அதிகாரம் 18
இயேசு நேபியருக்குள்ளே திருவிருந்தை ஏற்படுத்தல் – அவர்கள் எப்போதும் அவருடைய நாமத்தில் ஜெபிக்கும்படி கட்டளையிடப்படுதல் – அபாத்திரராய், அவருடைய மாம்சத்தைப் புசிக்கிறவர்களும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவர்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறார்கள் – பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கும் வல்லமை சீஷர்களுக்கு அருளப்படுதல். ஏறக்குறைய கி.பி. 34.
1 அந்தப்படியே, தம்மிடத்தில் கொஞ்சம் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் கொண்டுவரும்படி, இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
2 அவர்கள் அப்பமும், திராட்சை ரசமும் கொண்டுவரப் போயிருந்த போது, அவர் திரளானோரை தரையில் உட்காரும்படி கட்டளையிட்டார்.
3 சீஷர்கள் அப்பத்தோடும், திராட்சை ரசத்தோடும் வந்தபோது, அவர் அப்பத்தை எடுத்து, பிட்டு அதை ஆசீர்வதித்தார்; அவர் சீஷர்களுக்குக் கொடுத்து அதை உண்ணும்படிக் கட்டளையிட்டார்.
4 அவர்கள் உண்டு திருப்தியானபோது, அவர்கள் திரளானோருக்குக் கொடுக்கவேண்டுமெனக் கட்டளையிட்டார்.
5 திரளானோர் உண்டு திருப்தியானபோது, அவர் சீஷர்களை நோக்கி: இதோ, உங்களில் ஒருவன் நியமிக்கப்படுவான். விசுவாசித்து என் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் யாவருமாகிய என் சபையின் ஜனங்களுக்கு, அப்பத்தைப் பிட்டு அதை ஆசீர்வதித்து, அதைக் கொடுக்கும்படியான அதிகாரத்தை அவனுக்குக் கொடுப்பேன்.
6 நான் செய்ததுபோலவே, நான் அப்பத்தைப் பிட்டு, அதை ஆசீர்வதித்து அதை உங்களுக்குக் கொடுத்ததைப் போலவே, நீங்களும் எப்பொழுதும் ஆசரிப்பீர்களாக.
7 நான் உங்களுக்குக் காண்பித்த என் சரீரத்தின் நினைவாக- இதைச் செய்வீர்களாக. நீங்கள் என்னை எப்பொழுதும் நினைவுகூருகிறீர்கள் என்று அது பிதாவுக்கு சாட்சியமாக இருக்கும். நீங்கள் என்னை எப்பொழுதும் நினைவுகூர்ந்தால், உங்களுடனே கூட இருக்கும்படி என் ஆவியைப் பெறுவீர்கள்.
8 அந்தப்படியே, அவர் இந்த வார்த்தைகளைச் சொன்ன பின்பு, பாத்திரத்திலிருந்து திராட்சை ரசத்தை எடுத்து, அதைப் பருகவேண்டுமென்றும், திரளானோரும் அதைப் பருகும்படி அவர்களுக்கும் கொடுக்கவேண்டுமென்றும், தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
9 அந்தப்படியே, அவர்கள் அப்படியே செய்து அதைப் பானம் பண்ணி திருப்தியானார்கள்; அவர்கள் திரளானோருக்கும் கொடுத்தார்கள்; அவர்கள் பானம் பண்ணி திருப்தியானார்கள்.
10 சீஷர்கள் இதைச் செய்த பின்னர், இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்ததினிமித்தம் பாக்கியவான்களாயிருக்கிறீர்கள். இது என் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. நான் உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செய்ய நீங்கள் மனமுள்ளவர்களாயிருக்கிறீர்கள் என்று இது பிதாவுக்குச் சாட்சி கொடுக்கிறது.
11 மனந்திரும்பி என் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு இதை நீங்கள் எப்பொழுதும் செய்யுங்கள்; இதினிமித்தம் நீங்கள் என்னை எப்பொழுதும் நினைவுகூருகிறீர்களென்று பிதாவுக்கு சாட்சி கொடுக்க நான் உங்களுக்காக சிந்தின என் இரத்தத்தை நினைவுகூரும்படியாய் இதைச் செய்யுங்கள். நீங்கள் என்னை எப்பொழுதும் நினைவுகூர்ந்தால், உங்களுடனேகூட இருக்கும்படி என் ஆவியைப் பெறுவீர்கள்.
12 நீங்கள் இவைகளைச் செய்யவேண்டுமென்று நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன். இவைகளை நீங்கள் எப்பொழுதும் செய்வீர்களானால் நீங்கள் பாக்கியவான்கள். ஏனெனில் நீங்கள் என் கன்மலையின்மேல் கட்டப்பட்டிருக்கிறீர்கள்.
