பொது மாநாடு
தொடருங்கள்—விசுவாசத்துடன்
ஏப்ரல் 2023 பொது மாநாடு


11:4

தொடருங்கள்—விசுவாசத்துடன்

நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது, நாம் என்ன தடைகளை எதிர்கொண்டாலும் அதைரியத்தை மேற்கொள்ள நமக்கு உதவுகிறது.

அப்போஸ்தலரான மூப்பர் ஜார்ஜ் ஏ. ஸ்மித், மிகவும் கடினமான நேரத்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திடமிருந்து ஆலோசனையைப் பெற்றார்: “என்னைச் சுற்றி என்ன கஷ்டங்கள் வந்தாலும் நான் ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்று அவர் என்னிடம் கூறினார். நான் நோவா ஸ்கோடியாவின் தாழ்வான குழியில் மூழ்கி, மலை பாறைகள் அனைத்தும் என் மேல் குவிந்திருந்தால், நான் தைரியமிழக்காமல், விசுவாசத்தை பிரயோகித்து, தைரியமாக இருந்து, கடைசியாக குவியலுக்கு மேலும் நான் மேலே வர வேண்டும்.”1

துன்பத்தில் இருக்கும் ஒருவரிடம் தீர்க்கதரிசி ஜோசப் அதை எப்படிச் சொல்ல முடியும்? ஏனென்றால் அது உண்மை என்று அவருக்குத் தெரியும். அவர் அதில் வாழ்ந்தார். ஜோசப் தனது வாழ்க்கையில் பலமுறை கடுமையான சிரமங்களை அனுபவித்தார். இருப்பினும், அவர் இயேசு கிறிஸ்து மற்றும் அவரது பாவநிவர்த்தி மீது விசுவாசத்துடன், தொடர்ந்து சென்றதால், அவர் கடக்க முடியாத தடைகளை வென்றார்.2

நாம் ஏமாற்றம், வேதனையான அனுபவங்கள், நமது சொந்தப் போதாமைகள் அல்லது பிற சவால்களை எதிர்கொள்ளும் போது அதைரியம் நம்மை மூழ்கடிக்க விடக்கூடாது என்ற ஜோசப்பின் வேண்டுகோளை இன்று புதுப்பிக்க விரும்புகிறேன்.

நான் அதைரியம் என்று கூறும்போது, மருத்துவ மனச்சோர்வு, கவலைக் கோளாறுகள் அல்லது சிறப்பு சிகிச்சை தேவைப்படும் பிற நோய்களின் மிகவும் பலவீனப்படுத்தும் சவால்களைப்பற்றி நான் பேசவில்லை.3 நான் வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளுடன் வரும் சாதாரண பழைய அதைரியத்தைப்பற்றி பேசுகிறேன்.

எதுவாக இருந்தாலும் விசுவாசத்துடன் தொடரும் என் கதாநாயகர்களால் நான் உணர்த்தப்பட்டேன்.4 மார்மன் புஸ்தகத்தில், லாபானின் வேலைக்காரன் சோரமைப்பற்றி வாசிக்கிறோம். நேபி பித்தளைத் தகடுகளைப் பெற்றபோது, நேபியையும் அவனது சகோதரர்களையும் வனாந்தரத்திற்குப் பின்தொடர அல்லது அவனது உயிரை இழக்க நேரிடும் தேர்ந்தெடுப்பை சோரம் எதிர்கொண்டான்.

என்ன ஒரு தேர்ந்தெடுப்பு. சோரமின் முதல் விருப்பம் ஓடுவதாக இருந்தது, ஆனால் நேபி அவனைப் பிடித்து, அவர்களுடன் சென்றால், அவன் சுதந்திரமாக இருப்பான், அவர்கள் குடும்பத்தில் இடம் பெறுவான் என்று வாக்களித்தான். சோரம் தைரியமுடன் அவர்களுடன் சென்றான்.5

