கோபமூட்டும் அநீதி
இயேசு கிறிஸ்து அநீதியைப் புரிந்துகொள்கிறார் மற்றும் ஒரு தீர்வை வழங்க வல்லமையும் பெற்றிருக்கிறார்.
1994ம் ஆண்டில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் ஒரு இனப்படுகொலை நடந்தது, இது ஓரளவு பழங்குடியினரின் ஆழ்ந்த பதட்டங்களால் ஏற்பட்டது. அரை மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக மதிப்பீடுகள் உள்ளன.1 குறிப்பிடத்தக்க வகையில், ருவாண்டன் மக்கள் பெருமளவில் சமரசம் செய்து கொண்டனர்,2 ஆனால் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு, ருவாண்டாவுக்குச் சென்றபோது, நானும் என் மனைவியும் கிகாலி விமான நிலையத்தில் மற்றொரு பயணியுடன் உரையாடலைத் தொடங்கினோம். அவர் இனப்படுகொலையின் அநீதியான தன்மையைப்பற்றிப் புலம்பிவிட்டு, “ஒரு கடவுள் இருந்திருந்தால், அவர் இதற்காக ஏதாவது செய்திருக்க மாட்டாரா?” என கடுமையாகக் கேட்டார். இந்த மனிதனுக்கும், நம்மில் பலருக்கும், துன்பமும் மிருகத்தனமான அநீதியும் ஒரு வகையான, அன்பான பரலோக பிதாவின் யதார்த்தத்துடன் பொருந்தாது எனத் தோன்றலாம். இருந்தும் அவர் உண்மையானவர், அவர் தயவானவர், அவருடைய ஒவ்வொரு பிள்ளைகளையும் அவர் பரிபூரணமாக நேசிக்கிறார். இந்த இருவகையானது மனிதகுலத்தைப் போலவே பழமையானது மற்றும் எளிமையான குரலில் அல்லது பம்பர் ஸ்டிக்கரால் விளக்க முடியாதது.
அதைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்க, பல்வேறு வகையான அநீதியானவற்றை ஆராய்வோம். பொதுவான வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் வாராந்திர பண உதவித்தொகை கிடைத்த ஒரு குடும்பத்தைக் கருத்தில் கொள்வோம். ஒரு மகன், ஜான், மிட்டாய் வாங்கினான்; ஒரு மகள், அன்னா, தனது பணத்தை சேமித்தாள். இறுதியில் அன்னா அவளுக்கென்று ஒரு சைக்கிளை வாங்கினாள். அவனுக்கு கிடைக்காதபோது அன்னாவுக்கு ஒரு சைக்கிள் கிடைத்தது முற்றிலும் அநீதியென ஜான் நினைத்தான். ஆனால் ஜானின் தேர்ந்தெடுப்புகள் சமத்துவமின்மையை உருவாக்கியது, பெற்றோரின் செயல்களினால் அல்ல. மிட்டாய் சாப்பிடுவதை உடனடியாகத் தவிர்ப்பதற்கான அன்னாவின் முடிவு ஜானுக்கு எந்த நியாயமற்ற தன்மையையும் சுமத்தவில்லை, ஏனெனில் அவனுக்கு அவனது சகோதரிக்கிருந்த அதே வாய்ப்பு இருந்தது.
நம்முடைய தீர்மானங்களும் நீண்டகால சாதகங்கள் அல்லது பாதகங்களை விளைவிக்கும். கர்த்தர் வெளிப்படுத்தியதைப்போல, “மற்றொருவனைவிட அவனுடைய சிரத்தை மற்றும் கீழ்ப்படிதலின் மூலமாக இந்த ஜீவியத்தில் ஒரு நபர் அதிக அறிவையும் புத்திசாலித்தனத்தையும் பெற்றால் மறுமையில் அவன் மிக அதிக சாதகம் பெற்றிருப்பான்.”3 மற்றவர்கள் அவர்களின் கருத்தான தேர்ந்தெடுப்புகள் காரணமாக நன்மைகளைப் பெறும்போது, அதே வாய்ப்பைப் பெற்றபோது நாம் அநீதியான முறையில் நடத்தப்பட்டோம் என்று நாம் சரியாக முடிவு செய்ய முடியாது.
