“பின்னர் நான் பெலவீனமுள்ளவைகளை பெலமுள்ளவைகளாக்கமாட்டேனோ”
நாம் நம்மைத் தாழ்த்தி, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, கிறிஸ்துவின் கிருபையும் அவருடைய அளவற்ற பாவநிவாரண பலியும் மாற்றத்தை சாத்தியமாக்குகிறது.
தலைவர் தாமஸ் எஸ். மான்சன் ஒருமுறை சிறைக் கண்காணிப்பாளர் கிளிண்டன் டபியின் கதையைப் பகிர்ந்து கொண்டார். “1940கள் மற்றும் 1950களில்,[கண்காணிப்பாளர் டபி] தனது சிறையில் உள்ள ஆண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சிகளுக்காக நன்கு பிரபலமானவர். ஒரு விமர்சகர், ‘சிறுத்தைகள் தங்கள் புள்ளிகளை மாற்றாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்!’ என்றார்.
“கண்காணிப்பாளர் டபி பதிலளித்தார், ‘நான் சிறுத்தைகளுடன் வேலை செய்யவில்லை என்பதை நீங்கள் அறிய வேண்டும். நான் மனிதர்ளுடன் வேலை செய்கிறேன், மனிதர்கள் ஒவ்வொரு நாளும் மாறுகிறார்கள்.’”1
ஆண்களும் பெண்களும் மாற முடியாது என்பது சாத்தானின் மிகப்பெரிய பொய்களில் ஒன்றாகும். நம்மால் மாற முடியாது, அல்லது இன்னும் மோசமாக, நாம் மாறக்கூடாது என்று உலகம் கூறுவது போல் இந்த பொய் பல வழிகளில் சொல்லப்பட்டு மீண்டும் சொல்லப்படுகிறது. நமது சூழ்நிலைகள் நம்மை வரையறுக்கின்றன என்று நமக்கு கற்பிக்கப்படுகிறது. நாம் “உண்மையில் யார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்,” உலகம் கூறுகிறது, “நம்முடைய உண்மையான சுயத்திற்கு நம்பத்தக்கவிதமாக இருக்க வேண்டும்.”
நம்மால் மாறமுடியும்
நம்பத்தக்கவிதமாக இருப்பது உண்மையில் நல்லது என்றாலும், தேவனுடைய குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும், தெய்வீக இயல்பு மற்றும் அவரைப் போல ஆக வேண்டும் என்ற இலக்குடன், நம்முடைய உண்மைக்கு, உண்மையான சுயங்களுக்கு நாம் நம்பத்தகுந்தவர்களாக இருக்க வேண்டும்.2 இந்த தெய்வீக இயல்பு மற்றும் இலக்குக்கு நம்பத்தகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள் என்றால், நாம் அனைவரும் மாற வேண்டும். மாற்றத்திற்கான வேத வார்த்தை மனந்திரும்புதல். தலைவர் ரசல் எம். நெல்சன் போதிக்கிறார், “அதிகமான மக்கள், மனந்திரும்புதலை தண்டனையாகக் கருதுகின்றனர், இது மிகவும் தீவிரமான சூழ்நிலைகளைத் தவிர தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. … உங்களையும் என்னையும் ‘மனந்திரும்புங்கள்’ என்று இயேசு கேட்கும்போது, அவர் நம்மை மாற்ற அழைக்கிறார்.”3
தேவனின் நிபந்தனைகள்
கணினி மென்பொருள் உருவாக்குநர்கள் கணினிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூற நிபந்தனை அறிக்கைகளைப் பயன்படுத்துகின்றனர். இவை சில சமயங்களில் if-then அறிக்கைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. x என்பது உண்மையாக இருந்தால், y ஐஅழுத்தவும்.
