வேதங்கள்
ஆல்மா 38


ஆல்மா தன் குமாரனாகிய சிப்லோனுக்குக் கொடுத்த கட்டளைகள்.

அதிகாரம் 38 உள்ளிட்டது.

அதிகாரம் 38

சிப்லோன் நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுதல் – உலகின் ஜீவனும், ஒளியாயுமிருப்பவராகிய கிறிஸ்துவில் இரட்சிப்பு இருக்கிறது – உன் எல்லா ஆசாபாசங்களுக்கும் கடிவாளமிடு. ஏறக்குறைய கி.மு. 74.

1 என் குமாரனே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடு. நீ தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்கிற அளவில் தேசத்தில் விருத்தியடைவாய். நீ தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமற் போகிற அளவில், நீ அவருடைய சமுகத்திலிருந்து அறுப்புண்டு போவாய், என்று நான் ஏலமனுக்குச் சொன்னது போலவே உனக்கும் சொல்லுகிறேன்.

2 இப்பொழுதும் என் குமாரனே, தேவனில் நீ கொண்டிருக்கிற உறுதி மற்றும் விசுவாசம் ஆகியவைகளினிமித்தம், உன்னில் நான் அதிக சந்தோஷப்படுவேன், என்று நம்புகிறேன்; ஏனெனில், நீ உன் வாலிபப்பிராயத்திலே தேவனாகிய உன் கர்த்தரை நோக்கிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறாய்; அப்படியே நீ அவருடைய கட்டளைகளைத் தொடர்ந்து கைக்கொள்ளுவாய் என்றும் நம்புகிறேன்; முடிவுபரியந்தமும் நிலைத்திருக்கிறவனே பாக்கியவான்.

3 என் குமாரனே, நான் உனக்குச் சொல்லுகிறேன். சோரமிய ஜனங்களுக்குள்ளே நீ விசுவாசமாயும், கருத்துள்ளவனாயும், பொறுமையாயும், நீடிய சாந்தமாயும் இருந்ததினிமித்தம், ஏற்கனவே உன்னில் நான் சந்தோஷமடைந்தேன்.

4 நீ கட்டுண்டிருந்ததை நான் அறிவேன்; ஆம், வார்த்தையினிமித்தம் நீ கல்லெறியப்பட்டாய் என்றும் நான் அறிவேன்; கர்த்தர் உன்னோடு இருந்ததினாலே இந்தக் காரியங்கள் யாவையும் பொறுமையாய் சகித்திருந்தாய்; இப்பொழுது கர்த்தர் உன்னை விடுவித்ததையும் நீ அறிவாய்.

5 இப்பொழுதும், என் குமாரனாகிய சிப்லோனே, நீ தேவனில் உன் நம்பிக்கையை வைக்கிற அளவில் நீ உன் சோதனைகளிலும், உன் பிரச்சினைகளிலும், உன் உபத்திரவங்களிலுமிருந்தும் விடுவிக்கப்பட்டு, கடைசி நாளில் உயர்த்தப்படுவாய், என்று நினைவுகூர வேண்டுமென, விரும்புகிறேன்.

6 என் குமாரனே, நான் இவைகளை நானாகவே அறிந்து கொண்டேன், என்று நீ எண்ண வேண்டுமென்று நான் விரும்பவில்லை. ஆனால் எனக்குள்ளே இருக்கிற தேவ ஆவியானவரே இவைகளை எனக்குத் தெரியப்பண்ணுகிறார்; ஏனெனில் நான் தேவனில் ஜெனிக்கவில்லையெனில், இவைகளைக் குறித்து நான் அறியாதிருந்திருப்பேன்.

