அதிகாரம் 15
பிற்காலத்தில், புறஜாதியாரிடத்திலிருந்து லேகியின் சந்ததி சுவிசேஷத்தைப் பெறவேண்டும் – சுபாவக் கிளைகள் மீண்டும் ஒட்டவைக்கப்படுகிற ஒரு ஒலிவ விருட்சத்திற்கு இஸ்ரவேலின் கூடுகை ஒப்பிடப்படுதல் – நேபி ஜீவ விருட்சத்தின் தரிசனத்தின் பொருளைக் கூறுதல், நீதிமான்களிலிருந்து துன்மார்க்கரைப் பிரிப்பதில் தேவனுடைய நியாயத்தைக் கூறுதல். ஏறக்குறைய கி.மு. 600–592.
1 அந்தப்படியே, நேபியாகிய நான், ஆவிக்குள்ளாக எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்தக் காரியங்களை எல்லாம் கண்டபின்பு, என் தகப்பனின் கூடாரத்திற்கு நான் திரும்பினேன்.
2 அந்தப்படியே, நான் என் சகோதரரைக் கண்டேன், அவர்களிடத்தில் என் தகப்பன் பேசிய காரியங்களைக் குறித்து, அவர்கள் ஒருவரோடு ஒருவர் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
3 ஏனெனில் அவர் உண்மையாகவே அவர்களிடத்தில் அநேக மாபெரும் காரியங்களைப் பேசியிருக்கிறார், அவைகளை ஒரு மனுஷன் கர்த்தரிடத்தில் கேட்டாலொழிய, அறிவதற்குக் கடினமாய் இருப்பவை; அவர்கள் தங்கள் இருதயங்களிலே கடினமுள்ளவர்களாய் இருந்தபடியால், அவர்கள் செய்யவேண்டிய பிரகாரமாய், அவர்கள் கர்த்தரை நோக்கிப் பார்க்கவில்லை.
4 இப்பொழுதும், நேபியாகிய நான், அவர்களின் இருதயங்களின் கடினத்தின் நிமித்தமும், நான் கண்ட காரியங்களின் நிமித்தமும், மனுபுத்திரரின் பெரும் துன்மார்க்கத்தால், அவைகள் தவிர்க்கப்படாமல் சம்பவிக்குமென அறிந்து சஞ்சலப்பட்டேன்.
5 அந்தப்படியே, நான் என் உபத்திரவங்களினிமித்தம் மேற்கொள்ளப்பட்டேன், ஏனெனில் நான் அவர்கள் வீழ்ச்சியைக் குறித்துக் கண்டிருந்தபடியால், என் ஜனங்களின் அழிவின் நிமித்தம், என் உபத்திரவங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக இருந்தது என நான் கருதினேன்.
6 அந்தப்படியே, நான் பெலனைப் பெற்ற பின்பு, என் சகோதரர்களிடத்தில், அவர்களது விவாதத்தின் காரணத்தை அறிய ஆசைப்பட்டவனாய், நான் அவர்களிடத்தில் பேசினேன்.
7 அப்பொழுது அவர்கள், இதோ, புறஜாதியாரைக் குறித்தும், ஒலிவமரத்தின் சுபாவக் கிளைகளைக் குறித்தும், நம் தகப்பன் பேசிய வார்த்தைகளை நாங்கள் புரிந்து கொள்ளமுடியவில்லை என்றார்கள்.
8 நான் அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தரிடத்தில் கேட்டீர்களா? என்று கேட்டேன்.
9 அவர்கள் என்னை நோக்கி: நாங்கள் கேட்கவில்லை, ஏனென்றால் கர்த்தர் எங்களுக்கு அவ்வகையான காரியத்தை தெரியப்படுத்துவதில்லை என்றார்கள்.
10 இதோ, நான் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்வதில்லை? உங்கள் இருதயக் கடினத்தினிமித்தம், நீங்கள் ஏன் அழிந்துபோகிறீர்கள்? என்றேன்.
