பொது மாநாடு
தேவன் மேற்கொள்ளுவாராக
அக்டோபர் 2020 பொது மாநாடு


18:51

தேவன் மேற்கொள்ளுவாராக

நீங்கள் உங்கள் வாழ்க்கையை தேவன் மேற்கொள்ள அனுமதிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வாக்கு தேவனாக இருக்க அனுமதிக்கிறீர்களா?

என் அன்பான சகோதர சகோதரிகளே, இந்த மாநாட்டின் அற்புதமான செய்திகளுக்கும், இப்போது உங்களுடன் பேசுவதற்கான எனது சிலாக்கியத்திற்கும் நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

36 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அப்போஸ்தலராக இருந்திருக்கிறேன், இஸரவேலின் கூடுகையின் கோட்பாடு என் கவனத்தை ஈர்த்திருக்கிறது,1 இதைப்பற்றிய ஊழியங்கள் மற்றும் பெயர்கள் உட்பட எல்லாம் என்னைக் கவர்ந்துள்ளது2ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு; அவர்களின் வாழ்க்கையும் மனைவிகளும்; தேவன் அவர்களுடன் செய்த உடன்படிக்கை, அவர்களுடைய பரம்பரை முழுவதும் நீட்டப்பட்டது;3பன்னிரண்டு கோத்திரங்களின் சிதறல்; நமது நாளில் கூடிவருவதைப்பற்றிய ஏராளமான தீர்க்கதரிசனங்கள் இதில் அடங்கும்.

நான் கூடுகைபற்றி படித்தேன், அதைப்பற்றி ஜெபித்தேன், தொடர்புடைய ஒவ்வொரு வசனத்தையும் ருசித்தேன், என் புரிதலை அதிகரிக்க கர்த்தரிடம் கேட்டேன்.

எனவே, சமீபத்தில் நான் ஒரு புதிய உள்ளுணர்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது என் மகிழ்ச்சியை கற்பனை செய்து பாருங்கள். இரண்டு எபிரேய அறிஞர்களின் உதவியுடன், இஸ்ரேல் என்ற வார்த்தையின் எபிரேய அர்த்தங்களில் ஒன்று “தேவன் மேற்கொள்ளுவாராக” என்று அறிந்தேன்.4 அப்படியாக இஸ்ரேல் என்ற பெயரே, அவன் அல்லது அவளது வாழ்வில் தேவன் மேற்கொள்ள அனுமதிக்க சித்தமாயிருப்பதே. அந்த கருத்து என் ஆத்துமாவைக் கிளர்கிறது!

சித்தமாயிருத்தல் என்ற வார்த்தை,இஸ்ரேல் என்பதன் மொழிபெயர்ப்புக்கு மிகவும் முக்கியமானதாகும்.5 நாமனைவருக்கும் நமது சுயாதீனம் உள்ளது. நாம் இஸ்ரவேலாக இருப்பதை அல்லது இல்லாமலிருப்பதை தேர்ந்தெடுக்கலாம். தேவன் நம் வாழ்வில் மேலோங்க அனுமதிக்கலாமா கூடாதா என நாம் தேர்ந்தெடுக்கலாம். தேவன் நம் வாழ்வில் மிக வல்லமை வாய்ந்த செல்வாக்காக இருக்க அல்லது இல்லாமலிருக்க நாம் தேர்ந்தெடுக்கலாம்.

ஆபிரகாமின் பேரனான யாக்கோபின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையை ஒரு கணம் நினைவு கூர்வோம். பெனியேல் என யாக்கோபு பெயரிட்ட இடத்தில் (அதற்கு “தேவனின் முகம்” என்று அர்த்தம்),6 யாக்கோபு கடுமையான சவாலுடன் மல்யுத்தம் செய்தான். அவனது சுயாதீனம் சோதிக்கப்பட்டது. இந்த மல்யுத்தத்தின் மூலம், யாக்கோபு தனக்கு மிக முக்கியமானது எது என்பதை நிரூபித்தான். தேவன் தனது வாழ்க்கையை மேற்கொள்ள அனுமதிக்க அவன் ஆயத்தமாக இருப்பதை அவன் செயலில் காட்டினான். பதிலாக தேவன் யாக்கோபுவின் பெயரை இஸ்ரவேல் என மாற்றினார், அதற்கு “தேவன் மேற்கொள்ளுவாராக” என்று அர்த்தம்.7 ஆபிரகாமின் தலையில் உச்சரிக்கப்பட்ட எல்லா ஆசீர்வாதங்களும் அவனுடையதாக இருக்கும் என்று தேவன் இஸ்ரவேலுக்கு வாக்குறுதி அளித்தார்.8

