அதிகாரம் 7
சேரெம் கிறிஸ்துவை மறுதலித்தல், யாக்கோபுடன் விவாதித்து ஒரு அறிகுறியைக் கோருதல், தேவனால் வாதிக்கப்படுதல் – அனைத்துத் தீர்க்கதரிசிகளும் கிறிஸ்துவைக் குறித்தும், அவரின் பாவநிவர்த்தியைக் குறித்தும் பேசியிருக்கிறார்கள் – நேபியர்கள் பரதேசிகளாய், உபத்திரவத்திலே பிறந்து, லாமானியர்களால் வெறுக்கப்பட்டவர்களாய் தங்கள் வாழ்நாட்களைக் கழித்தார்கள். ஏறக்குறைய கி.மு. 544–421.
1 இப்பொழுதும், அந்தப்படியே, சில வருஷங்கள் கடந்துபோன பின்பு, சேரெம் என்ற பெயருடைய ஒரு மனுஷன் நேபியின் ஜனங்கள் மத்தியில் வந்தான்.
2 அந்தப்படியே, அவன் ஜனங்கள் மத்தியில் பிரசங்கிக்கத் தொடங்கி, கிறிஸ்து என்று எவரும் இருக்க முடியாது என்று அவர்களிடத்தில் அறிவிக்கலானான். ஜனங்களிடத்தில் இச்சகமான அநேக காரியங்களை அவன் பிரசங்கித்தான். கிறிஸ்துவின் உபதேசங்களைக் கவிழ்த்துப்போடவே அவன் அப்படிச் செய்தான்.
3 அவன், ஜனங்களின் இருதயங்களைப் புறம்பாய் வழிநடத்திப்போகும்படிக்கு, கருத்தாய் பணிபுரிந்ததினிமித்தம், பல இருதயங்களை வழிநடத்திக் கொண்டுபோனான். வரப்போகிற கிறிஸ்துவிலே, யாக்கோபாகிய நான் விசுவாசம் வைத்திருந்தேன், என்பதை அவன் அறிந்து, என்னிடம் வர பல வாய்ப்புகளை நாடினான்.
4 அவன் கல்விமானாயிருந்தபடியாலே, ஜனங்களுடைய மொழியை பூரணமாய் அறிந்திருந்தான்; ஆதலால் பிசாசின் வல்லமையினால் அவன் அதிக இச்சகச் சொற்களையும், பேச்சிலே மிக்க ஆற்றலையும் அவனால் பிரயோகிக்க முடிந்தது.
5 நான் மெய்யாகவே தூதர்களை கண்டிருக்கிறபடியாலும், அவர்கள் எனக்குப் பணிவிடை செய்திருக்கிறபடியாலும், அநேக வெளிப்படுத்தல்கள் மட்டுமின்றி, இந்தக் காரியங்களைக் குறித்து, அநேக காரியங்களையும் நான் கண்டிருந்தாலும், விசுவாசத்திலிருந்து என்னை அசைத்துப்போட அவன் நம்பிக்கை கொண்டிருந்தான். அவ்வப்போது கர்த்தருடைய சத்தம் என்னுடன் வார்த்தையினாலே பேசியிருப்பதையும் கேட்டிருக்கிறேன். ஆகையால் என்னை அசைக்க முடியவில்லை.
6 அந்தப்படியே, அவன் என்னிடத்தில் வந்து இந்தப் பிரகாரமாய்ப் பேசினான்: சகோதரன் யாக்கோபே, சுவிசேஷம் என்று உங்களால் அழைக்கப்படுகிற கிறிஸ்துவின் உபதேசத்தைக் குறித்து நீ அதிகமாய்ப் பிரயாணம் செய்து, பிரசங்கிக்கிறாய் என்று, நான் கேட்டும், அறிந்துமிருக்கிறபடியால், உன்னிடத்தில் நான் பேச அதிக வாய்ப்புகளை நாடியிருக்கிறேன்.
7 இந்த ஜனத்தில் அநேகரை நீ கொண்டு சென்றதால், தேவனுடைய சரியான வழியைமாற்றி, செம்மையான வழியாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலும், பல நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பின்பு வருகிறாரென்று, நீ சொன்ன ஒருவரை தொழுதுகொள்வதின் மூலம் மோசேயின் நியாயப்பிரமாணத்தையும் மாற்றியிருக்கிறாய். இப்பொழுது இதோ, சேரெமாகிய நான் இதைத் தேவதூஷணம் என்று அறிக்கையிடுகிறேன். ஏனெனில் எந்த ஒரு மனுஷனும் அம்மாதிரியான காரியங்களை அறியான். ஆகையால் வரப்போகும் காரியங்களை அவனால் சொல்லமுடியாது. சேரெம் இவ்விதமாய் என்னிடத்தில் விவாதித்தான்.
8 ஆனால் இதோ, அவனுடைய எல்லா வார்த்தைகளிலும் நான் அவனை தாறுமாறாக்கும் அளவிற்கு, கர்த்தராகிய தேவன், தம் ஆவியை அதிகமாய் என் ஆத்துமாவில் ஊற்றினார்.
