கிணற்றடியில் பாடங்கள்
நாம் இங்கு அனுப்பப்பட்ட அனைத்தையும் செய்ய உதவும் பெலத்திற்காகவும் குணப்படுத்துதலுக்காகவும் நாம் இரட்சகரிடம் திரும்பலாம்.
பொது மாநாட்டின் இந்த பெண்கள் கூட்டத்தில் உங்கள் ஒவ்வொருவருடனும் கூடியிருப்பதில் என்ன ஒரு மகிழ்ச்சி!
நான் மேற்கு நியூயார்க்கில் வளர்ந்தேன், எங்கள் வீட்டிலிருந்து 20 மைல் (32 கி.மீ)தொலைவில் உள்ள சபையின் ஒரு சிறிய கிளையில் நான் கலந்துகொண்டேன். ஞாயிறு பள்ளி வகுப்பில் எனது ஒரே நண்பர் பட்டி ஜோவுடன் எங்கள் பழைய, வாடகை ஜெபாலயத்தின் அடித்தளத்தில் நான் அமர்ந்திருந்தபோது, மில்லியன் கணக்கான பெண்களின் உலகளாவிய சகோதரியத்துவத்தின் ஒரு பகுதியாக இருப்பதை என்னால் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பா கிழக்குப் பகுதியில் நாங்கள் பரிசுத்தப்படுத்தப்பட்ட பரிசுத்தவான்களுடன் சேவை செய்தபோது என் கணவர் புரூஸ் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். நாங்கள் வீடு திரும்பினோம், சில வாரங்களில் அவர் மரித்துவிட்டார். என் வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிட்டது. நான் துக்கித்து, பலவீனமாகவும் பாதிக்கப்படக்கூடியவளாகவும் உணர்ந்தேன். என் பாதையை வழிநடத்த நான் கர்த்தரிடம் மன்றாடினேன்: “நான் என்ன செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?”
சில வாரங்களுக்குப் பிறகு, நான் எனது மின்னஞ்சலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அட்டவணையில் ஒரு சிறிய படம் என் கண்ணில் பட்டது. நான் நெருக்கமாகப் பார்த்தபோது, அது கிணற்றடியில் இயேசுவுடன் சமாரியப் பெண்ணை ஒரு கலைஞரின் காட்சிப்படுத்தல் என்று உணர்ந்தேன். அந்த நேரத்தில், ஆவியானவர் என்னிடம் தெளிவாகப் பேசினார்: “அதைத்தான் நீ செய்ய வேண்டும்.” இரட்சகரிடத்தில் வந்து கற்றுக்கொள்ளும்படி என்னை ஒரு அன்பான பரலோக பிதா அழைத்தார்.
அவருடைய கிணற்றிலிருந்து “ஜீவத் தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால் நான் கற்றுக்கொண்டிருக்கும் மூன்று பாடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.”1
முதலாவது: நமது கடந்த கால மற்றும் நிகழ்கால சூழ்நிலைகள் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கவில்லை
சகோதரிகளே, நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்த, ஜெபித்த, திட்டமிட்டபடி உங்கள் வாழ்க்கை அமையாததால், கடினமான சவால்களையும் இழப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் உங்களில் பலர் என்னைப் போலவே உணர்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.
நமது சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், நமது வாழ்க்கை பரிசுத்தமானது, அர்த்தமும் நோக்கமும் கொண்டது. நாம் ஒவ்வொருவரும் தேவனின் அன்பான குமாரத்தி, நம் ஆத்துமாக்களில் தெய்வீகத்துடன் பிறந்தோம்.
நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, அவருடைய பாவநிவாரண பலியின் மூலம், நாம் சுத்திகரிக்கப்பட்டு குணமடைவதை சாத்தியமாக்கினார், குடும்ப உறுப்பினர்களின் தீர்மானங்கள், நமது திருமண நிலை, உடல் அல்லது மன ஆரோக்கியம் அல்லது வேறு எந்த சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் பூமியில் நமது நோக்கத்தை நிறைவேற்ற உதவுகிறது.
கிணற்றடியில் இருக்கும் பெண்ணை எண்ணிப் பாருங்கள். அவளுடைய வாழ்க்கை எதைப் போலிருந்தது? அவளுக்கு ஐந்து கணவர்கள் இருந்ததையும், தற்போது அவள் உடன் வாழும் மனிதனை திருமணம் செய்யவில்லை என்பதையும் இயேசு உணர்ந்தார். இருந்தும், அவளுடைய வாழ்க்கையின் சிரமங்கள் இருந்தபோதிலும், அவர் தான் மேசியா என்ற இரட்சகரின் முதல் பொது அறிவிப்புகளில் ஒன்று அவளுக்குத்தான். அவர் சொன்னார், “உன்னோடு பேசுகிற நானே அவர்”2.
