அதிகாரம் 9
கிறிஸ்துவை விசுவாசியாதோரை மனந்திரும்பும்படியாக மரோனி அழைத்தல் – வெளிப்படுத்தல்களைக் கொடுத்து, விசுவாசிகளின் மேல் வரங்களையும் அறிகுறிகளையும் ஊற்றுகிற, அற்புதங்களின் தேவனை பிரகடனப்படுத்துதல் – அவிசுவாசத்தினால் அற்புதங்கள் நின்றுபோகுதல் – விசுவாசிகளை அறிகுறிகள் பின் தொடர்தல் – ஞானமாயிருந்து, கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி மனுஷர் அறிவுறுத்தப்படுதல். ஏறக்குறைய கி.பி. 401–421.
1 இப்பொழுதும் கிறிஸ்துவை விசுவாசியாதவர்களைக் குறித்தும் நான் பேசுகிறேன்.
2 இதோ, உங்களுடைய விசாரிப்பின் நாளை விசுவாசிப்பீர்களா, இதோ, கர்த்தர் வரும்போது, ஆம், பூமி ஒரு புஸ்தகச் சுருளைப்போல ஒன்றாகச் சுருட்டப்பட்டு, பஞ்சபூதங்கள் மிகுந்த சூட்டினால் உருகிப்போகும். ஆம், அந்த மகா நாளில், தேவ ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக நீங்கள் கொண்டுவரப்படும் அந்த மகா நாளிலே, நீங்கள் தேவன் இல்லை என்று சொல்வீர்களா?
3 அதற்குமேலும் நீங்கள் கிறிஸ்துவை மறுதலிப்பீர்களா, அல்லது தேவ ஆட்டுக்குட்டியானவரைப் பார்க்கமுடியுமா? உங்களுடைய குற்றவுணர்வோடே அவருடன் வாசம்பண்ணமுடியும் என்று எண்ணுகிறீர்களா? அவருடைய விதிகளை மீறினோம் என்ற குற்றவுணர்வால் உங்களுடைய ஆத்துமாக்கள் வேதனைக்குள்ளாக்கப்பட்டிருக்க, அந்த பரிசுத்தமானவரோடு மகிழ்ச்சியுடன் வாசம்பண்ணமுடியும் என்று எண்ணுகிறீர்களா?
4 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பாதாளத்தில் நீங்கள் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்ட ஆத்துமாக்களோடு வாசம்பண்ணுவதைக்காட்டிலும், அந்த பரிசுத்த நீதிபரராகிய தேவனுக்கு முன்பாக, உங்களுடைய அசுசியினுடைய உணர்வோடு, அவருடன் வாசம்பண்ணுவது உங்களுக்கு அதிக துர்பாக்கியமாயிருக்கும்.
5 ஏனெனில் இதோ, நீங்கள் தேவனுக்கு முன்பாக உங்களுடைய நிர்வாணத்தையும், தேவமகிமையையும், இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தத்தையும் காணும்படியாக கொண்டு வரப்படும்பொழுது, அது உங்கள்மேல் அவிக்கமுடியாத ஜூவாலையை பற்றவைக்கும்.
6 அவிசுவாசிகளே கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; ஒருவேளை நீங்கள் அந்தப் பெரிதும் கடைசியுமான நாளிலே, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் கழுவப்பட்டு, அப்பழுக்கற்றவர்களாயும், சுத்தமுள்ளவர்களாயும், சௌந்தரியமுள்ளவர்களாயும், வெண்ணிறத்தாராயும் காணப்படும்படிக்கு, இயேசுவின் நாமத்தில் பிதாவினிடத்தில் பலமாய்க் கூக்குரலிடுங்கள்.
7 தேவ வெளிப்படுத்தல்களை மறுதலித்து, அவை நிறுத்தப்பட்டுவிட்டன என்றும், வெளிப்படுத்தல்களோ, தீர்க்கதரிசனங்களோ, வரங்களோ, சுகப்படுத்தலோ, அன்னிய பாஷைகளில் பேசுதலோ, அன்னிய பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதலோ இல்லை என்றும், சொல்லுகிறவர்களுக்கு நான் மறுபடியும் பேசுவதாவது;
8 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இவைகளை மறுதலிக்கிறவன் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறியான்; ஆம், அவன் வேத வாக்கியங்களை வாசிக்கவில்லை; வாசித்திருந்தாலும் அவன் அவைகளை அறிந்து கொள்ளவில்லை.
