வேதங்கள்
மரோனி 9


தன் குமாரனாகிய மரோனிக்கு மார்மனின் இரண்டாவது நிருபம்.

அதிகாரம் 9 உள்ளிட்டது.

அதிகாரம் 9

நேபியரும் லாமானியரும் சீரழிந்து ஒழுக்கம் சிதைந்து போகுதல் – அவர்கள் ஒருவரையொருவர் வேதனைக்குள்ளாக்கி, கொலை செய்தல் – மரோனியின் மேல் என்றென்றுமாய் கிருபையும் நன்மையும் நிலைத்திருக்கும்படி மார்மன் ஜெபித்தல். ஏறக்குறைய கி.பி. 401.

1 என் பிரியமான குமாரனே, நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று நீ அறியவேண்டுமென நான் எழுதுகிறேன். சஞ்சலமானதை உனக்கு எழுதுகிறேன்.

2 ஏனெனில் இதோ லாமானியரோடு நான் கொடிய யுத்தத்தில் ஈடுபட்டேன். அதிலே நாங்கள் கைப்பற்றவில்லை; அர்க்கியாந்தூஸ் பட்டயத்தால் வீழ்ந்து போனான். லூராமும் எம்ரோனும் கூட அப்படியே. ஆம், நாம் நம்முடைய சிறந்த மனுஷரில் அநேகரை இழந்து விட்டோம்.

3 இப்பொழுதும் இதோ, என் குமாரனே, லாமானியர் இந்த ஜனத்தை அழித்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்; ஏனெனில் அவர்கள் மனந்திரும்புவதில்லை. ஒருவரோடொருவர் கோபம்கொள்ளும்படியாக சாத்தான் அவர்களைத் தொடர்ந்து தூண்டுகிறான்.

4 இதோ, நான் அவர்களோடு தொடர்ந்து பிரயாசப்படுகிறேன்; நான் அவர்களிடத்தில் தேவ வார்த்தையை கண்டிப்புடன் பேசும்போது, அவர்கள் எனக்கு விரோதமாக நடுங்கிப்போய் கோபம் கொள்ளுகிறார்கள்; நான் கண்டிப்பாய் இராதபோதோ அவர்கள் அதற்கு விரோதமாய் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்கள்; ஆதலால் கர்த்தருடைய ஆவி அவர்களோடு கிரியை செய்வதிலிருந்து நின்றுவிட்டதோ, என்று அஞ்சுகிறேன்.

5 அவர்கள் மிகவும் கோபப்படுவதினால், அவர்களுக்கு மரணபயம் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது; ஒருவரோடொருவர் அன்பை அவர்கள் இழந்துவிட்டார்கள்; அவர்கள் தொடர்ந்து இரத்த தாகம் கொண்டு, தொடர்ந்து பழிதீர்க்கிறார்கள்.

6 இப்பொழுதும் எனக்குப் பிரியமான குமாரனே, அவர்களுடைய கடினத்தன்மையைப் பொருட்படுத்தாமல், நாம் கருத்தாய் பிரயாசப்படுவோமாக; நாம் பிரயாசப்படுவதிலிருந்து ஓய்ந்துவிட்டால் நாம் ஆக்கினைக்குள்ளாகக் கொண்டுவரப்படுவோம்; ஏனெனில் நாம் எல்லா நீதிக்கும் சத்துருவானவனை மேற்கொள்ளவும், நம்முடைய ஆத்துமாக்கள் தேவ ராஜ்யத்தில் இளைப்பாறத்தக்கதாகவும், நாம் இந்தக் களிமண்ணாலான வாசஸ்தலத்திலிருக்கும்போது நாம் செய்யவேண்டிய வேலை ஒன்று உண்டு.

7 இப்பொழுதும் இந்த ஜனத்தினுடைய பாடுகளைக் குறித்து நான் சிலவற்றை எழுதுகிறேன். நான் அமோரோனிடத்திலிருந்து பெற்ற விவரத்தின்படி, இதோ சேரீஸ்யா கோபுரத்திலிருந்து பிடித்துச் சென்ற அநேக கைதிகள்லாமானியரிடத்திலிருக்கிறார்கள். அங்கே புருஷரும் ஸ்திரீகளும், சிறுபிள்ளைகளுமிருந்தார்கள்.

