வேதங்கள்
யாக்கோபு 5


அதிகாரம் 5

சீனஸின் நாட்டு ஒலிவ மரங்களையும், காட்டு ஒலிவ மரங்களையும் குறித்த உவமையை யாக்கோபு மேற்கோள் காட்டுதல் – அவைகள் இஸ்ரவேல் மற்றும் புறஜாதியாருக்கு ஒரு உவமையாக இருத்தல் – இஸ்ரவேலின் சிதறுதல் மற்றும் சேர்க்கையை முன்னமே உருவகித்தல் – நேபியர், லாமானியர் மற்றும் சகல இஸ்ரவேலின் வீட்டாரைக் குறித்து பேசப்படுதல் – இஸ்ரவேலருடன் புறஜாதியாரும் ஒட்டப்படுதல் – இறுதியிலே திராட்சைத்தோட்டம் எரிக்கப்படும். ஏறக்குறைய கி.மு. 544–421.

1 இதோ என் சகோதரரே, இஸ்ரவேலின் வீட்டாருக்கு, தீர்க்கதரிசி சீனஸ் பேசிய வார்த்தைகளை வாசித்ததை, நீங்கள் நினைவில்கொள்ளவில்லையா. அவன் சொன்னதாவது:

2 இஸ்ரவேலின் வீட்டாரே செவிகொடுங்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசியான, என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.

3 இதோ, கர்த்தர் சொல்லுகிறதாவது: ஓ இஸ்ரவேலின் வீட்டாரே, ஒரு மனுஷன் தன் திராட்சைத் தோட்டத்திலே போஷித்த ஒரு தோட்டத்து ஒலிவ மரத்திற்கு உன்னை நான் ஒப்பிடுவேன். அது வளர்ந்து முதுமையடைந்து, அழுகத்தொடங்கியது.

4 அந்தப்படியே, அந்தத் திராட்சைத் தோட்டத்தின் எஜமான் வந்து, தம் ஒலிவ மரம் அழுகத் தொடங்கியிருப்பதை கண்டான். அது அழிந்து போகாதபடிக்கும், இளம் மெல்லிய கிளைகள் தளைக்கும்படிக்கும், அதை நறுக்கி, அதைச் சுற்றி வெட்டி, அதைப்போஷிப்பேன், என்று அவன் சொன்னான்.

5 அந்தப்படியே, தன் வார்த்தையின்படியே அவன் அதை நறுக்கி, அதைச் சுற்றி வெட்டி, அதைப் போஷித்தான்.

6 அந்தப்படியே, பல நாட்கள் கழித்து அது சில சிறிய, இளம் மெல்லிய கிளைகளைத் தளைத்தது. ஆனால் இதோ, அதனுடைய முக்கிய மேற்பாகம் அழுக ஆரம்பித்தது.

7 அந்தப்படியே, திராட்சைத் தோட்டதின் எஜமான் அதைக் கண்டு, தன் ஊழியக்காரனை நோக்கி: இந்த விருட்சத்தை நான் இழந்துவிடுவேனோ என்று சஞ்சலப்படுகிறேன். ஆதலால், போய் ஒரு காட்டு ஒலிவ மரத்திலிருந்து கிளைகளை வெட்டி அவைகளை என்னிடம் இங்கே கொண்டுவா. உதிர இருக்கிற அந்த முக்கியமான கிளைகளை நான் பிடுங்கி அதை சுட்டெரிக்கும்படி அவைகளை நாம் அக்கினிக்குள் வீசுவோம், என்றான்.

8 இதோ, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் சொன்னதாவது: நான் இந்த இளம் மற்றும் மெல்லிய கிளைகளில் அநேகத்தை எடுத்து, என் விருப்பத்தின்படியே எந்த விருட்சத்திலேயானாலும் ஒட்டவைப்பேன். இந்த விருட்சத்தின் வேர் அழிந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் அதனுடைய கனியை எனக்கென்று நான் பாதுகாப்பேன், ஆகையால் நான் இந்த மெல்லிய கிளைகளை எடுத்து என் விருப்பத்திற்கேற்ப அவைகளை நான் ஒட்டுவேன்.

9 அதனுடைய இடத்திலே நீ காட்டு ஒலிவ விருட்சத்தின் கிளைகளை எடுத்து ஒட்டுவாயாக. மேலும் நான் பிடுங்கிய இவைகள், என் திராட்சைத் தோட்டத்தின் பூமியிலே படராதபடிக்கு, அவைகளை அக்கினிக்குள் எறிந்து, சுட்டெரிப்பேன், என்றான்.

10 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமானுடைய ஊழியக்காரன், திராட்சைத் தோட்டத்தினுடைய எஜமானின் வார்த்தைக்கேற்ப, காட்டு ஒலிவ விருட்சங்களின் கிளைகளை ஒட்டினான்.

