பிதாவின் திட்டத்தில் தெய்வீக அன்பு
இந்த மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் கோட்பாடு மற்றும் கொள்கைகளின் நோக்கம், தேவனின் பிள்ளைகளை செலஸ்டியல் ராஜ்யத்தில் இரட்சிப்பிற்காகவும் அதன் மிக உயர்ந்த மட்டத்தில் மேன்மைப்படுதலுக்காகவும் ஆயத்தம் செய்வதாகும்.
நமது பரலோக பிதா தம்முடைய பிள்ளைகள் அனைவரின் மீதும் கொண்ட அன்பை சுவிசேஷத் திட்டம் காட்டுகிறது. இதைப் புரிந்துகொள்ள, அவருடைய திட்டத்தையும் அவருடைய கட்டளைகளையும் நாம் புரிந்துகொள்ள நாட வேண்டும். அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும் மீட்பராகவும், நமக்காக துன்பப்பட்டு மரிக்கும்படி கொடுக்கும் அளவுக்கு அவர் தம்முடைய பிள்ளைகளை மிகவும் நேசிக்கிறார். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில், நமது பரலோக பிதாவின் திட்டத்தைப்பற்றிய தனித்துவமான புரிதல் உள்ளது. இது அநித்திய வாழ்வின் நோக்கத்தையும், அதைத் தொடர்ந்து வரும் தெய்வீக நியாயத்தீர்ப்பையும், தேவனின் பிள்ளைகள் அனைவரின் இறுதி மகிமையான இலக்கையும் பார்க்க வித்தியாசமான வழியை நமக்கு வழங்குகிறது.
அன்புள்ள சகோதர சகோதரிகளே நான் உங்களை நேசிக்கிறேன். தேவனின் பிள்ளைகள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். “நியாயப்பிரமாணத்தில் எந்தக் கற்பனை பிரதானமானது?” என இயேசுவிடம் கேட்கப்பட்டபோது தேவனை நேசிப்பதுவும், நமது அண்டை வீட்டாரை நேசிப்பதுவும் தேவனின் பெரிய கட்டளைகளில் முதன்மையானது என்று அவர் போதித்தார்.1 தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பின்பற்ற நாடுவதன் மூலம் ஆவிக்குரிய ரீதியில் வளர நம்மை அழைப்பதால் அந்தக் கட்டளைகள் முதன்மையானவை. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் நம்முடைய பரலோக பிதாவும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும், நிறுவிய அன்பான கோட்பாடு மற்றும் கொள்கைகளைப்பற்றி நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவனின் அன்பு எவ்வாறு அந்தக் கோட்பாட்டையும் சபையின் உணர்த்தப்பட்ட கொள்கைகளையும் விளக்குகிறது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு நான் இங்கு கூறுவது நாடுகிறது.
I.
இறுதியில் அநித்திய வாழ்க்கையைப் பின்தொடரும் தீர்ப்பின் பொதுவான பொதுவான புரிதல் என்னவென்றால், நல்லவர்கள் சொர்க்கம் என்றழைக்கப்படும் இடத்திற்குச் செல்கிறார்கள், கெட்டவர்கள் நரகம் என்றழைக்கப்படும் ஒரு நித்திய இடத்திற்குச் செல்கிறார்கள். இரண்டு இறுதி இலக்குகளின் இந்த தவறான அனுமானம், சொர்க்கத்திற்குத் தேவையான அனைத்து கட்டளைகளையும் கடைப்பிடிக்க முடியாதவர்கள் என்றென்றைகுமாய் நரகத்திற்கு விதிக்கப்படுவார்கள் என்பதைக் குறிக்கிறது.