விசுவாசத்தின் நிபந்தனைகள், நீதியின் நிபந்தனைகள், மனந்திரும்புதலின் நிபந்தனைகள் என கர்த்தர் நிபந்தனைகள் மூலமாகவும் செயல்படுகிறார். பின் வருவதைப் போன்று தேவனிடமிருந்து நிபந்தனை அறிக்கைகளின் பல உதாரணங்கள் உள்ளன:
“எனது கட்டளைகளை நீ கைக்கொண்டு, முடிவுபரியந்தம் நிலைத்திருந்தால், [பின்னர்]தேவனுடைய வரங்கள் எல்லாவற்றிலும் மேலான வரமான நித்திய ஜீவனை நீ பெறுவாய்.”4
அல்லது “நீங்கள் உண்மையான இருதயத்தோடும், முழுநோக்கத்தோடும், கிறிஸ்துவில் விசுவாசம் வைத்துக் கேட்பீர்களானால், [பின்னர்] அவர் அதன் சத்தியத்தை பரிசுத்த ஆவியானவரின் வல்லமையிலே அவர் உங்களுக்குத் தெரியப்பண்ணுவார்.”5
தேவனின் அன்பு கூட, எல்லையற்றது மற்றும் பரிபூரணமானது என்றாலும், நிபந்தனைகளுக்கு உட்பட்டது.6 உதாணமாக:
“நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால் [பின்னர்]என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.”7
மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன் போதிக்கும்போது, இந்த சுவிசேஷத்தின் உண்மையை மேலும் விளக்கினார்: “ ‘நான் இருப்பது போலவே இரட்சகர் என்னை நேசிக்கிறார்’ என்று சிலர் சொல்ல விரும்புகிறார்கள், அது நிச்சயமாகவே உண்மை. ஆனால், நாம் இருப்பதைப் போல் நம்மில் யாரையும் அவரின் ராஜ்யத்திற்குள் அவரால் அழைத்துச் செல்ல முடியாது, ஏனென்றால் “எந்த அசுத்தமும் அங்கு வாசம் செய்ய முடியாது, அல்லது அவரது பிரசன்னத்தில் வாசம் செய்யமுடியாது’ [மோசே 6:57]. நமது பாவங்கள் முதலில் தீர்க்கப்பட வேண்டும்.”8
பெலவீனமான காரியங்கள் பெலனாக மாற முடியும்
மாற்றத்திற்கு நமக்கு உதவும் தேவனின் வல்லமையைப் பெறுவதற்கான ஆசீர்வாதமும் நிபந்தனைக்கு உட்பட்டது. மார்மன் புஸ்தகத்தில் தீர்க்கதரிசி மரோனி மூலம் பேசுகிற இரட்சகர், போதித்தார்: “மனுஷர் என்னிடத்தில் வந்தால் நான் அவர்களுக்கு அவர்களுடைய பெலவீனத்தைக் காண்பிப்பேன். மனுஷர் தாழ்மையாய் இருக்கும்படிக்கு நான் அவர்களுக்கு பெலவீனத்தைத் தருகிறேன். எனக்கு முன்பாகத் தாழ்மையாயிருக்கிற அனைத்து மனுஷருக்கும் என் கிருபையே போதுமானதாயிருக்கிறது, அவர்கள் எனக்கு முன்பாக தாழ்மையாயிருந்து, என்னிடத்தில் விசுவாசமாயிருந்தால் நான் அவர்களுக்கு பெலவீனமுள்ளவைகளை பெலமுள்ளவைகளாக்குவேன்.”9
இங்கே தேவன் நமக்குக் கற்பிப்பதை இன்னும் உன்னிப்பாகப் பார்க்கும்போது, அவர் முதலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பலவீனத்தை, ஒருமையில் தருகிறார், இது வீழ்ந்த அல்லது மாம்ச மனிதர்களாகிய நமது அநித்திய அனுபவத்தின் ஒரு பகுதியாகும். ஆதாமின் வீழ்ச்சியால் நாம் சுபாவ ஆண்களாகவும் பெண்ணாகவும் மாறிவிட்டோம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம், நமது பலவீனம் அல்லது நமது வீழ்ந்த இயல்புகளை நாம் மேற்கொள்ள முடியும்.
அவருடைய கிருபை போதுமானது என்றும், நாம் நம்மைத் தாழ்த்தி, அவர்மீது நம்பிக்கை வைத்தால், பின்னர் அவர் “பலவீனமானவற்றை [பன்மை] [நமக்கு] பலமாக ஆக்கிவிடுவார் என்றும் அவர் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் எனில், நாம் முதலில் நமது வீழ்ந்த இயல்புகளை, நமது பலவீனத்தை மாற்றும்போது, பின்னர் நம் நடத்தைகளை, நமது பலவீனங்களை மாற்ற முடியும்.
