அதிகாரம் 16
துன்மார்க்கர் உண்மையை கடினம் என எண்ணுதல் – இஸ்மவேல் குமாரத்திகளை லேகியின் குமாரர்கள் விவாகம் செய்தல் – லியஹோனா வனாந்தரத்தில் அவர்களை வழிநடத்துதல் – அவ்வப்போது கர்த்தரிடத்திலிருந்து வருகிற செய்திகள், லியஹோனா மீது எழுதப்படுதல் – இஸ்மவேல் மரணமடைதல் – அவனுடைய குடும்பத்தினர் உபத்திரவத்தின் நிமித்தமாய் முறுமுறுத்தல். ஏறக்குறைய கி.மு. 600–592.
1 இப்பொழுதும், அந்தப்படியே, நேபியாகிய நான் என் சகோதரர்களிடம் பேசி முடித்தபின்பு, இதோ, அவர்கள் என்னை நோக்கி: எங்களால் தாங்கிக்கொள்வதற்கும் அதிகமான கடினமுள்ள காரியங்களை நீ எங்களுக்கு அறிவித்திருக்கிறாய் என்றார்கள்.
2 அந்தப்படியே, நான் அவர்களை நோக்கி, சத்தியத்தின்படியே துன்மார்க்கருக்கு எதிராகக் கடினமான காரியங்களைச் சொன்னேன், நான் நீதிமான்களை நியாயவான்களாக்கி, அவர்கள் கடைசி நாளில் உயர்த்தப்படுவார்கள் என்பதற்கு சாட்சியும் கொடுத்திருக்கிறேன்; ஆகையால் குற்றமுள்ளவர்கள் சத்தியத்தைக் கடினமாய் கருதுகிறார்கள், ஏனெனில் அது அவர்களை ஊடுருவிச் செல்வதாயிருக்கிறது என நான் அறிவேன் என்று சொன்னேன்.
3 இப்பொழுதும் என் சகோதரரே, நீங்கள் நீதியுள்ளவர்களாய் சத்தியத்தைக் கேட்க மனதாயிருந்து, நீங்கள் தேவனுக்கு முன்பாக நிமிர்ந்து நடக்கும்பொருட்டு, அதற்குச் செவிகொடுத்தால், பின்னர் நீங்கள் சத்தியத்தின் நிமித்தம் முறுமுறுத்து, நீ எங்களுக்கு எதிராகக் கடினமான காரியங்களைப் பேசுகிறாய், என்று சொல்லாமல் இருப்பீர்கள் என்றான்.
4 அந்தப்படியே, நேபியாகிய நான், அவர்கள் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி, என் சகோதரருக்கு முழுக்கருத்துடன் புத்தி சொன்னேன்.
5 அந்தப்படியே, நான் அவர்கள் நீதியின் பாதைகளில் நடப்பார்களென்று மகிழ்ச்சியும், பெரு நம்பிக்கையும் பெறுமளவிற்கு, அவர்கள் தங்களைக் கர்த்தருக்கு முன்பாகத் தாழ்த்தினார்கள்.
6 இப்பொழுது இந்தக் காரியங்கள் எல்லாம், என் தகப்பன் லெமுவேல் என்றழைத்த பள்ளத்தாக்கிலிருந்த கூடாரத்தில், அவர் வாசமாயிருந்தபோது சொல்லப்பட்டவையும், செய்யப்பட்டவையுமாய் இருந்தன.
7 அந்தப்படியே, நேபியாகிய நான் இஸ்மவேலின் குமாரத்திகளில் ஒருத்தியை மனைவியாகக் கொண்டேன்; என் சகோதரர்களும் இஸ்மவேலின் குமாரத்திகளைத் தங்களுக்கு மனைவிகளாகக் கொண்டார்கள்; இஸ்மவேலின் மூத்த குமாரத்தியை சோரம் தனக்கு மனைவியாகக் கொண்டான்.
8 இவ்வாறாக என் தகப்பன், கர்த்தரால் தமக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்றினார். மேலும் நேபியாகிய நானும் கர்த்தரால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தேன்.
9 அந்தப்படியே, அந்த இரவிலே கர்த்தருடைய சத்தம் என் தகப்பனோடு பேசி, மறுதினத்திலே அவர் வனாந்தரத்திலே தன் பயணத்தை மேற்கொள்ளவேண்டுமென அவருக்குக் கட்டளையிட்டது.
10 அந்தப்படியே, என் தகப்பன் காலையில் எழுந்திருந்து கூடாரத்தின் வாசலண்டையில் சென்றபொழுது அவர் மிகுதியாய் அதிசயப்படும்படியாக, விசித்திரவேலைப்பாடமைந்த ஒரு உருண்டையான பந்து, தரையிலிருப்பதைக் கண்டார்; அது சுத்த பித்தளையாயிருந்தது. அந்த உருண்டையினுள் இரண்டு முட்களிருந்தன; அவைகளில் ஒன்று நாங்கள் வனாந்தரத்தில் போகவேண்டிய வழியைக் காண்பித்தது.
