வேதங்கள்
1 நேபி 21


அதிகாரம் 21

புறஜாதியாருக்கு மேசியா ஒளியாயிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பார் – கடைசி நாட்களில் இஸ்ரவேல் வல்லமையுடன் சேர்க்கப்படும் - ராஜாக்கள் அவர்களின் போஷிக்கும் தகப்பன்களாயிருப்பார்கள் – ஏசாயா 49ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 588–570.

1 என் ஜனத்தின் போதகர்களின் துன்மார்க்கத்தால் முறிக்கப்பட்டு, துரத்தப்பட்ட இஸ்ரவேல் வீட்டாரே, ஆம், முறிக்கப்பட்டு, மற்ற தேசங்களில் சிதறடிக்கப்பட்ட என் ஜனமாகிய இஸ்ரவேல் வீட்டாரே கேளுங்கள், தீவுகளே, மேலும் தூரத்திலிருக்கிற என் ஜனமே கேள், கர்த்தர் கர்ப்பத்திலிருந்தே என்னை அழைத்திருக்கிறார், என் தாயின் வயிற்றிலிருந்தே அவர் என் நாமத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

2 அவர் என் வாயை, ஒரு கூர்மையான பட்டயம் போலச் செய்துள்ளார்; அவர் என்னைத் தன் கைகளின் நிழலிலே மறைத்து துலக்கப்பட்ட ஒரு அம்பைப்போல என்னைச் செய்துள்ளார்; அவரின் அம்புறாத் துணியில் என்னை அவர் மறைத்திருக்கிறார்.

3 என்னை நோக்கி: நீ என் தாசன். இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.

4 பின்பு நான், நான் வீணிலே உழைத்திருக்கிறேன், என்னுடைய பெலத்தை அற்பமாயும், வீணாயும் கழித்திருக்கிறேன்; நிச்சயமாக என்னுடைய நியாயத்தீர்ப்பு கர்த்தரிடத்திலும், என்னுடைய கிரியை தேவனிடத்திலுமுள்ளது என்றேன்.

5 இப்பொழுதும் கர்த்தர், யாக்கோபைத் தம்மிடத்தில் திரும்பவும் கொண்டுவரும்படி, நான் தாயின் கர்ப்பத்திலிருந்தது முதல் கர்த்தர் தமக்கு தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேல் கூட்டிச்சேர்க்கப்படாவிட்டாலும் கர்த்தருடைய கண்களிலே நான் மகிமைப்பட்டிருப்பேன், என் தேவன் எனக்குப் பெலனாயுமிருப்பார், என்று கர்த்தர் சொல்லுகிறார்.

6 அவர், நீ எனக்குத் தாசனாயிருந்து யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களை திருப்பிக்கொண்டுவருவதும் அற்பகாரியமாயிருக்கிறது; நீ பூமியின் கடைசிபரியந்தம் என் இரட்சிப்பாயிருக்கும்படி, உன்னை புறஜாதியாருக்கு ஒளியாய்க் கொடுத்தேன் என்றார்.

7 இஸ்ரவேலின் மீட்பரும், அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர் மனுஷரால் அசட்டை பண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும் அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தம் ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள், என்று சொல்லுகிறார்.

8 சமுத்திரத்தின் தீவுகளே, அநுக்கிரக காலத்தில், நான் உங்களுக்குச் செவிகொடுத்தும், இரட்சணிய நாளிலே உனக்கு நான் உதவியுமுள்ளேன்; பாழான சுதந்திரத்தை சுதந்தரிப்பதினிமித்தம், பூமியை ஸ்தாபித்து, உனக்கு என் தாசனை, ஜனத்தின் உடன்படிக்கையாகக் கொடுத்து, உன்னை நான் பாதுகாப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

9 அதன்மூலமாக சிறைப்பட்டவர்களை நோக்கி: இருளில் அமர்ந்திருக்கிறவர்களிடத்தில் போய் உங்களைக் காண்பியுங்கள் என்று சொல். அவர்கள் வழிகளிலே புசிப்பார்கள். மேலும் அவர்களின் புல்லுள்ள இடங்கள் எல்லா உயர்ந்த இடங்களிலுமிருக்கும்.

10 அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை. வெப்பமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; ஏனெனில் அவர்கள்மேல் இரக்கமுள்ளவர் அவர்களை நடத்தி, தண்ணீரின் நீரூற்றுகளின் பக்கத்தில் வழிநடத்துவார்.

11 நான் என் மலைகளை எல்லாம் வழியாக்குவேன். என்னுடைய பெரும் பாதைகள் உயர்த்தப்படும்.

