வேதங்கள்
3 நேபி 8


அதிகாரம் 8

புயல்களும், பூமி அதிர்ச்சிகளும், அக்கினிகளும், சுழற்காற்றுகளும், இயற்கைச் சேதங்களும் கிறிஸ்துவின் சிலுவையில் அறைதலை சாட்சி பகர்தல் – அநேக ஜனங்கள் அழிந்துபோகுதல் – காரிருள் மூன்று நாட்கள் தேசத்தை மூடுதல் – மீந்திருப்போர் தங்களின் விதியை நினைத்து துக்கித்தல். ஏறக்குறைய கி.பி. 33–34.

1 இப்பொழுதும், அந்தப்படியே, எங்களுடைய பதிவேட்டின்படியே, எங்களுடைய பதிவேடுகள் மெய்யென அறிவோம். ஏனெனில் இதோ, பதிவேடுகளை வைத்திருந்தவர் நியாயவான் என்று அறிவோம், ஏனெனில் அவன் மெய்யாகவே அநேக அற்புதங்களை இயேசுவின் நாமத்தில் செய்தான்; எந்த மனுஷனும், தன் அக்கிரமத்திலிருந்து முழுவதுமாய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் மாத்திரமே அவனால் இயேசுவின் நாமத்தில் அற்புதங்களைச் செய்யமுடியும்.

2 இப்பொழுதும், அந்தப்படியே, எங்களுடைய காலத்தைக் கணக்கிடுவதில் இந்த மனுஷன் எந்த பிழையையும் செய்திருக்கவில்லையானால், முப்பத்தி மூன்றாம் வருஷம் கடந்துபோயிற்று.

3 தேசத்தின் மேல் மூன்று நாட்களளவும் காரிருள் இருக்கும் என்ற நேரத்துக்காக, லாமானியனான சாமுவேல் தீர்க்கதரிசியால் கொடுக்கப்பட்ட அறிகுறிக்காக, ஜனங்கள் மிகவும் நேர்மையாகத் தேடத் தொடங்கினார்கள்.

4 அநேக அறிகுறிகள் கொடுக்கப்பட்டிருந்தும் ஜனங்களுக்குள்ளே அதிக சந்தேகங்களும் விவாதங்களும் இருக்கத் துவங்கின.

5 அந்தப்படியே, முப்பத்தி நாலாம் வருஷத்தின் முதலாம் மாதத்தின் நான்காம் நாளன்று தேசம் எங்கும் கேள்விப்பட்டிராத ஓர் பெரும் புயல் எழுந்தது.

6 அங்கே பெரிதும் பயங்கரமானதுமான புயல் சீற்றம் ஏற்பட்டது; பயங்கரமான இடிமுழக்கம் பூமி முழுவதையும் இரண்டாகப் பிளந்து போகப்பண்ணுவது போல் அதை அசைத்தது.

7 தேசம் முழுவதும் ஒருபோதும் கேள்விப்பட்டிராத வெளிச்சமிக்க மின்னல்கள் மின்னின.

8 சாரகெம்லா பட்டணம் தீப்பிடித்தது.

9 மரோனி பட்டணம் சமுத்திரத்தின் ஆழங்களிலேயே மூழ்கி, அதனுடைய குடிகள் அமிழ்ந்து போனார்கள்.

10 மரோனிகா பட்டணத்தின்மேல் மண் வாரிப் போடப்பட்டது. அதனால் பட்டணம் இருந்த இடத்திலே ஒரு பெரிய மலை உண்டானது.

11 தென் தேசத்திலே ஏற்பட்ட அழிவு பெரிதும் பயங்கரமுமாயிருந்தது.

12 ஆனால் இதோ, வடதேசத்தில் அழிவு இன்னும் பெரிதும் பயங்கரமுமாயிருந்தது; இதோ, புயல் சீற்றத்தினாலும் சூறாவளியாலும், இடிமுழக்கங்களாலும், மின்னல்களினாலும், பூமியனைத்தின் பயங்கரமான அதிர்ச்சியினிமித்தமும் பூமியே மாறிப்போனது.

13 நெடுஞ்சாலைகள் உடைந்து போயின. சமமான சாலைகள் அழிந்துபோயின. சீரான அநேக இடங்கள் கரடுமுரடாய் மாறின.

14 அநேக பெரிதும் குறிப்படத்தக்கதுமான பட்டணங்கள் மூழ்கின, அநேகம் எரிந்துபோயின, அதின் கட்டிடங்கள் பூமிக்குள் விழுந்துபோகுமட்டும் அநேகம் அசைக்கப்பட்டன, அதன் குடிகள் சங்கரிக்கப்பட்டார்கள், அந்த இடங்கள் பாழாய்ப்போயின.