9 ஏனெனில் தேவன், நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும், அவரில் யாதொரு மாறுதலும், யாதொரு மாறுதலின் நிழலாட்டமுமில்லை என்றும், நாம் வாசிப்பதில்லையா?
10 இப்பொழுதும் மாறுதலும், மாறுதலின் நிழலாட்டமும் இருக்கிற, ஓர் தேவனை நீங்கள் உங்களுக்குள் கற்பனை செய்திருப்பீர்களெனில், அற்புதங்களின் தேவனல்லாத ஒரு தேவனை நீங்கள் உங்களுக்குள் கற்பனை செய்திருக்கிறீர்கள்.
11 ஆனால் இதோ, நான் உங்களுக்கு அற்புதங்களின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனையும், ஈசாக்கின் தேவனையும், யாக்கோபின் தேவனையும் காண்பிப்பேன்; அதே தேவன்தான் வானத்தையும், பூமியையும் அதிலுள்ள சகலத்தையும் சிருஷ்டித்தார்.
12 இதோ, அவர் ஆதாமை சிருஷ்டித்தார். ஆதாமின் மூலம் மனுஷனின் வீழ்ச்சி வந்தது. மனுஷனுடைய வீழ்ச்சியினிமித்தம் பிதாவும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் வந்தார். இயேசு கிறிஸ்துவினாலே மனுஷனுடைய மீட்பு வந்தது.
13 இயேசு கிறிஸ்துவினால் வந்த மனுஷனுடைய மீட்பினிமித்தம், அவர்கள் கர்த்தருடைய சமுகத்தினுள் மறுபடியும் கொண்டுவரப்படுகிறார்கள்; ஆம், இதினிமித்தமே சகல மனுஷரும் மீட்கப்படுகிறார்கள். ஏனெனில் கிறிஸ்துவின் மரணம் உயிர்த்தெழுதலைக் கொண்டுவருகிறது. அது நித்திய நித்திரையிலிருந்து மீட்பைக் கொண்டு வருகிறது. எக்காளம் தொனிக்கும்போது அந்த நித்திரையிலிருந்து சகல மனுஷரும் தேவ வல்லமையினால் விழித்துக்கொள்வார்கள்; பெரியவர்களும் சிறியவர்களும் வந்து, உலகப்பிரகார மரணமாகிய இந்த மரணத்தின் நித்திய கட்டிலிருந்து மீட்கப்பட்டு, அவிழ்க்கப்பட்டோராய் அவருடைய நியாயவிசாரணைக் கூண்டுக்கு முன்பாக சகலமானோரும் நிற்பார்கள்.
14 பின்னர் பரிசுத்தமானவரின் நியாயத்தீர்ப்பு அவர்கள் மேல் வருகிறது; அசுசியானவன் அசுசியாயும், நீதிமான் இன்னும் நீதிமானாயும், மகிழ்ச்சியுடையவன் இன்னும் மகிழ்ச்சியாயும், மகிழ்ச்சியில்லாதவன் இன்னும் மகிழ்ச்சியில்லாதவனாயும் இருக்கிற காலம் வரும்.
15 இப்பொழுதும், அற்புதங்களைச் செய்யக்கூடாத ஒரு தேவனை தங்களுக்குள் கற்பனை செய்துகொண்ட அனைவரையும் நான் கேட்கிறேன். நான் சொன்ன இந்தக் காரியங்கள் யாவும் கடந்து விட்டதா? முடிவு வந்து விட்டதா? இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இல்லை; தேவன் அற்புதங்களின் தேவனாயிருப்பதை நிறுத்திவிடல்லை.
16 இதோ, தேவன் நடப்பித்தவைகள் நம்முடைய கண்களுக்கு அற்புதமாய் இல்லையா? ஆம், தேவனுடைய அற்புதமான கிரியைகளை அறிந்துகொள்ளத்தக்கவன் யார்?
17 அவருடைய வார்த்தையினால் வானமும், பூமியும் உண்டானது, அவருடைய வார்த்தையின் வல்லமையினால் மனுஷன் பூமியின் தூசிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டான்; அவருடைய வார்த்தையின் வல்லமையால் அற்புதங்கள் நடப்பிக்கப்பட்டது அற்புதமில்லையென்று, சொல்லத்தக்கவன் யார்?
