நொறுங்கியதை கிறிஸ்து குணப்படுத்துகிறார்
தேவனுடனான உடைந்த உறவுகளையும், மற்றவர்களுடனான உடைந்த உறவுகளையும், நம்முடைய உடைந்த உறுப்புகளையும் அவரால் குணப்படுத்த முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குடும்ப கூடுகையின்போது, அப்போது எட்டு வயதாயிருந்த எனது மருமகன் வில்லியம், எங்கள் மூத்த மகன் பிரிட்டனிடம், அவனுடன் பந்து விளையாட விரும்புகிறானா என்று கேட்டான். பிரிட்டன் ஆர்வத்துடன் “ஆம்! என பதிலளித்தான். நானும் விரும்புகிறேன்!” அவர்கள் சிறிது நேரம் விளையாடிய பிறகு, ஒரு பந்து பிரிட்டனிடமிருந்து விலகிச் சென்றது, அவன் தற்செயலாக தனது தாத்தா பாட்டிகளின் பழங்கால பானைகளில் ஒன்றை உடைத்தான்.
பிரிட்டன் பரிதாபமாக உணர்ந்தான். அவன் உடைந்த துண்டுகளை எடுக்கத் தொடங்கியபோது, வில்லியம் தனது சகோதரனிடத்திற்கு நடந்து சென்று அன்புடன் அவனது முதுகில் தட்டினான். பின்னர் அவன் ஆறுதல் கூறினான், “கவலைப்படாதே, பிரிட்டன். நான் ஒரு முறை பாட்டி, தாத்தா வீட்டில் ஏதோ ஒன்றை உடைத்தேன், பாட்டி என்னைக் கட்டிப்பிடித்து, ‘பரவாயில்லை, வில்லியம். உனக்கு ஐந்து வயதுதானே ஆகிறது’” என்றார்.
அதற்கு பிரிட்டன், “ஆனால், வில்லியம், எனக்கு 23 வயது!” என பதிலளித்தான்.
நம்முடைய வயதைப் பொருட்படுத்தாமல், நம் வாழ்வில் உடைந்திருக்கும் விஷயங்களை வெற்றிகரமாக வழிநடத்த, நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து எவ்வாறு நமக்கு உதவுவார் என்பதைப்பற்றி வேத வசனங்களிலிருந்து நாம் அதிகம் கற்றுக்கொள்ளலாம். தேவனுடனான உடைந்த உறவுகளையும், மற்றவர்களுடனான உடைந்த உறவுகளையும், நம்முடைய உடைந்த உறுப்புகளையும் அவரால் குணப்படுத்த முடியும்.
தேவனுடன் உடைந்த உறவுகள்
இரட்சகர் ஆலயத்தில் உபதேசித்துக் கொண்டிருந்தபோது, வேதபாரகரும் பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவளுடைய முழு கதையும் நமக்குத் தெரியாது, அவள் “விபச்சாரத்தில் பிடிக்கப்பட்டாள்.”1 பெரும்பாலும், வேதங்கள் ஒருவரின் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொடுக்கின்றன, அந்த பகுதியை அடிப்படையாகக் கொண்டு, நாம் சில சமயங்களில் மேன்மைபாராட்ட அல்லது கண்டனம் செய்ய எண்ணுகிறோம். ஒரு அற்புதமான தருணத்தினாலோ அல்லது ஒரு வருந்தத்தக்க பொது ஏமாற்றத்தினாலோ யாருடைய வாழ்க்கையையும் புரிந்து கொள்ள முடியாது. அப்போது இயேசு கிறிஸ்து பதிலாயிருந்தார், இப்போது அவரே பதில் என்று பார்க்க உதவுவதே இந்த வேதப் பதிவுகளின் நோக்கம். நம்முடைய முழுக் கதையையும், நாம் சரியாக எதற்காக கஷ்டப்படுகிறோம் என்பதையும், அப்படியே, நமது திறன்கள் மற்றும் பாதிப்புகளையும் அவர் அறிவார்.
“நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனி பாவஞ்செய்யாதே”2 என்பது தேவனின் இந்த விலைமதிப்பற்ற மகளுக்கு கிறிஸ்துவின் பதிலாயிருந்தது. “போ, இனி பாவஞ்செய்யாதே” என்று கூறுவதற்கான மற்றொரு வழி, “போ, மாறு” என்பதாயிருக்கலாம். இரட்சகர் அவளை மனந்திரும்பவும், அவளது நடத்தை, அவளது தொடர்புகள், தன்னைப்பற்றி அவள் உணர்ந்த விதம், அவளுடைய இருதயம் ஆகியவற்றை மாற்றவும் அழைத்தார்.
