வேதங்கள்
1 நேபி 13


அதிகாரம் 13

புறஜாதியார் மத்தியில் பிசாசின் சபை ஏற்படுத்தப்படுதலையும், அமெரிக்காவைக் கண்டுபிடித்தலையும், குடியேற்றத்தையும், வேதாகமத்திலிருந்து பல தெளிவான, விலைமதிப்பற்ற பாகங்கள் தொலைந்துபோகுதலையும், புறஜாதியாரின் மதமாறுபாட்டின் விளைவான நிலைமையையும், சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தையும், பிற்கால வேதம் வருதலையும், சீயோன் கட்டப்படுதலையும் நேபி தரிசனத்திலே காணுதல். ஏறக்குறைய கி.மு. 600–592.

1 தூதன் என்னிடத்தில், பார் என்றான். நான் பார்த்தபொழுது அநேக தேசங்களையும் ராஜ்யங்களையும் கண்டேன்.

2 தூதன் என்னை நோக்கி: நீ என்ன காண்கிறாய்? என்றான். நான்: அநேக தேசங்களையும் ராஜ்யங்களையும் காண்கிறேன் என்றேன்.

3 அவன் என்னை நோக்கி: இவை புறஜாதியாரின் தேசங்களும் ராஜ்யங்களுமாகும் என்றான்.

4 புறஜாதியாரின் தேசங்களின் மத்தியிலே ஒரு பெரிய சபை உண்டாவதைக் கண்டேன்.

5 தூதன் என்னை நோக்கி: இதோ, மற்ற எல்லா சபைகளையும் விட, மிக அருவருப்பான ஒரு சபை உண்டாவதையும், அது தேவனின் பரிசுத்தவான்களைக் கொலை செய்து, ஆம், அவர்களை வதைத்து, அவர்களைக் கட்டி, இரும்பாலான நுகத்தில் அவர்களை நுகம்பூட்டி, அவர்களை சிறைத்தனத்திற்குள் கொண்டுவருவதையும் பார் என்றான்.

6 நான் இந்தப் பெரிதும் அருவருப்புமான சபையைக் கண்டேன்; மேலும் அதை ஸ்தாபித்த பிசாசையும் நான் கண்டேன்.

7 நான் பொன்னையும், வெள்ளியையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும் மற்றும் நேர்த்தியாக முறுக்கப்பட்ட பஞ்சு நூலையும் மற்றும் எல்லா விதமான விலையுயர்ந்த வஸ்திரங்களையும் கண்டேன்; நான் அநேக வேசிகளையும் கண்டேன்.

8 தூதன் என்னிடம்: இதோ, இந்தப் பொன்னும், வெள்ளியும், பட்டாடையும், சிவப்பாடையும், நேர்த்தியாக முறுக்கப்பட்ட பஞ்சு நூலும் மற்றும் விலையுயர்ந்த வஸ்திரங்களும், வேசிகளும் அந்தப் பெரிதும் அருவருப்புமான சபையின் வாஞ்சைகளாய் உள்ளன என்றான்.

9 மேலும் உலகப்பிரகாரமான புகழுக்காக அவர்கள் தேவனுடைய பரிசுத்தவான்களை அழித்து, அவர்களைச் சிறையிருப்புக்குள்ளாகக் கொண்டுவருகிறார்கள்.

10 நான் பார்த்தபொழுது, திரளான தண்ணீர்களைக் கண்டேன்; அவைகள் என்னுடைய சகோதரர்களின் சந்ததியிலிருந்து புறஜாதியாரைப் பிரித்தன.

11 அந்த தூதன் என்னை நோக்கி: இதோ, தேவனுடைய உக்கிரம் உன் சகோதரரின் சந்ததியின் மேல் உள்ளது என்றான்.

12 நான் பார்த்தபொழுது, புறஜாதியாரின் நடுவே, திரளான தண்ணீர்களால் என் சகோதரரின் சந்ததியாரிடமிருந்து பிரிக்கப்பட்ட ஒரு மனுஷனைக் கண்டேன்; மேலும் தேவனுடைய ஆவி, கீழே வந்து அந்த மனுஷனின்மீது கிரியை செய்வதையும் நான் கண்டேன்; அவன் திரளான தண்ணீர்களின்மீது பயணம் செய்து, வாக்குத்தத்தத்தின் தேசத்திலே இருந்த என் சகோதரரின் சந்ததியாரிடம் செல்வதைக் கண்டேன்.