ஒரு அன்பான பரலோக பிதா தனது பிள்ளைகளுக்காக ஒரு சிறந்த திட்டத்தை வைத்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் வெளிப்படுத்தப்பட்ட கோட்பாடு, தேவனின் அனைத்து பிள்ளைகளும், இங்கே கருத்தில் கொள்ள முடியாத அளவுக்கு விதிவிலக்குகளுடன், இறுதியாக மகிமையின் ராஜ்யத்தில் முடிவடைவார்கள் என்று கற்பிக்கிறது.2 “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு,”3 என இயேசு போதித்தார். தற்கால வெளிப்பாட்டிலிருந்து அந்த வாசஸ்தலங்கள் மகிமையின் மூன்று வெவ்வேறு ராஜ்யங்களில் இருப்பதை நாம் அறிவோம். இறுதி நியாயத்தீர்ப்பில், நமது கிரியைகளின்படியும் நமது இருதயத்தின் வாஞ்சைகளின்படியும் நாம் ஒவ்வொருவரும் நியாயந்தீர்க்கப்படுவோம்.4 அதற்கு முன்பாக, மனந்திரும்பாத நமது பாவங்களுக்காக நாம் துன்பப்பட வேண்டும். இதைக்குறித்து வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றன.5 அப்போது, நமது நீதியுள்ள நியாயாதிபதி, அந்த மகிமையுள்ள ராஜ்யங்களில் ஒன்றில் நமக்கு இருப்பிடத்தை வழங்குவார். அப்படியாக, நவீன வெளிப்பாட்டிலிருந்து நாம் அறிந்துகொள்வதன்படி, அனைவரும் “நியாயந்தீர்க்கப்படுவார்கள் … , ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய கிரியைக்குத்தக்கதாக, ஆயத்தப்படுத்தப்பட்ட வாசஸ்தலங்களில், தன்னுடைய சொந்த ஆளுகையைப் பெறுவான்.”6
இந்த மகிமையின் இரண்டு ராஜ்யங்களைப்பற்றி ஒப்பீட்டளவில் சிறியதாக வெளிப்படுத்த தேவன் தேர்ந்தெடுத்துள்ளார். நேர்மாறாக, “சூரியனின் மகிமை”7 என்று வேதாகமம் விவரிக்கும் மகிமையின் மிக உயர்ந்த ராஜ்யத்தைப்பற்றி கர்த்தர் அதிகம் வெளிப்படுத்தியுள்ளார்.
“செலஸ்டியல்” மகிமையில் 8 மூன்று நிலைகள் அல்லது படிகள் உள்ளன.9 இவற்றில் மிக உயர்ந்தது செலஸ்டியல் ராஜ்யத்தில் மேன்மையடைதலாகும், அதில் நாம் நம் பிதாவையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் போல ஆகலாம். நமது தெய்வீகத் திறனை உணர்ந்துகொள்ளத் தேவையான தெய்வீகப் பண்புகளையும் இயற்கையின் மாற்றத்தையும் நாம் வளர்த்துக்கொள்ள உதவுவதற்காக, தேவன் கோட்பாட்டை வெளிப்படுத்தி நித்திய நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் கட்டளைகளை நிறுவியுள்ளார். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் இதைத்தான் நாம் கற்பிக்கிறோம், ஏனெனில் இந்த மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் கோட்பாடு மற்றும் கொள்கைகளின் நோக்கம் தேவனின் பிள்ளைகளை செலஸ்டியல் மகிமையில் இரட்சிப்பிற்காகவும், மிக குறிப்பாக, அதன் மிக உயர்ந்த மட்டத்தில் உயர்த்துவதற்காகவும் ஆயத்தம் செய்வதாகும்.