சோரம் தனது புதிய வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்தான், ஆனாலும் அவன் விசுவாசத்துடன் முன்னேறினான். சோரம் தனது கடந்த காலத்தை பற்றிக்கொண்டான் அல்லது தேவன் அல்லது மற்றவர்கள் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டான் என்பதற்கான எந்த அறிகுறியும் நம்மிடம் இல்லை.6 அவன் ஒரு தீர்க்கதரிசியான நேபிக்கு ஒரு உண்மையான நண்பனாக இருந்தான், மேலும் அவனும் அவனுடைய சந்ததியும் வாக்குத்தத்தத்தின் தேசத்தில் சுதந்திரத்திலும் செழிப்பிலும் வாழ்ந்தனர். சோரமின் பாதையில் ஒரு பெரிய தடையாக இருந்தவொன்று, அவன் தன் விசுவாசம் மற்றும் விருப்பத்துடன் விசுவாசத்தோடு தொடர்ந்து சென்றது இறுதியில் மிகுந்த ஆசீர்வாதங்களுக்கு வழிவகுத்தது, 7

சமீபத்தில் ஒரு தைரியமான சகோதரி கஷ்டங்களை எப்படி சகித்துக்கொண்டாள் என்பதை நான் கேட்டேன்.8 அவளுக்குச் சில சவால்கள் இருந்தன, ஒரு ஞாயிற்றுக்கிழமை அவள் ஒத்தாசைச் சங்கத்தில் அமர்ந்து, தன்னுயைட வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிபூரணமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்ததாக தான் நினைத்த ஒரு ஆசிரியை கற்பித்ததை கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் சோர்வாகவும் அதைரியமாகவும் இருந்தாள். அவள் போதுமானவளாக இல்லை அல்லது சொந்தமானவளாக கூட இல்லை என்று உணர்ந்தாள், அதனால் அவள் எழுந்து சென்று, மீண்டும் ஒருபோதும் சபைக்கு திரும்பக்கூடாது என்று திட்டமிட்டாள். தன் காருக்குச் செல்லும்போது, அவள் “கூடுமிடத்துக்குச் சென்று, திருவிருந்துக் கூட்ட செய்தியைக் கேள்,” என்ற ஒரு தனித்துவமான உணர்வை உணர்ந்தாள்: அவள் தூண்டுதலைக் கேள்வி கேட்டாள், ஆனால் அதை மீண்டும் வலுவாக உணர்ந்தாள், அதனால் அவள் கூட்டத்திற்குள் சென்றாள்.

அந்தச் செய்தி அவளுக்குத் தேவையானதாக இருந்தது. அவள் பரிசுத்த ஆவியை உணர்ந்தாள். கர்த்தர் தன்னுடன் தங்கவும், அவருடைய சீஷராகவும், சபையில் கலந்துகொள்ளவும் விரும்புகிறார் என்பதை அவள் அறிந்தாள், அதனால் அவள் அவ்வாறே செய்தாள்.

அவள் எதற்காக நன்றியுடன் இருந்தாள் தெரியுமா? அவள் விட்டுவிடவில்லை. இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்துடன், அது அவளை கஷ்டப்படுத்தியபோதும், அவள் முன்னேறிச் செல்லும்போது அவளும் அவளுடைய குடும்பமும் ஏராளமாக ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

பரலோகம் மற்றும் பூமியின் தேவன் அதைரியத்தைக் கடக்க உதவுவார், மேலும் நாம் அவரை நோக்கிப் பார்த்தால், பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களைப் பின்பற்றினால், நாம் சந்திக்கும் தடைகள் எதுவாக இருந்தாலும்,9 விசுவாசத்துடன் தொடருங்கள். —

அதிர்ஷ்டவசமாக, நாம் பலவீனமாகவோ அல்லது இயலாமையிலோ இருக்கும்போது, கர்த்தர் நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்த முடியும். நம்முடைய திறனுக்கு அப்பாலும் அவரால் நமது திறனை அதிகப்படுத்த முடியும் அதை நான் அனுபவித்திருக்கிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு, நான் எதிர்பாராத விதமாக பிரதேச எழுபதின்மராக அழைக்கப்பட்டேன், நான் மிகவும் போதுமானவனாக இல்லை என்று உணர்ந்தேன். எனது பயிற்சிப் பணிகளைத் தொடர்ந்து, எனது முதல் பிணைய மாநாட்டிற்கு நான் தலைமை தாங்க இருந்தேன்.10 பிணையத் தலைவரும் நானும் ஒவ்வொரு விவரத்தையும் உன்னிப்பாகத் திட்டமிட்டோம். மாநாட்டிற்குச் சற்று முன்பு, அப்போஸ்தலர் குழுமத்தின் அப்போதைய செயல் தலைவரான தலைவர் பாய்ட் கே. பாக்கர், அவர் என்னுடன் வர முடியுமா என்று அறிய அழைத்தார். நான் ஆச்சரியப்பட்டேன், நிச்சயமாக ஒப்புக்கொண்டேன். அவர் தலைமை தாங்குவதால் எப்படி நடத்த விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். திட்டங்களை தவிர்த்து, ஆவியானவரைப் பின்பற்றத் தயாராக வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். நன்றிகூறும் விதமாக, நான் படிக்கவும், ஜெபிக்கவும் மற்றும் தயார் செய்யவும் இன்னும் 10 நாட்கள் இருந்தன.

