நேசிக்கவும், பகிரவும், அழைக்கவும்
நாம் நேசிக்கும்போது, பகிர்ந்து கொள்ளும்போது, அழைக்கும்போது, பூமியை அதன் மேசியாவின் வருகைக்காக ஆயத்தப்படுத்தும் அந்த மகத்தான மற்றும் மகிமையான வேலையில் நாம் பங்கேற்கிறோம்.
உயிர்த்தெழுந்த இரட்சகர் தம்முடைய சீஷர்களை சந்தித்த அற்புதத்தையும் மகிமையையும், கலிலேயாவில் ஒரு மலையின் மீது நிற்பதையும், என்னுடன் ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்”1 என்ற அவருடைய வியப்புக்குரிய கட்டளையை அவர் அவர்களுடன் பகிர்ந்துகொண்ட இந்த வார்த்தைகளை தனிப்பட்ட முறையில் கேட்பது எவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது. நிச்சயமாக, இந்த வார்த்தைகள் அவருடைய அப்போஸ்தலர்களைப் போலவே நம் ஒவ்வொருவருக்கும் அதிகாரமளித்து, ஊக்கமளித்து, நகர்த்தும். உண்மையில், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அதற்காகவே அர்ப்பணித்தனர்.
சுவாரஸ்யமாக, இயேசுவின் வார்த்தைகளை மனதில் கொண்டவர்கள் அப்போஸ்தலர்கள் மட்டுமல்ல. புதியவர்கள் முதல் மிகவும் அனுபவமுள்ளவர்கள் வரையிலான, ஆரம்பகால சபையின் உறுப்பினர்கள், அவர்கள் சந்தித்த மற்றும் அறிந்தவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொண்டு இரட்சகரின் மகத்தான ஆணையில் பங்குபெற்றனர். இயேசு கிறிஸ்துவைப்பற்றிய அவர்களுடைய சாட்சியைப் பகிர்ந்து கொள்வதற்கான உறுதிப்பாடு அவருடைய புதிதாக நிறுவப்பட்ட சபையை விரிவுபடுத்த உதவியது.2
அவர் முதலில் பிரகடனப்படுத்தியபோது, கலிலேயாவிலுள்ள அந்த மலையில் நாம் இருந்திருந்தால், கிறிஸ்துவின் சீஷர்களைப்போல நாமும் இன்று அவருடைய ஆணைக்கு செவிசாய்க்க அழைக்கப்படுகிறோம். ஜோசப் ஸ்மித் தனது சகோதரர் சாமுவேலை இயேசு கிறிஸ்துவின் சபையின் ஆரம்பகால ஊழியக்காரராக பணித்தபோது இந்த ஆணை, 1830 ல் மீண்டும் ஆரம்பமானது.3 அப்போதிருந்து, 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஊழியக்காரர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து அனைத்து நாடுகளுக்கும் கற்பித்துள்ளனர் மற்றும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் மகிழ்ச்சியான செய்திகளை ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஞானஸ்நானம் அளித்தனர்.
இது நமது கோட்பாடு. நமது அன்பான விருப்பம்.
நமது மத்தியிலுள்ள நமது சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை, இரட்சகரின் அழைப்புக்கு செவிசாய்த்து, உலக நாடுகளுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் காலத்திற்காக நாம் ஏங்குகிறோம். இரட்சகர் தம்முடைய அப்போஸ்தலருடன் செய்ததைப் போலவே, முழுநேர ஊழிய சேவைக்குத் தயாராகும்படி உங்களை நேற்று அழைத்தபோது, நமது தீர்க்கதரிசியிடம் இருந்து இதேபோன்ற வலிமைமிக்க சவாலை இளைஞர்களும் இளம் பெண்களுமான நீங்கள் உணர்ந்தீர்கள் என்று நான் நம்புகிறேன்.
