2010–2019
உங்கள் தீபத்தை ஏற்றுங்கள்
அக்டோபர் 2017


2:3

உங்கள் தீபத்தை ஏற்றுங்கள்

என்னுடைய சகோதரிகளே, தீர்க்கதரிசிகள் நம்மை அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நீதிமான்களாயிருப்பீர்களா? உங்கள் விசுவாசத்தில் நீங்கள் பிடிப்புள்ளவர்களாயிருப்பீர்களா? நீங்கள் உங்கள் தீபத்தை ஏற்றுவீர்களா?

நீங்கள் அறியாமலிருக்கலாம், ஆனால் நானும் தலைவர் மான்சனும் இரட்டைப் பிறவிகள். வடக்குக் கலிபோர்னியாவில் நான் பிறந்த அதே நேரத்தில் 36 வயது தாமஸ்  எஸ். மான்சன் புதிய அப்போஸ்தலராக ஆதரிக்கப்பட்டார். தேவனின் தீர்க்கதரிசியான தலைவர் மான்சனுடன் என் விசேஷித்த மற்றும் தனிப்பட்ட தொடர்பை நான் நேசிக்கிறேன்.

தீர்க்கதரிசிகள் பெண்களைப்பற்றி பேசுகிறார்கள். 1 இக்கூட்டத்திலும் அவர்களது வார்த்தைகள் சிலவற்றை நீங்கள் கேட்பீர்கள். எனது உரைக்காக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி தலைவர் ஸ்பென்சர்  டபிள்யூ. கிம்பலால் எழுதப்பட்ட விசேஷித்த தீர்க்கதரிசனத்துக்குச் செல்கிறேன். செப்டம்பர் 1979, பெண்கள் தங்கள் சொந்த பொதுக்கூட்டத்தில் உலகமுழுவதிலுமுள்ள சபையில் கூடியது இரண்டாம் முறைதான். தலைவர் கிம்பல் தன் உரையை எழுதிவிட்டார், ஆனால் மாநாட்டு நாள் வந்தபோது, அவர் மருத்துவ மனையிலிருந்தார். ஆகவே அவருக்குப் பதிலாக அவரது குறிப்புகளை அவரது சார்பில் அவரது மனைவி கமில்லா ஐரிங் கிம்பல் வாசிக்கச் சொன்னார். 2

சகோதரி கமில்லா கிம்பல் மேடையிலிருந்து பேசுகிறார்

சகோதரி கிம்பல் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை வாசித்தார், அது இரட்சகரின் இரண்டாம் வருகைக்கு முன்னால் உலகின் நல்ல பெண்கள் மீது எல்.டி.எஸ் பெண்களின் செல்வாக்கை வலியுறுத்தியது. முடியும்போது, அப்போதிலிருந்து நாம் பேசிக்கொண்டிருக்கிற சபையின் பெண்களுக்கு ஒரு மின்சாரத் தாக்குதல்போல ஒன்று ஏற்பட்டது.

தலைவர் கிம்பல் சொன்ன சிலவற்றை நான் மேற்கோள் காட்டுகிறேன்:

“இறுதியாக, என் அன்பு சகோதரிகளே, இதற்கு முன்பு சொல்லப்படாத, குறைந்தது இவ்விதமாகவாவது சொல்லப்படாத ஒன்றை ஆலோசனையளிக்கட்டுமா. கடைசிநாட்களில் சபைக்கு ஏற்படுகிற பெரிய வளர்ச்சியில் அதிகம், உலகத்திலுள்ள நல்ல பெண்களில் அநேகர் ...பெரும் எண்ணிக்கையில் சபையால் ஈர்க்கப்படுவார்கள் என்பதால் வரும். சபையின் பெண்கள் பிரதிபலிக்கிற, தங்கள் வாழ்க்கையில் தெளிவாக பேசுகிற அளவிலும், உலகத்தின் பெண்களிலிருந்து மகிழ்ச்சியான வழிகளில், வித்தியாசமான, வேறுபட்டவர்களாக சபையின் பெண்கள் பார்க்கப்படும் அளவையும் பொருத்து இது நடக்கும்.

