கர்த்தரிடத்தில் திரும்புங்கள்
நமக்கு நடப்பன அனைத்தையும் நாம் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நமது வாழ்க்கையின் மாற்றங்களுக்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதன் மீது நமக்கு முழு கட்டுப்பாடு இருக்கிறது.
1998 வசந்த காலத்தில், கரோலும் நானும், எங்களது நான்கு பிள்ளைகளையும், அண்மையில் விதவையான எனது மாமியாருடன், சில நாட்கள் ஹவாய்க்கு செல்ல, ஒரு வியாபார பயணத்தை குடும்ப விடுமுறையாக மாற்ற முடிந்தது.
எங்களது ஹவாய் விமான பயணத்துக்கு முந்தய இரவு, எங்கள் நான்கு வயது மகன், ஜோனத்தான் இரண்டு காதுகளிலும் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டான். அவன் குறைந்தது மூன்றிலிருந்து, நான்கு நாட்களுக்கு பயணம்பண்ண முடியாது என சொல்லப்பட்டோம். கரோல் ஜோனத்தானுடன் வீட்டிலிருக்க இதர குடும்பத்துடன் நான் இப்பயணத்தை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
நாங்கள் வந்து சேர்ந்த உடனேயே நான் திட்டமிட்ட பயணம் இதுவல்ல என முதல் அறிகுறி தென்பட்டது. நிலா ஒளியில், மர வரிசை பாதையில், எங்களுக்கு முன்னால் கடல் தெரிய, அத்தீவின் அழகைப்பற்றி சொல்ல, அந்த காதல் கனிந்த சமயத்தில், திரும்பியபோது நான் மிகவும் நேசிக்கிறேன் என சொல்லக்கூடிய என் மாமியாரின் கண்களைப் பார்த்தேன். இது நான் எதிர்பார்த்தது அல்ல. கரோலும் எங்கள் நோயுற்ற மழலை மகனுடன் தனியாக வீட்டில் அவளது விடுமுறையைக் கழிக்க எதிர்பார்க்கவில்லை.
இடையூறு ஏற்பட்ட விடுமுறையை விட மிக கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, எதிர்பாராத பாதையில் நாம் நம்மைக் காண்கிற தருணங்கள் வரும். அடிக்கடி நமது கட்டுப்பாட்டை மீறிய நிகழ்வுகள் நாம் திட்டமிட்ட அல்லது நம்பிய வாழ்க்கையை மாற்றினால் நாம் எப்படி பதிலளிக்கிறோம்?
ஜூன் 6, 1944ல், அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தில் இளம் செகண்ட் லெப்டினண்ட் ஹைரம் ஷம்வே, டி—டே ஆக்கிரமிப்பின் பகுதியாக ஒமஹா கடற்கரையில் இறங்கினார். அவர் பாதுகாப்பாக தரையிறங்கினார், ஆனால் ஜூலை 27ல் நேச நாடுகள் முன்னேறிச் சென்றதன் ஒரு செயலான, ஒரு டாங்கி எதிர்ப்பு புதைகுண்டு வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்தார். ஒரு நொடியில் அவரது வாழ்க்கையும் எதிர்கால மருத்துவ பணியும் மிகவும் பாதிக்கப்பட்டது. அவரது கடுமையான காயங்களிலிருந்து குணமடைய உதவிய பல அறுவைச் சிகிச்சைகளைத் தொடர்ந்தும், சகோதரர் ஷம்வே தனது பார்வையை மீண்டும் பெறவே இல்லை. அவர் எப்படி பதிலளிப்பார்?
மறுவாழ்வு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் இருந்துவிட்டு, வயாமிங்கின் லோவலில் உள்ள வீட்டுக்குத் திரும்பி வந்தார். ஒரு மருத்துவராகும் கனவு இன்னும் சாத்தியமல்ல என அவர் உணர்ந்தார், ஆனால் முன்னேறிச் செல்லவும், திருமணம் செய்யவும், குடும்பத்தை ஆதரிக்கவும் முடிவெடுத்தார்.