ஓடுகள தொடக்க கட்டைகளில் ஓட்டக்காரர்களைப் போலவே, பந்தயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிற தீர்க்கதரிசியின் கையொப்பத்துடன் நிறைவுபெறுகிற அதிகாரப்பூர்வ அழைப்பிற்காக நாம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்! இந்த விருப்பம் உன்னதமானது, உணர்த்துதலானது; இருப்பினும், இந்தக் கேள்வியைக் கருத்தில் கொள்வோம்: நாம் அனைவரும் ஏன் இப்போது ஆரம்பிக்கக்கூடாது?
“பெயர் அடையாள அட்டை இல்லாமல் நான் எப்படி ஊழியக்காரராக இருக்க முடியும்?” என்று நீங்கள் கேட்கலாம். அல்லது நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம், “முழுநேர ஊழியக்காரர்கள் இந்த வேலையைச் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். நான் உதவ விரும்புகிறேன், ஆனால் ஒருவேளை பின்னர் வாழ்க்கை சற்று அமைதியடைந்தால்.”
சகோதர சகோதரிகளே, இது அதைவிட மிக எளிமையானது! நன்றியுடன், சிறுவயதிலிருந்தே நம் ஒவ்வொருவருக்கும் கற்பிக்கப்பட்ட எளிய, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய கொள்கைகளின் மூலம் இரட்சகரின் பெரிய ஆணை நிறைவேற்றப்பட முடியும்: நேசிக்கவும், பகிரவும், அழைக்கவும்.
நேசிக்கவும்
நாம் செய்யக்கூடிய முதல் காரியம் கிறிஸ்து அன்பு செலுத்தியதைப்போல் அன்பு செலுத்துவதே.
இந்த கொந்தளிப்பான காலங்களில் உலகம் முழுவதும் நாம் காணும் மனித துன்பங்கள் மற்றும் பதட்டங்களால் நமது இருதயங்கள் கனமாக உள்ளன. எவ்வாறாயினும், ஓரங்கட்டப்பட்டவர்களைச் சென்றடைவதற்கான அவர்களின் முயற்சிகள் மூலம் எல்லா இடங்களிலும் உள்ள மக்களால் வெளிப்படுத்தப்பட்ட இரக்கம் மற்றும் மனிதாபிமானத்தின் வெளிப்பாட்டால் நாம் உணர்த்தப்படலாம், தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தவர்கள், தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்தவர்கள் அல்லது பிற வகையான சோகம் மற்றும் விரக்தியை அனுபவிப்பவர்கள்.
சமீபத்தில், போலந்தில் உள்ள தாய்மார்கள் குழு ஒன்று, அவநம்பிக்கையான வெளியேறும் குடும்பங்கள் பற்றிய கவலையின் காரணமாக, ஒரு ரயில் நிலைய நடைமேடையில், அவர்கள் ஒரு ரயிலிலிலிருந்து இறங்கும்போது அந்த எல்லையைக் கடக்குமிடத்தில் அகதித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்காக, அவர்களுக்கு வேண்டிய முழுமையாக பொருத்தப்பட்ட ஸ்ட்ரோலர்கள் காத்திருக்க, ஒரு நேர்த்தியான வரிசையில் விட்டுச் சென்றார்கள், என செய்தி ஆதாரங்கள் தெரிவித்தன. நிச்சயமாக, நம்முடைய பரலோக பிதா இது போன்ற தன்னலமற்ற தயாளத்தைப் பார்த்து புன்னகைக்கிறார், ஏனென்றால் நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, நாம் “கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம்.”4
நம் அண்டை வீட்டாரிடம் கிறிஸ்துவைப் போன்ற அன்பை நாம் காட்டும் போதெல்லாம், நாம் ஒரு வார்த்தை கூட பேசாவிட்டாலும், நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறோம்.
மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதென்பது, பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக5 என்ற இரண்டாவது பெரிய கட்டளையின் தாராளமான வெளிப்பாடாகும்; இது நமது சொந்த ஆத்துமாக்களுக்குள் செயல்படும் பரிசுத்த ஆவியின் புடமிடும் செயல்முறையைக் காட்டுகிறது. கிறிஸ்துவின் அன்பை பிறருக்குக் காட்டுவதன் மூலம், நம்முடைய நற்செயல்களைப் பார்ப்பவர்கள் “பரலோகத்திலிருக்கிற [நமது] பிதாவை மகிமைப்படுத்தும்படி.”6 செய்யலாம்.