13 தேவனுடைய ஆவி, மற்ற புறஜாதியார் மீது கிரியை செய்வதை நான் கண்டேன்; அவர்கள் சிறையிருப்பிலிருந்து விடுபட்டு, திரளான தண்ணீர்கள் மீது சென்றார்கள்.

14 வாக்குத்தத்தத்தின் தேசத்தின்மீது, அநேக திரளான புறஜாதியாரைக் கண்டேன்; என் சகோதரர்களின் சந்ததியின் மீது தேவனுடைய உக்கிரம் இருந்ததையும் கண்டேன்; அவர்கள் புறஜாதியாருக்கு முன்பாக சிதறடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டார்கள்.

15 கர்த்தருடைய ஆவி புறஜாதியார் மீது இருப்பதையும், அவர்கள் செழித்து, சுதந்தரிப்பதற்காக தேசத்தைப் பெற்றுக்கொள்வதையும், நான் கண்டேன்; என் ஜனம் கொல்லப்படாததற்கு முன்பு இருந்ததைப்போலவே, அவர்கள் வெண்மையாகவும், மிகுந்த சவுந்தரியமும், அழகும் உடையவர்களாயிருந்ததையும் நான் கண்டேன்.

16 நேபியாகிய நான், சிறைத்தனத்திலிருந்து வெளியே போன புறஜாதியார், கர்த்தருக்கு முன்பாக தங்களையே தாழ்த்துவதைக் கண்டேன்; கர்த்தருடைய வல்லமை அவர்களோடிருந்தது.

17 அவர்களுக்கு எதிராய்ப் போரிட, அவர்களின் பூர்வ தேச புறஜாதியார் தண்ணீர்கள் மீதும், பூமியின் மீதும், ஒன்றாகக் கூடியிருப்பதை நான் கண்டேன்.

18 தேவனுடைய வல்லமை அவர்களிடத்திலிருப்பதையும், அவர்களுக்கு எதிராகப் போரிட ஒன்றாகக் கூடின அனைவர் மீதும், தேவனுடைய உக்கிரம் இருப்பதையும், நான் கண்டேன்.

19 நேபியாகிய நான், சிறைத்தனத்திலிருந்து வெளியே போன புறஜாதியார் தேவனுடைய வல்லமையினால் மற்ற எல்லா தேசங்களின் கைகளிலிருந்தும் தப்புவிக்கப்பட்டதையும் கண்டேன்.

20 நேபியாகிய நான், அவர்கள் தேசத்திலே செழிப்படைவதைக் கண்டேன்; மேலும் ஒரு புஸ்தகத்தைக் கண்டேன். அது அவர்களோடு கொண்டு செல்லப்பட்டதையும் கண்டேன்.

21 தூதன் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்தின் பொருளை நீ அறிவாயா? என்றான்.

22 நான் அவனை நோக்கி: நான் அறியேன் என்றேன்.

23 அவன் சொன்னதாவது: அது ஒரு யூதனுடைய வாயிலிருந்து வருவதைப் பார். நேபியாகிய நான் அதைக் கண்டேன், மேலும் அவன் என்னை நோக்கி: நீ காண்கிற இந்தப் புஸ்தகம் இஸ்ரவேலின் வீட்டாருடன் கர்த்தர் செய்த அவருடைய உடன்படிக்கைகளைக் கொண்ட யூதர்களின் - பதிவேட்டைக் கொண்டிருக்கிறது என்றும், மேலும் அது பரிசுத்த தீர்க்கதரிசிகளின் பல தீர்க்கதரிசனங்களையும் கொண்டிருக்கிறது என்றும், பித்தளைத் தகடுகளின்மீது பொறிக்கப்பட்டவைகளைப்போலவே அதுவும் ஒரு பதிவேடு என்றும், ஆனால் அவை அதிகமானவை அல்ல என்றும், எனினும், கர்த்தர் இஸ்ரவேலின் வீட்டாருடன் செய்த உடன்படிக்கைகளை அவைகள் கொண்டிருக்கின்றன; ஆகவே அவைகள் புறஜாதியாருக்கு பெருமதிப்பு உடையதாயிருக்கிறது என்றும் சொன்னான்.