18 இயேசு கிறிஸ்து அநேக பலத்த அற்புதங்களை செய்யவில்லை என்று யாரால் சொல்லமுடியும்? அவருடைய அப்போஸ்தலர்களின் கைகளினால் அநேக பலத்த அற்புதங்கள் நடப்பிக்கப்பட்டன.
19 அப்பொழுது அற்புதங்கள் செய்யப்பட்டிருந்தால், பின்பு தேவன் ஏன் அற்புதங்களின் தேவனாய் இருப்பதைவிட்டு, இன்னும் மாறாதவராய் இருக்க முடியும்? இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர் மாறுவதில்லை; அப்படியானால் அவர் தேவனாய் இருக்கமாட்டார்; அவர் தேவனாய் இல்லாமலிருக்கவுமாட்டார், அற்புதங்களின் தேவனாய் இருக்கிறார்.
20 மனுபுத்திரருக்குள்ளே அவர் அற்புதங்கள் செய்யாமல் இருப்பதின் காரணம் என்னவெனில், அவர்கள் அவிசுவாசத்தில் படிப்படியாக நலிந்து, நீதியான பாதையிலிருந்து விலகி, தாங்கள் நம்பவேண்டிய தேவனை அறியாமலிருப்பதே.
21 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கிறிஸ்துவில் விசுவாசித்து, யாதொன்றையும் சந்தேகிக்காமல், கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவினிடத்தில் எவனும் எதைக் கேட்டாலும் அது அவனுக்குக் கொடுக்கப்படும். இந்த வாக்குத்தத்தம் உலகத்தின் முடிவுபரியந்தமும் உள்ள அனைவருக்கும் ஆகும்.
22 ஏனெனில் இதோ, திரளானோர் கேட்டுக்கொண்டிருக்கையிலே, தரித்திருக்கவேண்டிய தமது சீஷர்களுக்கும், தம்முடைய சகல சீஷர்களுக்கும், தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து சொன்னதாவது: நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கியுங்கள்.
23 விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுபவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்;
24 விசுவாசிப்பவர்களை இந்த அறிகுறிகள் தொடரும், என்னுடைய நாமத்தில் அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; அவர்கள் புது பாஷைகளிலே பேசுவார்கள்; அவர்கள் சர்ப்பங்களை எடுப்பார்கள்; அவர்கள் கடுமையான விஷமான எதைப் பானம்பண்ணினாலும் அது அவர்களுக்குக் கேடு விளைவிக்காது; அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சுகம்பெறுவார்கள்.
25 ஒன்றையும் சந்தேகிக்காமல், என் நாமத்தில் விசுவாசிக்கிறவன் எவனோ, அவனுக்கு என் வார்த்தைகளனைத்தையும், பூமியின் கடையாந்தரம் வரைக்குமாய் மெய்ப்பிப்பேன்.
26 இப்பொழுதும் இதோ, கர்த்தருடைய கிரியைகளுக்கு விரோதமாக நிற்கத்தக்கவன் யார்? அவருடைய வார்த்தைகளை மறுப்பவன் யார்? கர்த்தருடைய சர்வ வல்லமைக்கு விரோதமாய் எழும்பத்தக்கவன் யார்? கர்த்தருடைய கிரியைகளை நிந்திப்பவன் யார்? கிறிஸ்துவின் பிள்ளைகளை நிந்திக்கிறவன் யார்? இதோ, கர்த்தருடைய கிரியைகளை நிந்திக்கிறவர்களே, நீங்கள் மலைத்துப்போய் அழிவீர்கள்.
27 நிந்திக்காமலும் ஆச்சரியப்படாமலும் இருந்து, கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, உங்களுக்குத் தேவையாயிருக்கிற எதையும் இயேசுவின் நாமத்தில் பிதாவினிடத்தில் கேளுங்கள். சந்தேகிக்காமல் நம்பிக்கையுடன் பூர்வகாலம் தொட்டு உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் வந்து, அவருக்கு முன்பாக அதிக பயத்தோடும், நடுக்கத்தோடும், உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
28 உங்களுடைய சோதனைக்காலத்தில் ஞானமாய் இருங்கள், எல்லா அசுத்தங்களிலிருந்தும் உங்களை விலக்கிக்கொள்ளுங்கள்; உங்களுடைய இச்சைகளை நிறைவேற்றும்படி கேளாமல், நீங்கள் சோதனைக்குட்படாமல் மெய்யான ஜீவிக்கிற தேவனையே சேவிப்போம் என்ற அசைவில்லா உறுதியுடன் கேளுங்கள்.
