பொது மாநாடு
சந்தோஷத்தின் ஒரு குரல்!
ஏப்ரல் 2023 பொது மாநாடு


சந்தோஷத்தின் ஒரு குரல்!

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் முதல் அனைத்து தீர்க்கதரிசிகளின் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்று ஆலயங்களை கட்டுதல்.

“இப்போது, நாம் பெற்ற சுவிசேஷத்தில் நாம் என்ன கேட்கிறோம்? சந்தோஷத்தின் ஒரு குரல்! வானத்திலிருந்து இரக்கத்தின் குரலை, பூமியிலிருந்து சத்தியத்தின் குரலை; ஜீவிப்பவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் சந்தோஷத்தின் குரலை; மகா சந்தோஷத்தின் நற்செய்திகள்.”1

சகோதர சகோதரிகளே, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டு ஒரு பெரிய புன்னகையை பூக்காமலிருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது!

ஜோசப்பின் மகிழ்ச்சியான வெளிப்பாடு, நம்முடைய பரலோக பிதாவின் மகிழ்ச்சிக்கான மாபெரும் திட்டமான தேவனில் காணப்படும் முழுமையான மற்றும் கம்பீரமான மகிழ்ச்சியை உண்மையாகப் படம் பிடிக்கிறது, ஏனென்றால் நமக்கு அவர் உறுதியளித்தபடி, ““சந்தோஷமாயிருக்கவே மனுஷன் இருக்கிறான்”2

தேவனின் மகிழ்ச்சியின் திட்டத்தைக் கேட்டவுடன், நாம் அனைவரும் நமது அநித்தியத்திற்கு முந்தைய வாழ்க்கையில் மகிழ்ச்சியில் கத்தினோம்,3 மேலும் அவருடைய திட்டத்தின்படி நாம் வாழ்கிறோம் என இங்கு தொடர்ந்து மகிழ்ச்சியுடன் கத்துகிறோம். ஆனால் தீர்க்கதரிசியின் இந்த மகிழ்ச்சியான அறிவிப்புக்கான சூழல் சரியாக என்ன? இந்த ஆழமான மற்றும் இருதயப்பூர்வமான உணர்ச்சிகளைத் தூண்டியது எது?

மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் கொடுப்பதைப்பற்றி தீர்க்கதரிசி ஜோசப் போதித்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் பெறப்பட்ட இது உண்மையிலேயே ஒரு மகிமையான வெளிப்பாடாகும். மரித்த தங்கள் அன்புக்குரியவர்களுக்காக ஞானஸ்நானம் பெறலாம் என்பதை சபை உறுப்பினர்கள் முதலில் அறிந்தபோது, அவர்கள் களிகூர்ந்தனர். வில்போர்ட் வுட்ரப் கூறினார், “நான் அதைக் கேட்டவுடன், என் ஆத்துமா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது!”4

மரித்த நம் அன்புக்குரியவர்களுக்கான ஞானஸ்நானம் மட்டுமே தேவன் வெளிப்படுத்தும், மறுஸ்தாபிதம் செய்யும் ஒரே சத்தியம் அல்ல. தேவன் தனது மகன்களுக்கும் மகள்களுக்கும் அருள ஆர்வமாக இருந்த ஒரு தொகுப்பின் பிற ஏராளமான வரங்கள் அல்லது தரிப்பித்தல்கள் இருந்தன.

