வேதங்கள்
3 நேபி 27


அதிகாரம் 27

சபையைத் தம்முடைய நாமத்தில் அழைக்கும்படி இயேசு அவர்களுக்குக் கட்டளையிடுதல் – அவருடைய ஊழியமும் பாவநிவாரண பலியும் சேர்ந்து அவரது சுவிசேஷமாகிறது – மனுஷர் பரிசுத்த ஆவியானவரால் சுத்திகரிக்கப்படும் பொருட்டு, அவர்கள் மனந்திரும்பவும் ஞானஸ்நானம் பெறவும் கட்டளையிடப்படுதல் – அவர்கள், இயேசு இருப்பதைப் போன்றே இருக்கவேண்டும். ஏறக்குறைய கி.பி. 34–35.

1 அந்தப்படியே, இயேசுவின் சீஷர்கள் பிரயாணம் பண்ணி, தாங்கள் கண்டதும் கேட்டதுமானவைகளைப் பிரசங்கித்து, இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்தப்படியே, சீஷர்கள் ஏகமாய்க் கூட்டப்பட்டு, வல்லமையான ஜெபத்திலும் உபவாசத்திலும் இணைந்திருந்தார்கள்.

2 அவர்கள் அவருடைய நாமத்தில் பிதாவினிடத்தில் ஜெபித்துக் கொண்டிருந்ததால் இயேசு மறுபடியும் தம்மையே அவர்களிடத்தில் காண்பித்தார்; இயேசு வந்து, அவர்கள் நடுவே நின்று அவர்களிடத்தில்: நான் உங்களுக்கு எதைக் கொடுக்கவேண்டுமென்று வாஞ்சிக்கிறீர்கள் என்றார்.

3 அவர்கள் அவரிடத்தில்: ஆண்டவரே, நாங்கள் இந்த சபையை எந்த நாமத்தினாலே அழைக்க வேண்டுமென்று நீர் எங்களுக்குச் சொல்லவேண்டுமென்று விரும்புகிறோம்; ஏனெனில் இந்த விஷயத்தைக் குறித்து ஜனங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் இருக்கின்றன, என்றார்கள்.

4 கர்த்தர் அவர்களை நோக்கி: மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இக்காரியத்தினாலே ஜனங்கள் ஏன் முறுமுறுத்து வாக்குவாதம் பண்ணவேண்டும்?

5 என்னுடைய நாமமாகிய கிறிஸ்துவின் நாமத்தை உங்கள்மேல் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லுகிற வேத வார்த்தைகளை அவர்கள் வாசிக்கவில்லையா? ஏனெனில் கடைசி நாளின்போது இந்த நாமத்தின்படியே நீங்கள் அழைக்கப்படுவீர்கள்

6 என் நாமத்தை தன் மீது எடுத்துக்கொண்டு, முடிவுபரியந்தம் நிலைநிற்கிறவன் எவனோ, அவனே கடைசிநாளின்போது இரட்சிக்கப்படுவான்.

7 ஆதலால் நீங்கள் எதைச் செய்தாலும், அதை என் நாமத்தினாலே செய்யுங்கள்; ஆதலால் நீங்கள் சபையை என் நாமத்தினால் அழையுங்கள்; பிதா என் நிமித்தம் சபையை ஆசீர்வதிக்கும்படியாக, நீங்கள் என் நாமத்தில் பிதாவினிடத்தில் விண்ணப்பம் பண்ணுங்கள்.

8 என் நாமத்தினால் அழைக்கப்பட்டாலொழிய அது எப்படி என் சபையாக முடியும்? ஏனெனில் ஒரு சபை மோசேயின் நாமத்தினால் அழைக்கப்பட்டால் அது மோசேயின் சபையாகுமே; அல்லது அது ஒரு மனுஷனுடைய நாமத்தினால் அழைக்கப்பட்டால், அது மனுஷனின் சபையாகுமே. ஆனால் அது என் சுவிசேஷத்தின் மேல் கட்டப்பட்டிருந்தால், என் நாமத்தினால் அது அழைக்கப்பட்டால், அப்பொழுது அது என் சபையாயிருக்கும்.

9 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் என் சுவிசேஷத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிறீர்கள்; ஆதலால் நீங்கள் விண்ணப்பம் பண்ணுகிற காரியம் எதுவாயிருந்தாலும், என் நாமத்தினாலே கூப்பிடுங்கள். நீங்கள் சபைக்காக பிதாவிடம் விண்ணப்பம் பண்ணினால், அது என் நாமத்தினாலேயானால் பிதா உங்களுக்குச் செவிகொடுப்பார்.

10 சபையானது என் சுவிசேஷத்தின்மேல் கட்டப்பட்டிருந்தால், பிதா தம்முடைய சுயகிரியைகளை அதில் விளங்கப்பண்ணுவார்.