அவ்வாறே அவர் மேரிலாண்டின் பால்ட்டிமோரில் மறுவாழ்வு ஆலோசகராகவும், பார்வையற்றோருக்கான வேலைவாய்ப்பு வல்லுநராகவும் வேலை பெற்றார். தன் சொந்த மறுவாழ்வு முறையில், அவர் அறிந்ததை விட இன்னும் அதிகமாக பார்வையற்றோர் தகுதிபெற்றுள்ளனர் என அறிந்தார். இந்த வேலையில் அவர் இருந்த எட்டு ஆண்டுகளில், நாட்டின் பிற எந்த ஆலோசகரையும் விட அதிகமான பார்வையற்றோரை வேலையிலமர்த்தினார்.
இப்போது ஒரு குடும்பத்தை போஷிக்கும் தன்னம்பிக்கையுடன் தன் இனிய காதலியிடம், “நீ மெயிலை வாசித்து, காலுறையைத் தரம்பிரித்து, காரை ஓட்டினால், மீதியை என்னால் செய்ய முடியும்.” என சொல்லி, ஹைரம் திருமணம் செய்யுமாறு கேட்டார். அவர்கள் விரைவில் சால்ட் லேக் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டு, அவ்வாறே எட்டு பிள்ளைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டனர்.
1954ல், ஷம்வே குடும்பத்தினர் வயாமிங்குக்கு திரும்பி வந்தனர், அங்கு பார்வையற்றோர் மற்றும் செவிடர்களுக்கான மாநில கல்வி இயக்குநராக சகோதரர் ஷம்வே 32 ஆண்டுகள் பணியாற்றினார். அந்த நேரத்தில் அவர் செயனே முதல் தொகுதி ஆயராக 7 ஆண்டுகளாகவும், 17 ஆண்டுகளாக பிணைய கோத்திர பிதாவாகவும் பணியாற்றினார். அவரது பணி ஓய்வுக்குப் பின் சகோதரர் மற்றும் சகோதரி ஷம்வே, இங்கிலாந்து, லண்டன் தெற்கு ஊழியத்தில் மூத்த தம்பதியராக சேவையாற்றினர்.
கஷ்டமான நிலையிலும் கூட பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப்பேரப்பிள்ளைகளாகிய தன் பெரிய சந்ததிக்கு விசுவாசத்தின் பாரம்பரியத்தையும், கர்த்தரில் நம்பிக்கையையும் விட்டுவிட்டு ஹைரம் ஷம்வே 2011ல் மரித்தார். 1
ஹைரம் ஷம்வேயின் வாழ்க்கை யுத்தத்தால் மாறியிருக்கலாம், ஆனால் தனது தெய்வீக தன்மையையும், நித்திய தகுதியையும், அவர் ஒருபோதும் சந்தேகப்படவில்லை. அவரைப் போலவே நாமும் ஆவிக்குமாரர்கள், குமாரத்திகள், “அதனிமித்தம் சரீர உடலைப்பெற்று பரிபூரணத்தை நோக்கி முன்னேற பூலோக அனுபவத்தைப் பெற்று, இறுதியாக நித்திய ஜீவனின் வாரிசுகளாக நமது தெய்வீக இலக்கை அடைய அவரது திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.” 2 எந்த அளவிலும் மாற்றமோ, பாடோ, எதிர்ப்போ நமது நித்திய பாதையை மாற்ற முடியாது, நமது சுயாதீனத்தை நாம் பிரயோகிக்கும்போது நமது தேர்வுகள் மட்டுமே மாற்ற முடியும்.
அநித்தியத்தில் நாம் எதிர்கொள்கிற மாற்றங்களும், அதன் விளைவான சவால்களும், பல்வேறு வடிவங்களிலும் உருவங்களிலும் தனித்தன்மையுடன் நம் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது, இவைகளால் குடும்பம் சவால்களை எதிர்கொள்கிறது:
-
ஒரு அன்புக்குரியவரின் மரணம்
-
ஒரு கசப்பான விவாகரத்து
-
ஒருவேளை திருமணம் செய்ய சந்தர்ப்பம் வாய்க்காமலிருக்கலாம்
-
கடுமையான சுகவீனம் அல்லது காயம்
-
உலகம் முழுவதிலும் நாம் அண்மையில் பார்த்த இயற்கை பேரழிவுகளும் கூட
பட்டியல் நீள்கிறது. ஒவ்வொரு “மாற்றமும்” நமது தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனித்துவமாக இருந்தாலும், பாடு அல்லது சவாலில் ஒரு பொதுவான மூலக்கூறு இருக்கிறது, இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலி மூலம் நம்பிக்கையும் சமாதானமும் எப்போதும் கிடைக்கிறது. ஒவ்வொரு காயம்பட்ட சரீரத்துக்கும், பாதிக்கப்பட்ட ஆவிக்கும், உடைந்த இருதயத்துக்கும், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி முடிவான சீர்படுத்தும் மற்றும் குணமாக்கும் வழிகளைக் கொடுக்கிறது.