ஒரு வெளிப்படையான நிகழ்ச்சி நிரலுடன், தலைமைத்துவக் கூட்டம் தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு நாங்கள் மேடையில் இருந்தோம். நான் பிணையத் தலைவரிடம் சாய்ந்து கிசுகிசுத்தேன், “இது ஒரு அற்புதமான பிணையம்.”

தலைவர் பாக்கர் என்னை மெதுவாக முழங்கையால் குத்தி, “பேசக்கூடாது” என்றார்.

நான் பேசுவதை நிறுத்தினேன், அவருடைய பொது மாநாட்டு செய்தி “பயபக்தி வெளிப்படுத்தலை அழைக்கிறது”11 என் நினைவுக்கு வந்தது. தலைவர் பாக்கர் வேதக் குறிப்புகளை எழுதிக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன். அவர் சந்திப்பிற்கான எண்ணங்களைப் பெறுகிறார் என்பதை ஆவியானவர் எனக்கு உறுதிப்படுத்தினார். எனது கற்றுக்கொள்ளுதல் அனுபவம் அப்போதுதான் தொடங்கியது.

தலைவர் பாக்கர் முதல் 15 நிமிடங்கள் பேசினார் மற்றும் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலின்படி அனைத்து கூட்டங்களையும் நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.12 பின்னர் அவர் கூறினார், “நாம் இப்போது மூப்பர் குக் பேசக் கேட்போம்.”

நான் பிரசங்க மேடைக்குச் செல்லும் வழியில், நான் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள அவர் விரும்புகிறார் என்றும், நான் பேச ஏதேனும் தலைப்பு இருக்கிறதா என்றும் கேட்டேன். அவர் கூறினார், “15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் உணர்த்தப்படுவதை பேசவும்.” நான் சுமார் 14 நிமிடங்கள் எடுத்து என் மனதில் பட்டதை எல்லாம் பகிர்ந்து கொண்டேன்.

தலைவர் பாக்கர் மீண்டும் எழுந்து நின்று மேலும் 15 நிமிடங்கள் பேசினார். அவர் இந்த வசனத்தைப் பகிர்ந்து கொண்டார்:

“நான் உங்கள் இருதயங்களில் கொடுக்கிற சிந்தனைகளை பேசுங்கள், மனுஷர்களுக்கு முன்பாக நீங்கள் கலக்கமடையாதிருப்பீர்கள்;

நீங்கள் என்ன சொல்லவேண்டுமென்பது அப்போதே கொடுக்கப்படும்.13

பின்னர் அவர், “நாம் இப்போது மூப்பர் குக் பேசக் கேட்போம்.”

நான் அதிர்ச்சியடைந்தேன். ஒரு கூட்டத்தில் இரண்டு முறை பேச வேண்டும் என்று கேட்கப்படும் சாத்தியத்தை நான் ஒருபோதும் கருதவில்லை. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உருக்கமாக ஜெபித்து, உதவிக்காக கர்த்தரை நம்பி, எப்படியோ, ஒரு சிந்தனை, ஒரு வசனம் என ஆசீர்வதிக்கப்பட்டேன், மேலும் 15 நிமிடம் பேச முடிந்தது. நான் முற்றிலும் சோர்வுடன் அமர்ந்தேன்.

தலைவர் பாக்கர் 15 நிமிடங்களுக்கு ஆவியானவரைப் பின்பற்றுவதைப்பற்றிப் பேசினார், மேலும் “மனுஷஞானம் பேசுகிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளையே பேச வேண்டும்” என்று பவுலின் போதனைகளைப் பகிர்ந்து கொண்டார்.14 நீங்கள் நினைப்பது போல், “நாம் இப்போது மூப்பர் குக் பேசக் கேட்போம்” என்று மூன்றாவது முறையாக அவர் கூறியதைக் கவனித்த நான் அதிர்ச்சியடைந்தேன். .

