பொது மாநாடு
நான் தூதர்களை நம்புகிறேன்
அக்டோபர் 2020 பொது மாநாடு


10:45

நான் தூதர்களை நம்புகிறேன்

நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை கர்த்தர் அறிவார். அவர் உங்களை அறிவார், அவர் உங்களை நேசிக்கிறார், நான் உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்கிறேன், அவர் உங்களுக்கு உதவ தூதர்களை அனுப்புவார்.

சகோதர சகோதரிகளே, நான் தூதர்களை நம்புகிறேன், அவர்களுடன் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவ்வாறு செய்யும்போது, நம் வாழ்வில் தூதர்களின் முக்கியத்துவத்தை நாம் அங்கீகரிப்போம் என்று நம்புகிறேன், ஜெபிக்கிறேன்.

மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலன்டின் கடந்த பொது மாநாட்டிலிருந்து வார்த்தைகள் இதோ: “தேவனின் கையில் கருவியாக இருப்பவர்களைப்பற்றி நாம் பேசும்போது, எல்லா தூதர்களும் திரையின் மறுபக்கத்திலிருந்து வந்தவர்கள் அல்ல என்பதை நினைவூட்டப்படுகிறோம். அவர்களில் சிலருடன் நாம் நடக்கிறோம், பேசுகிறோம், இங்கே, இப்போது, ஒவ்வொரு நாளும். அவர்களில் சிலர் நமது சொந்த சுற்றுப்புறங்களில் வசிக்கிறார்கள். … உண்மையில், தூதர் போன்று மட்டுமே நினைவுக்கு வருகிற, மிகவும் நல்ல, அதிக சுத்தமான தேவனின் அன்பு ஜனங்களின் தயவிலும் அர்ப்பணிப்பிலும் வெளிப்படுவதைக் காட்டிலும் பரலோகம் ஒருபோதும் நெருக்கமாகத் தெரியவில்லை,”(“The Ministry of Angels,” Liahona, Nov. 2008, 30).

திரையின் இந்த பக்கத்தில் உள்ள தூதர்களைப்பற்றி நான் பேச விரும்புகிறேன். நம் அன்றாட வாழ்க்கையில் நம்மிடையே நடக்கும் தூதர்கள் தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பின் சக்திவாய்ந்த நினைவூட்டல்கள்.

நான் குறிப்பிடும் முதல் தூதர்கள், நான் ஒரு இளைஞனாக இருந்தபோது எனக்கு சுவிசேஷம் கற்பித்த இரண்டு சகோதரி ஊழியக்காரிகள்: சகோதரி வில்மா மோலினா மற்றும் சகோதரி ஐவோனெட் ரிவிட்டி. நானும் என் தங்கையும் ஒரு சபை நிகழ்வுக்கு அழைக்கப்பட்டோம், அங்கு நாங்கள் இந்த இரண்டு தூதர்களை சந்தித்தோம். அந்த எளிய செயல்பாடு என் வாழ்க்கையை இவ்வளவு மாற்றும் என்று நான் நினைத்ததில்லை.

என் பெற்றோரும் உடன்பிறப்புகளும் அந்த நேரத்தில் சபையைப்பற்றி அதிகமாய் அறிய ஆர்வம் காட்டவில்லை. எங்கள் வீட்டுக்கு ஊழியக்காரிகள் வருவதைக் கூட அவர்கள் விரும்பவில்லை, எனவே நான் ஒரு சபை கட்டிடத்தில் ஊழியக்காரர் பாடங்களை படித்தேன். சபையின் அந்த சிறிய அறை என் “பரிசுத்த தோப்பு” ஆனது.

இளம் மூப்பர் கோடோய் தன் சகோதரியுடன்

இந்த தூதர்கள் என்னை சுவிசேஷத்திற்கு அறிமுகப்படுத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு, நான் ஞானஸ்நானம் பெற்றேன். எனக்கு 16 வயதாயிருந்தது. துரதிருஷ்டவசமாக, அந்த பரிசுத்த நிகழ்வின் படம் என்னிடம் இல்லை, ஆனால் அந்தச் செயலில் நாங்கள் பங்கேற்ற நேரத்தில் எடுத்த எனது சகோதரி மற்றும் என்னுடைய படம் என்னிடம் உள்ளது. இந்த படத்தில் இருப்பது யார் யார் என்பதை நான் தெளிவுபடுத்த வேண்டியிருக்கலாம். நான் வலதுபுறத்தில் உயரமானவன்.

