அதிகாரம் 43
ஆல்மாவும் அவன் குமாரரும் வார்த்தையைப் பிரசங்கித்தல் – சோரமியரும் மற்ற நேபியரும் கலகக்காரர்களும் லாமானியராகுதல் – லாமானியர் நேபியருக்கு விரோதமாய் யுத்தத்திற்கு வருதல் – மரோனி தற்காப்பு கவசங்களால் நேபியரை ஆயுதந்தரித்தல் – கர்த்தர் ஆல்மாவிற்கு லாமானியரின் போர் உபாயத்தை வெளிப்படுத்துதல் – நேபியர் தங்கள் இல்லங்களையும், சுதந்திரத்தையும், குடும்பங்களையும், மார்க்கத்தையும் காத்துக் கொள்ளுதல் – மரோனி மற்றும் லேகியின் சேனைகள் லாமானியரைச் சூழ்ந்து கொள்ளுதல். ஏறக்குறைய கி.மு. 74.
1 இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மாவின் குமாரர்கள் ஜனங்களுக்கு வார்த்தையைப் பிரசங்கிக்க அவர்களுக்குள்ளே போனார்கள். ஆல்மாவும் ஓய்வெடுக்கக்கூடாமல் போனான்.
2 அவர்கள் தீர்க்கதரிசன மற்றும் வெளிப்படுத்தலின் ஆவியின்படியே, வசனத்தையும் சத்தியத்தையும் பிரசங்கித்தார்கள் என்பதைத் தவிர நாங்கள் அவர்களுடைய பிரசங்கத்தைக் குறித்து இனிமேலும் சொல்லுவதில்லை. அவர்கள் தாங்கள் அழைக்கப்பட்டிருந்த தேவனுடைய பரிசுத்த முறைமையின் பிரகாரம் பிரசங்கம் பண்ணினார்கள்.
3 இப்பொழுதும், நியாயாதிபதிகளின் பதினெட்டாம் வருஷ ஆளுகையின்போது, நேபியருக்கும் லாமானியருக்கும் இடையேயான யுத்தங்களின் விவரத்திற்குத் திரும்புகிறேன்.
4 இதோ, அந்தப்படியே, சோரமியர்கள் லாமானியர்களானார்கள்; ஆதலால், பதினெட்டாம் வருஷ துவக்கத்திலே, லாமானியர் தங்கள்மேல் வருகிறதை நேபிய ஜனங்கள் கண்டார்கள்; அதனால் யுத்தத்திற்கான ஆயத்தங்களைச் செய்தார்கள், ஆம், அவர்கள் தங்கள் சேனைகளை எருசோன் தேசத்தில் ஏகமாய்க் கூடிவரச்செய்தார்கள்.
5 அந்தப்படியே, லாமானியர் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தார்கள்; அவர்கள் சோரமியரின் தேசமாகிய அந்தியோனம் தேசத்தினுள் வந்தார்கள்; சேராகெம்னா என்ற பெயர்கொண்ட மனுஷனே அவர்களின் தலைவனாய் இருந்தான்.
6 இப்பொழுதும் அமலேக்கியர் லாமானியரைக் காட்டிலும் அதிக துன்மார்க்கராயும், கொலை செய்கிற குணம் படைத்தவர்களாயுமிருந்தபடியால், சேராகெம்னா லாமானியர் மீது சேனாதிபதிகளை நியமித்தான், அவர்கள் யாவரும் அமலேக்கியரும் சோரமியருமாய் இருந்தார்கள்.
7 இப்போது அவர்கள் நேபியரின் மேல் கொண்டிருந்த வெறுப்பைக் காத்து, அதினிமித்தம் தன் சூழ்ச்சியை நிறைவேறப்பண்ண, அவர்களைக் கீழ்ப்படுத்தும்படியாக அவன் இதைச் செய்தான்.
8 ஏனெனில் இதோ, லாமானியரை நேபியருக்கு விரோதமாய்க் கோபமூளச் செய்வதே அவனுடைய தந்திரங்களாயிருந்தன; அவர்கள் மேல் மிகுந்த அதிகாரத்தைச் செலுத்தவும், நேபியரைச் சிறைத்தனத்திற்குள் கொண்டுவருவதின் மூலம் அவர்கள் மேல் அதிகாரம் பெறவுமே, அவன் இதைச் செய்தான்.