8 அந்த ஸ்திரீகளின் புருஷர்களையும், பிள்ளைகளின் தகப்பன்களையும் கொன்று போட்டார்கள். அவர்கள் ஸ்திரீகளைத் தங்களுடைய புருஷர்களின் மாம்சத்தைக் கொண்டும், பிள்ளைகளைத் தங்கள் தகப்பன்களின் மாம்சத்தைக் கொண்டும் போஷிக்கிறார்கள். தண்ணீரையோ கொஞ்சமாய் அவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

9 லாமானியரின் இந்த அருவருப்பு பெரிதாயிருந்தாலும், மோரியான்தமில் உள்ள நம்முடைய ஜனத்தினுடைய அருவருப்பிலும் பெரிதல்ல. ஏனெனில் இதோ, அவர்கள் லாமானிய குமாரத்திகளை சிறை பிடித்துப்போனார்கள். சகலத்திலும் மேன்மையானதும், விலையேறப் பெற்றதுமான கற்பையும் நற்குணத்தையும் அவர்களிடமிருந்து பறித்தார்கள்,

10 அவர்கள் இதைச் செய்த பின்பு, அவர்களுடைய சரீரங்களை மரணமட்டுமாய் சித்திரவதை செய்து, மிகவும் கொடிய முறையில் அவர்களைக் கொலை பண்ணினார்கள்; இதை அவர்கள் செய்த பின்பு, தங்களுடைய இருதயங்களின் கடினத்தினிமித்தம் அவர்களுடைய சரீரங்களை வனமிருகங்களைப்போல் பட்சிக்கிறார்கள்; அவர்கள் அதை தைரியத்திற்கு அடையாளமாகச் செய்கிறார்கள்.

11 என் பிரியமான குமாரனே, நாகரீகமற்ற இப்படி ஒரு ஜனம் இருக்கமுடியுமோ.

12 சில வருஷங்களே கடந்து போயின. அவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாயும், பிரியப்படத்தக்கவர்களாயுமிருந்தார்கள்.

13 என் குமாரனே, இவ்வளவு அருவருப்பிலே பிரியப்படுகிற இப்படியொரு ஜனம் இருக்கக்கூடுமோ,

14 தேவன் தம்முடைய புயத்தை நியாயவிசாரிப்பிலே நமக்கு விரோதமாய் நீட்டாதிருப்பார் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

15 இதோ, என் இருதயம் அழுகிறது; இந்த ஜனத்திற்கு ஐயோ. தேவனே நியாயவிசாரிப்புக்கென வாரும். உமது முகத்திற்கு முன்னிருந்து அவர்களுடைய பாவங்களையும், துன்மார்க்கங்களையும், அருவருப்புகளையும் மறைத்தருளும்!

16 மறுபடியும் என் குமாரனே, சேரீஸ்யாவில் அநேக விதவைகளும், அவர்களுடைய குமாரத்திகளும் மீந்திருக்கிறார்கள். லாமானியர் தூக்கிச் செல்லாத, உணவுப் பொருட்களை, இதோ, சீநேப்பின் சேனை தூக்கிச் சென்று, அவர்கள் உணவுக்காக எங்கும் அலையும்படி விட்டுவிட்டார்கள். அநேக முதிர்வயதான ஸ்திரீகள் வழியிலேயே மயக்கம் அடைந்து மரித்துப் போகிறார்கள்.

17 என்னோடு கூட இருக்கிற சேனை பெலவீனமானது; லாமானியரின் சேனைகள் சேரீஸ்யாவிற்கும் எனக்கும் நடுவிலே இருக்கிறார்கள்; ஆரோனுடைய சேனைக்கு தப்பியோடினவர்கள் அவர்களுடைய பயங்கரமான முரட்டுத்தனத்தினிமித்தம் பாதிப்புக்குள்ளானார்கள்.

18 என் ஜனம் எவ்வளவு தரக்குறைவானவர்கள். அவர்கள் ஒழுங்கும், இரக்கமும் இல்லாதிருக்கிறார்கள். இதோ, நான் வெறும் மனுஷனே, மனுஷனுக்கு உரிய பெலத்தையே பெற்றிருக்கிறேன். இனிமேலும் என் கட்டளைகளை நிறைவேற்ற முடியாது.