அவள் ஒரு வல்லமைவாய்ந்த சாட்சியாக ஆனாள், தன் நகரத்தில் இருந்தவர்களுக்கு இயேசுவே கிறிஸ்து என்று அறிவித்தாள். “அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.”3
அவளுடைய கடந்த கால மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் அவளுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கவில்லை. அவளைப் போலவே, நாம் இங்கே செய்ய அனுப்பப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு உதவும் வலிமை மற்றும் குணப்படுத்துதலுக்காக இன்று இரட்சகரிடம் திரும்புவதற்கு நாம் தேர்ந்தெடுக்கலாம்.
இரண்டாவது: “அதிகாரம் நம்மில் உள்ளது
கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் உள்ள ஒரு பிரசித்தமான வசனத்தில், கர்த்தர் பெண்களையும் ஆண்களையும் ஒரு நல்ல காரணத்திற்காக ஆவலோடு ஈடுபடவேண்டும், தங்களின் சுயவிருப்பத்தில் அநேக காரியங்களைச் செய்து, மிகுந்த நீதியைக் கொண்டு வரவேண்டும், ஏனெனில் அதிகாரம் அவர்களிடத்திலிருக்கிறது என ஊக்குவிக்கிறார்.”4
சகோதரிகளே, மிகுந்த நீதியைக் கொண்டு வர அதிகாரம் நம்மிடத்திலிருக்கிறது!
தலைவர் ரசல் எம். நெல்சன் சாட்சியளித்தார், “தேவனோடு உடன்படிக்கைகளைச் செய்து அந்த உடன்படிக்கைகளை கைக்கொள்ளுகிற எல்லா ஆண்களும் பெண்களும், ஆசாரியத்துவ நியமங்களில் தகுதியுள்ளவர்களாக பங்குபெறுகிறவர்கள் தேவனின் வல்லமையை நேரடியாக பெறலாம்.”5
ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆலயங்களில் செய்யப்படும் பரிசுத்த உடன்படிக்கைகளை நாம் மதிக்க முயலும்போது, கர்த்தர் நம்மை “அவருடைய குணப்படுத்துதல், பலப்படுத்தும் வல்லமை” மற்றும் “[நமக்கு] முன்பு எப்போதும் இருந்திராத ஆவிக்குரிய நுண்ணறிவு மற்றும் விழிப்புணர்வுடன்”6 ஆசீர்வதிப்பார் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
மூன்றாவது: “சிறிய காரியங்களிலிருந்து பெரிதானவை வரும்”7
“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்”8 “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்”9 என மலைப் பிரசங்கத்தில் தனது சீஷர்களுக்கு இயேசு போதித்தார். பின்னர் அவர் பரலோக ராஜ்ஜியத்தின் வளர்ச்சியை புளித்தமாவுடன் ஒப்பிட்டார், “அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும் மூன்றுபடி மாவிலே அடைத்து வைத்தாள்.”10
-
உப்பு
-
புளித்தமாவு
-
வெளிச்சம்
மிகச் சிறிய அளவுகளில் கூட, ஒவ்வொன்றும் சுற்றியுள்ள அனைத்தையும் பாதிக்கிறது. இரட்சகர் உப்பாகவும், புளித்தமாவாகவும், வெளிச்சமாகவும் இருக்க அவரது வல்லமையை பயன்படுத்த நம்மை அழைக்கிறார்.
உப்பு
நாம் உண்ணும் உணவின் சுவையில் உப்புத் தூவியது எவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும், உப்பு குறைந்த விலை மற்றும் எளிமையான பொருட்களில் ஒன்றாகும்.
2 இராஜாக்கள் புத்தகத்தில், சீரியர்களால் பிடிக்கப்பட்டு, சீரிய இராணுவத்தின் தலைவரான நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியான “ஒரு சிறிய வேலைக்கார பெண்ணைப்பற்றி,”11 வாசிக்கிறோம். அவள் உப்பு போல இருந்தாள்; அவள் இளமையாக இருந்தாள், உலக முக்கியத்துவம் இல்லாதவள், அவள் வெளிநாட்டில் அடிமையாக இருந்த வாழ்க்கை அவள் எதிர்பார்த்தது போல் இல்லை.
இருப்பினும், அவள் தேவனின் வல்லமையுடன் இரண்டு வாக்கியங்களைப் பேசி, நாகமானின் மனைவியிடம் சாட்சியம் அளித்தாள்: “என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்திற்குப் போவாரானால் நலமாயிருக்கும், அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்.”12
அவளுடைய விசுவாச வார்த்தைகள், அவள் வார்த்தைகளின்படி செயல்பட்ட அவன் உடல் ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் குணமடைய அனுமதித்த நாகமானுக்கு அனுப்பப்பட்டன.
எலிசா தீர்க்கதரிசி வழிகாட்டியது போல், யோர்தான் நதியில் நாகமானை குளிக்கச் சொன்ன வேலைக்காரர்கள் மீது நாம் அடிக்கடி கவனம் செலுத்துகிறோம், ஆனால் நாகமான் “ஒரு சிறிய வேலைக்காரி” இல்லாமல் எலிசாவின் வாசலில் நின்றிருக்க மாட்டான்.