9 நேபியர்கள் தங்களுடைய தேசங்களையும், தங்கள் வீடுகளையும், தங்கள் மனைவிகளையும், தங்கள் பிள்ளைகளையும் ஆதரிக்கவும், தங்கள் விரோதிகளின் கைகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, தேவனைத் தங்களுடைய வாஞ்சைகளுக்கேற்ப தொழுதுகொள்ளும்படிக்கும், அவர்களுடைய உரிமைகளையும் சிலாக்கியங்களையும், ஆம், அவர்களது சுதந்திரத்தையும் பாதுகாப்பதே அவர்களுடைய நோக்கமாயிருந்தது.
10 ஏனெனில், தாங்கள் லாமானியரின் கைகளுக்குள் விழுவோமெனில், உண்மையானவரும் ஜீவிக்கிறவருமாகிய ஆண்டவராகிய தேவனை, ஆவியிலும், சத்தியத்திலும் தொழுது கொள்ளுகிற எவரையும் லாமானியர் சங்காரம் பண்ணுவார்கள், என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.
11 ஆம், ஆயுதம் தரிக்க மாட்டோமென்று ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டு, அதை உடைக்காதவர்களாகிய அம்மோனின் ஜனமென்று அழைக்கப்பட்ட, அந்தி-நேபி-லேகி ஜனமாகிய தங்கள் சகோதரருக்கு விரோதமாய் லாமானியருக்கு இருந்த மிகுந்த வெறுப்பையும் அவர்கள் லாமானியரின் கைகளுக்குள் விழுவார்களெனில், அழிக்கப்பட்டுப் போவார்களென்றும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.
12 அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்பதை நேபியர்கள் அனுமதிக்கமாட்டார்கள்; ஆதலால், அவர்கள் சுதந்தரிக்க, நிலங்களைக் கொடுத்தார்கள்.
13 அம்மோனின் ஜனங்கள், நேபியர்களுக்கு அவர்களுடைய சேனைகளை ஆதரிக்கும்படியாய்த் தங்கள் பொருட்களில் பெரும் பங்கைத் தந்தார்கள். இப்படியாக நேபியர்கள், லாமானியர்களான லாமான், லெமுவேல், இஸ்மவேலின் குமாரர்கள், நேபியர்களிலிருந்து பிரிந்துபோன யாவருமாகிய அமலேக்கியர், சோரமியர், நோவாவின் ஆசாரியர்களுடைய சந்ததி ஆகியோரின் கலப்பினத்துக்கு எதிராக நிற்கும்படிக்கு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
14 இப்பொழுதும், அந்த சந்ததி ஏறக்குறைய நேபியர்களைப் போலவே அதிக எண்ணிக்கையாயிருந்தார்கள்; இப்படியாக நேபியர்கள் தங்கள் சகோதரரோடு, இரத்தம் சிந்துமளவும் போராட வேண்டியதாயிற்று.
15 அந்தப்படியே, லாமானியரின் சேனைகள் அந்தியோனம் தேசத்தில் ஏகமாய்த் திரண்டிருந்தபோது, இதோ, நேபியரின் சேனைகள் அவர்களை எருசோன் தேசத்தில் சந்திக்கும்படியாக ஆயத்தமாயிருந்தார்கள்.
16 நேபியரின் தலைவன் அல்லது, நேபியரின்மீது சேனாதிபதியாய் நியமிக்கப்பட்டிருந்த மனுஷன், இப்பொழுது நேபியரின் சகல சேனைகளின் மேலும் சேனாதிபதி பொறுப்பேற்றான், அவனது பெயர் மரோனி.
17 மரோனி அதிகாரத்தையும், யுத்தங்களை நடத்துகிற பொறுப்பையும் எடுத்துக்கொண்டான். அவன் நேபியருடைய சேனைகளின்மேல் சேனாதிபதியாக நியமிக்கப்பட்ட போது, இருபத்தைந்து வயதாய் மட்டுமே இருந்தான்.
18 அந்தப்படியே, அவன் லாமானியரை எருசோன் எல்லைகளில் சந்தித்தான், அவனுடைய ஜனங்களோ பட்டயங்களாலும், ஈட்டிகளாலும் மற்றும் சகலவிதமான யுத்த ஆயுதங்களாலும் ஆயுதந்தரிக்கப்பட்டிருந்தார்கள்.
