நான்காவது நாளுக்குப் பின்பு
நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் முன்னேறும்போது, நான்காம் நாள் எப்போதும் வரும். எப்பொழுதும் அவர் நமக்கு உதவிக்கு வருவார்.
இன்று காலை நமக்கு நினைவூட்டப்பட்டபடி, இன்று குருத்தோலை ஞாயிறு, இரட்சகர் வெற்றிகரமாக எருசலேமிற்குள் பிரவேசிப்பதைக் குறிக்கிறது மற்றும் அவரது பாடுகள், சிலுவையில் அறையப்படுதல் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அவரது பெரிய பாவநிவர்த்திக்கு முந்தைய அந்த பரிசுத்த வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
அவர் தீர்க்கதரிசனமாக நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்பே, இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் தனது அன்பு தோழிகளான மரியாள் மற்றும் மார்த்தாள் ஆகியோரிடமிருந்து அவர்களின் சகோதரன் லாசரு நோய்வாய்ப்பட்டிருப்பதாக அவர் அறிந்தார்.1
லாசருவின் நோய் தீவிரமாக இருந்தபோதிலும், கர்த்தர் “இன்னும் இரண்டு நாட்கள் அவர் இருந்த அதே இடத்திலேயே தங்கியிருந்தார். அதன்பின், அவர் தம் சீடர்களை நோக்கி, நாம் மீண்டும் யூதேயாவுக்குப் போவோம் என்றார்.”2 பெத்தானியாவில் உள்ள தனது நண்பர்களின் வீட்டிற்குப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், “இயேசு அவர்களிடம், லாசரு மரித்துப்போனான்” என்று தெளிவாகக் கூறினார்.3
இயேசு பெத்தானியாவிற்கு வந்து, முதலில் மார்த்தாளையும், பின்னர் மரியாளையும் சந்தித்தபோது, ஒருவேளை அவர் தாமதமாக வந்தமைக்கான விரக்தியால், அவர்கள் ஒவ்வொருவரும், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரேயானால், என் சகோதரன் மரிக்கமாட்டான்” என கூறி அவரை வாழ்த்தினர்.4 மார்த்தாள் மேலும் சத்தமிட்டாள், “இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே”5
இந்த நான்கு நாட்கள் மரியாளுக்கும் மார்த்தாளுக்கும் முக்கியமானவை. சில யூத கொள்கைகள்படி, வாழ்வு இன்னும் சாத்தியம் என்ற நம்பிக்கையை அளித்து மரித்தவர்களின் ஆவிகள் மூன்று நாட்களுக்கு சரீரத்துடன் இருக்கும் என்று நம்பப்பட்டது. இருப்பினும், நான்காவது நாளில் அந்த நம்பிக்கை இழக்கப்பட்டது, ஒருவேளை உடல் சிதைந்து “துர்நாற்றம் வீசத் தொடங்கும்.”6
மரியாளும் மார்த்தாளும் விரக்தியில் இருந்தனர். “இயேசு [மரியாள்] அழுவதைக் கண்டபோது … அவர் ஆவியில் கலங்கித் துயரமடைந்தார்.
“அவனை எங்கே வைத்தீர்கள்? என்றார் அவர்கள், ஆண்டவரே வந்து பாரும் என்றார்கள்.”7
இயேசு கல்லறையை அணுகிய இந்த தருணத்தில் தான், அவருடைய அநித்திய ஊழியத்தின் போதுள்ள மாபெரும் அற்புதங்களில் ஒன்றை நாம் காண்கிறோம். முதலில் கர்த்தர், “கல்லை எடுத்துப்போடுங்கள்” என்றார்.8 பின்னர் தம் பிதாவுக்கு நன்றி தெரிவித்தபின், “லாசருவே, வெளியே வா என்று உரத்த குரலில் கூவினார்.
