அதிகாரம் 20
இயேசு அற்புதமாய் அப்பத்தையும், திராட்சைரசத்தையும் அளித்து அவர் மறுபடியும் ஜனங்களுக்கு திருவிருந்தை நிர்வகித்தல் – யாக்கோபின் மீதியானோர் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஞானத்திற்கு வந்து, அமெரிக்காவை சுதந்தரித்துக் கொள்வார்கள் – மோசேயைப்போல இயேசு ஒரு தீர்க்கதரிசி. நேபியர்கள் தீர்க்கதரிசிகளின் பிள்ளைகள் – கர்த்தருடைய ஜனங்களாகிய மற்றவர்கள் எருசலேமிலே கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். ஏறக்குறைய கி.பி. 34.
1 அந்தப்படியே, அவர் திரளானோரும், தம்முடைய சீஷரும் ஜெபம் செய்வதை நிறுத்தவேண்டுமென்று கட்டளையிட்டார். அவர்கள் தங்கள் இருதயங்களிலே ஜெபம் செய்வதை நிறுத்தக்கூடாதென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.
2 அவர்கள் எழுந்து தங்கள் காலூன்றி நிற்கும்படி அவர் கட்டளையிட்டார். அவர்கள் எழுந்து காலூன்றி நின்றார்கள்.
3 அந்தப்படியே, அவர் மறுபடியும் அப்பத்தைப் பிட்டு, அதை ஆசீர்வதித்து, புசிக்கும்படி சீஷர்களுக்குக் கொடுத்தார்.
4 அவர்கள் புசித்த பின்பு, அவர்கள் அப்பத்தைப் பிட்டு அதை திரளானோருக்கு கொடுக்கவேண்டுமென்று கட்டளையிட்டார்.
5 அவர்கள் திரளானோருக்குக் கொடுத்த பின்பு, அவர்கள் பானம்பண்ணும்படி அவர்களுக்கு திராட்சைரசத்தைக் கொடுத்து, அவர்கள் திரளானோருக்குக் கொடுக்கவேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
6 இப்பொழுது, சீஷர்களாலோ, திரளானோராலோ எந்த அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவரப்படவில்லை.
7 ஆனாலும் அவர் புசிக்கும்படியாக அவர்களுக்கு அப்பத்தையும், பானம்பண்ணும்படியாக திராட்சைரசத்தையும் மெய்யாகவே தந்தார்.
8 அவர் அவர்களை நோக்கி: இந்த அப்பத்தைப் புசிக்கிற எவனும் என் சரீரத்தை தன் ஆத்துமாவிற்காக புசிக்கிறான், இந்த திராட்சைரசத்தை பானம்பண்ணும் எவனும் தன் ஆத்துமாவுக்காக பானம்பண்ணுகிறான். அவன் ஆத்துமா இனி பசியோ, தாகமோ அடையாமல் நிரப்பப்பட்டிருக்கும், என்றார்.
9 இப்பொழுது, திரளானோர் யாவரும் புசித்து பானம்பண்ணின பின்பு, இதோ, அவர்கள் ஆவியானவராலே நிரப்பப்பட்டார்கள்; அவர்கள் ஏகசத்தமாய்க் கூக்குரலிட்டு, தாங்கள் கண்டவரும் கேட்டவருமாகிய இயேசுவை மகிமைப் படுத்தினார்கள்.
10 அந்தப்படியே, அவர்கள் யாவரும் இயேசுவை மகிமைப் படுத்திய பின்பு, அவர் அவர்களை நோக்கி சொன்னார்: இதோ, இப்பொழுதும் இஸ்ரவேலின் வீட்டாரின் மீதியானோராகிய இந்த ஜனத்தைக் குறித்து பிதா எனக்குக் கட்டளையிட்ட கட்டளையை நான் முடிக்கிறேன்.
11 நான் உங்களிடம் பேசி ஏசாயாவின் வார்த்தைகள் நிறைவேறுகிறபோது, என்று சொன்னதை நினைவுகூருங்கள், இதோ, அவைகள் எழுதப்பட்டிருக்கின்றன. நீங்கள் அவைகளை உங்களுக்கு முன்பாக வைத்திருக்கிறீர்கள். ஆதலால் அவைகளை ஆராய்ந்து பாருங்கள்.
