பொது மாநாடு
இயேசு கிறிஸ்துவின் போதனைகள்
ஏப்ரல் 2023 பொது மாநாடு


14:7

இயேசு கிறிஸ்துவின் போதனைகள்

நம் வாழ்க்கையை வழிநடத்த வேதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைய எனது செய்தியில், நமது இரட்சகரின் வார்த்தைகள், அவர் என்ன சொன்னார் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டவையைக் கொண்டுள்ளது.

நாங்கள் கிறிஸ்துவை நம்புகிறோம். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்களாக, நாம் அவரை வணங்குகிறோம் மற்றும் வேதத்தில் உள்ள அவருடைய போதனைகளைப் பின்பற்றுகிறோம்.

வீழ்ச்சிக்கு முன், நமது பரலோக பிதா ஆதாமிடமும் ஏவாளிடமும் நேரடியாகப் பேசினார். அதன்பிறகு, பிதா தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும் மீட்பராகவும் அறிமுகப்படுத்தி, “அவருக்குச் செவிகொடுங்கள்” என்று கட்டளையிட்டார்.1 இந்த வழிகாட்டுதலில் இருந்து, “தேவன்” அல்லது “கர்த்தர்” பேசும் வார்த்தைகளின் வேதப் பதிவுகள் எப்பொழுதும் யேகோவா, நம் உயிர்த்தெழுந்த கர்த்தர், இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் என்று முடிவு செய்கிறோம்.2

நம் வாழ்க்கையை வழிநடத்த வேதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. “கிறிஸ்துவின் வார்த்தைகளின்மீது உண்டு களியுங்கள், ஏனெனில் இதோ நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் அனைத்தையும் கிறிஸ்துவின் வார்த்தைகள் உங்களுக்குத் தெரிவிக்கும்.”3 இயேசுவின் அநித்தியத்தின் ஊழியங்களைப்பற்றி அறிவிக்கும் பெரும்பாலான வேதங்கள் அவர் செய்தவற்றைப்பற்றிய விளக்கங்களாகும். இன்றைய எனது செய்தியில், நமது இரட்சகரின் வார்த்தைகள், அவர் என்ன சொன்னார் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவை புதிய ஏற்பாட்டில் (ஜோசப் ஸ்மித்தின் உணர்த்தப்பட்ட சேர்க்கைகள் உட்பட) மற்றும் மார்மன் புஸ்தகத்தில் பதிவுசெய்யப்பட்ட வார்த்தைகள். இந்தத் தேர்ந்தெடுப்புகளில் பெரும்பாலானவை நம் இரட்சகர் பேசிய வரிசையில் உள்ளன.

“இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.”4

நீதியின்மேல் பசியும் தாகமும் உள்ள யாவரும் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிறைக்கப்படுவார்கள்.5

“சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.”6

“விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.”7

“உனக்கடுத்தவனை சிநேகித்து, உன் சத்துருவை பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

“இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.”8

“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.”

“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.”9

“நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.”10

“ஆனால் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”11

“ஆதலால் மனுஷர் உங்களுக்கு எவைகளை செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.”12

“கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், ஆனால் உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

“அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

“அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்” 13

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”14

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

“என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”15

“ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

“இப்போது ஒரு மனிதன் தன் சிலுவையை எடுத்துக்கொள்வது, எல்லா தேவபக்தியையும், எல்லா உலக இச்சைகளையும் மறுதலித்து, என் கட்டளைகளைக் கடைபிடிப்பதாகும்.”16

“ஆகையால், உலகத்தைக் கைவிட்டு, உங்கள் ஆத்துமாக்களைக் காப்பாற்றுங்கள்; ஒரு மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தி, தன் ஆத்துமாவை இழந்தால் அவனுக்கு என்ன லாபம்? அல்லது மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?”17

“அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.”18

“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

“கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்: தேடுகிறவன் கண்டடைகிறான்: தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.” 19

“இந்தத் தொழுவத்திலுள்ளவைகளெல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.”20

“இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.”

“உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.”21

பிரமாணத்தின் பிரதான கற்பனையாவது “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.

“இது முதலாம் பிரதான கற்பனை.

“இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக.”

“இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.”22

“என் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு, அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னில் அன்பாயிருக்கிறான்; என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான், நானும் அவனிடத்தில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.” 23

“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.”24

“நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.”25

“நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே.”26

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.27

பரிசுத்த தேசத்தில் அவருடைய ஊழியத்திற்குப் பிறகு, அவர் அமெரிக்க கண்டத்தில் உள்ள நீதிமான்களுக்குத் தோன்றினார். அங்கு அவர் பேசிய சில வார்த்தைகள் இவை.