நீங்கள் நினைத்துப் பார்க்கிறபடி, சபையில் ஆர்வமாக இருப்பது ஒரு இளைஞனுக்கு சவாலாக இருந்தது, அவனது வாழ்க்கை முறை இப்போது மாறிவிட்டது, அவனுடைய குடும்பம் அதே பாதையில் செல்லவில்லை.

எனது புதிய வாழ்க்கையை, ஒரு புதிய கலாச்சாரம் மற்றும் புதிய நண்பர்களுடன் நான் அனுசரிக்க முயற்சிக்கையில், நான் பொருத்தமற்றவனாக உணர்ந்தேன். நான் தனிமையாக உணர்ந்தேன், பல முறை தைரியமிழந்தேன். சபை உண்மை என்று எனக்குத் தெரியும், ஆனால் அதன் ஒரு பகுதியை நான் உணர்வது கடினமாயிருந்தது. எனது புதிய மதத்துடன் பொருந்த முயற்சித்தபோது சௌகரியமின்றியும், நிச்சயமற்றதாகவும் இருந்தபோதிலும், மூன்று நாள் இளைஞர் மாநாட்டில் பங்கேற்க தைரியம் கிடைத்தது, இது புதிய நண்பர்களை பெற எனக்கு உதவும் என்று நினைத்தேன். மொனிகா பிராண்டோ என்ற பெயருள்ள மற்றொரு இரட்சிக்கும் தூதரை நான் சந்தித்த நேரம் அது.

சகோதரி கோடோய்

பிரேசிலின் மற்றொரு பகுதியிலிருந்து குடிபெயர்ந்த அவர் இப்பகுதியில் புதியவர். அவள் விரைவாக என் கவனத்தை ஈர்த்தாள், அதிர்ஷ்டவசமாக என்னை ஒரு நண்பனாக ஏற்றுக்கொண்டாள். அவள் என்னை வெளிப்புறமாய் பார்த்ததை விட உள்ளே இருந்து அதிகம் பார்த்தாள் என்று நினைக்கிறேன்.

அவள் என்னுடன் நட்பு கொண்டிருந்ததால், நான் அவளுடைய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன், பின்னர் நான் கலந்துகொண்ட பல இளைஞர் நிகழ்ச்சிகளை நாங்கள் ரசித்ததால் அவர்கள் என் நண்பர்களாக ஆனார்கள். இந்த புதிய வாழ்க்கையில் எனது ஒருங்கிணைப்புக்கு அந்த நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமானவை.

மூப்பர் கோடோயின் நண்பர்கள்

இந்த நல்ல நண்பர்கள் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தினர், ஆனால் ஒரு ஆதரவான குடும்பத்துடன் எனது வீட்டில் சுவிசேஷம் கற்பிக்கப்படாதது எனது தற்போதைய மனமாற்ற முறையை இன்னும் ஆபத்தில் ஆழ்த்தியது. சபையில் எனது சுவிசேஷ தொடர்புகள் எனது அதிகரித்து வரும் மனமாற்றத்திற்கு இன்னும் முக்கியமானவை. பின்னர், இரண்டு கூடுதல் தூதர்கள் கர்த்தரால் உதவிக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் எனது அதிகாலை வேத பாட வகுப்பு ஆசிரியரான, லெடா வெட்டோரி. அன்பை ஏற்றுக்கொள்வதன் மூலமும், எழுச்சியூட்டும் வகுப்புகளின் மூலமாகவும், “தேவனின் நல்ல வார்த்தையின்” (மரோனி 6: 4) தினசரி அளவை அவர் எனக்குக் கொடுத்தார், இது என் நாள் முழுவதற்கும் மிகவும் தேவைப்பட்டது. இது தொடர்ந்து செல்ல ஆவிக்குரிய வலிமையைப் பெற எனக்கு உதவியது.

எனக்கு உதவ அனுப்பப்பட்ட மற்றொரு தூதர் இளம் ஆண்கள் தலைவர் மார்கோ அன்டோனியோ புஸ்கோ ஆவார். அவர் எனது மூத்த வீட்டுப் போதக தோழராகவும் பணிக்கப்பட்டார். எனது அனுபவமின்மை மற்றும் வித்தியாசமான தோற்றம் இருந்தபோதிலும், எங்கள் ஆசாரியர் குழுமம் கூட்டங்கள் மற்றும் வீட்டு போதகம் கற்பிப்பதற்கான பணிகளை அவர் எனக்குக் கொடுத்தார். சுவிசேஷத்தைக் கவனிப்பவராக இல்லாமல், செயல்படவும் கற்றுக்கொள்ளவும் அவர் எனக்கு வாய்ப்பு அளித்தார். நான் என்னை நம்பியதை விட அவர் என்னை அதிகம் நம்பினார்.