“சபைக்கு வரவிருக்கிற உண்மையான கதாநாயகிகளில், சுயநலமாய் இருப்பவர்களை விட நீதிமான்களாய் இருப்பதில் அதிக அக்கறையுள்ள பெண்கள் சபைக்கு வருவார்கள். இந்த உண்மையான கதாநாயகிகள் பார்வையில் தெரிவதை விட உத்தமத்தில் உயர் மதிப்பு வைக்கிற உண்மையான தாழ்மையுள்ளவர்கள். ...

“கடைசி நாட்களில் சபையில் எண்ணிக்கையிலும் ஆவிக்குரிய வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க சக்தியாக இருக்கப்போகிற சபையின் பெண் உதாரணங்களாக இருப்பார்கள்.” 3

என்ன ஒரு தீர்க்கதரிசன வாசகம். சுருக்கிச் சொன்னால்:

  • வரும் ஆண்டுகளில் சபைக்கு வருகிற மாபெரும் வளர்ச்சியை ஊக்குவிக்கப்போவது பெண்களின் நல்ல உறவாகவே இருக்கும்.

  • ஒத்தாசைச் சங்கப் பெண்கள், இளம் பெண்கள், மற்றும் ஆரம்ப வகுப்பு சிறுமிகளின், பிற விசுவாசங்கள் மற்றும் நம்பிக்கையுடைய உண்மையும் விசுவாசமுமுடைய தேவதன்மையுடைய பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் ஏற்படுத்துகிற நட்புகள் கடைசிநாட்களில் சபை எப்படி வளர்கிறது என்பதன் குறிப்பிடத்தக்க சக்தியாக இருக்கும்.

  • சுயநலமாக இருப்பதைவிட நீதியாக இருப்பதில் அக்கறையுடைய, பார்வையை விட உத்தமம் மிக மதிப்புடையது எனக் காட்டுகிற, பிற பின்னணியுடைய பெண்களை தலைவர் கிம்பல் கதாநாயகிகள் என அழைத்தார்.

நான் உலகம் முழுவதும் பணியாற்றுவதால், இந்த நல்ல பெண்களில் அநேகரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களது நட்பு எனக்கு விலையேறப் பெற்றது. உங்கள் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தார் மத்தியில் நீங்களும் அவர்களை அறிவீர்கள். அவர்கள் இப்போது சபை அங்கத்தினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாம் மிக முக்கியமானதான நட்பில் தொடர்பு ஏற்படுத்துகிறோம். நல்லது, நாம் எப்படி நமது பங்கைச் செய்கிறோம்? நாம் என்ன செய்ய வேண்டும்? தலைவர் கிம்பல் ஐந்து காரியங்களைக் குறிப்பிடுகிறார்:

முதலாவது நீதிமானாய் இருப்பது. நீதிமானாய் இருப்பது என்றால், பரிபூரணராக அல்லது ஒருபோதும் தவறே செய்யாதிருப்பது அல்ல. தேவனோடு உள்ளார்ந்த தொடர்பை ஏற்படுத்துவது, நமது பாவங்களுக்காகவும் தவறுகளுக்காகவும் மனந்திரும்புவது, மற்றும் பிறருக்கு சுதந்திரமாக உதவி செய்வது எனப்படுவதாகும்.

மனந்திரும்பிய பெண்கள் வரலாற்றின் போக்கை மாற்றுகிறார்கள். இளம் வயதிலேயே ஒரு கார் விபத்தில் சிக்கிய சிநேகிதி எனக்கு உண்டு, அப்போதிலிருந்து அவள் வலிபோக்கும் மருந்துக்கு அடிமையானாள். பின்பு அவளது பெற்றோர் விவாகரத்து செய்தனர். சிறிது கால உறவில் கர்ப்பமடைந்தாள், அவளது அடிமைத்தனம் தொடர்ந்தது. ஒரு இரவில் தனது வாழ்க்கையின் குழப்பங்களையும் சிக்கல்களையும் பார்த்து “போதும்” என நினைத்தாள். அவளுக்கு உதவுமாறு இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி கதறினாள். அவளது பயங்கரமான சூழ்நிலைகளை விட இயேசு கிறிஸ்து பலமிக்கவர் என அறிந்ததாக சொன்னாள். அவள் மனந்திரும்புதலின் பாதையில் நடக்கும்போது அவரது பலத்தை சார்ந்திருக்க முடிந்தது.