நீங்கள் இளமையாக இருக்கலாம் அல்லது எந்த முக்கியத்துவமும் இல்லாதவராக உணரலாம், ஆனால் உங்கள் குடும்பத்திலும், பள்ளியிலும், உங்கள் சமூகத்திலும் நீங்கள் உப்பாக இருக்கலாம்.
புளித்தமாவு
நீங்கள் எப்போதாவது புளிப்பில்லாமல் ரொட்டி சாப்பிட்டிருக்கிறீர்களா? இதை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்? அடர்த்தியானதா? கனமானதா? கடினமானதா? சிறிதளவு புளிப்புடன் மட்டுமே, ரொட்டி உயர்ந்து, விரிந்து இலகுவாகவும் மென்மையாகவும் மாறும்.
நாம் தேவனின் வல்லமையை நம் வாழ்வில் அழைக்கும்போது, “ஒடுங்கின ஆவியை”13 மற்றவர்களை உயர்த்தும் மற்றும் இருதயங்கள் குணமடைய இடமளிக்கும் ஈர்க்கப்பட்ட முன்னோக்குகளால் மாற்றலாம்.
சமீபத்தில், என்னுடைய நண்பர் ஒருவர் கிறிஸ்துமஸ் அன்று காலை, துக்கத்தில் மூழ்கி, படுக்கையில் படுத்திருந்தாள். அவளது பிள்ளைகள் அவளை எழுந்திருக்கும்படி கெஞ்சினார்கள்; இருப்பினும், நிலுவையில் இருக்கும் விவாகரத்தின் வலியால் அவள் நிரம்பியிருந்தாள். அழுதுகொண்டே, படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் பரலோக பிதாவிடம் ஜெபத்தில் தன் ஆத்துமாவை ஊற்றி, தன் விரக்தியை அவரிடம் சொன்னாள்.
அவள் ஜெபத்தை முடித்தபோது, அவளுடைய வேதனையை தேவன் அறிந்திருக்கிறார் என்று ஆவியானவர் அவளிடம் கிசுகிசுத்தார். அவள் மீது அவருடைய கருணையால் அவள் நிரப்பப்பட்டாள். இந்த பரிசுத்தமான அனுபவம் அவளுடைய உணர்ச்சிகளை உறுதிப்படுத்தியது, அவள் தனியாக துக்கப்படுவதில்லை என்ற நம்பிக்கையை அவளுக்கு அளித்தது. அவள் எழுந்து, வெளியே சென்று தனது பிள்ளைகளுடன் ஒரு பனிமனிதனை உருவாக்கினாள், காலையின் கனத்தை சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் மாற்றினாள்.
வெளிச்சம்
ஒரு அறையில் இருளைத் துளைக்க எவ்வளவு வெளிச்சம் தேவை? ஒரு சிறிய கதிர். இருண்ட இடத்தில் இருக்கும் அந்த ஒளிக்கதிர் உங்களுள் இருக்கும் தேவனின் வல்லமையிலிருந்து வெளிப்படும்.
வாழ்க்கையின் புயல்கள் பொங்கி எழும்போது நீங்கள் தனிமையாக உணர்ந்தாலும், தவறான புரிதல், குழப்பம் மற்றும் நம்பிக்கையின்மை ஆகிய இருளில் நீங்கள் ஒரு ஒளியைப் பிரகாசிக்க முடியும். கிறிஸ்துவின் மீதான உங்கள் விசுவாசத்தின் ஒளி நிலையானதாகவும் உறுதியாகவும் இருக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களை பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு இட்டுச் செல்லும்.
சகோதரிகளே, நாம் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு கரண்டி புளிப்பு மற்றும் ஒளியின் கதிர் ஆகியவற்றை வழங்குவதால் இருதயங்கள் மாறலாம், வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படும்.
இரட்சகர் நம் வாழ்வில் உப்பாக இருக்கிறார், அவருடைய மகிழ்ச்சியையும் அன்பையும் சுவைக்க நம்மை அழைக்கிறார் என்று நான் சாட்சியளிக்கிறேன்.14 நம் வாழ்வு கடினமாக இருக்கும்போது அவரே புளித்த மாவாக இருப்பவர், நமக்கு நம்பிக்கையைக் கொண்டு வந்து,15 அவருடைய ஒப்பற்ற வல்லமை மற்றும் மீட்பின் அன்பின் மூலம்17 நம் பாரங்களைத் தூக்குகிறார்16. வீட்டிற்குத் திரும்பும் நமது பாதையை ஒளிரச் செய்கிற அவரே நமது வெளிச்சம்.18
கிணற்றடியில் இருக்கும் பெண்ணைப் போல நாமும் இரட்சகரிடம் வந்து, அவருடைய ஜீவத் தண்ணீரைக் குடிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். “இப்போது நாங்கள் நம்புகிறோம், … ஏனென்றால் நாங்களே அவரைக் கேட்டோம், மேலும் அவர் மெய்யாகவே உலக இரட்சகராகிய கிறிஸ்து என்று அறிந்திருக்கிறோம்”19 என பின்னர் சமாரியாவின் மக்களுடன், நாம் அறிவிக்கலாம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.