பொது மாநாடு
சமாதானம் பண்ணுபவர்கள் தேவை
ஏப்ரல் 2023 பொது மாநாடு


19:4

சமாதானம் பண்ணுபவர்கள் தேவை

பிணக்கு அல்லது ஒப்புரவாதலை தேர்ந்தெடுக்க உங்கள் சுயாதீனம் உங்களிடம் உள்ளது. இப்போதும் எப்பொழுதும் சமாதானம் பண்ணுகிறதைத் தேர்ந்தெடுக்கும்படி நான் உங்களை வலியுறுத்துகிறேன்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இந்த ஆறு மாதங்களில், நீங்கள் தொடர்ந்து என் மனதிலும், என் ஜெபங்களிலும் இருந்தீர்கள். நான் இப்போது உங்களிடம் பேசும்போது, கர்த்தர் நீங்கள் கேட்க விரும்புவதைப் பரிசுத்த ஆவியானவர் தெரிவிக்கும்படி நான் ஜெபிக்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, எனது அறுவை சிகிச்சைப் பயிற்சியின் போது, அதிக தொற்றுள்ள குடற்புழுக்களால் நிரம்பிய ஒரு காலை துண்டித்துக்கொண்டிருக்கும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணருக்கு நான் உதவினேன். அறுவை சிகிச்சை கடினமாக இருந்தது. பின்னர், பதற்றத்தை அதிகரிக்க, குழுவில் ஒருவர் ஒரு பணியை மோசமாகச் செய்தார், அறுவை சிகிச்சை நிபுணர் கோபத்தில் வெடித்தார். அவரது கோபத்தின் நடுவில், அவர் கிருமிகள் நிறைந்த தனது கத்தியை வீசினார். அது என் முன்கையில் விழுந்தது!

கட்டுப்பாட்டை இழந்த அறுவை சிகிச்சை நிபுணரைத் தவிர அறுவை சிகிச்சை அறையில் இருந்த அனைவரும், இந்த ஆபத்தான அறுவை சிகிச்சை முறை மீறலால் திகிலடைந்தனர். நன்றிபாராட்டும் விதமாக, நான் நோய்த்தொற்றுக்கு ஆளாகவில்லை. ஆனால் இந்த அனுபவம் என்னுள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், என் அறுவை சிகிச்சை அறையில் என்ன நடந்தாலும், என் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டை நான் ஒருபோதும் இழக்க மாட்டேன் என்று எனக்கு நானே உறுதியளித்தேன். கோபத்தில் எதையும் வீசமாட்டேன் என்று அன்றைய தினம் நான் சபதம் செய்தேன், அது கத்திகளாக இருந்தாலும் சரி, வார்த்தைகளாக இருந்தாலும் சரி.

இப்போதும், பல தசாப்தங்களுக்குப் பிறகு, இன்று நம் சமூக உரையாடல்களையும் பல தனிப்பட்ட உறவுகளையும் பாதிக்கும் விஷமான சர்ச்சையை விட என் கையில் விழுந்த அசுத்தமான கத்தி அதிக நச்சுத்தன்மையுள்ளதா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். மாறுபட்ட கருத்துக்களின், உணர்ச்சிமிக்க கருத்து வேறுபாடுகளின் இந்த காலகட்டத்தில் நாகரீகமும் கண்ணியமும் மறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது.

அநாகரிகம், குறைகளைக் கண்டறிதல் மற்றும் பிறரைப்பற்றித் தீமையாகப் பேசுதல் ஆகிய அனைத்தும் மிகவும் பொதுவானவை. பல பண்டிதர்கள், அரசியல்வாதிகள், கேளிக்கையாளர்கள் மற்றும் பிற செல்வாக்கு உடையவர்கள் தொடர்ந்து அவமானங்களை வீசுகிறார்கள். தங்களுடன் உடன்படாத எவரையும் கண்டிப்பதும், தீங்கிழைப்பதும், இழிவுபடுத்துவதும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று பலர் நம்புவது எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. பரிதாபகரமான மற்றும் கேவலமான வார்த்தைகளால் மற்றொருவரின் நற்பெயரை சேதப்படுத்த பலர் ஆர்வமாக உள்ளதாகத் தோன்றுகிறது!