தேவனின் ஆலயங்களில் உள்ள விசுவாசிகளுக்கு செய்யப்பட்ட உடன்படிக்கைகளும் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களும் முக்கியமானவை. இது நமது உலகளாவிய ஆலயங்களின் கட்டிடங்களை விளக்குகிறது, அதைப்பற்றி சேர்ந்திசைக் குழுவினர் அழகாகப் பாடினர். ஆலயத்தின் உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள் மேன்மையடைதலுக்கு நேராக நம்மை வழிநடத்துகின்றன என்பதை புரிந்து கொள்ளாமல் சிலர் இதை வலியுறுத்துவதில் குழப்பமடைந்துள்ளனர். மகிமையின் மூன்று நிலைகள் பற்றிய வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் பின்னணியில் மட்டுமே இது புரிந்து கொள்ளப்பட முடியும். நம்முடைய பரலோக பிதா தம்முடைய பிள்ளைகள் அனைவரிடமும் மிகுந்த அன்பின் காரணமாக, அவர் மற்ற மகிமையின்ள ராஜ்யங்களை வழங்கியுள்ளார், மூப்பர் க்வென்டின் எல். குக் நேற்று விவரித்ததைப்போல, இவை அனைத்தும் நாம் புரிந்துகொள்ள முடிவதை விட அற்புதமானவை.10
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி இவை எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது. அவர் “பிதாவை மகிமைப்படுத்தி, அவரது கைகளின் சகல கிரியைகளையும் பாதுகாக்கிறார்.”11 என அவர் வெளிப்படுத்தினார். அந்த இரட்சிப்பு வெவ்வேறு மகிமை ராஜ்யங்களில் வழங்கப்படுகிறது. “சகல ராஜ்யங்களுக்கும் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டிருக்கிறது”12 என தற்கால வெளிப்பாட்டிலிருந்து நாம் அறிகிறோம். குறிப்பிடத்தக்க வகையில்:
“சிலஸ்டியல் ராஜ்யத்தின் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்க முடியாதவன் ஒரு சிலஸ்டியல் மகிமையில் நிலைத்திருக்க முடியாது.
“டிரஸ்டியல் ராஜ்யத்தின் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்க முடியாதவன் ஒரு டிரஸ்டியல் மகிமையில் நிலைத்திருக்க முடியாது.
“டிலஸ்டியல் ராஜ்யத்தின் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்க முடியாதவன் ஒரு டிலஸ்டியல் மகிமையில் நிலைத்திருக்க முடியாது.”13
வேறு வார்த்தைகளிலெனில், இறுதித் தீர்ப்பில் நாம் பெறும் மகிமையின் ராஜ்யம் நமது பரலோக பிதாவின் அன்பான திட்டத்தில் நிலைத்திருக்க நாம் தேர்ந்தெடுக்கிற நியாயப்பிரமாணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் பல ராஜ்ஜியங்கள் உள்ளன, அதனால் அவருடைய பிள்ளைகள் அனைவரும் “தங்கும்” ஒரு ராஜ்யத்திற்கு நியமிக்கப்படுவார்கள்.
II.
கர்த்தரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் போதனைகள் மற்றும் கொள்கைகள் இந்த நித்திய சத்தியங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நமது பரலோக பிதா தம் பிள்ளைகள் அனைவருக்கும் அன்பான திட்டத்தின் பின்னணியில் மட்டுமே பயன்படுத்துகின்றன.
அப்படியாக, நாம் தனிப்பட்ட சுயாதீனத்தை மதிக்கிறோம். மத சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கு இந்த சபையின் பெரும் முயற்சிகளைப்பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கிறார்கள் இந்த முயற்சிகள் நமது பரலோக பிதாவின் திட்டத்தை மேம்படுத்துவதாகும். நம்முடைய சொந்த அங்கத்தினர்களுக்கு மட்டுமல்லாது, அவருடைய பிள்ளைகள் அனைவரும், தேர்ந்தெடுக்கும் விலைமதிப்பற்ற சுதந்திரத்தை அனுபவிக்க, உதவ நாம் முயல்கிறோம்.
இதேபோன்று, பல நாடுகளுக்கு, கிறிஸ்தவ மக்களிடையேயும் கூட ஊழியக்காரர்களை நாம் ஏன் அனுப்புகிறோம் என்று சில சமயங்களில் கேட்கப்படுகிறோம். நமது ஊழிய முயற்சிகளுடன் இதை இணைக்காமல், நமது சபையில் உறுப்பினர்களாக இல்லாத நபர்களுக்கு ஏன் ஏராளமான மனிதாபிமான உதவிகளை நாம் வழங்குகிறோம் என்றும் கேட்கப்படுகிறோம். தம்முடைய பிள்ளைகள் அனைவரையும் நம்முடைய சகோதர சகோதரிகளாக மதிக்கும்படி நமக்குக் கர்த்தர் கற்பித்திருப்பதாலும், நமது ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகார மிகுதியானவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நாம் விரும்புவதாலும் இதைச் செய்கிறோம்.
