பொது மாநாடு
நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம்
அக்டோபர் 2020 பொது மாநாடு


15:1

நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம்

இயேசு கிறஸ்துவைப்பற்றி உலகம் குறைவாகப் பேசும்போது, அவரைப்பற்றி நாம் அதிகமாகப் பேசுவோமாக.

உங்களுக்கும், எனக்கன்பான நண்பர்களுக்கும், சக விசுவாசிகளுக்கும் என்னுடைய அன்பை நான் தெரியப்படுத்துகிறேன். இந்த உலகளாவிய தொற்றுநோய் நமது வாழ்க்கையை சீர்குலைத்து, விலையேறப்பெற்ற குடும்ப அங்கத்தினர்களை, அன்பான நண்பர்களை எடுத்துக்கொண்ட இந்தக் கடந்த மாதங்களில் உங்களுடைய விசுவாசத்தையும் தைரியத்தையும் நான் பாராட்டுகிறேன்.

நிச்சயமற்ற இந்தக் காலத்தின்போது, இயேசுவே கிறிஸ்து என்ற என்னுடைய நிச்சயமான, குறிப்பிட்ட அறிவுக்காக, ஒரு வழக்கத்திற்கு மாறான நன்றியுணர்வை நான் உணருகிறேன். அந்த வகையில் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களாக? நம் ஒவ்வொருவரின்மீதும் அழுத்துகிற கஷ்டங்கள் இருக்கின்றன, ஆனால், நமக்கு முன்பு எப்போதும் நீட்டப்பட்ட கைகளுடன் அவர் தாழ்மையுடன் அறிவிக்கிறார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்”1 மற்றவர்களிடமிருந்து உடல் ரீதியாக நம்மைத் தூர விலக்கும் ஒரு காலத்தை நாம் சகித்துக்கொண்டிருக்கும்போது, நீட்டிய கரங்களுடன், “என்னிடத்தில் வாருங்கள்”2 என நம்மை அன்புடன் அழைக்கிற அவரிடமிருந்து ஆவிக்குரிய ரீதியில் நம்மைத் தூர விலக்கிக் கொள்ளும் ஒரு காலத்தை நாம் ஒருபோதும் சகித்துக் கொள்ள வேண்டியதில்லை.

ஒரு தெளிவான, இருண்ட வானத்தில், வழிநடத்துகிற நட்சத்திரத்தைப்போல இயேசு கிறிஸ்து நமது பாதைக்கு ஒளியூட்டுகிறார். ஒரு தாழ்மையான நிலையில் அவர் பூமிக்கு வந்தார். அவர் ஒரு பரிபூரண வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் வியாதியஸ்தர்களை குணமாக்கி மரித்தவர்களை உயிரோடெழுப்பினார். மறக்கப்பட்டவர்களுக்கு அவர் ஒரு நண்பராயிருந்தார். நன்மை செய்யவும், கீழ்ப்படியவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவும் அவர் நமக்குப் போதித்தார். அவர் சிலுவையில் மரித்து, கல்லறைக்கும் அப்பால் வாழ நம்மையும் நாம் நேசிக்கிறவர்களையும் அனுமதித்து மூன்று நாட்களுக்குப் பின்னர் கம்பீரமாக எழுந்தார். நாம் மனந்திரும்பும்போது மன்னிப்பையும், வாழ்க்கைப் புயலில் சமாதானத்தையும் கொண்டுவந்து, அவருடைய ஒப்பிடமுடியாத இரக்கத்துடனும் கிருபையுடனும், நமது பாவங்களையும் நமது பாடுகளையும் அவர் தன்மீதே எடுத்துக்கொண்டார். நாம் அவரை நேசிக்கிறோம். நாம் அவரை தொழுதுகொள்கிறோம். நாம் அவரைப் பின்பற்றுகிறோம். நமது ஆத்துமாக்களுக்கு, அவர் நங்கூரமாயிருக்கிறார்.

