வேதங்கள்
3 நேபி 3


அதிகாரம் 3

லாசோனியஸூம், நேபியர்களும், அவர்களுடைய தேசங்களும், சரணடைய வேண்டுமென்று காதியாந்தன் தலைவனாகிய கித்தியானி கோருதல் – சேனைகளின் பிரதான தலைவனாக கித்கித்தோனியை லாசோனியஸ் நியமித்தல் – தங்களைக் காத்துக்கொள்ள சாரகெம்லாவிலும் உதாரத்துவஸ்தலத்திலும் நேபியர்கள் கூடுதல். ஏறக்குறைய கி.பி. 16–18.

1 இப்பொழுதும், அந்தப்படியே, கிறிஸ்துவின் வருகையிலிருந்து பதினாறாவது வருஷத்தில், தேசத்தின் விசாரணைக்காரனாகிய லாசோனியஸ், இந்தத் திருடர்கள் கூட்டத்தின் தலைவனும், விசாரணைக்காரனுமானவனிடத்திலிருந்து ஒரு நிருபத்தைப் பெற்றான்; எழுதப்பட்டிருந்த வார்த்தைகளாவன:

2 தேசத்தின் மகா கனம்பொருந்திய பிரதான விசாரணைக்காரனாகிய லாசோனியஸே, இதோ, நான் உனக்கு இந்த நிருபத்தை எழுதுகிறேன், நீ உங்களுடையது என்று எண்ணுகிற உரிமையையும், சுதந்திரத்தையும், பாதுகாப்பதில் நீ கொண்டிருக்கிற உறுதியினிமித்தமும், உன் ஜனத்தின் உறுதியினிமித்தம் உனக்கு மிகுந்த பெரும் பாராட்டுதலைத் தெரிவிக்கிறேன்; ஆம், உங்களுடைய சுதந்திரத்தையும் உங்களுடைய சொத்துக்களையும், உங்களுடைய நாட்டையும், அல்லது அப்படி நீங்கள் அழைக்கும் எதையும் தற்காப்பதில், ஒரு தேவ கரத்தால் ஆதரிக்கப்பட்டவனைப் போல உறுதியாய் செயல்படுகிறாய்.

3 மகா கனம்பொருந்திய லாசோனியஸே, இப்பொழுதும் இச்சமயத்தில் ஆயுதங்களோடு நின்றிருப்பவர்களும், நேபியர்கள் மேல் விழுந்து அவர்களை அழித்துப் போடுங்கள், என்ற வார்த்தைக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பவர்களுமாகிய என் சேர்வைக்குக் கீழிருக்கிற அநேக தைரியமான மனுஷருக்கு விரோதமாக உன்னால் நிற்கக் கூடுமென்று எண்ணுவதற்கு நீ எவ்வளவு மூடனாயும், வீணனாயும் இருக்கவேண்டும், இது எனக்கு பரிதாபமாகவே தோன்றுகிறது.

4 நான் அவர்களின் அடக்கக்கூடாத ஆவியை அறிந்து, யுத்தக் களத்திலே அவர்களை அறிந்து, நீங்கள் அவர்களுக்குச் செய்த அநேக தவறுதல்களினிமித்தம், உங்கள் மேலுள்ள அவர்களின் நித்திய வெறுப்பையும் நான் அறிந்திருக்கிறதாலும், ஆகவே உங்களுக்கு விரோதமாக அவர்கள் வந்தால் அவர்கள் உங்களை முழுவதுமாய் அழித்துப் போடும்படியாக சந்திப்பார்களென்பதை அறிகிறேன்.

5 ஆதலாலே நீங்கள் சரியென்று விசுவாசிப்பதில் உங்களுடைய உறுதியினிமித்தமும், யுத்தக் களத்தில் உங்களுடைய வீரமான உத்வேகத்தினிமித்தமும், உங்களின் நலனுக்காக அக்கறை கொண்டு, இந்த நிருபத்தை எழுதி, என் சொந்தக் கையினாலே அதை முத்திரையிடுகிறேன்.

