அதிகாரம் 20
கர்த்தர் அவரின் நோக்கங்களை இஸ்ரவேலுக்கு வெளிப்படுத்துதல் – உபத்திரவத்தின் சூளையிலிருந்து இஸ்ரவேல் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாபிலோனிலிருந்து போதல் – ஏசாயா 48ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 588–570.
1 இஸ்ரவேலின் நாமத்தினால் அழைக்கப்படுபவர்களும், யூதாவின் தண்ணீர்களிலிருந்து அல்லது ஞானஸ்நானத் தண்ணீர்களிலிருந்து வெளிவருபவர்களும், கர்த்தரின் நாமத்தினால் ஆணையிடுபவர்களும், இஸ்ரவேலின் தேவனைக் குறிப்பிடுபவர்களும், ஆகிய யாக்கோபின் வீட்டாரே, இதற்குச் செவிகொடுத்துக் கேளுங்கள், ஆனாலும் அவர்கள் சத்தியத்திலோ நீதியிலோ ஆணையிடுவதில்லை.
2 இருந்தபோதிலும், அவர்கள் தங்களைப் பரிசுத்தப் பட்டணத்தார் என அழைத்துக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் சேனைகளின் கர்த்தராகிய இஸ்ரவேலின் தேவனை சார்ந்திருக்கவில்லை; ஆம், சேனைகளின் கர்த்தர் என்பது அவரின் நாமம்.
3 இதோ, முந்திய காரியங்களை நான் ஆதிமுதல் அறிவித்தேன்; அவைகள் என் வாயிலிருந்து போயின, நான் அவர்களுக்குக் காட்டினேன். நான் அவர்களுக்கு திடீரென காட்டினேன்.
4 நீங்கள் முரடர்கள் என்றும், உங்களுடைய கழுத்து இரும்புபோல் வளையாததென்றும், உங்களுடைய நெற்றி பித்தளை என்றும் நான் அறிந்திருந்தபடியால், நான் இதைச் செய்தேன்.
5 நான் ஆதிமுதற்கொண்டு உங்களுக்கு அறிவித்தேன்; அந்தப்படியே, அவைகள் நடக்கும் முன்பே அவைகளை உங்களுக்கு நான் காட்டினேன்; அவர்களை என்னுடைய விக்கிரகம் செய்ததென்றும், என்னுடைய சொரூபம் மற்றும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகம் அவர்களுக்குக் கட்டளையிட்டதென்றும், நீங்கள் சொல்லாதபடிக்கு அச்சத்தால் நான் அவைகளைக் காண்பித்தேன்.
6 அவைகள் எல்லாவற்றையும் நீங்கள் கண்டும் கேட்டுமிருக்கிறீர்கள்; அவைகளை நீங்கள் அறிவிக்கமாட்டீர்களோ? மேலும் இது முதல் புதிய காரியங்களையும், மறைந்துள்ள காரியங்களையும்கூட நான் உங்களுக்குக் காண்பித்திருக்கிறேன், நீங்கள் அவைகளை அறிந்திருக்கவில்லை.
7 ஆதியிலிருந்தே அல்ல, அவைகள் இப்பொழுது சிருஷ்டிக்கப்பட்டவை, இதோ, நான் அவைகளை அறிவேன் என்று நீங்கள் சொல்லாதபடிக்கு, நீங்கள் கேளாத நாளுக்கு முன்பே அவை உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
8 ஆம், நீங்கள் கேட்கவில்லை; ஆம், நீங்கள் அறிந்திருக்கவில்லை; ஆம், அந்தக் காலம் முதல் உங்கள் செவி திறக்கப்படவில்லை; நீங்கள் மிகவும் துரோகமாய் செயல்புரிவீர்களென்றும், கர்ப்பந்தொடங்கி மீறினவர்கள் என்றே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள் என்றும் அறிந்திருக்கிறேன்.
9 ஆயினும், என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை தாமதம் செய்து மேலும் உங்களைச் சங்கரிக்காதபடிக்கு, நான் என் துதிகளுக்காக, உங்களிடமிருந்து விலகியிருப்பேன்.