11 திராட்சைத் தோட்டத்தின் எஜமான் அது சுற்றிலும் கொத்திவிடப்படவும், கிளை நறுக்கப்படவும், போஷிக்கப்படவும் செய்து, தன் ஊழியக்காரனை நோக்கி: இந்த விருட்சத்தை நான் இழந்துவிடுவேனோ, என்று நான் சஞ்சலப்படுகிறபடியால், அதனுடைய வேர்கள் அழியக்கூடாதென்று, அதை எனக்காக பாதுகாக்கவே, நான் இந்தக் காரியத்தைச் செய்தேன், என்றான்.

12 ஆதலால், நீ போய், விருட்சத்தைக் காத்து, என் வார்த்தைகளுக்கேற்ப, அதைப் போஷிப்பாயாக.

13 இவைகளை என் திராட்சைத்தோட்டத்தின் தூரப்பகுதியிலே, என் விருப்பத்தின்படியே எங்கு வேண்டுமானாலும் நாட்டுவேன். அது உனக்கு அவசியமற்றதாய் இருக்கிறது. இந்த விருட்சத்தையும் அதனுடைய கனியையும் இழந்துவிடுவேனோ என்று நான் சஞ்சலப்படுகிறபடியாலே, எதிர் காலம் வரும் முன்பே அதனுடைய கனியை எனக்காகச் சேர்த்து வைக்கவும், விருட்சத்தின் சொந்தக் கிளைகளை எனக்காக பாதுகாக்கவுமே, இப்படிச் செய்கிறேன், என்றான்.

14 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் போய் திராட்சைத் தோட்டத்தின் தூரப் பகுதிகளிலே, தோட்டத்து ஒலிவ மரங்களினுடைய சுபாவக் கிளைகளில் சிலவற்றை ஓரிடத்திலும், சிலவற்றை வேறிடத்திலும், தன் விருப்பத்தின்படியேயும், மகிழ்ச்சியின்படியேயும் மறைத்து வைத்தான்.

15 அந்தப்படியே, நீண்ட காலம் கழிந்தது. அப்பொழுது திராட்சைத் தோட்டத்தின் எஜமான் தன் ஊழியக்காரனை நோக்கி: நாம் திராட்சைத் தோட்டத்தில் பணிபுரிய, திராட்சைத் தோட்டத்தினுள் போவோம் வா, என்றான்.

16 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமானும், ஊழியக்காரனும், திராட்சைத் தோட்டத்தினுள் பணிபுரியப் போனார்கள். மேலும் அந்தப்படியே, ஊழியக்காரன் தன் எஜமானை நோக்கி: இதோ, இங்கே பாரும், இதோ அந்த விருட்சம், என்றான்.

17 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் பார்த்தபோது, அவன் காட்டு ஒலிவக் கிளைகள் ஒட்டப்பட்டிருந்த அந்த விருட்சத்தைக் கண்டான், அது துளிர்விட்டு கனி கொடுக்க ஆரம்பித்திருந்தது. அவன் அது நல்லதெனக் கண்டான். அதனுடைய கனி சுபாவக்கனியைப் போலவே இருந்தது.

18 அவன் ஊழியக்காரனை நோக்கி: இதோ, காட்டு விருட்சத்தின் கிளைகள் அவைகளுடைய வேரின் ஈரத்தை எடுத்துக்கொண்டமையால், அவைகளுடைய வேர் அதிக பெலத்தைக் கொண்டுள்ளது. வேரின் அதிக பெலத்தால், காட்டுக்கிளைகள் நாட்டுக் கனியைக்கொண்டு வந்திருக்கிறது. இப்பொழுதும் நாம் இக்கிளைகளை ஒட்டாமல் இருந்திருப்போமாகில், அந்த விருட்சம் அழிந்திருக்கும். இப்பொழுது இதோ அவைகளுடைய விருட்சம் கொடுத்துள்ள அதிகக் கனியை நான் சேகரிப்பேன். அதனுடைய கனியையோ எதிர் காலம் வரும் முன்னே எனக்கென்று சேகரித்து வைப்பேன், என்று சொன்னான்.

19 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நான் திராட்சைத் தோட்டத்தின் தூரப்பகுதிக்குச் சென்று, எதிர் காலம் வரும் முன்பே, விருட்சத்தின் சுபாவக் கிளைகளின் கனியை நான் சேகரிக்கும் பொருட்டு, அவைகளும் அதிகக் கனி கொடுக்கவில்லையா, எனக் கண்டுவரலாம், வா, என்றான்.

20 அந்தப்படியே, அவர்கள் விருட்சத்தின் சுபாவக் கிளைகளை எஜமான் மறைத்து வைத்த இடத்திற்குச் சென்றார்கள். அவன் ஊழியக்காரனை நோக்கி: இதோ அவைகள் என்றான். பின்பு அவன் முதலானது அதிகக் கனிகளைக் கொடுத்திருந்ததைக் கண்டான். அது நல்லதெனவும் அவன் கண்டான். மேலும் அவன் ஊழியக்காரனை நோக்கி: எதிர் காலம் வரும் முன்பே அதன் கனியை நான் எனக்காகச் சேகரிக்கும்படி, அதை எடுத்துவை, என்றான். ஏனெனில் அவன் இதோ, இவ்வளவு காலம் நான் அதைப் போஷித்திருக்கிறேன். அது அதிகக் கனியைக் கொடுத்துள்ளது, என்று சொன்னான்.