“மரித்தவன் வெளியே வந்தான், அவன் கால்களும் கைகளும் பிரேத சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது; அவனுடைய முகம் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களிடம், “இவனைக் கட்டவிழ்த்து விடுங்கள்” என்றார்9
மரியாளையும் மார்த்தாளையும் போலவே, எல்லா மரணங்களையும், துக்கத்தையும் பலவீனத்தையும் கூட அனுபவிக்க நமக்கு வாய்ப்பு உள்ளது.10 11 நாம் ஒவ்வொருவரும் நாம் விரும்பும் ஒருவரின் இழப்புடன் வரும் இருதய வலியை அனுபவிப்போம். நமது அநித்தியப் பயணத்தில் தனிப்பட்ட நோய் அல்லது நேசிப்பவரின் பலவீனமான நோய்; மனச்சோர்வு, பதட்டம் அல்லது பிற மனநல சவால்கள்; நிதி நெருக்கடி; துரோகம்; பாவம் அடங்கும். மேலும் சில சமயங்களில் இவை நம்பிக்கையற்ற உணர்வுகளுடன் இருக்கும். நான் வித்தியாசமானவன் இல்லை. உங்களைப் போலவே நானும் இந்த வாழ்க்கையில் எதிர்பார்க்கப்படுகிற எண்ணற்ற சவால்களை அனுபவித்திருக்கிறேன். இரட்சகரைப்பற்றிய இந்த விவரம் மற்றும் அவருடனான நமது உறவைப்பற்றி அது எனக்குக் கற்பிக்கிறது.
நம்முடைய மிகப்பெரிய கவலைகளின் போது, மரியாளையும் மார்த்தாளையும் போலவே, நாமும் இரட்சகரைத் தேடுகிறோம் அல்லது அவருடைய தெய்வீக தலையீட்டிற்காக பிதாவிடம் கேட்கிறோம். லாசருவின் கதை, நம்முடைய தனிப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும்போது, நம் சொந்த வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய கொள்கைகளை நமக்குக் கற்பிக்கிறது.
இரட்சகர் பெத்தானியாவுக்கு வந்தபோது, லாசரு காப்பாற்றப்படுவான் என்ற நம்பிக்கையை அனைவரும் இழந்துவிட்டனர், அதற்கு நான்கு நாட்கள் ஆகியிருந்தன, அவன் மரித்துவிட்டான். சில சமயங்களில் நம்முடைய சொந்த சவால்களின் போது, கிறிஸ்து மிகவும் தாமதமாகிவிட்டதாக நாம் உணரலாம், நமது நம்பிக்கையும் விசுவாசமும் சவாலாக உணரலாம். என் சாட்சியும் சாட்சியமும் என்னவென்றால், நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் முன்னேறும்போது, நான்காம் நாள் எப்போதும் வரும். அவர் எப்போதும் நம் உதவிக்கு வருவார் அல்லது நம் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிக்க வருவார். அவர் வாக்களித்திருக்கிறார்:
“உங்கள் இருதயம் கலங்காமலிருப்பதாக.”12
“நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.13
சில சமயங்களில், எல்லா நம்பிக்கையும் இழந்துவிட்டதாகத் தோன்றிய பிறகு, அடையாளப்பூர்வ நான்காம் நாள் வரை அவர் நம்மிடம் வரமாட்டார் என்று தோன்றலாம். ஆனால் ஏன் இவ்வளவு தாமதம்? தலைவர் தாமஸ் எஸ். மான்சன் போதித்தார், “நமக்கு மகிழ்வூட்டுவதற்கு பலவற்றைக் கொடுக்கும் நமது பரலோக பிதா, நாம் கடக்க வேண்டிய சோதனைகளை எதிர்கொண்டு தப்பிப்பிழைக்கும்போது, நாம் கற்றுக்கொள்கிறோம், வளர்கிறோம், பலமாகிறோம் என்பதையும் அறிவார்.”14
ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசி கூட நான்காவது நாள் அனுபவத்தை எதிர்கொண்டார். அவரது வேண்டுகோள் நினைவிருக்கிறதா? “தேவனே, நீர் எங்கே இருக்கிறீர்?” உம்முடைய மறைவான இடத்தை மூடியிருக்கிற கூடாரம் எங்கே?”15 நாம் அவரை நம்பும்போது, இதே போன்ற பதிலை நாம் எதிர்பார்க்கலாம்: “என் மகனே [அல்லது மகளே] உன்னுடைய ஆத்துமாவுக்கு சமாதானம் உண்டாவதாக; உன்னுடைய இக்கட்டுகளும் உன்னுடைய உபத்திரவங்களும் ஒரு சிறிய சமயத்திற்கு மட்டுமே” 16
லாசருவின் கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மற்றொரு செய்தி என்னவென்றால், நாம் தேடும் தெய்வீக தலையீட்டில் நமது சொந்த பங்கு என்னவாக இருக்கும். இயேசு கல்லறையை நெருங்கியதும், முதலில் அங்கிருந்தவர்களிடம், “கல்லை எடுத்துப் போடுங்கள்” 17என்றார். இரட்சகரிடம் இருந்த வல்லமையால், அவர் முயற்சியின்றி கல்லை அற்புதமாக நகர்த்தியிருக்க முடியாதா? இது பார்ப்பதற்கு சுவாரசியமாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் இருந்திருக்கும், ஆனாலும் அவர் மற்றவர்களிடம், “நீங்கள் கல்லை எடுத்துப்போடுங்கள்” என்றார்.
