வேதங்கள்
1 நேபி 22


அதிகாரம் 22

பூமியின் பரப்பின் மேலெல்லாம் இஸ்ரவேல் சிதறடிக்கப்படும் – கடைசி காலங்களில் புறஜாதியார் சுவிசேஷத்தால் இஸ்ரவேலைத் தாபரித்துப் போஷிப்பார்கள் – இஸ்ரவேல் சேர்க்கப்பட்டு இரட்சிக்கப்படும், மேலும் துன்மார்க்கர் துரும்பைப்போல எரிதல் – பிசாசின் ராஜ்யம் அழிக்கப்பட்டு சாத்தான் கட்டப்படுவான். ஏறக்குறைய கி.மு. 588–570.

1 அந்தப்படியே, நேபியாகிய நான், பித்தளைத் தகடுகள்மீது பதிக்கப்பட்ட இந்தக் காரியங்களைப் படித்த பின்பு, என் சகோதரர் என்னிடம் வந்து என்னை நோக்கி: நீ படித்த இந்தக் காரியங்களின் அர்த்தமென்ன? இதோ, மாம்சத்திற்கல்லாத ஆவியின்படியே, வரப்போகிற ஆவியின் காரியங்களின்படியே அவைகளை அறிந்துகொள்ள வேண்டுமா என்றார்கள்.

2 நேபியாகிய நான் அவர்களை நோக்கி: இதோ, அவைகள் தீர்க்கதரிசிக்கு ஆவியின் சத்தத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டன; ஏனெனில் மாம்சத்தின் பிரகாரமாய் மனுபுத்திரர்மீது வரப்போகிற எல்லா காரியங்களும் ஆவியால் தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்றேன்.

3 ஆகையால், நான் படித்த காரியங்கள், இம்மைக்குரிய மற்றும் ஆவிக்குரிய இரண்டிற்கும் சார்ந்த காரியங்களாகும்; ஏனெனில், சீக்கிரத்திலாவது அல்லது தாமதமாகவாவது இஸ்ரவேல் வீட்டார் பூமியின் பரப்பின்மீதெங்கும், எல்லா தேசத்திற்குள்ளும் சிதறடிக்கப்படுவார்கள் எனத் தோன்றுகிறது.

4 இதோ, இப்பொழுதே அநேகர் எருசலேமில் இருந்தவர்களின் ஞாபகத்திலிருந்து தொலைந்துவிட்டனர். ஆம், எல்லாக் கோத்திரத்திலும், அதிகமானோர் தூர நடத்திச் செல்லப்பட்டனர்; மேலும் அவர்கள் சமுத்திரத்தின் தீவுகளின் மீது அங்கும் இங்கும் சிதறடிக்கப்பட்டுள்ளார்கள்; அவர்கள் புறம்பே நடத்தப்பட்டவர்களைத் தவிர அவர்கள் எங்கே என்று எங்களில் ஒருவருக்கும் தெரியாது.

5 அவர்கள் தூர நடத்திச் செல்லப்பட்டபடியால், இஸ்ரவேலின் பரிசுத்தரின் நிமித்தமாக அவர்களைக் குறித்தும், இதற்குப்பின் சிதறடிக்கப்பட்டு, தாறுமாறாக்கப்பட இருப்பவர்களைக் குறித்தும், இந்தக் காரியங்கள் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளன; ஆகவே அவருக்கு எதிராக அவர்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துவார்கள்; ஆதலால் அவர்கள் எல்லா தேசங்களின் மத்தியிலும் சிதறடிக்கப்பட்டு, எல்லா மனுஷராலும் வெறுக்கப்படுவார்கள்.

6 ஆயினும், அவர்கள் புறஜாதிகளால் தாபரிக்கப்பட்ட பின்பு, தம் கரத்தை புறஜாதியார்மீது உயர்த்தி, அவர்களைக் கொடியாக ஏற்படுத்தினார். அப்பொழுது அவர்களுடைய பிள்ளைகளை, அவர்களின் கரங்களால் ஏந்தி, அவர்களின் குமாரத்திகள் அவர்களின் தோள்களின் மீதும் சுமக்கப்பட்டார்கள்; இதோ, பேசப்பட்ட இந்தக் காரியங்கள் இம்மைக்குரியவை; ஏனெனில் நம்முடைய பிதாக்களுடனுள்ள கர்த்தரின் உடன்படிக்கை அப்படியாயிருக்கிறது; அவை வரப்போகும் நாட்களில், நமக்கும், இஸ்ரவேல் வீட்டாராகிய நம் சகோதரர் அனைவருக்கும் பொருந்துவனவாயிருக்கின்றன.