21 அந்தப்படியே, ஊழியக்காரன் தன் எஜமானை நோக்கி: இந்த விருட்சத்தையோ, விருட்சத்தின் கிளையையோ, நீர் இங்கே வந்து நாட்டியது ஏன், ஏனெனில் இதோ, உம்முடைய திராட்சைத் தோட்டத்தில் இருக்கும் எல்லா இடத்தைக் காட்டிலும் செழுமையற்ற இடம் இது, என்றான்.

22 திராட்சைத் தோட்டத்தின் எஜமான் அவனை நோக்கி: எனக்கு ஆலோசனை சொல்லவேண்டாம். அது நிலத்தின் ஒரு செழுமையற்ற பகுதி என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆகையால், இவ்வளவு நீண்ட காலம் வரைக்கும் அதைப் போஷித்திருக்கிறேன், அது அதிகக் கனியைக் கொடுத்துள்ளதை நீ காண்கிறாய், என்று நான் உன்னிடம் சொன்னேன், என்றான்.

23 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் தன் ஊழியக்காரனை நோக்கி: இங்கே பார், இதோ விருட்சத்தின் மற்றொரு கிளையையும் நாட்டியுள்ளேன். இந்த பகுதி, முந்தினதைக் காட்டிலும் செழுமையற்றதாயிருந்தது, என நீ அறிவாய், ஆனால் இதோ அந்த விருட்சம், நான் அதை இவ்வளவு நீண்ட காலமாய் போஷித்துள்ளேன். அது அதிகக் கனியைக் கொடுத்துள்ளது. ஆதலால் அதைச் சேர்த்து வை. எதிர் காலம் வரும் முன்பே அதை எனக்கென்று நான் பாதுகாப்பேன், என்றான்.

24 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் மறுபடியும் தன் ஊழியக்காரனை நோக்கி: இங்கே பார், இதோ நான் நட்டுள்ள மற்றொரு கிளை இதோ, நான் அதையும் போஷித்துள்ளேன். அது கனியைக் கொடுத்துள்ளது, என்றான்.

25 அவர் ஊழியக்காரனை நோக்கி: இங்கே பார். இதோ கடைசி விருட்சத்தைப் பார். இதோ, நிலத்தின் நல்ல பகுதியிலே இதை நாட்டியுள்ளேன். இவ்வளவு நீண்ட காலம் வரைக்கும் இதை போஷித்துள்ளேன். விருட்சத்தின் ஒரு பகுதி மட்டும் நாட்டுக் கனியைக் கொடுத்தது. விருட்சத்தின் மற்றொரு பகுதி காட்டுக் கனியைக்கொடுத்தது. இதோ, மற்றவைகளைப் போலவே இந்த விருட்சத்தையும் நான் போஷித்துள்ளேன், என்றான்.

26 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் தன் ஊழியக்காரனை நோக்கி: நல்ல கனி கொடாத கிளைகளை வெட்டி அக்கினியிலே போடு, என்றான்.

27 ஆனால் இதோ, ஊழியக்காரனோ அவனை நோக்கி: எதிர் காலம் வரும் முன்பே நீர் சேகரிக்கும்படிக்கு, அது உமக்கு நல்ல கனியைக் கொடுக்கும் பொருட்டு, இன்னும் கொஞ்சக்காலம் அதைக் கிளை நறுக்கி, அதைச் சுற்றித்தோண்டிவிட்டு, அதைப் போஷிப்போம் வாரும், என்றான்.

28 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமானும், திராட்சைத் தோட்டத்தின் எஜமானின் ஊழியக்காரனும், திராட்சைத் தோட்டத்தின் எல்லாக் கனிகளையும் போஷித்தார்கள்.

29 அந்தப்படியே, அதிகக் காலம் கடந்துசென்ற பின்பு, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் தன் ஊழியக்காரனை நோக்கி: இதோ காலம் சமீபமாயிருப்பதாலும், முடிவு சீக்கிரமாய் வரவிருப்பதாலும், எதிர் காலம் வரும் முன்பே எனக்கென்று கனியைச் சேகரிக்கும்படி, திராட்சைத் தோட்டத்தில் மறுபடியும் பணிபுரிய, திராட்சைத் தோட்டத்தினுள் செல்லுவோம் வா, என்றான்.

30 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமானும் ஊழியக்காரனும் திராட்சைத் தோட்டத்தினுள் சென்று சுபாவக்கிளைகள் முறிக்கப்பட்டு காட்டுக்கிளைகள் ஒட்டப்பட்ட விருட்சத்தினிடம் வந்தார்கள். இதோ எல்லா வகையான கனியும் விருட்சத்தை மூடியிருந்தது.