மாற்றத்தின் மத்தியில் முன்னேறிச் செல்ல தனிப்பட்டவராக, நமக்கு என்ன தேவை என்பதை ஒருவரும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர் அறிகிறார். நண்பர்களையும் அன்பானவர்களையும் போலல்லாமல் இரட்சகர் நம்மிடம் இரக்கம் காட்டுவது மட்டுமின்றி, அவர் நம்மைப் போல உணரவும் முடியும், ஏனெனில் நாம் இருக்கிற இடத்தில் அவரும் இருந்திருக்கிறார். நமது பாவங்களுக்காக விலைகொடுத்து பாடுபட்டதுடன், இயேசு கிறிஸ்துவும் எல்லா பாதைகளிலும் நடந்தார், அநித்தியத்தில் நாம் ஒருபோதும் சந்தித்திராத ஒவ்வொரு சவால்களையும் சமாளித்தார், சரீர, உணர்வுபூர்வ மற்றும் ஆவிக்குரிய ஒவ்வொரு பாதிப்பையும் சந்தித்தார்.
தலைவர் பாய்ட் கே. பாக்கர் போதித்தார்: “இயேசு கிறிஸ்துவின் இரக்கமும் கிருபையும் பாவம் செய்பவர்களுக்கு மட்டும் வரைமுறைப்படுத்தப்பட்டதல்ல.... ஆனால் அவரை ஏற்று, பின்பற்றும் யாவருக்கும் நீடித்த சமாதானத்தின் வாக்குத்தத்தத்தை அவை உள்ளடக்கியுள்ளன. ...வெகுளியான காயம்பட்டோருக்கும், அவரது இரக்கம் பலமான குணமாக்கும் மருந்து.” 3
இந்த அநித்திய அனுபவத்தில், நமக்கு நடக்கும் அனைத்தையும் நாம் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நமது வாழ்க்கையின் மாற்றங்களுக்கு எப்படிப் பதிலளிக்கிறோம் என்பதில் நாம் முற்றிலும் கட்டுப்பாடு பெற்றிருக்கிறோம். நாம் எதிர்கொள்ளும் சவால்களும் பாடுகளும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, எளிதாகக் கையாளக்கூடியது என்பது இதன் அர்த்தமல்ல. நாம் வேதனை மற்றும் மன உளைச்சலிலிருந்து சுதந்திரமாயிருப்போம் என்பதல்ல. நம்பிக்கைக்கு ஒரு காரணம் இருக்கிறது என்பது இதன் அர்த்தம். ஆனால் அது இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியினிமித்தம் நாம் முன்னேறி சிறந்த நாட்களைக் காண முடியும்---சந்தோஷம், ஒளி மற்றும் மகிழ்ச்சியின் நாட்கள் கூட.
