அதிகாரம் 52
அமலேக்கியா ஸ்தானத்தில் அம்மோரோன், லாமானியரின் ராஜாவாகுதல் – மரோனியும், தியான்குமும், லேகியும், நேபியரை லாமானியருக்கு விரோதமாய் ஓர் ஜெயமடைந்த யுத்தத்திற்கு நடத்திச் செல்லுதல் – மூலெக் பட்டணம் மறுபடியும் கைப்பற்றப்படுதல். சோரமியனாகிய யாக்கோபு கொல்லப்படுதல். ஏறக்குறைய கி.மு. 66–64.
1 இப்பொழுதும், அந்தப்படியே, நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் இருபத்தி ஆறாம் வருஷத்தில், இதோ, லாமானியர் முதல் மாதத்தின் முதலாம் விடியலில் எழுந்தபோது, இதோ, அமலேக்கியா தன் சொந்த கூடாரத்தில் செத்துக் கிடந்ததையும் அவர்கள் கண்டார்கள். அந்த நாளிலே தியான்கும் தங்கள் மேல் போர் தொடுக்க ஆயத்தமாயிருந்ததையும் கண்டார்கள்.
2 இப்பொழுது, லாமானியர் இதைக் கண்டபோது அவர்கள் பயந்து போனார்கள்; அவர்கள் வடதேசத்திற்கு படையெடுத்துப் போகவிருந்த தங்கள் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, தங்களின் சகல சேனையோடு கூட மூலெக்கின் பட்டணத்திற்குள் தஞ்சம் புகுந்து அவைகளின் அரண்களில் பாதுகாப்பை நாடினார்கள்.
3 அந்தப்படியே, அமலேக்கியாவின் சகோதரன் ஜனங்களின் மீது ராஜாவாக நியமிக்கப்பட்டான்; அவனுடைய நாமம் அம்மோரோன் என்பதாகும். இப்படியாக அமலேக்கியா ராஜாவினுடைய ஸ்தானத்தில் ஆளும்படி அவனுடைய சகோதரனாகிய அம்மோரோன் ராஜா நியமிக்கப்பட்டான்.
4 அந்தப்படியே, இரத்தம் சிந்துதலினாலே தாங்கள் கைப்பற்றிய, அந்தப் பட்டணங்களைத் தன் ஜனம் காக்கவேண்டுமென, அவன் கட்டளையிட்டான். ஏனெனில் அதிக இரத்தம் சிந்தாமல், எந்த ஒரு பட்டணத்தையும் அவர்கள் கைப்பற்றவில்லை.
5 இப்பொழுது, லாமானியர் தாங்கள் கைப்பற்றின பட்டணங்களையும், தாங்கள் ஆக்கிரமித்துக்கொண்ட தேசத்திலுள்ள பகுதிகளையும் காக்க, உறுதி கொண்டிருக்கிறார்கள் என்று தியான்கும் கண்டான்; அவர்கள் எண்ணிக்கையில் மிகுதியாயிருக்கிறார்கள் என்றும் கண்டு, அவர்களை அவர்களுடைய அரண்களில் தாக்குவது தேவையற்றது என்றும், தியான்கும் நினைத்தான்.
6 ஆனால் யுத்தத்திற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதைப் போல, அவன் தன் மனுஷரை சுற்றிலும் நிறுத்தினான்; ஆம், உண்மையாகவே அவன் சுற்றிலும் சுவர் எழுப்பியும், பாதுகாப்பு ஸ்தலங்களைக் கட்டியும், அவர்களுக்கு விரோதமாய்த் தன்னை தற்காத்துக்கொள்ள ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.
7 அந்தப்படியே, தன் சேனையைப் பெலப்படுத்தும்படியாக, அதிக எண்ணிக்கையில் மனுஷரை மரோனி அனுப்பும்வரைக்குமாக, அவன் யுத்தத்திற்கென அப்படியாக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.