இந்த மற்ற வரங்களில் ஆசாரியத்துவ அதிகாரம், உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள், என்றென்றும் நீடிக்கும் திருமணங்கள், தேவனின் குடும்பத்தில் பிள்ளைகளை தங்கள் பெற்றோருடன் முத்திரித்தல், இறுதியில் நம் பரலோக பிதாவான தேவன் மற்றும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் வீடு திரும்புவதற்கான ஆசீர்வாதம் ஆகியவை அடங்கும். இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்தியின் மூலம் சாத்தியமானது

தேவன் இவற்றைத் தம்முடைய மிக உயர்ந்த மற்றும் பரிசுத்தமான ஆசீர்வாதங்களில் ஒன்றாகக் கருதியதால்,5 இந்த விலையேறப்பெற்ற வரங்களை அவருடைய பிள்ளைகள் மேல் அருளும்படியாக, பரிசுத்தமான கட்டிடங்களை எழுப்பும்படி அவர் அறிவுறுத்தினார்.6 இந்த கட்டிடங்கள் பூமியில் அவருடைய வீடாக இருக்கும். அவருடைய பெயராலும் அவருடைய வார்த்தையாலும் அவருடைய அதிகாரத்தாலும் பூமியில் முத்திரையிடப்பட்ட இந்தக் கட்டிடங்கள் ஆலயங்களாக இருக்கும்.7

இன்று சபையின் உறுப்பினர்களாகிய நம்மில் சிலர், இந்த மகிமையான நித்திய சத்தியங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்வது எளிது. அவைகள் நமக்கு இரண்டாவது இயல்பாக ஆகிவிட்டன. சில சமயங்களில் முதன்முறையாக அவைகளைப்பற்றி அறிந்துகொள்பவர்களின் கண்களால் அவற்றைப் பார்க்கும்போது அது உதவியாக இருக்கும். இது சமீபத்திய அனுபவத்தின் மூலம் எனக்குப் புலப்பட்டது.

கடந்த ஆண்டு, டோக்கியோ ஜப்பான் ஆலயத்தின் மறுபிரதிஷ்டைக்கு சற்று முன்பு, நம் மத நம்பிக்கை இல்லாத பல விருந்தினர்கள் அந்த ஆலயத்தை சுற்றிப்பார்த்தனர். அத்தகைய ஒரு உலாவில் மற்றொரு மதத்தைச் சேர்ந்த சிந்தனைமிக்க தலைவர் ஒருவர் இருந்தார். பரலோக பிதாவின் மகிழ்ச்சிக்கான திட்டத்தைப்பற்றியும், அந்தத் திட்டத்தில் இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பங்கு மற்றும் முத்திரித்தலின் நியமத்தின் மூலம் குடும்பங்கள் என்றென்றும் ஒன்றுபட முடியும் என்ற கோட்பாட்டைப்பற்றியும் எங்கள் விருந்தினருக்கு நாங்கள் கற்பித்தோம்.

எங்கள் உலாவின் முடிவில், எங்கள் நண்பரின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள அவரை நான் அழைத்தேன். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றில் குடும்பங்கள் ஒன்றிணைவதைக் குறிப்பிடுகையில், இந்த நல்ல மனிதர், “இந்தக் கோட்பாடு எவ்வளவு ஆழமானது என்பதை உங்கள் விசுவாசத்தின் உறுப்பினர்கள் உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்களா?” என்று முழு நேர்மையுடன் கேட்டார். அவர் மேலும் கூறினார், “இது மிகவும் பிளவுபட்டுள்ள இந்த உலகத்தை ஒன்றிணைக்கும் ஒரே போதனைகளில் ஒன்றாக இருக்கலாம்.”

என்ன ஒரு ஆற்றல் வாய்ந்த கவனிப்பு! இந்த மனிதன் வெறுமனே ஆலயத்தின் நேர்த்தியான கைவினைத்திறனால் ஈர்க்கப்படவில்லை, மாறாக குடும்பங்கள் ஒன்றுபட்டுள்ளன, பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் என்றென்றும் பிணைக்கப்பட்டு முத்திரிக்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சியூட்டும் மற்றும் ஆழமான கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டார்.8

அப்படியானால், ஆலயத்தில் நடக்கும் மகத்துவத்தை நம் மதநம்பிக்கை இல்லாத ஒருவர் கூட உணர்ந்தால் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. நமக்கு பொதுவானதாகவோ அல்லது வாடிக்கையாகவோ மாறக்கூடியவை சில சமயங்களில் முதல் முறையாக அதைக் கேட்பவர்கள் அல்லது உணருபவர்களால் அதன் சிறப்பிலும் கம்பீரத்திலும் காணப்படுகின்றன.