மாற்றத்திற்கான தேவைகள்
கர்த்தரின் முறைப்படி மாற்ற வேண்டிய தேவைகளை மதிப்பாய்வு செய்வோம்:
முதலில், நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். மாற்றத்திற்கான கர்த்தருடைய நிபந்தனை தாழ்மை. “அவர்கள் எனக்கு முன்பு தங்களைத் தாழ்த்துவார்களானால்,”10 அவர் சொன்னார். தாழ்மைக்கு எதிர் பெருமை. தேவன் என்ன நினைக்கிறார் அல்லது உணருகிறார் என்பதை விட நாம் என்ன நினைக்கிறோம் அல்லது உணர்கிறோம் என்பதை முதன்மைப்படுத்தும்போது, நமக்கு நன்றாகத் தெரியும் என்று நினைக்கும் போது பெருமை நிலவுகிறது.
… சுபாவ மனுஷனை அகற்றி, கர்த்தராகிய கிறிஸ்துவின் பாவநிவர்த்தியால் பரிசுத்தவானாகி, ஒரு சிறுபிள்ளையைப் போலாகி, கீழ்ப்படிந்து, சாந்தமாயும், தாழ்மையாயும், பொறுமையாயும் இல்லாதிருந்தால், … சுபாவ மனுஷன் என்றென்றைக்குமாய் தேவனுக்கு விரோதியாயிருக்கிறான்,”11 என பென்யமீன் ராஜா போதித்தான்.
மாறும்படியாக, நாம் சுபாவ மனிதனைத் தள்ளி விட்டு, தாழ்மையாகவும், பணிவாகவும் ஆக வேண்டும். ஜீவிக்கிற தீர்க்கதரிசியைப் பின்பற்றும் அளவுக்கு நாம் தாழ்மையாக இருக்க வேண்டும். ஆலய உடன்படிக்கைகளை செய்து கைக்கொள்ளும் அளவுக்கு தாழ்மை. அனுதினமும் மனந்திரும்பும் அளவுக்கு தாழ்மை. நாம் மாற விரும்பும் அளவுக்கு தாழ்மையுடன் இருக்க வேண்டும், “[நம்] இருதயங்களை தேவனிடம் சமர்ப்பிக்கவேண்டும்.”12
இரண்டாவதாக, இயேசு கிறிஸ்துவில் நாம் விசுவாசம் வைக்க வேண்டும். மீண்டும், இரட்சகரின் வார்த்தைகள்: “அவர்கள் எனக்கு முன்பாகத் தாழ்மையாய் இருந்து, என்னிடத்தில் விசுவாசமாயிருந்தால்,”13 நமது பெலவீனங்களை மேற்கொள்ள அவர் நமக்கு வல்லமையைத் தருவார். தாழ்மை, இயேசு கிறிஸ்து மீதான விசுவாசத்துடன் இணைந்து, அவருடைய கிருபையின் செயல்படுத்தும் வல்லமையையும் அவருடைய பாவநிவர்த்தியின் காரணமாக கிடைக்கும் ஆசீர்வாதங்களின் முழுமையையும் அணுகுவதற்கு நம்மை அனுமதிக்கும்.
தலைவர் நெல்சன் போதித்தார், “உண்மையான மனந்திரும்புதல் இயேசு கிறிஸ்துவுக்கு நம்மைச் சுத்தப்படுத்தவும், குணப்படுத்தவும், பலப்படுத்தவும் வல்லமை இருக்கிறது என்ற விசுவாசத்துடன் தொடங்குகிறது. … நம்முடைய வாழ்க்கையில் தேவனின் வல்லமையைத் திறப்பது நமது விசுவாசமே.”14
மூன்றாவதாக, அவருடைய கிருபையின் மூலம் அவர் பெலவீனமான காரியங்களை பெலப்படுத்த முடியும். நாம் நம்மைத் தாழ்த்தி, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தால், பின்னர் அவருடைய கிருபை நாம் மாற சாத்தியமாக்கும். வேறு வார்த்தைகளில் எனில், மாறுவதற்கு அவர் நமக்கு அதிகாரம் அளிப்பார். இது சாத்தியம் ஏனென்றால், அவர் சொல்வது போல், “அனைத்து மனுஷருக்கும் என் கிருபையே போதுமானதாயிருக்கிறது.”15 நாம் மாற்ற முற்படுகையில், அவருடைய பெலப்படுத்துதல், சாத்தியமாக்கும் கிருபை, எல்லா தடைகளையும், எல்லா சவால்களையும், எல்லா பெலவீனங்களையும் சமாளிக்கும் வல்லமையை நமக்கு வழங்குகிறது.