12 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அவைகள் நிறைவேறுகிறபோதுதான், இஸ்ரவேலின் வீட்டாரே, தன்னுடைய ஜனத்திற்கு பிதா செய்த உடன்படிக்கையும் நிறைவேறும்.
13 பூமியின் பரப்பின் மீதெங்கும் சிதறடிக்கப்படவிருக்கிற மீதியானோர் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்; அவர்கள் தங்களை விடுவித்த தங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஞானத்திற்குக் கொண்டுவரப்படுவார்கள்.
14 நான் இந்த தேசத்தை நீங்கள் சுதந்தரிக்கும்படியாக உங்களுக்குக் கொடுக்கவேண்டுமென பிதா எனக்குக் கட்டளையிட்டார்.
15 நான் உங்களுக்கு சொல்லுகிறேன். என் ஜனத்தை அவர்கள் சிதறடித்த பின்னர், தாங்கள் பெறும் ஆசீர்வாதத்திற்குப் பின்பு புறஜாதியார் மனந்திரும்பவில்லையெனில்,
16 அப்பொழுது யாக்கோபு வீட்டாரின் மீதியானவர்களாகிய நீங்கள் அவர்களுக்குள்ளே போங்கள்; அநேகராய் இருக்கும் அவர்களுக்குள்ளே நீங்கள் இருப்பீர்கள்; நீங்கள் அவர்களுக்குள்ளே காட்டு மிருகங்கள் மத்தியில் இருக்கிற சிங்கம் போலவும், ஆட்டு மந்தைக்குள்ளே இருக்கிற பால சிங்கத்தைப்போலவும் இருப்பீர்கள். அது அவைகளினுள்ளே போனால் மிதித்து, துண்டுகளாக பீறிப்போடும், ஒருவரும் காப்பாற்றக்கூடாமற் போகும்.
17 உனது கரம் உன் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கும், உன் சத்துருக்களெல்லாம் தள்ளப்படுவார்கள்.
18 ஒரு மனுஷன் தன் அரிக்கட்டுகளை களத்திலே சேர்ப்பதைப் போல, நான் என் ஜனத்தை ஏகமாய்ச் சேர்ப்பேன்.
19 பிதா உடன்படிக்கை செய்துகொண்டவர்களாகிய உங்களை நான் என் ஜனமாக்குவேன். ஆம், நான் உங்களுடைய கொம்பை இரும்பாக்குவேன். நான் உங்களுடைய குளம்பை பித்தளையாக்குவேன். நீங்கள் அநேகரை துண்டுகளாக வெட்டிப்போடுவீர்கள், நான் அவர்களின் கொள்ளையை கர்த்தரிடத்தில், அவர்களின் பொருட்களை பூமியனைத்திற்கும் கர்த்தரானவரிடத்தில் அர்ப்பணிப்பேன். இதோ, அதைச் செய்கிறவர் நானே.
20 பிதா சொல்லுகிறதாவது. என் நியாயத்தின் பட்டயம் அந்நாளிலே அவர்கள்மேல் தொங்கிக்கொண்டிருக்கும்; பிதா சொல்லுகிறதாவது, அவர்கள் மனந்திரும்பாவிடில், அது அவர்கள் மேல், ஆம். புறஜாதியார் தேசங்கள் அனைத்தின் மேலும் விழும்.
21 இஸ்ரவேலின் வீட்டாரே, என் ஜனத்தை நான் ஸ்திரப்படுத்துவேன்.
22 இதோ, நான் உன் தகப்பனாகிய யாக்கோபோடு செய்த உடன்படிக்கையை நிறைவேறப்பண்ணும்படியாக இந்த ஜனத்தை இத்தேசத்திலே ஸ்திரப்படுத்துவேன். அது புதிய எருசலேமாய் இருக்கும். இந்த ஜனத்திற்கு நடுவே பரலோகத்தின் வல்லமைகள் இருக்கும்; ஆம், நானும் உங்களின் நடுவிலே இருப்பேன்.
23 இதோ, என்னைப்போல உங்கள் சகோதரர்களுக்குள்ளிருந்து உங்களுக்கென்று உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்கு சொல்லுகிறது எதுவானாலும், எல்லா காரியங்களிலும் நீங்கள் செவிகொடுக்கவேண்டும். அந்த தீர்க்கதரிசிக்கு செவிகொடாத ஒவ்வொரு ஆத்துமாவும் ஜனங்களுக்குள்ளிருந்து தள்ளப்பட்டுப் போகும் என்று என்னைக் குறித்தே மோசே பேசியிருக்கிறான்.