கர்த்தரிடத்துக்கும் அவரது வழிகளுக்கும் திரும்பி வந்து, தனது வரலாற்றின் பாதையை மாற்றினாள். அவள் நீதிமானாயிருக்கிறாள், தவறு செய்தவர்களுக்கும், மாற விரும்புபவர்களுக்கும், பிறருக்கும் திறந்த மனதோடிருக்கிறாள். நம் அனைவரையும் போலவே, அவளது வாழ்க்கை பரிபூரணமானதல்ல. ஆனால் மனந்திரும்புவதெப்படி, முயன்று கொண்டேயிருப்பது எப்படி என அவள் அறிகிறாள்.

இரண்டாவது பேசுவது. பேசுவதென்பது ஒன்றைப்பற்றி எப்படி, ஏன் உணருகிறீர்கள் எனத் தெளிவாகத் தெரிவிப்பது ஆகும். இந்த ஆண்டின் முன்பகுதியில் கிறிஸ்தவத்தை இழிவுபடுத்திய ஒரு செய்தி என் முகநூல் செய்தி தொகுப்பில் இருந்தது. நான் வாசித்து சிறிது எரிச்சலடைந்தேன். ஆனால் அடக்கிக் கொண்டேன். ஆனால் எனக்குத் தெரிந்த நமது சபை அங்கத்தினரல்லாதவள் தன் சொந்த விமர்சனத்தை பதிவு செய்தாள். அவள் எழுதினாள்: “[இது] இயேசு செய்ததற்கு முற்றிலும் மாறானது, அவரது காலத்தில் அவர் அடிப்படை வாதியாக இருந்தார், ஏனெனில் அவர் வேசியோடு [பேசினார்], ஆயக்காரனோடு [சாப்பிட்டார்],  சக்தியற்ற பெண்களுடனும் பிள்ளைகளுடனும் நட்புடனிருந்தார் . நல்ல சமாரியன் கதையை நமக்குக் கொடுத்தார்.” உண்மையான கிறிஸ்தவர்கள் உலகிலேயே மிகவும் அன்பானவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்பதை அது பின்பற்றுகிறது. நான் அதை வாசித்தபோது எனக்குள் நினைத்தேன், “அதை நான் ஏன் எழுதவில்லை?”

நமது விசுவாசத்துக்கான காரணங்களை சொல்வதில் நாம் ஒவ்வொருவரும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சபையில் ஏன் இருக்கிறீர்கள்? மார்மன் புஸ்தகம் வேதம் என ஏன் நினைக்கிறீர்கள்? உங்கள் சமாதானத்தை எங்கு பெறுகிறீர்கள்? 2017ல் தீர்க்கதரிசி ஏதாவது சொல்லுவதால் என்ன பயன்? அவர் மெய்யான தீர்க்கதரிசி என எப்படி அறிகிறீர்கள்? சமூக ஊடகத்திலும், உங்கள் நண்பர்களுடன் அமைதியான உரையாடல்களிலும், உங்கள் பேரப்பிள்ளைகளுடன் உரையாடல்களிலும், நீங்கள் அறிவதையும் உணர்வதையும் பேச உங்கள் வல்லமையையும் குரலையும் பயன்படுத்துங்கள். நீங்கள் ஏன் நம்புகிறீர்கள், எப்படி அறிவீர்கள், அது எப்படி இருக்கிறது, நீங்கள் எப்போதாவது சந்தேகப்பட்டிருக்கிறீர்களா, அதிலிருந்து எப்படி தெளிந்தீர்கள், இயேசு கிறிஸ்து உங்களுக்கு எப்படித் தெரிகிறார் என சொல்லுங்கள். அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னதுபோல, “நீங்கள் பயப்படாமல், கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள். உங்களுக்கிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரம் சொல்ல எப்போதும் ஆயத்தமாயிருங்கள்.” 4