11 நீங்கள் கர்த்தர் சொன்ன காரியங்களை நினைவுகூரவில்லையா? உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல், என்னுடைய கட்டளைகளை கருத்தாய் கைக்கொண்டு, நீங்கள் பெறுவீர்கள் என நம்பி, விசுவாசத்திலே என்னிடம் கேட்டால், மெய்யாகவே இந்தக் காரியங்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
12 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நம் தகப்பனுக்குள் இருந்த கர்த்தரின் ஆவியின் மூலம், இஸ்ரவேல் வீட்டார் ஒரு ஒலிவ விருட்சத்திற்கு ஒப்பிடப்பட்டனர்; நாம் இஸ்ரவேல் வீட்டாரிடமிருந்து பிரிந்துபோனவர்களல்லவா, நாம் இஸ்ரவேல் வீட்டாரின் ஒரு கிளையல்லவா?
13 இப்பொழுதும், புறஜாதிகளின் முழுமையின் மூலமாக, சுபாவக் கிளைகள் ஒட்ட வைக்கப்படுவதைக் குறித்து, நம் தகப்பன் சொன்ன காரியம் என்னவென்றால், பிற்காலங்களில் நம் சந்ததியார், ஆம், அநேக வருஷங்கள் அவிசுவாசத்தில் நலிந்துபோன பின்னரும், மனுபுத்திரருக்கு மேசியா தம்மைச் சரீரத்தில் வெளிப்படுத்திய பல வருஷங்களுக்குப் பின்னரும், பல தலைமுறைகளுக்குப் பின்னரும், மேசியாவின் சுவிசேஷத்தின் முழுமை, புறஜாதியாரிடத்தில் வரும். புறஜாதியாரிடமிருந்து நம் சந்ததியாரின் மீதியானவர்களிடத்தில் வரும்.
14 நம் சந்ததியாரில் மீதியானவர்கள், தாங்கள் இஸ்ரவேல் வீட்டார் எனவும், அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையின் ஜனங்கள் என்பதையும் அறிந்துகொள்ளும் நாளிலே, தங்கள் முற்பிதாக்களைப்பற்றி அறிந்து அவரால் தங்கள் பிதாக்களுக்குப் போதிக்கப்பட்ட, தங்கள் மீட்பரின் சுவிசேஷத்தைப்பற்றிய ஞானத்திற்கும் வருவார்கள். ஆகவே அவர்கள் அவரிடம் வந்து எப்படி இரட்சிக்கப்படுவதென அறிந்துகொள்ளும்படியாக தங்கள் மீட்பர் மற்றும் அவரது கோட்பாடுகளின் முக்கியத்துவத்தைப்பற்றிய ஞானத்திற்கும் வந்தடைவார்கள்.
15 அந்நாளில் அவர்கள் களிகூர்ந்து, தங்கள் கன்மலையும், இரட்சிப்புமான, நித்திய தேவனுக்கு துதி செலுத்தமாட்டார்களா? ஆம், அந்நாளில், மெய்யான திராட்சைக் கொடியிலிருந்து தங்கள் பெலனையும், போஷாக்கையும் பெறமாட்டார்களா? ஆம், அவர்கள் தேவனுடைய மெய்யான மந்தைக்கு வரமாட்டார்களா?
16 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆம்; அவர்கள் மறுபடியும் இஸ்ரவேலின் வீட்டாரின் மத்தியில் நினைவுகூரப்படுவார்கள்; ஒலிவ மரத்தின் சுபாவ கிளைகளாயுள்ள அவர்கள், மெய்யான ஒலிவ விருட்சத்தோடு ஒட்டப்படுவார்கள்.
17 இதைத்தான் நம் தகப்பனும் கருதுகிறார்; புறஜாதிகளால் அவர்கள் சிதறடிக்கப்படும்வரை, இவை சம்பவிக்காது என்றும், அவர் கருதுகிறார்; இஸ்ரவேல் வீட்டார் அல்லது யூதர்களால் அவர் வெறுக்கப்படுவார் என்ற ஒரே காரணத்திற்காக, புறஜாதிகளிடத்தில் தன் வல்லமையைக் கர்த்தர் காண்பிப்பதற்குத்தான், புறஜாதிகளின் வழியாக அது வர வேண்டும் என்று அவர் கருதுகிறார்.