19 அவர்கள் தங்கள் புரட்டிலே பெலனுள்ளவர்களானார்கள்; அவர்கள் அவ்வண்ணமே முரட்டுத்தன்மை உடையவர்களாயிருந்து முதியோரையும், வாலிபரையும் விட்டுவைக்கவில்லை; நன்மையைத் தவிர மற்ற அனைத்திலும் அவர்கள் பிரியப்படுகிறார்கள்; தேசத்தின் மேலுள்ள நம்முடைய ஸ்திரீகள் நம்முடைய பிள்ளைகள் ஆகியோரின் பாடுகள் அனைத்தையும் மிஞ்சுகிறதாயிருக்கிறது; ஆம் நாவு சொல்லவும் முடியாது. அது எழுதப்படவும் கூடாது.

20 இப்பொழுதும் என் குமாரனே, இந்தப் பயங்கரமான காட்சியிலே இனிமேலும் நான் வாசம் செய்யப்போவதில்லை. இதோ, நீ இந்த ஜனத்தின் துன்மார்க்கத்தை அறிந்திருக்கிறாய்; அவர்கள் கொள்கை இல்லாமலும் உணர்வு இல்லாமலும் இருக்கிறார்கள் என்று நீ அறிந்திருக்கிறாய்; அவர்களுடைய துன்மார்க்கம் லாமானியரையும் மிஞ்சுவதாய் இருக்கிறது.

21 இதோ, என் குமாரனே, அவர் என்னை அடிக்காதபடிக்கு தேவனிடத்தில் நான் அவர்களைக் குறித்துப் பரிந்துரைக்க முடியாது.

22 இதோ, என் குமாரனே, நான் உன்னை தேவனிடத்தில் பரிந்துரைத்து, நீ இரட்சிக்கப்படுவாய் என்று கிறிஸ்துவிலே நம்பிக்கையாய் இருக்கிறேன்; தேவனுடைய ஜனம் அவரிடத்திற்குத் திரும்புவதையோ அல்லது அவர்களின் முழு அழிவினையோ காண, அவர் உன் ஜீவனைத் தப்புவிக்கும்படி அவரிடத்தில் ஜெபிக்கிறேன்; ஏனெனில் அவர்கள் மனந்திரும்பி, அவரிடத்தில் திரும்பினாலொழிய அவர்கள் அழிந்துபோவார்கள் என்று நான் அறிவேன்.

23 தங்களுடைய இருதயங்களின் வாஞ்சையினிமித்தம், இரத்தத்தையும், பழிவாங்குதலையும் தேடி, அவர்கள் அழிந்து போனால் அது யாரேதியர்களின் அழிவிற்கு ஒப்பாயிருக்கும்.

24 அவர்கள் அழிந்து போனால், நம்முடைய சகோதரரில் அநேகர் பிரிந்து லாமானியரைச் சேர்ந்து கொண்டார்கள் என்று நாம் அறிவோம். இன்னும் அநேகர் பிரிந்து அவர்களைச் சேர்ந்து கொள்வார்கள்; ஆதலால் நீ தப்புவிக்கப்பட்டால், சிலவற்றைக் குறித்து எழுது. நான் மரிப்பேன், உன்னைக் காணமாட்டேன். ஆனால் நான் உன்னிடத்தில் ஒப்படைக்க வேண்டிய பரிசுத்த பதிவேடுகளை நான் வைத்திருப்பதால், நான் உன்னை சீக்கிரத்தில் காண்பேன், என்று நம்புகிறேன்.

25 என் குமாரனே, கிறிஸ்துவிலே விசுவாசமாயிரு, உன்னை மரணத்திற்குள்ளாக அமிழ்ந்து போகும்படியாக, நான் எழுதியவைகள் உன்னை சஞ்சலப்படுத்தாமல் இருப்பதாக. கிறிஸ்து உன்னை உயர்த்துவாராக. அவருடைய பாடுகளும் மரணமும், நமது பிதாக்களுக்குத் தம்முடைய சரீரத்தைக் காண்பித்ததுவும், அவருடைய இரக்கமும் நீடிய சாந்தமும், அவருடைய மகிமை, நித்திய ஜீவன் ஆகியவைகளின் நம்பிக்கையும் உன் மனதில் என்றென்றும் தங்குவதாக.

26 பரலோகத்தின் உன்னதத்தில் அவரது சிங்காசனம் இருக்கிற, பிதாவாகிய தேவன், மற்றும் அவரது வல்லமையின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆகியோரின் கிருபை, சகலமும் அவருக்குக் கீழ்ப்படும்வரைக்குமாய் உன்னோடு என்றென்றுமாய்த் தரித்திருப்பதாக. ஆமென்.