அதிகாரம் 26
இயேசு ஆதியிலிருந்து முடிவுவரைக்குமாக சகல காரியங்களையும் விளக்கிச் சொல்லுதல் – எழுதமுடியாத அற்புதமானவைகளை குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் உச்சரித்தல் – கிறிஸ்துவின் சபையில் இருப்போர் தங்களுக்குள்ளே அனைத்தையும் பொதுவாக வைத்திருத்தல். ஏறக்குறைய கி.பி. 34.
1 இப்பொழுதும், அந்தப்படியே, இயேசு இக்காரியங்களைச் சொன்னவுடனே, அவர் திரளானோருக்கு அவைகளை விளக்கிச் சொன்னார்; அவர் பெரிதும் சிறியதுமான சகலவற்றையும் அவர்களுக்கு விளக்கிச் சொன்னார்.
2 அவர் சொல்கிறார்: உங்களிடம் இல்லாத இந்த வேதவாக்கியங்களை, நான் உங்களுக்குக் கொடுக்கவேண்டுமென, பிதா கட்டளையிட்டார். ஏனெனில் அவை எதிர்கால தலைமுறையினருக்குக் கொடுக்கப்படவேண்டுமென்பது அவரிலுள்ள ஞானமாயிருந்தது.
3 அவர் ஆதியிலிருந்து தாம் தம்முடைய மகிமையிலே வருகிற காலம் வரைக்குமாக, எல்லா காரியங்களையும் விளக்கிச் சொன்னார். ஆம், கடுமையான வெப்பத்தால் பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போய், பூமி புஸ்தகச் சுருளைப்போல் சுருட்டப்பட்டு வானங்களும், பூமியும் கடந்துபோகுமளவும் பூமியின் பரப்பின் மேல் வரவிருக்கிற எல்லா காரியங்களையும் விளக்கிச் சொன்னார்.
4 எல்லா ஜனங்களும், எல்லா இனத்தாரும், சகல தேசத்தாரும், பாஷைக்காரரும் தங்களுடைய கிரியைகள் நன்மையானவைகளோ, அல்லது தீமையானவைகளோ என்பதற்கேற்ப நியாயந்தீர்க்கப்படும்படி, தேவனுக்கு முன்பாக நிற்கிற அந்தப் பெரிதும் கடைசியுமான நாள் வரைக்குமான காரியங்களை விவரித்துச் சொன்னார்.
5 உலகம் துவங்குவதற்கு முன்னமே இருந்த கிறிஸ்துவிலுள்ள இரக்கம், நியாயம், பரிசுத்தம் ஆகியவற்றின்படியே ஒன்று ஒரு புறத்திலும், மற்றொன்று மறுபுறத்திலுமாக இணையாயிருந்து, அவர்கள் நல்லவர்களாக இருந்தால், என்றுமுள்ள ஜீவனின் உயிர்த்தெழுதலுக்கும், அவர்கள் தீயவர்களாக இருந்தால், ஆக்கினையின் உயிர்த்தெழுதலுக்குமாக நியாயந்தீர்க்கப்படுவார்கள்;
6 இப்போதும், இயேசு மெய்யாகவே ஜனங்களுக்குப் போதித்த காரியங்களில் நூற்றில் ஒரு பகுதிகூட இந்தப் புஸ்தகத்தில் எழுதப்படமுடியாது.
7 ஆனால் இதோ, அவர் ஜனங்களுக்குப் போதித்த காரியங்களில் அதிகமானவை நேபியின் தகடுகளில் அடங்கியிருக்கிறது.
8 நான் எழுதின இந்தக் காரியங்கள், அவர் ஜனங்களுக்குப் போதித்தவைகளில் கொஞ்சமே; இயேசு பேசின வார்த்தைகளின்படியே, புறஜாதிகளிலிருந்து இந்த ஜனங்களிடமாக இவைகள் மறுபடியும் கொண்டுவரப்படும்படிக்கான நோக்கத்திற்காகவே இவைகளை எழுதினேன்.
9 இதை அவர்கள் பெற்ற பின்பு, அவர்கள் தங்கள் விசுவாசத்தைச் சோதித்தறியும்படியாக முதலில் அவர்கள் பெற்றுக் கொள்வது அவசியமாயிருக்கிறது. அவர்கள் இந்தக் காரியங்களை விசுவாசித்தார்களானால், அப்பொழுது பெரிய காரியங்கள் அவர்களுக்கு வெளியரங்கமாக்கப்படும்.
