ஓம்னியின் புஸ்தகம்
அதிகாரம் 1
ஓம்னி, அமரோன், கெமீஸ், ஆபிநாதோம், அமலேக்கி ஆகியோர் தங்களின் காலத்தின்படி, பதிவேடுகளை வைத்திருத்தல் – சிதேக்கியாவின் காலத்தில் எருசலேமிலிருந்து வந்த சாரகெம்லாவின் ஜனங்களை மோசியா கண்டுபிடித்தல் – மோசியா அவர்களின் ராஜாவாக்கப்படுதல் – மூலெக்கியரின் சந்ததி யாரேதியர்களின் கடைசியானவனான கொரியாந்தமரை சாரகெம்லாவில் கண்டுபிடித்தல் – ராஜாவாகிய பென்யமீன், மோசியாவுக்குப் பின் ராஜாவாகுதல் – மனுஷர் கிறிஸ்துவிற்குத் தங்கள் ஆத்துமாக்களை காணிக்கையாக அர்ப்பணிக்கவேண்டும். ஏறக்குறைய கி.மு. 323–130.
1 இதோ, அந்தப்படியே, ஓம்னியாகிய நான், எங்களின் வம்சவரலாற்றைப் பாதுகாக்க, இந்தத் தகடுகளின்மீது நான் சிறிதாகிலும் எழுதவேண்டுமென்று, என் தகப்பன் யாரோமால் கட்டளையிடப்பட்டிருக்கிறேன்.
2 ஆகையால் என்னுடைய நாட்களில் என் ஜனமாகிய நேபியர்களை, தங்களின் விரோதிகளாகிய லாமானியர்களின் கரங்களுக்குள் விழாமல் பாதுகாக்க, நான் அதிகமாய் பட்டயத்தினால் சண்டையிட்டேன், என்று நீங்கள் அறியவேண்டுமென விரும்புகிறேன். ஆனால் இதோ, நானே ஒரு துன்மார்க்கன், நான் கைக்கொண்டிருக்கவேண்டியபடி, கர்த்தருடைய விதிகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளவில்லை.
3 அந்தப்படியே, இருநூற்று எழுபத்தாறு வருஷங்கள் கழிந்துசென்றன. அநேக சமாதானமான காலங்களும் இருந்தன கொடிய யுத்தங்களும் இரத்தம் சிந்துதலுமிருந்த அநேக காலங்களுமிருந்தன. ஆம், இறுதியாக இருநூற்று எண்பத்திரண்டு வருஷங்கள் கழிந்து சென்றன. என் பிதாக்களின் கட்டளைகளின்படியே இந்தத் தகடுகளை நான் வைத்திருந்தேன். நான் அவைகளை என் குமாரனாகிய அமரோனிடத்தில் ஒப்படைத்தேன். நான் இத்துடன் முடிக்கிறேன்.
4 இப்பொழுது அமரோனாகிய நான், கொஞ்சமாய் எழுதுகிற யாதொரு காரியத்தையும் என் தகப்பனின் புஸ்தகத்திலே எழுதுகிறேன்.
5 இதோ, அந்தப்படியே, முன்னூற்று இருபது வருஷங்கள் கழிந்துசென்றன, நேபியர்களின் பெரும்பகுதி துன்மார்க்கர்கள் அழிக்கப்பட்டார்கள்.
6 அவர்களை எருசலேமின் தேசத்திலிருந்து வெளியே வழிநடத்தி, தங்களின் விரோதிகளின் கரங்களுக்குள் விழுவதிலிருந்து விலக்கிப் பாதுகாத்த பின்னர், நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் இருக்கிற அளவில் தேசத்திலே விருத்தியடையமாட்டீர்கள், என்று கர்த்தர் எங்கள் பிதாக்களிடம் பேசிய வார்த்தைகள் மெய்ப்பிக்கப்படாமல் விடார்.
7 ஆகையால் கர்த்தர் அவர்களைப் பெரிய நியாயத்தீர்ப்பிலே விசாரித்தார்; ஆயினும் அவர், நீதிமான்கள் அழிந்துபோகாதபடி அவர்களைக் காத்துக்கொண்டார், ஆனால், அவர்களின் விரோதிகளின் கரங்களிலிருந்து அவர்களைத் தப்புவித்தார்.