7 அது எல்லா இஸ்ரவேல் வீட்டாரும் சிதறடிக்கப்பட்டு தாறுமாறாக்கப்பட்ட பின்பு, இந்த நிலத்தின்மீது புறஜாதியார் மத்தியில் ஒரு வல்லமையான தேசத்தை, கர்த்தராகிய தேவன் வரப்போகிற காலங்களில் எழுப்புவார் என்று அர்த்தமாகிறது; அவைகளாலே நம் சந்ததி சிதறடிக்கப்படும்.

8 நம் சந்ததி சிதறடிக்கப்பட்ட பின்பு, கர்த்தராகிய தேவன் புறஜாதியார் மத்தியிலே, நம் சந்ததியினருக்கு மிகுந்த மேன்மையான ஒரு பெரும் மகத்துவமுள்ள கிரியை செய்யத் துவங்குவார்; ஆகையால் அவர்கள் புறஜாதியாரால் போஷிக்கப்பட்டும், அவர்களின் கரங்களிலும், அவர்கள் தோள்களின் மேலும் சுமக்கப்பட்டும், செல்வதற்கு ஒப்பாயிருக்கும்.

9 அது புறஜாதியாருக்கும் தகுதியாக இருக்கும்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சொன்ன பரலோக பிதாவின் உடன்படிக்கைகளை அறியச் செய்வதனாலே, அது புறஜாதியாருக்கு மட்டுமல்ல இஸ்ரவேல் வீட்டாருக்கும் தகுதியாயிருக்கும்.

10 என் சகோதரரே, எல்லா தேசத்தாரின் கண்களுக்கு முன்பாகவும், அவர் தம்முடைய புயத்தை வெறுமையாக்கினாலொழிய, பூமியின் எல்லா இனங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கமுடியாதென்று நீங்களும் அறியவேண்டுமென ஆசைப்படுகிறேன்.

11 ஆகையால், இஸ்ரவேலின் வீட்டாராகியவர்களுக்கு தம் சுவிசேஷத்தையும், தம் உடன்படிக்கைகளையும் கொண்டுவர, கர்த்தராகிய தேவன் எல்லா தேசங்களின் கண்களுக்கு முன்பாகவும் அவர் தம்முடைய புயத்தை வெளிப்படுத்துவார்.

12 ஆதலால், அவர் அவர்களை மறுபடியும் சிறையிருப்பிலிருந்து வெளியே கொண்டுவந்து, அவர்கள் அவர்களுடைய சுதந்திர தேசங்களிலே ஒன்று சேர்க்கப்படுவார்கள்; அவர்கள் இருளிலிருந்தும், அந்தகாரத்திலிருந்தும் வெளியே கொண்டுவரப்படுவார்கள்; அவர்கள், கர்த்தர் அவர்களுடைய இரட்சகர் எனவும், மீட்பரெனவும், இஸ்ரவேலின் வல்லவரென்றும் அறிவார்கள்.

13 பூமியனைத்திற்கும் வேசியான அந்தப் பெரிதும் அருவருப்புமான சபையின் இரத்தம், அவர்களின் சொந்தத் தலைகளின் மீது திரும்பும்; அவர்கள் தங்களுக்குள் யுத்தம்செய்து, அவர்களின் சொந்தக் கைகளின் பட்டயம் அவர்களின் சொந்தத் தலைகள்மீது விழுந்து, அவர்களின் சொந்த இரத்தத்தைக் குடித்து வெறித்தவர்களாயிருப்பார்கள்.