19 நேபியின் ஜனம், அல்லது அந்த மரோனி, தன் ஜனத்தை மார்புக் கவசங்களாலும், புய கவசங்களாலும், அவர்களுடைய தலைகளைக் காப்பதற்கான கவசங்களாலும் ஆயத்தப்படுத்தியிருந்ததையும், அவர்கள் உரப்பான துணியை அணிந்திருந்ததையும் லாமானியரின் சேனைகள் கண்டபோது,
20 இப்பொழுது சேராகெம்னாவின் சேனை அப்படிப்பட்ட எந்த ஒரு பொருளாலும் ஆயத்தப்படாதிருந்தது. அவர்கள் தங்கள் பட்டயங்களையும், தங்கள் ஈட்டிகளையும், தங்கள் வில்லுகளையும், அம்புகளையும், தங்கள் கூழாங்கற்களையும், தங்கள் கவண்களையும் மாத்திரம் வைத்திருந்தார்கள்; அவர்கள் தங்கள் அரைகளில் கட்டப்பட்டிருந்த வார்க்கச்சையைத் தவிர மற்றபடி நிர்வாணமாயிருந்தார்கள்; ஆம், சோரமியர், மற்றும் அமலேக்கியரைத் தவிர மற்ற அனைவரும் நிர்வாணமாயிருந்தார்கள்
21 அவர்கள் மார்புக்கவசங்களாலும், கேடகங்களாலும் ஆயுதந்தரிக்கப்பட்டிருக்கவில்லை, ஆதலால் நேபியரைக் காட்டிலும் எண்ணிக்கையில் மிகுதியாய் இருந்தாலும் அவர்கள் நேபியரின் சர்வாயுதவர்க்கத்தினிமித்தம் அவர்களின் சேனைகளுக்கு மிகவும் பயந்திருந்தார்கள்.
22 இதோ, இப்பொழுது, அந்தப்படியே, எருசோனின் எல்லைகளில் நேபியர்களுக்கு விரோதமாய் வர அவர்கள் துணியவில்லை; ஆதலால் அவர்கள் அந்தியோனம் தேசத்திலிருந்து வனாந்தரத்தினுள் புறப்பட்டு, மேன்தி தேசத்தை அடைந்து, அத்தேசத்தை தங்கள் வசமாக்கிக்கொள்ளும்படி, அவர்கள் சீதோன் நதியின் தோற்றுவாய்க்குத் தொலைவாய், வனாந்தரத்தில் சுற்றிலும் பயணத்தை மேற்கொண்டார்கள்; ஏனெனில் தாங்கள் எங்கே போகிறோம் என்று, மரோனியின் சேனைகள் அறிந்திருக்கிறார்கள், என்று அவர்கள் எண்ணவில்லை.
23 ஆனால், அந்தப்படியே, அவர்கள் வனாந்தரத்தினுள் புறப்பட்டவுடனே அவர்களுடைய பாளயத்தைக் கவனிக்க மரோனி வனாந்தரத்தினுள் வேவுகாரர்களை அனுப்பினான்; மரோனி, ஆல்மாவின் தீர்க்கதரிசனங்களையும் அறிந்தவனாய், லாமானியரிடத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, நேபியர்களின் சேனைகள் எவ்விடம் செல்லவேண்டுமென்று, அவன் கர்த்தரிடத்தில் விசாரிக்க வேண்டுமென்று விரும்பி, அவனிடத்தில் சில மனுஷரை அனுப்பினான்.
24 அந்தப்படியே, கர்த்தருடைய வார்த்தை ஆல்மாவுக்கு உண்டாயிற்று. மேன்தி தேசத்தினுள் வந்து, வலிமையற்ற ஜனங்கள் மீது விழும்படிக்கு, வனாந்தரத்தைச் சுற்றி லாமானிய சேனைகள் நடந்து வருகின்றன என்று, ஆல்மா மரோனியின் தூதுவர்களிடம் தெரியப்படுத்தினான். அந்தத் தூதுவர்கள் போய் மரோனியினிடத்தில் செய்தியைத் தெரியப்படுத்தினார்கள்.
25 இப்பொழுது எந்த விதத்திலும் லாமானியர்களின் ஒரு பகுதியினர் எருசோன் தேசத்தினுள் வந்து, அந்த பட்டணத்தை வசமாக்கக்கூடாதென்று, மரோனி அத்தேசத்தில் தன் சேனையின் ஒரு பகுதியினரை விட்டுவிட்டு, தன் சேனையில் மீதியானோரைக் கூட்டிக்கொண்டு மேன்தி தேசத்திற்குப் போனான்.
