முன்னோக்கிச் செல்லுதல்
கர்த்தருடைய பணி சீராக முன்னேறி வருகிறது.
என் அன்பான சகோதர சகோதரிகளே, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 190 வது அரையாண்டு பொது மாநாட்டைத் தொடங்கும்போது உங்களுடன் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி . உங்கள் வீடுகளில் அல்லது நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் சேர்ந்து தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள், வெளிப்படுத்துபவர்கள் மற்றும் பிற சபைத் தலைவர்களின் செய்திகளை ஒன்றாகக் கேட்க நான் விரும்புகிறேன்.
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களின் உலகளாவிய ஒரு பெரிய கூட்டமாக நம்மை இணைக்க அனுமதிக்கும் தொழில்நுட்பத்திற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். கடந்த ஏப்ரல் மாத பொது மாநாடு அதற்கு முந்தைய எப்போதையும் விட அதிகமான மக்களால் பார்க்கப்பட்டது, அது மீண்டும் நடக்கும் என்று ஒவ்வொரு எதிர்பார்ப்பும் எங்களுக்கு உள்ளது.
கடந்த சில மாதங்களில், உலகளாவிய தொற்றுநோய், கர்ஜனை செய்யும் காட்டுத் தீ மற்றும் பிற இயற்கை பேரழிவுகள் நம் உலகத்தை தலைகீழாக மாற்றிவிட்டன. இந்த நேரத்தில் அன்பான ஒருவரை இழந்த உங்கள் ஒவ்வொருவருடனும் நான் துக்கப்படுகிறேன். தற்போது கஷ்டப்படுகிற அனைவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன்.
அதே சமயத்தில், கர்த்தருடைய பணி சீராக முன்னேறி வருகிறது. சமூக விலகல், முகமூடிகள் மற்றும் ஜூம் கூட்டங்களுக்கு இடையில், சில காரியங்களை வித்தியாசமாகவும், சிலவற்றை இன்னும் திறம்படவும் செய்ய கற்றுக்கொண்டோம். வழக்கத்திற்கு மாறான நேரங்கள் வழக்கத்திற்கு மாறான வெகுமதிகளைக் கொண்டுவரலாம்.
நமது ஊழியக்காரர்கள் மற்றும் ஊழியத் தலைவர்கள் வளமான, நெகிழக்கூடிய, உண்மையிலேயே விசேஷித்தவர்கள். பெரும்பாலான ஊழியக்காரர்கள் தங்கள் வேலையைச் செய்ய புதிய, ஆக்கபூர்வமான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியதிருந்தாலும், பல ஊழியங்கள் எப்போதையும் விட அதிக கற்பித்தலைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டன.
நாம் சிறிது காலத்திற்கு ஆலயங்களை மூட வேண்டியதிருந்தது, சில கட்டுமானத் திட்டங்கள் சிறிது தாமதமாகின, ஆனால் இப்போது அவை அனைத்தும் முன்னேறி வருகின்றன. 2020 காலண்டர் ஆண்டில், 20 புதிய ஆலயங்களுக்கான பணிகளை தொடங்கியிருப்போம்!
குடும்ப வரலாற்றுப் பணிகள் அதிவேகமாக அதிகரித்துள்ளன. பல புதிய தொகுதிகளும் பிணையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தொற்றுநோய்க்கான மனிதாபிமான உதவிகளை 150 நாடுகளில் 895 திட்டங்களுக்கு சபை வழங்கியுள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
அநேக வீடுகளில் அதிகரித்த சுவிசேஷ படிப்பு, வலுவான சாட்சியங்கள் மற்றும் குடும்ப உறவுகளுக்கு வழிவகுக்கிறது. ஒரு தாய் எழுதினார்: “நாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஜூமில் கூடிவருவதால் எங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக உணர்கிறோம். ஒவ்வொருவரும் என்னைப் பின்பற்றி வாருங்களைப்பற்றி, தங்கள் எண்ணங்களைக் கொடுக்க முறை எடுத்துக் கொள்கிறார்கள். எங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கான தேவை என்ன என்பதை நாங்கள் நன்கு புரிந்துகொண்டிருப்பதால், அவர்களுடைய ஜெபங்கள் மாறிவிட்டன.”
ஒரு ஜனமாக நாம் இந்த தனித்துவமான நேரத்தை ஆவிக்குரிய ரீதியில் வளர பயன்படுத்த வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற நாம் தேர்ந்தெடுக்கிறோமா என பார்க்க, தவறாமல் மனந்திரும்ப, கற்றுக்கொள்ள, முன்னேற நாம் இங்கே பூமியில் சோதிக்கப்படுகிறோம். நமது ஆத்துமாக்கள் முன்னேற ஏங்குகின்றன. உடன்படிக்கை பாதையில் உறுதியாக இருப்பதன் மூலம் நாம் அதைச் சிறப்பாகச் செய்கிறோம்.
இவை அனைத்தின் மூலமாக, பரலோக பிதாவும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் நம்மை நேசிக்கிறார்கள். அவர்கள் நம்மை கவனித்துக்கொள்கிறார்கள்! அவர்களும் அவர்களுடைய பரிசுத்த தூதர்களும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் 1 அது உண்மையென நான் அறிவேன்.
கர்த்தர் தம் ஊழியர்கள் கொடுக்குமாறு உணர்த்திய வார்த்தைகளைக் கேட்க நாம் கூடிவருகையில், கர்த்தர் அளித்த வாக்குறுதியைப்பற்றி சிந்திக்க உங்களை நான் அழைக்கிறேன். “சாத்தானுடைய எல்லா வஞ்சனைகளையும் கண்ணிகளையும் தந்திரங்களையும், தகர்த்தெறிவதும், இடுக்கமும் நெருக்கமுமான பாதையில் கிறிஸ்துவின் மனுஷனை நடத்துவதுமான, ஜீவனும் வல்லமையும் உள்ள தேவ வார்த்தையைப் பிடித்துக்கொள்கிறயாவரையும்“ என அவர் அறிவித்தார். 2
இந்த பொது மாநாட்டின் போது அறிவிக்கப்பட்டுள்ளபடி தேவனுடைய வார்த்தையை பிடித்துக் கொள்ள நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். உங்கள் மீது கர்த்தரின் பரிபூரண அன்பை நீங்கள் உணரும்படி நான் ஜெபிக்கிறேன், 3 இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தினாலே, ஆமென்.