10 அவர்கள் இக்காரியங்களை விசுவாசிக்கவில்லையெனில் அவர்களுடைய ஆக்கினைக்கேதுவாக, அவர்களிடத்திலிருந்து இந்தப் பெரிய காரியங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
11 இதோ நேபியின் தகடுகளின்மேல் வரையப்பட்டிருந்த எல்லாவற்றையும் நான் அவர்களுக்கு எழுத இருந்தேன். ஆனால் கர்த்தரோ நான் என் ஜனத்தின் விசுவாசத்தை சோதிப்பேன், என்று சொல்லி அதைத் தடுத்தார்.
12 ஆதலால் மார்மனாகிய நான் கர்த்தரால் எனக்கு கட்டளையிடப்பட்டவைகளாகிய காரியங்களை எழுதுகிறேன். இப்பொழுதும் மார்மனாகிய நான், என் வார்த்தைகளை நிறுத்திவிட்டு, எனக்குக் கட்டளையிட்டவைகளை எழுதத் துவங்குகிறேன்.
13 ஆதலால், மூன்று நாட்களளவும் கர்த்தர் மெய்யாகவே ஜனங்களுக்குப் போதித்தார் என்பதை, நீங்கள் காணவேண்டுமென வாஞ்சிக்கிறேன்; அதற்குப் பின்பு, அவர் தம்மையே அவர்களுக்கு அடிக்கடி காண்பித்து, அடிக்கடி அப்பத்தைப் பிட்டு, அதை ஆசீர்வதித்து, அதை அவர்களுக்குக் கொடுத்தார்.
14 அந்தப்படியே, பேசப்பட்டிருக்கிற திரளானோரின் பிள்ளைகளுக்கு அவர் போதித்து ஊழியம் செய்து, அவர் அவர்களுடைய நாவுகளைக் கட்டவிழ்த்தார். அப்பொழுது அவர்கள், அவர் ஜனங்களுக்கு வெளிப்படுத்தினதைக் காட்டிலும் பெரிதான காரியங்களை, தங்கள் பிதாக்களிடம் பெரிதும் அற்புதமுமான காரியங்களைப் பேசினார்கள். அவர்கள் உச்சரிக்கும்படியாக அவர் அவர்களுடைய நாவுகளைக் கட்டவிழ்த்தார்.
15 அந்தப்படியே, அவர் பரலோகத்திற்கு ஏறின பின்பு, அவர் இரண்டாந்தரம் தம்மையே அவர்களுக்குக் காண்பித்து, பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகுமுன்னால், அவர்களுடைய எல்லா சுகவீனரையும், அவர்களுடைய முடவரையும் சுகமாக்கி, அவர்களுடைய குருடர்களின் கண்களைத் திறந்து, செவிடரின் காதுகளைத் திறந்து, அவர்களுக்குள் எல்லாவித சுகமாக்குதலையும் செய்து, மரித்தோரிலிருந்து ஒரு மனுஷனை எழுப்பி, தம்முடைய வல்லமையை அவர்களுக்குக் காண்பித்த பின்பு பிதாவினிடத்திற்கு ஏறிப்போனார்,
16 இதோ, அந்தப்படியே, மறுநாளில் திரளானோர் ஏகமாய்க் கூடினார்கள். அவர்கள் இந்த பிள்ளைகள் பேசுவதைக் பார்க்கவும் கேட்கவும் செய்தார்கள்; ஆம், குழந்தைகள்கூட தங்கள் வாய்களைத் திறந்து அற்புதமானவைகளை உச்சரித்தார்கள்; அவர்கள் உச்சரித்தவைகள் அங்கே எந்த மனுஷனும் எழுதக்கூடாதபடி தவிர்க்கப்பட்டன.
17 அந்தப்படியே, இயேசு தெரிந்துகொண்ட சீஷர்கள் அந்தக் காலம் முதற்கொண்டு தங்களிடத்தில் வந்த அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும் போதிக்கவும் துவங்கினார்கள்; இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட அநேகரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள்.
18 அவர்களில் அநேகர் பேசக்கூடாத காரியங்களைக் கண்டும் கேட்டும் இருந்தார்கள். அவைகள் எழுதப்படுவது நியாயமல்ல.
19 அவர்கள் போதித்து, ஒருவருக்கொருவர் ஊழியம் செய்தார்கள். எல்லோரும் ஒருவரோடு ஒருவர் நியாயமாய் நடந்து, தங்களுக்குள்ளிருந்த எல்லா பொருட்களையும் பொதுவாக வைத்துக் கொண்டார்கள்.
20 அந்தப்படியே, இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் எல்லாக் காரியங்களையும் செய்தார்கள்.
21 இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள், கிறிஸ்துவின் சபையார் என்று அழைக்கப்பட்டனர்.