26 அவன் தங்கள் தேசங்களையும், தங்கள் நாட்டையும், உரிமைகளையும், தங்கள் சுதந்திரங்களையும் காக்கும்பொருட்டு அப்பகுதியில் இருக்கும் சகல ஜனங்களும் ஏகமாய்க்கூடி லாமானியருக்கு விரோதமாய் யுத்தம் பண்ணும்படிச் செய்தான். ஆகவே லாமானியரின் வருகையின்போது எதிர்கொள்ள அவர்கள் ஆயத்தமாயிருந்தார்கள்.
27 அந்தப்படியே, வனாந்தரத்திலுள்ள சீதோன் ஆற்றங்கரைக்கு அருகாமையிலும், சீதோன் ஆற்றங்கரையின் மேற்குப் புறத்திலும் இருக்கிற பள்ளத்தாக்கிலே மரோனி தன் சேனையை ஒளிந்திருக்கும்படிச் செய்தான்.
28 லாமானியரின் சேனை வருவதெப்பொழுது என்று அறிந்துகொள்ள, மரோனி நாலாபுறத்திலும் வேவுகாரரை நிறுத்தினான்.
29 இப்போதும், தங்கள் சகோதரரை அழித்தோ, அல்லது அவர்களைக் கீழ்ப்படுத்தி, அடிமைத்தனத்திற்குள் கொண்டுவந்தோ, தேசமெங்கும் ஓர் ராஜ்யத்தை தாங்கள் அமைப்பது, என்ற லாமானியரின் உள்நோக்கத்தை மரோனி அறிந்திருந்தான்;
30 தங்கள் தேசங்களையும், தங்கள் சுதந்திரத்தையும், தங்கள் சபையையும் காப்பாற்றுவதே நேபியரின் ஒரே விருப்பம் என்பதையும் மரோனி அறிந்தவனாய், அவர்களை உபாயத்தின் மூலம் காப்பாற்றுவது பாவமல்ல என்று எண்ணினான்; ஆகவே லாமானியர் மேற்கொள்ளவிருக்கும் வழியைத் தன் வேவுகாரர் மூலம் அறிந்து கொண்டான்.
31 ஆதலால் அவன், தன் சேனையைப் பிரித்து, ஒரு பகுதியினரை பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவந்து, அவர்களை ரிப்லா என்ற மலைக்குக் கிழக்கிலும், தெற்கிலுமாய் மறைத்து வைத்தான்.
32 அவன் மீதியானோரை சீதோன் ஆற்றுக்கு மேற்குப் புறத்திலுள்ள மேற்குப் பள்ளத்தாக்கிலும், அப்படியே மேன்தி தேச எல்லைகளோரமாயும் மறைத்து நிறுத்தினான்.
33 இப்படியாக அவன் தன் விருப்பத்திற்கேற்ப தன் சேனையை நிற்க வைத்த பின்பு, அவர்களை சந்திக்க ஆயத்தமாயிருந்தான்.
34 அந்தப்படியே, லாமானியர்கள் மலையின் வடக்கு பக்கமாய் வந்தார்கள். அங்கே மரோனியின் சேனையின் ஒரு பகுதி மறைந்திருந்தது.
35 லாமானியர் ரிப்லா மலையைக் கடந்து, பள்ளத்தாக்கிற்கு வந்து, சீதோன் ஆற்றைக் கடக்கத் துவங்குகையில், லேகி என்ற பெயர் கொண்ட ஒருவனால் வழிநடத்தப்பட்டு, மலையில் தென்புறத்தில் ஒளிந்திருந்த சேனை வந்து லாமானியரைக் கிழக்கிலிருந்து அவர்களுக்குப் பின்னால் சூழ்ந்துகொண்டது.
36 அந்தப்படியே, லாமானியர் தங்களுக்குப் பின்னே நேபியர் வருகிறதைக் கண்டபோது, அவர்கள் பின்திரும்பி, லேகியின் சேனையோடு யுத்தம் பண்ணத் துவங்கினார்கள்.
37 மரணக்கிரியை இருபுறத்திலும் துவங்கியது. ஆனால் அது லாமானியருக்குள்ளே அதிபயங்கரமாயிருந்தது. ஏனெனில் அவர்களுடைய நிர்வாண சரீரங்கள் மேல் நேபியர் தங்கள் பட்டயங்களாலும் தங்கள் உடைவாட்களாலும் விடும் பலத்த அடிகள், ஒவ்வொரு வீச்சிலும் மரணத்தை உண்டாக்கியது.