சுவாரஸ்யமாக, இந்த ஆவிக்குரிய நம்பிக்கை நமக்குள் அதிகரிக்கும்போது, இயேசு கிறிஸ்துவைப்பற்றி சிறிதே அறிந்திருக்கிற, பூமியில் அநேகரிடமும், மற்றும், நூற்றாண்டுகளாக அவருடைய நாமம் அறிவிக்கப்பட்டிருக்கிற உலகத்தின் சில பாகங்களிலும் இயேசு கிறிஸ்துமீதுள்ள விசுவாசம் மங்கிக்கொண்டு போகிறது. பல ஆண்டுகளாக தங்களுடைய நாடுகளில் நம்பிக்கை சரிந்துகொண்டிருப்பதை ஐரோப்பாவிலுள்ள வீரமுள்ள பரிசுத்தவான்கள் பார்த்திருக்கிறார்கள்.3 இங்கே அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் விசுவாசம் குறைந்துகொண்டு போகிறதென்பது வருந்தத்தக்கது. கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 30 மில்லியன் மக்கள் இயேசு கிறிஸ்துவின் தெய்வீக நம்பிக்கையிலிருந்து விலகியிருக்கிறார்களென சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்தியது.4 உலகம் முழுவதையும் நோக்கும்போது, வருகிற சகாப்தங்களில், கிறிஸ்தவத்தை தழுவுபவர்களைவிட, இரண்டு மடங்கிற்கும் அதிகமானவர்கள் அதை விட்டுவிலகுவார்கள் என மற்றொரு ஆய்வு முன்னறிவிக்கிறது.5

ஒவ்வொருவருடைய தேர்ந்தெடுக்கும் உரிமையை நாங்கள் நிச்சயமாக மதிக்கிறோம், ஆயினும் நமது பரலோக பிதா அறிவித்தார், “இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்”6 ஒவ்வொரு முழங்காலும் முடங்கி, இயேசுவே கிறிஸ்து என ஒவ்வொரு நாவும் அவருக்கு முன்பாக அறிக்கையிடுகிற நாள் வருமென நான் சாட்சியளிக்கிறேன்.7

நமது மாறிக்கொண்டிருக்கும் உலகத்திற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கவேண்டும். தங்களுடைய விசுவாசத்தை சிலர் புறக்கணித்துக் கொண்டிருக்கும்போது, சத்தியத்திற்காக மற்றவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இரட்சகரின் நாமத்தை நாம் நம்மீது எடுத்துக்கொண்டோம். நாம் இன்னும் என்ன செய்ய வேண்டும்?

தலைவர் ரசல் எம். நெல்சனின் ஆயத்தம்

சபையின் தலைவராக அவருடைய அழைப்பிற்கு முந்திய மாதங்களில் தலைவர் ரசல் எம். நெல்சனை கர்த்தர் எவ்வாறு பயிற்றுவித்தார் என்பதை நாம் மறுபரிசீலனை செய்யும்போது நமது பதிலின் பகுதி வரக்கூடும். அவருடைய அழைப்பிற்கு ஒரு ஆண்டுக்கு முன்பைப்பற்றி பேசும்போது, தலைப்பு வழிகாட்டியில் பட்டியலிடப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் பெயரின் 2200 குறிப்புகளை மிக ஆழமாகப் படிக்க தலைவர் நெல்சன் நம்மை அழைத்தார்.8

தலைவர் நெல்சன் வேதங்களைப் படித்துக்கொண்டிருத்தல்

மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் பொது மாநாட்டில், அவர் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புள்ள சீஷராக இருந்தபோதும், இயேசு கிறிஸ்துவின் இந்த ஆழமான ஆய்வு அவரை எவ்வாறு பெரிதும் பாதித்தது என்பதைப் பற்றி பேசினார். அதன் தாக்கத்தைப்பற்றி சகோதரி வென்டி நெல்சன் அவரிடம் கேட்டார். அவர் பதிலளித்தார், “நான் ஒரு வித்தியாசமான மனிதன்.” அவர் ஒரு வித்தியாசமான மனிதராயிருந்தார்? 92 வயதில் ஒரு வித்தியாசமான மனிதர்? தலைவர் நெல்சன் விவரித்தார்.

இரட்சகரையும் அவருடைய பாவநிவர்த்தியின் பலியையும்பற்றி அறிய நாம் நேரத்தை செலவு செய்யும்போது, நாம் [அவரிடம்] ஈர்க்கப்படுகிறோம்.

“நமது கவனம் இரட்சகர் மற்றும் அவரது சுவிசேஷத்தில் இறுக்கப்படுகிறது.”9

இரட்சகர் சொன்னார், “ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப்பார்.”10

வேலை, கவலைகள், தகுதியான முயற்சிகளின் ஒரு உலகத்தில், நமது இருதயத்தை, நமது மனதை, நமது சிந்தனைகளை நமது நம்பிக்கையையும் இரட்சிப்புமான அவரிடத்தில் வைக்கிறோம்.