9 நான் அவனை நோக்கி: வரப்போகிற கிறிஸ்துவை நீ மறுதலிக்கிறாயா என்றேன். அவன், கிறிஸ்து என்று ஒருவரிருந்தால், அவரை நான் மறுதலிக்கமாட்டேன்; ஆனால் கிறிஸ்து என்று எவருமில்லை, இருந்ததுமில்லை, என்றைக்கும் இருக்கப்போவதுமில்லை, என்று நான் அறிவேன், என்றான்.
10 நான் அவனை நோக்கி: வேதங்களை விசுவாசிக்கிறாயா? என்றேன். அவன் ஆம் என்றான்.
11 நான் அவனை நோக்கி: அப்படியெனில் நீ அவைகளை அறியவில்லை; ஏனெனில் அவை மெய்யாகவே கிறிஸ்துவைக் குறித்து சாட்சி பகர்கின்றன. இதோ, தீர்க்கதரிசிகளில் எவரும் இந்தக் கிறிஸ்துவைக் குறித்துப் பேசாமல், எழுதவுமில்லை. தீர்க்கதரிசனம் உரைக்கவுமில்லை, என்று உன்னிடத்தில் சொல்லுகிறேன்.
12 இதுமட்டுமல்ல. நான் அதைக் கேட்டும் கண்டுமிருக்கிறபடியால் அதைக் குறித்து நான் வெளிப்படுத்தப்பட்டேன்; பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே, அது எனக்கு வெளிப்படுத்தப்பட்டது; ஆகையால் பாவநிவர்த்தி செய்யப்படவில்லையெனில், அனைத்து மனுக்குலமும் தொலைந்துபோக வேண்டும், என்று அறிந்திருக்கிறேன் என்றேன்.
13 அந்தப்படியே, அவன் என்னை நோக்கி: நீ அதிகமாய் அறிந்திருக்கிற இந்தப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால், எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பி, என்றான்.
14 நான் அவனை நோக்கி: நீ உண்மையென அறிந்திருக்கும் இந்தக் காரியத்தில், உனக்கு ஒரு அடையாளம் காட்ட தேவனை சோதிக்க நான் யார்? நீ பிசாசினுடையவனாய் இருப்பதினிமித்தம், அதையும் நீ மறுதலிப்பாய். அன்றியும் என்னுடைய சித்தம் செய்யப்படாமலிருப்பதாக; தேவன் உன்னை வதைத்தால், அதுவே அவருக்கு வானத்திலும் பூமியிலும் வல்லமையிருக்கிறதென்றும், கிறிஸ்து வருவாரென்றும், உனக்கு அறிகுறியாக இருப்பதாக. என்னுடையதல்லாமல் கர்த்தாவே உம்முடைய சித்தமே செய்யப்படுவதாக, என்றேன்.
15 அந்தப்படியே, யாக்கோபாகிய நான், இந்த வார்த்தைகளைப் பேசியபோது, அவன் பூமியிலே விழும் அளவிற்கு அவன்மீது கர்த்தருடைய வல்லமை அதிகமாக இறங்கியது. மேலும் அந்தப்படியே, அநேக நாட்களவும் அவன் போஷிக்கப்பட்டான்.
16 அந்தப்படியே, அவன் ஜனங்களை நோக்கி: நான் மரணமடையப்போவதினிமித்தம் நாளைக்கு ஒன்றாகக் கூடுங்கள். ஏனெனில் நான் மரிப்பதற்கு முன்பு, ஜனங்களிடத்தில் பேச வாஞ்சிக்கிறேன், என்றான்.
17 அந்தப்படியே, மறுதினத்தில் திரளானோர் ஒன்றாகக் கூடியிருந்தார்கள். அவன் அவர்களிடத்தில் தெளிவாகப்பேசி, அவர்களிடம் தான் போதித்த காரியங்களை எல்லாம் மறுத்து, கிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியின் வல்லைமையையும், தூதர்களின் பணிவிடையையும், அறிக்கையிட்டான்.
18 அவன் பிசாசின் வல்லமையினால் வஞ்சிக்கப்பட்டிருந்தான், என்று தெளிவாக அவர்களிடத்தில் பேசினான். அவன் பாதாளத்தையும் நித்தியத்தையும், நித்திய தண்டனையையும் குறித்துப் பேசினான்.
19 அவன், தேவனிடத்தில் பொய்யுரைத்ததினிமித்தம், மன்னிக்கப்படமுடியாத, பாவத்தைச் செய்துவிட்டேனோ, என்று நான் அஞ்சுகிறேன். கிறிஸ்துவை மறுதலித்தேன், வேதவாக்கியங்களை நான் விசுவாசிக்கிறேன் என்று சொன்னேன். அவைகள் மெய்யாகவே அவரைப்பற்றி சாட்சி பகர்கின்றன. நான் இவ்வாறாக பொய்யுரைத்ததினிமித்தம், என் நிலைமை பயங்கரமாக இருக்குமோ, என நான் மிகவும் அஞ்சுகிறேன், ஆனாலும் தேவனிடத்தில் அறிக்கையிடுகிறேன், என்றான்.