11 ஆனால் அது என் சுவிசேஷத்தின்மேல் கட்டப்படாமல், மனுஷரின் கிரியைகளின்மேலோ, அல்லது பிசாசின் கிரியைகளின்மேலோ கட்டப்பட்டிருந்தால் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்கள் தங்கள் கிரியைகளில் கொஞ்சகாலம் மகிழ்ந்திருப்பார்கள், சீக்கிரமாய் முடிவு வரும்போது, அவர்கள் வெட்டப்பட்டு திரும்பிவரமுடியாத இடமாகிய அக்கினியினுள் போடப்படுவார்கள்.

12 ஏனெனில் அவர்களுடைய கிரியைகள் அவர்களைப் பின்தொடர்கிறது. ஏனெனில் அவர்களின் கிரியைகளின் நிமித்தமே அவர்கள் வெட்டப்படுகிறார்கள்; ஆதலால் நான் உங்களுக்குச் சொன்னவைகளை நினைவுகூருங்கள்.

13 இதோ, நான் என் சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். நான் உங்களுக்குக் கொடுத்த சுவிசேஷம் இதுவே, என் பிதா என்னை அனுப்பினதினிமித்தம், என் பிதாவினுடைய சித்தத்தை செய்யவே நான் உலகத்திற்கு வந்தேன்.

14 நான் சிலுவையில் உயர்த்தப்படவும், நான் சிலுவையின்மேல் உயர்த்தப்பட்ட பின்பு, நான் எல்லா மனுஷரையும் என்னிடத்தில் இழுக்கும்படியாகவும், மனுஷரால் நான் உயர்த்தப்பட்டதுபோல, பிதாவினால் மனுஷரும் உயர்த்தப்பட்டு, எனக்கு முன்பாக நின்று, தங்களுடைய கிரியைகள் நன்மையானவையோ, அல்லது தீமையானவையோவென்று நியாயந்தீர்க்கப்படும் பொருட்டே என் பிதா என்னை அனுப்பினார்.

15 இதற்காகவே நான் உயர்த்தப்பட்டிருக்கிறேன். ஆதலால் எல்லா மனுஷரும் அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்க்கப்படும்பொருட்டு பிதாவின் வல்லமையினாலே அவர்களை என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன்.

16 மனந்திரும்பி என் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுகிற எவனும் நிரப்பப்படுவான்; அவன் முடிவுபரியந்தம் நிலைநிற்பானெனில், இதோ, நான் உலகத்தை நியாயந்தீர்க்க நிற்கும் அந்நாளிலே, என் பிதாவிற்கு முன்பாய் அவனை குற்றமற்றவனாய்க் கருதுவேன்.

17 முடிவுபரியந்தம் நிலைநிற்காதவனே வெட்டப்பட்டு அக்கினியினுள் போடப்படுவான். அதிலிருந்து பிதாவின் நியாயத்தின் நிமித்தம் அவர்கள் ஒருபோதும் திரும்பவே முடியாது.

18 அவர் மனுபுத்திரருக்குக் கொடுத்த வார்த்தை இதுவே. இந்த நோக்கத்திற்காகவே அவர் தாம் கொடுத்த வார்த்தைகளை நிறைவேற்றுகிறார், அவர் பொய்யுரைக்காமல், தம்முடைய எல்லா வார்த்தைகளையும் நிறைவேறப் பண்ணுகிறார்.

19 அசுத்தமான ஒன்றும் அவருடைய ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியாது; ஆதலால் தங்களுடைய விசுவாசத்தினிமித்தமும், தங்களுடைய சகல பாவங்களிலிருந்தும் மனந்திரும்பியதினிமித்தமும், முடிவுபரியந்தம் தங்களுடைய விசுவாசத்தினிமித்தமும், என் இரத்தத்தால் தங்களுடைய வஸ்திரங்களைக் கழுவியோரைத் தவிர வேறொருவரும் அவருடைய இளைப்பாறுதலினுள்ளே பிரவேசிப்பதில்லை.

20 இப்பொழுது இதுவே கட்டளையாயிருக்கிறது: பூமியின் கடையாந்தரங்களே, எனக்கு முன்பாகக் கடைசி நாளில் கறைதிரையற்றவர்களாய் நிற்கும்படிக்கு, நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதினாலே சுத்திகரிக்கப்படும்படிக்கு, நீங்கள் மனந்திரும்பி என்னிடத்தில் வந்து என் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.