இரட்சகரைப்பற்றிய ஒரு புதுப்பிக்கப்பட்ட படிப்பு தலைவர் நெல்சனை ஆயத்தப்பட உதவினால், அப்படியே நாம் ஆயத்தப்பட அது நமக்கு உதவமுடியுமல்லவா?

தலைவர் ரசல் எம். நெல்சன்

சபையின் பெயரை வலியுறுத்தும்போது தலைவர் நெல்சன் போதித்தார், “நம்மைக் கழுவவும், குணமாக்கவும், நம்மைப் பலப்படுத்தவும் பெரிதாக்கவும், இறுதியாக நம்மை மேன்மைப்படுத்தவும், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமைக்கு நாம் அணுகவேண்டுமென்றால், அந்த வல்லமையின் ஆதாரமாக நாம் அவரைத் தெளிவாக அங்கீகரிக்கவேண்டும்.”11 ஒரு சிறிய காரியமாகத் தோன்றுகிற, சபையின் சரியான பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துதல், சிறிய காரியமே அல்ல, வருங்காலத்தை அது பெரிதாக வடிவமைக்கும் என தலைவர் நெல்சன் நமக்குப் போதித்தார்.

உங்களுடைய ஆயத்தத்திற்காக ஒரு வாக்களிப்பு

தலைவர் நெல்சன் செய்ததைப்போல நீங்கள் உஙக்ளை ஆயத்தப்படுத்தும்போது, இரட்சகரைப்பற்றி அதிகமாக சிந்தித்து, அவரைப்பற்றி குறைந்த தயக்கத்துடன் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்களும் வித்தியாசமானவர்களாயிருப்பீர்கள். அவரைப்பற்றி நீங்கள் அறிய வரும்போது, மிக ஆழமாக அவரை நேசிக்கும்போது, நமது பிள்ளைகளில் அல்லது அன்பான நண்பர்களில் ஒருவரைப்பற்றி பேசும்போது, உங்கள் வார்த்தைகள் சரளமாக வருகிறதைப்போல ஓடும். உங்கள் பேச்சைக் கேட்பவர்கள் உங்களிடம் விவாதிப்பது அல்லது உங்களைப் புறக்கணிப்பது போன்றவற்றைக் குறைவாக உணர்ந்து, உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதை விரும்புவார்கள்.

நீங்களும் நானும் இயேசு கிறிஸ்துவைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் நாம் சிறிது சிறப்பாகச் செய்ய முடியும். உலகம் அவரைக் குறித்து சிறிதாக பேசப்போனால், அவரைக் குறித்து யார் அதிகமாகப் பேசப்போகிறார்கள்? நாம்தான்! அர்ப்பணிப்புள்ள பிற கிறிஸ்தவர்களுடன்!

நமது வீடுகளில் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுதல்

நமது வீடுகளில் இரட்சகரின் உருவங்கள் உள்ளனவா? இயேசு கிறிஸ்துவின் உவமைகளைப்பற்றி நமது பிள்ளைகளுடன் நாம் அடிக்கடி பேசுகிறோமா? “இயேசுவின் கதைகள், நமது பிள்ளைகளின் இருதயங்களிலுள்ள விசுவாசத்தின் உட்புறம் வீசும் கடுமையான காற்றைப் போலிருக்கிறது.”12 உங்கள் பிள்ளைகள் உங்களிடம் கேள்விகள் கேட்கும்போது, இரட்சகர் போதித்த போதனைகளைப்பற்றி மனப்பூர்வமாக சிந்திக்கவும். உதாரணமாக, “அப்பா, நாம் ஏன் ஜெபிக்கிறோம்?” என உங்கள் பிள்ளை கேட்டால். “இது ஒரு நல்ல கேள்வி” என நீங்கள் பதிலளிக்கக்கூடும். “இயேசு கிறிஸ்து எப்போது ஜெபித்தாரென உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் ஏன் ஜெபித்தார், எவ்வாறு ஜெபித்தாரென்பதைப்பற்றி நாம் பேசுவோமாக.”