பிள்ளைகள் மீதுள்ள ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தையும் நித்திய கோட்பாடு வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தின் மூலம் பிள்ளைகளைச் சுமந்து, வளர்ப்பதை தெய்வீகத் திட்டத்தின் ஒரு பகுதியாக நாம் காண்கிறோம். இது, அதில் பங்கேற்க அதிகாரம் கொடுக்கப்பட்டவர்களின் மகிழ்ச்சியான மற்றும் பரிசுத்தமான கடமையாகும். எனவே, தேவனின் திட்டத்தின் கீழ் பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சிக்கான சிறந்த நிலைமைகளை வழங்கும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை கற்பிக்கவும், விவாதிக்கவும் நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்.
III.
இறுதியாக, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, குடும்பத்தை மையமாகக் கொண்ட சபை என்று சரியாக அறியப்படுகிறது. ஆனால் நமது குடும்பத்தை மையமாகக் கொண்டவை அநித்திய உறவுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்ற யதார்த்தம் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. நித்திய உறவுகளும் நமது இறையியலுக்கு அடிப்படை. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் ஊழியம், தேவனின் பிள்ளைகள் அனைவரும் அவர்களின் இறுதி இலக்காக தேவன் விரும்புவதற்குத் தகுதிபெற உதவுவதாகும். கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் வழங்கப்படும் மீட்பினால், அனைவரும் நித்திய ஜீவனை அடையலாம் (செலஸ்டியல் ராஜ்யத்தில் மேன்மையடைதல்), “தேவன் கீழ்ப்படிகிற அனைவருக்கும் கொடுக்கிறார்”14 என்று தாயாகிய ஏவாள் அறிவித்தாள். இது இரட்சிப்பை விட மேலானது. “தேவனின் நித்திய திட்டத்தில், இரட்சிப்பு என்பது ஒரு தனிப்பட்ட காரியம்; [ஆனால்] மேன்மையடைதல் ஒரு குடும்ப காரியம்”15 என தலைவர் ரசல் எம். நெல்சன் நமக்கு நினைவூட்டினார்.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நித்திய திருமணத்தின் உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் மட்டுமே மேன்மையை அடைய முடியும் என்ற தேவனின் வெளிப்பாடு நமக்கு அடிப்படையானது.16 “பாலினம் என்பது தனிப்பட்ட அநித்தியத்துக்கு முந்திய, அநித்திய மற்றும் நித்திய அடையாளம் மற்றும் நோக்கத்தின் ஒரு அத்தியாவசிய பண்பு ஆகும்”17 என ஏன் நாம் போக்கிறோம் என்பதே அந்த தெய்வீகக் கோட்பாடு.
அதனால்தான், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமண கோட்பாட்டிலிருந்து பின்வாங்குவதற்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை ஒரே மாதிரியாக மாற்றும் அல்லது பாலினத்தை குழப்பும் அல்லது மாற்றும் மாற்றங்களை எதிர்ப்பதற்கு சமூக மற்றும் சட்ட அழுத்தங்களை எதிர்க்குமாறு கர்த்தருக்கு தனது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை தேவையாயிருந்தது.