21 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இதுவே என் சுவிசேஷம், என் சபையிலே நீங்கள் செய்யவேண்டியவைகளை அறிந்திருக்கிறீர்கள்; ஏனெனில் நான் செய்யக் கண்ட கிரியைகளை நீங்களும் செய்வீர்களாக; ஏனெனில் நான் செய்யக் கண்டவைகளை நீங்களும் செய்வீர்களாக.

22 ஆதலால் இவைகளை நீங்கள் செய்வீர்களானால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள், நீங்கள் கடைசி நாளின்போது உயர்த்தப்படுவீர்கள்.

23 தவிர்க்கப்பட்டவைகளைத் தவிர, நீங்கள் கண்டதும் கேட்டதுமானவைகளை எழுதுங்கள்.

24 சம்பவித்தவைகள் எழுதப்பட்டிருக்கிறதைப் போல, சம்பவிக்கப்போகிற இந்த ஜனங்களினுடைய கிரியைகளையும் எழுதுங்கள்.

25 ஏனெனில் இதோ, எழுதப்பட்ட புஸ்தகங்களிலிருந்தும், எழுதப்படப் போகிறவைகளிலிருந்தும், இந்த ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள், ஏனெனில் அவைகளினாலே அவர்களுடைய கிரியைகள் மனுஷருக்குத் தெரிவிக்கப்படும்.

26 இதோ, அனைத்தும் பிதாவினால் எழுதப்பட்டிருக்கிறது; ஆதலால் எழுதப்படப் போகிற புஸ்தகங்களினாலே உலகம் நியாயந்தீர்க்கப்படும்.

27 நான் உங்களுக்குக் கொடுக்கப்போகிறதும், நியாயமானதாய் இருக்கப்போகிறதுமான, நியாயத்தீர்ப்பிற்கேற்ப இந்த ஜனங்களுக்கு நீங்கள் நியாயாதிபதிகளாக இருப்பீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். ஆதலால் நீங்கள் எத்தகைய மனுஷராய் இருக்க வேண்டும்? மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்போலவே இருக்கவேண்டும்.

28 இப்பொழுது நான் பிதாவினிடத்திற்குப் போகிறேன். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் நீங்கள் கேட்கிற காரியங்கள் எதுவாய் இருந்தாலும், உங்களுக்குக் கொடுக்கப்படும்.

29 ஆதலால், கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனெனில் கேட்கிறவன் பெற்றுக்கொள்கிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

30 இப்பொழுதும், இதோ, உங்களினிமித்தமும், இந்த தலைமுறையினிமித்தமும், என் சந்தோஷம் பூரணப்பட்டிருக்குமளவிற்கு மிகுதியாயிருக்கிறது; ஆம், உங்கள் நிமித்தமும், இந்த தலைமுறையினிமித்தமும், பிதாவும் பரிசுத்த தூதர்கள் யாவரும் மகிழ்ந்திருக்கிறார்கள்; ஏனெனில் அவர்களில் ஒருவரும் தொலைந்து போகிறதில்லை.

31 இதோ, நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று மனதாயிருக்கிறேன்; அவர்கள் என்று நான் சொல்லும்போது, இந்தத் தலைமுறையினரில் இப்பொழுது உயிரோடு இருப்பவர்களைக் குறிப்பிடுகிறேன்; அவர்களில் ஒருவனும் தொலையவில்லை; அவர்களில் என் சந்தோஷம் பூரணப்பட்டிருக்கிறது.

32 ஆனால் இதோ, இந்தத் தலைமுறையிலிருந்து நான்காவது தலைமுறைக்காக நான் துக்கிக்கிறேன். ஏனெனில் கேட்டின் மகனைப்போலவே, அவர்களும் அவனால் சிறைபிடிக்கப்பட்டுப் போகிறார்கள்; ஏனெனில் அவர்கள் என்னை வெள்ளிக்காகவும், பொன்னிற்காகவும், பொட்டுப்பூச்சி அரிக்கிறதும், திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறவைகளுக்காவும் விற்பார்கள். அந்நாளிலே அவர்களுடைய கிரியைகளை அவர்களின் சொந்த சிரசுகளின்மேல் திருப்பும்படியாக அவர்களைச் சந்திப்பேன்.

33 அந்தப்படியே, இயேசு இவைகளைச் சீஷர்களுக்குச் சொல்லிமுடித்த பின்பு, அவர் தமது சீஷர்களை நோக்கி: இடுக்கமான வாசல் வழியே உட்பிரவேசியுங்கள்; ஏனெனில் ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழிநெருக்கமுமாய் இருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். மரணத்திற்குப் போகிற வாசலோ விரிவும், வழிவிசாலமுமாயிருக்கிறது. ஒரு மனுஷனும் கிரியை நடப்பிக்க முடியாத இரவு வரும்வரைக்கும் அதன் வழியே அநேகர் பிரயாணப்படுவார்கள்.