31 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமான், கனியை அதனுடைய தொகைக்குத் தக்கதாய், ஒவ்வொரு வகையைச் சார்ந்ததையும் ருசி பார்த்தான். திராட்சைத் தோட்டத்தின் எஜமான், இதோ, இவ்வளவு நீண்ட காலம் இந்த விருட்சத்தை நாம் போஷித்துள்ளோம். அந்தக் கனியை நான் எனக்கென்று எதிர் காலத்துக்காக சேகரித்துள்ளேன், என்றான்.

32 ஆனால் இதோ, இந்த முறை இது அதிகக் கனியைக் கொடுத்துள்ளது. அதில் ஒன்றுகூட நல்லதில்லை. இதோ, அங்கே எல்லா விதமான கெட்ட கனியும் இருக்கிறது, நாம் அதிகமாய்ப் பிரயாசப்பட்டிருப்பினும், அது எனக்கு பயனற்றதாயிருக்கிறது. இப்பொழுது இவ்விருட்சத்தை நான் இழக்க நேரிடுமோ, என்று நான் சஞ்சலப்படுகிறேன், என்றான்.

33 திராட்சைத் தோட்டத்தின் எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நான் எனக்கென்று மறுபடியும் நல்ல கனியைப் பாதுகாக்கும்படி அந்த விருட்சத்திற்கு என்ன செய்யக்கூடுமென்றான்.

34 ஊழியக்காரன் தன் எஜமானை நோக்கி: இதோ நீர் காட்டு ஒலிவ விருட்சத்தின் கிளைகளை ஒட்டவைத்ததின் நிமித்தம் அவைகள் வேர்களைப் போஷித்துள்ளன. ஆகையால் அழிந்துபோகாமல் அவைகள் உயிரோடிருக்கின்றன. அதன் நிமித்தமே இன்னும் அவைகள் நன்றாயிருப்பதை நீர் காண்கிறீர், என்றான்.

35 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் ஊழியக்காரனை நோக்கி, இந்த விருட்சம் எனக்குப் பயனற்றதாயிருக்கிறது. இது எவ்வளவு காலம் கெட்ட கனியைக்கொடுக்குமோ, அவ்வளவு காலம் இதன் வேர்கள் எனக்குப் பயன்தரக்கூடியதாயிராது, என்றான்.

36 ஆயினும், வேர்கள் நல்லவையென நான் அறிவேன். அவைகளை என் சொந்த நோக்கத்திற்காகவே பாதுகாத்துள்ளேன். அவைகளின் அதிக பெலத்தின் நிமித்தம், அவைகள் இதுவரையும் காட்டுக்கிளைகளிலிருந்து, நல்ல கனியைக் கொடுத்துள்ளன.

37 ஆனாலும் இதோ, காட்டுக் கிளைகள் வளர்ந்து அதனுடைய வேர்களைக் காட்டிலும் மிஞ்சியுள்ளன. காட்டுக்கிளைகள் அதனுடைய வேர்களைக் காட்டிலும் படர்ந்துள்ளபடியால், அது அதிகக் கெட்ட கனியைக் கொடுத்துள்ளது. அது இவ்வளவு அதிகமான கெட்ட கனியைக் கொடுத்துள்ளபடியாலே, அது அழிந்துபோகத் துவங்கியுள்ளதை, நீ காண்கிறாய். அதைப் பாதுகாக்க நாம் எதையாகிலும் அதற்காகச் செய்யாவிடில், அது சீக்கிரமாய் முதிர்ந்து அக்கினிக்குள் போடப்படும், என்றான்.

38 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் தன் ஊழியக்காரனை நோக்கி: சுபாவக் கிளைகளும் கெட்ட கனியைக் கொடுத்திருக்கிறதா, எனக் காண திராட்சைத் தோட்டத்தின் கடையாந்தரப் பகுதிகளுக்குப் போவோம், என்றான்.

39 அந்தப்படியே, அவர்கள் திராட்சைத் தோட்டத்தின் கடையாந்தரப் பகுதிகளுக்குப் போனார்கள். அந்தப்படியே, சுபாவக் கிளைகளின் கனியும் கெட்டுப்போயிருப்பதை அவர்கள் கண்டார்கள். ஆம், முதலாவதும், இரண்டாவதும், கடைசியானதுமாக, அவைகள் எல்லாம் கெட்டுப்போயிருந்தன.

40 நல்ல கனியைக் கொடுத்த, அந்தக் கிளை உதிர்ந்து சாகும் அளவிற்கு, அவ்விருட்சத்தினுடைய பகுதியைக் கடைசிக் கிளையின் காட்டுக் கனி மேற்கொண்டது.

41 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் அழுது ஊழியக்காரனை நோக்கி: என் திராட்சைத் தோட்டத்திற்கு இன்னும் அதிகமாய் நான் என்ன செய்திருக்கக்கூடும்?

