வாருங்கள், ஒரு தீர்க்கதரிசியின் குரலைக் கேளுங்கள்
ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் குரலைக் கேட்டு, கவனம் கொள்ளும் பழக்கத்தை நமது வாழ்க்கையில் திடமாக்கும்போது, நாம் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட நித்திய ஆசீர்வாதங்களை அறுவடை செய்வோம்.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையைப்பற்றிப் பேசும்போது, கர்த்தர் அறிவித்தார்,
“மீண்டும் சபை முழுவதற்கும் தலைமை தாங்குவதும் மோசேயைப் போலிருப்பதும், பிரதான ஆசாரியத்துவத்தின் தலைவரின் கடமையாயிருக்கிறது,
“.......ஆம், சபையின் தலைமை மீது அவர் அருளுகிற தேவனின் சகல வரங்களையும் கொண்டிருந்து, ஞானதிருஷ்டிக்காரராக, வெளிப்படுத்துபவராக, மொழிபெயர்ப்பாளராக, மற்றும் தீர்க்கதரிசியாக இருக்க” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:91–91}; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது)
அவருடைய தீர்க்கதரிசிகளின் மேல் தேவனுடைய சில வரங்களை பார்க்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். அத்தகைய பரிசுத்த அனுபவம் ஒன்றை உங்களோடு நான் பகிர்ந்துகொள்ளட்டுமா? என்னுடைய தற்போதைய அழைப்புக்கு முன்பு, வருங்கால ஆலய மனைகளை கண்டுபிடிப்பதிலும் சிபாரிசு செய்வதிலும் நான் உதவினேன். செப்டம்பர் 11, 2001க்குப் பின்னர், அ.ஐ.நா(U.S) எல்லைகளைக் கடப்பது அதிகம் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, சீட்டல் வாஷிங்டன் ஆலயத்திற்கு போகும்போது, வான்கூவரிலிருந்து கடப்பதற்கு அநேக அங்கத்தினர்களுக்கு இரண்டு முதல் மூன்று மணிநேரங்களாகின. வான்கூவரில் ஒரு ஆலயம், சபையின் அங்கத்தினர்களை ஆசீர்வதிக்கும் என அந்த நேரத்தில் சபைத் தலைவராயிருந்த தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி ஆலோசனையளித்தார். மனை தேடுதல் அங்கீகரிக்கப்பட்டு, சபைக்குச் சொந்தமான பல சொத்துக்களை ஆய்வு செய்தபின்பு, சபைக்குச் சொந்தமில்லாத பிற மனைகளும் விசாரிக்கப்பட்டன.
டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலைக்கு மிக அருகில் மதம் சார்ந்தவைகளுக்கான மண்டலத்துக்கு அருகிலிருந்த ஒரு அழகான மனை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சொத்து போக்குவரத்துக்கு எளிதாக இருந்தது, அழகான கனடா பைன் மரங்களால் நிரப்பப்பட்டிருந்தது. கடந்துபோகிற ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படியான முக்கியமான இடமாயிருந்தது.
மாதாந்திர ஆலய மனை மற்றும் குழு கூட்டதில் படங்களுடனும் வரைபடங்களுடனும் மனையை நாங்கள் சமர்ப்பித்தோம். அதை ஒப்பந்தத்தின் கீழ் வைக்குமாறும் தேவையான ஆய்வுகளை நிறைவுசெய்யும்படியும் தலைவர் ஹிங்க்லி அங்கீகரித்தார். ஆய்வுகள் நிறைவடைந்தனவென்றும், மனை வாங்குவதை தொடர ஒப்புதல் கோருவதாகவும் அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாங்கள் குழுவுக்கு திரும்ப அறிக்கையளித்தோம். எங்களுடைய அறிக்கையைக் கேட்ட பின்பு தலைவர் ஹிங்க்லி சொன்னார், “நான் அந்த மனையைப் பார்க்கவேண்டுமென உணர்கிறேன்.”
அந்த மாதத்தின் பிற்பகுதியில், கிறிஸ்துமஸூக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர், தலைவர் ஹிங்க்லி, தலைவர் தாமஸ் எஸ். மான்சன் மற்றும் ஆலயத்தின் கட்டிட வடிமைப்பாளர் பில் வில்லியம்ஸூடன் நாங்கள் வான்கூவருக்குச் சென்றோம். உள்ளூர் பிணையத் தலைவர் பால் கிறிஸ்டென்சனை நாங்கள் சந்தித்தோம், மனைக்கு அவர் எங்களை அழைத்துச் சென்றார். அந்த நாளில் அந்த இடம் சிறிது ஈரமாகவும், மூடுபனியாகவுமிருந்தது, ஆனால் தலைவர் ஹிங்க்லி வாகனத்திலிருந்து துள்ளிக்குதித்து இறங்கி மனை முழுவதிலும் நடக்க ஆரம்பித்தார்.