24 கர்த்தரின் தூதன் என்னை நோக்கி: ஒரு யூதனுடைய வாயிலிருந்து புஸ்தகம் வெளிவந்ததை நீ கண்டாய். மேலும் யூதனுடைய வாயிலிருந்து வெளிவந்தபோது பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் சாட்சி பகர்கிற கர்த்தரின் சுவிசேஷத்தின் முழுமையை அது கொண்டிருந்தது. அவர்கள் தேவ ஆட்டுக்குட்டியானவரில் உள்ள சத்தியத்தின்படியே சாட்சி சொல்கின்றனர் என்றான்.

25 ஆகையால், தேவனில் இருக்கிற சத்தியத்தின்படியே இந்தக் காரியங்கள் யூதர்களிடத்திலிருந்து தூய்மையாக புறஜாதியாருக்குச் செல்லுகிறது.

26 யூதர்களிடத்திலிருந்து புறஜாதியாருக்கு தேவ ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் கரத்தின் மூலமாக அவைகள் சென்ற பின்பு, மற்ற எல்லா சபைகளையும் விட மிகவும் அருவருப்பான, அந்தப் பெரிதும் அருவருப்புமான சபை ஸ்தாபிக்கப்படுகிறதை நீ காண்கிறாய்; ஏனெனில் இதோ, அவர்கள் தேவ ஆட்டுக்குட்டியானவரின் சுவிசேஷத்திலிருந்து தெளிவானதும் விலையேறப்பெற்றதுமான அநேக பகுதிகளை எடுத்துவிட்டனர்; கர்த்தருடைய அநேக உடன்படிக்கைகளையும் அவர்கள் எடுத்து விட்டார்கள்.

27 அவர்கள் மனுபுத்திரரின் கண்களைக் குருடாக்கவும், இருதயங்களைக் கடினப்படுத்தும் பொருட்டும், அவர்கள் கர்த்தரின் செம்மையான வழிகளை புரட்டிப்போடும்படிக்கு இவை அனைத்தையும் செய்தார்கள்.

28 ஆகையால், இந்தப் புஸ்தகம் பெரிதும் அருவருப்புமுள்ள சபையின் கரங்கள் வழியாகச் சென்ற பின்பு, தேவ ஆட்டுக்குட்டியானவரின் புஸ்தகமாகிய அந்தப் புஸ்தகத்திலிருந்து, அநேக தெளிவான விலையேறப்பெற்ற காரியங்கள் எடுக்கப்பட்டதை, நீ காண்கிறாய்.

29 இந்தத் தெளிவானதும் விலையேறப்பெற்றதுமான காரியங்கள் எடுக்கப்பட்ட பின்னர், அது எல்லா புறஜாதியாரின் தேசங்களுக்கும் சென்றது; பின்னர் அது எல்லா புறஜாதியாரின் தேசங்களுக்கும், நீ கண்ட சிறையிருப்பிலிருந்து வெளியாகிச் சென்ற புறஜாதியாரிடத்திற்கும், திரளான தண்ணீர்களைக் கடந்தும் சென்றது; மனுபுத்திரர் விளங்கிக்கொள்ள தெளிவானதும், தேவ ஆட்டுக்குட்டியானவரில் உள்ள தெளிவின்படியேயும் உள்ள, அநேக தெளிவானதும் விலையேறப்பெற்றதுமான காரியங்கள் இந்தப் புஸ்தகத்திலிருந்து எடுத்துவிடப்பட்டபடியினாலும், ஆட்டுக்குட்டியானவரின் சுவிசேஷத்திலிருந்து இந்தக் காரியங்கள் எடுத்துவிடப்பட்டபடியினாலும், ஆம், சாத்தான் அவர்கள் மீது பெரும் வல்லமையைப் பெறும் அளவிற்கு, மிகவும் அதிகமானோர் இடறினார்கள்.

