பொது மாநாடு
ஒரு புதிய இயல்பு நிலை
அக்டோபர் 2020 பொது மாநாடு


5:26

ஒரு புதிய இயல்பு நிலை

உங்கள் இருதயத்தையும், மனதையும், ஆத்துமாவையும் அதிகமாக நம்முடைய பரலோக பிதாவுக்கும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் திருப்ப நான் உங்களை அழைக்கிறேன்.

என் அன்பான சகோதர சகோதரிகளே, இந்த இரண்டு நாள் பொது மாநாடு மகிமை மிக்கதாயிருந்திருக்கிறது! மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலன்டுடன் நான் உடன்படுகிறேன். அவர் குறிப்பிட்டுள்ளபடி, செய்திகள், ஜெபங்கள் மற்றும் இசை அனைத்தும் கர்த்தரால் உணர்த்தப்பட்டுள்ளன. எந்த வகையிலும் பங்கேற்ற அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

நடவடிக்கைகள் முழுவதும், மாநாட்டைக் கேட்கும்போது உங்களை நான் என் மனதில் படம்பிடித்துள்ளேன். நீங்கள் என்ன உணர்கிறீர்கள், எதைப்பற்றி கவலைப்படுகிறீர்கள் அல்லது தீர்க்க முயற்சிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவும்படி நான் கர்த்தரிடம் கேட்டுள்ளேன். கர்த்தர் நீங்கள் உணர விரும்புகிறார் என நான் அறிந்த எதிர்காலத்தைப்பற்றிய நேர்மறை உணர்வுடன் உங்களை அனுப்ப, இந்த மாநாட்டை நிறைவுசெய்ய நான் என்ன சொல்லலாம் என்று நான் வியந்துள்ளேன்.

பல நூற்றாண்டுகளாக தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்ட ஒரு மகிமையான யுகத்தில் நாம் வாழ்கிறோம். எந்தவொரு ஆவிக்குரிய ஆசீர்வாதமும் நீதிமான்களிடமிருந்து தடுக்கப்படாத ஊழியக்காலம் இது.1 உலகத்தின் குழப்பங்கள் மத்தியிலும், 2கர்த்தர் நம்மை “எதிர்காலத்தை மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் எதிர்நோக்குமாறு,” கர்த்தர் செய்வார்.3 நேற்றைய நினைவுகளில் நம் சக்கரங்களை சுழற்ற வேண்டாம். இஸ்ரவேலின் கூடுகை முன்னோக்கி செல்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனது சபையின் விவகாரங்களை இயக்குகிறார், அது தன் தெய்வீக நோக்கங்களை எட்டும்.

உங்களுக்கும் எனக்கும் உள்ள சவால் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் அவன் அல்லது அவளின் தெய்வீக திறனை அடைவதை உறுதிப்படுத்துவதாகும். “புதிய இயல்பு நிலையைப்பற்றி” இன்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். நீங்கள் உண்மையிலேயே ஒரு புதிய இயல்பு நிலையை தழுவ விரும்பினால், உங்கள் இருதயத்தையும் மனதையும் ஆத்துமாவையும் அதிகமாக நம்முடைய பரலோக பிதாவிடமும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமும் திருப்பும்படி உங்களை அழைக்கிறேன். அதுவே உங்களுடைய புதிய இயல்பு நிலையாக” இருப்பதாக.

தினமும் மனந்திரும்புவதன் மூலம் உங்கள் புதிய இயல்பு நிலையை தழுவுங்கள். சிந்தனை, சொல் மற்றும் செயலில் அதிகளவில் தூய்மையாக இருக்க முயலுங்கள். மற்றவர்களுக்கு ஊழியம் செய்யுங்கள். ஒரு நித்திய பார்வையை பெற்றிருங்கள். உங்கள் அழைப்புகளை சிறப்பாக்குங்கள். உங்கள் சவால்கள் எதுவாக இருந்தாலும், என் அன்பான சகோதர சகோதரிகளே, இதனால் நீங்கள் உங்கள் சிருஷ்டிகரை சந்திக்க அதிக ஆயத்தமாக இருக்கும்படி ஒவ்வொரு நாளும் வாழுங்கள்.4

அதனால்தான் நமக்கு ஆலயங்கள் உள்ளன. கர்த்தரின் நியமங்களும் உடன்படிக்கைகளும் தேவனின் எல்லா ஆசீர்வாதங்களிலும் மிகப்பெரியதாகிய, நித்திய ஜீவனுக்கு நம்மை ஆயத்தப்படுத்துகின்றன.5 உங்களுக்குத் தெரிந்தபடி, கோவிட் தொற்றுநோய்க்கு நமது ஆலயங்களை தற்காலிகமாக மூடுவது தேவையானது. பின்னர் கவனமாக ஒருங்கிணைக்கப்பட்ட, கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கத் தொடங்கினோம். கட்டம் 2 இப்போது பல ஆலயங்களில் நடைமுறையில் இருப்பதால், ஆயிரக்கணக்கான தம்பதிகள் முத்திரிக்கப்பட்டிருக்கின்றனர், கடந்த சில மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் தங்களது சொந்த தரிப்பித்தல்களைப் பெற்றுள்ளனர். சபையின் தகுதியான அங்கத்தினர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் மூதாதையர்களுக்கு சேவை செய்து பரிசுத்த ஆலயத்தில் வழிபடக்கூடிய நாளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

பின்வரும் இடங்களில் ஆறு புதிய ஆலயங்கள் கட்டும் திட்டங்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: தாராவா, கிரிபதி; போர்ட் விலா, வனடு; லிண்டன், யூட்டா; கிரேட்டர் குவாத்தமாலா நகரம், குவாத்தமாலா; சாவோ பாலோ கிழக்கு, பிரேசில்; மற்றும் சாண்டா குரூஸ், பொலிவியா.

இந்த ஆலயங்களை நாம் கட்டியெழுப்பி பராமரிக்கும்போது, நீங்கள் பரிசுத்த ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தகுதியுடையவராக இருக்க முடியும்படிக்கு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை கட்டியெழுப்பவும் பராமரிக்கவும் நாங்கள் ஜெபிக்கிறோம்,

இப்போது, என் அன்பான சகோதர சகோதரிகளே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானத்தால் நிரப்பப்படும்படி உங்களை ஆசீர்வதிக்கிறேன். அவருடைய சமாதானம் எல்லா உலகப்பிரகார புரிதல்களுக்கும் அப்பாற்பட்டது6 தேவனின் நியாயப் பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியும் வாஞ்சை மற்றும் திறனுடன் நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். நீங்கள் செய்யும்போது, அதிக தைரியம், அதிகரித்த தனிப்பட்ட வெளிப்பாடு, உங்கள் வீடுகளில் இனிமையான நல்லிணக்கம், மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும் மகிழ்ச்சி உள்ளிட்ட ஆசீர்வாதங்கள் பொழியப்படுவீர்கள் என்று நான் வாக்களிக்கிறேன்.

கர்த்தருடைய இரண்டாவது வருகைக்கு நம்மையும் உலகத்தையும் ஆயத்தப்படுத்துவதற்கான நமது தெய்வீக ஆணையை நிறைவேற்ற நாம் ஒன்றாக முன்னேறுவோமாக. உங்கள் ஒவ்வொருவர்மீதும் என்னுடைய அன்பை தெரிவித்து உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.