துரதிருஷ்டவசமாக, இஸ்ரவேலின் சந்ததியினர் தேவனுடனான உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டனர். அவர்கள் தீர்க்கதரிசிகளை கல்லெறிந்தார்கள், தங்கள் வாழ்க்கையில் தேவன் மேற்கொள்ள அனுமதிக்க அவர்கள் தயாராக இல்லை. அதைத் தொடர்ந்து, தேவன் அவர்களை பூமியின் நான்கு மூலைகளுக்கும் சிதறடித்தார்.9 இரக்கமாக,ஏசாயா அறிவித்தபடி, பின்னர் அவர்களைச் கூட்டிச்சேர்ப்பதாக அவர் உறுதியளித்தார்: “இமைப்பொழுது உன்னைக் [இஸ்ரவேலை] கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.”10

மனதில் இஸ்ரவேலின் எபிரேய விளக்கத்துடன், இஸ்ரவேலின் கூடுகை அதிக அர்த்தம் பெறுகிறது என நாம் காண்கிறோம். தேவன் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ள அனுமதிக்க ஆயத்தமாக உள்ளவர்களை கர்த்தர் கூட்டிச் சேர்க்கிறார். தேவன் தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வாக்குடன் இருக்கத் தேர்ந்தெடுப்பவர்களை கர்த்தர் கூட்டிச்சேர்க்கிறார்.

பல நூற்றாண்டுகளாக, தீர்க்கதரிசிகள் இந்த கூடுகையை முன்னறிவித்துள்ளனர்11 அது இப்போது நடக்கிறது! கர்த்தரின் இரண்டாவது வருகைக்கு ஒரு முக்கிய முன்னோடியாக, இது உலகின் மிக முக்கியமான பணியாகும்!

இந்த ஆயிரம் வருஷத்துக்கு முந்தைய கூடுகை மில்லியன் கணக்கான மக்களுக்கு விசுவாசம் மற்றும் ஆவிக்குரிய தைரியத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு தனிப்பட்ட கதை. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்கள் அல்லது “பிற்கால உடன்படிக்கை இஸ்ரவேலாக” இந்த முக்கிய பணியில் கர்த்தருக்கு உதவுமாறு நமக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.13

திரையின் இருபுறமும் இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்ப்பதைப்பற்றி நாம் பேசும்போது, ஊழியம், ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணிகளைக் குறிப்பிடுகிறோம். நம்முடன் வாழும், வேலை செய்யும், சேவை செய்கிறவர்களின் இருதயங்களில் விசுவாசத்தையும் சாட்சியத்தையும் வளர்ப்பதையும் நாம் குறிப்பிடுகிறோம். எப்போது வேண்டுமானாலும், எக்காரியத்திலும், யாருக்கும், திரையின் இருபுறமும், தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்து காத்துக்கொள்ள உதவுகிறோம், நாம் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க உதவுகிறோம்.

சிறிது காலத்திற்கு முன்பு, எங்கள் பேரன்களில் ஒருவனின் மனைவி ஆவிக்குரிய விதமாக போராடிக் கொண்டிருந்தாள். நான் அவளை “ஜில்” என்று அழைப்பேன். உபவாசம், ஜெபம் மற்றும் ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள் இருந்தபோதிலும், ஜில்லின் தந்தை மரித்துக் கொண்டிருந்தார். அவள் தன் அப்பாவையும் அவளுடைய சாட்சியத்தையும் இழக்க நேரிடும் என்ற பயத்தால் அவள் பிடிக்கப்பட்டாள்.

ஒரு மாலை பிற்பகுதியில், என் மனைவி சகோதரி வென்டி நெல்சன், ஜில்லின் நிலைமையைப்பற்றி என்னிடம் கூறினார். அடுத்த நாள் காலையில் வென்டி, அவளது ஆவிக்குரிய மல்யுத்தத்திற்கு எனது பதில் ஒரு வார்த்தை என்று ஜில்லுடன் பகிர்ந்து கொள்ள உணர்த்தப்பட்டார்! அந்த வார்த்தை கிட்டப்பார்வை.