8 அந்தப்படியே, என் சகோதரனாகிய கெமீஸிடம் இத்தகடுகளை ஒப்படைத்தேன்.
9 இப்பொழுது கெமீஸாகிய நான் என் சகோதரன் எழுதிய அதே புஸ்தகத்தில் நான் எழுத நினைத்த சில காரியங்களை எழுதுகிறேன்; ஏனெனில் இதோ, அவன் கடைசியாய் எழுதியதை நான் கண்டேன்; அதை அவன் தன் சொந்த கரத்தினால் எழுதினான். அவைகளை என்னிடம் அவன் ஒப்படைத்த நாளிலே அதை அவன் எழுதினான். இந்த விதமாக நாங்கள் பதிவேடுகளை வைத்திருந்தோம், ஏனெனில் அது எங்கள் பிதாக்களின் கட்டளைகளுக்கேற்றபடி அமைந்தது. இத்துடன் நான் முடிக்கிறேன்.
10 இதோ, நான் கெமீஸின் குமாரனாகிய ஆபிநாதோம். இதோ, அந்தப்படியே, என் ஜனமாகிய நேபியர்களுக்கும், லாமானியர்களுக்குமிடையே அதிகமான யுத்தத்தையும், பிணக்கையும் கண்டேன். என் சகோதரர்களைப் பாதுகாப்பதற்காக, அநேக லாமானியர்களின் ஜீவனை என் சொந்தப் பட்டயத்தால் வாங்கிப்போட்டேன்.
11 இதோ, தலைமுறைகளுக்கேற்ப இந்த ஜனங்களைப்பற்றிய பதிவு ராஜாக்கள் வைத்திருந்த தகடுகள் மீது பதிக்கப்பட்டிருந்தது; எழுதப்பட்டிருக்கும் வெளிப்படுத்தல்களையும் தீர்க்கதரிசனங்களையும் தவிர, வேறெதையும் நான் அறியேன். ஆகையால் போதுமானது எழுதப்பட்டிருக்கிறது. நான் இத்துடன் முடிக்கிறேன்.
12 இதோ, நான் ஆபிநாதோமின் குமாரனாகிய அமலேக்கி. இதோ, சாரகெம்லா தேசத்தின்மீது ராஜாவாக்கப்பட்ட மோசியாவைக் குறித்துச் சற்றே உங்களிடத்தில் நான் பேசுவேன்; ஏனெனில் இதோ, அவன் நேபியின் தேசத்திலிருந்து வெளியேறவேண்டுமெனவும், எவ்வளவுபேர் கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறார்களோ அவர்களனைவரும், அவனுடன்கூட தேசத்திலிருந்து வெளியேறி, வனாந்தரத்திற்குள் செல்லவேண்டுமெனவும் கர்த்தரால் அவன் எச்சரிக்கப்பட்டான்.
13 அந்தப்படியே, கர்த்தர் அவனிடம் கட்டளையிட்டிருந்தபடியே, அவன் செய்தான். கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்த யாவரும் தேசத்திலிருந்து வெளியேறி வனாந்தரத்திற்குள் புகுந்தார்கள். அவர்கள் அநேக பிரசங்கங்களாலும், தீர்க்கதரிசனங்களாலும் வழிநடத்தப்பட்டார்கள். அவர்கள் தொடர்ந்து தேவனுடைய வார்த்தையால் அறிவுறுத்தப்பட்டார்கள், அவர்கள் சாரகெம்லா தேசமென்று அழைக்கப்படுகிற தேசத்திற்குள் வரும்வரைக்கும், வனாந்தரத்தின் வழியே அவரின் புயத்தின் வல்லமையால் வழிநடத்தப்பட்டார்கள்.
14 சாரகெம்லாவின் ஜனங்கள் என்றழைக்கப்பட்ட ஒரு ஜனத்தை அவர்கள் கண்டுபிடித்தார்கள். இப்பொழுது சாரகெம்லாவின் ஜனங்கள் மத்தியிலே பெரும் ஆர்ப்பரித்தல் இருந்தது. ஏனெனில், யூதர்களின் வரலாறு அடங்கிய பித்தளைத் தகடுகளுடன் மோசியாவின் ஜனங்களைக் கர்த்தர் அனுப்பினதினிமித்தம், சாரகெம்லா மிகவும் ஆர்ப்பரித்தான்.