30 இருந்தபோதிலும், மற்ற எல்லா தேசங்களைக் காட்டிலும் விரும்பத்தக்க இந்த தேசத்தின் மேற்பரப்பின் மீது, மற்ற எல்லா தேசங்களையும்விட தேவனுடைய வல்லமையினால் மேலே உயர்த்தப்பட்டிருக்கிறவர்களும், சிறைத்தனத்திலிருந்து வெளியே போனவர்களுமாகிய புறஜாதியாரை நீ காண்கிறாய். அந்த தேசமானது, கர்த்தராகிய தேவன் உன்னுடைய தகப்பனிடம், அவனது சந்ததி தங்களின் சுதந்திர தேசமாகக் கொள்ளவேண்டும் என்று உடன்படிக்கை செய்ததாகும். ஆகையால் உன் சகோதரருடன் கலந்திருக்கும், உன்னுடைய கலப்பு சந்ததியை, முழுவதுமாக புறஜாதியார் அழிக்க, கர்த்தராகிய தேவன் விடமாட்டார்.

31 புறஜாதியார் உன் சகோதரரின் சந்ததியை அழிக்கும்படியும் அவர் விடமாட்டார்.

32 ஆட்டுக்குட்டியானவருடைய சுவிசேஷத்தின் தெளிவும், மிக்க விலைமதிப்பற்றதுமான பாகங்கள் அந்த அருவருப்புள்ள சபையால் எடுக்கப்பட்டிருப்பதினால், புறஜாதியார் அந்த பயங்கரமான குருட்டு நிலையிலே இருக்கிறதை நீ காண்கிறபடியே, அதிலே அவர்கள் என்றென்றைக்கும் இருக்கும்படி கர்த்தராகிய தேவன் விடவுமாட்டார், அதன் ஸ்தாபிதத்தை நீ கண்டிருக்கிறாய்.

33 ஆதலால் தேவ ஆட்டுக்குட்டியானவர் சொல்வதாவது: இஸ்ரவேல் வீட்டாரில் மீதியானவர்களைக், கண்டிப்பான நியாயத்தீர்ப்பில் விசாரிக்கும்போது, நான் புறஜாதியாரிடத்தில் இரக்கமாயிருப்பேன்.

34 கர்த்தரின் தூதன் என்னிடம் சொன்னதாவது: தேவ ஆட்டுக்குட்டியானவர் சொல்லுகிறார், இதோ, இஸ்ரவேல் வீட்டாரின் மீதியானவர்களை நான் விசாரித்த பின்பு, நான் அவர்களை நியாயத்தீர்ப்பிலே விசாரித்து, புறஜாதியார் கையினாலே அவர்களை அடித்தபின்பும், ஆட்டுக்குட்டியானவருடைய சுவிசேஷத்தின் மிகத் தெளிவும், விலையேறப்பெற்றதுமான பாகங்கள், வேசிகளின் தாயாகிய, அருவருப்புள்ள சபையால் எடுக்கப்பட்டிருப்பதினால், புறஜாதியார் வெகுவாய் இடறுகிற, அந்நாளில் தெளிவானதும், விலையேறப்பெற்றதுமாயிருக்கும் என் சுவிசேஷத்தில், அதிகமானவற்றை, என் சகல வல்லமையினாலே அவர்களிடம் கொண்டுவருமளவிற்கு நான் புறஜாதியார்களிடத்தில் இரக்கமுள்ளவராயிருப்பேன். நான் பேசுகிற இந்த மீதியானவர்கள் உன் தகப்பனின் சந்ததியே என்று ஆட்டுக்குட்டியானவர் சொல்லுகிறார்.

35 ஏனெனில், இதோ, ஆட்டுக்குட்டியானவர் சொல்லுகிறார்: நான் செய்யப்போகும் தெளிவும் விலைமதிப்பற்றதுமான ஊழியத்தைக் குறித்து, அவர்கள் அநேக காரியங்களை எழுதும்படிக்கு உன் சந்ததியாருக்கு என்னை வெளிப்படுத்துவேன்; உன் சந்ததியும், உன் சகோதரரின் சந்ததியும் அழிக்கப்பட்டு, அவிசுவாசத்தில் நலிந்துபோன பின்பு, இதோ ஆட்டுக்குட்டியானவரின் வரத்தினாலும், வல்லமையினாலும், புறஜாதியாருக்கு வெளிப்படும்படியாக, இவைகள் மறைத்து வைக்கப்படும்.