ஆரம்பத்தில் அவள் என் பதிலால் பேரழிவிற்கு ஆளானதாக ஜில் பின்னர் வென்டியிடம் ஒப்புக்கொண்டாள், அவள் சொன்னாள், “என் அப்பாவுக்கு ஒரு அற்புதத்தை தாத்தா எனக்கு வாக்களிப்பார் என்று நான் நம்பினேன். கிட்டப்பார்வை என்ற வார்த்தையை ஏன் அவர் சொல்ல நிர்பந்திக்கப்பட்டார் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.”

ஜில்லின் தந்தை மரித்த பிறகு, கிட்டப்பார்வை என்ற வார்த்தை அவள் நினைவுக்கு வந்திருக்கிறது. கிட்டப்பார்வை என்பது “அருகிலுள்ள பார்வை” என்று இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள அவள் இருதயத்தைத் திறந்தாள். அவள் சிந்தனை மாறத் தொடங்கியது. ஜில் பின்னர் கூறினாள், “கிட்டப்பார்வை என்னை நிறுத்தவும், சிந்திக்கவும், குணப்படுத்தவும் காரணமாக அமைந்தது. அந்த வார்த்தை இப்போது என்னை சமாதானத்தால் நிரப்புகிறது. இது எனது பார்வையை விரிவுபடுத்தி நித்தியத்தைத் தேட நினைவூட்டுகிறது. ஒரு தெய்வீக திட்டம் உள்ளது என்பதையும், என் அப்பா இன்னும் வாழ்ந்து வருகிறார், நேசிக்கிறார், என்னைத் தேடுகிறார் என்பதையும் இது நினைவூட்டுகிறது. (கிட்டப்பார்வை என்னை தேவனிடத்தில் வழிநடத்தியது.”

எங்கள் விலைமதிப்பற்ற பேத்தியைப்பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தனது வாழ்க்கையில் இந்த இருதயத்தைப் பிழியும் நேரத்தில், அன்புள்ள ஜில் தனது சொந்த வாழ்க்கைக்கான நித்திய கண்ணோட்டத்துடன், தனது அப்பாவுக்கான தேவனின் விருப்பத்தைத் தழுவுவதற்கு கற்றுக் கொண்டிருக்கிறாள். தேவன் மேற்கொள்ள தேர்ந்தெடுப்பதன் மூலம், அவள் சமாதானம் காண்கிறாள்.

நாம் அதை அனுமதித்தால், இஸ்ரவேலின் இந்த எபிரேய மொழிபெயர்ப்பு நமக்கு உதவ பல வழிகள் உள்ளன. நம்முடைய ஊழியக்காரர்களுக்காகவும், இஸ்ரவேலைச் கூட்டிச்சேர்ப்பதற்கான நமது சொந்த முயற்சிகளுக்காகவும் நம்முடைய ஜெபங்கள் இந்த கருத்தை மனதில் கொண்டு எவ்வாறு மாறக்கூடும் என்று கற்பனை செய்து பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் பண்ணப்பட்ட சுவிசேஷத்தின் சத்தியங்களைப் பெறத் தயாராக இருப்பவர்களுக்கு நாமும் ஊழியக்காரர்களும் வழிநடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் அடிக்கடி ஜெபிக்கிறோம். நான் ஆச்சரியப்படுகிறேன், தேவனை தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்ளுமாறு அனுமதிக்க சித்தமாக இருக்கக் கூடியவர்களைக் கண்டுபிடிக்க நாம் கெஞ்சும்போது நாம் யாரிடம் வழிநடத்தப்படுவோம்?

தேவனையோ இயேசு கிறிஸ்துவையோ ஒருபோதும் நம்பாத, ஆனால் இப்போது அவர்களைப்பற்றியும் அவர்களின் மகிழ்ச்சியின் திட்டத்தைப்பற்றியும் அறிய ஆவலுடன் இருக்கிற சிலரிடம் நாம் வழிநடத்தப்படலாம். மற்றவர்கள் உடன்படிக்கையில் பிறந்திருக்கலாம், 14ஆனால் அப்போதிலிருந்து உடன்படிக்கையின் பாதையிலிருந்து விலகியிருக்கலாம். அவர்கள் இப்போது மனந்திரும்பவும், திரும்பிவரவும், தேவன் மேற்கொள்ள அனுமதிக்கவும் தயாராக இருக்கக்கூடும். திறந்த கரங்கள் மற்றும் இருதயங்களுடன் அவர்களை வரவேற்பதன் மூலம் நாம் அவர்களுக்கு உதவ முடியும். நாம் வழிநடத்தப்படக்கூடிய சிலர் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றைக் காணவில்லை என்று எப்போதும் உணர்ந்திருக்கலாம். அவர்களும், தங்கள் வாழ்க்கையில் தேவனை மேற்கொள்ள அனுமதிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு வரும் முழுமையையும் மகிழ்ச்சியையும் எதிர்பார்க்கிறார்கள்.

