அதிகாரம் 4
யுத்தமும், சங்காரமும் தொடர்தல் – துன்மார்க்கர் துன்மார்க்கரைத் தண்டித்தல் – இஸ்ரவேல் முழுவதிலும் முன்னிருந்ததைவிட பெரும் துன்மார்க்கம் இருத்தல் – பெண்களும் பிள்ளைகளும் விக்கிரகங்களுக்கு பலியிடப்படுதல் – லாமானியர் தங்களுக்கு முன்பிருந்து நேபியரை துடைத்துப்போடத் தொடங்குதல். ஏறக்குறையை கி.பி. 363–375.
1 இப்பொழுதும், அந்தப்படியே, முன்றூற்றி அறுபத்தி மூன்றாம் வருஷத்திலே, நேபியர்கள் தங்கள் சேனைகளோடு, பாழ்க்கடிப்பு தேசத்தைவிட்டு லாமானியருக்கு விரோதமாக யுத்தத்திற்குப் போனார்கள்.
2 அந்தப்படியே, நேபியர்களின் சேனைகள் மறுபடியும் பாழ்க்கடிப்பின் தேசத்திற்கு விரட்டியடிக்கப்பட்டார்கள். அவர்கள் களைப்பாய் இருந்தபோதே லாமானியரின் புது சேனை அவர்கள்மேல் வந்தது. அவர்களுக்குள் கொடிய யுத்தம் நேரிட்டது. இதினிமித்தம், லாமானியர் பாழ்க்கடிப்பு பட்டணத்தை ஆக்கிரமித்து, நேபியர்களின் அநேகரை வெட்டிப்போட்டு, அநேகரை கைதிகளாகப் பிடித்தார்கள்.
3 மீதியானோர் ஓடி, தியான்கும் பட்டணத்தின் குடிகளோடு சேர்ந்துகொண்டார்கள். இப்பொழுது தியான்கும் பட்டணம் கடற்கரையோரமாய் அமைந்திருந்த எல்லைகளில் இருந்தது; அது பாழ்க்கடிப்பின் பட்டணத்திற்கு அருகேயுமிருந்தது.
4 நேபியர் சேனை லாமானியரிடத்திற்குப் போனதினிமித்தம் அவர்கள் அடிக்கப்படத் துவங்கினார்கள். அப்படியில்லையெனில், லாமானியர் அவர்கள் மேல் பலம் கொண்டிருக்க முடியாது.
5 ஆனால் இதோ, தேவ நியாயத்தீர்ப்பு துன்மார்க்கரை மேற்கொள்ளும், துன்மார்க்கராலே தான் துன்மார்க்கர் தண்டிக்கப்படுகிறார்கள்; ஏனெனில் துன்மார்க்கரே மனுபுத்திரரின் இருதயங்களை இரத்தம் சிந்துதலுக்கேதுவாய் தூண்டிவிடுகிறார்கள்.
6 அந்தப்படியே, லாமானியர் தியான்கும் பட்டணத்திற்கு விரோதமாக வர ஆயத்தங்களைச் செய்தனர்.
7 அந்தப்படியே, முன்னூற்றி அறுபத்து நான்காம் வருஷத்தில், தியான்கும் பட்டணத்தையும் வசப்படுத்தும்படிக்கு, லாமானியர் தியான்கும் பட்டணத்திற்கு விரோதமாக வந்தார்கள்.
8 அந்தப்படியே, அவர்கள் நேபியர்களால் அடிக்கப்பட்டு, துரத்தப்பட்டார்கள். நேபியர்கள் தாங்கள் லாமானியரைத் துரத்தினதைக் கண்டபோது, அவர்கள் மறுபடியும் தங்கள் சுயபெலத்திலே மேன்மை பாராட்டினார்கள். அவர்கள் தங்கள் சுயபெலத்திலே போய், மறுபடியும் பாழ்க்கடிப்பு பட்டணத்தைக் கைப்பற்றினார்கள்.
9 இப்பொழுது இவைகளெல்லாம் முடிந்தது. நேபியர்களிலும், லாமானியர்களிலும், இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள்.
10 அந்தப்படியே, முன்னூற்றி அறுபத்தாறாவது வருஷமும் கடந்துபோனது, லாமானியர் யுத்தம் செய்வதற்கென நேபியர்கள் மேல் மறுபடியும் வந்தார்கள்; நேபியர்களோ இன்னும் தாங்கள் செய்த பொல்லாப்புக்காக மனந்திரும்பாமல், தங்கள் துன்மார்க்கத்தில் தொடர்ந்து திளைத்திருந்தார்கள்.