29 அபாத்திரராய் நீங்கள் ஞானஸ்நானம் பெறாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; அபாத்திரராய் நீங்கள் கிறிஸ்துவின் திருவிருந்தைப் புசிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; அனைத்தையும் பாத்திரராய் செய்யவும், அதை ஜீவிக்கிற தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்யப்பாருங்கள். இதைச் செய்து முடிவுபரியந்தம் நிலைத்திருப்பீர்களெனில் நீங்கள் ஒருபோதும் தள்ளப்படுவதில்லை.
30 இதோ, நான் மரித்தோரிலிருந்து பேசுவதைப்போல உங்களிடத்திலே பேசுகிறேன்; ஏனெனில் நீங்கள் என் வார்த்தைகளைப் பெறுவீர்கள், என்று நான் அறிந்திருக்கிறேன்.
31 என்னுடைய பூரணமின்மையினிமித்தம் என்னையும், என் தகப்பனின் பூரணமின்மையினிமித்தம் அவரையும் அவருக்கு முன்பாக எழுதினவர்களையும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க வேண்டாம்; நாங்கள் இருந்ததைக் காட்டிலும் நீங்கள் அதிக ஞானமாய் இருக்கக் கற்றுக்கொள்ளும்படியாக, தேவன் உங்களுக்கு எங்களின் தவறுகளை வெளியரங்கப்படுத்தினாரே என்று அவருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுங்கள்.
32 இப்பொழுதும் இதோ, எங்களுக்குக் கையளிக்கப்பட்டு, எங்களுடைய பேச்சு வழக்கத்தின்படியே எங்களால் மாற்றப்பட்ட, சீர்திருத்தப்பட்ட எகிப்திய பாஷை என்று எங்களுக்குள் அழைக்கப்பட்ட எழுத்துக்களால், எங்களுடைய ஞானத்தின்படி இந்தப் பதிவேட்டை எழுதியிருக்கிறோம்.
33 எங்களுடைய தகடுகள் போதுமான அளவு பெரிதாக இருந்திருந்தால், நாங்கள் எபிரேயு பாஷையிலே எழுதியிருப்போம்; ஆனால் எபிரேயு பாஷையும் எங்களால் மாற்றப்பட்டது; நாங்கள் எபிரேயு பாஷையிலே எழுதியிருந்தால் இதோ, நீங்கள் எங்களுடைய பதிவேட்டில் எந்த பூரணமின்மையையும் கண்டிருக்கமாட்டீர்கள்.
34 நாங்கள் எழுதினவைகளைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; மற்ற எந்த ஜனமும் எங்களுடைய பாஷையை அறிந்திருக்கவில்லை என்பதையும் கர்த்தர் அறிந்திருக்கிறார்; எங்களுடைய பாஷையை வேறு எந்த ஜனமும் அறியாததினாலே, அதனுடைய மொழிபெயர்ப்புக்கு அவர் ஒரு வழியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
35 அவிசுவாசத்தில் படிப்படியாக நலிந்துபோன, நம்முடைய சகோதரரின் இரத்தத்தை நம்முடைய வஸ்திரங்களிலிருந்து நாம் நீக்கும்படிக்கே இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
36 இதோ, நம்முடைய சகோதரரைப்பற்றி, கிறிஸ்துவின் ஞானத்திற்கு அவர்கள் திரும்பி வரவேண்டுமென்று, நாங்கள் வாஞ்சித்த இந்தக் காரியங்கள், தேசத்திலே வாசம் பண்ணின பரிசுத்தவான்கள் எல்லாருடைய ஜெபங்களின்படியே இருக்கிறது.
37 அவர்களுடைய விசுவாசத்திற்கேற்ப அவர்களின் ஜெபம் பதிலளிக்கப்படும்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அருளுவாராக. பிதாவாகிய தேவன் தாம் இஸ்ரவேலின் வீட்டாருக்குச் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்வாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேலுள்ள விசுவாசத்தின் மூலம், அவர் அவர்களை என்றென்றுமாய் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.