20 அந்தப்படியே, இந்த வார்த்தைகளைக் கூறினபோது, அவன் மேலும் ஒன்றும் சொல்லமுடியாதவனாய், ஜீவனைவிட்டான்.
21 ஜீவனை விடவிருந்தபோது, அவன் இந்தக் காரியங்களைப் பேசியதை திரளானோர் கண்டபோது, மிகவும் வியப்புக்குள்ளானார்கள், அவர்கள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் கீழே விழும்படியாய், தேவனுடைய வல்லமை கீழிறங்கியது.
22 இப்பொழுது, இந்தக் காரியம் யாக்கோபாகிய எனக்கு மகிழ்ச்சியாயிருந்தது, ஏனெனில் பரலோகத்தில் இருந்த என் பிதாவினிடத்தில் நான் வேண்டினபடியே, அவர் என் கூக்குரலைக் கேட்டு, என்னுடைய ஜெபத்திற்குப் பதிலளித்தார்.
23 அந்தப்படியே, தேவனுடைய சமாதானமும், அன்பும் மறுபடியும் ஜனங்களின் மத்தியிலே நிலைவரப்பட்டன. அவர்கள் இந்தத் துன்மார்க்க மனுஷன் வார்த்தைகளுக்கு ஒருபோதும் செவிசாய்க்காமல் வேதங்களை ஆராய்ந்தார்கள்.
24 அந்தப்படியே, சத்தியத்தின் அறிவிற்கு லாமானியர்களைத் திருப்பிக்கொண்டு வரவும், நிலைவரப்படுத்தவும் அநேக வழிகள் திட்டமிடப்பட்டன. ஆனால் அவர்களோ யுத்தத்திலும், இரத்தம் சிந்துதலிலும் மகிழ்ச்சிகொண்டு, தங்கள் சகோதரர்களாகிய எங்களுக்கு விரோதமாய் நித்திய வெறுப்பைக் கொண்டிருந்தபடியால், அவைகளெல்லாம் விருதாவாயின. மேலும் அவர்களின் புயங்களின் வல்லமையினால், எங்களை அழிக்கத் தொடர்ந்து வகை தேடினார்கள்.
25 ஆகையால் நேபியின் ஜனங்கள் தங்களின் ஆயுதங்களாலும், தங்களின் எல்லா ஊக்கத்தாலும் அவர்களுக்கு விரோதமாய்ப் பலப்படுத்தி, தேவனும் அவர்களின் இரட்சிப்பின் கன்மலையுமானவரின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆகையால் தங்கள் விரோதிகளை மேற்கொள்ளக்கூடியவர்களாய் ஆனார்கள்.
26 அந்தப்படியே, யாக்கோபாகிய நான் முதுமையடையலானேன்; இந்த ஜனங்களின் வரலாறு நேபியின் மற்ற தகடுகளில் வைக்கப்பட்டமையால், என்னுடைய சிறந்த அறிவின்படியே நான் எழுதியிருக்கிறேன், என்று அறிவித்து, எங்களுடனே காலம் கழிந்தது என்றும், எங்களுக்கு ஒரு சொப்பனத்தைப்போல எங்களின் வாழ்க்கையும் கடந்துசென்றது என்றும், நாங்கள் ஏகாந்தமான, பவித்திரமான ஜனங்களாயும், எருசலேமிலிருந்து துரத்தப்பட்ட பரதேசிகளுமாய், ஒரு வனாந்தரத்திலே உபத்திரவத்திலே பிறந்தவர்களாயும், சகோதரர்களால் வெறுக்கப்பட்டு, யுத்தங்களும் பிணக்குகளும் ஏற்பட்டமையால், எங்களின் நாட்கள் முழுவதும் துக்கித்தோம் என்றும், சொல்லி இந்தப் பதிவேட்டினை முடிக்கிறேன்.
27 யாக்கோபாகிய நான் என்னுடைய பிரதேக் குழிக்குள் சீக்கிரம் செல்லவேண்டியவனாய் இருக்கிறேன் எனக்கண்டேன். ஆகையால் என் குமாரனாகிய ஏனோஸை நோக்கி, இந்தத் தகடுகளை எடுத்துக்கொள், என்றேன். என் சகோதரனாகிய நேபி, எனக்குக் கட்டளையிட்ட காரியங்களை அவனுக்குச் சொன்னேன். அந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாக அவன் வாக்களித்தான். இந்தத் தகடுகளின்மீது என்னுடைய எழுத்துக்களை முடிக்கிறேன். எழுதியவைகளோ கொஞ்சமாக இருக்கின்றன. என்னுடைய சகோதரர்களில் அநேகர் வாசிப்பார்கள் என்று எண்ணி, வாசிப்பவரிடத்திலிருந்து நான் விடைபெற்றுக்கொள்கிறேன். சகோதரரே, தேவன் உங்களோடுகூட இருப்பாராக.