38 மற்றொரு புறம், அவர்களுடைய பட்டயங்களாலும், இரத்த இழப்பினாலும் நேபியருக்குள்ளே எப்பொழுதாவது ஒரு மனுஷன் விழுந்தான். இவர்களோ, சரீரத்தின் மிக முக்கிய பகுதிகளுக்கு கவசம் தரித்திருந்தார்கள். அல்லது லாமானியரின் அடிகளிலிருந்து சரீரத்தின் முக்கிய பகுதிகள், அவர்களுடைய மார்க்கவசங்களாலும், அவர்களுடைய புயகவசங்களாலும், அவர்களுடைய தலைக்கவசங்களாலும் பாதுகாக்கப்பட்டன. இப்படியாக நேபியர் லாமானியருக்குள்ளே மரணக்கிரியை செய்தார்கள்.
39 அந்தப்படியே, தங்களுக்குள்ளே சம்பவித்த மிகுந்த அழிவினிமித்தம், லாமானியர் சீதோன் நதியை நோக்கி பறந்தோடத் தொடங்கு மட்டுமாய் பயந்திருந்தார்கள்.
40 அவர்கள் லேகியாலும், அவனுடைய மனுஷராலும் பின் தொடரப்பட்டார்கள். அவர்கள் லேகியால், சீதோனின் தண்ணீருக்குள், துரத்தப்பட்டு, சீதோன் தண்ணீர்களைக் கடந்தார்கள். அவர்கள் கடக்காதபடி, லேகி தன் சேனைகளை சீதோன் ஆற்றங்கரையிலே நிறுத்தினான்.
41 அந்தப்படியே, மரோனியும் அவன் சேனையும் சீதோன் நதியில் மறுபுறத்திலுள்ள பள்ளத்தாக்கிலே லாமானியரை எதிர்கொண்டு, அவர்கள்மீது விழுந்து அவர்களைக் கொல்லத் துவங்கினார்கள்.
42 லாமானியர் மேன்தி தேசத்திற்கு நேராக அவர்களுக்கு முன்பாகப் பறந்தோடினார்கள்; அங்கே மறுபடியும் மரோனியின் சேனைகளால் சந்திக்கப்பட்டார்கள்.
43 இந்தக் கட்டத்தில் லாமானியர் மகா தீர்க்கமாய் யுத்தம் பண்ணினார்கள்; ஆம், ஆதியிலிருந்து கூட லாமானியர் இப்படிப்பட்ட மகாபெரிய பெலத்தோடும், திடநம்பிக்கையோடும் யுத்தம் பண்ணியதாக ஒருபோதும் தெரியவில்லை.
44 அவர்கள் தங்களுடைய சேனாதிபதிகளாயும், தலைவர்களாயுமிருந்த சோரமியராலும், அமலேக்கியராலும், தங்களுடைய சேனாதிபதியும் அல்லது பிரதான தலைவனும், தளபதியுமான சேராகெம்னாவினாலும் ஏவிவிடப்பட்டார்கள்; ஆம், அவர்கள் வலுசர்ப்பங்களைப்போல சண்டையிட்டு, தங்கள் கைகளினாலே அநேக நேபியரைக் கொன்றார்கள், ஆம், அவர்களுடைய தலைக்கவசங்கள் அநேகவற்றை இரண்டாகப் பிளந்தும், அவர்களின் மார்ப்புக் கவசங்கள் அநேகவற்றை ஊடுருவியும், அவர்களின் பலருடைய கைகளையும் வெட்டியும் போட்டார்கள். இப்படியாக லாமானியர் தங்கள் கொடூரமான கோபத்தினால் கொன்றார்கள்.
45 ஆயினும் நேபியர்களோ, மேன்மையான ஓர் நோக்கத்திற்காகவே ஏவப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஏகாதிபத்தியத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ யுத்தம் பண்ணாமல், தங்கள் வீடுகளுக்காவும், தங்கள் சுதந்திரங்களுக்காவும், தங்கள் மனைவிகளுக்காவும், தங்கள் பிள்ளைகளுக்காவும், தங்களுக்கு உண்டான யாவற்றிற்காகவும், ஆம், தங்களின் வழிபாட்டு சடங்குகளுக்காகவும் தங்கள் சபைக்காகவும் யுத்தம் பண்ணினார்கள்.