8 அவன் கரங்களில் சிக்கிய அனைத்து கைதிகளையும் வைத்துக்கொள்ள வேண்டுமென்று மரோனி கட்டளைகளையும் அனுப்பினான்; லாமானியர் அநேக கைதிகளைப் பிடித்து வைத்திருப்பதாலே, லாமானியரால் பிடிக்கப்பட்டோருக்குப் பிணையாட்களாக அவன் லாமானியரின் அனைத்து கைதிகளையும் வைத்திருக்கவேண்டும்.
9 அவன் உதாரத்துவஸ்தலத்தில் அரண்களை எழுப்பவேண்டுமென்றும், எல்லா புறங்களிலுமிருந்தும் தங்களை நெருக்குவார்கள் என்பதினால், ஒருவேளை வடக்கு தேசத்திற்குப் போகிற குறுகிய வழியையும், லாமானியர் பெற்றுவிடாதபடிக்கு, அவ்விடத்தைப் பாதுகாக்கவும் ஆணைகளை அனுப்பினான்.
10 அந்த தேசத்தின் அந்த குறிப்பிட்ட பகுதியை பாதுகாப்பதில் உண்மையுள்ளவனாய் இருக்க வேண்டுமென்றும், அந்த பகுதியிலுள்ள லாமானியரைத் தன் சக்திக்குட்பட்டமட்டும் அடிக்கும்படி, எல்லா சந்தர்ப்பங்களையும் நாடவேண்டுமென்றும், அதினிமித்தம் ஒருவேளை தங்கள் கைகளிலிருந்து கைப்பற்றப்பட்ட அந்தப் பட்டணங்களை தந்திரத்திலாவது, அல்லது மற்ற எந்த வழியிலாவது கைப்பற்றவும், லாமானியர் கைகளுக்குள் விழாத சுற்றியுமுள்ள பட்டணங்களையும், அவன் அரண்களை எழுப்பி பலப்படுத்தும்படியாக விரும்பி, மரோனி அவனுக்கு செய்தி அனுப்பினான்.
11 அவன் அவனை நோக்கி, நான் உன்னிடம் வருவேன். ஆனால் இதோ, லாமானியர் மேற்கு சமுத்திரம் அருகே அமைந்த தேசத்தின் எல்லைகளில் நம்மேல் வந்திருக்கிறார்கள். இதோ, நான் அவர்களுக்கு எதிர்கொண்டு போகிறேன். ஆதலால் நான் உன்னிடத்தில் வரமுடியாதென்றான்.
12 இப்பொழுதும் ராஜா (அம்மோரோன்) சாரகெம்லா தேசத்திலிருந்து வெளியே புறப்படுப்போய், தன் சகோதரனின் மரணத்தைக் குறித்து, ராஜஸ்திரீக்கு தெரியப்படுத்தி, அநேக மனுஷரை திரளாய் ஒன்றுகூட்டி, மேற்கு சமுத்திரம் அருகே அமைந்த எல்லைகளில் நேபியர்களுக்கு விரோதமாய்ப் படையெடுத்தான்.
13 இப்படியாக அவன் நேபியர்களை நெருக்கவும், அந்த தேசத்தின் அந்த பகுதிக்குத் தங்கள் படைகளின் ஒரு பகுதியை நடத்திச் செல்லவும் முயற்சித்துக் கொண்டிருந்தான். மறுபுறத்திலே, கிழக்கு சமுத்திரம் அருகே அமைந்த எல்லைகளில் இருந்த நேபியர்களைத் தாக்கி, தங்கள் சக்திக்கேற்ப, அவர்களின் தேசங்களை தங்களின் சேனைகளின் சக்திக்குத்தக்கதாக கைப்பற்றவேண்டுமென்று, அவன் தான் கைப்பற்றின பட்டணங்களை ஆக்கிரமிக்கும்படி விட்டிருந்தவர்களுக்கு கட்டளை கொடுத்தான்.
14 இப்படியாக, நேபியின் ஜனங்களின்மேல், நியாயாதிபதிகளின் ஆளுகையின் இருபத்தி ஆறாம் வருஷ முடிவிலே, நேபியர் இத்தகைய ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்தார்கள்.