7 ஆனால் இதோ, நான் அவருடைய ஜனங்களுக்குள்ளே சங்காரக் கிரியையை நிறுத்தவேண்டுமென எனக்கு அறிவிக்கும்பொருட்டு, கர்த்தர் தம்முடைய மகா இரக்கத்தினிமித்தம் தமது தூதனை அனுப்பினார்; ஆம், நான் முகமுகமாய் ஒரு தூதனைப் பார்த்தேன். அவன் என்னுடனே பேசினான். அவனுடைய சத்தம் இடிமுழக்கத்தைப் போலிருந்தது. அது பூமியனைத்தையும் குலுக்கியது.

8 அந்தப்படியே, மூன்று பகலும் மூன்று இரவுமாக, நான் கொடிய வேதனையிலும், ஆத்தும வியாகுலத்திலும் இருந்தேன்; நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் இரக்கத்திற்காக மன்றாடும்வரை என் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெறவில்லை. ஆனால் இதோ, நான் அவரிடத்தில் கூக்குரலிட்டேன். என் ஆத்தும சமாதானத்தைக் கண்டேன்.

9 இப்பொழுதும் என் குமாரனே, நீ ஞானத்தைக் கற்கவும், மனுஷன் கிறிஸ்துவிலும், அவர் மூலமுமேயன்றி வேறெந்த வழியினாலும், முறையினாலும் இரட்சிக்கப்படமுடியாதென்று நீ என்னிடமிருந்து கற்க வேண்டுமென்பதற்காகவே, இதை உனக்குச் சொன்னேன். இதோ, அவரே உலகத்தின் ஜீவனும் ஒளியுமானவர். இதோ, அவரே சத்தியம் மற்றும் நீதியின் வார்த்தையானவர்.

10 இப்போதும், நீ வசனத்தை போதிக்க ஆரம்பித்திருக்கிறதினால், நீ தொடர்ந்து போதிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீ சகலத்திலும் கருத்தாயும், சுய கட்டுப்பாட்டோடும் இருக்கவேண்டுமென்று, நான் வாஞ்சிக்கிறேன்.

11 நீ பெருமையாயிராதபடி பார்த்துக்கொள். ஆம், உன்னுடைய ஞானத்திலோ அல்லது உன்னுடைய அதிக பெலத்திலோ மேன்மை பாராட்டாதபடி பார்த்துக்கொள்.

12 தைரியத்தைப் பிரயோகி; ஆனால் அதிகப் பிரசங்கியாயிராதே, நீ அன்பால் நிறைக்கப்படும் பொருட்டு, உன் ஆசாபாசங்களை எல்லாம் கடிவாளமிடப் பார்த்துக்கொள்; நீ சோம்பலிலிருந்து விலகப் பார்த்துக்கொள்.

13 சோரமியர் ஜெபிப்பதைப்போல ஜெபிக்காதே. ஏனெனில் அவர்கள் மனுஷரால் கேட்கப்படும் பொருட்டும், தங்களின் ஞானத்திற்காகப் புகழப்படும்படிக்கும் ஜெபிப்பதை நீ பார்த்திருக்கிறாய்.

14 தேவனே, நாங்கள் எங்களின் சகோதரரைப் பார்க்கிலும் உயர்வாய் இருப்பதற்காக, உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன் என்று சொல்லாமல், கர்த்தாவே, என் அபாத்திரத் தன்மையை மன்னியும். என் சகோதரரை இரக்கமாய் நினைவுகூர்ந்தருளும், என்று சொல். ஆம், தேவனுக்கு முன்பாக எப்பொழுதும் உன் அபாத்திரத் தன்மையை ஏற்றுக்கொள்.

15 கர்த்தர் உன் ஆத்துமாவை ஆசீர்வதித்து, நீ சமாதானமாய் அமரும் பொருட்டு, கடைசி நாளில் அவருடைய ராஜ்யத்தினுள் உன்னை ஏற்றுக்கொள்வாராக. என் குமாரனே, நீ போய் இந்த ஜனங்களுக்கு வசனத்தைப் போதி. தெளிந்த மனமுள்ளவனாயிரு. என் குமாரனே, போய்வா.