கோபம் ஒருபோதும் வற்புறுத்துவதில்லை. விரோதம் யாரையும் உருவாக்காது. சர்ச்சை ஒருபோதும்உணர்த்தப்பட்ட தீர்வுகளுக்கு வழிவகுக்காது. துரதிர்ஷ்டவசமாக, சில சமயங்களில் நமது சொந்த அணிகளுக்குள்ளும் கூட சர்ச்சைக்குரிய நடத்தையைப் பார்க்கிறோம். தங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் இழிவுபடுத்துபவர்கள், மற்றவர்களைக் கட்டுப்படுத்த கோபமான மூர்க்கத்தனங்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் “பேசாமலிருந்து தண்டிப்பதைப்பற்றி” நாம் கேள்விப்படுகிறோம். கொடுமைப்படுத்தும் இளைஞர்களையும் பிள்ளைகளையும், சக ஊழியர்களை இழிவுபடுத்தும் ஊழியர்களைப்பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, இது கூடாது. இயேசு கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம், குறிப்பாக நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கும்போது, மற்றவர்களுடன் எவ்வாறு பழக வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுபவரை அடையாளம் காண்பதற்கான எளிதான வழிகளில் ஒன்று, அந்த நபர் மற்றவர்களிடம் எவ்வளவு இரக்கத்துடன் நடந்துகொள்கிறார் என்பதுதான்.

இரண்டு அரைக்கோளங்களிலும் பின்பற்றுபவர்களுக்கு தனது பிரசங்கங்களில் இரட்சகர் இதை தெளிவாக்கினார். “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்,” என்றார்.1 “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.”2 பின்னர், நிச்சயமாக, அவர் நம் ஒவ்வொருவருக்கும் சவால் விடுக்கும் அறிவுரையை வழங்கினார்: “உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்புறுத்துபவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.”3

அவருடைய மரணத்திற்கு முன், இரட்சகர் தம்முடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் அவர் அன்பாயிருந்ததைப்போல ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி கட்டளையிட்டார்.4 பின்பு, “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று சொன்னார்.5

இரட்சகரின் செய்தி தெளிவாக உள்ளது: அவருடைய உண்மையான சீடர்கள், எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும், கட்டியெழுப்புகிறார்கள், உயர்த்துகிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள், அறிவுறுத்துகிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடர்கள் சமாதானம்பண்ணுகிறவர்கள்.6

இன்று குருத்தோலை ஞாயிறு. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் உயிர்த்தெழுதலான பூமியில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக உன்னதமான நிகழ்வை நினைவுகூர நாங்கள் தயாராகி வருகிறோம். இரட்சகரை நாம் மதிக்கும் சிறந்த வழிகளில் ஒன்று சமாதானம் பண்ணுகிறவர்களாக மாறுவது.7

சச்சரவு உட்பட எல்லாத் தீமைகளையும் வெல்வதை இரட்சகரின் பாவநிவர்த்தி, நமக்கு சாத்தியமாக்கியது. இதில் எந்த தவறும் செய்யாதிருங்கள்: சச்சரவு தீயது! பிணக்கின் ஆவியை உடையவன் என்னுடையவன் அல்ல, பிணக்குகளின் தகப்பனாகிய பிசாசினுடையவன். அவன் மனுஷர் ஒருவரோடு ஒருவர் கோபத்தோடு சண்டையிடவேண்டுமென்று அவர்களுடைய இருதயங்களைத் தூண்டிவிடுகிறான்.” 8 சச்சரவை வளர்ப்பவர்கள் உணர்ந்தோ உணராமலோ சாத்தானின் நாடகப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை எடுத்துக்கொள்கிறார்கள். “இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் முடியாது.”9 நம்முடைய வாய்மொழி தாக்குதல்களால் சாத்தானை ஆதரிக்க முடியாது, அத்துடன் நாம் இன்னமும் தேவனுக்கு சேவை செய்ய முடியும் என்று நினைக்க முடியாது.

என் அன்பான சகோதர சகோதரிகளே, நாம் ஒருவரையொருவர் எப்படி நடத்துகிறோம் என்பது மிகவும் முக்கியமானது! வீட்டில், சபையில், பணியிடத்தில் மற்றும் ஆன்லைனில் மற்றவர்களிடம் எப்படிப் பேசுகிறோம், மற்றவர்களைப்பற்றி எப்படிப் பேசுகிறோம் என்பது முக்கியம். இன்று, மற்றவர்களுடன் உயர்ந்த, பரிசுத்தமான முறையில் தொடர்பு கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். கவனமாகக் கேளுங்கள். “உத்தமமானவை, அழகானவை அல்லது, நற்கீர்த்தியுள்ளவை அல்லது, புகழத்தக்கவை எதாவதிருந்தால்”10 அவரது முகத்திலோ அல்லது அவள் முதுகுக்குப் பின்னோ, மற்றொரு நபரைப்பற்றி நாம் கூறலாம், அதுதான் நமது தகவல்தொடர்பு தரமாக இருக்க வேண்டும்.