15 ஆனால் இதோ, அந்தப்படியே, நியாயாதிபதிகளின் ஆளுகையின் இருபத்தி ஏழாம் வருஷத்திலே, மரோனியின் கட்டளையின்படி, அந்த தேசத்தின் தெற்கு மற்றும் மேற்கு எல்லைகளைக் காக்க, தியான்கும் சேனைகளை நிறுத்தியிருந்தான், தாங்கள் இழந்த பட்டணங்களை மறுபடியும் கைப்பற்ற, தன் மனுஷரோடு தியான்குமிற்கு உதவிபுரியும்படிக்கு, உதாரத்துவஸ்தலத்தை நோக்கி தன் அணிவகுப்பைத் துவங்கியிருந்தான்.
16 அந்தப்படியே, மூலெக் பட்டணத்தின் மேல் தாக்குதல் ஏற்படுத்தும்படிக்கும், கூடுமானால் அதைத் திரும்பக் கைப்பற்றும்படிக்கும் தியான்கும் கட்டளைகளைப் பெற்றிருந்தான்.
17 அந்தப்படியே, மூலெக்கின் பட்டணத்தின் மேல் தாக்குதல் தொடுக்கும்படி தியான்கும் ஆயத்தங்களை மேற்கொண்டு தன் சேனையோடு லாமானியருக்கு விரோதமாய்ப் போனான்; ஆனால் அவர்கள் தங்கள் அரண்களிலிருக்கும்போது, தான் அவர்களை மேற்கொள்வது கூடாத காரியம், எனக் கண்டான்; ஆதலால் அவன் தன் திட்டங்களை கைவிட்டுவிட்டு, மரோனி வந்து தன் சேனையை பலப்படுத்தும்வரை காத்திருக்க உதாரத்துவஸ்தலத்திற்குத் திரும்பிப்போனான்.
18 அந்தப்படியே, நேபியின் ஜனங்களின் மீதான நியாயாதிபதிகளின் இருபத்தி ஏழாம் வருஷ ஆளுகையின் பிற்பகுதியில், மரோனி தன் சேனையோடு கூட உதாரத்துவஸ்தலத்திற்கு வந்து சேர்ந்தான்.
19 இருபத்து எட்டாம் வருஷ துவக்கத்திலே, மரோனியும் தியான்குமும் மற்றும் பிரதான சேனாதிபதிகளில் அநேகரும், லாமானியர் மேல் அனுகூலம்கொண்டு, மூலெக்கின் பட்டணத்தை மறுபடியும் எடுக்கும்படிக்கு, அவர்களைத் தங்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்கு வரச் செய்வதற்கு தாங்கள் என்ன செய்யவேண்டுமென்றும், அல்லது அவர்களுடைய கொத்தளங்களிலிருந்து அவர்களை வெளியேற்ற என்னென்ன உத்திகளைக் கையாளவேண்டுமென்றும், விவாதிக்க ஓர் யுத்த ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்கள்.
20 அந்தப்படியே, இரண்டு பட்டணங்களுக்கு இடையே உள்ள சமதள பூமியில், தன் சேனைகளோடு தங்களைச் சந்திக்க வரவேண்டுமென வாஞ்சித்து, மூலெக்கின் பட்டணத்தைப் பாதுகாத்த, லாமானிய சேனையின் யாக்கோபு என்ற நாமம் கொண்ட, அவர்களின் தலைவனிடம் தூதுவர்களை அனுப்பினார்கள். ஆனால் இதோ, சோரமியனாயிருந்த யாக்கோபு, தன் சேனையோடு வந்து அவர்களைச் சமதள பூமியில் சந்திக்கவில்லை.
21 அந்தப்படியே, மரோனி, அவர்களை நியாயமான முறையில் சந்திக்க நம்பிக்கையற்றவனாய், தான் லாமானியரை அவர்களுடைய கொத்தளங்களை விட்டு வெளியே கொண்டுவர அவன் ஒரு திட்டம் தீட்டினான்.