எதையும் எதிர்பார்க்காமல் நாம் இதைச் செய்கிறோம்.
அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், நிச்சயமாக அவர்கள் நம் அன்பையும் நம் செய்தியையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது நமது நம்பிக்கை.
நாம் என்ன செய்கிறோம், நாம் யார் என்பது நிச்சயமானது.
கிறிஸ்து போல் பிறர் மீது அன்பின் மூலம், கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மகிமையான, வாழ்க்கையை மாற்றும் பண்புகளை நாம் பிரசங்கிக்கிறோம், மேலும் அவருடைய மகத்தான ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க அளவில் பங்கு கொள்கிறோம்.
பகிரவும்
நாம் செய்யக்கூடிய இரண்டாவது காரியம் பகிர்வது.
கோவிட்-19 தொற்றுநோயின் ஆரம்ப மாதங்களில், தாய்லாந்தைச் சேர்ந்த சகோதரர் விசன் தனது சமூக ஊடகக் கணக்கில் மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய தனது ஆய்வில் கற்றுக்கொண்டவற்றின் உணர்வுகளையும் பதிவுகளையும் பகிர்ந்து கொள்ளத் தூண்டப்பட்டார். அவரது தனிப்பட்ட இடுகைகளில் ஒன்றில், அவர் இரண்டு மார்மன் புஸ்தக ஊழியக்காரர்களான ஆல்மாவையும் அமுலேக்கையும்பற்றிய கதையைப் பகிர்ந்துள்ளார்.
அவரது சகோதரர், வினை, அவருடைய மத நம்பிக்கையில் ஊன்றியிருந்தாலும், இடுகையால் தொடப்பட்டு, எதிர்பாராத விதமாக, “நான் அந்த புத்தகத்தை தாய் மொழியில் பெற முடியுமா?” எனக் கேட்டார்.
விசன் புத்திசாலித்தனமாக மார்மன் புஸ்தகத்தின் ஒரு பிரதியை இரண்டு சகோதரி ஊழியக்காரர்களால் வழங்க ஏற்பாடு செய்தார், அவர்கள் அவரது சகோதரருக்கு கற்பிக்கத் தொடங்கினர்.
விசன் மெய்நிகர் பாடங்களில் சேர்ந்தார், அப்போது அவர் மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். உண்மையைத் தேடும் மனப்பான்மையுடன் ஜெபிக்கவும் படிக்கவும், வினை கற்றுக்கொண்டார். சில மாதங்களில், வினை ஞானஸ்நானம் பெற்றார்!
விசன் பின்னர் கூறினார், “தேவனின் கைகளில் ஒரு கருவியாக இருக்க நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது, மேலும் அவர் நம் மூலமாக அவர் வழியில் அவருடைய வேலையைச் செய்வதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.” விசன் சாதாரணமாகவும் இயற்கையாகவும் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டதால் அவர்களது குடும்ப அற்புதம் வந்தது.
நாம் அனைவரும் மற்றவர்களுடன் பொருட்களைப் பகிர்ந்து கொள்கிறோம். நாம் அடிக்கடி இதைச் செய்கிறோம். நாம் விரும்பும் திரைப்படங்கள் மற்றும் உணவுகள், வேடிக்கையான விஷயங்கள், பார்க்கும் இடங்கள், நாம் விரும்பும் கலை, நாம் ஈர்க்கப்பட்ட மேற்கோள்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப்பற்றி நாம் விரும்புவதை ஏற்கனவே பகிர்ந்து கொள்ளும் காரியங்களின் பட்டியலில் நாம் எவ்வாறு எளிமையாக சேர்க்கலாம்?
