அதிகாரம் 6
மனந்திரும்பினோர் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு ஐக்கியம் கொள்ளப்படுதல் – மனந்திரும்புகிற சபை அங்கத்தினர் மன்னிக்கப்படுகிறார்கள் – கூட்டங்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நடத்தப்படுகின்றன. ஏறக்குறைய கி.பி. 401–421.
1 இப்பொழுது நான் ஞானஸ்நானத்தைக் குறித்துப் பேசுகிறேன். இதோ, மூப்பர்களும், ஆசாரியர்களும், ஆசிரியர்களும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்கள், ஞானஸ்நானத்திற்குப் பாத்திரவான்கள் என்பதற்கேற்ப கனிகளைக் கொடுக்காவிட்டால், அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படவில்லை.
2 அவர்கள் நொறுங்குண்ட இருதயத்தோடும், நருங்குண்ட ஆவியோடும் வந்து, தங்களுடைய சகல பாவங்களிலிருந்தும் மெய்யாகவே தாங்கள் மனந்திரும்பினோம் என்று, சபையிலே சாட்சி கொடுத்தாலொழிய, அவர்கள் ஒருவரையும் ஞானஸ்நானத்திற்குள் ஏற்றுக்கொள்ளவில்லை.
3 கிறிஸ்துவின் நாமத்தை தங்கள் மேல் தரித்துக்கொண்டு, அவரை முடிவுபரியந்தமும் சேவிக்க உறுதிகொண்டிருந்தாலொழிய, ஒருவரும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
4 அவர்கள் ஞானஸ்நானம் கொடுக்கப்பட ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நடப்பிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்பு, அவர்கள் கிறிஸ்துவினுடைய சபையின் ஜனங்களோடே எண்ணப்பட்டார்கள்; அவர்கள் நினைவுகூரப்பட்டு தேவனுடைய நல்வசனத்தினால் போஷிக்கப்படவும், அவர்களை நல்வழியில் வைத்திருக்கவும், தொடர்ந்து ஜெபத்தில் விழிப்புடன் வைத்திருக்கவும், அவர்களுடைய விசுவாசத்தைத் துவங்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிற கிறிஸ்துவின் இரட்சிக்கிற வல்லமையில் மாத்திரம் சார்ந்திருக்கவும், அவர்களுடைய பெயர்கள் குறிக்கப்பட்டன.
5 சபை உபவாசித்திருக்கவும், ஜெபிக்கவும், தங்களுடைய ஆத்தும நலனைக் குறித்து ஒருவரோடு ஒருவர் பேசவும் அடிக்கடி கூடியது.
6 கர்த்தராகிய இயேசுவை நினைவுகூரும்படியாக, அவர்கள் அப்பத்திலும், திராட்சைரசத்திலும் பங்கேற்க, அடிக்கடி கூடினார்கள்.
7 அவர்கள் தங்களுக்குள் எந்த அக்கிரமும் இருக்கக்கூடாதென்று கண்டிப்புடன் கவனித்து வந்தார்கள்; அக்கிரமம் செய்வதாக யாராவது கண்டுபிடிக்கப்பட்டால், சபையின் மூன்று சாட்சிகள் அவர்களை மூப்பர்களுக்கு முன்பாக ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்கள். அவர்கள் மனந்திரும்பாமலும், அறிக்கைபண்ணாமலும் இருப்பார்களெனில், அவர்களுடைய பெயர்கள் அழிக்கப்பட்டன. அவர்கள் கிறிஸ்துவினுடைய ஜனங்களுக்குள் எண்ணப்படவில்லை.
8 ஆனால் அவர்கள் அடிக்கடி மனந்திரும்பி, உண்மையான நோக்கத்தோடு மன்னிப்பை நாடும்போது அவர்கள் மன்னிக்கப்பட்டார்கள்.
9 ஆவியின் கிரியைகள் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமைக்கேற்ப அவர்களுடைய கூட்டங்கள் சபையால் நடத்தப்பட்டன; ஏனெனில் பிரசங்கிக்கவோ, அல்லது புத்தி சொல்லவோ, அல்லது ஜெபிக்கவோ, அல்லது விண்ணப்பம் பண்ணவோ, அல்லது பாடவோ, பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அவர்களை எப்படி நடத்துகிறதோ அப்படியே செய்யப்பட்டது.