இந்த தூதர்கள் அனைவருக்கும், அந்த முக்கியமான ஆரம்ப ஆண்டுகளில் நான் சந்தித்த பலருக்கும் நன்றி, நான் சத்தியத்தின் ஆவிக்குரிய சாட்சியைப் பெற்றதால் உடன்படிக்கைப் பாதையில் இருக்க எனக்கு போதுமான பலம் கிடைத்தது.

அவ்வாறே, அந்த இளம்பெண் தூதர், மொனிகா? நாங்கள் இருவரும் ஊழியம் செய்தபின், அவள் என் மனைவியானாள்.

நல்ல நண்பர்கள், சபை பொறுப்புகள் மற்றும் தேவனின் நல்ல வார்த்தையால் போஷிக்கப்படுவது அந்த செயல்முறையின் ஒரு பகுதிதான், தற்செயல் நிகழ்வு என்று நான் நினைக்கவில்லை. தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி ஞானமாகப் போதித்தார்: “இந்த சபையில் சேருவதற்கான மாறுதல் நேரத்தை உருவாக்குவது எளிதான விஷயம் அல்ல. பழைய உறவுகளை வெட்டுவது என்பது இதன் பொருள். நண்பர்களை விட்டு விலகுவது என்பது இதன் பொருள். ஏற்றுக்கொண்ட நம்பிக்கைகளை ஒதுக்கி வைப்பதை இதன் பொருளாயிருக்கலாம். இதற்கு பழக்கவழக்கங்களின் மாற்றம் மற்றும் பசியை அடக்குதல் தேவைப்படலாம். பல சந்தர்ப்பங்களில் இதற்கு தனிமை மற்றும் தெரியாததைப்பற்றிய பயம் என்று பொருள். மனமாறியவரின் வாழ்க்கையின் இந்த கடினமான பருவத்தில் போஷிப்பும் பலப்படுத்துவதும் இருக்க வேண்டும்” (“There Must Be Messengers,” Ensign, Oct. 1987, 5).

பின்னர் அவர் மேலும் கூறினார், “அவர்களில் ஒவ்வொருவருக்கும் மூன்று விஷயங்கள் தேவை: ஒரு நண்பர், ஒரு பொறுப்பு, மற்றும் ‘தேவனின் நல்ல வார்த்தையால்’ போஷிக்கப்படுதல்.” (“Converts and Young Men,” Ensign, May 1997, 47).

இந்த அனுபவங்களை நான் ஏன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்?

முதலாவதாக, இதே போன்ற செயல்பாட்டில் இருப்பவர்களுக்கு இப்போதே ஒரு செய்தியை அனுப்ப வேண்டும். ஒருவேளை நீங்கள் ஒரு புதிய மனமாறியவராக இருக்கலாம், அல்லது சிறிது நேரம் அலைந்து திரிந்தபின் மீண்டும் சபைக்கு வருகிறவராக இருக்கலாம், அல்லது பொருத்தமாக இருக்க போராடுபவராயிருக்கலாம். தயவுசெய்து, தயவுசெய்து, இந்த பெரிய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான உங்கள் முயற்சிகளை விட்டுவிடாதீர்கள். இது இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபை.

உங்கள் மகிழ்ச்சியும் மற்றும் இரட்சிப்பும் வரும்போது, தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருப்பது எப்போதும் மதிப்புக்குரியது. உங்கள் வாழ்க்கை முறை மற்றும் மரபுகளை அனுசரிக்க முயற்சிப்பது மதிப்புடையது. நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை கர்த்தர் அறிவார். அவர் உங்களை அறிவார், அவர் உங்களை நேசிக்கிறார், நான் உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்கிறேன், அவர் உங்களுக்கு உதவ தூதர்களை அனுப்புவார்.

இரட்சகர் தம்முடைய வார்த்தைகளில் சொன்னார்: “நான் உன் முகத்தின் முன் செல்வேன். நான் உன் வலது புறத்திலும் இடது புறத்திலும் இருப்பேன்,… என் ஆவி உன் [இருதயத்தில்]இருக்கும், உன்னைச் சுமக்க என் தூதர்கள் உன்னைச் சுற்றி இருப்பார்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:88).