மூப்பர் டியட்டர் எப். உக்டர்ப் விளக்கினார்: “உங்கள் வார இறுதி நாட்களைப்பற்றி யாராவது கேட்டால், சபையில் நீங்கள் அனுபவித்ததைப்பற்றி பேச தயங்காதீர்கள். ஒரு சபையின் முன் நின்று, அவர்கள் எவ்வாறு இயேசுவைப் போன்றிருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களென ஆர்வத்துடன் பாடிய சிறுபிள்ளைகளைப்பற்றி பேசுங்கள். தனிப்பட்ட வரலாறுகளைத் தொகுக்க ஓய்வு இல்லங்களிலிருக்கிற வயதானவர்களுக்கு உதவிசெய்துகொண்டிருக்கிற வாலிபக் குழுவைப்பற்றிப் பேசுங்கள்.”7
பகிர்தல் என்பது சுவிசேஷத்தை “விற்பது” அல்ல. நீங்கள் ஒரு பிரசங்கத்தை எழுதவோ அல்லது ஒருவரின் தவறான கருத்துக்களை திருத்தவோ தேவையில்லை.
ஊழியக்கார வேலை என்று வரும்போது, நீங்கள் அவருடைய காவல் அதிகாரியாக இருக்க வேண்டும் என்பது தேவனுக்குத் தேவையில்லை; இருப்பினும், நீங்கள் அவருடைய பங்காளியாக இருங்கள் என்று அவர் கேட்கிறார்.
சுவிசேஷத்தில் நம்முடைய நேர்மறையான அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம், இரட்சகரின் மகத்தான ஆணையை நிறைவேற்றுவதில் நாம் பங்கு கொள்கிறோம்.
அழைக்கவும்.
நீங்கள் செய்ய முடிகிற மூன்றாவது காரியம் அழைத்தல்.
ஈக்குவாடரைச் சேர்ந்த சகோதரி மேரா சமீபத்தில் மனமாறியவர். அவள் ஞானஸ்நானம் பெற்றதைத் தொடர்ந்து, சமூக ஊடக கணக்குகள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் மற்றும் அன்பானவர்களை அழைத்ததால், சுவிசேஷத்தில் அவளுடைய மகிழ்ச்சி வானளவு உயர்ந்தது. அவளது பதிவுகளைப் பார்த்த பல குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கேள்விகளுடன் பதிலளித்தனர். மேரா அவர்களுடன் தொடர்பு கொண்டாள், ஊழியக்காரர்களை ஒன்றாகச் சந்திக்க அடிக்கடி அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்தாள்.
மேராவின் பெற்றோர்கள், அவளது உடன்பிறப்புகள், அவளது அத்தை, இரண்டு உறவினர்கள் மற்றும் அவளது நண்பர்கள் பலர் ஞானஸ்நானம் பெற்றனர், ஏனெனில் அவள் அவர்களை “வந்து பாருங்கள்,” “வந்து சேவை செய்யுங்கள்” மற்றும் “வந்து சொந்தமாகுங்கள்” என்று தைரியமாக அழைத்தாள். அவளது இயல்பான மற்றும் இயற்கையான அழைப்புகள் மூலம், 20க்கும் மேற்பட்டோர் இயேசு கிறிஸ்துவின் சபையின் ஞானஸ்நானம் பெற்ற உறுப்பினர்களாக இருக்க அவளது அழைப்பை ஏற்றுக்கொண்டனர். சபையின் உறுப்பினராக தான் உணர்ந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும்படி சகோதரி மேரா மற்றவர்களை அழைத்ததால் இது நடந்தது.
மற்றவர்களுக்கு நம்மால் கொடுக்க முடிகிற நூற்றுக்கணக்கான அழைப்புகளிருக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விளக்கும் ஒரு திருவிருந்து ஆராதனை, ஒரு தொகுதி நிகழ்ச்சி, நேரலை காணொளியை “வந்து பார்க்க” மற்றவர்களை நாம் அழைக்கலாம். “வந்து பாருங்கள்” என்பது மார்மன் புஸ்தகத்தைப் படிப்பதற்கான அல்லது அதன் பிரதிஷ்டைக்கு முன் அதன் திறந்த இல்லத்தின் போது ஒரு புதிய ஆலயத்திற்குச் செல்லும் அழைப்பாக இருக்கலாம். சிலநேரங்களில், அழைப்பானதை நாம் உள்ளுக்குள்ளே கொடுக்கிறோம், நமக்கான அழைப்பு, நம்மைச் சுற்றியுள்ள வாய்ப்புகளைப்பற்றிய விழிப்புணர்வையும் பார்வையையும் அதன்படி செயல்பட வாய்ப்பும் அளிக்கிறது.
