அதிகாரம் 59
ஏலமனின் சேனைகளைப் பெலப்படுத்தும்படி பகோரனிடம் மரோனி கேட்டல் – நேபிகா பட்டணத்தை லாமானியர் கைப்பற்றுதல் – அரசாங்கத்தின்மேல் மரோனி கோபம் கொள்ளுதல். ஏறக்குறைய கி.மு. 62.
1 இப்பொழுது, அந்தப்படியே, நேபியின் ஜனங்களின்மேல் நியாயாதிபதிகள் ஆளுகையின் முப்பதாவது வருஷத்தில், மரோனி ஏலமனின் நிருபத்தைப்பெற்று, படித்தபோது, இழந்துபோன அந்த தேசங்களை மீட்பதில் ஏலமன் பெற்ற மிகுதியான ஜெயத்தையும், ஆம் அவனுடைய நலத்தையும் குறித்து மிகவும் களிகூர்ந்தான்.
2 ஆம், அவன் இருந்த அப்பகுதியின் சுற்றுப்புறங்களில் அமைந்த தேசமுழுவதிலும் உள்ள, தன் ஜனங்கள் யாவரும் களிகூரும்படி அதை அவர்களுக்குத் தெரியப்பண்ணினான்.
3 அந்தப்படியே, ஏலமன் திரும்பப் பெறுவதிலே இவ்வளவு அற்புதமாய் வெற்றியடைந்திருந்த தேசத்தின் அப்பகுதியை, சுலபமாய் காத்துவரும்படிக்கு, அவனுடைய சேனையைப் பெலப்படுத்த, மனுஷரை ஏகமாய் கூடிவரச் செய்ய வேண்டுமென்று, தன் விருப்பத்தைத் தெரிவித்து அவன் பகோரனுக்கு உடனே ஒரு நிருபத்தை அனுப்பினான்.
4 அந்தப்படியே, இந்நிருபத்தை சாரகெம்லா தேசத்திற்கு மரோனி அனுப்பின பின்பு, லாமானியர் தங்களிடமிருந்து எடுத்துக்கொண்ட தேசங்கள் மற்றும் பட்டணங்களின் மீதியானவற்றைப் பெறும்படி மறுபடியும் ஒரு திட்டம் போடத் துவங்கினான்.
5 அந்தப்படியே, மரோனி இவ்விதமாய் லாமானியருக்கு விரோதமாய் யுத்தத்திற்குப் போக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, இதோ, மரோனி பட்டணத்திலிருந்தும், லேகியின் பட்டணத்திலிருந்தும், மோரியாந்தன் பட்டணத்திலிருந்தும், ஏகமாய்க் கூடியிருந்த நேபிகாவின் ஜனங்கள் லாமானியர்களால் தாக்கப்பட்டார்கள்.
6 ஆம், மேன்தி தேசத்திலிருந்தும் சுற்றுப்புற தேசத்திலிருந்தும், பறந்தோட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் வந்து, தேசத்தின் இப்பகுதியிலே லாமானியரோடு சேர்ந்து கொண்டார்கள்.
7 இப்படியாக மிகவும் எண்ணிறைந்தவர்களாயும், ஆம், நாளுக்கு நாள் பெலனடைபவர்களாயும் இருந்ததினால், அவர்கள் அம்மோரோனின் கட்டளையின்படியே நேபிகா ஜனத்திற்கு விரோதமாய்ப்போய், மாபெரும் படுகொலையினால் அவர்களை வெட்டிப்போடத் துவங்கினார்கள்.
8 அவர்களின் சேனைகள் மிக அதிகமாயிருந்ததினிமித்தம், நேபிகாவின் ஜனங்களில் மீதியானோர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்; அவர்கள் வந்து, மரோனியின் சேனையைச் சேர்ந்து கொண்டார்கள்.
9 இப்பொழுதும் நேபிகாவின் ஜனங்கள் பட்டணத்தைக் காக்கும்படியாக, அவர்களுக்கு உதவிபுரியும்பொருட்டு, ஆட்கள் அப்பட்டணத்திற்கு அனுப்பப்படவேண்டியது அவசியமென்று மரோனி எண்ணி, பட்டணத்தை லாமானியரிடமிருந்து மறுபடியும் பெறுவதைக் காட்டிலும், அதை அவர்களின் கைகளுக்குள் விழாமல் பாதுகாப்பதே சுலபம் என்றறிந்து, அவர்கள் சுலபமாய் காப்பார்கள் என்று யூகித்தான்.
10 ஆதலால் அவன் தான் கைப்பற்றின அவ்விடங்களைக் காக்க தன் படைகள் யாவையும் நிறுத்தி வைத்துக் கொண்டான்.
11 இப்பொழுதும், நேபிகா பட்டணம் இழக்கப்பட்டது என்று மரோனி கண்டபோது, அவன் மிகவும் துக்கித்து, ஜனங்களின் துன்மார்க்கத்தால் அவர்கள் தங்கள் சகோதரரின் கைகளுக்குள் விழுந்தார்களோ, என்று சந்தேகிக்கத் துவங்கினான்.
12 இப்பொழுது அவனுடைய பிரதான சேர்வைக்காரர்களும் இப்படியே எண்ணினார்கள். அவர்கள் மேல் லாமானியர் கொண்ட ஜெயத்தினிமித்தம், அது ஜனங்களுடைய துன்மார்க்கத்தினாலோ என்று சந்தேகித்து அதிர்ச்சியடைந்தார்கள்.
13 அந்தப்படியே, தங்கள் தேசத்தின் விடுதலையைக் குறித்து கவலை கொள்ளாதிருந்ததினிமித்தம், மரோனி அரசாங்கத்தின் மேல் கோபம் கொண்டான்.