நமது மிகப்பெரிய பெலவீனங்கள் நமது மிகப்பெரிய பெலமாக மாறும். நாம் மாற்றப்பட்டு “புதிய சிருஷ்டிகளாக மாறலாம்.”16 பெலவீனமானவைகள் உண்மையில் “[நமக்கு] பெலமாக முடியும்.”17
இரட்சகர் தம்முடைய எல்லையற்ற, நித்திய பாவநிவிர்த்தியைச் செய்தார், இதனால் நாம் உண்மையில் மாறவும், மனந்திரும்பவும், சிறந்தவர்களாகவும் முடியும். நாம் உண்மையில் மீண்டும் பிறக்க முடியும். பழக்கவழக்கங்களை, போதை பழக்கங்களை மற்றும் “பெல்லாப்பைச் செய்யும் மனநிலையை”18 நம்மால் மேற்கொள்ள முடியும். பரலோக பிதாவின் அன்பான குமாரர்களாக, குமாரத்திகளாக, மாறுவதற்கான வல்லமை நமக்குள் உள்ளது.
மாற்றத்திற்கான உதாரணங்கள்
மாறிய ஆண்களின், பெண்களின் உதாரணங்கள் வேதங்களில் நிறைந்துள்ளன.
ஒரு பரிசேயனாகவும், ஆரம்பகால கிறிஸ்தவ சபையை தீவிரமாக துன்புறுத்துபவனாகவுமிருந்த சவுல்,19 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பவுல் ஆக மாறினான்.
துன்மார்க்க நோவா ராஜாவின் அரசவையில் ஆல்மா ஒரு ஆசாரியனாயிருந்தான். அவன் அபிநாதியின் வார்த்தைகளைக் கேட்டு, முழுமையாக மனந்திரும்பி, மார்மன் புஸ்தகத்தின் பெரிய ஊழியக்காரர்களில் ஒருவனானான்.
அவனுடைய குமாரன் ஆல்மா, சபையை அழிக்க முயன்று தனது இளமையைக் கழித்தான். அவன் மனமாற்றம் அடைந்து தனது சொந்த உரிமையில் ஒரு ஆற்றல்வாய்ந்த ஊழியக்காரனாக மாறும் வரை அவன் “கொடிய பாவிகளின்”20 நடுவில் இருந்தான்.
மோசே பார்வோனின் குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டு எகிப்திய இளவரசனாக ஆடம்பரமாக வளர்க்கப்பட்டான். ஆனால் அவன் உண்மையில் யார் என்பதைப் புரிந்துகொண்டு, அவனுடைய தெய்வீக இலக்கைப்பற்றி அறிந்தபோது, அவன் மாறி, பழைய ஏற்பாட்டின் சிறந்த நியாயப்பிரமாணங்களை வழங்குபவன் ஆனான்.21
என் மனைவியின் தாத்தா, ஜேம்ஸ் பி. கீசர், தனது சொந்த வலிமையான இருதய மாற்றத்தால்22 எப்போதும் என்னைக் கவர்ந்தார். 1906ம் ஆண்டில் சால்ட் லேக் பள்ளத்தாக்கில் விசுவாசமுள்ள பிற்காலப் பரிசுத்தவான் முன்னோடிகளுக்குப் பிறந்த அவர், இளம் வயதிலேயே தனது தாயை இழந்து தனது இளமை முழுவதும் போராடினார். அவரது பதின்ம மற்றும் இளம் வயது ஆண்டுகள் சபையிலிருந்து விலகிச் சென்று செலவழிந்தன; அந்த நேரத்தில் அவர் பல கெட்ட பழக்கங்களில் ஈடுபட்டார். ஆயினும்கூட, அவர் ஒரு விசுவாசமுள்ள பெண்ணை சந்தித்து திருமணம் செய்து கொண்டார், அவர்கள் ஒன்றாக ஐந்து குழந்தைகளை வளர்த்தனர்.
