவம் உண்டாகக் காரணமானது; அவர்கள் எங்களுக்கு உணவுப் பொருட்களைத் தடுத்து, எங்களது சுதந்திர மனுஷர் உங்களிடத்திற்கு வரக்கூடாதபடிக்கு அவர்களைத் தடுத்தார்கள்.

5 இதோ, அவர்கள் முன்பிருந்து அவர்கள் என்னைத் துரத்தினார்கள்; நான் என்னால் திரட்ட முடிந்தவரை மனுஷரை என்னோடு கூட்டிக்கொண்டு, கிதியோன் தேசத்திற்குப் பறந்தோடினேன்.

6 இதோ, நான் தேசத்தின் இப்பகுதி முழுமைக்கும் ஒரு பிரகடனத்தை அனுப்பியிருக்கிறேன், இதோ, அவர்கள் தங்கள் தேசத்தையும், தங்கள் சுதந்திரத்தையும் காத்துக்கொள்ளவும், எங்கள் குற்றங்களுக்காகப் பழிதீர்க்கவும், தங்கள் போர்க்கருவிகளை எடுக்க, அனுதினமும் எங்களிடத்தில் வந்துகொண்டிருக்கிறார்கள்.

7 அவர்கள் எங்களிடத்தில் வந்ததினிமித்தம், எங்களுக்கு விரோதமாய்க் கலகத்தில் எழுந்தவர்கள், எங்களுக்குப் பயந்து, எங்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்கு வர அஞ்சுமளவிற்கு, தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.

8 அவர்கள் சாரகெம்லா பட்டணம் அல்லது தேசத்தை வசப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் மேல் ஒரு ராஜாவை நியமித்திருக்கிறார்கள், அவனோ லாமானியர்களின் ராஜாவிற்கு எழுதி, அதன்மூலம் அவனோடு கூட்டு சேர்ந்து கொண்டான்; அந்த ஒப்பந்தத்தின்படி அவன், தான் சாரகெம்லா பட்டணத்தைக் காக்கப்போவதாகவும், அதைக் காப்பதின் மூலம், லாமானியர் மீதமுள்ள தேசத்தையும் கைப்பற்றக்கூடும் என்றும், இந்த ஜனங்கள் யாவரும் லாமானியரால் மேற்கொள்ளப்பட்ட பின்பு, அவர்கள் மேல் தான் ராஜாவாக்கப்படுவான், என்றும் எண்ணுகிறான்.

9 இப்பொழுதும், உன்னுடைய நிருபத்திலே என்னை நீ கடிந்துகொண்டாய். ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை; நான் கோபப்படாமல், உன் உள்ளத்தின் பெருந்தன்மையில் களிகூருகிறேன். பகோரனாகிய நான் என் ஜனத்தினுடைய உரிமைகளையும், சுதந்திரத்தையும் காக்கவே என் நியாயாசனத்தை வைத்துக் கொள்ளவேண்டுமென்று நாடுகிறேனே தவிர, அதிகாரத்திற்காக அல்ல. தேவன் நம்மை சுதந்திரவாளிகளாக்கிய, அந்த சுதந்திரத்திலே என் ஆத்துமா உறுதியாய் உள்ளது.

10 இப்பொழுதும் இதோ, நாங்கள் இரத்தம் சிந்துமளவிற்கும் துன்மார்க்கத்தை எதிர்த்து நிற்போம். லாமானியர்கள் தங்கள் சொந்த தேசத்திலே தரித்திருப்பார்களெனில், அவர்கள் இரத்தத்தைச் சிந்தமாட்டோம்.

11 எங்களுடைய சகோதரர் கலகம் பண்ணாமலும், பட்டயத்தை எங்களுக்கு விரோதமாய் எடுக்காமலும் இருப்பார்களெனில், நாங்கள் அவர்களின் இரத்தத்தைச் சிந்தமாட்டோம்.

12 தேவ நியாயத்தின்படி தேவைப்பட்டாலோ, அல்லது நாங்கள் செய்யும்படி அவர் கட்டளையிட்டாலோ, நாங்கள் எங்களை அடிமை நுகத்தடிக்கு கீழ்ப்படுத்துவோம்.