46 அவர்கள் தங்கள் தேவனுக்குத் தாங்கள் கடன்பட்ட கடமை என்று அறிந்து செய்து கொண்டிருந்தார்கள்; ஏனெனில் கர்த்தர் அவர்களையும் அவர்களின் பிதாக்களையும் நோக்கி, நீங்கள் முதல் அல்லது இரண்டாவது குற்றத்திற்கு ஆளாகவில்லையெனில், நீங்கள் உங்கள் விரோதிகளின் கைகளினால் சங்கரிக்கப்பட விடமாட்டீர்கள் எனச் சொல்லியிருந்தார்.
47 மறுபடியும், கர்த்தர் சொன்னதாவது: நீங்கள் இரத்தம் சிந்துமளவும் கூட உங்கள் குடும்பங்களைக் காக்கக்கடவீர்கள். ஆகவே தங்களையும் தங்கள் குடும்பங்களையும், தங்கள் தேசத்தையும் தங்கள் நாட்டையும், தங்கள் உரிமைகளையும், தங்கள் மார்க்கத்தையும் காக்கவேண்டுமென்ற நோக்கத்திற்காகவே, நேபியர்கள் லாமானியரோடு யுத்தம் பண்ணினார்கள்.
48 அந்தப்படியே, மரோனியின் மனுஷர் லாமானியரின் கொடூரத்தையும், கோபத்தையும் கண்டபோது, அவர்கள் பின்வாங்கி அவர்களிடமிருந்து ஓடவிருந்தார்கள். மரோனி அவர்களின் எண்ணத்தை உணர்ந்தவனாய், ஆட்களை அனுப்பி அவர்களுடைய இருதயங்களை, தங்களுடைய தேசங்களின் மற்றும் தங்களின் உரிமையின், ஆம், அடிமைத்தனத்திலிருந்து தங்கள் சுதந்திரத்தின் எண்ணங்கள் ஆகிய இந்த எண்ணங்களால் ஏவிவிட்டான்.
49 அந்தப்படியே, அவர்கள் லாமானியர் மேல் திரும்பி, தங்களுடைய சுதந்திரத்திற்காகவும், உரிமைக்காகவும், அடிமைத்தனத்திலிருந்து தங்களின் விடுதலைக்காகவும், தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஏகமாய் கூக்குரலிட்டார்கள்.
50 அவர்கள் வல்லமையோடு லாமானியருக்கு விரோதமாய் நிற்கத் துவங்கினார்கள்; அவர்கள் தங்கள் விடுதலைக்காகக் கர்த்தரிடத்தில் சத்தமிட்ட அதே நாழிகையில் லாமானியர் அவர்களுக்கு முன்பாகப் பறந்தோடத் துவங்கினார்கள். சீதோனின் தண்ணீர்கள் வரை அவர்கள் பறந்தோடினார்கள்.
51 இப்பொழுதும் லாமானியர் அதிகமானோராய், ஆம், நேபியரைவிட இரண்டத்தனைக்கும் மேலாய் இருந்தார்கள். ஆயினும் அவர்கள் சீதோன் ஆற்றின் கரையின் மீதான பள்ளத்தாக்கிலே, ஏகமாய் ஒரு திரளிலே கூடும்படி அதிகமாய் துரத்தப்பட்டார்கள்.
52 ஆதலால் மரோனியின் சேனைகள் நதியின் இருபுறத்திலுமிருந்து அவர்களைச் சூழ்ந்தார்கள். ஏனெனில் இதோ, லேகியின் மனுஷர் கிழக்கே இருந்தார்கள்.
53 ஆதலால் லேகியின் மனுஷர், சீதோன் நதிக்கு கிழக்கே இருப்பதையும், மரோனியின் சேனைகள், சீதோன் நதிக்கு மேற்கே இருப்பதையும், நேபியர்களால் தாங்கள் சுற்றிலும் சூழப்பட்டிருப்பதையும் சேராகெம்னா கண்டபோது, அவர்கள் பயங்கரத்தால் அதிர்ச்சியடைந்தார்கள்.
54 இப்பொழுது மரோனி, அவர்களுடைய அதிர்ச்சியைக் கண்டபோது, தன் மனுஷர் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்துவதை நிறுத்தவேண்டுமென, அவர்களுக்குக் கட்டளையிட்டான்.