மூன்றாவதாக வித்தியாசமாக இருப்பது. ப்ளோரிடாவின் பனா சிட்டி பீச்சில் நடந்த கதையை உங்களுக்குச் சொல்லுகிறேன். 5 பின் மாலையில் ராபர்ட்டா உர்சே கடலுக்குள் 100 கஜம் தொலைவில் (90மீ) தொலைவில் அவரது இரண்டு இளம் மகன்களும் உதவிக்காக கதறுவதைப் பார்த்தாள். அவர்கள் ஒரு பலத்த நீரோட்டத்தில் மாட்டி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அருகிலிருந்த ஒரு தம்பதியர் பையன்களைக் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் நீரோட்டத்தில் சிக்கினர். ஆகவே உர்சே குடும்பத்தினர் போராடும் நீச்சலடிப்பவர்களை காப்பாற்ற நீரில் குதித்தனர், விரைவில் ஒன்பதுபேர் நீரோட்டத்தில் மாட்டிக் கொண்டனர்.

அங்கே கயிறுகள் இல்லை. மீட்புக் குழுவும் இல்லை. காவல்துறை மீட்புப் படகை அனுப்பியது, ஆனால் கடலிலிருந்தவர்கள் 20 நிமிடங்கள் போராடி, சோர்வடைந்தனர், அவர்களுடைய தலைகள் நீருக்குள் நழுவிக்கொண்டிருந்தன. கடற்கரையில் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஜெஸ்ஸிகா மே சிம்மன்ஸும் இருந்தார். அவரது கணவர் ஒரு மனித சங்கிலி அமைக்க திட்டமிட்டார். கடற்கறையிலிருந்த ஜனங்களிடம் உதவிக்காக சத்தமிட்டனர். டஜன் கணக்கான ஜனங்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு கடலுக்குள் சென்றனர். ஜெஸ்ஸிகா எழுதினார்: “முற்றிலும் அறிந்திராதவர்களுக்கு உதவ, வெவ்வேறு இனங்களிலும் பாலினத்திலும் இருந்து ஜனங்கள் செயல்பட்டது பார்க்க முற்றிலும் வியப்பாக இருந்தது!!” 6 80 பேர் கொண்ட சங்கிலி நீந்தினவர்களை நோக்கி நீண்டது. அந்த அருமையான தருணத்தின் படத்தைப் பாருங்கள்.

நீந்தியவர்கள் மனித சங்கிலி அமைத்தல்

கடற்கரையிலிருந்த ஒவ்வொருவரும், வழக்கமான நிவாரணங்களை எண்ண முடிந்தது. அவர்கள் முடங்கினர். ஆனால் ஒரு தம்பதி ஒருநொடியில் வித்தியாசமான தீர்வை சிந்தித்தனர். புதுமையும் சிருஷ்டிப்பும் ஆவிக்குரிய வரங்கள். நாம் நமது கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது, நமது கலாச்சாரத்திலும் சமூகத்திலும் நம்மை அது வித்தியாசமாக்குகிறது, ஆனால் அது நாம் வித்தியாசமான தீர்வுகளை, வித்தியாசமான அணுகுமுறைகளை, வித்தியாசமான செயலாக்கங்களை சிந்திக்கும்படி உணர்த்துதலுக்கு நம்மை அனுமதிக்கிறது. நாம் எப்போதும் இந்த உலகத்தோடு பொருந்தப் போவதில்லை. ஆனால் நேர்மறையான வழிகளில் வித்தியாசமாக இருப்பது போராடிக் கொண்டிருக்கிற பிறருக்கு உயிர்காப்பாக இருக்கும்.