பண்டைய காலத்தில், இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்துடன், ஆலயங்கள் இருந்தபோதிலும், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் முதல் அனைத்து தீர்க்கதரிசிகளின் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாக ஆலயங்களை கட்டுதல் இருக்கிறது. ஏன் என்பதை புரிந்துகொள்வது எளிது.

மரித்தவர்களுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி தீர்க்கதரிசி ஜோசப் போதிக்கும் போது, மற்றொரு பெரிய சத்தியத்தை வெளிப்படுத்தினார். அவர் போதித்தார்: “இவை மரித்தவர்களுடனும் உயிரோடிருப்பவர்களுடனும் சம்பந்தப்பட்ட கொள்கைகள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நமது இரட்சிப்பைப் பொறுத்தவரை இலகுவாக கடந்து செல்ல முடியாதவை . “ஏனெனில் அவர்களுடைய இரட்சிப்பு நமது இரட்சிப்புக்கு தேவையாகவும் அவசியமாகவும் இருக்கிறது … நாமில்லாமல் அவர்கள் பரிபூரணமடைய முடியாது, நமது மரித்தவர்களில்லாமல் நாமும் பரிபூரணமடைய முடியாது.”9

நாம் பார்க்கும்படியாக, ஆலயங்களுக்கான தேவையும், உயிருள்ளவர்களுக்கும், மரித்தவர்களுக்கும் செய்யப்படும் பணிகளும் மிகத் தெளிவாகிறது.

சத்துரு எச்சரிக்கையுடன் இருக்கிறான். ஆலயங்களில் செய்யப்படும் நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகளால் அவனது அதிகாரம் அச்சுறுத்தப்படுகிறது, பணியை நிறுத்த முயற்சி செய்கிறான். ஏன்? ஏனென்றால் இந்த பரிசுத்த பணியில் இருந்து வரும் வல்லமை அவனுக்குத் தெரியும். ஒவ்வொரு புதிய ஆலயமும் அர்ப்பணிக்கப்படும்போது, சத்துருவின் முயற்சிகளை முறியடிக்கவும், நாம் அவரிடம் வரும்போது நம்மை மீட்கவும் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் வல்லமை உலகம் முழுவதும் விரிவடைகிறது. ஆலயங்களும் உடன்படிக்கையை கைக்கொள்ளுபவர்களின் எண்ணிக்கையும் வளர வளர, எதிரி பலவீனமாகிறான்.

சபையின் ஆரம்ப நாட்களில், புதிய ஆலயம் எப்போது அறிவிக்கப்படும் என்று சிலர் கவலைப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் சொல்வார்கள், “பாதாளத்தின் மணிகள் அடிக்கத் தொடங்காமல் நாங்கள் ஒரு ஆலயத்தைக் கட்டத் தொடங்கவில்லை.” ஆனால் ப்ரிகாம் யங் தைரியமாக பதிலளித்தார், “அவைகள் மீண்டும் ஒலிப்பதை நான் கேட்க விரும்புகிறேன்.”10

இந்த அநித்திய வாழ்க்கையில், நாம் ஒருபோதும் போரிலிருந்து தப்பிக்க மாட்டோம், ஆனால் நாம் சத்துருவின் மீது அதிகாரத்தை வைத்திருக்க முடியும். ஆலய உடன்படிக்கைகளை நாம் செய்து கடைபிடிக்கும்போது அந்த வல்லமையும் பலமும் இயேசு கிறிஸ்துவிடமிருந்து வருகிறது.