இரண்டாவதாக, கர்த்தர், “லாசருவே, வெளியே வா” என்று உரத்த குரலில் கூப்பிட்டார்.”18 கல்லை அகற்றும் போது கூட்டத்தினருக்கு உடனடியாகத் தெரியும்படி கர்த்தர் தாமே அற்புதமாக லாசருவை திறப்பில் வைத்திருந்தால் அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் அல்லவா?
மூன்றாவதாக, லாசரு வெளியே வந்தபோது, அவன் கால்களும் கைகளும் பிரேத சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது; அவனுடைய முகம் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களிடம், “இவனைக் கட்டவிழ்த்து விடுங்கள், போகட்டும்” என்றார்”19 லாசருவை திறப்பில் நிற்க வைத்து, அணுகக்கூடியதாய் இருக்கும்படி பிரேதச் சீலைகள் ஏற்கனவே சுத்தமாகவும், நன்றாக மடித்து வைக்கப்படும்படி செய்ய தேவன் வல்லவர் என்று நான் நம்புகிறேன்.
இந்த அம்சங்களை முன்னிலைப்படுத்துவதன் பயன் என்ன? இந்த மூன்று காரியங்களில் ஒவ்வொன்றும் பொதுவான ஒன்றைக் கொண்டிருந்தன, எதற்கும் கிறிஸ்துவின் தெய்வீக வல்லமையைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவருடைய சீடர்கள் செய்யக்கூடியதை, அவர்கள் செய்யும்படி அவர் அறிவுறுத்தினார். சீடர்கள் நிச்சயமாக கல்லை தாங்களே நகர்த்திக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தனர்; லாசரு, எழுப்பப்பட்ட பிறகு, குகையின் திறப்பில் நின்று தன்னைக் காட்டிக்கொள்ளும் திறன் பெற்றிருந்தான்; மற்றும் லாசருவை நேசிப்பவர்கள் பிரதேச் சீலைகளை அகற்ற அவனுக்கு முற்றிலும் உதவ முடியும்.
இருப்பினும், லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்பும் வல்லமையும் அதிகாரமும் கிறிஸ்துவுக்கு மட்டுமே இருந்தது. நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று இரட்சகர் எதிர்பார்க்கிறார், மேலும் அவரால் மட்டுமே செய்யக்கூடியதை அவர் செய்வார் என்பது என் எண்ணம்.20
“[கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில்] விசுவாசம் என்பது செயலின் கொள்கை” 21 மற்றும் “அற்புதங்கள் விசுவாசத்தை உருவாக்குவதில்லை, ஆனால் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிவதால் வலுவான விசுவாசம் உருவாகிறது என்பதை நாம் அறிவோம். வேறு வார்த்தைகளில் எனில், விசுவாசம் நீதியால் வருகிறது.”22 பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து, கிறிஸ்துவின் கோட்பாட்டை நம் வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம், நேர்மையாகச் செயல்பட நாம் முயற்சி செய்யும்போது, நம்முடைய விசுவாசம் நம்மை நான்காம் நாள் வரை கொண்டு செல்ல போதுமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கர்த்தருடைய உதவியால் நாம் விரக்தியிலிருந்து எழும் நம் பாதையில் உள்ள கற்களை நகர்த்த முடியும். மேலும் நம்மைப் பிணைக்கும் எல்லாவற்றிலிருந்தும் நம்மைத் தளர்த்திக் கொள்ளலாம். “நம்முடைய வல்லமையில் உள்ள எல்லாவற்றையும்” செய்ய வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கும் அதே வேளையில், 23 நாம் அவரை நம்பும்போது இந்த எல்லாவற்றிலும் அவர் தேவையான உதவியை வழங்குவார் என்பதை நினைவில் வையுங்கள்.