15 இதோ, அந்தப்படியே, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட காலத்தின்போது, எருசலேமிலிருந்து சாரகெம்லாவின் ஜனங்கள் வெளியே வந்தார்கள் என்று மோசியா கண்டுபிடித்தான்.
16 அவர்கள் வனாந்தரத்தில் பயணம் செய்து, மோசியா அவர்களைக் கண்டுபிடித்த தேசத்திற்குள், கர்த்தருடைய கரத்தால் பெரிய தண்ணீர்களைக் கடந்து கொண்டுவரப்பட்டார்கள், அதுமுதற்கொண்டு அங்கேயே அவர்கள் வாசம் செய்தார்கள்.
17 மோசியா அவர்களைக் கண்டுபிடித்த சமயம் அவர்கள் எண்ணிறைந்தவர்களாய் இருந்தனர். ஆயினும் அவர்கள் அநேக யுத்தங்களையும், கொடிய பிணக்குகளையும் பெற்றிருந்து, அவ்வப்போது பட்டயத்தால் விழுந்தும் போயிருந்தார்கள். அவர்களின் பாஷை சீர்குலைந்து போயிருந்தது; அவர்கள் தங்களுடன் எந்த ஒரு பதிவேட்டையும் கொண்டுவரவில்லை. தங்களைப் படைத்த சிருஷ்டிகர் ஒருவர் இருப்பதை அவர்கள் மறுத்தார்கள். மோசியாவினாலோ, மோசியாவின் ஜனங்களாலோ அவர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
18 ஆனால், அந்தப்படியே, மோசியா தன் பாஷையிலே அவர்கள் போதிக்கப்படும்படி செய்தான். அந்தப்படியே, மோசியாவின் பாஷையிலே அவர்கள் போதிக்கப்பட்ட பின்னர், சாரகெம்லா தன் நினைவிலுள்ளபடியே, தன் பிதாக்களின் வம்சவரலாற்றையும் கொடுத்தான். அவைகள் எழுதப்படுகின்றன; ஆனால் இந்த தகடுகளிலல்ல.
19 அந்தப்படியே, சாரகெம்லா ஜனங்களும், மோசியாவின் ஜனங்களும் ஒன்றாய் இணைந்தார்கள்; அவர்களின் ராஜாவாக மோசியா நியமிக்கப்பட்டான்.
20 அந்தப்படியே, மோசியாவின் காலங்களிலே, பொறிக்கப்பட்டவைளைக்கொண்ட ஒரு பெரிய கல் அவனிடத்தில் கொண்டுவரப்பட்டது; அவன் தேவனுடைய வரத்தினாலும் வல்லமையினாலும், பொறிக்கப்பட்டவைகளை வியாக்கியானம் பண்ணினான்.
21 கொரியாந்தமர் என்பவனைக்குறித்தும், அவன் ஜனத்தார் கொலையுண்டதைக்குறித்தும் ஒரு விவரத்தை அவை கொடுத்தன. கொரியாந்தமர், சாரகெம்லாவின் ஜனங்களால் கண்டுபிடிக்கப்பட்டான். ஒன்பது திங்கள் வரைக்கும் அவர்களுடன் தங்கியிருந்தான்.
22 அது அவனுடைய பிதாக்களைக்குறித்த சில வார்த்தைகளைத் தெரிவித்தது. ஜனத்தினுடைய பாஷையைக் கர்த்தர் தாறுமாறாக்கிய சமயத்தின்போது அவனுடைய முதற்பெற்றோர்கள் கோபுரத்திலிருந்து வந்தார்கள்; கர்த்தருடைய நியாயத் தீர்ப்புகளின்படியே அவர்கள்மீது கர்த்தரின் கொடிய ஆக்கினை விழுந்தது, அவை நியாயமானவை. அவர்களின் எலும்புகள் வடக்கேயுள்ள தேசத்திலே சிதறிக்கிடந்தன.
23 இதோ, மோசியாவின் காலங்களிலே, அமலேக்கியாகிய நான் பிறந்தேன்; அவன் மரணத்தைக்காணும் வரைக்குமாக நான் வாழ்ந்திருக்கிறேன்; அவனுக்குப் பதிலாக அவன் குமாரனாகிய பென்யமீன் அரசாளுகிறான்.