கிறிஸ்துவினிமித்தமே, “போய் மாற வேண்டும்” என்ற நமது தீர்மானம் நம்மை “போய் குணமாக்கவும்” அனுமதிக்கும், ஏனென்றால் அவர் நம் வாழ்வில் உடைந்த அனைத்தையும் குணப்படுத்துவதற்கான ஆதாரமாக இருக்கிறார். பிதாவுடன் சிறந்த மத்தியஸ்தராகவும் பரிந்துபேசுபவராகவும், கிறிஸ்து உடைந்த உறவுகளை, மிக முக்கியமாக தேவனுடனான நமது உறவை பரிசுத்தப்படுத்துகிறார், மீட்டெடுக்கிறார்.
அந்த பெண் இரட்சகரின் ஆலோசனையைப் பின்பற்றி தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டாள் என்பதை ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு தெளிவாக்குகிறது: “அந்த நேரத்திலிருந்து அந்த பெண் தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய நாமத்தை நம்பினாள்.”3 இந்த நேரத்திற்காகப் பிறகு அவளுடைய பெயரோ அல்லது அவளுடைய வாழ்க்கையைப்பற்றிய பிற விவரங்களோ நமக்குத் தெரியாதது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் அவள் மனந்திரும்புவதற்கும் மாறுவதற்கும் மிகுந்த உறுதியும், பணிவும், இயேசு கிறிஸ்துவில் விசுவாசமும் தேவைப்படும். நாம் அறிந்தது என்னவென்றால், “அவரது நாமத்தை நம்பிய” அவள் ஒரு பெண், அவள் அவரது எல்லையற்ற மற்றும் நித்திய தியாகத்திற்கு அப்பாற்பட்டவள் அல்ல.
மற்றவர்களுடன் உடைந்த உறவுகள்
லூக்கா 15ம் அதிகாரத்தில் இரண்டு மகன்களைப் பெற்ற ஒரு மனிதனின் உவமையை நாம் படிக்கிறோம். இளைய மகன் தன் தகப்பனிடம் வாரிசுரிமையைக் கேட்டு, தூர தேசத்திற்குப் புறப்பட்டுப்போய், துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.4
“எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று, அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி,
“அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
“அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
“அவனுக்கு புத்தி தெளிந்தபோது அவன் என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்!
“நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப்போய், தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்,
“இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்று சொல்லி.
“எழுந்து புறப்பட்டு தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.”5
தகப்பன் தனது மகனிடம் ஓடினான் என்பது குறிப்பிடத்தக்கது என்று நான் நம்புகிறேன். மகன் தன் தந்தைக்கு ஏற்படுத்திய தனிப்பட்ட காயம் நிச்சயமாக ஆழமானது, ஆழ்ந்தது. அதேபோன்று, தகப்பனும் தன் மகனின் செயல்களால் உண்மையிலேயே வெட்கப்பட்டிருக்கலாம்.
ஆகவே, மகன் மன்னிப்பு கேட்பதற்காக தகப்பன் ஏன் காத்திருக்கவில்லை? மன்னிப்பையும் அன்பையும் கொடுப்பதற்கு முன், அவர் ஏன் திருப்பிச் செலுத்துதலையும் ஒப்புரவாகுதலயும் வழங்கவில்லை? இது நான் அடிக்கடி சிந்தித்த ஒன்று.
மற்றவர்களை மன்னிப்பது ஒரு உலகளாவிய கட்டளை என்று கர்த்தர் நமக்குப் போதிக்கிறார்: “கர்த்தராகிய நான் யாரை மன்னிப்பேனோ அவரை மன்னிப்பேன், ஆனால் நீங்கள் அனைவரையும் மன்னிக்க வேண்டும்.”6 மன்னிப்பை கொடுப்பதற்கு மிகப்பெரிய தைரியமும் மனத்தாழ்மையும் வேண்டும். அதற்கு நேரமும் வேண்டியதிருக்கலாம். நம் இருதயத்தின் நிலைக்கு நாம் பொறுப்பேற்கும்போது, கர்த்தரிடத்தில் நம்முடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வைப்பது அவசியமாகிறது. இங்கே நமது சுயாதீனத்தின் முக்கியத்துவமும் வல்லமையும் உள்ளது.
கெட்ட குமாரனின் உவமையில் இந்த தகப்பனின் சித்தரிப்பு மூலம், மன்னிப்பு என்பது நாம் ஒருவருக்கொருவர், மிக விசேஷமாக நமக்கே கொடுக்கக்கூடிய உன்னதமான பரிசுகளில் ஒன்றாகும் என்று இரட்சகர் வலியுறுத்தினார். மன்னிப்பதன் மூலம் நம் இருதயங்களை அவிழ்ப்பது எப்போதும் எளிதானது அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவின் சாத்தியமாக்கும் வல்லமையின் மூலம் அது சாத்தியமாகும்.
நமது உடைந்த உறுப்புக்கள்
அப்போஸ்தலர் 3ம் அதிகாரத்தில், முடமாகப் பிறந்த ஒரு மனிதனைப்பற்றி நாம் அறிந்துகொள்கிறோம், “அவர்கள் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சை கேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட ஆலய வாசலண்டையிலே வைப்பார்கள்.”7
முடமான பிச்சைக்காரன் 40 வயதுக்கு8 மேல் இருந்தான். மற்றவர்களின் பெருந்தன்மையை சார்ந்து இருந்ததால், தன் வாழ்நாள் முழுவதையும் முடிவில்லாத ஆசை மற்றும் காத்திருப்பு நிலையில் கழித்தான்.