11 நேபியருக்குள்ளும் லாமானியருக்குள்ளும், ஆக இரு ஜனங்களுக்குள்ளும் இருந்த இரத்தமும், சங்காரமுமான பயங்கர காட்சியை நாவினால் விவரிக்கவோ, அல்லது பூரண விவரத்தை மனுஷனால் எழுதவோ முடியாது. ஒவ்வொரு இருதயமும் கடினப்பட்டிருந்ததாலே, அவர்கள் இரத்தம் சிந்துதலில் தொடர்ந்து களிகூர்ந்தார்கள்.
12 கர்த்தருடைய வார்த்தைகளின்படியே இந்த ஜனங்களுக்குள்ளிருந்த பெரும் துன்மார்க்கத்தைப் போல, லேகியின் பிள்ளைகள் எல்லோர் மத்தியிலோ, இஸ்ரவேல் வீட்டார் மத்தியிலோ, எல்லாருக்குள்ளும் என்றுமே இருந்ததில்லை.
13 அந்தப்படியே, லாமானியர் பாழ்க்கடிப்பின் பட்டணத்தைக் கைப்பற்றினார்கள். இது ஏனென்றால் அவர்களுடைய எண்ணிக்கை நேபியர்களின் எண்ணிக்கையை மிஞ்சிற்று.
14 அவர்கள் தியான்கும் பட்டணத்திற்கு விரோதமாக அணிவகுத்துப்போய், அதன் குடிகளைத் துரத்திவிட்டு, பெண்களும், பிள்ளைகளுமான அநேகரை கைதிகளாகப் பிடித்து, அவர்களைத் தங்களின் விக்கிரக தெய்வங்களுக்குப் பலியாகக் கொடுத்தார்கள்.
15 அந்தப்படியே, முன்னூற்றி அறுபத்தி ஏழாம் வருஷத்தில், லாமானியர் தங்களின் பெண்களையும் சிறுபிள்ளைகளையும் பலியிட்டதினிமித்தம் நேபியர் கோபமடைந்து, அவர்கள் மறுபடியும் லாமானியரை அடித்து அவர்களுடைய தேசங்களைவிட்டு, அவர்களைத் துரத்தும்படிக்கு, பெரும் சினத்துடனே லாமானியருக்கு விரோதமாய்ப் போனார்கள்.
16 முன்னூற்றி எழுபத்தைந்தாம் வருஷம் வரைக்குமாய் லாமானியர் நேபியருக்கு விரோதமாய் மறுபடியும் வரவில்லை.
17 இந்த வருஷத்தில் அவர்கள் தங்களுடைய எல்லா பெலத்தோடும் நேபியர்களுக்கு விரோதமாய் மறுபடியும் வந்தார்கள்; அவர்களுடைய எண்ணிக்கையின் மிகுதியினிமித்தம் அவர்கள் எண்ணப்படவில்லை.
18 அந்த சமயம் முதற்கொண்டு, நேபியர் லாமானியர்மேல் பலம்கொள்ள முடியாமல், சூரியனுக்கு முன்பாக, பனியைப்போல அவர்களால் அழிக்கப்படத் துவங்கினார்கள்.
19 அந்தப்படியே, லாமானியர் மறுபடியும் பாழ்க்கடிப்பு பட்டணத்திற்கு விரோதமாக வந்தார்கள். பாழ்க்கடிப்பு தேசத்திலே ஒரு பெரும் கொடிய யுத்தம் நடத்தப்பட்டது. அதில் அவர்கள் நேபியர்களை வீழ்த்தினார்கள்.
20 அவர்கள் அவர்களுக்கு முன்னிருந்து மறுபடியும் ஓடி, போவாஸ் பட்டணத்திற்கு வந்தார்கள்; அவர்கள் இரண்டாம் விசை வரும்வரைக்கும் லாமானியர் அவர்களை வீழ்த்தாதபடிக்கு, அங்கே அவர்கள் லாமானியருக்கு விரோதமாக அதிக தைரியத்தோடு நின்றார்கள்.
21 அவர்கள் இரண்டாம் விசை வந்தபோது, நேபியர் துரத்தப்பட்டு, பெரும் சங்காரம் உண்டாகும்படி வெட்டப்பட்டார்கள். அவர்களுடைய பெண்களும் அவர்களுடைய பிள்ளைகளும் மறுபடியும் விக்கிரகங்களுக்கு பலியிடப்பட்டார்கள்.
22 அந்தப்படியே, பட்டணங்களிலும், கிராமங்களிலுமுள்ள குடிகள் எல்லோரையும், நேபியர் தங்களோடு கூட்டிக்கொண்டு, மறுபடியும் அவர்களுக்கு முன்னிருந்து பறந்தோடினார்கள்.
23 இப்பொழுதும், மார்மனாகிய நான், தேசத்தை லாமானியர் மேற்கொள்ள இருப்பதைக் கண்டு, ஷிம் என்ற மலைக்குப்போய் அம்மாரோன் கர்த்தருக்குள்ளாக மறைத்து வைத்த சகல பதிவேடுகளையும் எடுத்தேன்.