மோசியாவில் நோவா இராஜா மற்றும் அவனது ஜனத்தின் முன்னாள் ஆசாரியனான ஆல்மா எழுதிய விவரத்தை நாம் வாசிக்கிறோம், அவன், “கர்த்தரால் எச்சரிக்கப்பட்டு, ... ராஜாவாகிய நோவாவின் சேனைகளுக்கு முன்பாக வனாந்தரத்துக்குள் புறப்பட்டுப் போனார்கள்.” எட்டு நாட்களுக்குப் பிறகு, “மிகவும் அழகானதும் இன்பமானதுமான தேசத்துக்கு வந்தார்கள். அங்கு, அவர்கள் கூடாரங்களைப் போட்டு, நிலத்தைப் பண்படுத்தி, கட்டிடங்களைக் கட்டத்துவங்கினார்கள்.” 4
சூழ்நிலை நன்றாகத் தோன்றியது. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். கர்த்தருக்கு சேவை செய்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் உடன்படிக்கையாக, அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். “அவர்கள் தேசத்திலே பலுகிப் பெருகி மிகவும் விருத்தியடைந்தார்கள்.” 5
எனினும் அவர்களின் சூழ்நிலைகள் விரைவில் மாறின. “தேசத்தின் எல்லைகளிலே லாமானியரின் சேனைகள் வருவதைக் கண்டார்கள்.” 6 ஆல்மாவும் அவனது ஜனங்களும் விரைவில் அடிமைத்தனத்துக்குள் வைக்கப்பட்டார்கள். “அவர்களுடைய உபத்திரவங்கள் மிகவும் அதிகரித்தபடியாலே, அவர்கள் தேவனிடத்தில் ஊக்கமாய் கூக்குரலிட்டார்கள்.” மேலும் அவர்களைப் பிடித்து வைத்திருந்தவர்களால் ஜெபிப்பதை நிறுத்தவும் கூட கட்டளையிடப்பட்டார்கள். அல்லது, “தேவனை அழைக்கிறவர்கள் கொலை செய்யப்பட வேண்டும்.” 7 தங்கள் புதிய நிலைக்கு வர ஆல்மாவும் அவனது ஜனமும் எதுவும் செய்யவில்லை. அவர்கள் என்ன பதிலளித்தார்கள்
தேவனைக் குறைகூறுவதை விடுத்து அவரிடத்தில் திரும்பி, “தங்கள் இருதயங்களை அவரிடத்திலே ஊற்றினார்கள்.” அவர்களது விசுவாசம் மற்றும் மௌனமான ஜெபங்களுக்குப் பதிலாக, கர்த்தர் பதிலளித்தார், “கவலைப்படாதிருங்கள். ...உங்களின் தோள்களிலே சுமத்தப்படிருக்கிற சுமைகளை நீங்கள் உணராமலிருக்குமளவுக்கு, அவைகளை இலகுவாக்குவேன்.” பின்னர் சீக்கிரத்திலேயே, தங்களுடைய பாரங்களைச் சுமக்க கர்த்தர் பெலப்படுத்தினார். கர்த்தருடைய சித்தத்துக்கு மகிழ்ச்சியோடும் பொறுமையோடுமிருந்து கீழ்ப்படிந்தார்கள்.” 8 இன்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகாவிட்டாலும், கர்த்தரிடத்துக்குத் திரும்பி, கர்த்தரிடத்திலிருந்து அல்ல, தங்களுடைய தேவைகளுக்கேற்பவும், கர்த்தருடைய ஞானத்தின்படியும் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.
மூப்பர் டாலின் எச். ஓக்ஸ் போதித்திருக்கிறார், “அவரை மிகவும் நேசிக்கிறவர்களை அவர் அறிந்தபடியே, நமது தனிப்பட்ட தேவைகளுக்கு பொருத்தமானபடி, குணம்பெறும் ஆசீர்வாதங்கள் வருகின்றன. சில சமயங்களில் ஒரு ‘குணப்படுத்துதல்’ நமது சுகவீனத்தை சுகமாக்குகிறது அல்லது நமது பாரத்தை அகற்றுகிறது. ஆனால் சில சமயங்களில் நம்மீது வைக்கப்பட்ட பாரங்களைத்தாங்க பெலன் அல்லது புரிதல் அல்லது பொறுமை கொடுக்கப்பட்டு, நாம் ‘குணமாக்கப்படுகிறோம்’.” 9
ஆல்மாவும் அவனது ஜனமும் கர்த்தரால் விடுதலையாக்கப்படது போல நாமும் விடுதலையாக்கப்படும்படியாக, முடிவாக “அவர்களின் விசுவாசமும் பொறுமையும் மிகுதியாய் இருந்தது.”. நம்மைப்போல “அவர்கள் நன்றிகளை ஏறெடுத்தார்கள்...,அவர்களது அடிமைத்தனத்திலிருந்தபோது, கர்த்தராகிய அவர்களுடைய தேவனைத்தவிர வேறொருவராலும் அவர்களை மீட்க முடியவில்லை.” 10
சோகமான முரண் என்னவென்றால், அடிக்கடி அதிக தேவையிலிருப்போர், அவர்களுக்கு உதவக்கூடிய பரிபூரண ஆதாரமாகிய நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து திரும்புகிறார்கள். நமக்குத் தெரிந்த “பித்தளை சர்ப்பம்” போன்ற வேத விவரம், நாம் சவால்களை எதிர்கொள்ளும்போது, நமக்கு ஒரு தேர்வு இருக்கிறது என நமக்கு போதிக்கிறது. “பறக்கும் கொள்ளிவாய் சர்ப்பங்களால்” 11 “இஸ்ரவேல் பிள்ளைகள் அநேகர் கடிக்கப்பட்ட பிறகு, ஒரு முன்னடையாளம் உயர்த்தப்பட்டது. [ஆனால் அது ஒரு தேர்வு.] அநேகர் பார்த்துப் பிழைத்தார்கள். ...