உங்கள் தொகுதியிலுள்ள ஒரு ஜோடி விவாகரத்து செய்துவிட்டால், அல்லது ஒரு இளம் ஊழியக்காரர் வீட்டிற்கு சீக்கிரம் திரும்பினால், அல்லது ஒரு வாலிபர் அவருடைய சாட்சியத்தை சந்தேகித்தால், அவர்களுக்கு உங்கள் தீர்ப்பு தேவையில்லை. உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் பிரதிபலிக்கும் இயேசு கிறிஸ்துவின் அன்பை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

நீங்கள் நம்பும் அனைத்தையும் மீறும் வலுவான அரசியல் அல்லது சமூகப் பார்வைகளை சமூக ஊடகங்களில் உள்ள நண்பருக்கிருந்தால், நீங்கள் கோபமாக, கடுமையாகப் பதிலடி கொடுப்பது உதவாது. புரிதலின் பாலங்களை உருவாக்க உங்களுக்கு அதிக தேவை இருக்கும், ஆனால் அதுவே உங்கள் நண்பருக்கும் தேவை.

பிணக்கு பரிசுத்த ஆவியை, ஒவ்வொரு முறையும் விரட்டுகிறது. முரண்பாடுகள் மோதல்களைத் தீர்ப்பதற்கான வழி என்ற தவறான கருத்தை வலுப்படுத்துகிறது; ஆனால் அது ஒருபோதும் இல்லை. பிணக்கு ஒரு தேர்ந்தெடுப்பு. சமாதானம் பண்ணுதல் என்பது ஒரு தேர்ந்தெடுப்பு. பிணக்கு அல்லது ஒப்புரவாதலை தேர்ந்தெடுக்க உங்கள் சுயாதீனம் உங்களிடம் உள்ளது. இப்போதும் எப்பொழுதும் சமாதானம் பண்ணுகிறதைத் தேர்ந்தெடுக்கும்படி நான் உங்களை வலியுறுத்துகிறேன்.11

சகோதர சகோதரிகளே, உலகை நாம் உண்மையில் மாற்ற முடியும், ஒரு நேரத்தில் ஒரு நபர் மற்றும் ஒரு தொடர்பு. எவ்வாறு? பரஸ்பர மரியாதை மற்றும் கண்ணியமான உரையாடலுடன் நேர்மையான கருத்து வேறுபாடுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை மாதிரியாக்குவதன் மூலம்.

கருத்து வேறுபாடுகள் வாழ்க்கையின் ஒரு பகுதி. ஒரு பிரச்சினையை எப்போதும் ஒரே மாதிரியாகப் பார்க்காத, கர்த்தரின் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுடன் நான் ஒவ்வொரு நாளும் வேலை செய்கிறேன். நாங்கள் விவாதிக்கும் அனைத்திலும் குறிப்பாக உணர்ச்சிகரமான பிரச்சினைகளைப்பற்றிய அவர்களின் கருத்துகளையும் நேர்மையான உணர்வுகளையும் நான் கேட்க விரும்புகிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தலைவர் டாலின் எச். ஓக்ஸ் மற்றும் தலைவர் ஹென்றி பி. ஐரிங்

எனது இரண்டு உத்தமமான ஆலோசகர்களான தலைவர் ஓக்ஸ் மற்றும் தலைவர் ஐரிங் ஆகியோர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில், குறிப்பாக அவர்கள் வேறுபடும் போது முன்மாதிரியாக இருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் தூய்மையான அன்புடன் அவ்வாறு செய்கிறார்கள். அவருக்கு நன்றாகத் தெரியும், எனவே அவரது நிலைப்பாட்டை கடுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்று இருவரும் பரிந்துரைப்பதில்லை. மற்றவருடன் போட்டியிட வேண்டியதன் அவசியத்திற்கு அவர்கள் முற்படுவதுமில்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் தயாளத்திலும், “கிறிஸ்துவின் தூய அன்பினாலும்”12 நிரப்பப்பட்டிருப்பதால், நம்முடைய விவாதங்கள் கர்த்தருடைய ஆவியால் வழிநடத்தப்படுகிறது. இந்த இரண்டு பெரிய மனிதர்களை நான் மிகவும் நேசிக்கிறேன், மதிக்கிறேன்!