12 அப்பொழுது இஸ்ரவேலின் வீட்டாரே, இதோ, இவர்கள் தூரத்திலிருந்தும், வடக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வருவார்கள்; மேலும் சீனீம் தேசத்திலிருந்தும் வருவார்கள்.

13 வானங்களே பாடுங்கள். பூமியே களிகூரு; கிழக்கிலுள்ளவர்களின் பாதங்கள் நிலைப்படுத்தப்படும். பர்வதங்களே கெம்பீரமாய் முழங்குங்கள்; ஏனெனில் அவர்கள் இனி ஒருபோதும் முறியடிக்கப்படுவதில்லை; ஏனெனில் கர்த்தர் தம்முடைய ஜனத்தைத் தேற்றியிருக்கிறார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்.

14 ஆனால், இதோ சீயோன் சொன்னதாவது: கர்த்தர் என்னைக் கைவிட்டார், கர்த்தர் என்னை மறந்தார், ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை என்பதைக் காண்பிப்பார்.

15 ஒரு ஸ்திரீ தன் பாலகனை மறப்பாளோ? அவள் தன் கர்ப்பத்தின் மகனின் மீது இரக்கம் கொள்ளாளோ. ஆம், அவர்கள் மறந்து போனாலும், இஸ்ரவேலின் வீட்டாரே உன்னை நான் மறப்பதில்லை.

16 இதோ, என் உள்ளங்கையிலே உன்னை வரைந்திருக்கிறேன்; உன்னுடைய மதில்கள் எனக்கு முன்பாகத் தொடர்ந்திருக்கிறது.

17 உன் பிள்ளைகள் உன்னை அழிப்பவர்களுக்கு எதிராகத் துரிதப்படுவார்கள்; மேலும் உன்னை நிர்மூலமாக்கினவர்கள் உனக்குப் புறம்பே செல்வார்கள்.

18 உன் கண்களைச் சுற்றிலும் ஏறெடுத்துப்பார்; இவர்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி, உன்னிடம் வருவார்கள். அவர்களை எல்லாம் நான் வாழ்வதைப்போல மெய்யாகவே, ஒரு ஆபரணம்போல், மணமகள் அவைகளை அணிவதைப்போல, நீயும் உடுத்துவாய் என்று சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

19 உன்னுடைய பாழான, நிர்மூலமாக்கப்பட்ட இடங்களும், உன் அழிவின் தேசங்களும், இப்பொழுது அதை சுதந்தரிப்பவர்களின் நிமித்தம் நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கியவர்கள் தூரமாயிருப்பார்கள்.

20 முதற் பிள்ளைகளைத் தவறவிட்டபின்பு, நீ பெறப்போகும் பிள்ளைகள் உன்னுடைய செவிகளில் மறுபடியும், இந்த இடம் எனக்கு நெருக்கமாக இருக்கிறது. நான் வாசம்பண்ண எனக்கு இடத்தைத் தாரும் என்பார்கள்.

21 அப்பொழுது நீ, நான் என் பிள்ளைகளைத் தவறவிட்டதையும், தனித்தவன் மற்றும் சிறைப்பட்டவனாய், அங்கேயும் இங்கேயுமாய் அலைகிறவன் என்று பார்த்து இவைகளை எனக்கு பிறப்பித்தவன் யார்? இவர்களை எனக்கு வளர்த்தவன் யார்? இதோ, நான் தனியாய் விடப்பட்டிருந்தேனே, இவர்கள் எங்கேயிருந்தார்கள், என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.

22 இதோ, புறஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் அவர்கள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.

23 ராஜாக்கள் உன்னை போஷிக்கும் தகப்பன்களாகவும், அவர்களின் இராணிகள் உன்னைத் தாபரிக்கிற தாய்மார்களாகவும் இருப்பார்கள்; அவர்கள் தரையில் முகங்குப்புற விழுந்து, உன்னைப் பணிந்து, உன் பாதங்களிலிருந்து தூசியை நக்குவார்கள்; நான் கர்த்தர் என்றும், எனக்காகக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை என்றும் நீ அறிவாய்.

24 ஏனெனில், பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்கக்கூடுமோ?

25 என்றாலும், இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும், உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக் கொள்ளுவேன்.

26 உன்னை ஒடுக்கினவர்களுடைய சொந்த மாம்சத்தை அவர்களுக்கே ஊட்டுவேன்; அவர்கள் மதுரமான மதுவைப்போல தங்கள் சொந்த இரத்தத்தைக் குடித்து வெறிப்பார்கள். கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை, மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.