22 ஆதலால் அவன், தியான்கும் கொஞ்ச எண்ணிக்கையுள்ள மனுஷரைக் கூட்டிக்கொண்டு கடற்கரைக்கு அருகாமையில் அணிவகுத்துப் போகும்படிச் செய்தான்; மரோனியும் அவன் சேனையும் இரவு நேரத்தில் மூலெக் பட்டணத்தின் மேற்கேயிருந்த வனாந்தரத்தினுள் அணிவகுத்துப் போனார்கள்; இப்படியாக, மறுநாளிலே தியான்குமை லாமானியரின் காவற்காரர் கண்டவுடன் ஓடிவந்து தங்கள் தலைவனாகிய யாக்கோபுவினிடத்தில் சொன்னார்கள்.
23 அந்தப்படியே, தியான்குமின் கொஞ்ச எண்ணிக்கையினிமித்தம், தங்களின் எண்ணிக்கையை மனதில்கொண்டு, அவனை மேற்கொண்டுவிடலாம் என்று எண்ணி, தியான்குமிற்கு விரோதமாய் லாமானியரின் சேனைகள் படையெடுத்துப் போனார்கள். தியான்கும் லாமானியரின் சேனைகள் தனக்கு விரோதமாய் வருவதைக் கண்டபோது, அவன் வடக்கே கடற்கரையோரமாய் பின்வாங்க ஆரம்பித்தான்.
24 அந்தப்படியே, அவன் தப்பியோடத் துவங்குவதை லாமானியர் கண்டபோது, அவர்கள் தைரியம் கொண்டு, பெலத்துடனே அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். தியான்கும், இப்படியாகத் தங்களை வீணிலே பின்தொடர்ந்த லாமானியரை நடத்திக்கொண்டிருக்கையில், இதோ, மரோனி தன்னோடிருந்த தன் சேனையில் ஒரு பகுதி பட்டணத்திற்குள் அணிவகுத்துப்போய் அதை ஆக்கிரமிக்கும்படி கட்டளையிட்டான்.
25 இப்படியாக, அவர்கள் செய்து பட்டணத்தைக் காக்கும்படி விடப்பட்டிருந்த யாவரையும், ஆம், யுத்த ஆயுதங்களைக் கைவிடாத அனைவரையும் கொன்று போட்டார்கள்.
26 இப்படியாக மரோனி தன் சேனையின் ஒரு பகுதியைக்கொண்டு மூலெக் பட்டணத்தை ஆக்கிரமித்தான். மறுபுறத்தில் தியான்குமை பிடிக்கப்போன லாமானியர் திரும்பிவரும்போது, அவர்களைச் சந்திக்க மீதியானோருடன் அணிவகுத்துப் போனான்.
27 அந்தப்படியே, தாங்கள் உதாரத்துவஸ்தலம் அருகில் வரும்வரைக்குமாய் லாமானியர் தியான்குமைப் பின்தொடர்ந்தார்கள், பின்னர் அவர்கள் லேகியினாலும், உதாரத்துவஸ்தலத்தைக் காக்கும்படி விடப்பட்டிருந்த ஓர் சிறு சேனையினாலும் சந்திக்கப்பட்டார்கள்.
28 இப்பொழுது இதோ, லேகி தன்னுடைய சேனையோடு தங்களுக்கு விரோதமாய் வருவதை லாமானியரின் பிரதான சேர்வைக்காரர் கண்டபோது, ஒருவேளை தாங்கள் மூலெக்கின் பட்டணத்தை அடைவதற்கு முன், லேகி அதை மேற்கொண்டுவிடுவானோவென்று பயந்து அதிக குழப்பத்திலே பறந்தோடினார்கள். ஏனெனில் அவர்கள் தங்களின் படையெடுப்பினிமித்தம் களைப்பாயிருந்தார்கள். லேகியின் மனுஷரோ தெளிவாய் இருந்தார்கள்.
29 இப்பொழுது லாமானியர், மரோனி தன் சேனையோடு தங்களுக்குப் பின்னால் இருந்திருக்கிறான், என்று அறியவில்லை; அவர்கள் யாவரும் லேகிக்கும் அவன் மனுஷருக்குமே பயந்தார்கள்.
30 இப்பொழுது மரோனியையும், அவனுடைய சேனையையும், அவர்கள் சந்திக்கும்வரை, அவர்களை மேற்கொள்ள லேகி விருப்பமில்லாதவனாயிருந்தான்.