நாம் எப்படி கற்களை நகர்த்தி அவருடைய பாறையின் மீது கட்ட முடியும்?24 தீர்க்கதரிசிகளின் அறிவுரைகளை நாம் பின்பற்றலாம்.
உதாரணமாக, கடந்த அக்டோபரில் தலைவர் ரசல் எம். நெல்சன், இரட்சகர் மற்றும் அவருடைய சுவிசேஷத்தைப் பற்றிய நமது சொந்த சாட்சியங்களுக்கு பொறுப்பேற்குமாறும், அவைகளுக்காக வேலை செய்து அவைகளை வளர்ப்பதற்கும், அவைகளுக்கு உண்மையை ஊட்டுவதற்கும், அவிசுவாசிகளின் பொய்யான தத்துவங்களால் மாசுபடுத்துவதைத் தவிர்ப்பதற்கும் நம்மிடம் கெஞ்சினார். அவர் நம் ஒவ்வொருவருக்கும், “இயேசு கிறிஸ்துவைப்பற்றிய உங்கள் சாட்சியை தொடர்ந்து பலப்படுத்துவதை உங்கள் மிக உயர்ந்த முன்னுரிமையாக ஆக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ்வதை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று வாக்குறுதி அளித்தார்.”25
நாம் இதைச் செய்ய முடியும்!
நாம் எப்படி உருவகமாக எழுந்து வெளியே வர முடியும்? நாம் மகிழ்ச்சியுடன் மனந்திரும்பி, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தேர்ந்தெடுக்கலாம். கர்த்தர் சொன்னார்: “என் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு, அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னில் அன்பாயிருக்கிறான்; என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான், நானும் அவனிடத்தில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.” 26 நாம் தினமும் மனந்திரும்பவும், தேவனிடம் அன்பு நிறைந்த மனதுடன் மகிழ்ச்சியுடன் முன்னேறவும் முயற்சி செய்யலாம்.
நாம் இதைச் செய்ய முடியும்!
தேவனின் உதவியால், நம்மைப் பிணைக்கும் எல்லாவற்றிலிருந்தும் நாம் எவ்வாறு விடுபட முடியும்? உடன்படிக்கைகள் மூலம் நமது பரலோக பிதாவும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனும் வேண்டுமென்றே முதலில் நம்மைப் பிணைத்துக் கொள்ளலாம். மூப்பர் டி. டாட் கிறிஸ்டோபர்சன் போதித்தார்: “[நம்முடைய] தார்மீக மற்றும் ஆவிக்குரிய வல்லமையின் ஆதாரம் என்ன, அதை நாம் எவ்வாறு பெறுவது? தேவனே ஆதாரம். அந்த வல்லமையை நாம் அணுகுவது அவருடனான நமது உடன்படிக்கைகள் மூலமாகும். … இந்த தெய்வீக உடன்படிக்கைகளில், தேவனுக்குச் சேவை செய்வதற்கும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கும் நம் அர்ப்பணிப்புக்குப் பிரதிபலனாக, நம்மை நிலைநிறுத்தவும், பரிசுத்தப்படுத்தவும், உயர்த்தவும் தேவன் தன்னைக் கட்டுகிறார்.”27 நாம் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து அவைகளைக் கைக்கொள்ளமுடியும்.
நாம் இதைச் செய்ய முடியும்!
“நீங்கள் கல்லை எடுத்துப் போடுங்கள்.” “முன்னால் வாருங்கள்.” இவனைக் கட்டவிழ்த்து விடுங்கள், போகட்டும்.”
ஆலோசனைகள், கட்டளைகள் மற்றும் உடன்படிக்கைகள். நாம் இதைச் செய்ய முடியும்!
மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட், “சில ஆசீர்வாதங்கள் விரைவில் வரும், சில தாமதமாக வரும், சில பரலோகம் வரை வராது; ஆனால் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தழுவுபவர்களுக்கு அவைகள் வருகிறது.”.”28
இறுதியாக, “ஆதலால், திடன் கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள், ஏனெனில் கர்த்தராகிய நான் உங்களுடனேயே கூட இருக்கிறேன், உங்களுக்கு பக்கத்திலே நிற்பேன்”29
எப்பொழுதும் வரப்போகும் அவருடைய பரிசுத்த நாமத்தில், இதுவே என் சாட்சியும் சாட்சியமும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.