அவர்களுடைய இருதயக் கடினத்தினிமித்தம் அங்கே அநேகர் பார்க்காதபடி, கடினப்பட்டவர்களாயிருந்ததினிமித்தம், அவர்கள் அழிந்து போனார்கள்.” 12
பூர்வகால இஸ்ரவேலர்களைப்போல இரட்சகரைப் பார்த்து வாழ நாமும் அழைக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டிருக்கிறோம், ஏனெனில் நமது பாரங்கள் கனமாக இருக்கும்போதும் கூட, அவரது நுகம் எளிதானது, நம்முடையது பாரமாக இருக்கும்போது கூட, அவரது பாரம் இலகுவாக இருக்கலாம்.
இப்பரிசுத்த சத்தியத்தை இளைய ஆல்மா போதித்தான், “தேவனில் நம்பிக்கையை வைக்கிற எவரும் அவர்களுடைய சோதனைகளிலும், அவர்களுடைய பிரச்சினைகளிலும் அவர்களுடைய உபத்திரவங்களிலும் ஆதரிக்கப்பட்டு கடைசி நாளில் உயர்த்தப்படுவார்கள்.” 13
இந்தக் கடைசி நாட்களில் கர்த்தர் நமக்கு பல்வேறு ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறார், நமது “பித்தளைச் சர்ப்பங்களான” கிறிஸ்துவை நோக்கவும், அவரில் நமது நம்பிக்கையை வைக்கவும் நமக்கு உதவ எல்லாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் சவால்களைச் சமாளிப்பது என்பது உண்மையை உதாசீனப்படுத்துவது இல்லை, ஆனால் மாறாக நாம் எங்கு உற்றுநோக்க வேண்டும் மற்றும் கட்டவேண்டும் என தெரிந்துகொண்ட அஸ்திவாரத்தைப்பற்றியது.
இந்த ஆதாரங்களில் அடங்குவன, ஆனால் வரையறுக்கப்பட்டு அல்ல:
-
வேதங்களையும் தீர்க்கதரிசிகளின் போதனைகளையும் ஒழுங்காகப் படித்தல்
-
அடிக்கடி, உருக்கமான ஜெபமும் உபவாசமும்
-
திருவிருந்தில் தகுதியோடு பங்கேற்றல்
-
. ஒழுங்காக ஆலயம் செல்லுதல்
-
ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள்
-
பயிற்சி பெற்ற வல்லுநர்கள் மூலம் ஞானமிக்க ஆலோசனை,
-
சரியாக குறிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டபடி பயன்படுத்தும் மருந்துகள் கூட
நமது வழியில் வரக்கூடிய வாழ்க்கைச் சூழலின் எந்த மாற்றமானாலும், நாம் பயணிக்க வேண்டிய எதிர்பாராத பாதை எதுவாயிருந்தாலும், நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பது ஒரு தேர்வு. இரட்சகரிடம் திரும்பி அவரது நீட்டப்பட்ட கரங்களை பற்றிக்கொள்வதே எப்போதும் நமது சிறந்த தேர்வு.
மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் இந்த நித்திய சத்தியத்தை போதித்தார்: “உண்மையான நீடித்த மகிழ்ச்சி அதனுடன் வருகிற மிகச் சவாலான கஷ்டங்களை மேற்கொள்ள பெலன், தைரியம், மற்றும் திறமை, இயேசு கிறிஸ்துவை மையமாகக்கொண்ட வாழ்க்கையிலிருந்து வருகிறது. ஒரே நாளில் வரக்கூடிய முடிவுகளுக்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் கர்த்தரின் நேரத்தில் தீர்வுகள் வரும், சமாதானம் நிலைக்கும், வெற்றிடம் நிரப்பப்படும் என்பதற்கு முற்றிலும் உறுதி இருக்கிறது.” 14
இந்த சத்தியங்களைப்பற்றி நான் என் சாட்சியைப் பகிர்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.