தயாளத்துவம் என்பது பிணக்குக்கு மருந்தாகும். தன்னலமும், தற்காப்பும், பெருமையும், பொறாமையும் கொண்ட சுபாவ மனிதனைத் தூக்கி எறிய, தயாளத்துவம் ஆவிக்குரிய வரம். இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுபவரின் முக்கியப் பண்பு தயாளத்துவம்.13 தயாளத்துவம் சமாதானம் பண்ணுகிறவரை வரையறுக்கிறது.

நாம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, முழு இருதயத்தோடும் ஜெபிக்கும்போது, தேவன் நமக்குத் தயாளத்துவத்தை அருளுவார்.14

இந்த மேலான வரத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீடிய பொறுமையும் இரக்கமும் உடையவர்கள். அவர்கள் மற்றவர்கள் மேல் பொறாமை கொள்ளுவதில்லை, தங்கள் சொந்த முக்கியத்துவத்தில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் எளிதில் ஆத்திரமடைய மாட்டார்கள், பிறரைப்பற்றி தீய எண்ணம் கொள்ள மாட்டார்கள்.15

சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவின் தூய அன்பு இன்று நம்மை நோயுறச்செய்யும் பிணக்குக்கு விடையாக உள்ளது. பரஸ்பர சுமைகளை ஒருவர் சுமப்பதை விட, தயாளத்துவம் நம்மை “ஒருவருக்கொருவர் பாரங்களை சுமக்க”16 தூண்டுகிறது. கிறிஸ்துவின் தூய அன்பு, “எல்லா நேரங்களிலும் எல்லாவற்றிலும் குறிப்பாக பதட்டமான சூழ்நிலைகளில் தேவனுக்கு சாட்சிகளாக நிற்க”17 நம்மை அனுமதிக்கிறது. கிறிஸ்துவின் ஆண்களும் பெண்களும் எவ்வாறு பேசுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதை குறிப்பாக நெருக்கடியில் இருக்கும்போது எவ்வாறு எனக் காட்டுவதற்கு தயாளத்துவம் நம்மை அனுமதிக்கிறது.

இப்போது, “எந்த விலையிலும் சமாதானத்தைப்பற்றி”18 நான் பேசவில்லை. நீங்கள் திருவிருந்தில் பங்குபெறும் போது நீங்கள் செய்யும் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதில் இணக்கமான வழிகளில் மற்றவர்களை நடத்துவதைப்பற்றி நான் பேசுகிறேன். இரட்சகரை எப்போதும் நினைவுகூர வேண்டும் என்று நீங்கள் உடன்படிக்கை செய்கிறீர்கள். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான, தகராறு நிறைந்த சூழ்நிலைகளில், இயேசு கிறிஸ்துவை நினைவுகூர நான் உங்களை அழைக்கிறேன். அவர் சொல்வதைச் சொல்ல அல்லது செய்ய தைரியமும் ஞானமும் இருக்க ஜெபியுங்கள். நாம் சமாதானப் பிரபுவைப் பின்பற்றும்போது, நாம் அவருடைய சமாதானம் பண்ணுகிறவர்களாக மாறுவோம்.

இந்தச் சமயத்தில் இந்தச் செய்தி உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு உண்மையிலேயே உதவும் என்று நீங்கள் நினைக்கலாம். ஒருவேளை அவர் அல்லது அவள் உங்களிடம் அன்பாக இருக்க உதவும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். அது சரியாகும் என நான் நம்புகிறேன்! ஆனால் நீங்கள் சமாதானம் பண்ணுகிறவராக மாறுவதற்கு உங்களைத் தடுக்கும் பெருமை அல்லது பொறாமையின் துகள்கள் உள்ளதா என்று உங்கள் இருதயத்தை ஆழமாகப் பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்19

இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதற்கு உதவுவதிலும், நித்தியங்களுக்கும் நீடிக்கும் உறவுகளை உருவாக்குவதிலும் நீங்கள் தீவிரமாக இருந்தால், கசப்பை ஒதுக்கி வைக்க வேண்டிய நேரம் இப்போதே. இது உங்கள் வழி அல்லது வழியே இல்லை என்று வலியுறுத்துவதை நிறுத்த வேண்டிய நேரம் இப்போதே. உங்களை வருத்தப்படுத்துவார்கள் என்ற பயத்தில் மற்றவர்களை முட்டை ஓட்டின் மீது நடக்க வைக்கும் செயல்களை நிறுத்த வேண்டிய நேரம் இப்போதே. உங்கள் யுத்த ஆயுதங்களை புதைக்க வேண்டிய நேரம் இப்போதே.20 உங்கள் வாய்மொழி ஆயுதக் களஞ்சியம் அவமானங்களாலும் குற்றச்சாட்டுகளாலும் நிரம்பியிருந்தால், அவற்றை அகற்றுவதற்கான நேரம் இப்போதே.21 நீங்கள் ஆவிக்குரிய வலிமையான, கிறிஸ்துவின் ஆணாக அல்லது பெண்ணாக எழுவீர்கள்.

நமது தேடலுக்கு ஆலயம் உதவியாக இருக்கும். எல்லா பிணக்குகளையும் தூண்டும் சாத்தானை வெல்லும் திறன் நமக்குக் கொடுக்கப்பட்டு அங்கே நாம் தேவனின் வல்லமையினால் தரிப்பிக்கப்பட்டுள்ளோம்.22 உங்கள் உறவுகளிலிருந்து அவனை வெளியேற்றுங்கள்! ஒவ்வொரு முறையும் நாம் தவறான புரிதலை குணப்படுத்தும்போதோ அல்லது புண்படுத்த மறுக்கும்போதோ சத்துருவைக் கண்டிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும். மாறாக, இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடர்களின் குணாதிசயமான கனிவான இரக்கத்தை நாம் காட்டலாம். சமாதானம் பண்ணுபவர்கள் சத்துருவை முறியடிக்கிறார்கள்.

மக்களாகிய நாம் மலையின் மீது உண்மையான ஒளியாக, “மறைக்க முடியாத ஒளியாக”23 மாறுவோமாக. சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்க மரியாதைக்குரிய வழியும், கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான அறிவொளியான வழியும் இருப்பதை நாம் காட்டுவோமாக. இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடர்கள் வெளிப்படுத்தும் தயாளத்துவத்தை நீங்கள் வெளிப்படுத்தும்போது, உங்கள் மிகப் பெரிய கற்பனைக்கு அப்பாற்பட்ட உங்கள் முயற்சிகளை தேவன் பெரிதாக்குவார்.

சுவிசேஷ வலை உலகின் மிகப்பெரிய வலையாகும். “வெள்ளையனாகிலும், கருப்பனாகிலும், அடிமையாகிலும், சுதந்தரவாளியாகிலும், ஆணாகிலும் பெண்ணாகிலும்,” அவரண்டையில் வர அவர் அனைவரையும் வரவேற்கிறார்.24 அனைவருக்கும் இடம் உண்டு. இருப்பினும், எந்த விதமான தப்பெண்ணம், கண்டனம் அல்லது சர்ச்சைக்கு இடமில்லை.

என் அன்பான சகோதர சகோதரிகளே, பிறரைக் கட்டியெழுப்ப தங்கள் வாழ்க்கையைச் செலவிடுவோருக்கு இன்னும் சிறந்தது வரவிருக்கிறது. நீங்கள் மற்றவர்களை நடத்தும் விதத்தின் பின்னணியில் உங்கள் சீஷத்துவத்தை ஆராய இன்று நான் உங்களை அழைக்கிறேன். இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுபவருக்கு உங்கள் நடத்தை மேன்மையூட்டுவதாகவும், மரியாதைக்குரியதாகவும், பிரதிநிதித்துவமாகவும் இருக்கும் வகையில், தேவையான எந்த மாற்றங்களையும் செய்ய நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.

சண்டைக்கு பதிலாக மன்றாடவும், பகைமையை புரிந்துணர்வாகவும், பிணக்கை சமாதானமாகவும் மாற்ற நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.

தேவன் ஜீவிக்கிறார்! இயேசுவே கிறிஸ்து. அவர் இந்த சபையின் தலைவராக நிற்கிறார். நாம் அவருடைய வேலைக்காரர்கள். அவருடைய சமாதானம் பண்ணுகிறவர்களாக மாற அவர் நமக்கு உதவுவார். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.