14 இஸ்ரவேலின் வீட்டாரே, உங்களுக்கு எதிராய் யுத்தம் செய்யும் ஒவ்வொரு தேசமும், ஒருவருக்கொருவர் எதிராய்த் திரும்புவார்கள்; கர்த்தருடைய ஜனத்தை கண்ணியிலகப்படுத்த அவர்கள் தோண்டிய துரவிலே அவர்கள் விழுவார்கள். மேலும் சீயோனுக்கு எதிராய்ச் சண்டையிடுகிறவர்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, கர்த்தரின் செம்மையான வழிகளைப் புரட்டிபோட்ட, ஆம், அந்த வேசியான பெரிதும் அருவருப்புமான சபை புழுதிக்குள்ளாக இடறும், அதனுடைய வீழ்ச்சி பெரிதாயிருக்கும்.

15 ஏனெனில் இதோ, மனுபுத்திரரின் இருதயங்களின் மீது எந்த ஒரு வல்லமையும், சாத்தானுக்கு இராதபடியான காலம் சீக்கிரமாய் வருகிறதென்றும், பெருமையாய் இருக்கிறவர் மற்றும் துன்மார்க்கம் செய்கிறவர் எல்லோரும் துரும்பைப்போல ஆகும் காலம் சீக்கிரமாய் வருகிறதென்றும், அவர்கள் சுட்டெரிக்கப்படும் காலம் வருகிறதென்றும், தீர்க்கதரிசி சொல்லுகிறான்.

16 எல்லா மனுபுத்திரர்மீதும், தேவனுடைய கோபாக்கினையின் முழுமை ஊற்றப்படும் காலம் சீக்கிரமாய் வருகிறது; ஏனெனில் நீதிமான்களை துன்மார்க்கர் அழிக்க அவர் விடமாட்டார்.

17 ஆதலால், அவருடைய கோபாக்கினையின் நிறைவு வரவேண்டியதிருந்தாலும், அவர் நீதிமான்களைத் தமது வல்லமையினால் பாதுகாப்பார், அவர்களுடைய பகைவர்கள் அக்கினியால் அழிக்கப்பட்டாவது, நீதிமான்கள் காக்கப்படுவார்கள். ஆதலால் நீதிமான்கள் பயப்படவேண்டியதில்லை; அது அப்படியிருந்தாலும் அக்கினியாலாவது அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று தீர்க்கதரிசி சொல்லுகிறான்.

18 இதோ, என் சகோதரரே, இந்தக் காரியங்கள் சீக்கிரத்தில் வர வேண்டும்; ஆம், இரத்தம், அக்கினி, புகையின் நீராவி ஆகியவைகளும் வரவேண்டும்; மேலும் அவைகள் இந்தப் பூமியின் மேற்பரப்பில் இருப்பது தேவையாயிருக்கிறது; அப்படியானால், அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகத் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துவார்களெனில், மாம்சத்தின்பிரகாரமாய் அது மனுஷரிடத்தில் வரும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

19 ஏனெனில், இதோ, நீதிமான்கள் அழியமாட்டார்கள்; சீயோனுக்கு எதிராய்ச் சண்டையிடுகிறவர்கள் எல்லோரும் பிரிக்கப்படும் காலம் சீக்கிரமாய் வருதல் வேண்டும்.

20 என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக எழுப்புவார். உங்களுக்கு அவன் சொல்லவிருக்கும் எல்லா காரியங்களுக்கும் நீங்கள் செவிகொடுப்பீர்கள். அந்த தீர்க்கதரிசிக்கு செவிகொடாத அனைவரும் ஜனங்கள் மத்தியிலிருந்து அறுப்புண்டு போவார்கள், என்று பேசிய மோசேயின் வார்த்தைகள் நிறைவேறித்தீருமளவும் தன் ஜனத்துக்கு நிச்சயமாக கர்த்தர் ஒரு வழியை ஆயத்தம் பண்ணுவார்.

21 இப்பொழுது நேபியாகிய நான், மோசே பேசிய இந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் பரிசுத்தர் என்பதை உங்களுக்கு அறிவிக்கிறேன்; ஆகையால் அவர் நீதியிலே நியாயந்தீர்ப்பார்.

22 நீதிமான்கள் பயப்பட வேண்டியதில்லை, ஏனெனில் அவர்களே தாறுமாறாக்கப்படாமலிருக்கப் போகிறவர்கள். ஆனால் மனுபுத்திரர் மத்தியில் பிசாசின் ராஜ்யம் கட்டப்படும். அந்த ராஜ்யமானது மாம்சத்திலிருப்பவர்கள் மத்தியில் ஸ்தாபிக்கப்படுகிறது.

