அதிகாரம் 18
கப்பல் கட்டி முடிக்கப்படுதல் – யாக்கோபு மற்றும் யோசேப்பின் பிறப்புகள் குறிப்பிடப்படுதல் – குழுவினர் வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குச் செல்ல கப்பலேறுதல் – இஸ்மவேலின் குமாரரும், அவர்களின் மனைவிகளும் களிப்பிலும், கலகத்திலும் சேர்ந்துகொள்ளுதல் – நேபி கட்டப்படுதல், மேலும் அந்தக் கப்பல் ஒரு பயங்கரமான புயலால் பின்னுக்குத் தள்ளப்படுதல் – நேபி விடுவிக்கப்படுதல், அவனது ஜெபத்தால், புயல் நின்றுபோகுதல் – ஜனங்கள் வாக்குத்தத்தத்தின் தேசத்தை அடைதல். ஏறக்குறைய கி.மு. 591–589.
1 அந்தப்படியே, அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொண்டு என்னோடுகூட வந்தார்கள்; நாங்கள் மரங்களில் விசித்திர கைவேலைப்பாடுகளைச் செய்தோம். நான் கப்பலின் மரக்கட்டைகளை இன்னவிதத்தில் செய்யவேண்டும் என்பதைக் கர்த்தர் அவ்வப்போது எனக்குக் காட்டினார்.
2 இப்பொழுது நேபியாகிய நான், மனுஷர்கள் கற்றறிந்தபடி மரவேலைகளைச் செய்யவில்லை, மனுஷர் செய்யும் விதத்திலும் நான் கப்பலைக் கட்டவில்லை; ஆனால் கர்த்தர் எனக்குக் காட்டிய மாதிரியின்படியே நான் அதைக் கட்டினேன்; ஆகையால் அது மனுஷர் கட்டும் விதமாக இருக்கவில்லை.
3 நேபியாகிய நான் பலமுறை மலைக்குப் போய், கர்த்தரிடம் அநேகந்தரம் ஜெபித்தேன்; ஆகையால் கர்த்தர் பெரிய காரியங்களை எனக்குக் காண்பித்தார்.
4 அந்தப்படியே, கர்த்தருடைய வார்த்தையின்படியே, நான் கப்பலைக் கட்டிமுடித்த பின்னர், அது நல்லதென்றும், அதிலிருந்த வேலைப்பாடு மிகவும் நேர்த்தியாயிருக்கிறதென்பதையும் என் சகோதரர் கண்டார்கள். ஆகையால், அவர்கள் கர்த்தருக்கு முன்பாக மறுபடியும் தங்களைத் தாழ்த்தினார்கள்.
5 அந்தப்படியே, நாங்கள் எழுந்திருந்து கப்பலுக்குள் போகவேண்டுமென்று கர்த்தருடைய சத்தம் என் தகப்பனுக்கு உண்டாயிற்று.
6 அந்தப்படியே, மறுதினத்திலே நாங்கள் வனாந்தரத்திலிருந்து நிறைய கனிகளையும் காட்டிலிருந்து மாம்சத்தையும், நிறையத் தேனையும், கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டதின்படியே உணவுப்பொருட்களையும், எல்லாக் காரியங்களையும் ஆயத்தம் செய்தபின்பு, நாங்கள் சுமைகளோடும், விதைகளோடும் எந்த ஒரு பொருளையும் எங்களுடன், அவரவர் வயதிற்குத்தக்கதாய்ச் சுமந்துகொண்டுவந்த பொருட்களோடு, கப்பலினுள் பிரவேசித்தோம், ஆகவே எங்கள் மனைவிகளோடும், பிள்ளைகளோடும் கப்பலினுள் பிரவேசித்தோம்.
7 இப்பொழுதும் என் தகப்பன் வனாந்தரத்தில் இரண்டு குமாரர்களைப் பெற்றார்; மூத்தவன் யாக்கோபு எனவும், இளையவன் யோசேப்பு எனவும் அழைக்கப்பட்டார்கள்.
8 அந்தப்படியே, எங்களுக்குக் கட்டளையிடப்பட்ட உணவுப் பொருட்களையும், மற்ற பொருட்களையும், எங்களுடன் எடுத்துக்கொண்டு கப்பலினுள் சென்ற பின்பு, நாங்கள் சமுத்திரத்தினுள், காற்றினால் தள்ளப்பட்டு வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கிச் செலுத்தப்பட்டோம்.