1943 ம் ஆண்டில், பெரும் மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் அழைக்கப்பட்டபடி, பட், யூட்டாவை விட்டு வெளியேறி, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வேலை தேடுவதற்காக சென்றார். இந்த நேரத்தில் வீட்டை விட்டு விலகி, அவர் தனது சகோதரி மற்றும் அவர்களின் தொகுதியில் ஆயராக பணியாற்றிய அவளது கணவருடன் வசித்து வந்தார்.
அவரது சகோதரி மற்றும் மைத்துனரின் அன்பு மற்றும் செல்வாக்குடன், அவர் சபையில் தனது ஆர்வத்தை புதுப்பிக்கத் தொடங்கினார், மேலும் ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் மார்மன் புஸ்தகத்தைப் படிக்கத் தொடங்கினார்.
ஒரு இரவு, ஆல்மா 34ம் அதிகாரத்தை, வாசிக்கும்போது, பின்வரும் வார்த்தைகளைப் படித்தபோது அவரது இருதயம் தொடப்பட்டது:
“ஆம், நீங்கள் இனிமேலும் உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாமல், வரும்படி விரும்புகிறேன். …
“ஏனெனில் இதோ, இந்த ஜீவியம் மனுஷருக்குத் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படும் ஒரு காலமாயிருக்கிறது; ஆம், இதோ, இந்த ஜீவியத்தின் நாள், மனுஷர் தங்கள் பிரயாசங்களைச் செய்யும் நாளாயிருக்கிறது.”23
இந்த வசனங்களைப் படிக்கும் போது, ஒரு வல்லமையான உணர்வு அவர் மீது வந்தது, அவர் மாற வேண்டும், மனந்திரும்ப வேண்டும், மேலும் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் படுக்கையில் இருந்து எழுந்து முழங்கால்படியிட்டு, தன்னை மன்னித்து, தனது வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யத் தேவையான பலத்தைத் தரும்படி கர்த்தரிடம் மன்றாடி, ஜெபிக்கத் தொடங்கினார். அவருடைய ஜெபத்திற்கு பதில் கிடைத்தது, அன்றிலிருந்து அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. பட், சபையில் சேவை செய்யச் சென்றார், அவரது வாழ்க்கையின் இறுதி வரை விசுவாசமுள்ள, அர்ப்பணிப்புள்ள பிற்காலப் பரிசுத்தவானாக இருந்தார். அவர் எல்லா வகையிலும் மாற்றப்பட்டார். அவருடைய மனம், அவரது இருதயம், அவருடைய செயல்கள், அவருடைய வாழ்க்கை ஆகியவையே மாறிவிட்டன.
சகோதர சகோதரிகளே, நமது தெய்வீக இலக்கும் நோக்கமும் இறுதியில் நமது பரலோக பிதாவும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவைப் போல் ஆக வேண்டும் என்பதே. நாம் மாறும்போது அல்லது மனந்திரும்பும்போது இதைச் செய்கிறோம். நாம் “[இரட்சகரின்] சாயலை [நமது] முகரூபத்தில் பெறுகிறோம்.”24 நாம் புதியவர்களாகவும், சுத்தமாகவும், வித்தியாசமாகவும் மாறுகிறோம், மேலும் ஒவ்வொரு நாளும் அதற்காக தொடர்ந்து பிரயாசப்படுகிறோம். சில நேரங்களில் அது இரண்டு அடிகள் முன்னோக்கி ஒரு அடி பின்வாங்குவது போல் உணரலாம், ஆனால் நாம் தாழ்மையுடன் விசுவாசத்தில் தொடர்ந்து முன்னேறுகிறோம்.
நாம் நம்மைத் தாழ்த்தி, இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, கிறிஸ்துவின் கிருபையும் அவருடைய அளவற்ற பாவநிவர்த்தியின் தியாகமும் மாற்றத்தை சாத்தியமாக்குகிறது.
இயேசு கிறிஸ்து உண்மையில் நமது இரட்சகரும் மீட்பருமானவர் என்பதற்கு நான் சாட்சியாக இருந்து சாட்சியமளிக்கிறேன். உண்மையாகவே, அவரது கிருபை போதும். “அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்”25 என நான் பிரகரடனப்படுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.