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்: “கர்த்தருக்குக் கீழ்ப்படியாதவர்கள் கீழ்ப்படிபவர்களிடமிருந்து பிரிக்கப்படும் காலம் வருகிறது. நமது பாதுகாப்பான காப்பீடு, அவருடைய பரிசுத்த வீட்டில் தொடர்ந்து சேர்க்கப்படுவதற்குத் தகுதியுடையவர்களாக இருப்பதே ஆகும்.”11

தேவன் தனது தீர்க்கதரிசி மூலம் நமக்கு வாக்களித்த சில கூடுதல் ஆசீர்வாதங்கள் இங்கே உள்ளன.

உங்களுக்கு அற்புதங்கள் தேவையா? நமது தீர்க்கதரிசி கூறினார்: “அவருடைய ஆலயங்களில் சேவை செய்வதற்கும் வழிபடுவதற்கும் நீங்கள் தியாகங்களைச் செய்யும்போது, உங்களுக்குத் தேவையான அற்புதங்களை கர்த்தர் கொண்டு வருவார் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.”12

இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் குணப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும் வல்லமை உங்களுக்குத் தேவையா? தலைவர் நெல்சன் நமக்கு உறுதியளிக்கிறார், “ஆலயத்தில் கற்பிக்கப்படும் அனைத்தும் … இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நமது புரிதலை அதிகரிக்கிறது. நாம் நமது உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது, அவர் தம்முடைய குணமாக்கும், பலப்படுத்தும் வல்லமையை நமக்குத் தரிப்பிக்கிறார்.” வரும் நாட்களில் அவருடைய வல்லமை எப்படி நமக்குத் தேவைப்படும்.”13

முதல் குருத்தோலை ஞாயிறு அன்று இயேசு கிறிஸ்து வெற்றிசிறக்க எருசலேமில் பிரவேசித்தபோது, ​​இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் திரளான மக்கள் மகிழ்ச்சியடைந்து உரத்த குரலில் தேவனைத் துதித்தனர்: “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.”14

1836-ம் ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று, கர்த்லாந்து ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டது எவ்வளவு பொருத்தமானது. அந்தச் சந்தர்ப்பத்தில் இயேசு கிறிஸ்துவின் சீடர்களும் மகிழ்ந்தனர். அந்த பிரதிஷ்டை ஜெபத்தில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் இந்த பாராட்டு வார்த்தைகளை அறிவித்தார்:

“சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களுக்குச் செவிகொடும் … மகிமையுடனும், கனத்துடனும், வல்லமையுடனும், மகத்துவத்துடனும், [மற்றும்] வல்லமையுடனும் நீர் அமர்ந்திருக்கிற வானத்திலிருந்து எங்களுக்குப் பதில் அளியும் …

“தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஓசன்னா பாடி, துதியின் ஆரவாரத்துடன், உமது சிங்காசனத்தைச் சுற்றியுள்ள அந்த பிரகாசமான ஜொலிக்கும் கேரூபீன்களுடன் எங்களுடைய சத்தங்களைக் கலக்கும்படியாக உமது ஆவியின் வல்லமையால் எங்களுக்குதவும்!

“இந்த … உமது பரிசுத்தவான்கள் மிகவும் மகிழ்ச்சியாக கெம்பீரிப்பார்களாக.”15

சகோதர சகோதரிகளே, இன்று இந்த குருத்தோலை ஞாயிறு அன்று, இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாமும் நம்முடைய பரிசுத்த தேவனை துதித்து, அவர் நமக்கு செய்த நன்மையில் மகிழ்வோம். “இப்போது, நாம் பெற்ற சுவிசேஷத்தில் நாம் என்ன கேட்கிறோம்? “உண்மையாகவே சந்தோஷத்தின் ஒரு குரல்!”16

நீங்கள் கர்த்தருடைய பரிசுத்த ஆலயங்களுக்குள் பிரவேசிக்கும்போது இந்த மகிழ்ச்சியை மேலும் மேலும் உணர்வீர்கள் என்று நான் சாட்சியமளிக்கிறேன். பதிலாக, உங்களுக்காக அவர் வைத்திருக்கிற மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிப்பீர்கள் என இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

அச்சிடவும்