9 நாங்கள் காற்றின் முகமாய்ப் பலநாட்களாய் போனபின்பு, இதோ, என் சகோதரரும் இஸ்மவேலின் குமாரரும், அவர்களுடைய மனைவிமார்களும், களிகூரத் தொடங்கி நடனம் ஆடவும், பாடவும், மிகவும் மூர்க்கமாய்ப் பேசும் அளவிற்கு களிகூரத்தொடங்கினார்கள், ஆம், அவர்கள் எந்த வல்லமையினால் இங்கே கொண்டுவரப்பட்டார்கள் என்பதையும் மறந்துவிட்டார்கள்; ஆம், அவர்கள் அதிகமாய் மூர்க்கத்தனத்தில் உயர்த்தப்பட்டார்கள்.
10 நேபியாகிய நான், எங்கள் அக்கிரமத்தினிமித்தம், கர்த்தர் எங்கள் மீது கோபங்கொண்டு அடித்தால், சமுத்திரத்தின் ஆழங்களில் விழுங்கப்பட்டுப் போவோமே என்று மிகுதியாய்ப் பயப்பட்டேன்; ஆகையால் மிகுந்த தெளிந்த புத்தியுடன் நேபியாகிய நான் அவர்களுடன் பேசினேன்; ஆனாலும் இதோ அவர்கள் என்மேல் கோபங்கொண்டு, எங்கள் இளைய சகோதரன் எங்களை ஆளுகிறவனாய் இருக்க விரும்பமாட்டோம் என்றார்கள்.
11 அந்தப்படியே, லாமானும் லெமுவேலும் என்னைப் பிடித்து, கயிறுகளினால் என்னைக் கட்டி, மிகவும் கொடூரமாய் என்னை நடத்தினார்கள்; இருந்தபோதிலும் துன்மார்க்கரைக் குறித்து அவர் பேசிய வார்த்தைகளை நிறைவேற்றி தம்முடைய வல்லமையைக் காட்டும்படியாக கர்த்தர் இதை அனுமதித்தார்.
12 அந்தப்படியே, நான் அசையக்கூடாதபடி அவர்கள் என்னைக் கட்டிய பின்பு, கர்த்தரால் ஆயத்தம்பண்ணப்பட்ட திசைகாட்டி வேலை செய்வதிலிருந்து நின்றுவிட்டது.
13 ஆகையால், எந்தப் பக்கம் கப்பலைச் செலுத்தவேண்டும் என்பதை அவர்கள் அறியாதபடிக்கு, அங்கே பெரும்புயல், ஆம், பெரிதும் பயங்கரமுமான சூறாவளி எழும்பியது. நாங்கள் மூன்று நாளளவும் தண்ணீர்களின் மீது பின் நோக்கி தள்ளப்பட்டோம்; அவர்கள் சமுத்திரத்தில் மூழ்கடிக்கப்பட்டுப்போவோம் என்று மிகவும் பயப்படத் தொடங்கிய போதிலும் என்னை அவிழ்த்து விடவில்லை.
14 நாங்கள் பின்னாக தள்ளப்பட்ட நாலாவது நாளிலே, சூறாவளி மிகவும் கொடியதாகத் தொடங்கியது.
15 அந்தப்படியே, நாங்கள் சமுத்திரத்தின் ஆழங்களில் விழுங்கப்பட்டுப்போகவிருந்தோம். நாங்கள் நான்கு நாட்களளவும் தண்ணீர்களின் மேல் பின்னாகத் தள்ளப்பட்ட பின்பு, என் சகோதரர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் அவர்கள்மேல் இருப்பதையும், அவர்கள் தங்களுடைய அக்கிரமங்களிலிருந்து மனந்திரும்பினாலொழிய தாங்கள் அழிந்துபோவார்கள் என்பதையும் காணத்துவங்கினார்கள்; ஆகையால் அவர்கள் என்னிடம் வந்து, என் மணிக்கட்டின் மேலிருந்த கட்டுக்களை அவிழ்த்துவிட்டார்கள்; இதோ, அவைகள் மிகவும் வீங்கிப்போயிருந்தன, மேலும் என் கணுக்கால்களும் மிகவும் வீங்கியதாகவும், அவைகளின் ரணம் மிகவும் பெரியதாகவும் இருந்தது.
16 இருந்தபோதிலும், நான் என் தேவனை நோக்கிப்பார்த்து, நாள் முழுவதும் அவரைத் துதித்தேன்; என்னுடைய உபத்திரவங்களினிமித்தம் நான் கர்த்தருக்கு எதிராக முறுமுறுக்கவில்லை.