நாலாவது வேறுபட்டிருப்பது. வேறுபட்டு என்பது அடையாளம் தெரிகிற அளவுக்கு நன்கு மாறுபட்டிருப்பது. கடற்கறையில் ஜெஸ்ஸிகா மே சிம்மன்ஸ் கதைக்கு நான் திரும்பவும் செல்கிறேன். நீந்தினவர்களை நோக்கி மனிதச் சங்கிலி நீண்டபோது அவர் உதவ முடியும் என அவர் நினைத்தார். ஜெஸ்ஸிகா மே சொன்னார், “நான் மூச்சைப் பிடித்துக்கொண்டு, எளிதாக ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளத்தைச் சுற்றி வர முடியும். [நீரோட்டத்திலிருந்து எப்படி வெளிவர முடியும் என எனக்குத் தெரியும்.] [ஒவ்வொரு நீந்துபவரையும்] மனிதச் சங்கிலியிடம் எப்படிக் கொண்டு வருவது என எனக்குத் தெரியும்.” 7 அவரும் அவரது கணவரும் நீச்சல் பலகைகளை எடுத்துக்கொண்டு, நீந்துபவர்களை அடையும்வரை சென்று, ஒவ்வொருவராக சங்கிலியருகில் கொண்டு வந்தனர், அவர்கள் பத்திரமாக கடற்கறைக்கு கொண்டு சென்றனர். ஜெஸ்ஸிக்காவுக்கு ஒரு மாறுபட்ட திறமை இருந்தது. நீரோட்டத்தை எதிர்த்து நீந்த அவர் அறிந்திருந்தார்.

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் அடையாளம் தெரியும் அளவுக்கு நன்கு தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் எப்படி அதைப் பின்பற்றுவது என்பதில் மாறுபட்டிருக்க வேண்டும். நீரோட்டத்தால் பிறர் அடித்துக்கொண்டு செல்லப்படும்போது, நாம் பயப்படாமலும், உதவ போதுமான பலத்துடனும் இருக்கும்படிக்கு, ஜெஸ்ஸிக்கா நீந்தப் பழகியதுபோல நாமும் அவசரம் வரும் முன்னே சுவிசேஷத்தின்படி வாழ பழக வேண்டும்.

கடைசியாக ஐந்தாவது, மேலேயுள்ள ஒன்று முதல் நான்கு வரை மகிழ்ச்சியுடன் செய்வது. என்ன நடந்தாலும் அது பொருட்டின்றி, உங்கள் முகத்தில் ப்ளாஸ்டிக் புன்னகையை வைத்துக் கொள்வது இல்லை. ஆனால் அது தேவனின் நியாயப்பிரமாணங்களைக் காத்துக்கொண்டு, பிறரை கட்டி எழுப்புவதுதான். 8 நாம் கட்டும்போதும், பிறரின் பாரங்களை தூக்கும்போதும், நமது பாடுகள் எடுத்துக் கொண்டு போக முடியாத அளவுக்கு நமது வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறது. நான் தினமும் பார்க்கிற இடத்தில் தலைவர் கார்டன்  பி. ஹிங்க்லியின் மேற்கோளை வைத்திருக்கிறேன்: அவர் சொன்னார்: “எதிர்மறை அல்லது ஏடாகூடத்தால் நீங்கள் கட்டுவதில்லை. நேர்மறையாகப் பாருங்கள், விசுவாசத்தோடு வேலை செய்யுங்கள், எல்லாம் நடக்கும்.” 9

மகிழ்ச்சியான நேர்மறையான உணர்வுடைய உதாரணமாக எல்சா என்ற ஒரு 13 வயது சிறுமியை நான் அறிவேன். அவளது குடும்பம் தன் நண்பர்களிடமிருந்து 1800 மைல்கள் (2900 கிமீ) தொலைவில் லூசியானாவின் பேடன் ரௌஜுக்கு நகர்ந்தது. நீங்கள் 13 வயதாயிருக்கும்போது, ஒரு புதிய இடத்துக்கு குடிபெயர்வது எளிதல்ல. குடிபெயர்தலைப்பற்றி எல்சா புரிந்துகொள்ளும் வகையில் நிச்சயமாக இருந்தாள், ஆகவே அவளது அப்பா ஒரு ஆசீர்வாதம் கொடுத்தார். ஆசீர்வாதம் கொடுத்த கணமே அவளது அம்மாவின் கைபேசி குறுஞ்செய்தி வந்து சிணுங்கியது. லூசியானாவின் அந்த தொகுதியில் வசித்த இளம்பெண்கள், “தயவுசெய்து எங்கள் தொகுதிக்கு வா!” என்ற தலைப்புடன் இந்த படத்தை அனுப்பியிருந்தனர். 10