மனையில் சிறிது நேரத்தை செலவழித்த பின்னர், பார்த்து வைத்திருக்கிற பிற சில மனைகளை அவர் பார்க்க விரும்புகிறாரா என தலைவர் ஹிங்க்லியை நான் கேட்டேன். அவர், ஆம் என்றார், அதை அவர் விரும்பினார். பாருங்கள், பிற மனைகளை பார்ப்பதால் அவற்றின் தன்மைகளை நம்மால் ஒப்பிட்டுப் பார்க்கமுடியும்.
பிற சொத்துக்களைப் பார்க்க, வான்கூவரை ஒரு பெரிய சுற்று சுற்றி, இறுதியாக பழைய மனைக்கே வந்து சேர்ந்தோம். தலைவர் ஹிங்க்லி சொன்னார், “இது ஒரு அழகான மனை.” பின்னர் அவர் கேட்டார், “சுமார் கால் மைல் (0.4 கி.மீ) தூரத்திலிருந்த சபைக்குச் சொந்தமான கூடுமிடத்திற்கு நாம் போகலாமா?”
“நிச்சயமாக தலைவரே”, நாங்கள் பதிலளித்தோம்.
நாங்கள் வாகனத்துக்கு வந்து பக்கத்திலுள்ள கூடுமிடத்திற்கு வாகனத்தில் சென்றோம். ஜெபக்கூடத்தை நாங்கள் வந்தடைந்தபோது, தலைவர் ஹிங்க்லி சொன்னார், “இங்கே இடது பக்கம் திரும்புங்கள்.” அறிவுரைத்தபடி நாங்கள் திரும்பி தெருவழியே சென்றோம். தெரு சிறிது ஏற்றமாகப் போக ஆரம்பித்தது.
வாகனம் உயரத்தின் உச்சியை அடைந்தபோது, தலைவர் ஹிங்க்லி சொன்னார், “வாகனத்தை நிறுத்துங்கள், வாகனத்தை நிறுத்துங்கள்.” பின்னர் வலது பக்கமிருந்த ஒரு துண்டு நிலத்தை சுட்டிக்காட்டிச் சொன்னார், “இந்த நிலம் எப்படியிருக்கிறது? இங்குதான் ஆலயம் வரப்போகிறது. இங்குதான் ஆலயம் வருவதற்கு கர்த்தர் விரும்புகிறார். இந்த மனையை உங்களால் வாங்கமுடியுமா?”
இந்த சொத்தை நாங்கள் பார்க்கவில்லை. அது முக்கிய சாலையிலிருந்து மிகத் தள்ளியும் தூரமாகவுமிருந்தது, மேலும் இது விற்பனைக்கான பட்டியலிலில்லை. நாங்கள் பதிலளித்தபோது எங்களுக்குத் தெரியாது, தலைவர் ஹிங்க்லி அந்த நிலத்தை சுட்டிக்காட்டி மீண்டும் சொன்னார், “இங்குதான் ஆலயம் வரப்போகிறது”. நாங்கள் ஒரு சிலநிமிடங்கள் இருந்துவிட்டு வீடு திரும்ப விமானநிலையத்திற்குச் சென்றோம்.
அடுத்த நாள், சகோதரர் வில்லியம்ஸூம் நானும் தலைவர் ஹிங்க்லியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டோம். அனைத்தையும் அவர் ஒரு துண்டுக்காகிதத்தில் வரைந்து வைத்திருந்தார். சாலைகள், ஜெபக்கூடம், இங்கே இடது பக்கம் திரும்பவும், ஆலயத்திற்கான இடத்தில் x குறி. நாங்கள் எதைக் கண்டுபிடித்தோம் என அவர் கேட்டார். இதைவிட அதிக பிரச்சினையான இடத்தை அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை என நாங்கள் அவரிடம் கூறினோம். தனித்தனியாக மூன்றுபேர் அந்த இடத்திற்கு உரிமையாளர்கள். ஒருவர் கனடாவில், ஒருவர் இந்தியாவில், ஒருவர் சீனாவில் இருந்தனர். மத மண்டலமாக்கப்படும் தேவை அந்த இடத்தில் இல்லை.
“நல்லது, உங்களால் முடிந்ததை சிறப்பாகச் செய்யுங்கள்” என அவர் சொன்னார்.
பின்னர் அற்புதங்கள் நடந்தன. சிலமாதங்களுக்குள் அந்த மனையை நாங்கள் சொந்தமாக்கினோம், பின்னர் ஆலயத்தைக் கட்டுவதற்கு, பிரிட்டிஷ் கொலம்பியாவின் லாங்லே நகரம், அனுமதி வழங்கியது.