15 மீந்துபோன சில பட்டணங்கள் இருந்தன; ஆனால் அவைகளின் சேதம் மிகவும் பெரிதாய் இருந்தது. அவைகளிலிருந்த அநேகர் சங்கரிக்கப்பட்டார்கள்.

16 சிலர் சுழற்காற்றில் வாரிக்கொண்டு போகப்பட்டனர்; அவர்கள் கொண்டுபோகப்பட்டனர் என்று அறிவார்களேயொழிய அவர்கள் போன இடத்தை ஒருவனும் அறியான்.

17 இப்படியாக கொந்தளிப்பினாலும், இடிமுழக்கங்களாலும், மின்னல்களாலும், பூமியின் அசைவினாலும் பூமி அனைத்தும் உருமாறிப்போனது.

18 இதோ, கன்மலைகள் இரண்டாகப் பிளந்து, அவைகள் பூமியின் மீதெங்கும் உடைந்து கிடந்தன, அவை தேசத்தின் மீதெங்கும் உடைந்த துண்டுகளாகவும், பிளவடைந்தவைகளாகவும், துகள்களாகவும் காணப்பட்டன.

19 அந்தப்படியே, இதோ, அவை மூன்றுமணி நேரம் வரைக்குமாய் நீண்டிருந்ததால், இடிமுழக்கங்களும் மின்னல்களும், புயலும் கொந்தளிப்பும், பூமியின் அதிர்வுகளும் நின்றபோது, அந்த நேரமானது இன்னும் கூட அதிகம் என்று சிலரால் சொல்லப்பட்டது. ஆயினும் இந்த பெரிதும் பயங்கரமுமான காரியங்கள் எல்லாம் ஏறக்குறைய மூன்று மணிநேரம் சம்பவித்தது, பின்பு இதோ, தேசத்தின் மேல் காரிருள் சூழ்ந்தது.

20 அந்தப்படியே, தேசத்தின் மேல் பயங்கரமான காரிருள் இருந்ததால், வீழ்ந்துபோகாத அதன் குடிகள் காரிருளின் புகைமண்டலத்தை உணரமுடிந்தது.

21 காரிருளினிமித்தம் வெளிச்சமோ, விளக்குகளோ அல்லது தீப்பந்தங்களோ இல்லை; அவர்களுடைய அருமையான காய்ந்துபோன மரங்களைத் தீ மூட்டவும் முடியவில்லை. அதனால் அங்கே எந்த வெளிச்சமும் இல்லை.

22 அங்கே எந்த ஒரு வெளிச்சத்தையோ, தீயையோ, மங்கின ஒளியையோ, சூரியனையோ, சந்திரனையோ, நட்சத்திரங்களையோ, காணமுடியவில்லை, ஏனெனில் தேசத்தின் மேலிருந்த காரிருளின் மூடுபனி அவ்வளவு அதிகமாயிருந்தது.

23 அந்தப்படியே, அது மூன்று நாட்களவும் நீடித்ததால் அங்கே எந்த வெளிச்சமும் காணப்படவில்லை, அங்கே எல்லா ஜனங்களுக்குள்ளாகவும் தொடர்ந்து துக்கிப்பும், புலம்பலும் அழுகையுமிருந்தது; ஆம், அவர்கள் மேல் வந்த காரிருளினிமித்தமும், மிகுந்த அழிவினிமித்தமும் ஜனங்களுடைய முனகல் அதிகமாயிருந்தது.

24 அவர்கள் இந்தப் பெரிதும் பயங்கரமுமான நாளுக்கு முன்னதாகவே நாம் மனந்திரும்பியிருக்கவேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய சகோதரர்கள் தப்புவிக்கப்பட்டிருப்பார்கள், அவர்கள் அந்த மகா பட்டணமாகிய சாரகெம்லாவிலே எரிந்து போயிருக்கமாட்டார்கள், என்று கூக்குரலிட்டுச் சொன்னது கேட்கப்பட்டது.

25 மற்றொரு இடத்தில் அவர்கள் கூக்குரலிட்டு துக்கித்துச் சொன்னதாக கேட்கப்பட்டதாவது: நாங்கள் இந்தப் பெரிதும் பயங்கரமுமான நாளுக்கு முன்பாகவே மனந்திரும்பி, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, கல்லெறிந்து, துரத்தாமலிருந்திருந்தால் நம்முடைய தாய்மார்களும், நம்முடைய அழகான குமாரத்திகளும், நம்முடைய பிள்ளைகளும் அந்த மகா நகரமாகிய மரோனிகாவிலே புதைபட்டிருக்காமல் தப்புவிக்கப்பட்டிருப்பார்கள். இப்படியாக ஜனங்களின் புலம்பல்கள் பெரிதும் பயங்கரமுமாயிருந்தன.