24 இதோ பென்யமீன் ராஜாவின் காலத்திலே நேபியர்களுக்கும் லாமானியர்களுக்குமிடையே கொடிய யுத்தத்தையும் மற்றும் இரத்தம் சிந்துதலையும் கண்டிருக்கிறேன். ஆனால் இதோ, சாரகெம்லாவின் தேசத்தைவிட்டு பென்யமீன் ராஜா அவர்களை வெளியே துரத்துமளவுக்கு, அவர்கள்மீது நேபியர்கள் அதிக பெலன் பெற்றிருந்தார்கள்.
25 அந்தப்படியே, நான் முதிர்வயதடையலானேன். எனக்கு சந்ததியார் இல்லாமற்போனதினாலும், கர்த்தருக்கு முன்பாக நியாயவானாய் பென்யமீன் ராஜா இருக்கிறானென்று அறிந்தபடியாலும், அவனிடத்தில் இந்தத் தகடுகளை ஒப்படைத்து, தீர்க்கதரிசனமுரைப்பதிலும், வெளிப்படுத்தல்களிலும், தூதர்களின் பணிவிடைகளிலும், பாஷைகளைப் பேசும் வரத்திலும், பாஷைகளை வியாக்கியானம்பண்ணும் வரத்திலும், நல்லதான எல்லா காரியத்திலும் விசுவாசித்து, இஸ்ரவேலின் பரிசுத்தராகிய தேவனிடத்தில் எல்லா மனுஷரும் வரவேண்டுமென்று புத்திசொல்லுகிறேன். ஏனெனில் கர்த்தரிடத்திலிருந்து வருவதைத் தவிர வேறு எதுவும் நல்லதல்ல. கேடானவைகள் பிசாசினிடத்திலிருந்து வருகிறது.
26 இப்பொழுது, என் அன்புச் சகோதரரே, நீங்கள் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கிறிஸ்துவினிடத்தில் வந்து, அவரின் இரட்சிப்பிலும், அவரின் மீட்பின் வல்லமையிலும் பங்கேற்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆம் அவரிடத்தில் வந்து, உங்கள் முழுஆத்துமாக்களை அவருக்குக் காணிக்கையாக அளித்து, உபவாசத்திலும் ஜெபத்திலும் தொடர்ந்திருந்து முடிவுபரியந்தம் நிலைநிற்பீர்களாக; கர்த்தர் ஜீவீக்கிறபடியால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்.
27 இப்பொழுது, நேபியின் தேசத்திற்கு திரும்பிப்போக வனாந்தரத்திற்குள் போன சிலரைக்குறித்துச் சற்றே பேசுகிறேன்; ஏனெனில், தங்கள் சுதந்திர தேசத்தை அடைய அநேகர் ஆவலாயிருந்தனர்.
28 ஆகையால், அவர்கள் வனாந்தரத்தினுள் போனார்கள். அவர்களின் தலைவன் பலசாலியாயும், பராக்கிரமனாயும், வணங்காக் கழுத்துடையவனாயும் இருந்தபடியால் அவர்கள் மத்தியில் ஒரு பிணக்கு ஏற்படச் செய்தான்; ஐம்பது பேரைத் தவிர மற்றனைவரும் வனாந்தரத்திலே கொலையுண்டார்கள், அவர்கள் மறுபடியும் சாரகெம்லாவிற்குத் திரும்பினார்கள்.
29 அந்தப்படியே, அவர்கள் இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் அநேகரைக் கூட்டிக்கொண்டு, மீண்டும் தங்கள் பயணத்தை வனாந்தரத்திற்குள் மேற்கொண்டார்கள்.
30 அமலேக்கியான எனக்கு, அவர்களுடனே போன ஒரு சகோதரனுமிருந்தான். அவர்களைக் குறித்து அக்காலமுதல் இன்னும் நான் அறியவில்லை. நான் என் கல்லறையிலே படுக்கவிருக்கிறேன். இந்தத் தகடுகள் முழுமையாயிற்று. நான் பேசுவதை முடித்துக்கொள்கிறேன்.