அநீதிக்கு மற்றொரு எடுத்துக்காட்டு, என் மனைவி ரூத் ஒரு குழந்தையாக சந்தித்த சூழ்நிலையிலிருந்து எழுகிறது. ஒரு நாள், ரூத் தனது தாயார், ஒரு தங்கை மெர்லாவை புதிய காலணிகள் வாங்க அழைத்துச் செல்வதை அறிந்தாள். மெர்லா புகார் செய்தாள், “அம்மா, இது மிகவும் அநீதி. மெர்லாதான் கடைசியாக புதிய ஜோடி காலணிகள் வாங்கினாள்!”.
“ரூத், உன் காலணிகள் உனக்கு பொருந்துகிறதா?” என ரூத்தின் தாய் கேட்டாள்.
“ஆம்” என ரூத் பதிலளித்தாள்.
“மெர்லாவின் காலணிகள் இனிமேலும் பொருந்தாது” என்று ரூத்தின் தாயார் பின்னர் கூறினாள்.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் பொருந்தக்கூடிய காலணிகள் இருக்க வேண்டும் என்று ரூத் ஒப்புக்கொண்டாள். ரூத் புதிய காலணிகளை விரும்பியிருந்தாலும், அநீதியான முறையில் நடத்தப்படுவதைப்பற்றிய அவளது கருத்து, சூழ்நிலைகளை தன் தாயின் கண்கள் மூலமாக பார்த்தபோது மங்கியது.
சில அநீதிகளை விளக்க முடியாது; விவரிக்க முடியாத நியாயமற்றது கோபமூட்டுகிறது. அபூரண, காயமடைந்த அல்லது நோயுற்ற சரீரங்களுடன் வாழ்வதிலிருந்து அநீதி வருகிறது. அநித்திய வாழ்க்கை இயல்பாகவே நியாயமற்றது. சிலர் செல்வத்தில் பிறந்தவர்கள், மற்றவர்கள் அப்படியில்லை. சிலருக்கு அன்பான பெற்றோர் உள்ளனர், மற்றவர்களுக்கில்லை. சிலர் பல ஆண்டுகள் வாழ்கிறார்கள், மற்றவர்கள் சில ஆண்டுகளே. அது அப்படியே போய்க்கொண்டிருக்கிறது. சில நபர்கள் நன்மை செய்ய முயற்சிக்கும்போது கூட தீங்கு விளைவிக்கும் தவறுகளை செய்கிறார்கள். சிலர் தங்களால் முடிந்தபோதும் அநீதியை ஒழிக்க வேண்டாம் என்று தேர்ந்தெடுக்கிறார்கள். துன்பகரமான விஷயம் என்னவென்றால், சில நபர்கள் தங்களது தேவன் கொடுத்த சுயாதீனத்தை மற்றவர்களுக்கு தீங்கு செய்ய ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்றாலும் பயன்படுத்துகிறார்கள்.