31 அந்தப்படியே, லாமானியர் தூரமாய் பின்வாங்கும் முன்பே நேபியரால் சூழப்பட்டார்கள். ஒருபுறத்தில் மரோனியின் மனுஷராலும், மறுபுறத்தில் லேகியின் மனுஷராலும் சூழப்பட்டார்கள்; அவர்கள் யாவரும் தெளிவாகவும், பூரண பெலனுடையவர்களுமாயிருந்தார்கள்; லாமானியரோ தங்களின் நீண்ட பயணத்தினிமித்தம் களைத்துப் போயிருந்தார்கள்.
32 அவர்கள் தங்கள் யுத்தக் கருவிகளை விட்டுவிடுமட்டும், தாங்கள் அவர்கள் மேல் விழவேண்டுமென, மரோனி தன் மனுஷருக்குக் கட்டளையிட்டான்.
33 அந்தப்படியே, லாமானியரின் தலைவனாயும், சோரமியனாயும், அடக்க முடியாத ஆர்வம் படைத்தவனாயுமிருந்த யாக்கோபு, மரோனிக்கு விரோதமாய் மிகுந்த ஆக்ரோஷத்துடனே போரிடும்படி லாமானியரை நடத்திச் சென்றான்.
34 மரோனி அவர்களின் படையெடுப்பு மார்க்கத்திலிருந்ததால், யாக்கோபு அவர்களைச் சங்கரிக்கத் தீர்மானித்தவனாய், மூலெக்கின் பட்டணத்தினூடாக தன் வழியைக் குறுக்கினான். ஆனால் இதோ, மரோனியும் அவன் மனுஷரும் மிகவும் வல்லமையுள்ளோராய் இருந்தார்கள்; ஆதலால் அவர்கள் லாமானியருக்கு வழிவிடவில்லை.
35 அந்தப்படியே, அவர்கள் மிகுந்த கோபத்தோடுகூட இரு புறங்களிலும் சண்டையிட்டார்கள்; இரு புறத்திலும் அநேகர் கொல்லப்பட்டனர், ஆம், மரோனி காயமடைந்தான், யாக்கோபு கொல்லப்பட்டான்.
36 இவ்வாறான ஆக்ரோஷத்துடன், லேகி தன் பராக்கிரமசாலிகளைக்கொண்டு அவர்களின் பின்னே தாக்கினதாலே, பின்னாக இருந்த லாமானியர் தங்கள் யுத்தக் கருவிகளை ஒப்படைத்தார்கள்; அவர்களில் மீதியானோர் போவதா, அல்லது அடிப்பதா என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தார்கள்.
37 இப்பொழுது மரோனி அவர்களின் குழப்பத்தைக் கண்டு, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் யுத்தக் கருவிகளைக் கொண்டுவந்து ஒப்படைப்பீர்களானால், இதோ, நாங்கள் உங்கள் இரத்தத்தைச் சிந்துவதைத் தவிர்ப்போம், என்றான்.
38 அந்தப்படியே, லாமானியர் இவ்வார்த்தைகளைக் கேட்டபோது, கொல்லப்பட்டுப் போகாத, அவர்களின் பிரதான சேர்வைக்காரர் வந்து, மரோனியின் காலடியிலே தங்கள் யுத்தக் கருவிகளைப் போட்டு, தங்கள் மனுஷரும் அப்படியே செய்யும்படிக்குக் கட்டளையிட்டார்கள்.
39 ஆனால் இதோ, அநேகர் அப்படிச் செய்யவில்லை; தங்களின் பட்டயங்களை ஒப்படைக்காதவர்கள் பிடிக்கப்பட்டு, கட்டப்பட்டு, அவர்களின் யுத்தக் கருவிகள் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு, தங்கள் சகோதரரோடு உதாரத்துவஸ்தலத்திற்கு போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
40 இப்பொழுது கொல்லப்பட்டுப் போன, ஆம், இருபுறத்திலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், பிடிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை மிஞ்சிற்று.