13 ஆனால் இதோ, நாம் நம்முடைய சத்துருக்களுக்கு நம்மை கீழ்ப்படுத்தவேண்டுமென்று, அவர் கட்டளையிடாமல், நாம் அவரில் நம்முடைய நம்பிக்கையை வைக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார், அவர் நம்மை விடுவிப்பார்.

14 ஆதலால் எனக்குப் பிரியமான சகோதரனாகிய, மரோனியே, நாம் பொல்லாப்பை எதிர்ப்போமாக. நம்முடைய சுதந்திரத்தைக் காக்கவும், நம்முடைய சபையின் பெரிதான சிலாக்கியத்திலும், நம்முடைய மீட்பரும் தேவனுமானவருக்காக களிகூர்ந்திருக்கவும், நம்முடைய வார்த்தைகளால் தடுக்கவியலாத கலகங்கள், பிரிவினைகள் போன்ற பொல்லாப்புகளை, நமது பட்டயங்களால் எதிர்ப்போமாக.

15 ஆதலால், உன் மனுஷர் சிலருடன் என்னிடத்தில் நீ சீக்கிரமாய் வா. மீதியானோரை லேகி மற்றும் தியான்குமின் பொறுப்பில் விட்டுவிட்டு, அவர்களுக்குள் இருக்கிற சுதந்திர ஆவியாகிய தேவ ஆவியின்படியே, அவர்கள் தேசத்தின் அப்பகுதியில் போர்புரிய, அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுப்பாயாக.

16 இதோ, நீ என்னிடத்தில் வந்து சேரும்வரைக்கும், அவர்கள் அழிந்து போகக்கூடாதென்பதற்காக அவர்களுக்கு சில உணவுப் பொருட்களை அனுப்பியிருக்கிறேன்.

17 நீ இங்கு அணிவகுத்து வரும்போது, உன்னால் கூட்டிவர முடிந்த படையனைத்தையும் கூட்டிச் சேர். நமக்குள் இருக்கிற விசுவாசத்தின்படியே, நம்முடைய தேவனின் பெலத்தோடு கூட, நாம் அந்தக் கலகக்காரருக்கு விரோதமாய் தீவிரித்துப் போவோமாக.

18 நாம் லேகிக்கும், தியான்குமிற்கும், அதிக உணவை அனுப்பும்படிக்கு, சாரகெம்லா பட்டணத்தை வசப்படுத்துவோமாக; ஆம், நாம் கர்த்தருடைய பெலத்தோடு கூட அவர்களுக்கு விரோதமாய்ப் போய், இந்த பெரும் அக்கிரமத்திற்கு ஒரு முடிவு கட்டுவோமாக.

19 இப்பொழுதும் மரோனியே, உன் கடிதத்தைப் பெறுவதில் சந்தோஷமடைகிறேன். ஏனெனில் நான் நம்முடைய சகோதரருக்கு விரோதமாய்ப் போவது நியாயமான காரியமா என்று, சிறிது கவலைப்பட்டேன்.

20 ஆனால் நீயோ, அவர்கள் மனந்திரும்பாவிடில், அவர்களுக்கு விரோதமாய் நீ போகவேண்டுமென்று கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டிருப்பதாக சொல்லியிருக்கிறாய்.

21 நீ, லேகியையும், தியான்குமையும், கர்த்தரில் பெலப்படுத்தும்படியாக பார்த்துக்கொள்; அவர்களைப் பயப்படாதிருக்கச் சொல்லுவாயாக. ஏனெனில் தேவன் அவர்களையும், ஆம், தங்களை சுதந்திரவாளிகளாக்கின தேவனின் அந்த சுதந்திரத்தில் உறுதியாய்ப் பற்றிக்கொண்ட யாவரையும் விடுவிப்பார். இப்பொழுதும் எனக்குப் பிரியமான சகோதரனான மரோனிக்கு, என் கடிதத்தை முடிக்கிறேன்.

அச்சிடவும்