“நானே தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து. நான் வானத்தையும் பூமியையும் மற்றும் அவைகளிலுள்ள யாவையும் சிருஷ்டித்தேன். நான் ஆதியிலிருந்தே பிதாவோடு இருந்தேன். நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறார்; என்னிலே பிதா தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தினார்.”28

“நானே உலகத்தின் ஒளியும் ஜீவனுமாயிருக்கிறேன். நானே அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்.

“இனி இரத்தம் சிந்துதலை எனக்கு நீங்கள் படைக்கவேண்டாம்; ஆம், உங்களுடைய பலிகளும் உங்களுடைய தகன பலிகளும் ஒழிக்கப்படும். ஏனெனில் நான் உங்களுடைய எந்த பலிகளையும் தகனபலிகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.

“நீங்கள் எனக்கு உடைந்த இருதயத்தையும், நொருங்குண்ட ஆவியையும் எனக்கு பலியாக செலுத்துங்கள். என்னிடத்தில் உடைந்த இருதயத்தோடும் நொருங்குண்ட ஆவியோடும் வருகிற எவருக்கும் அக்கினியாலும் பரிசுத்த ஆவியானவராலும் ஞானஸ்நானம் கொடுப்பேன். …

“இதோ, உலகத்தைப் பாவத்திலிருந்து இரட்சிக்கும்படி உலகத்திற்கு மீட்பைக் கொண்டுவருவதற்கே நான் உலகத்திற்கு வந்தேன்.”29

“மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பி என் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவேண்டும், ஒரு சிறு பிள்ளையைப் போலாகிட வேண்டும். இல்லாவிடில் நீங்கள் ஒருபோதும் தேவனின் ராஜ்யத்தைச் சுதந்தரிக்க முடியாது.”30

“ஆதலால், பூரண சற்குணராயிருக்கிற என்னைப்போலவோ, அல்லது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவைப் போலவோ, நீங்களும் பூரண சற்குணராயிருக்க வேண்டும் என நான் வாஞ்சிக்கிறேன்.”31

“மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் விழித்திருந்து எப்பொழுதும் ஜெபிக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் பிசாசினால் சோதிக்கப்பட்டு, அவனால் சிறைக்கைதியாய் நடத்திச் செல்லப்படுவீர்கள்.”32

“ஆதலால் நீங்கள் எப்பொழுதும் என் நாமத்தினாலே பிதாவிடத்தில் ஜெபிக்கவேண்டும்.”33

“ஆதலால் நீங்கள் எதைச் செய்தாலும், அதை என் நாமத்தினாலே செய்யுங்கள்; ஆதலால் நீங்கள் சபையை என் நாமத்தினால் அழையுங்கள்.”34

அவர் சொன்னார்: “இதோ என் சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன், நான் உங்களுக்குக் கொடுத்த சுவிசேஷம் இதுவே, என் பிதா என்னை அனுப்பினதினிமித்தம், என் பிதாவின் சித்தத்தைச் செய்யவே நான் உலகத்தில் வந்தேன்.

“நான் சிலுவையில் உயர்த்தப்படவும், நான் சிலுவையின்மேல் உயர்த்தப்பட்ட பின்பு, நான் எல்லா மனுஷரையும் என்னிடத்தில் இழுக்கும்படியாகவும், … தங்களுடைய கிரியைகள் நன்மையானவையோ, அல்லது தீமையானவையோவென்று நியாயந்தீர்க்கப்படும் பொருட்டே என் பிதா என்னை அனுப்பினார்.”35

“இப்பொழுது இதுவே கட்டளையாயிருக்கிறது, பூமியின் கடையாந்திரங்களே நீங்கள் மனந்திரும்பி என்னிடத்தில் வந்து என் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதனாலே சுத்திகரிக்கப்பட்டு கடைசி நாளில் எனக்கு முன்பாக கறைதிரையற்றவர்களாக நிற்பீர்கள்.”36

நாங்கள் கிறிஸ்துவை நம்புகிறோம். அவருடைய போதனைகளை நாம் எப்படி அறிந்து பின்பற்ற வேண்டும் என்று அவர் சொன்னதுடன் நான் முடிக்கிறேன்:

“என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.”37

இந்த போதனைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்