13 ஆனால் உங்களில் இவைகளுக்கு அதிகமாயோ அல்லது குறைவாகவோ செய்கிற எவனும் என் கன்மலையின்மேல் கட்டாதவன். மணலான அஸ்திவாரத்தின் மேல் கட்டியவன். மழைபொழிந்து, வெள்ளம் பெருக்கெடுத்து, காற்று வீசி அவற்றின் மேல் அடிக்கும்போது, அவை வீழ்ந்து போகும். பாதாளத்தின் வாசல்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் திறந்திருக்கிறது.
14 ஆகவே, நான் உங்களுக்குக் கொடுக்கவேண்டுமென்று, பிதாவினால் நான் கட்டளையிடப்பட்டு, கொடுத்த என் கட்டளைகளை நீங்கள் கைக்கொண்டால், நீங்கள் பாக்கியவான்கள்.
15 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் விழித்திருந்து எப்பொழுதும் ஜெபிக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் பிசாசினால் சோதிக்கப்பட்டு, அவனால் சிறைக்கைதியாய் நடத்திச் செல்லப்படுவீர்கள்.
16 நான் உங்கள் மத்தியிலே ஜெபித்ததுபோல, நீங்களும் என் சபையிலே, மனந்திரும்பி என் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுகிற என் ஜனங்கள் மத்தியிலும் ஜெபியுங்கள். இதோ, நானே ஒளியாயிருக்கிறேன்; நான் உங்களுக்காக உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறேன், என்றார்.
17 அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளைத் தமது சீஷர்களுக்குப் பேசி முடித்தபோது, அவர் மறுபடியும் திரளானோருக்கு நேராய்த் திரும்பி, அவர்களை நோக்கி:
18 இதோ, மெய்யாகவே மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சோதனைக்குட்படாதபடிக்கு நீங்கள் விழித்திருந்து, எப்பொழுதும் ஜெபிக்கவேண்டும்; ஏனெனில் கோதுமையை அரிப்பதுபோல, சாத்தான் உங்களை அரிப்பதற்கு வாஞ்சிக்கிறான்.
19 ஆதலால் நீங்கள் எப்பொழுதும் என் நாமத்தினாலே பிதாவிடத்தில் ஜெபிக்கவேண்டும்.
20 சரியானதெதையும், என் நாமத்தினாலே பிதாவிடத்தில் கேட்டு, நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் என்று விசுவாசித்தால், இதோ, அது உங்களுக்குக் கொடுக்கப்படும்.
21 உங்கள் மனைவிகளும், உங்கள் பிள்ளைகளும் ஆசீர்வதிக்கப்படும்படி உங்கள் குடும்பங்களில் எப்பொழுதும் என் நாமத்தினாலே பிதாவிடத்தில் ஜெபியுங்கள்.
22 இதோ, நீங்கள் அடிக்கடி ஒருமித்து கூடவேண்டும்; நீங்கள் ஒருமித்து கூடுகிறபோது, உங்களிடத்தில் வராதபடி எந்த மனுஷனையும் தடைபண்ணாதிருந்து அவர்கள் உங்களிடத்தில் வரும்படி அனுமதித்து, அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்.
23 ஆனால் நீங்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்களைப் புறம்பே தள்ளாதிருங்கள்; அவர்கள் உங்களிடத்தில் அடிக்கடி வந்தால், நீங்கள் அவர்களுக்காக என் நாமத்தினாலே பிதாவிடத்தில் ஜெபியுங்கள்.
24 ஆதலால், உங்களுடைய வெளிச்சம் உலகத்திற்குப் பிரகாசிக்கும்படி உயரப் பிடியுங்கள். இதோ, நீங்கள் நான் செய்ததைக் கண்டிருப்பதாலே, நானே நீங்கள் உயரப்பிடிக்க வேண்டிய வெளிச்சமாயிருக்கிறேன். இதோ, நான் பிதாவினிடத்தில் ஜெபித்ததை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். நீங்கள் யாவரும் கண்டிருக்கிறீர்கள்.
25 உங்களில் ஒருவரும் புறம்பே போகக்கூடாது என்று நான் கட்டளையிட்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆயினும் நீங்கள் உணர்ந்து காணும்படியாக என்னிடத்தில் வரவேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறேன், நீங்களும் உலகத்திற்கு இப்படியே செய்வீர்களாக; இந்தக் கட்டளையை மீறுகிற எவனும் சோதனைக்குள் நடத்தப்படும்படியாக தன்னையே அனுமதிக்கிறான், என்றார்.
26 இப்பொழுதும், அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னவுடனே, அவர் தாம் தெரிந்துகொண்ட சீஷர்கள்மேல் தம்முடைய கண்களை மறுபடியும் ஏறெடுத்து, அவர்களை நோக்கிச் சொன்னதாவது:
27 இதோ, மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் உங்களுக்கு மற்றொரு கட்டளையைக் கொடுக்கிறேன். பின்பு பிதா எனக்குக் கொடுத்த மற்ற கட்டளைகளை நான் நிறைவேற்றும்படியாக, என் பிதாவிடத்தில் போகவேண்டும்.