“எங்கள் பிள்ளைகள் தங்களுடைய பாவங்களின் மன்னிப்புக்காக, எதனைக் கண்நோக்கவேண்டுமென்று அறியும்பொருட்டாக, நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம். கிறிஸ்துவில் களிகூருகிறோம்.”13

சபையில் கிறிஸ்துவைப்பற்றி பேசுதல்

இந்த அதே வேத வசனத்தில் “நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பிரசங்கிக்கிறோம்” எனவும் சேர்க்கிறது.14 நமது தொழுகைக் கூட்டங்களில் இரட்சகர் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அவருடைய பாவநிவர்த்தியின் பலியைப்பற்றியுமே எப்போதும் நாம் கவனம் செலுத்துவோமாக. நமது சொந்த வாழ்க்கையிலிருந்து ஒரு அனுபவத்தையோ அல்லது மற்றவர்களிடமிருந்து ஒரு சிந்தனையை பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்பது இதற்கு அர்த்தமில்லை. குடும்பங்களை, அல்லது கூட்டம் அல்லது ஆலயங்கள் அல்லது ஒரு சமீபத்திய ஊழியத்தைப்பற்றி நமது கருத்து இருக்கும்போது, நமது தொழுகை எல்லாவற்றிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கியே இருக்கவேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தலைவர் டாலின் எச். ஓக்ஸூக்கு ஒரு மனிதரிடமிருந்து வந்த ஒரு கடிதத்தைப்பற்றி அவர் பேசினார். “[ஒரு திருவிருந்துக்] கூட்டத்தில் கலந்துகொண்டு, இரட்சகர் குறிப்பிட்டதைப்பற்றி கேட்காமல், பதினேழு சாட்சிகளைக் கேட்டேன்” என அந்த மனிதன் எழுதியிருந்தார்.15 பின்னர் ஓக்ஸ் குறிப்பிட்டார், “ஒருவேளை அந்த விவரம் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் [ஆனால்] இது நம்மனைவருக்கும் ஒரு தெளிவான நினைவூட்டுதலாயிருப்பதால்” நான் இதை மேற்கோள் காட்டுகிறேன். 16 நமது உரைகளிலும் வகுப்பு கலந்துரையாடல்களிலும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து அதிகமாகப் பேச பின்னர் அவர் நம்மை அழைத்தார். நம்முடைய சபைக் கூட்டங்களில் கிறிஸ்துவைப்பற்றி அதிகமாக மிக அதிகமாக நாம் கவனம் செலுத்துவதை நான் கவனித்திருக்கிறேன். இந்த நேர்மறையான முயற்சிகளுடன் தொடர்ந்து விழிப்புடனுமிருப்போமாக.

மற்றவர்களுடன் கிறிஸ்துவைக் குறித்துப் பேசுதல்

நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன், நாம் மிக மனந்திறந்தவர்களாயும், கிறிஸ்துவைப்பற்றிப் பேச அதிக விருப்பமுள்ளவர்களாயிருப்போமாக. தலைவர் நெல்சன் சொன்னார், “இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் எழுந்து நிற்கவும், பேசவும், உலகத்தின் மக்களிலிருந்து வித்தியாசமாயிருக்கவும் விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்”17

ஒருவரின் மனமாற்றம், சபைக்கு வருவதில் அல்லது ஊழியக்காரர்களைப் பார்ப்பதன் விளைவாய் இருக்கவேண்டும் என சிலநேரங்களில் நாம் நினைக்கிறோம். கர்த்தர் அவர்கள் விருப்பப்படி அவர்களை வழிநடத்தட்டும், அதே சமயம் அவருக்காக ஒரு குரலாகவும், நம்முடைய விசுவாசத்தைப்பற்றி சிந்தனையுடனும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டிய நமது பொறுப்பைப்பற்றி நாம் அதிகம் சிந்திக்கிறோம். நமது வார இறுதி நாட்களைப்பற்றி யாராவது ஒருவர் நம்மிடம் கேட்கும்போது, “நான் இயேசுவைப் போலிருக்க முயற்சிக்கிறேன்” என்ற ஆரம்ப வகுப்பு பாடலைக் கேட்க நாங்கள் விரும்புகிறோம் என புன்னகைக்கவும் சொல்லவும் நாம் விருப்பமுள்ளவர்களாயிருக்க வேண்டும் என மூப்பர் டியட்டர் எப். உக்டர்ப் நமக்குப் போதித்தார்.18 கிறிஸ்துவில் நமது விசுவாசத்தை தயவுசெய்து நாம் பார்ப்போமாக. அவன் அல்லது அவள் தங்களுடைய சொந்த வாழ்க்கையிலுள்ள ஒரு பிரச்சினையைப்பற்றி பகிர்ந்துகொண்டால், “ஜான், மேரி, நான் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையுள்ளவன் என நீங்கள் அறிவீர்கள், என நாம் சொல்லக்கூடும். உங்களுக்குதவக்கூடிய அவன் சொன்ன ஒன்றைப்பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.”