11 அந்தப்படியே, நாங்கள் வனாந்தரத்தில் எங்களால் எடுத்துச் செல்லமுடிந்த பொருட்களையும், கர்த்தர் எங்களுக்குக் கொடுத்தருளிய எல்லா மீதமான எங்களின் உணவுப் பண்டங்களையும், ஒன்றாகச் சேகரித்தோம்; மேலும் நாங்கள் வனாந்தரத்தில் எடுத்துச் செல்லும்படியாக ஒவ்வொரு வித விதைகளையும் எடுத்துக்கொண்டோம்.
12 அந்தப்படியே, நாங்கள் எங்கள் கூடாரங்களை எடுத்துக்கொண்டு, லாமான் நதியைக் கடந்து வனாந்தரத்தினுள் புறப்பட்டுச் சென்றோம்.
13 அந்தப்படியே, நாங்கள் நான்கு நாட்களளவும் தெற்கு தென்கிழக்கு மார்க்கமாய்ப் பயணம் செய்து, மறுபடியும் பாளயமிறங்கினோம்; நாங்கள் அந்த இடத்தை சாசேர் என்று அழைத்தோம்.
14 அந்தப்படியே, நாங்கள் எங்கள் விற்களையும், அம்புகளையும் எடுத்துக்கொண்டு எங்கள் குடும்பத்தாரின் உணவிற்காக வனாந்தரத்தில் வேட்டையாடச் சென்றோம்; நாங்கள் எங்கள் குடும்பத்தாருக்கு உணவை வேட்டையாடின பின்பு, மறுபடியும் எங்கள் குடும்பத்தாரிடம் வனாந்தரத்திலுள்ள சாசேருக்குத் திரும்பிச் சென்றோம். நாங்கள் மறுபடியும் அதே மார்க்கத்தைப் பின்பற்றி சிவந்த சமுத்திரத்தின் எல்லையோரங்களுக்கு அருகாமையிலிருந்த வனாந்தரத்தின் மிகவும் வளமான பகுதியின் பக்கமாக வனாந்தரத்தினுள் சென்றோம்.
15 அந்தப்படியே, எங்கள் விற்களாலும், அம்புகளாலும், கற்களாலும், கவண்களினாலும், வழியிலே எங்கள் உணவை வேட்டையாடி நாங்கள் அநேக நாட்கள் பிரயாணம் செய்தோம்.
16 அந்த வனாந்தரத்தின் மிக வளமான பகுதிகளில் எங்களை நடத்திச் சென்ற, அந்த உருண்டையின் வழிகாட்டுதலையே நாங்கள் பின்பற்றிச் சென்றோம்.
17 நாங்கள் அநேக நாட்கள் பிரயாணம் செய்த பின்பு, மறுபடியும் நாங்கள் இளைப்பாறுவதற்கும், எங்கள் குடும்பத்தாருக்கு ஆகாரம் பெறுவதற்கும் நாங்கள் சில நாட்கள் பாளயமிறங்கினோம்.
18 அந்தப்படியே, நேபியாகிய நான் உணவை வேட்டையாடச் சென்றபொழுது, இதோ, சுத்த உருக்கால் செய்யப்பட்டிருந்த என் வில்லை முறித்துப்போட்டேன், நான் என் வில்லை முறித்த பின்பு, நான் வில்லை இழந்ததினிமித்தம் என் சகோதரர் என்மேல் கோபமடைந்தார்கள், ஏனெனில் நாங்கள் எந்த உணவையும் பெறமுடியவில்லை.
19 அந்தப்படியே, நாங்கள் எங்கள் குடும்பத்தாருக்கு உணவு இல்லாமல் திரும்பினோம், அவர்கள் தங்கள் பிரயாணத்தினால் மிகவும் களைத்துப்போனவர்களாய், உணவுத் தேவையினால் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
20 அந்தப்படியே, லாமானும், லெமுவேலும், இஸ்மவேலின் குமாரர்களும், வனாந்தரத்தில் அவர்களுடைய பாடுகளினிமித்தமும், உபத்திரவங்களினிமித்தமும், மிகவும் முறுமுறுக்கத் தொடங்கினார்கள்; என் தகப்பனும் தன் கர்த்தராகிய தேவனுக்கு எதிராக முறுமுறுக்கத் தொடங்கினார்; ஆம், மேலும் அவர்கள் எல்லோரும் மிகவும் துக்கமடைந்தவர்களாய், கர்த்தருக்கு எதிராகக் கூட முறுமுறுத்தார்கள்.