6 ஆதலால் என்னுடைய இந்த ஜனங்கள் உங்களைப் பட்டயத்தினால் சந்தித்து அழிவு உங்கள் மேல் வருவதைவிட, என் ஜனத்திடம் உங்களுடைய பட்டணங்களையும், உங்களுடைய தேசங்களையும், உங்களுடைய சொத்துக்களையும் ஒப்புவிக்கவேண்டுமென்று விரும்பி உங்களுக்கு எழுதுகிறேன்.

7 அல்லது வேறு வார்த்தைகளிலெனில், நீங்கள் எங்களைப் போலிருக்கும்படியாக, எங்களுக்கு அடிமைகளாக அல்ல, எங்களுடைய பொருட்கள் அனைத்துக்கும் எங்களின் சகோதரராயும், பங்காளிகளாயும் இருக்கும்பொருட்டு, நீங்கள் உங்களையே எங்களுக்கு ஒப்படைத்து, எங்களோடு ஐக்கியமாகி, எங்களுடைய இரகசியக் கிரியைகளை அறிந்து, எங்களுடைய சகோதரராகுங்கள்.

8 இதோ, நீங்கள் இதைச் செய்தால், நீங்கள் அழிக்கப்படமாட்டீர்கள், என்ற உறுதி மொழியுடனே உங்களுக்கு நான் ஆணையிடுகிறேன். ஆனால் இதை நீங்கள் செய்யவில்லையெனில், அடுத்த மாதத்தில், என் சேனைகள் உங்களுக்கு விரோதமாக வரவேண்டுமென்று நான் கட்டளையிடுவேன், என்ற உறுதிமொழியுடனே உங்களுக்கு நான் ஆணையிடுகிறேன். அவர்கள் தங்கள் கையை அடக்காமலும், உங்கள் ஜீவன்களைத் தப்புவிக்காமல், உங்களை வெட்டிப்போட்டு, நீங்கள் நிர்மூலமாகிப்போகும் வரைக்குமாய் பட்டயத்தை உங்கள் மேல் விழப்பண்ணுவார்கள்.

9 இதோ, கித்தியானியாகிய நானே, இந்த காதியாந்தன் இரகசிய சங்கத்திற்கு விசாரணைக்காரன்; இச்சங்கமும் இதன் கிரியைகளும் நன்மையானவை என்று அறிந்திருக்கிறேன். இவை பூர்வகாலத்தவை, அவை எங்களுக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது.

10 லாசோனியஸே, நான் உனக்கு இந்த நிருபத்தை எழுதுகிறேன். அவர்களுடைய ராஜாங்க உரிமைகளை அவர்களுக்குக் கொடாமலிருந்ததில், உள்ள உங்களுடைய துன்மார்க்கத்தினிமித்தம், உங்களிடமிருந்து பிரிந்து போனவர்களாகிய, இந்த என் ஜனங்கள், தங்களுடைய உரிமைகளையும் ராஜாங்கத்தையும் மறுபடியும் பெறத்தக்கதாக, நீங்கள் இரத்தம் சிந்துதல் இல்லாமல் உங்களுடைய தேசங்களையும், உங்களுடைய சொத்துக்களையும், ஒப்படைப்பீர்களென்று நம்புகிறேன். இதை நீங்கள் செய்யவில்லையெனில், நான் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக சரிக்கட்டுவேன், நானே கித்தியானி.

11 இப்பொழுதும், அந்தப்படியே, லாசோனியஸ் இந்த நிருபத்தைப் பெற்றபோது, நேபியர்களின் தேசத்தின் உரிமையைக் கித்தியானி கோரினதினிமித்தமும், ஜனங்களைப் பயமுறுத்தினதினிமித்தமும், துன்மார்க்கமும் அருவருப்புமுள்ள திருடர்களோடு போகப் பிரிந்து சென்றதின் மூலமும், அவர்களே தவறிழைத்து, ஒரு தவறும் இழைக்காதவர்களின் தவறுகளைச் சரிக்கட்டுவதாகக் கோருகிற, அவனுடைய தைரியத்தினிமித்தமும் மிகவும் ஆச்சரியப்பட்டுப்போனான்.