18 ஆகையால், நம் தகப்பன், நம்முடைய சந்ததியாரைக் குறித்து மட்டும் பேசாமல், பிற்காலங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய உடன்படிக்கைகளைச் சுட்டிக்காட்டி, எல்லா இஸ்ரவேலின் வீட்டாரைக் குறித்தும் பேசியிருக்கிறார்; கர்த்தர் நம் பிதாவாகிய ஆபிரகாமோடு அந்த உடன்படிக்கையைச் செய்து சொன்னதாவது: உன் சந்ததியினால் பூமியிலுள்ள சகல சந்ததிகளும் ஆசீர்வதிக்கப்படும்.
19 அந்தப்படியே, நேபியாகிய நான், இந்தக் காரியங்களைக் குறித்து அவர்களிடத்தில் அதிகம் பேசினேன்; ஆம், பிற்காலங்களில் யூதர்களின் சீர்படுதல் குறித்து அவர்களிடத்தில் பேசினேன்.
20 இஸ்ரவேலின் வீட்டாரை அல்லது யூதர்களின் சீர்படுதலைக் குறித்துப் பேசப்பட்டிருக்கிற, ஏசாயாவின் வார்த்தைகளை அவர்களிடத்தில் திரும்பவும் விவரித்தோம்; அவர்கள் சீர்படுத்தப்பட்ட பின்பு, அவர்கள் இனி ஒருபோதும் தாறுமாறாக்கப்படவோ அல்லது மறுபடியும் சிதறடிக்கப்படவோ கூடாது. அந்தப்படியே, அவர்கள் சாந்தமுள்ளவர்களாய், கர்த்தருக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்தும்படிக்கு, நான் இன்னும் அநேக வார்த்தைகளை என்னுடைய சகோதரர்களிடம் பேசினேன்.
21 அந்தப்படியே, அவர்கள் மறுபடியும் என்னிடம்: நம் தகப்பன் சொப்பனத்தில் கண்ட இந்தக் காரியத்தின் அர்த்தம் என்ன? அவர் கண்ட விருட்சத்தின் அர்த்தம் என்ன? என்றார்கள்.
22 நான் அவர்களை நோக்கி: அது ஜீவவிருட்சத்திற்கு ஒரு உவமை என்றேன்.
23 அவர்கள் என்னை நோக்கி: விருட்சத்திற்கு நடத்திச் சென்ற, நம் தகப்பன் கண்ட இருப்புக்கோலின் அர்த்தம் என்ன? என்றார்கள்.
24 நான் அவர்களை நோக்கி: அது தேவனுடைய வார்த்தை என்றும், தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து, அதை உறுதியாய்ப் பிடித்துக் கொள்கிறவர்கள், ஒருக்காலும் அழிவதில்லை என்றும், அவர்களை அழிவுக்குள் நடத்திச்சென்று குருடாக்க, சோதனைகளும், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களும், அவர்களை மேற்கொள்ளமுடியாது, என்றேன்.
25 ஆகையால், நேபியாகிய நான் கர்த்தரின் வார்த்தைக்கு அவர்கள் செவி கொடுக்கவேண்டும் என்று புத்தி சொன்னேன்; ஆம், அவர்கள் சகல காரியங்களிலும், எப்பொழுதும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள நினைவுகூரவும், தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவும், நான் பெற்றிருந்த சகல திறமைகளாலும், என் ஆத்துமாவின் முழுஊக்கத்தோடும், அவர்களுக்கு நான் புத்திசொன்னேன்.
26 அவர்கள் என்னை நோக்கி: நம் தகப்பன் கண்ட தண்ணீருள்ள நதியின் அர்த்தம் என்ன? என்றார்கள்.
27 நான் அவர்களிடத்தில், என் தகப்பன் கண்ட தண்ணீர் அசுசி என்றும், அவருடைய மனமோ மற்ற காரியங்களில் வெகுவாய் மூழ்கியிருந்ததால், தண்ணீரின் அசுசியை அவர் காணவில்லை என்றும் சொன்னேன்.
28 நான் அவர்களை நோக்கி, அது ஜீவவிருட்சத்தினின்றும், தேவனுடைய பரிசுத்தவான்களினின்றும், துன்மார்க்கரைப் பிரிக்கும் பயங்கர பிளவு என்றேன்.
29 அது துன்மார்க்கருக்காக ஆயத்தம்பண்ணப்பட்டதென்று தூதன் என்னிடம் சொன்ன அந்த பயங்கர நரகத்திற்கு அது ஒப்புமையாக இருந்தது என்று நான் அவர்களிடம் சொன்னேன்.