42 இதோ, இவைகளைத் தவிர, இத்திராட்சைத் தோட்டத்தின் அனைத்து கனிகளும் கெட்டுப்போயிருந்தன, என்பதை அறிந்திருக்கிறேன். இப்பொழுது முன்பு நல்ல கனியைக் கொடுத்துவந்த இவைகளும் கெட்டுப்போயின. இப்பொழுது என் திராட்சைத் தோட்டத்தின் அனைத்து விருட்சங்களும் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படுவதைத் தவிர, ஒன்றுக்கும் பயன்படாததாயிருக்கின்றது.

43 இதோ, கிளை உலர்ந்துபோன இந்தக் கடைசி விருட்சத்தை, என் திராட்சைத் தோட்டத்தின் பூமியிலிருக்கும் மற்ற எல்லா பகுதிகளைக் காட்டிலும், எனக்கு விரும்பத்தக்கதாய் இருக்கிற நிலத்தின், நல்ல இடத்திலே நாட்டினேன்.

44 நிலத்தின் இந்த இடத்திலே படர்ந்துள்ளவைகளுக்குப் பதிலாக, இந்த விருட்சத்தை நாட்ட, அவைகளை நான் வெட்டிப்போட்டதையும் கண்டாய்.

45 இதோ, அதனுடைய ஒரு பகுதி நல்ல கனியையும் மற்றொரு பகுதி காட்டுக் கனியையும் கொடுத்திருப்பதை நீ கண்டாய், அவைகளின் கிளைகளை நான் முறித்து அக்கினியிலே போடாததினிமித்தம், இதோ, அவைகளின் நல்ல கிளை உலர்ந்து போகுமளவிற்கு அதை மேற்கொண்டன.

46 இப்பொழுது, இதோ என் திராட்சைத் தோட்டத்தை நாம் நன்றாகப் பராமரித்தபோதிலும், நல்ல கனியைக் கொடாதபடி அதனுடைய விருட்சங்கள் கெட்டுப்போயின. எதிர் காலம் வரும் முன்பே, இதன் கனிகளை எனக்காகச் சேகரிக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் இதோ அவைகள் காட்டு ஒலிவ விருட்சம் போலாகியுள்ளன. வெட்டுண்டு அக்கினியிலே போடப்படுவதைத் தவிர அவைகளால் எந்தப் பயனும் இல்லை. நான் அவைகளை இழந்துவிடுவேனே, என்று சஞ்சலப்படுகிறேன்.

47 என் திராட்சைத் தோட்டத்திலே இன்னும் அதிகமாய் நான் என்ன செய்திருக்கக்கூடும்? அதைப் போஷிக்காதபடி என் கரத்தைத் தாமதித்தேனோ? அப்படியல்லவே, அதைப் போஷித்து அதைச் சுற்றியும் கொத்திவிட்டு, அதன் கிளை நறுக்கி அதற்கு உரமிட்டுள்ளேன். கிட்டத்தட்ட நாள் முழுவதும் என் கரத்தை நீட்டியிருக்கிறேன். முடிவு சீக்கிரமாய் வரவிருக்கிறது. நான் என் திராட்சைத் தோட்டத்திலிருக்கும் எல்லா விருட்சங்களையும் வெட்டி, அவைகள் எரிக்கப்படும்படி, அவைகளை அக்கினிக்குள் போடவேண்டுமே, என்று சஞ்சலப்படுகிறேன். என் திராட்சைத் தோட்டத்தை கெடச்செய்தது யார்? என்றான்.

48 அந்தப்படியே, ஊழியக்காரன் தன் எஜமானை நோக்கி: உம்முடைய திராட்சைத் தோட்டத்தின் அபார வளர்ச்சியினாலல்லவா? கிளைகள் நல்ல வேர்களை மேற்கொண்டதினாலல்லவா? கிளைகள் அவைகளுடைய வேர்களை மேற்கொண்டு, இதோ, தங்களுக்கென்று பெலத்தை எடுத்துக் கொண்டமையால், வேர்களின் பெலத்தைக் காட்டிலும் வேகமாய் அவைகள் வளர்ந்தன. இதோ, உம்முடைய திராட்சைத் தோட்டத்தின் விருட்சங்கள் கெடக் காரணம் இதுவல்லவா, என்று நான் சொல்கிறேன், என்றான்.

49 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் தன் ஊழியக்காரனை நோக்கி: நான் எல்லாவற்றையும் செய்தபடியாலே, என் திராட்சைத் தோட்டத்தின் நிலத்தில், திராட்சைத் தோட்டத்திலுள்ள விருட்சங்கள் படராமலிருக்கும் பொருட்டு, நாம் போய், அவைகளை வெட்டி அக்கினிக்குள் போடுவோம் வா. என் திராட்சைத் தோட்டத்திற்காக இன்னும் அதிகமாய் நான் என்ன செய்திருக்கக்கூடும்? என்றான்.

50 ஆனால் இதோ ஊழியக்காரன் திராட்சைத் தோட்டத்தின் எஜமானை நோக்கி: இன்னும் சிறிது காலம் அதைவிட்டு வையும், என்றான்.