24 மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆம் சாமுவேல் துவங்கி எல்லா தீர்க்கதரிசிகளும், அதற்குப் பின்னே வந்து பேசின அநேகரும், என்னைக் குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார்கள்.
25 இதோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள்; நீங்கள் இஸ்ரவேல் வீட்டாரைச் சேர்ந்தவர்களாய் இருக்கிறீர்கள்; பிதா ஆபிரகாமை நோக்கி: உன் சந்ததியாலே உலகத்தின் சகல இனத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று சொல்லி, உங்கள் பிதாக்களிடத்தில் செய்துகொண்ட உடன்படிக்கையைச் சேர்ந்தவர்களாயிருக்கிறீர்கள்.
26 முதலில் நான் உங்களுக்குள் வரவேண்டுமென்று பிதா என்னை எழப்பண்ணி, உங்களில் ஒவ்வொருவனையும் தன் தன் அக்கிரமங்களிலிருந்து விலகிப்போகப்பண்ணி, உங்களை ஆசீர்வதிக்கும்படி என்னை அனுப்பினார்; இது நீங்கள் உடன்படிக்கையின் பிள்ளைகளாய் இருப்பதினாலேதான்.
27 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட பின்பு, உங்கள் சந்ததியால் உலகத்தின் இனங்கள் யாவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்று, ஆபிரகாமிடத்தில் பிதா சொல்லி, தாம் செய்துகொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றுகிறார். இதனால் என் மூலமாக புறஜாதியார்மேல் பரிசுத்த ஆவி ஊற்றப்படும். புறஜாதியார் மேலான இந்த ஆசீர்வாதம், இஸ்ரவேலின் வீட்டாரே, என் ஜனத்தைச் சிதறடிப்பதற்கேதுவாய் எல்லாரைக்காட்டிலும் அவர்களைப் பலவான்களாக்கும்.
28 அவர்கள் இந்த தேசத்தின் ஜனங்களுக்கு சவுக்காய் இருப்பார்கள். ஆயினும் அவர்கள் என் சுவிசேஷத்தின் பரிபூரணத்தைப் பெறுகிறபோது, எனக்கு விரோதமாய்த் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தினால், அவர்களுடைய அக்கிரமங்களை அவர்களின் சொந்த சிரசுகளின்மேல் திருப்புவேன், என்று பிதா சொல்லுகிறார்.
29 அப்பொழுது என் ஜனத்தோடு நான் செய்த உடன்படிக்கையை நான் நினைவுகூருவேன்; என்னுடைய சொந்த ஏற்ற காலத்தில் அவர்களை ஏகமாய்க் கூடப்பண்ணுவேன் என்றும், அவர்களுடைய பிதாக்களுடைய தேசமான, அவர்களுக்கு வாக்குத்தத்தத்தின் தேசமாய் என்றென்றும் இருக்கிற எருசலேமின் தேசத்தை, அவர்கள் சுதந்தரிக்கும்படி மறுபடியும் அவர்களுக்குக் கொடுப்பேன் என்றும், அவர்களோடு நான் உடன்படிக்கை செய்துள்ளேன் என்றும், பிதா உரைக்கிறார்.
30 என் சுவிசேஷத்தின் பரிபூரணம் அவர்களுக்குப் பிரசங்கிக்கப்படும் காலம் வருகிறது;
31 தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து நானே என்று அவர்கள் என்னில் விசுவாசித்து, என் நாமத்தில் பிதாவினிடத்தில் ஜெபிப்பார்கள்.
32 அப்பொழுது அவர்களுடைய காவற்காரரர்கள் தங்கள் தொனியை உயர்த்தி, ஏகசத்தத்தோடு பாடுவார்கள். ஏனெனில் அவர்கள் கண்ணாரக் காண்பார்கள்.
33 பின்பு பிதா அவர்களை மறுபடியும் கூடச்செய்து அவர்கள் சுதந்தரிக்கும்படியான தேசமாக எருசலேமை அவர்களுக்குத் தருவார்.