30 தேவனுடைய நியாயம் நீதிமான்களிடமிருந்து துன்மார்க்கரைப் பிரித்ததை, நம் தகப்பன் கண்டார் எனவும், மேலும் அதிலிருந்த பிரகாசமோ தேவனை நோக்கி, என்றென்றைக்கும் முடிவில்லாமல் எழும்புகிற அக்கினி ஜுவாலையின் பிரகாசத்தைப்போல இருந்தது எனவும் நான் அவர்களிடத்தில் சொன்னேன்.
31 அவர்கள் என்னை நோக்கி: இந்தக் காரியம் சோதனைக் காலங்களில் சரீரத்தின் வேதனையைக் குறிக்கிறதா, அல்லது இம்மைக்குரிய சரீரத்தின் மரணத்துக்குப் பின்னர் ஆத்துமாவின் இறுதி நிலையைக் குறிக்கிறதா அல்லது இம்மைக்குரிய காரியங்களைப்பற்றிப் பேசுகிறதா என்றார்கள்.
32 அந்தப்படியே, நான் அவர்களை நோக்கி, இது இம்மைக்குரிய மற்றும் ஆவிக்குரிய இரண்டு காரியங்களின் அடையாளமாயிருக்கிறது; ஏனெனில் அவர்களது கிரியைகளின்படி அவர்கள் நியாயந்தீர்க்கப்படும்படியான நாள் வரும், ஆம், சோதனைக் காலத்தில் இம்மைக்குரிய சரீரத்தில் நடப்பித்த கிரியைகளின்படியும் நியாயந்தீர்க்கப்படும்படியான நாள் வரும் என்றேன்.
33 ஆதலால், அவர்கள் தங்கள் துன்மார்க்கத்தில் மரிப்பார்களெனில், அவர்கள் நீதி சம்மந்தமான, ஆவிக்குரிய காரியங்களிலிருந்து தள்ளப்பட வேண்டும்; ஆதலால் அவர்கள் கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்படத்தக்கதாக, தேவனுக்கு முன்பாக நிற்கும்படி கொண்டுவரப்பட வேண்டும்; அவர்கள் கிரியைகள் அசுத்தமானதாய் இருந்தால் அவர்களும் அசுத்தமாயிருக்க வேண்டும்; அவர்கள் அசுத்தமாயிருப்பின், தேவனுடைய ராஜ்யத்தில் அவர்கள் வாசமாயிருக்கமுடியாது; அப்படியிருந்தால் தேவனுடைய ராஜ்ஜியமும் அசுத்தமாயிருக்க வேண்டும்.
34 ஆனால் இதோ, நான் உங்களிடத்தில் சொல்லுகிறேன், தேவனுடைய ராஜ்யம் அசுசி இல்லாதது, மேலும் எந்த அசுசியான பொருளும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது; ஆகையால் அசுசியாக இருப்பவைகளுக்கென்று அசுசியான இடமும் ஆயத்தப்படுத்தப்பட வேண்டியது அவசியமாயுள்ளது.
35 நான் சொன்ன, பயங்கர நரகமான ஒரு இடம், அங்கே ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது, பிசாசு அதை ஆயத்தப்படுத்துகிறவனாய் இருக்கிறான்; ஆதலால் தேவனுடைய ராஜ்யத்தில் ஜீவித்தல் அல்லது நான் சொன்ன நியாயத்தின்படி தள்ளப்படுதல், மனுஷருடைய ஆத்துமாக்களின் முடிவான நிலைமையாயிருக்கிறது.
36 ஆகவே, துன்மார்க்கர் நீதிமான்களிடமிருந்தும், ஆம், எல்லாக் கனிகளைக் காட்டிலும் மிகவும் விலைமதிப்பில்லாததும், தேவனுடைய வரங்கள் எல்லாவற்றிற்கும் மேலானதும், மிகவும் விரும்பப்படத்தக்கதுமான கனியை உடையதாயிருக்கிற, ஜீவவிருட்சத்தினின்றும் விலக்கிவிடப்படுவார்கள். இவ்வாறு நான் என் சகோதரரோடு பேசினேன். ஆமென்.