பல்வேறு வகையான அநீதிகள் ஒன்றிணைந்து, அதிக அநீதியின் சுனாமியை உருவாக்குகின்றன. உதாரணமாக, கோவிட்-19 தொற்றுநோய் ஏற்கனவே பல்வேறு காரணங்களுடன் பாதகமான சூழ்நிலைகளுக்கு உட்பட்டவர்களை, சமநிலையின்றி பாதிக்கிறது. இத்தகைய அநீதியை எதிர்கொள்பவர்களுக்காக என் இதயம் வலிக்கிறது, ஆனால் இயேசு கிறிஸ்து அநீதியைப் புரிந்துகொண்டு ஒரு தீர்வை வழங்க வல்லவர் என்பதை நான் என் முழு இதய வேதனையுடனும் அறிவிக்கிறேன். அவர் சகித்த அநீதியுடன் எதுவும் ஒப்பாகாது. மனுக்குலத்தின் அனைத்து வேதனைகளையும் துன்பங்களையும் அவர் அனுபவித்திருப்பது நியாயமற்றது. அவர் என் பாவங்களுக்காகவும் தவறுகளுக்காகவும், உங்கள் பாவங்களுக்காகவும் துன்பப்பட்டார் என்பது நியாயமற்றது. ஆனால் அவர் நம்மீதும் பரலோக பிதாவின் மீதுமுள்ள அன்பின் காரணமாக அவ்வாறு செய்யத் தெரிந்துகொண்டார். நாம் அனுபவித்துக் கொண்டிருப்பதை அவர் நன்கு புரிந்துகொள்கிறார்.4
தேவன் தங்களை அநீதியாக நடத்திக்கொண்டிருந்தார் என்று பண்டைய இஸ்ரவேலர் புகார் செய்ததாக வேதம் பதிவு செய்கிறது. பிரதியுத்தரமாக, “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?” என யேகோவா கேட்டார். ஒரு அன்பான தாய் தன் கைக்குழந்தையை மறந்துவிடுவாள் என்பது சாத்தியமில்லாததைப்போல, அவருடைய பக்தி அர்ப்பணிப்பு அதிக உறுதியானது என்று யேகோவா அறிவித்தார். “ஆம், அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என அவர் உறுதியளித்தார். இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது”5 என அவர் உறுதியளித்தார். இயேசு கிறிஸ்து எல்லையற்ற, பாவநிவாரண பலியை சகித்ததால், அவர் பரிபூரணமாக நம்மைப் போலவே உணர்கிறார். 6 அவர் எப்போதும் நம்மைப்பற்றியும் நம் சூழ்நிலைகளைப்பற்றியும் அறிந்திருக்கிறார்.
அநித்தியத்தில் இரட்சகரண்டை நாம் “தைரியமாக வந்து,” மனதுருக்கத்தையும், குணமாக்குதலையும் உதவியையும் நாம் பெறமுடியும்.7 விவரிக்க முடியாதபடி நாம் கஷ்டப்படுகின்ற போதிலும், தேவன் நம்மை எளிய, சாதாரண மற்றும் குறிப்பிடத்தக்க வழிகளில் ஆசீர்வதிக்க முடியும். இந்த ஆசீர்வாதங்களை நாம் அங்கீகரிக்க கற்றுக்கொள்ளும்போது, தேவன்மீதுள்ள நம்முடைய நம்பிக்கை அதிகரிக்கும். நித்தியத்தில், பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் எல்லா அநீதிகளையும் தீர்த்து வைப்பார்கள். எவ்வாறு மற்றும்எப்போது என்பதை நாம் புரிந்துகொள்ளக்கூடியவிதமாக அறிய விரும்புகிறோம். எப்படி அவர்கள் அதைச் செய்யப்போகிறார்கள்? எப்போது அவர்கள் அதைச் செய்யப்போகிறார்கள்? என் அறிவின்படி எவ்வாறு அல்லது எப்போது என்பதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை8 அவர்கள் செய்வார்கள் என நான் அறிவேன்.