நான் வெறுமையானேன். என்னிடம் எதுவுமில்லை. அதிக விசுவாசத்தைப் பிரயோகிப்பதற்கான நேரம் இதுவென நான் அறிந்தேன். மெதுவாக, பிரசங்க மேடைக்கு சென்று, தேவனின் உதவிக்காக கெஞ்சினேன். நான் ஒலிவாங்கியை நோக்கி ஏறியபோது, எப்படியாவது இன்னொரு 15 நிமிட செய்தியைக் கொடுக்கும்படி கர்த்தர் அற்புதமாக ஆசீர்வதித்தார்.15

கடைசியாக அந்த கூட்டம் முடிந்தது. ஆனால் வயதுவந்தோர் கூட்டம் ஒரு மணி நேரத்தில் தொடங்கும் என்பதை உடனே உணர்ந்தேன். இல்லை! சோரமைப் போல, நான் உண்மையாகவே ஓடிப்போக நினைத்தேன். ஆனால் நேபி அவனைப் பிடித்தது போல தலைவர் பாக்கர் என்னைப் பிடிப்பார் என அறிவேன். அதே விதமாக வயதுவந்தோர் கூட்டம் தொடர்ந்தது. நான் மேலும் மூன்று முறை பேசினேன். அடுத்த நாள் பொதுக் கூட்டத்தில் நான் ஒருமுறை பேசினேன்.

மாநாட்டுக்குப் பிறகு, பாசமுடன் தலைவர் பாக்கர் சொன்னார், “இதையே இன்னொரு முறை செய்வோம்.” தலைவர் பாக்கரை நேசிக்கிறேன், நான் கற்றுக்கொண்டவற்றையும் நான் பாராட்டுகிறேன்.

நான் எதற்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன் தெரியுமா? நான் கைவிடவில்லை, அல்லது எதிர்க்கவில்லை. அந்தக் கூட்டங்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற எனது அவநம்பிக்கையான ஆசைக்கு நான் அடிபணிந்திருந்தால், என் விசுவாசத்தை அதிகரிக்கவும், பரலோக பிதாவிடமிருந்து அன்பையும் ஆதரவையும் மிகுதியாகப் பெறுவதற்கான வாய்ப்பை நான் தவறவிட்டிருப்பேன். அவருடைய இரக்கம், இயேசு கிறிஸ்துவின் அற்புத ஆற்றல் மற்றும் அவரது பாவநிவர்த்தி மற்றும் பரிசுத்த ஆவியின் வல்லமைவாய்ந்த செல்வாக்கை நான் கற்றுக்கொண்டேன். எனக்கு பலவீனம் இருந்தாலும்,16 நான் சேவை செய்ய முடியும் என்று கற்றுக்கொண்டேன்; நான் விசுவாசத்துடன் தொடர்ந்து சென்றால், கர்த்தர் என் பக்கத்தில் இருக்கும் போது என்னால் பங்களிக்க முடியும்.

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களின் அளவு, நோக்கம் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், நாம் அனைவரும் நிறுத்துவது, வெளியேறுவது, தப்பிப்பது அல்லது கைவிடுவது போன்ற உணர்வுகளை அனுபவிக்கும் நேரங்கள் உள்ளன. ஆனால், நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது, நாம் என்ன தடைகளை எதிர்கொண்டாலும் மனச்சோர்வைக் கடக்க உதவுகிறது.

இரட்சகர் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முடித்தது போல, நமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க உதவும் வல்லமை அவருக்கு இருக்கிறது.17 உடன்படிக்கையின் பாதையில் அது எவ்வளவு பாறையாக இருந்தாலும், அதன் வழியாக முன்னேறி, இறுதியில் நித்திய ஜீவனைப் பெற நாம் ஆசீர்வதிக்கப்படலாம்.18

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கூறியது போல், “தேவனின் பரிசுத்தவான்களே, உறுதியாக இருங்கள், இன்னும் சிறிது காலம் பொறுங்கள், மற்றும் வாழ்க்கையின் புயல் கடந்துவிடும், நீங்கள் யாருடைய ஊழியர்களோ அந்த தேவனால் நீங்கள் வெகுமதி பெறுவீர்கள்.”19 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. George A. Smith, in Teachings of Presidents of the Church: Joseph Smith (2011), 235.