சிதறிய இஸ்ரவேலைக் கூட்டிச்சேகரிப்பதற்கான சுவிசேஷ வலை விரிவானது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் இடமுண்டு. பிறப்பால் அல்லது தத்தெடுப்பதன் மூலம், ஒவ்வொரு மனமாறுபவரும் தேவனின் உடன்படிக்கை பிள்ளைகளில் ஒருவராகிறார்.15 இஸ்ரவேலின் உண்மையுள்ள பிள்ளைகளுக்கு தேவன் வாக்குறுதி அளித்த அனைத்திற்கும் ஒவ்வொருவரும் முழு வாரிசாகின்றனர்!16

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தெய்வீக ஆற்றல் உள்ளது, ஏனெனில் ஒவ்வொருவரும் தேவனின் பிள்ளை. ஒவ்வொருவரும் அவருடைய பார்வையில் சமம். இந்த சத்தியத்தின் தாக்கங்கள் ஆழமானவை. சகோதர சகோதரிகளே, நான் சொல்லப்போகும் விஷயங்களை கவனமாகக் கேளுங்கள். தேவன் ஒரு இனத்தை, மற்றொரு இனத்தை விட அதிகமாக நேசிப்பதில்லை. இந்த விஷயத்தில் அவரது கோட்பாடு தெளிவாக உள்ளது. “வெள்ளையனாகிலும், கருப்பனாகிலும், அடிமையாகிலும், சுதந்தரவாளியாகிலும், ஆணாகிலும் பெண்ணாகிலும்,” அவரண்டையில் வர அவர் அனைவரையும் வரவேற்கிறார்.17

தேவனுக்கு முன்பாக நீங்கள் நிற்பது உங்கள் சருமத்தின் நிறத்தால் தீர்மானிக்கப்படவில்லை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தேவனிடம் அனுகூலம் அல்லது அனுகூலமின்மை என்பது தேவன் மீதும் அவருடைய கட்டளைகளுடனுமான உங்கள் அர்ப்பணிப்பைப் பொறுத்தது, உங்கள் சருமத்தின் நிறத்தை அல்ல.

உலகெங்கிலும் உள்ள எங்கள் கறுப்பின சகோதர சகோதரிகள் இனவெறி மற்றும் பாரபட்சத்தின் வலிகளைத் தாங்குகிறார்கள் என்று நான் வருத்தப்படுகிறேன். பாரபட்சத்தின் அணுகுமுறைகளையும் செயல்களையும் கைவிடுவதில் முன்னிலை வகிக்க இன்று எல்லா இடங்களிலும் உள்ள நமது அங்கத்தினர்களை நான் அழைக்கிறேன். தேவனின் பிள்ளைகள் அனைவருக்கும் மரியாதை அளிக்குமாறு நான் உங்களிடம் மன்றாடுகிறேன்.

இனம் எதுவாக இருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கேள்வி ஒன்றுதான். நீங்கள் உங்கள் வாழ்க்கையை தேவன் மேற்கொள்ள அனுமதிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வாக்கு, தேவனாக இருக்க அனுமதிக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் செயல்களில் செல்வாக்கு செலுத்த அவருடைய வார்த்தைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய உடன்படிக்கைகளையும் அனுமதிப்பீர்களா? அவருடைய குரல் வேறு எதையும் விட முன்னுரிமை பெற அனுமதிப்பீர்களா? அவர் நீங்கள் செய்ய விரும்புவற்கு மற்ற எல்லா லட்சியங்களுக்கும் மேலாக முன்னுரிமை அளிக்க நீங்கள் சித்தமாக இருக்கிறீர்களா? உங்கள் விருப்பம் அவரது சித்தத்தால் விழுங்கப்படுவதற்கு நீங்கள் சித்தமாக இருக்கிறீர்களா?18

அத்தகைய விருப்பம் உங்களை எவ்வாறு ஆசீர்வதிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளவும். நீங்கள் திருமணமாகாதவர் மற்றும் நித்திய இணையைத் தேடுகிறீர்களானால், “இஸ்ரவேலில்” இருப்பதற்கான உங்கள் விருப்பம் யாரோடு, எப்படி பழகுவீர்கள் என்பதைத் தீர்மானிக்க உதவும்.