வரவேற்கும் அடையாளத்தை இளம் பெண்கள் ஏந்தி நிற்றல்

அவளைச் சந்திக்காமலேயே எல்சாவை நேசிக்க அந்த இளம்பெண்கள் நேர்மறை எண்ணத்தோடு இருந்தனர். அவர்களது உற்சாகம் எல்சாவுக்கு குடிபெயர்தலைப்பற்றி நேர்மறை எண்ணத்தை உருவாக்கியது, எல்லாம் சரியாக இருக்குமா என்ற ஜெபத்துக்கு பதிலளித்தது.

மகிழ்ச்சி மற்றும் நேர்மறை எண்ணத்திலிருந்து ஒரு சக்தி பிறக்கிறது, அது நம்மை ஆசீர்வதிப்பது மட்டுமின்றி, நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் கட்டுகிறது. பிறரில் உண்மையான மகிழ்ச்சியை ஏற்ற, நீங்கள் செய்யும் சிறு காரியங்கள், தலைவர் கிம்பல் ஏற்கனவே ஏற்றியுள்ள தீபத்தை ஏற்கனவே நீங்கள் தாங்கியுள்ளீர்கள் என காட்டுகிறது.

தலைவர் கிம்பலின் உரை கொடுக்கப்பட்டபோது எனக்கு 15 வயது. 40 வயதுக்கு அதிகமான நாமனைவரும் அந்த நாளிலிருந்து தலைவர் கிம்பலிடமிருந்து இந்தப் பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிறோம். நான் இப்போது 8 வயது, 15 வயது, 20 வயது மற்றும் 35 வயதினரைப் பார்க்கிறேன். இந்த தீபத்தை உஙகளுக்கு தரப்போகிறேன். நீங்கள் இந்த சபையின் வருங்காலத் தலைவர்கள், இந்த தீபத்தை முன்னெடுத்துச் சென்று இந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக இருப்பது உங்களைப் பொருத்தது. 40 வயதுக்கு அதிகமாக இருக்கிற நாங்கள், எங்கள் கைகளை உங்களுடையதோடு இணைத்து உங்கள் பலத்தையும் சக்தியையும் உணர்கிறோம். எங்களுக்கு நீங்கள் தேவை.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 49:26–28-ல் காணப்படும் இந்த வசனத்தைக் கேளுங்கள். இது வேறு சூழ்நிலைகளில் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றிரவில் பரிசுத்த ஆவியானவர் மூலம் இப்பரிசுத்தப் பணிக்கு இதை உங்கள் தனிப்பட்ட அழைப்பாக எடுத்துக்கொள்ளலாம் என நம்புகிறேன்.

“இதோ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி செல்லுங்கள்; தட்டுங்கள், உஙகளுக்குத் திறக்கப்படும்.

“இதோ நான் உங்களுக்கு முன்னே போகிறேன்; நீங்கள் என் பின்னே வாருங்கள். நான் உங்கள் மத்தியில் இருப்பேன், நீங்கள் தாறுமாறாக்கப்படுவதில்லை.

“இதோ, நான் இயேசு கிறிஸ்து, நான் சீக்கிரம் வருகிறேன்.” 11

உங்களிடத்தில் தேவனுக்குள்ள தாராளமான அன்பை நீங்கள் உணரக்கூடிய இடத்தில் உங்களை நீங்கள் வைக்குமாறு உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் முறையிடுகிறேன். அந்த அன்பை அடைவதற்கும் அப்பால் உங்களை நீங்கள் வைக்கமுடியாது. நீங்கள் அவருடைய அன்பை உணரும்போது, நீங்கள் அவரில் அன்பு வைக்கும்போது, நீங்கள் மனந்திரும்பி அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவீர்கள். நீங்கள் அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது, அவர் உங்களை அவரது பணியில் பயன்படுத்துகிறார். அவரது பணியும் மகிமையும் ஆண்கள் மற்றும் பெண்களின் மேன்மையடைதலும் நித்திய ஜீவனும் ஆகும்.