12 இப்பொழுதும் இதோ, இந்த விசாரணைக்காரனாகிய லாசோனியஸ் நியாயவானாயிருந்தான். அவனை ஒரு திருடனின் கோரிக்கைகளாலும், பயமுறுத்தல்களாலும் அச்சுறுத்தப்பட முடியவில்லை; ஆதலால் அவன் திருடர்களின் விசாரணைக்காரனான கித்தியானியின் நிருபத்திற்குச் செவிகொடாமல், திருடர்கள் தங்களுக்கு விரோதமாக வரவிருக்கிற சமயத்தில், தாங்கள் பெலனைப் பெறத்தக்கதாக கர்த்தரிடத்தில் தன் ஜனங்கள் கூக்குரலிடச் செய்தான்.

13 ஆம், அவர்கள் தங்கள் ஸ்திரீகளையும், தங்கள் பிள்ளைகளையும், தங்கள் மந்தைகளையும், தங்கள் கால்நடைகளையும், தங்களுடைய நிலத்தைத் தவிர தங்களுக்குள்ள எல்லா பொருட்களையும், ஓர் இடத்தில் சேர்க்கும்படியாய் ஜனங்கள் யாவருக்குள்ளும் ஒரு பிரகடனத்தை அனுப்பினான்.

14 அவர்களைச் சுற்றியும் கொத்தளங்கள் எழுப்பப்படவும் அவைகளின் பெலன் மிகவும் அதிகமாயிருக்கும்படியும் செய்தான். அவர்களைக் காவல் காக்கவும், பகலும் இரவும் அவர்களைத் திருடர்களிடமிருந்து காக்கவும், சுற்றிலும் காவல்காரராய் நேபியர் மற்றும் லாமானியர்களின் சேனைகளும், அல்லது நேபியர்களுக்குள் இலக்கமிடப்பட்ட அனைவரும் நிறுத்தப்படும்படிச் செய்தான்.

15 ஆம், அவன் அவர்களை நோக்கி, கர்த்தர் ஜீவிக்குமளவும், நீங்கள் உங்களுடைய எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மனந்திரும்பி, கர்த்தரிடத்தில் கூக்குரலிடாவிடில், நீங்கள் அந்த காதியாந்தன் திருடர்களின் கைகளிலிருந்து ஒருக்காலும் விடுவிக்கப்படமாட்டீர்கள்.

16 லாசோனியஸின் வார்த்தைகளும், தீர்க்கதரிசனங்களும் மிகவும் மகத்துவமாகவும், அற்புதமாகவும் இருந்தபடியால், அவைகள் ஜனங்கள் அனைவரின் மேலும் பயத்தை உண்டாக்கின; அவர்கள் லாசோனியஸின் வார்த்தைகளின்படியே செய்ய ஊக்கமாய் முயற்சித்தார்கள்.

17 அந்தப்படியே, திருடர்கள் வனாந்தரத்தை விட்டு நேபியர்களின் சேனைகள் அனைத்திற்கும் விரோதமாக வரும் சமயத்தில், அவர்களை வழிநடத்த, அவர்கள் மேல் லாசோனியஸ் பிரதான சேர்வைக்காரர்களை நியமித்தான்.

18 இப்பொழுதும் பிரதான சேர்வைக்காரரில் பிரதானமானவனும், நேபியர்களின் சேனைகள் அனைத்திலும் தலைமை சேனாதிபதியுமானவன் நியமிக்கப்பட்டான். அவனுடைய நாமம் கித்கித்தோனி என்பதாகும்.

19 இப்பொழுதும் (தாங்கள் துன்மார்க்கமாய் இராத காலத்தில்) வெளிப்படுத்தலின் ஆவியையும், தீர்க்கதரிசன ஆவியையும் பெற்றிருக்கிறவனையே, தங்களின் பிரதான சேர்வைக்காரனாக நியமிப்பது, நேபியர்கள் எல்லாருக்குள்ளும் இருந்த வழக்கமாயிருந்தது; எனவே இந்த கித்கித்தோனி அவர்களுக்குள் பெரிய தீர்க்கதரிசியாயும், பிரதான நியாயாதிபதியாயுமிருந்தான்.

20 இப்பொழுதும் ஜனங்கள் கித்கித்தோனியைப் பார்த்து: கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணி, நாங்கள் திருடர்கள்மேல் விழுந்து, அவர்களை அவர்களுடைய சொந்த நிலங்களிலேயே அழிக்கும்படியாக, மலைகள் மேலும் வனாந்தரத்தினுள்ளும் போகும்படி எங்களை அனுமதிப்பீராக, என்றார்கள்.