உடன்படிக்கைகளை மீறிய ஒரு இணையை நீங்கள் திருமணம் செய்திருந்தால், உங்கள் வாழ்க்கையில் தேவன் மேற்கொள்ள அனுமதிக்க உங்கள் விருப்பம் தேவனுடனான உங்கள் உடன்படிக்கைகள் அப்படியே இருக்க அனுமதிக்கும். உங்கள் நொறுங்கிய இருதயத்தை இரட்சகர் குணப்படுத்துவார். நீங்கள் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதை அறிய முற்படும்போது பரலோகம் திறக்கும். நீங்கள் அலையவோ ஆச்சரியப்படவோ தேவையில்லை.

நீங்கள் சுவிசேஷத்தைப்பற்றியோ அல்லது சபையைப்பற்றியோ உண்மையான கேள்விகள் வைத்திருந்தால், தேவன் மேற்கொள்ள அனுமதிக்க நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும், உடன்படிக்கை பாதையில் உறுதியாக இருக்க உதவும் முழுமையான, நித்திய சத்தியங்களைக் கண்டுபிடித்து புரிந்துகொள்ள நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள்.

நீங்கள் சோதனையை எதிர்கொள்ளும்போது, நீங்கள் சோர்வாக இருக்கும்போது அல்லது தனியாக உணரும்போது அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்படும்போது கூட சோதனையானது வந்தாலும், தேவன் உங்கள் வாழ்க்கையில் மேற்கொள்ள அனுமதிக்கும்போது, உங்களை பலப்படுத்தும்படி அவரிடம் மன்றாடும்போது நீங்கள் பெறக்கூடிய தைரியத்தை கற்பனை செய்து பாருங்கள்.

இஸ்ரவேலின் ஒரு பகுதியாக இருக்க, தேவன் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே உங்கள் மிகப்பெரிய விருப்பமாக இருக்கும்போது, பல முடிவுகள் எளிதாகின்றன. பல சிக்கல்கள் இல்லாமல் போகின்றன! உங்களை எப்படி அலங்கரிப்பது என்பது உங்களுக்குத் தெரியும். எதைப் பார்ப்பது, படிப்பது, உங்கள் நேரத்தை எங்கு செலவிடுவது, யாருடன் தொடர்பிலிருப்பது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் உண்மையிலேயே ஆக விரும்பும் அந்த விதமான நபரை நீங்கள் அறிவீர்கள்.

இப்போது, என் அன்பான சகோதர சகோதரிகளே, தேவன் மேற்கொள்ள அனுமதிக்க விசுவாசமும் தைரியமும் தேவை. இயேசுவின் பாவநிவிர்த்தி மூலம் மனந்திரும்புவதற்கும் சுபாவ மனிதனை விலக்குவதற்கும் தொடர்ச்சியான, கடுமையான ஆவிக்குரிய பணி தேவைப்படுகிறது19 சுவிசேஷத்தைப் படிப்பதற்கும், பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவைப்பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கும், தனிப்பட்ட வெளிப்பாடுகளைத் தேடுவதற்கும் பதிலளிப்பதற்கும் தனிப்பட்ட பழக்கங்களை வளர்த்துக் கொள்ள நிலையான, தினசரி முயற்சி தேவைப்படுகிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் தீர்க்கதரிசனம் கூறிய இந்த ஆபத்தான காலங்களில்,20தேவனின் திட்டத்தின் மீதான தாக்குதல்களை மறைக்க சாத்தான் இப்போது முயற்சிக்கவில்லை. துணிச்சலான தீமை நிறைந்துள்ளது. ஆகையால், ஆன்மீக ரீதியில் பிழைப்பதற்கான ஒரே வழி, தேவன் நம் வாழ்வில் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும், அவருடைய குரலைக் கேட்க கற்றுக்கொள்ளுங்கள், இஸ்ரேலைக் கூட்டிச்சேர்க்க நமது சக்தியைப் பயன்படுத்த வேண்டும்.