இந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான எனது இரண்டாவது நோக்கம், சபையின் அனைத்து அங்கத்தினர்களுக்கும், நம் அனைவருக்கும் ஒரு செய்தியை அனுப்புவதாகும். புதிதாக மனமாறியவர்களுக்கு, திரும்பி வரும் நண்பர்கள் மற்றும் வித்தியாசமான வாழ்க்கை முறையை உடையவர்கள் உடனடியாக பொருந்துவது எளிதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கர்த்தர் அறிந்திருக்கிறார், உதவி செய்யத் தயாராக இருக்கும் தூதர்களை அவர் தேடுகிறார். கர்த்தர் எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கையில் தூதர்களாக இருக்க விருப்பமுள்ள தொண்டர்களைத் தேடுகிறார்.

சகோதர சகோதரிகளே, நீங்கள் கர்த்தருடைய கைகளில் ஒரு கருவியாக இருக்க விரும்புகிறீர்களா? இந்த தூதர்களில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா? தேவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதராக இருக்க, திரையின் இந்த பக்கத்திலிருந்து, அவர் கவலைப்படுகிற ஒருவருக்காக? அவருக்கு நீங்கள் தேவை. அவர்களுக்கு நீங்கள் தேவை.

நிச்சயமாக, நாம் எப்போதும் நம் ஊழியக்காரர்களை நம்பலாம். அவர்கள் எப்போதும் அங்கு இருக்கிறார்கள், இந்த தூதர் வேலைக்கு முதலில் பெயர் கொடுப்பவர்கள். ஆனால் அவர்கள் மட்டும் போதாது.

நீங்கள் கவனமாக உங்களைச் சுற்றிலும் நோக்கினால், தூதரின் உதவி தேவைப்படும் பலரைக் காண்பீர்கள். இவர்கள் வெள்ளை சட்டை, ஆடைகள் அல்லது எந்தவொரு தரமான ஞாயிற்றுக்கிழமை உடையும் அணியாமலிருக்கலாம். அவர்கள் தனியாக உட்கார்ந்திருக்கலாம், கூடுமிடத்தின் அல்லது வகுப்பறையின் பின்புறம், சில நேரங்களில் அவர்கள் கண்ணுக்கு தெரியாதது போல் உணரலாம். ஒருவேளை அவர்களின் சிகை அலங்காரம் கொஞ்சம் வித்தியாசமானதாக அல்லது அவர்களின் வார்த்தை வேறுபட்டதாக இருக்கலாம், ஆனால் அவர்கள் அங்கே இருக்கிறார்கள், அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

சிலர் ஆச்சரியப்படலாம், “நான் திரும்பி வர வேண்டுமா? நான் தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமா? ” மற்றவர்கள் ஒரு நாள் ஏற்றுக்கொள்ளப்படுவதையும் நேசிப்பதையும் உணருவார்களா என்று யோசித்துக்கொண்டிருக்கலாம். தூதர்கள் தேவை, இப்போதே; அவர்களை அரவணைக்க தங்கள் சௌகரிய மண்டலத்தை விட்டு விலக தயாராயிருக்கும் அந்த தூதர்கள். “தூதர் போன்ற” என்ற ஒரே வார்த்தை மட்டும் [அவர்களை விவரிக்க] மனதுக்கு வரும் [ஜனங்கள்]” (Jeffrey R. Holland, “The Ministry of Angels,” 30).

சகோதர சகோதரிகளே, நான் தூதர்களை நம்புகிறேன்! அன்பான சிருஷ்டிகரின் கைகளின் நீட்சியாக மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்காக, இந்த பிற்காலத்தில் பணிக்கப்பட்ட ஒரு பெரிய தூதர்களின் சேனையாக இன்று நாம் அனைவரும் இங்கே இருக்கிறோம். நாம் சேவை செய்யத் தயாராக இருந்தால், தூதர்களாக ஊழியம் செய்ய கர்த்தர் நமக்கு வாய்ப்பளிப்பார் என்று நான் உறுதியளிக்கிறேன். யாருக்கு தூதர்களின் உதவி தேவை என்பதை அவர் அறிவார், அவர் அவர்களை நம் பாதையில் வைப்பார். தூதர்களின் உதவி தேவைப்படுபவர்களை தினமும் நம் பாதையில் கர்த்தர் நிறுத்துகிறார்.

என் வாழ்நாள் முழுவதும் கர்த்தர் என் பாதையில் வைத்திருக்கும் பல தூதர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் தேவைப்பட்டார்கள். அவருடைய சுவிசேஷத்துக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், அது நம்மை மாற்ற உதவுகிறது, மேலும் சிறப்பாக இருக்க வாய்ப்பளிக்கிறது.

இது அன்பின் சுவிசேஷம், ஊழியத்தின் சுவிசேஷம். இதைப்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.