28 இப்பொழுதும் இதோ, நீங்கள் பரிமாறும்போது, அபாத்திரமாய் என் மாம்சத்தையும் இரத்தத்தையும் அறிந்தே புசிக்கிறவன் எவனையும் நீங்கள் அனுமதிக்கவேண்டாம், என்ற இந்தக் கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
29 என் மாம்சத்தையும் இரத்தத்தையும் அபாத்திரமாய்ப் புசித்துக் குடிக்கிற எவனும் தன்னுடைய ஆத்துமாவுக்கென்று ஆக்கினைத்தீர்ப்பைப் புசித்துக் குடிக்கிறான்; ஆதலால் என் மாம்சத்தையும், இரத்தத்தையும், புசித்துக் குடிக்க ஒரு மனுஷனை அபாத்திரன், என்று நீங்கள் கண்டால் அவனைத் தடைபண்ணுவீர்களாக.
30 ஆயினும் நீங்கள் அவனை உங்களிலிருந்து புறம்பே தள்ளாமல், நீங்கள் அவனுக்கு ஊழியம்பண்ணி, அவனுக்காக என் நாமத்தில் பிதாவிடத்தில் ஜெபம்பண்ணுவீர்களாக; அவன் மனந்திரும்பி என் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றால், நீங்கள் அவனை ஏற்றுக் கொண்டு என் மாம்சத்தையும் இரத்தத்தையும் அவனுக்கு பகிர்ந்தளிப்பீர்களாக.
31 அவன் மனந்திரும்பாவிட்டால், அவன் என் ஜனத்தை அழிக்காதபடிக்கு, அவன் என் ஜனங்களுக்குள்ளே எண்ணப்படமாட்டான். ஏனெனில் இதோ, நான் என் ஆடுகளை அறிவேன். அவர்கள் எண்ணப்பட்டிருக்கிறார்கள்.
32 ஆயினும் அவனை நீங்கள் உங்கள் ஜெப ஆலயங்களிலிருந்தும், உங்களின் ஆராதிக்கும் ஸ்தலங்களிலிருந்தும், புறம்பே தள்ளாமல், அப்படிப்பட்டோருக்கு தொடர்ந்து ஊழியம் செய்வீர்களாக; ஏனெனில் அவர்கள் திரும்பிவந்து, மனந்திரும்பி, இருதயத்தின் முழுநோக்கோடு என்னிடத்தில் வருவார்களென்றும், அப்பொழுது நான் அவர்களை குணப்படுத்துவேனென்பதைத் தவிர வேறெதையும் நீங்கள் அறியீர்கள்; நீங்கள் அவர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருகிற கருவிகளாயிருப்பீர்கள்.
33 ஆதலால் நீங்கள் ஆக்கினைக்குள்ளாக வராதபடிக்கு நான் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்த வார்த்தைகளை கைக்கொள்ளுவீர்களாக; ஏனெனில் பிதா ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிற மனுஷனுக்கு ஐயோ.
34 உங்களுக்குள்ளிருந்த வாக்குவாதங்களினிமித்தம், இந்தக் கட்டளைகளை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். உங்களுக்குள் வாக்குவாதங்கள் இல்லாமல் இருந்ததேயானால், நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
35 உங்களினிமித்தம் பிதாவிடத்தில் நான் போகவேண்டியது அவசியமாயிருப்பதாலே, நான் இப்பொழுது பிதாவினிடத்திற்குப் போகிறேன்.
36 அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்ன பின்பு, அவர் தாம் தெரிந்துகொண்ட சீஷர்கள் அனைவரையும், ஒவ்வொருவராக தொடும்வரையில், தன் கரத்தால் தொட்டு, அவர்களைத் தொட்டபடியே அவர்களிடத்தில் பேசினார்.
37 அவர் பேசின வார்த்தைகளை திரளானோர் கேட்கவில்லை. ஆதலால் அவர்கள் சாட்சி கொடுக்கவில்லை; ஆனால் அவர் பரிசுத்த ஆவியானவரைக் கொடுக்கும்படியான வல்லமையைத் தங்களுக்கு அளித்தார் என்று சீஷர்கள் சாட்சி பகர்ந்தார்கள். இந்த சாட்சி உண்மையென்று இப்போதிருந்து நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
38 அந்தப்படியே, இயேசு அவர்கள் யாவரையும் தொட்டவுடனே, திரளானோர் இயேசுவைக் காணமுடியாதபடி ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலாடியது.
39 அவர்கள் மேகத்தால் மூடப்பட்டிருந்தபோது அவர் அவர்களிடமிருந்து புறப்பட்டு, பரலோகத்திற்கு ஏறினார். சீஷர்கள் கண்டு, அவர் பரலோகத்திற்கு மறுபடியும் ஏறினார், என்று சாட்சி பகர்ந்தார்கள்.