36 அவைகளில் என் சுவிசேஷம் எழுதப்படும் என்று, என் கன்மலையும், இரட்சிப்புமாகிய ஆட்டுக்குட்டியானவர் சொல்லுகிறார்.

37 அந்த நாளில் என் சீயோனை ஸ்தாபிக்க வகைதேடுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் வரத்தையும் வல்லமையையும் பெறுவார்கள்; அவர்கள் முடிவுபரியந்தம் நிலைத்திருப்பார்களெனில் அவர்கள் கடைசி நாளிலே உயர்த்தப்பட்டு, தேவ ஆட்டுக்குட்டியானவரின் நித்திய ராஜ்யத்தில் மீட்கப்படுவார்கள்; ஆம், சமாதானத்தையும், மிகுந்த சந்தோஷத்தின் சுவிசேஷத்தையும் அறிவிக்கும் அவர்கள், மலைகளின்மேல் எவ்வளவு அழகாக இருப்பார்கள்.

38 என்னுடைய சகோதரர்களின் சந்ததியின் மீதியானவர்களையும், புறஜாதியாரிடமிருந்து என் சகோதரரின் சந்ததியாரின் மீதியானவர்களிடத்தில் வரும்படிக்கு, யூதனின் வாயிலிருந்து வெளிவந்த, தேவ ஆட்டுக்குட்டியானவரின் புஸ்தகத்தையும் கண்டேன்,

39 அது அவர்களிடத்தில் வந்த பின்பு, அவர்களுக்கு புறஜாதியாரிடமிருந்து தேவ ஆட்டுக்குட்டியானவரின் வல்லமையினால் வந்த, மற்ற புஸ்தகங்களையும் நான் கண்டேன். அவைகள் தேவ ஆட்டுக்குட்டியானவரின் தீர்க்கதரிசிகள் மற்றும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பதிவுகள் உண்மையானவை என்று, புறஜாதியாரும் என் சகோதரரின் சந்ததியின் மீதியானவர்களும் பூமியின் பரப்பின் மேலெல்லாம் சிதறடிக்கப்பட்ட யூதர்களும், ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளன.

40 தூதன் என்னிடம் சொன்னதாவது: நீ புறஜாதியாரின் மத்தியிலே கண்ட இந்தக் கடைசி பதிவேடுகள், ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களால் எழுதப்பட்ட முந்தினவையின் சத்தியத்தை நிலைநிறுத்தி, அவைகளிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட தெளிவான, விலைமதிப்பற்றதுமான காரியங்களைத் தெரியப்படுத்தும்; எல்லா இனத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும், தேவ ஆட்டுக்குட்டியானவர் நித்திய பிதாவின் குமாரனென்றும், உலகத்தின் இரட்சகர் என்றும், எல்லா மனுஷரும் அவரிடம் வரவேண்டும், இல்லாவிடில், இரட்சிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரியப்படுத்தும்.

41 ஆட்டுக்குட்டியானவரின் வாயினால் உறுதிப்படுத்தப்படும் வார்த்தைகளின்படியே, அவைகள் வருதல் வேண்டும்; தேவ ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பதிவேடுகளில் மட்டுமல்லாமல், உன்னுடைய சந்ததியின் பதிவேடுகளிலும் ஆட்டுக்குட்டியானவரின் வார்த்தைகள் தெரியப்படுத்தப்படும்; ஆகையால் அவைகள் இரண்டும் ஒன்றாக உறுதிப்படுத்தப்படும், ஏனெனில் பூமி முழுவதற்கும் ஒரே தேவனும், ஒரே மேய்ப்பருமேயுள்ளனர்.

42 அவர் தன்னையே எல்லா தேசங்களுக்கும், யூதருக்கும், புறஜாதியாருக்கும் வெளிப்படுத்தும் காலம் வரும்; அவர் தன்னையே புறஜாதியாருக்கும் யூதர்களுக்கும் வெளிப்படுத்தின பின்பு, அவர் தன்னையே புறஜாதியாருக்கும், யூதர்களுக்கும் வெளிப்படுத்துவார். அப்பொழுது பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்.