  2. Teachings: Joseph Smith, 227-36 பார்க்கவும்.

  3. நான் ஊக்கமின்மையைப்பற்றி பேசும்போது, மருத்துவ மனச்சோர்வு, கவலைக் கோளாறுகள் அல்லது பிற நோய்களை அனுபவிக்கும் மக்களுக்குத் தேவையான ஒரே முயற்சி “கிறிஸ்துவை விசுவாசத்துடன் தொடர வேண்டும்” என்று நான் பரிந்துரைக்கவில்லை. இந்த நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கேட்டுக்கொண்டிருக்கும் பிறரை, கர்த்தரை நம்பி மருத்துவம், உளவியல் மற்றும் ஆவிக்குரிய பராமரிப்பைப் பெறுங்கள் என்ற நமது சபைத் தலைவர்களின் அறிவுரையை நான் எதிரொலிக்கிறேன். இந்த தனித்துவமான சவால்களுடன் மல்யுத்தம் செய்யும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இருதயம் செல்கிறது. நாங்கள் உங்களுக்காக சிரத்தையுடன் ஜெபிக்கிறோம்.

  4. வேதங்களில் என்னுடைய சில கதாநாயகர்களில் காலேப்பும் (எண்ணாகமம் 14:6–9, 24 பார்க்கவும்), யோபுவும் (யோபு 19:25–26 பார்க்கவும்) மற்றும் நேபியும் (1 நேபி 3:7 பார்க்கவும்), உட்பட என்னுடைய தற்காலத்துக்கு கூடுதலான கதாநாயகர்கள்.

  5. 1 நேபி 4:20,30–35, 38 பார்க்கவும்.

  6. Dale G. Renlund, “Infuriating Unfairness,” Liahona, May 2021, 41–45 பார்க்கவும்.

  7. 2 நேபி 1:30–32 பார்க்கவும். “[சோரம்] கொஞ்சம் கடினமான கையாளுதலைச் சகிக்க வேண்டியிருந்தது என்றாலும், அவர் சிக்கியிருந்த சூழ்நிலை மூலமாகவே தேவன் அவரை ஆசீர்வதிக்கத் தீர்மானித்தார். அவன் தனது தாயகத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தாலும், தேவன் ஒரு சிறந்த ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருந்தார். (David B. Paxman, “Zoram and I: Getting Our Stories Straight” [Brigham Young University devotional, July 27, 2010], 8, speeches.byu.edu).

  8. டிசம்பர் 11, 2022 அன்று ரிவர்டேல் யூட்டா பிணையத்தில் உள்ள ஒரு தொகுதியில் இந்த சகோதரியின் சாட்சியத்தைக் கேட்டேன். அவள் பகிர்ந்துகொண்ட அனுபவம் முந்தைய ஒரு தொகுதியில் நடந்தது.

  9. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:12–13 பார்க்கவும்.

  10. நவம்பர் 3-4, 2001 அன்று பென்சன் யூட்டா பிணையத்தில் எனது பணி இருந்தது. தலைவர் ஜெர்ரி டூம்ப்ஸ் பிணையத் தலைவராக இருந்தார்.

  11. Boyd K. Packer, “Reverence Invites Revelation,” Ensign, Nov. 1991, 21–23 பா்ாக்கவும்.

  12. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 46:2 பார்க்கவும்.

  13. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 100:5–6; வசனங்கள் 7-8 ஐயும் பார்க்கவும்.

  14. 1 கொரிந்தியர் 2:13.

  15. தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார், “நீங்கள் இதுவரை செய்யாத எதையும் தாண்டி ஆவிக்குரிய ரீதியில் நீட்டினால், [இரட்சகரின்] வல்லமை உங்களுக்குள் பாயும்” (“Drawing the Power of Jesus Christ into Our Lives,” Liahona, May 2017, 42).

  16. ஏத்தேர் 12:27 பார்க்கவும்.

  17. யோவான் 17:4 பார்க்கவும்.

  18. 2 நேபி 31:20; மோசியா 2:41; ஆல்மா 36:3பார்க்கவும்.

  19. Teachings: Joseph Smith, 235.