21 ஆனால் கித்கித்தோனி அவர்களை நோக்கி: கர்த்தர் தடை செய்கிறார்; ஏனெனில் நாம் அவர்களுக்கு விரோதமாகப் போனால், கர்த்தர் நம்மை அவர்களுடைய கைகளுக்குள் ஒப்படைப்பார்; ஆதலால் நாம் நம்முடைய தேசங்களின் மையப்பகுதியிலே, நம்மை ஆயத்தப்படுத்தி, நம்முடைய சேனைகள் அனைத்தையும் ஏகமாய்க் கூட்டுவோம். நாம் அவர்களுக்கு விரோதமாய்ப் போகாமல், அவர்கள் நமக்கு விரோதமாய் வரும்வரைக்கும் காத்திருப்போம். எனவே கர்த்தர் ஜீவிக்குமளவும், நாம் இதைச் செய்வோமானால், அவர் அவர்களை நம்முடைய கைகளுக்குள் ஒப்புக்கொடுப்பார்.

22 அந்தப்படியே, பதினேழாம் வருஷத்தில், வருஷத்தின் பிற்பகுதியிலே, லாசோனியஸின் பிரகடனம் தேசம் முழுவதும் போனது. அவர்கள் தங்கள் குதிரைகளையும், தங்கள் இரதங்களையும், தங்கள் கால்நடைகளையும், தங்கள் மந்தைகளையும், தங்களின் ஆடுகளையும், தங்களின் தானியங்களையும், தங்களின் எல்லா வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு, தங்களுடைய விரோதிகளை எதிர்த்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்படியாக, தாங்கள் யாவரும் ஏகமாய்க் கூடவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு போகும் மட்டுமாய், அவர்கள் ஆயிரம் பேராயும், பதினாராயிரம் பேராயும் அணிவகுத்துப் போனார்கள்.

23 நிர்ணயிக்கப்பட்ட தேசம் சாரகெம்லா தேசமாயிருந்தது, சாரகெம்லா தேசத்திற்கும், உதாரத்துவஸ்தலத்திற்குமிடையே, ஆம், உதாரத்துவஸ்தலத்திற்கும், பாழ்க்கடிப்பு தேசத்திற்கும், இடையே உள்ள கோடுவரைக்கும் நீண்டிருந்த தேசமாயிருந்தது.

24 நேபியர்கள் என்று அழைக்கப்பட்ட அநேக ஆயிரக்கணக்கான ஜனங்கள் இந்த தேசத்தில் திரண்டிருந்தார்கள். இப்பொழுதும் வடதேசத்தின் மேலிருந்த அந்த பயங்கரமான சாபத்தினிமித்தம், லாசோனியஸ் அவர்கள் தென் தேசத்தில் ஏகமாய்க் கூடும்படிச் செய்தான்.

25 அவர்கள் தங்கள் பகைவருக்கு விரோதமாக தங்களைக் காத்துக் கொள்ளும்படியாகக் கொத்தளங்களை எழுப்பினார்கள்; அவர்கள் ஒரே தேசத்திலே, ஒரே குழுவாக வாசம் பண்ணினார்கள். தங்கள் பாவங்கள் எல்லாவற்றிலுமிருந்து மனந்திரும்பும் அளவுக்கு அவர்கள் லாசோனியஸ் பேசின வார்த்தைகளுக்குப் பயந்தார்கள்; தங்கள் பகைவர்கள் தங்களுக்கு விரோதமாக யுத்தத்திற்கு வருகிற சமயத்தில் தங்களைத் தப்புவிக்க வேண்டுமென்று, தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் தங்கள் ஜெபங்களை ஏறெடுத்தார்கள்.

26 அவர்கள் தங்கள் பகைவரினிமித்தம் மிகவும் வேதனைப்பட்டார்கள். கித்கித்தோனி, அவர்கள் எல்லாவிதமான யுத்தக் கருவிகளைச் செய்யவேண்டுமென்றும், அவர்கள் மார்புக்கவசத்தையும், கேடயத்தையும், பரிசையையும் தரித்து, தன்னுடைய அறிவுரையின்படி பெலவான்களாய் இருக்கும்படிச் செய்தான்.

அச்சிடவும்