இந்த அடிப்படைகள் மீதான மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் நிலைப்பாடுகள் அடிக்கடி எதிர்ப்பைத் தூண்டுகின்றன. அதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நமது பரலோக பிதாவின் திட்டம் “எல்லாவற்றிலும் எதிர்ப்பை” அனுமதிக்கிறது,”18 மேலும் சாத்தானின் மிகக் கடுமையான எதிர்ப்பு அந்தத் திட்டத்திற்கு மிக முக்கியமானவற்றின் மீது செலுத்தப்படுகிறது. இதன் விளைவாக, திருமணத்தை சிதைப்பதன் மூலமோ, குழந்தை பெறுவதை ஊக்கப்படுத்தாதன் மூலமோ, அல்லது பாலினத்தை குழப்புவதன் மூலமோ மேன்மைப்படுதலை நோக்கி முன்னேறுவதை அவன் எதிர்க்கிறான். இருப்பினும், நீண்ட காலப்போக்கில், நமது அன்பான பரலோக பிதாவின் தெய்வீக நோக்கமும் திட்டமும் மாறாது என்பதை நாம் அறிவோம். தனிப்பட்ட சூழ்நிலைகள் மாறலாம், நீண்ட காலத்திற்கு, தங்கள் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும் விசுவாசிகள் ஒவ்வொரு வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதத்திற்கும் தகுதி பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று தேவனின் திட்டம் உறுதியளிக்கிறது.19
நித்திய ஜீவனுக்குத் தயாராகுவதற்கு உதவும் ஒரு தனித்துவமான மதிப்புமிக்க போதனை, “தேவனின் எல்லா வரங்களிலும் மிகப்பெரியது,”20 என்பது குடும்பத்தின் மீதான 1995 பிரகடனம் ஆகும்.21 அதன் பிரகடனங்கள், சில தற்போதைய சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் கூட்டுவாழ்வு மற்றும் ஒரே பாலின திருமணம் போன்றவற்றிலிருந்து நிச்சயமாய் வேறுபட்டவை. பிதாவின் பிள்ளைகளுக்கான அன்பான திட்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்கள், இந்தக் குடும்பப் பிரகடனத்தை மாற்றக்கூடிய கொள்கை அறிக்கையாகக் கருதலாம். இதற்கு நேர்மாறாக, மாற்ற முடியாத கோட்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்ட குடும்பப் பிரகடனம், நமது நித்திய வளர்ச்சியின் மிக முக்கியமான பகுதியாக நிகழக்கூடிய குடும்ப உறவுகளின் வகையை வரையறுக்கிறது என்று நாம் உறுதிப்படுத்துகிறோம்.
மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தனித்துவமான கோட்பாடு மற்றும் கொள்கைகளுக்கான சூழல் இதுவாகும்.
IV.
அநித்திய வாழ்க்கையில் பல உறவுகளிலும் சூழ்நிலைகளிலும், நாம் ஒவ்வொருவரும் வேறுபாடுகளுடன் வாழ வேண்டும். நம் சக மனிதர்களை நேசிக்க வேண்டிய, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, நம்மைப் போல் நம்பாதவர்களுடன் சமாதானத்துடன் நாம் வாழ வேண்டும். நாம் அனைவரும் அன்பான பரலோக பிதாவின் பிள்ளைகள். நம் அனைவருக்கும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையையும், இறுதியில், மகிமையின் ராஜ்யத்தையும் அவர் விதித்துள்ளார். அவருடைய உயர்ந்த கட்டளைகள், உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அனைவரும் அவருடைய மிக உயர்ந்த சாத்தியமான ஆசீர்வாதங்களுக்காக பாடுபட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், இவை அனைத்தும் உலகெங்கிலும் கட்டப்படும் அவரது பரிசுத்த ஆலயங்களில் முடிவடைகிறது. இந்த நித்திய சத்தியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் நாடவேண்டும். ஆனால் நம் அண்டை வீட்டார் அனைவரிடம் நாம் செலுத்த வேண்டிய அன்புடன், அவர்களின் தீர்மானங்களை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்கிறோம். மார்மன் புஸ்தக தீர்க்கதரிசி கற்பித்ததைப்போல, தேவனிடத்திலும் எல்லா மனிதரிடத்திலும் அன்போடு நாம் முன்னேறிச் செல்லவேண்டும்.”22
கடந்த மாநாட்டில் தலைவர் ரசல் எம். நெல்சன் அறிவித்தார்: “உலக வரலாற்றில் நம் இரட்சகரைப்பற்றிய அறிவு, தனிப்பட்ட முறையில் அதிக முக்கியமானதாக, ஒவ்வொரு மனித ஆத்துமாவுக்கும் பொருத்தமானதான ஒரு காலம் ஒருபோதும் இருந்ததில்லை. … கிறிஸ்துவின் பரிசுத்த கோட்பாடு வல்லமையானது. அதைப் புரிந்துகொள்ளும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும், அதை தனது வாழ்க்கையில் செயல்படுத்த முற்படுகிற அவன் அல்லது அவளின் வாழ்க்கையையும் இது மாற்றுகிறது.”23
அந்த பரிசுத்தமான கோட்பாட்டை நாம் அனைவரும் நம் வாழ்வில் நடைமுறைப்படுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன், ஆமென்.