21 இப்பொழுது, அந்தப்படியே, நேபியாகிய நான், என் வில்லை இழந்ததினிமித்தமும் என் சகோதரர்களுடைய விற்களின் விறைப்புத் தன்மையை இழந்ததினிமித்தமும், நான் என் சகோதரர்களுடன் மிகவும் உபத்திரவப்பட்டேன், அது நாங்கள் உணவைப்பெற முடியாத அளவிற்கு, ஆம், மிகவும் சிரமமாயிருக்கத் தொடங்கியது.
22 அந்தப்படியே, அவர்கள் தங்களுடைய கர்த்தராகிய தேவனுக்கு எதிராக முறையிடும்படி, தங்கள் இருதயங்களை மறுபடியும் கடினப்படுத்தினதினிமித்தம் நேபியாகிய நான் என் சகோதரருடன் அதிகம் பேசினேன்.
23 அந்தப்படியே, நேபியாகிய நான் மரத்தால் ஒரு வில்லையும், ஒரு நேரான கோலால் அம்பையும் உண்டுபண்ணினேன்; ஆகையால் நான் வில்லாலும், அம்பாலும் கவண்களினாலும், கற்களினாலும் ஆயுதந்தரித்துக்கொண்டேன். நான் என் தகப்பனை நோக்கி: நான் உணவைப் பெறும்படி எங்கே செல்லவேண்டும்? என்று கேட்டேன்.
24 அந்தப்படியே, என் வார்த்தைகளினிமித்தம் அவர்கள் தங்களைத் தாழ்த்தினபடியால், அவர் கர்த்தரிடம் விசாரித்தார்; என் ஆத்தும ஊக்கத்தின்படியே நான் அவர்களிடம் அநேக காரியங்களைச் சொன்னேன்.
25 அந்தப்படியே, கர்த்தருடைய சத்தம் என் தகப்பனுக்கு உண்டாயிற்று; கர்த்தருக்கு விரோதமாய் அவர் முறுமுறுத்ததினிமித்தம் ஆழ்ந்த துக்கத்திலே அவரைக்கொண்டுசெல்லும் அளவிற்கு மெய்யாகவே சிட்சிக்கப்பட்டார்.
26 அந்தப்படியே, கர்த்தருடைய சத்தம் அவரிடம்: உருண்டையின் மேல் உன் பார்வையைச் செலுத்தி அதன்மேல் எழுதியிருக்கும் காரியங்களைப் பார் என்றது.
27 அந்தப்படியே, உருண்டையின்மேல் எழுதப்பட்டிருக்கும் காரியங்களை என் தகப்பன் கண்டபொழுது அவரும், என் சகோதரர்களும், இஸ்மவேலின் குமாரர்களும், எங்கள் மனைவியரும் பயந்து மிகவும் நடுங்கினார்கள்.
28 அந்தப்படியே, நேபியாகிய நான் அந்த உருண்டையினுள்ளிருந்த முட்களைப் பார்த்தேன், நாங்கள் அவைகளிடத்தில் காட்டும் விசுவாசம், ஊக்கம் மற்றும் கவனம் ஆகியவைகளுக்கு ஏற்ப அவைகள் வேலை செய்தன.
29 அவைகளின்மேல் புதிய எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன, அவைகள் வாசிப்பதற்கு எளிதாயிருந்தன, கர்த்தருடைய வழிகளைக் குறித்த புரிந்துகொள்ளுதலை எங்களுக்குக் கொடுத்தன; நாங்கள் அதினிடத்தில் காட்டும் விசுவாசம் மற்றும் ஊக்கம் ஆகியவற்றிற்கேற்ப அவைகள் அவ்வப்போது எழுதப்பட்டுக்கொண்டும் மாறிக்கொண்டுமிருந்தன. மேலும், இவ்வாறாக சிறிய காரியங்களால் கர்த்தர் பெரிய காரியங்களைக் கொண்டுவரமுடியும் என்பதை நாம் காண்கிறோம்.
30 அந்தப்படியே, நேபியாகிய நான், அந்த உருண்டையில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படியே மலையின் உச்சிக்குப் போனேன்.
31 அந்தப்படியே, எங்கள் குடும்பத்தாருக்கு வேண்டிய உணவைப்பெறுமளவிற்கு, நான் காட்டுவிலங்குகளை வேட்டையாடினேன்.