10 ஏனெனில், இதோ, நான் உங்களைப் புடமிட்டு, உபத்திரவத்தின் சூளையிலிருந்து நான் உங்களைத் தெரிந்து கொண்டேன்.
11 என்னிமித்தமே, ஆம், என்னிமித்தமே இதை நான் செய்வேன், ஏனெனில் என்னுடைய நாமம் தீட்டுப்பட நான் விடமாட்டேன், மேலும் என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுப்பதில்லை.
12 யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; ஏனெனில் நானே அவர், நானே முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன்.
13 என்னுடைய கரம் பூமியின் அஸ்திபாரத்தைப் போட்டது, மேலும் என்னுடைய வலது கரம் வானங்களை அளந்தது. நான் அவைகளை அழைக்க, அவைகள் ஒன்றாக நிற்கும்.
14 நீங்கள் எல்லோரும் கூடிவந்து கேளுங்கள்; இந்தக் காரியங்களை அவர்களுக்கு அறிவித்தவன் யார்? கர்த்தர் அவனை நேசித்து இருக்கிறார்; ஆம், அவர்கள் மூலமாக அவர் அறிவித்த அவரின் வார்த்தையை அவர் நிறைவேற்றுவார். மேலும் அவர் அவருடைய விருப்பத்தை பாபிலோனில் செய்வார், கல்தேயர்மீது அவரின் கரம் வரும்.
15 கர்த்தர் சொல்வதாவது; ஆம், கர்த்தராகிய நான் பேசியுள்ளேன்; ஆம், அறிவிக்கும்படி அவனை அழைத்தேன்; அவனை நான் கொண்டுவந்தேன்; அவன் தன்னுடைய வழியைச் செழிப்படையச் செய்வான்.
16 நீங்கள் எனக்குச் சமீபமாய் வாருங்கள்; நான் அந்தரங்கத்தில் பேசவில்லை; ஆதிமுதல் அது அறிவிக்கப்பட்ட காலம் முதலே நான் பேசினேன்; மேலும் கர்த்தராகிய தேவனும், அவரின் ஆவியும் என்னை அனுப்பியிருக்கிறார்கள்.
17 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற, உன் மீட்பராகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; நான் அவனை அனுப்பினேன், பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தரே அதைச் செய்திருக்கிறார்.
18 நீ என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்து இருந்திருப்பாயாகில், உன் சமாதானம் நதியைப்போலவும் உன் நீதி, சமுத்திரத்தின் அலைகளைப்போலவும் இருந்திருக்கும்.
19 உன் சந்ததி மணலத்தனையாயும், உன் வயிற்றின் பிள்ளைகள் அதிலுள்ள கற்களைப்போலவும் இருந்திருப்பார்கள்; அவனது நாமம் என் முன்னிருந்து, அறுப்புண்டுபோகாமலும், அழிக்கப்படாமலுமிருந்திருக்கும்.
20 பாபிலோனிலிருந்து வெளியேறுங்கள்; கல்தேயரிடத்திலிருந்தும் தப்பியோடுங்கள்; கர்த்தர் தன் தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சங்கீத சத்தத்தோடு பிரசித்தப்படுத்துங்கள். பூமியின் கடையாந்தரமட்டும் உச்சரியுங்கள்.
21 அவர்கள் தாகமடையவில்லை, அவர் அவர்களைப் பாலைவனத்தின் வழியே நடத்திச் சென்றார், அவர்களுக்காகத் தண்ணீர்களைப் பாறையிலிருந்து வழிந்தோடப்பண்ணினார்; அவர் பாறையைப் பிளந்தார், தண்ணீர்கள் பீறிட்டது.
22 இவைகளைச் செய்ததோடு, இன்னும் பெரியவைகளையும் அவர் செய்திருந்தபோதிலும், அங்கே சமாதானம் இல்லை என்று துன்மார்க்கருக்கு கர்த்தர் சொல்லுகிறார்.