17 இப்பொழுதும் என் தகப்பனாகிய லேகி, அவர்களிடமும், இஸ்மவேலின் குமாரர்களிடமும் அநேகக் காரியங்களைச் சொன்னார்; ஆனாலும், இதோ, எனக்காகப் பேசுகிறவர்களுக்கு எதிராக அவர்கள் அநேக பயமுறுத்தல்களைக் கொடுத்தார்கள்; என் பெற்றோர்கள் வயதுசென்றவர்களாயும், பிள்ளைகளால் அதிக துக்கத்தை அனுபவித்தவர்களாயும் இருந்ததினிமித்தம், நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார்கள்.
18 அவர்கள் துயரத்தினாலும், அதிக துக்கத்தினாலும், என் சகோதரருடைய அக்கிரமங்களினாலும் அவர்களுடைய தேவனை சந்திக்கும் அளவுக்கு, அவரருகிலே கொண்டுவரப்பட்டார்கள்; ஆம், அவர்களுடைய நரை மயிர் புழுதியிலே கீழாக கிடக்கப்பண்ணக் கொண்டுவரப்பட இருக்கிறது; அவர்கள் வருத்தத்தோடு தண்ணீர் கல்லறையில் போடப்படும் நிலைமைக்குக் கிட்டிச் சேர்ந்தார்கள்.
19 யாக்கோபுவும், யோசேப்பும் மிகவும் இளையவர்களாய், அதிக போஷாக்கு வேண்டியவர்களாயிருந்து தங்களுடைய தாய் அனுபவிக்கும் உபத்திரவங்களினிமித்தம் துக்கப்பட்டார்கள்; மேலும் என் மனைவி மக்களின் கண்ணீரும், ஜெபமும்கூட என்னை அவிழ்த்துவிடும்படி என் சகோதரரின் இருதயங்களை இளக்கவில்லை.
20 அவர்களை அழிக்கும்படியாய் அச்சுறுத்திய தேவனுடைய வல்லமையைத் தவிர, வேறெதுவும் அவர்களுடைய இருதயங்களை இளக்கமுடியவில்லை; ஆகையால் அவர்கள் சமுத்திரத்தின் ஆழங்களில் விழுங்கப்பட்டுப்போவோம் என்பதைக் கண்டபொழுது தாங்கள் செய்த காரியங்களிலிருந்து மனந்திரும்பி என்னை அவிழ்த்துவிட்டார்கள்.
21 அந்தப்படியே, அவர்கள் என்னை அவிழ்த்துவிட்ட பின்பு, இதோ, நான் திசைக்காட்டியை எடுத்தேன், அது நான் விரும்பியபடியே வேலை செய்தது. அந்தப்படியே, நான் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணினேன்; நான் ஜெபம்பண்ணினபின்பு காற்றும் நின்றது, புயலும் அடங்கியது, அங்கே பெரிய அமைதி உண்டாயிற்று.
22 அந்தப்படியே, நேபியாகிய நான், வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கிச் செல்லும்படி, கப்பலை வழிநடத்தினேன்.
23 அந்தப்படியே, பலநாட்கள் அளவும் கடற் பயணம் செய்தபின்பு, நாங்கள் வாக்குத்தத்தத்தின் தேசத்தை வந்தடைந்தோம்; நாங்கள் நிலத்தின்மீது சென்று பாளயமிறங்கினோம்; நாங்கள் அதை வாக்குத்தத்தத்தின் தேசம் என அழைத்தோம்.
24 அந்தப்படியே, நாங்கள் நிலத்தை உழத்தொடங்கினோம், விதைகளை விதைக்கத் தொடங்கினோம்; ஆம், நாங்கள் எருசலேம் தேசத்திலிருந்து கொண்டுவந்த சகல விதைகளையும் நிலத்தில் விதைத்தோம். அந்தப்படியே, அவைகள் அதிகமாய் வளர்ந்தன; ஆகையால் நாங்கள் தாராளமாய் ஆசீர்வதிக்கப்பட்டோம்.
25 அந்தப்படியே, நாங்கள் வனாந்தரத்தில் பயணம் செய்தபொழுது அங்கே ஒவ்வொரு இனமான காட்டுவிலங்குகளையும், பசுக்களையும் எருதுகளையும், கழுதைகளையும், குதிரைகளையும், ஆடுகளையும், காட்டாடுகளையும் மனுஷருக்குத் தேவையாயிருக்கக்கூடிய சகல காட்டுவிலங்குகளையும், வாக்குத்தத்தத்தின் தேசத்திலே நாங்கள் கண்டோம். நாங்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய சகல விதமான கனிமங்களையும் கண்டோம்.