கிறிஸ்துவில் உங்களுடைய நம்பிக்கையைப்பற்றிப் பேசுவதில் சமூக ஊடகத்தில் மிக மனந்திறந்தவர்களாய் இருங்கள். அநேகர் உங்களுடைய விசுவாசத்தை மதிப்பார்கள் ஆனால், இரட்சகரைப்பற்றிப் பேசும்போது ஒருவர் நிராகரிப்பவராக இருந்தால், அவருடைய வாக்களிப்பில் தைரியமாயிருங்கள்: “என்னிமித்தம் உங்களை நிந்தித்தால் … நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். … பரலோக ராஜ்யத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்”19 நம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு விருப்பமுள்ளவர்களாய் இருப்பதைவிட அவரைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்பதில் நாம் அதிகம் அக்கறையுள்ளவர்கள். பேதுரு ஆலோசனையளித்தான்: “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்”. 20 நாம் கிறிஸ்துவைப்பற்றி பேசுவோமாக.

மார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவின் ஒரு வல்லமையான சாட்சி. உண்மையில் அதன் ஒவ்வொரு பக்கமும் இரட்சகரைக் குறித்தும் அவருடைய தெய்வீக ஊழியத்தையும் குறித்து சாட்சியளிக்கின்றன.21 அவருடைய பாவநிவர்த்தியின் இரக்கத்தின் ஒரு புரிந்துகொள்ளுதல் அதன் பக்கங்களில் நிறைவாகிறது. நம்மைக் காப்பாற்ற ஏன் இரட்சகர் வந்தார் மற்றும் நாம் எவ்வாறு மிக மகத்துவமாக அவரண்டை வரமுடியுமென்பதை சிறப்பாக புரிந்துகொள்ள, புதிய ஏற்பாட்டிற்கு ஒரு துணையாக, மார்மன் புஸ்தகம் நமக்குதவுகிறது

நமது சக கிறிஸ்தவர்கள் சிலர், சிலநேரங்களில் நமது நம்பிக்கைகளைப்பற்றி நோக்கங்களைப்பற்றி நிச்சயமில்லாதிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவில் நமது பகிர்ந்துகொள்கிற விசுவாசத்திலும், நாம் அனைவரும் நேசிக்கிற புதிய ஏற்பாடு வேதங்களிலும் அவர்களோடு நேர்மையாக நாம் களிகூருவோமாக. வருகிற ஆண்டுகளில், இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு நட்புறவும், ஒருவருக்கொருவரின் ஆதரவும் தேவையாயிருக்கிறது.22.

உலகத்தின் ஒளி

இயேசு கிறஸ்துவைப்பற்றி உலகம் குறைவாகப் பேசும்போது, அவரைப்பற்றி நாம் அதிகமாகப் பேசுவோமாக. அவருடைய சீஷர்களாக நம்முடைய உண்மையான நிறங்கள் வெளிப்படுத்தப்பட்டு, நம்மைச் சுற்றியுள்ள அநேகர் கேட்பதற்கு ஆயத்தமாயிருப்பார்கள். அவரிடமிருந்து பெற்ற ஒளியை நாம் பகிர்ந்துகொள்ளும்போது, அவருடைய ஒளியும் எல்லை கடந்த அவருடைய இரட்சிப்பின் வல்லமையும், தங்களுடைய இருதயங்களைத் திறக்க விருப்பமுள்ளவர்களிடத்தில் பிரகாசிக்கும் இயேசு சொன்னார், “நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.”23