இப்போது, தேவன் மேற்கொள்ள அனுமதிக்கும் ஜனங்களைப்பற்றி தேவன் எப்படி உணருகிறார்? நேபி அதை சுருக்கமாகக் கூறினான்: அவரைத் தங்கள் தேவனாகக் கொண்டிருப்பவர்களை“ [கர்த்தர்] நேசிக்கிறார். இதோ, அவர் நமது பிதாக்களை நேசித்தார், அவர்களுடன் உடன்படிக்கை செய்தார், ஆம், ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுடன் கூட, அவர் செய்த உடன்படிக்கைகளை அவர் நினைவில் கொள்கிறார்.”21

இஸ்ரவேலுக்காக என்ன செய்ய கர்த்தர் விரும்புகிறார்? அவர் “[நமது] யுத்தங்களையும், [நமது] பிள்ளைகளின் யுத்தங்களையும், நம் பிள்ளைகளின் பிள்ளைகளின் [யுத்தங்களையும்]… மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறையினருக்காக யுத்தம் செய்வார்” என்று கர்த்தர் உறுதியளித்துள்ளார்!22

அடுத்த ஆறு மாதங்களில் நீங்கள் உங்கள் வேதங்களைப் படிக்கும்போது, உடன்படிக்கையின் இஸ்ரவேலுக்காக அவர் செய்வார் என்று கர்த்தர் வாக்குறுதியளித்த அனைத்தையும் பட்டியலிட நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் திகைத்துப் போவீர்கள் என்று நினைக்கிறேன்! இந்த வாக்குறுதிகளை சிந்தித்துப் பாருங்கள். உங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் அவர்களைப்பற்றி பேசுங்கள். இந்த வாக்குறுதிகள் உங்கள் சொந்த வாழ்க்கையில் நிறைவேறுவதை வாழ்ந்து காணுங்கள்.

என் அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் வாழ்க்கையை தேவன் மேற்கொள்ள நீங்கள் தேர்வு செய்யும்போது, நமது தேவன் “அற்புதங்களின் தேவன்” என்பதை நீங்களே அனுபவிப்பீர்கள்.23 ஒரு ஜனமாக நாம் அவருடைய உடன்படிக்கை பிள்ளைகள், அவருடைய பெயரால் அழைக்கப்படுவோம். இதைப்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. ஒரு அப்போஸ்தலராக எனது 36 ஆண்டுகளில் நான் வழங்கிய 800 க்கும் மேற்பட்ட செய்திகளில் குறைந்தது 378 ல் இஸ்ரவேலைப்பற்றி பேசியிருக்கிறேன்.

  2. எபிரேய மொழியில், ஆபிராம் என்பது ஒரு உயர்ந்த பெயர், அதாவது “உயர்ந்த தந்தை”. ஆனால் தேவன் அந்த பெயரை ஆபிரகாம், என மாற்றியபோது, இந்த பெயர் இன்னும் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றது, அதாவது “ஒரு கூட்டத்தின் தகப்பன்”. உண்மையில், ஆபிரகாம் “பல தேசங்களின் தகப்பன்” ஆக இருக்க வேண்டும். (ஆதியாகமம் 17:5, நெகேமியா 9:7.)

  3. கர்த்தராகிய தேவனாகிய யேகோவா ஆபிரகாமுடன் ஒரு உடன்படிக்கை செய்தார், உலக மீட்பர் ஆபிரகாமின் சந்ததியினூடாக பிறப்பார், சில தேசங்கள் சுதந்தரித்துக் கொள்ளப்படும். மற்றும் அனைத்து தேசங்களும் ஆபிரகாமின் பரம்பரை மூலம் ஆசீர்வதிக்கப்படும் (see Bible Dictionary, “Abraham, covenant of”).

  4. Bible Dictionary, “Hallelujah பார்க்கவும்.

  5. இஸ்ரவேல் என்ற வார்த்தை வேதங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை காணப்படுகிறது. இது யாக்கோபின் (இஸ்ரவேலின்) பன்னிரண்டு மகன்களின் குடும்பத்திற்கும், மகள்களுக்கும் பொருந்தும்(ஆதியாகமம் 35: 23–26; 46: 7 பார்க்கவும்). இன்று இது பூமியிலுள்ள ஒரு இடமாக புவியியல் ரீதியாகப் பொருந்தலாம். ஆனால் அதன் கோட்பாடு பயன்பாடு தேவன் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்ள அனுமதிக்க விரும்பும் ஜனங்களுக்கு பொருந்தும்.