23 ஆதாயத்திற்காகக் கட்டப்பட்டிருப்பவைகள் அனைத்தும், மாம்சத்தின்மேல் வல்லமையடைவதற்காகக் கட்டப்பட்டிருப்பவைகள் அனைத்தும், உலகத்தின் கண்களில் புகழ்ச்சியடைவதற்காகக் கட்டப்பட்டிருப்பவைகளுமாகிய எல்லா சபைகளும் மாம்சத்தின் இச்சையின்படியும், உலகப்பிரகாரமாயும் எல்லா அக்கிரமங்களையும் செய்யத் தேடுகிறவர்களும், ஆம், முடிவாகப் பிசாசையும் அவன் ராஜ்யத்தையும், சேர்ந்தவர்கள் எல்லோரும் பயப்படவும், நடுங்கவும், குலுங்கவும் வேண்டும் என்கிற காலம் சீக்கிரமாய் வரும். புழுதிக்குள்ளே கொண்டுவரப்பட வேண்டியவர்கள் அவர்களே, துரும்பைப்போல சுட்டெரிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களே. இது தீர்க்கதரிசியின் வார்த்தையின்படியே இருக்கிறது.

24 தொழுவத்திலுள்ள கன்றுகள்போல, நீதியுள்ளவர்கள் நடத்தப்பட்டு, மகா மகிமையிலும், வல்லமையிலும், பெலத்திலும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதிகாரத்தோடு ஆளுகை செய்யும் காலம் விரைவாக வருகிறது.

25 அவர் தம்முடைய பிள்ளைகளை பூமியின் நான்கு திசைகளிலிருந்தும் சேர்ப்பார்; அவர் தம்முடைய ஆடுகளை இலக்கமிடுவார், அவைகள் அவரை அறியும்; அங்கே ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனும் உண்டு; அவர் தம் ஆடுகளைப் போஷிப்பார், அவர்கள் அவரில் தங்களின் மேய்ச்சலைக் கண்டடைவார்கள்.

26 தன் ஜனங்களின் நீதியினிமித்தம், சாத்தானுக்கு வல்லமையில்லை; ஆதலால் அநேக வருஷ காலம் அவன் கட்டவிழ்க்கப்பட முடியாது; ஜனங்கள் நீதியில் வாசமாயிருப்பதாலும், இஸ்ரவேலின் பரிசுத்தர் ஆளுகை செய்வதாலும் அவர்களின் இருதயங்களின்மேல் அவனுக்கு வல்லமையில்லை.

27 இப்பொழுதும் இதோ, நேபியாகிய நான், உங்களை நோக்கி, இந்தக் காரியங்கள் எல்லாம் மாம்சத்தின்பிரகாரமாய் வரவேண்டுமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

28 ஆனாலும் இதோ, எல்லா தேசத்தாரும், இனத்தாரும், பாஷைக்காரரும், ஜனங்களும் மனந்திரும்புவார்களெனில், அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரில் பாதுகாப்பாய் வாசம்செய்வார்கள்.

29 இப்பொழுதும் நேபியாகிய நான் முடிக்கிறேன்; ஏனெனில் இந்தக் காரியங்களைக் குறித்து நான் இன்னும் அதிகம் பேசத் துணியவில்லை.

30 ஆகையால் என் சகோதரரே, இந்தப் பித்தளைத் தகடுகள்மீது எழுதப்பட்ட காரியங்கள் மெய்யானதா என்று நீங்கள் ஆராயவேண்டும் என்று வாஞ்சிக்கிறேன். மேலும் அவைகள் ஒரு மனுஷன் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டுமென சாட்சியளிக்கின்றன.

31 ஆகையால் நானும், என் தகப்பனும் மாத்திரம் இவைகளைப்பற்றி சாட்சி பகர்ந்து, போதிக்கிறோம் என்று நீங்கள் நினைத்துவிடவேண்டாம். ஆதலால் நீங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, இறுதிபரியந்தம் நிலைப்பீர்களானால், கடைசி நாளிலே மீட்கப்படுவீர்கள். மேலும் இது இப்படியாக இருக்கிறது. ஆமென்.