தீர்க்கதரிசிகள் நம்மை அழைக்கிறார்கள், என் சகோதரிகளே. நீங்கள் நீதிமான்களாக இருப்பீர்களா? உங்கள் விசுவாசத்தைப் பேசுவீர்களா? நீங்கள் வேறுபட்டு வித்தியாசமாக இருப்பீர்களா? உங்கள் மகிழ்ச்சி, உங்கள் பாடுகள் மத்தியிலும் நல்லவர்களையும் உத்தமர்களையும், உங்கள் நட்பு தேவைப்படுவோரையும் இழுக்குமா? உங்கள் தீபத்தை ஏற்றுவீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் முன்னே போவார், நம் மத்தியிலே இருப்பார் என நான் சாட்சியளிக்கிறேன்.

நன்கு நேசிக்கப்படுகிற நமது தீர்க்கதரிசி தாமஸ் எஸ். மான்சனின் வார்த்தைகளோடு முடிக்கிறேன்: “என் அன்பு சகோதரிகளே, இது உங்கள் நாள், இது உங்கள் நேரம்.” 12 இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. தலைவர் பிரிகாம் யங்: “[சகோதரிகள்] பல்வேறு தொகுதிகளில் பெண்கள் ஒத்தாசைச் சங்கங்களை அமைப்பார்களாக. நம் மத்தியிலே அநேக தாலந்து பெற்ற பெண்கள் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்களது உதவியை நாங்கள் விரும்புகிறோம். சிலர் கஷ்டமான காரியம் என நினைக்கலாம். ஆனால் அப்படியல்ல. சகோதரிகள் இவ்வியக்கத்தின் ஊற்றுக்கண்ணாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள் (in Daughters in My Kingdom: The History and Work of Relief Society [2011], 41).

    தலைவர் லோரன்சோ ஸ்நோ: “தேவ இராஜ்ஜியத்தின் விருப்பங்களை முன்னேற்ற உதவுவதில் உங்கள் பங்கைச் செய்ய ஆயத்தமாக ஆசாரியத்துவத்துக்கு அருகில் நீங்கள் எப்போதும் காணப்பட்டிருக்கிறீர்கள். இந்த பிரயாசங்களில் பங்கேற்றதால் கர்த்தர் தன் விசுவாசமிக்க பிள்ளைகளுக்கு கொடுக்கப்போகிற இப்பணியின் வெற்றியிலும், மேன்மையடைதலிலும் மகிமையிலும் பங்கு மிக கண்டிப்பாக பெறுவீர்கள்.” (in Daughters in My Kingdom, 7).

    தலைவர் ஸ்பென்சர்  டபிள்யு. கிம்பல்: இந்த அமைப்பில் [ஒத்தாசைச் சங்கம்] வல்லமை இருக்கிறது. அது இன்னும் சீயோனின் வீடுகளைப் பலப்படுத்தவும் தேவ இராஜ்யத்தைக் கட்டவும் அல்லது ஒத்தாசைச் சங்கத்தின் பார்வையை சகோதரிகளும் ஆசாரியத்துவ [சகோதரர்களும்] பிடித்துக் கொள்ளும் வரை இன்னும் முற்றிலுமாகப் பயன்படுத்தப்படவில்லை.” (in Daughters in My Kingdom, 142).

    தலைவர் ஹோவர்ட்  டபிள்யு. ஹண்டர்: “இரட்சகரின் பணியை முன்னெடுத்துச் செல்ல, நம்மைச் சூழ்ந்துள்ள தீமையின் அலைகளை தடுக்க, சகோதரர்களோடு நிற்க, சபையின் பெண்களை திரட்டுகிற மிகப்பெரிய தேவை இருக்கிறது. ... ஆகவே நமது குடும்பங்களையும், சபையையும், சமுதாயங்களையும் பலப்படுத்த நன்மைக்கேதுவாக உங்கள் வல்லமைமிக்க செல்வாக்குடன் ஊழியம் செய்ய உங்களை அழைக்கிறோம்.” (in Daughters in My Kingdom, 157).