51 எஜமான்: ஆம், என் திராட்சைத் தோட்டத்தின் விருட்சங்களை இழந்துபோவேன், என்று நான் சஞ்சலப்படுகிறபடியால், அதை இன்னும் சிறிது காலம் விட்டு வைப்பேன் என்றான்.

52 ஆகையால், என் திராட்சைத் தோட்டத்தின் கடையாந்தரப் பகுதிகளிலே நான் நட்டிருக்கிற இந்தக் கிளைகளை எடுத்து, அவைகளை அவைகள் இருந்த விருட்சத்திலேயே ஒட்டுவோம்; மேலும் மிகுந்த கசப்பான கனியையுடைய கிளைகளை, விருட்சத்திலிருந்து முறித்து, அதற்குப் பதிலாக விருட்சத்தின் சுபாவக் கிளைகளை ஒட்டுவோம்.

53 விருட்சம் அழியக்கூடாது என்பதற்காகவும், ஒருவேளை என் சொந்த நோக்கத்திற்காக, அதனுடைய வேர்களை நானே பாதுகாக்கும்படிக்கும், இப்படிச் செய்வேன்.

54 இதோ, என் சித்தத்திற்கேற்ப எவ்விடத்திலேயும் நான் நட்ட, விருட்சத்தின் சுபாவக் கிளைகளின் வேர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. ஆகையால், என் சொந்த நோக்கத்திற்காக, அதையும் பாதுகாப்பதற்காக இவ்விருட்சத்தின் கிளைகளை எடுத்து, அவைகளுடன் இவைகளை ஒட்டவைப்பேன். ஆம், அவைகளின் தாய் விருட்சத்தின் கிளைகளை அவைகளுடன் ஒட்டுவதின் மூலம் எனக்கென்று வேர்களைப் பாதுகாப்பேன். அவைகள் போதுமான பெலத்தைப் பெறுகிறபோது எனக்கு அவைகள் நல்ல கனியைக் கொடுக்கலாம். என் திராட்சைத் தோட்டத்தின் கனியினுடைய மகிமையை அப்பொழுதாவது நான் பெற்றிருப்பேன், என்றான்.

55 அந்தப்படியே, அவர்கள் காட்டு விருட்சமாக மாறியிருந்த சுபாவ விருட்சத்திலிருந்து எடுத்து, காட்டு விருட்சமாய் மாறின சுபாவ விருட்சங்களுடன் ஒட்டவைத்தார்கள்.

56 காட்டு விருட்சமாக மாறிய சுபாவ விருட்சங்களிலிருந்து எடுத்து, அவைகளின் தாய் விருட்சத்தினுடன் ஒட்டவைத்தார்கள்.

57 திராட்சைத் தோட்டத்தின் எஜமான் ஊழியக்காரனை நோக்கி: மிகவும் கசப்பான கனியையுடையதாயிருந்தாலொழிய, விருட்சங்களிலிருந்து காட்டுக் கிளைகளை முறித்துப்போடாமல், அவைகளுடன் நான் சொன்னவற்றின் பிரகாரமே ஒட்டவைப்பாயாக.

58 திராட்சைத் தோட்டத்தின் விருட்சங்களை நாம் மறுபடியும் போஷித்து, அவற்றின் கிளைகளைச் சீர்ப்படுத்துவோம். விருட்சங்களிலிருந்து முற்றிப்போய் அழிந்துபோகும் கிளைகளை எடுத்து, அக்கினிக்குள் போடுவோம்.

59 அவைகளின் வேர்கள் தங்களின் நன்மையினிமித்தம் பெலன் கொள்ளவும் கிளைகளின் மாற்றத்தால், தீமையை நன்மை வெல்லட்டும் என்பதற்குமே, இதைச் செய்கிறேன்.

60 சுபாவக் கிளைகளையும், அதனுடைய வேர்களையும் நான் பாதுகாத்ததின் நிமித்தமும், அவைகளின் தாய் விருட்சத்தினுடன் மீண்டும் சுபாவக் கிளைகளை ஒட்டவைத்ததின் நிமித்தமும், அவைகளின் தாய் விருட்சங்களின் வேர்களைப் பாதுகாத்ததின் நிமித்தமும், ஒருவேளை, என் திராட்சைத் தோட்டத்தின் விருட்சங்கள் மறுபடியும் நன்மையான கனியைக் கொடுக்கக்கூடும். அதனால் என் திராட்சைத் தோட்டத்தின் கனியிலே நான் மறுபடியும் மகிழ்ந்து முதற்கனியினுடைய வேர்களையும் கிளைகளையும் பாதுகாத்தேன், என்று நான் மிகவும் களிகூருவேன்.

