அதிகாரம் 6
கர்த்தர் கடைசி காலங்களில் இஸ்ரவேலை மீட்பார் – பின்பு உலகமானது அக்கினியால் எரிக்கப்படும் – அக்கினியும் கந்தகமுமான கடலைத் தவிர்க்க, மனுஷர் கிறிஸ்துவைப் பின்பற்றவேண்டும். ஏறக்குறைய கி.மு. 544–421.
1 இப்பொழுது, இதோ, என் சகோதரரே, நான் தீர்க்கதரிசனமுரைப்பேன், என்று உங்களுக்குச் சொன்னபடியே, தீர்க்கதரிசியாகிய சீனஸ் இஸ்ரவேலின் வீட்டாரைக் குறித்து, அவர்களை ஒரு தோட்டத்து ஒலிவ விருட்சத்திற்கு உவமையாக்கிப் பேசியவைகள், நிச்சயமாய் சம்பவிக்கும், என்பதே என் தீர்க்கதரிசனமாய் இருக்கிறது.
2 எந்த நாளில் அவர் ஜனத்தை மீட்டுக்கொள்ள தம் கரத்தை மீண்டும் இரண்டாம் விசை நீட்டுகிறாரோ அந்த நாள் தான், ஆம், கர்த்தருடைய வேலையாட்கள் அவருடைய வல்லமையில் அவரின் திராட்சைத் தோட்டத்தை போஷித்து கிளை நறுக்கப் போகும் கடைசி காலமாய் இருக்கும், அதற்குப் பின்பு முடிவு சீக்கிரமாய் வரும்.
3 அவருடைய திராட்சைத் தோட்டத்திலே கருத்தாய்ப் பணிபுரிந்தவர்கள், எவ்வளவு பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; தங்களின் சொந்த இடத்திற்குள் தள்ளப்படுபவர்கள், எவ்வளவு சபிக்கப்பட்டவர்களாயிருக்கிறார்கள்! உலகம் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்.
4 நம்முடைய தேவன், வேரும் கிளைகளுமான, இஸ்ரவேல் வீட்டாரை நினைவுகூர்வதினிமித்தம், நம்மிடத்தில் எவ்வளவு இரக்கமுள்ளவராய் இருக்கிறார். அவர் தன் கரங்களை நாள் முழுவதும் அவர்களுக்கு நீட்டுகிறார், அவர்கள் வணங்காக் கழுத்துடைய, தர்க்கம்பண்ணுகிற ஜனங்களாயிருக்கிறார்கள். ஆனால் தங்களுடைய இருதயங்களை கடினப்படுத்தாத யாவரும் தேவனுடைய ராஜ்யத்தில் இரட்சிக்கப்படுவார்கள்.
5 ஆகையால் என் அன்புச் சகோதரரே, நீங்கள் மனந்திரும்பி இருதயத்தின் முழுநோக்கத்தோடு வந்து, தேவன் உங்களிடத்தில் இசைவாயிருப்பதைப்போல, அவரிடத்தில் இசைந்திருங்கள், என்று தெளிந்த புத்தியின் வார்த்தைகளினால் உங்களுக்கு புத்திசொல்லுகிறேன். பகலின் வெளிச்சத்திலே அவருடைய இரக்கத்தின் கரம் உங்களை நோக்கி நீட்டியிருக்கையில், உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
6 ஆம், இன்றைக்கு அவருடைய சத்தத்தை நீங்கள் கேட்பீர்களாகில், உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதேயுங்கள், ஏனெனில், நீங்கள் ஏன் மரித்துப்போகவேண்டும்
7 இதோ, நாள் முழுவதும் தேவனுடைய நல்ல வார்த்தையால் நீங்கள் போஷிக்கப்பட்ட பின்னரும், வெட்டப்பட்டு அக்கினியிலே எறியப்படும்படியாக நீங்கள் கெட்டகனியைக் கொடுப்பீர்களா?
8 இதோ, இந்த வார்த்தைகளை புறக்கணிப்பீர்களோ? தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை புறக்கணிப்பீர்களோ? கிறிஸ்துவைக் குறித்து அநேகர் பேசின பின்பும் அனைத்து வார்த்தைகளையும் நீங்கள் புறக்கணித்து, கிறிஸ்துவின் நல்ல வார்த்தையையும், தேவனுடைய வல்லமையையும் பரிசுத்த ஆவியானவரின் வரத்தையும் மறுத்து, பரிசுத்த ஆவியை அவித்துப் போட்டு, உங்களுக்காக இடப்பட்ட மீட்பின் மகத்துவமான திட்டத்தை நிந்திப்பீர்களோ?
9 இந்தக் காரியங்களை நீங்கள் செய்வீர்களானால், கிறிஸ்துவில் இருக்கின்ற, மீட்பு மற்றும் உயிர்த்தெழுதலின் வல்லமை, உங்களை தேவனுடைய நியாயவிசாரணைக்கூண்டுக்கு முன்பாக, வெட்கத்தோடும் பயங்கரமான பாவ உணர்ச்சியோடும் கொண்டுவரும், என்பதை அறியீர்களா?
10 நீதி மறுக்கப்பட முடியாததின் நிமித்தம், நீதியின் வல்லமையின்படியே, நீங்கள் அந்த அக்கினியும் கந்தகமுமான கடலினுள் செல்லவேண்டியதாயிருக்கும். அதன் ஜூவாலை அவிக்க முடியாததாயும், அவைகளுடைய புகை மேலே என்றென்றைக்குமாய் எழுகிறதாயும் இருக்கிறது. அந்த அக்கினியும் கந்தகமுமான கடல்தான் முடிவற்ற வேதனை.
11 அப்படியென்றால், என் அன்பான சகோதரரே, மனந்திரும்பி இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசித்து, நீங்கள் நித்திய ஜீவனை பெறும்வரைக்கும், இடுக்கமான வழியிலே தொடருங்கள்.
12 ஞானமுள்ளவராயிருங்கள். இதற்கு அதிகமாக நான் என்ன சொல்ல முடியும்?
13 இறுதியாக, தேவனுடைய இன்பமான நியாய விசாரணைக் கூண்டுக்கு முன்பாக உங்களை நான் சந்திக்கும்வரை, உங்களிடத்திலிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன். அந்த நியாய விசாரணைக்கூண்டானது துன்மார்க்கரை அஞ்சத்தக்க திகிலாலும், பயத்தாலும் அடிக்கும். ஆமென்.