    தலைவர் கார்டன்  பி. ஹிங்க்லி: “இச்சபையின் பெண்களிடம் பெலனும் பெரும் திறமையும் இருக்கிறது. தலைமைத்துவமும் வழிகாட்டலும் ஒரு சுதந்திர ஆவியும் இருக்கிறது, இருப்பினும் கர்த்தரின் இராஜ்ஜியத்தில் தன் பங்காக இருப்பதில் திருப்தியும், இதை முன்னெடுக்க ஆசாரியத்துவத்தோடு கைகோர்த்து வேலை செய்வதிலும் இருக்கிறது.” (in Daughters in My Kingdom, 143).

    தலைவர் தாமஸ்  எஸ். மான்சன்: “ஒத்தாசைச் சங்கத்தின் பொதுத் தலைவர் பெல் ஸ்மித் ஸ்பாபோர்டை மேற்கோள் காட்டி அவர் எழுதினார்: “இன்றைய உலகை விட ஒருபோதும் பெண்கள் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்ததில்லை. அவர்களுக்கு ஒருபோதும் சந்தர்ப்பத்தின் வாசல்கள் விசாலமாகத் திறந்திருக்கவில்லை. இது பெண்களை அழைக்கிற, உற்சாகமிக்க, சவால் நிறைந்த, தேவைப்படுகிற நேரம். நாம் நமது நிதானத்தைக் காத்துக் கொண்டால், வாழ்க்கையின் மெய்யான மதிப்புகளைக் கற்றால், ஞானமாக முன்னுரிமைகளை தீர்மானித்தால் பெரும் பிரதிபலன்களைப் பெறும் நேரம்.” [A Woman’s Reach (1974), 21]. My dear sisters, this is your day, this is your time” (“The Mighty Strength of the Relief Society,” Ensign, Nov. 1997, 95).

    தலைவர் ரசல்  எம். நெல்சன்: “பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் என் சகோதரிகள் முன்வர நான் கெஞ்சுகிறேன். முன்பு எப்போதையும்விட உங்கள் வீட்டிலும், உங்கள் சமுதாயத்திலும், தேவ இராஜ்யத்திலும் உங்களுக்கு உரிமையுள்ள தேவையான இடத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். தலைவர் கிம்பலின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற நான் உங்களை கெஞ்சுகிறேன். நீங்கள் அப்படிச் செய்யும்போது, ஒரு எதிர்பாராத விதமாக பரிசுத்த ஆவியானவர் உங்கள் செல்வாக்கை சிறப்பாக்குவார் என நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்கிறேன்!” (“A Plea to My Sisters,” Liahona, Nov. 2015, 97).

  2. See the video of Sister Camilla Kimball reading President Spencer W. Kimball’s address at conference.lds.org; see also Spencer W. Kimball, “The Role of Righteous Women,” Ensign, Nov. 1979, 102–4.

  3. Spencer W. Kimball, “The Role of Righteous Women,” 103–4; emphasis added.

  4. 1பேதுரு 3:14–15.

  5. See McKinley Corbley, “80 Beachgoers Form Human Chain to Save Family Being Dragged Out to Sea by Riptide,” July 12, 2017, goodnewsnetwork.org.

  6. Jessica Mae Simmons, in Corbley, “80 Beachgoers Form Human Chain.”

  7. Simmons, in Corbley, “80 Beachgoers Form Human Chain.”

  8. ஆல்மா 41:10; 34:28கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:27; லூக்கா 16:19–25 பார்க்கவும்.

  9. Teachings of Presidents of the Church: Gordon B. Hinckley (2016), 71.

  10. Note from Virginia Pearce family.

  11. Doctrine and Covenants 49:26–28.

  12. Thomas S. Monson, “The Mighty Strength of the Relief Society,” 95.