  6. ஆதியாகமம் 32:30பார்க்கவும்; ஆதியாகமம் 32:31ல் பெனுவேல் எனவும் உச்சரிக்கப்படுகிறது.

  7. ஆதியாகமம் 32:28 பார்க்கவும்.

  8. ஆதியாகமம் 35:11–12 பார்க்கவும்.

  9. மேலதிக படிப்புக்கு, Topical Guide,“Israel, Scattering of”பார்க்கவும்.“

  10. ஏசாயா 54:7.

  11. ஏசாயா 11:11–12; 2 நேபி 21:11–12; மோசியா 15:11 பார்க்கவும்.

  12. Encyclopedia of Mormonism (1992), “Covenant Israel, Latter-Day,” 1:330–31 பார்க்கவும்.

  13. இஸ்ரவேலின் கூடுகையில் நாம் பங்கேற்கும்போது, கூடிவந்தவர்களை விவரிக்கும் ஒரு அற்புதமான வழி கர்த்தருக்கு உண்டு. அவர் நம்மை “சொந்த சம்பத்து,”என மொத்தமாக குறிப்பிட்டார். (யாத்திராகமம் 19:5; சங்கீதம் 135:4), தன் “சம்பத்து” (மல்கியா 3:17; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:3), “பரிசுத்த ஜாதி” (யாத்திராகமம் 19:6; உபாகமம் 14:2; 26:18)ஐயும் பார்க்கவும்.

  14. தேவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை, “உம்முடைய சந்ததியினாலே பூமியிலுள்ள எல்லா ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என இந்த சொற்றொடர் கூறுகிறது (3 நேபி 20:27). “உடன்படிக்கையில் பிறந்தவர்” என்பது ஒரு நபர் பிறப்பதற்கு முன்பு, அந்த நபரின் தாயும் தந்தையும் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டுள்ளனர் என்பதாகும்.

  15. அத்தகைய வாக்குறுதியை தேவன் ஆபிரகாமுக்குக் கற்பித்தார்: “இந்த சுவிசேஷத்தைப் பெறுபவர்கள் உனது நாமத்தினாலே அழைக்கப்படுவார்கள், உனது சந்ததியினராகக் கருதப்படுவார்கள், எழுந்து உன்னை ஆசீர்வதிப்பார்கள்; (ஆபிரகாம் 2:10; ரோமர் 8:14–17; கலாத்தியர் 3:26–29ஐயும் பார்க்கவும்).

  16. ஒவ்வொரு விசுவாசமிக்க அங்கத்தினரும் கோத்திர பிதா ஆசீர்வாதத்தை கோரலாம். பரிசுத்த ஆவியின் தூண்டுதலின் மூலம், கோத்திரபிதா அந்த நபரின் இஸ்ரவேல் வீட்டாரின் கோத்திரத்தை அறிவிக்கிறார். அந்த அறிவிப்பு அவரது இனம், தேசியம் அல்லது மரபணு ஒப்பனை ஆகியவற்றின் அறிவிப்பு அல்ல. மாறாக, அறிவிக்கப்பட்ட வம்சாவளி இஸ்ரவேலின் கோத்திரத்தை அடையாளம் காட்டுகிறது, இதன் மூலம் அந்த நபர் தனது ஆசீர்வாதங்களைப் பெறுவார்.

  17. 2 நேபி 26:33.

  18. மோசியா 15:7 பார்க்கவும். இஸ்ரவேலாக இருப்பது இருதயத்தின் மயக்கத்திற்காக அல்ல. ஆபிரகாமின் சந்ததியினருக்காக தேவன் வைத்திருக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் பெற, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தனித்துவமான “ஆபிரகாமிய சோதனை” வழங்கப்படுவோம் என்று எதிர்பார்க்கலாம். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கற்பித்தபடி, நம்முடைய இருதயங்களைப் பிழிவதன் மூலம் தேவன் நம்மை சோதிப்பார். (recollection of John Taylor, in Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 231 பார்க்கவும்.)

  19. மோசியா 3:19 பார்க்கவும்.

  20. 2 தீமோத்தேயு 3:1–13 பார்க்கவும்.

  21. 1 நேபி 17:40; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  22. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98:37; சங்கீதம் 31:23; ஏசாயா 49:25; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 105:14.

  23. மார்மன் 9:11.