34 அப்பொழுது, எருசலேமின் பாழான இடங்களே, ஏகமாய்ப் பாடுங்கள். பிதா தம் ஜனத்தைத் தேற்றினார். அவர் எருசலேமை மீட்டுக்கொண்டார், என்று அவர்கள் சந்தோஷப்படுவார்கள்.
35 பிதா எல்லா தேசங்களின் கண்களுக்கு முன்பாக தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்தினார்; பூமியின் கடையாந்திரங்கள் அனைத்தும் பிதாவின் இரட்சிப்பைக் காண்பார்கள்; பிதாவும் நானும் ஒன்றாயிருக்கிறோம்.
36 அப்பொழுது எழுதப்பட்டதெதுவோ அது சம்பவிக்கும், விழித்திரு. மறுபடியும் விழித்திருந்து, சீயோனே, உன் பெலத்தைத் தரித்துக்கொள். பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன்னுடைய அழகான வஸ்திரங்களை உடுத்திக்கொள், ஏனெனில் இனிமேல் உன்னிடத்தில் விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தமுள்ளவனும் வருவதில்லை.
37 உன்னிடத்திலிருந்து புழுதியைத் தட்டிவிடு, எருசலேமே எழுந்து உட்காரு, சீயோனின் சிறைபிடிக்கப்பட்ட குமாரத்தியே, உன் கழுத்தின் கட்டுகளிலிருந்து, உன்னை அவிழ்த்துக்கொள்.
38 கர்த்தர் சொல்லுகிறதாவது: நீங்கள் ஒன்றுமில்லாமைக்கு உங்களையே விற்றீர்கள், நீங்கள் பணமின்றி மீட்கப்படுவீர்கள்.
39 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். என் ஜனம் என் நாமத்தை அறியும், ஆம், அந்நாளிலே பேசுகிறவர் நானே என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
40 அப்பொழுது அவர்கள், அவர்களுக்கு நற்செய்திகளைக் கொண்டுவந்து, சமாதானத்தை அறிவித்து, நன்மையான நற்செய்திகளை அவர்களுக்குக் கொண்டுவந்து, இரட்சிப்பை அறிவித்து, சீயோனை நோக்கி உனது தேவன் ராஜரீகம் பண்ணுகிறார் என்று சொல்லுகிறவனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன, என்பார்கள்.
41 அப்பொழுது ஒரு கூக்குரல் கேட்கப்படும், புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து போங்கள் அசுத்தமானதைத் தொடாதேயுங்கள். அவள் நடுவிலிருந்து வெளியேறுங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களை சுமப்பவர்களே சுத்தமாயிருங்கள்.
42 நீங்கள் தீவிரிக்கவும் வேண்டாம், ஓடிப்போகவும் வேண்டாம்; ஏனெனில் கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் போவார். இஸ்ரவேலின் தேவன் உங்களைப் பின்னிருந்து காப்பார்.
43 இதோ, என் ஊழியக்காரர் விவேகமாய் நடந்துகொள்வார்; அவர் மேன்மையடைந்து புகழப்பட்டு உன்னதமாயிருப்பார்.
44 அவருடைய முகரூபம் மற்ற எந்த மனுஷரையும்விடவும், அவருடைய உருவம் மனுபுத்திரர் யாரையும் விட உருக்குலைக்கப்பட்டதால், அநேகர் உம்மைக்கண்டு, ஆச்சரியமடைந்தார்கள்.
45 அப்படியாக அவர் அநேக ஜாதிகளின் மீது தெளிப்பார்; ராஜாக்கள் தங்களுக்குச் சொல்லப்படாதவைகளை காண்கிறதினிமித்தம் அவர்களுடைய வாய்கள் அவரால் அடைக்கப்பட்டிருக்கும்; அவர்கள் தாங்கள் கேள்விப்படாதவைகளை நிதானிப்பார்கள்.
46 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே இக்காரியங்கள் யாவும் நிச்சயமாகவே வரும். அப்பொழுது பிதா தமது ஜனத்தோடு செய்துகொண்ட இந்த உடன்படிக்கை நிறைவேறும்; பின்பு எருசலேம் மறுபடியும் என் ஜனத்தால் குடியேற்றப்படும். அது அவர்களின் சுதந்திர பூமியாய் இருக்கும்.