கிறிஸ்துவைக் குறித்துப் பேச உங்கள் விருப்பத்தை உயர்த்துதல்

அவர் திரும்பிவருதலைப் பார்ப்பதைவிட கிறிஸ்துவைப்பற்றிப் பேச எனது விருப்பத்தை எதுவும் உயர்த்தமுடியாது. அவர் எப்போது வருவார் என்பதை நாம் அறியாதிருக்கும்போது, அவர் திரும்ப வருவதின் நிகழ்வுகள் மூச்சடைப்பாயிருக்கும். அவருடைய சகல பரிசுத்த தூதர்களுடன் வானமேகங்களில் கம்பீரத்திலும் மகிமையிலும் அவர் வருவார். ஒரு சில தூதர்களுடன் அல்ல, அவருடைய சகல பரிசுத்த தூதர்களுடனும். நமது வேலன்டைன் வாழ்த்து மடல்களில் காணப்படுகிற ரபேலால் வரையப்பட்ட செரி கட்டம்போட்ட படங்களல்ல இவை. இவர்கள் நூற்றுக்கணக்கான காலங்களின் தூதர்கள், சிங்கங்களின் வாய்களை மூட, 24 சிறைக் கதவுகளை திறக்க25, நீண்ட கால காத்திருப்பின் அவரது பிறப்பை அறிவிக்க,26, கெத்சமனேயில் அவருக்கு ஆறுதளிக்க,27, அவருடைய பரமேறுதலை சீஷர்களுக்கு உறுதிசெய்ய,28, சுவிசேஷத்தின் மகிமையான மறுஸ்தாபிதத்தை திறக்க29 அனுப்பப்பட்ட தூதர்கள்.

இரண்டாம் வருகை

திரையின் இந்த பக்கமோ அல்லது மறுபக்கமோ, அவரை சந்திக்க நாம் பிடிக்கப்படுவதை உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா?30 நீதிமான்களுக்கு இது அவருடைய வாக்குத்தத்தம். இந்த அற்புதமான அனுபவம் என்றென்றும் நமது ஆத்துமாக்களை அடையாளப்படுத்தும்.

இரட்சகரை நேசிக்கவும் அவருடைய தெய்வீகத்தை பிரகடனப்படுத்தவும் நமது விருப்பத்தை உயர்த்துகிற நமது அன்பான தீர்க்கதரிசியான தலைவர் ரசல் எம். நெல்சனுக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவர் மீது கர்த்தருடைய கரம் மற்றும் அவரை வழிநடத்துகிற வெளிப்படுத்தலின் வரத்திற்கு நான் கண்கூடான சாட்சி. தலைவர் நெல்சன் அவர்களே உங்களுடைய ஆலோசனைக்காக நாங்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.

உலகம் முழுவதிலுமுள்ள எனக்கன்பான நண்பர்களே, அவருடைய மகிமையான வாக்களிப்பை எதிர்பார்த்து கிறிஸ்துவைக் குறித்து நாம் பேசுவோம், “மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.”31 அவர் தேவகுமாரன் என நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. யோவான் 14:6.

  2. மத்தேயு 11:28.

  3. Niztan Peri-Rotem, “Religion and Fertility in Western Europe: Trends across Cohorts in Britain, France and the Netherlands,” European Journal of Population, May 2016, 231–65, ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4875064 பார்க்கவும்.

  4. “[அறுபத்தைந்து சதவிகிதம்] அமெரிக்க முதியவர்கள் தங்களது மதத்தைப் பற்றி கேட்டபோது தங்களை கிறிஸ்தவர்கள் என்று வர்ணித்தவர்கள், கடந்த சகாப்தத்தில் 12 சதவிகித புள்ளிகள் குறைந்துவிட்டனர். இதற்கிடையில், நாத்திகர், அஞ்ஞானவாதி அல்லது ‘குறிப்பாக எதுவுமில்லை’ என்று தங்கள் மத அடையாளத்தை விவரிக்கும் நபர்களைக் கொண்ட மக்கள்தொகையில் மத ரீதியாக இணைக்கப்படாத பங்கு இப்போது 26% ஆக உள்ளது, இது 2009 இல் 17% ஆக இருந்தது ”(Pew Research Center, “In U.S., Decline of Christianity Continues at Rapid Pace,” Oct. 17, 2019, pewforum.org).

  5. Pew Research Center, “The Future of World Religions: Population Growth Projections, 2010–2050,” Apr. 2, 2015, pewforum.org பார்க்கவும்.

  6. மாற்கு 9:7; லூக்கா 9:35; மத்தேயு 3:17; Joseph Smith—History 1:17 ஐயும் பார்க்கவும்.

  7. பிலிப்பியர் 2:9–11 பார்க்கவும்.

  8. Russell M. Nelson, “Prophets, Leadership, and Divine Law” (worldwide devotional for young adults, Jan. 8, 2017), broadcasts.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

  9. Russell M. Nelson, “Drawing the Power of Jesus Christ into Our Lives,” Liahona, May 2017, 40–41.

  10. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 06:36.