61 ஆகையால், மற்ற எல்லா கனியையும் விட, மிகவும் விலைமதிப்பற்றதும், நல்லதுமான சுபாவக் கனியை மறுபடியும் கொடுக்கும்படிக்கு, நாம் வழியை ஆயத்தப்படுத்தவும், திராட்சைத் தோட்டத்திலே நாம் ஊக்கத்தோடு கருத்தாய்ப் பணிபுரியவும், போய் வேலையாட்களை அழைத்து வா.

62 ஆகையால் இதோ, முடிவு சமீபமாயிருப்பதால், நாம் சென்று இந்தக் கடைசி முறையாக நம்முடைய ஊக்கத்தோடு கருத்தாய்ப் பணிசெய்வோம். என் திராட்சைத் தோட்டத்தை, நான் கிளை நறுக்குவது இதுவே கடைசி முறை.

63 கிளைகளை ஒட்டுங்கள், பிந்தினவைகள் முந்தினவைகளாகவும், முந்தினவைகள் பிந்தினவைகளாகவும் இருக்க, பிந்தினவைகளிலிருந்து ஆரம்பியுங்கள், முதிர்ந்ததையும் மற்றும் இளசானதையும், முந்தினவையையும், பிந்தினவையையும், அவைகளையெல்லாம் மறுபடியும் கடைசி முறையாக போஷிக்கப்படும்படிக்கு சுற்றிக் கொத்திவிடுங்கள்.

64 ஆகையால், முடிவு சமீபமானதாலே, இறுதியாக ஒரு முறை, அவைகளைச் சுற்றிக் கொத்திவிட்டு, கிளை நறுக்கி அவைகளுக்கு எரு இடுவாயாக. கடைசியாய் ஒட்டவைத்த கிளைகள் வளர்ந்து, சுபாவக் கனியைக் கொடுக்குமேயானால், அவைகள் வளரும்படி, வழியை ஆயத்தப்படுத்துவாயாக.

65 அவைகள் வளரத் துவங்கும்போது, கசப்பான கனியைக் கொண்டுவருகிற கிளைகளின் நல்ல பெலம் மற்றும் அளவையும் பொறுத்தவாறு நீக்கிப்போடுவாயாக. அவைகளிலுள்ள கெட்ட கிளைகளை ஒரேசமயத்தில் நீக்கிப்போடவேண்டாம். அப்படிச் செய்தால் அவைகளுடைய வேர்கள் ஒட்டுதலுக்குக் கடினமானதாய் இருந்து, அவைகளுடைய ஒட்டுதல் அழிந்துபோய், என் திராட்சைத் தோட்டத்தை நான் இழந்துபோவேன்.

66 என் திராட்சைத் தோட்டத்திலுள்ள விருட்சங்களை இழந்துவிடுவேனோ, என்று சஞ்சலப்படுகிறேன்; நல்ல விருட்சம் கெட்ட விருட்சத்தை மேற்கொள்ளும்வரைக்கும், நல்ல விருட்சத்தின் வேரும், மேற்பகுதியும் ஒரே பெலனாயிருக்கும்படி, அவைகள் வளர வளரவே, கெட்ட விருட்சங்களை நீக்கிப்போட்டு, இனியும் என் திராட்சைத் தோட்டத்தின் நிலத்திலே அவைகள் படராதபடிக்கு வெட்டி அக்கினிக்குள் போடுவாயாக; இவ்விதமாய் கெட்ட விருட்சத்தை என் திராட்சைத் தோட்டத்திலிருந்து அழித்துப்போடுவேன்.

67 சுபாவ விருட்சத்தின் கிளைகளை மீண்டும் சுபாவ விருட்சத்திலே ஒட்டுவேன்;

68 நான் சுபாவ விருட்சத்தின் கிளைகளை விருட்சத்தின் சுபாவ கிளைகளுடன் ஒட்டுவேன். இப்படியாக அவைகள் சுபாவக் கனியைக் கொண்டுவரும்படிக்கும், அவை ஒன்றாய் இருக்கும்பொருட்டும், அவைகளை மறுபடியும் சேர்த்து வைப்பேன்.

69 இதோ என் திராட்சைத் தோட்டத்தை இந்த முறை மாத்திரமே கிளை நறுக்குவதால், ஆம், கெட்ட கனிகள் என் திராட்சைத் தோட்டத்தின் எல்லா நிலத்திலிருந்தும் வெளியே தூர எறியப்படும், என்றான்.

70 அந்தப்படியே, திராட்சைத் தோட்டத்தின் எஜமான் தன் ஊழியக்காரனை அனுப்பினான்; ஊழியக்காரன் போய், எஜமான் தனக்குக் கட்டளையிட்டபடியே மற்ற ஊழியக்காரர்களை அழைத்து வந்தான்; அவர்களோ கொஞ்சம் பேராய் இருந்தார்கள்.