நீதியான சூழ்நிலைகளில், “வாழ்க்கையின் அநீதி அனைத்தையும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாகவே நாம் சரி செய்ய முடியும்” என்று நம்புவது நமது பணிகளில் ஒன்றாகும். 9 இயேசு கிறிஸ்து உலகத்தை வென்று அனைத்து அநீதிகளையும் “எடுத்துக்கொண்டார்”. அவராலேயே இந்த உலகத்தில் நாம் சமாதானம் பெற முடியும், திடன்கொள்ள முடியும்.10 நாம் அவரை அனுமதித்தால், நம்முடைய ஆதாயத்திற்காக அநீதியை இயேசு கிறிஸ்து பரிசுத்தப்படுத்துவார். 11 அவர் நம்மை ஆறுதல்படுத்தி, இழந்ததை மீட்டெடுப்பது மட்டுமல்ல;12 அவர் அநீதியை நம் நன்மைக்காகப் பயன்படுத்துவார். எவ்வாறு மற்றும் எப்போது என அது வரும்போது, ஆல்மா செய்ததைப்போல நாம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்போது, “இந்தக் காரியங்கள் அனைத்தையும் தேவன் அறிந்திருக்கிறார், என்பதால் அது பொருட்டல்ல, இதுதான் காரியம் என்பதை அறிந்திருப்பது எனக்குப் போதுமானது.”13.
எவ்வாறு மற்றும் எப்போது என்பதைப்பற்றிய நமது கேள்விகளை நாம் பின் காலத்துக்காக நிறுத்திவைத்து, எல்லாவற்றையும் சரியாகச் செய்ய அவருக்கு வல்லமை உள்ளது, அவ்வாறு செய்ய ஏங்குகிறார் என இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.14 எவ்வாறு மற்றும் எப்போது என்பதை அறிவதை நாம் வலியுறுத்துவது பயனற்றதாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக கிட்டப்பார்வையுமாயிருக்கிறது.15
நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளும்போது, அவரைப் போல ஆகவும் நாம் பாடுபட வேண்டும். நாம் மற்றவர்களை மனதுருக்கத்துடன் அணுகி, அநீயைக் காணும்போது அதை ஒழிக்க முயற்சிக்கிறோம்; 16 நம்முடைய செல்வாக்கு மண்டலத்திற்குள் விஷயங்களைச் சரியாகச் செய்ய முயற்சி செய்யலாம். “நாம் ஒரு நல்ல காரணத்திற்காக ஆவலோடு ஈடுபடவேண்டும், நமது [சுய]விருப்பத்தில் அநேக காரியங்களைச் செய்து, மிகுந்த நீதியைக் கொண்டு வரவேண்டும்”17 என உண்மையில் இரட்சகர் வழிகாட்டினார்.
அநீதியை எதிர்த்துப் போராடுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்ட ஒருவர் வழக்கறிஞர் பிரையன் ஸ்டீவன்சன் ஆவார். தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும், அதிகப்படியான தண்டனையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்காவில் அவரது சட்ட தொழில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, திரு. ஸ்டீவன்சன் கொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகி, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை ஆதரித்தார். பரவலாக அறியப்பட்ட திருமணத்திற்குப் புறம்பான விவகாரம் காரணமாக சமூகத்தில் அவமதிக்கப்பட்டிருந்தாலும் அந்த மனிதன் தனது சபையில் உற்சாகமில்லாதிருந்தாலும், திரு. ஸ்டீவன்சன் அந்த மனிதனின் உள்ளூர் கிறிஸ்தவ சபையின் ஆதரவைக் கேட்டார்.
உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் சபையை மையப்படுத்த, இயேசுவிடம் கொண்டுவரப்பட்ட விபச்சாரத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணைப்பற்றி திரு. ஸ்டீவன்சன், அவர்களிடம் பேசினார். குற்றம் சாட்டியவர்கள் அவளைக் கல்லெறிந்து கொல்ல விரும்பினர், ஆனால் இயேசு, “உங்களிடையே பாவமில்லாதவன், … முதலில் அவள் மீது கல்லை எறியட்டும்”18 என்றார். பெண்ணைக் குற்றம் சாட்டியவர்கள் பின்வாங்கினர். இயேசு அந்தப் பெண்ணைக் கண்டனம் செய்யவில்லை, ஆனால் இனிமேல் பாவம் செய்யாதிருக்கும்படி கட்டளையிட்டார்.19
இந்த விவரத்தை விவரித்தபின், சுயநீதி, பயம் மற்றும் கோபம் ஆகியவை, தடுமாறும் நபர்களை நோக்கி கிறிஸ்தவர்கள் கூட கற்களை வீசச் செய்துள்ளனர் என்பதை திரு. ஸ்டீவன்சன் சொன்னார். பின்பு அவர் சொன்னார், “அது நடப்பதை நம்மால் வெறுமனே பார்க்க முடியாது,” மேலும் “கல் பிடிப்பவர்களாக” மாறும்படி சபையோரை அவர் ஊக்குவித்தார்.20 சகோதர சகோதரிகளே, கற்களை வீசாமல் இருப்பது மற்றவர்களை மனதுருக்கத்துடன் நடத்துவதற்கான முதல் படியாகும். மற்றவர்கள் வீசிய கற்களைப் பிடிக்க முயற்சிப்பது இரண்டாவது படியாகும்.
சாதகங்கள் மற்றும் பாதகங்களை நாம் எவ்வாறு கையாள்வது என்பது வாழ்க்கையின் சோதனையின் ஒரு பகுதியாகும். நாம் சொல்வதன் மூலம் அல்ல, பாதிக்கப்படக்கூடிய மற்றும் சாதகமற்றவர்களை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதன் மூலமே நாம் அதிகமாகத் தீர்க்கப்படுவோம்.21 பிற்காலப் பரிசுத்தவான்களாக, நன்மையைச் செய்பவர்களாக சுற்றித் திரிய, இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்ற நாம் முயற்சிக்கிறோம்.22 பரலோக பிதாவின் எல்லா பிள்ளைகளின் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த உழைப்பதன் மூலம் நம் அயலார் மீதான நம் அன்பை நாம் வெளிப்படுத்துகிறோம்.
நம்முடைய சொந்த சாதகங்கள் மற்றும் பாதகங்களை மனதில் கொண்டு, நினைத்துப்பார்ப்பது ஆரோக்கியமானது. அன்னா ஏன் சைக்கிள் வாங்கினாள் என்பதை ஜான் புரிந்துகொள்வது தெளிவுபடுத்துகிறது. ரூத் தனது தாயின் கண்கள் மூலம் மெர்லாவுக்கு காலணிகள் தேவைப்படுவதைப் பார்ப்பது அறிவூட்டுவதாக இருந்தது. நித்திய கண்ணோட்டத்துடன் காரியங்களைக் காண முயற்சிப்பது தெளிவுபடுத்தும். நாம் இரட்சகரைப் போல அதிகமாக ஆகும்போது, நாம் அதிக பச்சாதாபம், புரிதல் மற்றும் தயாளத்தை வளர்த்துக் கொள்கிறோம்.
ருவாண்டன் இனப்படுகொலையின் அநீதியைப்பற்றி புலம்பிய கிகாலியில் உள்ள எங்கள் சக பயணி எழுப்பிய கேள்விக்கு நான் திரும்பி வருகிறேன், “ஒரு கடவுள் இருந்தால், அவர் இதைப்பற்றி ஏதாவது செய்திருக்க மாட்டாரா?”
இனப்படுகொலையால் ஏற்பட்ட துன்பங்களைக் குறைக்காமல், அத்தகைய துன்பங்களை புரிந்துகொள்ள நம் இயலாமையை ஒப்புக் கொண்டபின், கோபமூட்டும் அநீதிபற்றி இயேசு கிறிஸ்து ஏதாவது செய்திருக்கிறார் என்று பதிலளித்தோம்.23 இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய சபையின் மறுஸ்தாபிதத்தைப்பற்றிய பல சுவிசேஷ கொள்கைகளை நாங்கள் விளக்கினோம்.24
பின்னர், எங்களுக்கு அறிமுகமானவர் அவரது கண்களில் கண்ணீருடன் கேட்டார், “என்னுடைய மபித்துப்போன பெற்றோர் மற்றும் மாமாவுக்கு நான் ஏதாவது செய்ய முடியும் என்று நீங்கள் சொல்கிறீர்களா?”