நமது டிஜிட்டல் யுகத்தில், உறுப்பினர்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்கள் மூலம் செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நூற்றுக்கணக்கானவை, ஆயிரக்கணக்கானவை இல்லாவிட்டாலும், பகிர்ந்து கொள்ளத் தகுதியான உயர்த்தும் காரியங்களை நீங்கள் காணலாம். இந்த உள்ளடக்கம் “வந்து பார்க்க” “வந்து சேவை செய்ய” மற்றும் “வந்து சேர்ந்திட” அழைப்புகளை வழங்குகிறது.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள மற்றவர்களை நாம் அழைக்கும்போது, அவருடைய ஆணையின் பணியில் ஈடுபடுவதற்கான இரட்சகரின் அழைப்பில் நாம் பங்கேற்கிறோம்.
முடிவுரை
என் அன்புச் சகோதர சகோதரிகளே, இன்று நாம் மூன்று எளிய காரியங்களை, எவரும் செய்யக்கூடிய எளிதான காரியங்களைப்பற்றி பேசினோம். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள்! ஒருவேளை நீங்கள் ஏற்கனவே அவற்றைச் செய்கிறீர்கள், நீங்கள் செய்கிறீர்கள் என்பதை முழுமையாக உணராமல் கூட!
நீங்கள் அன்பு செலுத்த, பகிர மற்றும் அழைக்கும் வழிகளைக் கருத்தில் கொள்ள உங்களை அழைக்கிறேன். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, நம்முடைய அன்பான இரட்சகரின் வார்த்தைகளுக்கு நீங்கள் செவிசாய்க்கிறீர்கள் என்பதை அறிந்து ஓரளவு மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
செய்ய நான் உங்களிடம் வலியுறுத்துவது புதிய திட்டம் அல்ல. இந்த கொள்கைகளை நீங்கள் முன்பே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்யவேண்டுமென சபை உங்களிடம் கேட்கும் இது “அடுத்த பெரிய காரியம்” அல்ல. இந்த மூன்று காரியங்களும் நாம் ஏற்கனவே இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்கிறோம் என்பதன் விரிவாக்கம் மட்டுமே.
பெயர் அடையாள அட்டை அல்லது கடிதம் தேவையில்லை.
முறையான அழைப்பு தேவையில்லை.
இந்த மூன்று காரியங்களும் நாம் யார், எப்படி வாழ்கிறோம் என்பதன் இயல்பான பகுதியாக மாறும்போது, அவை உண்மையான, தானாக, கட்டாயப்படுத்தப்படாத அன்பின் வெளிப்பாடாக மாறும்.
2,000 ஆண்டுகளுக்கு முன்பு கலிலேயாவில் கிறிஸ்துவின் சீஷர்களைப்போலக் கூடி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள, நாமும் இரட்சகரின் கட்டளையைத் தழுவி, உலகம் முழுவதுக்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியும்.
நாம் நேசிக்கும்போது, பகிர்ந்து கொள்ளும்போது, அழைக்கும்போது, பூமியை அதன் மேசியாவின் வருகைக்காக ஆயத்தப்படுத்தும் அந்த மகத்தான மற்றும் மகிமையான வேலையில் நாம் பங்கேற்கிறோம்.
இரட்சகரின் அழைப்புக்கு நாம் செவிசாய்த்து, அவருடைய மகத்தான ஆணையில் ஈடுபட முயற்சிப்போம் என்பதே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் ஜெபம், ஆமென்.