  11. Russell M. Nelson, “The Correct Name of the Church,” Liahona, Nov. 2018, 88.

  12. Neil L. Andersen, “Tell Me the Stories of Jesus,” Liahona, May 2010, 108.

  13. 2 நேபி 25:26.

  14. 2 நேபி 25:26.

  15. Dallin H. Oaks, “Another Testament of Jesus Christ” (Brigham Young University fireside, June 6, 1993), 7, speeches.byu.edu.

  16. Dallin H. Oaks, “Witnesses of Christ,” Ensign, Nov. 1990, 30.

  17. Russell M. Nelson, “Drawing the Power of Jesus Christ into Our Lives,” 40.

  18. Dieter F. Uchtdorf, “Missionary Work: Sharing What Is in Your Heart,” Liahona, May 2019, 17; “I’m Trying to Be like Jesus,” Children’s Songbook, 78 பார்க்கவும்.

  19. மத்தேயு 5:11–12.

  20. 1 பேதுரு 3:15.

  21. “வாக்களிக்கப்பட்ட மேசியாவைக் குறித்து தங்களுடைய சாட்சியங்களை “[மார்மன் புஸ்தக தீர்க்கதரிசன எழுத்தாளர்கள்] எழுதிய போது, ஒவ்வொரு 1.7 வசனங்களுக்கும் சராசரியாக அவருடைய பெயரின் சில வடிவங்களைக் குறிப்பிட்டுள்ளனர். [அவர்கள்] இயேசு கிறிஸ்துவை 101 வெவ்வேறு பெயர்களால் குறிப்பிட்டனர். ஒரு வசனம் பொதுவாக ஒரு வாக்கியத்தைக் கொண்டுள்ளது என்பதை நாம் உணரும்போது, கிறிஸ்துவின் பெயரின் சில வடிவங்களைக் காணாமல், சராசரியாக, மார்மன் புஸ்தகத்தில் இரண்டு வாக்கியங்களைப் வாசிக்க முடியாது என்று தோன்றுகிறது” (Susan Easton Black, Finding Christ through the Book of Mormon [1987], 5, 15).

    “புதிய ஏற்பாட்டின் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் பரிகாரம் அல்லது பாவநிவர்த்தி, என்ற சொற்கள் அவற்றின் எந்த வடிவத்திலும் தோன்றினாலும், அவை மார்மன் புஸ்தகத்தில் 35 முறை தோன்றும். இயேசு கிறிஸ்துவின் மற்றொரு ஏற்பாடாக அவருடைய பாவநிவரத்தியின்மீது அது ஒளியை பரப்புகிறது” (Russell M. Nelson, “The Atonement,” Ensign, Nov. 1996.)

  22. அமெரிக்காவில் கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறுபவர்கள் இளையவர்கள். “அமைதியான தலைமுறையின் எட்டு-பத்து உறுப்பினர்களில் (1928 மற்றும் 1945 க்கு இடையில் பிறந்தவர்கள்) தங்களை கிறிஸ்தவர்கள் (84%) என்று வர்ணிக்கின்றனர், அதேபோல் முக்கால்வாசி பேபி பூமர்களும் (76%). இதற்கு நேர்மாறாக, மில்லினியல்களில் பாதி (49%) மட்டுமே தங்களை கிறிஸ்தவர்கள் என்று வர்ணிக்கின்றனர்; நான்கில் பத்து மத ‘நோன்ஸ்’, மற்றும் பத்தில் ஒரு மில்லினியல்கள் கிறிஸ்தவமல்லாத நம்பிக்கைகளுடன் அடையாளம் காணப்படுகின்றன ”(“In U.S., Decline of Christianity Continues,” pewforum.org).

  23. யோவான் 12:46.

  24. தானியேல் 6:22 பார்க்கவும்.

  25. அப்போஸ்தலர் நடபடிகள் 5:19 பார்க்கவும்.

  26. லூக்கா 2:2–14 பார்க்கவும்.

  27. (லூக்கா 22:42-43 ) பார்க்கவும்.

  28. அப்போஸ் 1:9–11 பார்க்கவும்.

  29. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13; 27:12–13; 110:11–16 ; Joseph Smith—History 1:27–54 பார்க்கவும்.

  30. 1 தெசலோனிக்கேயர் 4:16–17; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:96–98 பார்க்கவும்.

  31. மத்தேயு 10:32.