71 திராட்சைத் தோட்டத்தின் எஜமான் அவர்களை நோக்கி: போய், திராட்சைத் தோட்டத்திலே உங்கள் பலத்துடன் பணிபுரியுங்கள். இதோ முடிவு சமீபமாயிருப்பதாலும், காலம் சீக்கிரமாய் வரவிருப்பதாலும், என் திராட்சைத் தோட்டத்தைப் போஷிப்பது இதுவே கடைசிமுறை என்பதினாலும், என்னோடுகூட சேர்ந்து நீங்களும் ஊக்கமாய் பணிபுரிந்தால், வரவிருக்கிற காலத்திற்குள்ளாக, எனக்காகச் சேகரிக்கும் கனியினிமித்தம் மகிழ்ச்சி கொள்வீர்கள், என்றான்.

72 அந்தப்படியே, ஊழியக்காரர்கள் சென்று, தங்கள் பலத்தோடு பணிபுரிந்தார்கள். திராட்சைத் தோட்டத்தின் எஜமானும் அவர்களுடனே சேர்ந்து பணிபுரிந்தான். அவர்கள் சகலவற்றிலும் திராட்சைத் தோட்டத்தின் எஜமானுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

73 திராட்சைத் தோட்டத்திலே மீண்டும் சுபாவக்கனி வந்தது; மேலும் சுபாவக்கிளைகள் வளர்ந்து அதிகமாய் விருத்தியடையத் துவங்கின; காட்டுக்கிளைகள் பிடுங்கப்பட்டு எறியப்படலாயின; அவர்கள் அதனுடைய வேரும், மேற்பகுதியும் அதன் பெலனுக்குத் தக்கதாய் இருக்கும்படி செய்தார்கள்.

74 இவ்விதமாய் திராட்சைத் தோட்டத்தைவிட்டு கெட்டவை எறியப்படும் வரைக்கும், திராட்சைத் தோட்டத்தின் எஜமானுடைய கட்டளைகளின்படியே சகல கருத்தோடும் அவர்கள் பணிபுரிந்தார்கள். மறுபடியும் சுபாவக் கனியாகும்படிக்கு விருட்சங்களைத் தனக்கென்று எஜமான் பாதுகாத்துக்கொண்டான்; அவைகள் ஒரே சரீரம் போலானது; கனிகள் ஒரே மாதிரியாயிருந்தன; ஆதியிலிருந்தே தனக்கு விலையேறப்பெற்றதாயிருந்த சுபாவக் கனியைத், தனக்கென்று திராட்சைத் தோட்டத்தின் எஜமான் பாதுகாத்துக் கொண்டான்.

75 அந்தப்படியே, தன் கனி நல்லதென்றும், தன் திராட்சைத் தோட்டம் இனி கெட்டதாய் இருக்கவில்லையெனவும், திராட்சைத் தோட்டத்தின் எஜமான் கண்டபோது, அவன் தன் ஊழியக்காரர்களை அழைத்து அவர்களிடத்திலே: இதோ, இந்தக் கடைசிமுறையாக என் திராட்சைத் தோட்டத்தை நாம் போஷித்தோம். நான் என் சித்தத்திற்கேற்ப செய்துள்ளேன், என நீங்கள் காண்கிறீர்கள். முதலிலிருந்ததைப்போலவே நல்ல சுபாவக் கனியைப் பாதுகாத்து வந்தேன், என் திராட்சைத் தோட்டத்தில் என்னோடுகூட கருத்தாய்ப் பணிபுரிந்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு என் திராட்சைத் தோட்டம் கெட்டுப்போகாதபடி எனக்காக மறுபடியும் சுபாவக் கனியைக் கொண்டுவந்ததினிமித்தம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றீர்கள். கெட்டவை தூர எறியப்பட்டது. இதோ, என் திராட்சைத் தோட்டத்திலுள்ள கனியின் நிமித்தம் என்னோடுகூட மகிழ்ச்சியாய் இருப்பீர்களாக, என்றான்.

76 ஏனெனில் இதோ, சீக்கிரமாய் வரவிருக்கிற எதிர் காலத்திற்குள்ளாக, திராட்சைத் தோட்டத்தின் கனியை எனக்கென்று நெடு நாட்களுக்காய் சேர்த்துவைப்பேன். கடைசி முறையாக என் திராட்சைத் தோட்டத்தைப் போஷித்து, கிளை நறுக்கி, அதைச் சுற்றி கொத்தி, அதற்கு உரமிட்டேன். ஆகையால் நான் உரைத்தபடியே, நெடுநாட்களாய் எனக்கென்று கனியைச் சேர்த்துவைப்பேன்.

77 என் திராட்சைத் தோட்டத்தினுள் மறுபடியும் கெட்ட கனி வரும் காலம் வருகையில், நல்லவைகளையும் கெட்டவைகளையும் ஒன்றாய்ச் சேர்க்கப்படும்படி செய்வேன். நல்லவைகளை எனக்கென்று பாதுகாத்து, கெட்டவைகளை அவைகளின் இடத்திற்கே தூர எறிவேன். பின்பு காலமும் முடிவும் வரும். நான் என் திராட்சைத் தோட்டம் அக்கினியால் எரிக்கப்படும்படிச் செய்வேன்.