“ஓ, ஆம்!” நாங்கள் சொன்னோம். வாழ்க்கையைப்பற்றி நியாயமற்றது அனைத்தையும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் சரியாகச் செய்ய முடியும் என்றும் அவருடைய அதிகாரத்தால் குடும்பங்கள் என்றென்றும் ஒன்றிணைக்கப்படலாம் என்றும் நாங்கள் சாட்சியளித்தோம்.
அநீதியை எதிர்கொள்ளும்போது, நாம் தேவனிடமிருந்து புறம்பே நம்மைத் தள்ளலாம் அல்லது உதவி மற்றும் ஆதரவிற்காக அவரை நோக்கி நாம் இழுக்கப்படலாம். உதாரணமாக, நேபியர்களுக்கும் லாமானியர்களுக்கும் இடையிலான நீடித்த போர் ஜனங்களை வித்தியாசமாக பாதித்தது “பலர் கடினப்பட்டுப்போனார்கள்” என்றும் மற்றவர்கள் “தங்கள் உபத்திரவங்களினிமித்தம் மென்மையானவர்களாகி தேவனுக்கு முன்பாக தங்களை தாழ்த்தினார்கள்” என்றும் மார்மன் கவனித்தான்.25
அநீதி உங்களை கடினப்படுத்தவோ, கசப்பானதாக்கவோ, தேவன்மீதுள்ள உங்கள் விசுவாசத்தை சிதைக்கவோ அனுமதிக்காதீர்கள். பதிலாக, உதவிக்காக தேவனிடம் கேளுங்கள். இரட்சகரைப்பற்றிய உங்கள் பாராட்டையும் அவரை சார்ந்திருப்பதையும் அதிகரியுங்கள். கசப்பானவர்களாக மாறுவதைவிட, நீங்கள் சிறப்பானவர்களாக மாற அவர் உங்களுக்குதவுவாராக.26 உங்களைப் பாதுகாக்க உதவவும், உங்கள் உபத்திரவங்கள் “கிறிஸ்துவின் சந்தோஷத்தினால் விழுங்கப்பட்டுப்போகவும்” அவரை அனுமதியுங்கள். 27 “உடைந்த இருதயங்களை குணமாக்குவதற்கான” அவரது ஊழியத்தில் அவருடன் சேருங்கள் 26அநீதியை ஒழிக்க முயற்சித்து, ஒரு கல் பிடிப்பவராக மாறுங்கள்29.
இரட்சகர் ஜீவிக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். அநீதியை அவர் புரிந்துகொள்கிறார், அவருடைய கைகளில் உள்ள அடையாளங்கள் தொடர்ந்து உங்களையும் உங்கள் சூழ்நிலைகளையும் நினைவூட்டுகின்றன. உங்கள் எல்லா துன்பங்களிலும் அவர் உங்களுக்கு ஊழியம் செய்கிறார். அவரிடம் வருபவர்களுக்கு, அழகின் கிரீடம் துக்கத்தின் சாம்பலை மாற்றும்; மகிழ்ச்சியும் சந்தோஷமும் துக்கத்தையும் துயரத்தையும் மாற்றும்; பாராட்டு மற்றும் கொண்டாட்டம் ஊக்கம் மற்றும் விரக்தியை மாற்றும்30 பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்து மீதான உங்கள் விசுவாசத்திற்கு நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெகுமதி கிடைக்கும். அனைத்து அநீதிகளும், குறிப்பாக கோபமூட்டும் அநீதி, உங்கள் ஆதாயத்திற்காக பரிசுத்தப்படுத்தப்படும். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.