ஒருநாள் அவன் “தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் கண்டு, பிச்சை கேட்டான்.
“பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து, எங்களை நோக்கிப் பார் என்றார்கள்.
“அவன் அவர்களிடத்தில் எதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப் பார்த்தான்.
“அப்பொழுது பேதுரு, வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை, என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன், நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எழுந்து நட என்று சொல்லி,
“வலது கையினால் அவனைப் பிடித்து தூக்கி விட்டான். உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.
“அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான், நடந்து குதித்து, தேவனை துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.”9.
பெரும்பாலும், ஆலயத்தின் வாசலில் இருக்கும் முடமான பிச்சைக்காரனைப் போல, பொறுமையாக, அல்லது சில சமயங்களில் பொறுமையின்றி நாம் “கர்த்தருக்காகக் காத்திருப்பதைக் காணலாம்.”10 உடல் ரீதியாக அல்லது உணர்ச்சி ரீதியாக குணமடைய காத்திருக்கிறோம். நம் இருதயத்தின் ஆழமான பகுதியை ஊடுருவிச் செல்லும் பதில்களுக்காகக் காத்திருக்கிறோம். ஒரு அற்புதத்திற்காகக் காத்திருக்கிறோம்.
கர்த்தருக்காகக் காத்திருத்தல் ஒரு பரிசுத்த இடமாக இருக்கலாம், ஆழ்ந்த தனிப்பட்ட முறையில் மெருகூட்டல் மற்றும் செம்மைப்படுத்தும் இடத்தில் நாம் இரட்சகரை அறிந்துகொள்ள முடியும். கர்த்தருக்குக் காத்திருப்பது, “தேவனே, நீர் எங்கே இருக்கிறீர்?”11 என்று நாம் கேட்கும் இடமாகவும் இருக்கலாம். ஆவிக்குரிய விடாமுயற்சியின்படி, கிறிஸ்துவை வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எனக்கு இந்த இடம் தெரியும், இந்த வகையான காத்திருத்தல் எனக்கு புரிகிறது.
நான் எண்ணற்ற மணிநேரங்களை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் கழித்தேன், குணமடைய ஏங்கும் பலருடன் என் துன்பத்தில் நான் ஐக்கியமானேன். சிலர் வாழ்ந்தனர்; மற்றவர்கள் இல்லை. நமது சோதனைகளில் இருந்து விடுபடுவது நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது என்பதை ஆழமான வழியில் நான் கற்றுக்கொண்டேன், எனவே நாம் விடுவிக்கப்படும் விதம் குறித்தும், விடுவிப்பவரைப்பற்றியும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நமது முக்கியத்துவம் எப்போதும் இயேசு கிறிஸ்துவின் மீது இருக்க வேண்டும்!
கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது என்பது தேவனுடைய சித்தத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் நம்பிக்கை வைப்பதாகும். ஏனெனில் நமக்கு என்ன தேவை, அது நமக்கு எப்போது தேவை என அவர் துல்லியமாக அறிகிறார். நாம் கர்த்தருடைய சித்தத்திற்கு அடிபணியும்போது, இறுதியில் நாம் விரும்பியதை விட கணிசமாக அதிகமாகப் பெறுவோம்.
எனக்கன்பான நண்பர்களே, நம் அனைவரின் வாழ்விலும் உடைக்கப்பட்ட ஒன்று உள்ளது, அதை சரிசெய்ய வேண்டும், ஒட்டப்பட வேண்டும் அல்லது குணப்படுத்த வேண்டும். நாம் இரட்சகரிடம் திரும்பும்போது, நம் இருதயங்களையும் மனதையும் அவருடன் சீரமைக்கும்போது, நாம் மனந்திரும்பும்போது, “அவருடைய செட்டைகளின் ஆரோக்கியத்தோடு குணமடைவதோடு,” 12 நாம் இருக்கும் இடத்திற்கு அவர் வருகிறார், அன்புடன் தம் கரங்களை நம்மைச் சுற்றி வைத்து, “பரவாயில்லை. உனக்கு 5 அல்லது 16, 23, 48, 64, 91 வயதுதானே. நாம் சேர்ந்து இதை சரி செய்யலாம்!” என்கிறார்.
இயேசு கிறிஸ்துவின் சரிப்படுத்தும், மீட்கும் மற்றும் சாத்தியமாக்கும் வல்லமைக்கு அப்பாற்பட்ட உடைந்த எதுவும் உங்கள் வாழ்க்கையில் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். குணப்படுத்த வல்லவரான இயேசு கிறிஸ்துவின் புனிதமான, பரிசுத்தமான நாமத்தில், ஆமென்.