32 அந்தப்படியே, நான் கொன்ற விலங்குகளைச் சுமந்துகொண்டு எங்கள் கூடாரங்களுக்குத் திரும்பினேன், மேலும் இப்பொழுது நான் உணவைக் கொண்டுவந்தேன் என்று அவர்கள் கண்டபொழுது அவர்களுடைய சந்தோஷம் எவ்வளவு பெரிதாயிருந்தது, அந்தப்படியே, அவர்கள் தங்களைக் கர்த்தருக்கு முன்பாகத் தாழ்த்தி அவருக்கு நன்றிசெலுத்தினார்கள்.
33 அந்தப்படியே, நாங்கள் மறுபடியும் எங்கள் பயணத்தை மேற்கொண்டு, ஏறக்குறைய தொடக்கத்திலிருந்த மார்க்கத்தின்படியே பயணம் செய்தோம்; நாங்கள் அநேக நாட்கள் அளவும் பயணம் செய்தபின்பு, சிறிது காலம் தங்கியிருக்கும்படியாக மறுபடியும் பாளயமிறங்கினோம்.
34 அந்தப்படியே, இஸ்மவேல் மரித்து நாகோம் என்னும் இடத்திலே அடக்கம் பண்ணப்பட்டான்.
35 அந்தப்படியே, இஸ்மவேலின் குமாரத்திகள், தங்களுடைய தகப்பனை இழந்ததின் நிமித்தமும், வனாந்தரத்தில் அவர்களுடைய உபத்திரவங்களின் நிமித்தமும் மிகவும் துக்கப்பட்டார்கள்; எருசலேம் தேசத்திலிருந்து அவர்களை அவர் அழைத்துக்கொண்டு வந்ததினிமித்தம் அவர்கள் என் தகப்பனுக்கு எதிராக முறுமுறுத்து அவரை நோக்கி: எங்கள் தகப்பன் மரித்துப்போனார்; ஆம், நாங்கள் வனாந்தரத்தில் அதிகம் அலைந்து மிகுந்த உபத்திரவத்தையும், பசியையும், தாகத்தையும், களைப்பையும் சகித்தோம்; இந்த எல்லாப் பாடுகளுக்கும் பின்பு, நாங்கள் இந்த வனாந்தரத்தில் பசியால் அழியவேண்டும் என்றார்கள்.
36 இவ்வாறாக அவர்கள் என் தகப்பனுக்கு எதிராகவும், எனக்கெதிராகவும் முறுமுறுத்தார்கள்; அவர்கள் எருசலேமுக்கு மீண்டும் திரும்பிப்போகும்படி வாஞ்சித்தார்கள்.
37 லாமான், லெமுவேலையும் இஸ்மவேலின் குமாரரையும் நோக்கி: இதோ, நம் தகப்பனையும், தன்னுடைய மூத்த சகோதரராகிய நம்மை ஆளுகிறவனாயும், ஆசிரியனாயும் இருக்கும்படி பொறுப்பெடுத்துக்கொண்ட, நம் சகோதரனாகிய நேபியையும் நாம் கொலை செய்வோம் என்றான்.
38 இப்பொழுதும், கர்த்தர் அவனோடு பேசினார் என்றும், தூதர்கள் அவனுக்கு ஊழியம் செய்தார்கள் என்றும் சொல்லுகிறான். ஆனாலும் இதோ, அவன் நம்மிடத்தில் பொய்யுரைத்தான் என நாம் அறிவோம்; அவன் இந்தக் காரியங்களைச் சொல்லி, தன்னுடைய தந்திரங்களைக்கொண்டு, நம்முடைய கண்களை ஏமாற்றி, ஒருவேளை நம்மை ஒரு அந்நியமான வனாந்தரத்திற்கு அழைத்துச் செல்லலாம் என்று எண்ணுகிறான்; நம்மை வழிநடத்திச் சென்றபின்பு, அவனுடைய சித்தத்தின்படியும், விருப்பத்தின்படியும் தன்னை நம்மேல் ராஜாவாகவும், ஆளுகிறவனாகவும் ஏற்படுத்திக்கொள்ளலாம் என அவன் நினைத்திருக்கிறான். இவ்வகையாக லாமான் அவர்கள் இருதயத்தில் கோபமூளும்படி தூண்டினான்.
39 அந்தப்படியே, கர்த்தர் எங்களோடிருந்தார், ஆம், கர்த்தருடைய சத்தம் உண்டாகி, அநேக வார்த்தைகள் அவர்களிடத்தில் பேசி அவர்களை மிகவும் சிட்சித்தது, கர்த்தருடைய வார்த்தையினால் அவர்கள் சிட்சிக்கப்பட்ட பின்பு, நாங்கள் அழிந்து போகாதபடிக்கு மீண்டும் எங்களைப் போஷித்து இவ்வளவாய்க் கர்த்தர் எங்களை ஆசீர்வதிக்கும் அளவுக்கு அவர்கள் தங்கள் கோபத்தைவிட்டு, தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பினார்கள்.