இந்த அனுபவத்தைப்பற்றி சிந்திக்கையில், சகோதரர் வில்லியம்ஸூக்கும் எனக்கும் சம்பிராதயக் கல்வியும், மனை விவகாரத்தைப்பற்றியும் ஆலய வடிவமைப்பிலும் பல ஆண்டுகள் அனுபவம் உண்டு, தலைவர் ஹிங்க்லிக்கு அத்தகைய சம்பிராதய பயிற்சிகள் எதுவுமில்லை, ஆனால் தீர்க்கதரிசன ஞானதிருஷ்டியாகிய மிக அதிகமான ஒன்று அவருக்கிருந்தது என்ற உணர்வினால் நான் தாழ்மையடைந்தேன். எங்கு தேவனின் ஆலயம் நிற்கவேண்டுமென்று அவரால் கற்பனை செய்யமுடிந்தது.
ஒரு ஆலயத்தைக் கட்டுமாறு இந்த ஊழியக்காலத்தில் ஆரம்ப பரிசுத்தவான்களுக்கு கர்த்தர் கட்டளையிட்டபோது, அவர் அறிவித்தார்,
“ஆனால் அவர்களுக்கு நான் காட்டப்போகிற மாதிரியின்படி என்னுடைய நாமத்தில் ஒரு வீடு கட்டப்படுவதாக.
“... நான் காட்டுகிற மாதிரியின்படி என்னுடைய ஜனங்கள் அதைக் கட்டவில்லையென்றால் … , அவர்களின் கைகளில் நான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 115:14–15).
ஆரம்ப பரிசுத்தவான்களுக்கிருந்ததைப்போலவே இன்று நமக்குமிருக்கிறது. நமது நாட்களில் எதனால் தேவனின் இராஜ்ஜியம் வழிநடத்தப்படவேண்டுமென்பதில் சபை மாதிரிகளை, சபைத் தலைவருக்குக் கர்த்தர் வெளிப்படுத்தினார், தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். ஒரு தனிப்பட்ட மட்டத்தில், நமது நடத்தை, கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுவதுவாய் இருப்பதைப்போல, எவ்வாறு நமது வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் வழிநடத்தவேண்டுமென அவர் வழிகாட்டுதலைக் கொடுக்கிறார்.
அது, உள்ளாக வேண்டிய புயல்களுக்கும் பேரழிவுகளுக்கும் ஈடுகொடுத்து நிற்பதை உறுதிசெய்ய ஒவ்வொரு ஆலயத்தின் அஸ்திபாரத்தையும் ஆயத்தப்படுத்துவது சம்பந்தப்பட்ட முயற்சிகளைப்பற்றி ஏப்ரல் 2013ல் நான் பேசினேன். ஆனால் அஸ்திபாரமென்பது ஆரம்பம் மட்டுமே. ஒரு ஆலயமென்பது, முன்கூட்டியேயுள்ள மாதிரிகளின்படி ஒன்றாகப் பொருத்தப்பட்ட பல கட்டிட தொகுதிகள் அடங்கியுள்ளது. கர்த்தரால் போதிக்கப்பட்டதைப்போல கட்டுவதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சித்துக்கொண்டிருக்கிற (1 கொரிந்தியர் 3:16–17 பார்க்கவும்) நமது வாழ்க்கை, ஆலயங்களாக மாறுவதாயிருந்தால், நமது வாழ்க்கையை அழகாகவும், கம்பீரமாகவும், உலகத்தின் புயல்களுக்கு எதிர்த்து நிற்கும்படியாகவும் “எந்த கட்டிட தொகுதிகளை நாம் அமைப்போம்?” என்று நியாயமாக நம்மையே நாம் கேட்கமுடியும்.
மார்மன் புஸ்தகத்தில் இந்த கேள்விக்கு நாம் பதிலைக் காணமுடியும். “மார்மன் புஸ்தகம் பூமியின் மீதிருக்கும் எந்த ஒரு புஸ்தகத்தைவிடவும் மிகவும் சரியானதென்றும் நம் மதத்திற்கு முக்கியக்கல்லாக இருக்கிறதென்றும், ஒரு மனிதன் மற்ற எந்த ஒரு புஸ்தகத்தைக்காட்டிலும் இதனுடைய போதனைகளில் நிலைத்திருந்தால் தேவனின் அருகாமைக்குச் செல்லுதல் முடியும்” (மார்மன் புஸ்தகத்திற்கு முன்னுரை) என மார்மன் புஸ்தகத்தைப்பற்றி தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சொன்னார். மார்மன் புஸ்தகம் தேவனின் வார்த்தை என்று பரிசுத்த ஆவியிடமிருந்து ஒரு தெய்வீக சாட்சியைப் பெறுகிறவர்கள், இயேசு கிறிஸ்து உலகத்தின் இரட்சகரென்றும், ஜோசப் ஸ்மித் வெளிப்படுத்துபவரென்றும், மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசி என்றும் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை மீண்டும் பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட கர்த்தரின் இராஜ்ஜியமென்றும் அதே வல்லமையால் அறிய வருவார்கள் என மார்மன் புஸ்தகத்தின் முன்னுரையில், நாம் போதிக்கப்பட்டோம்.
பின்னர், நமது தனிப்பட்ட விசுவாசத்திற்கும் சாட்சிக்கும் அத்தியாவசியமான கட்டிட கற்களில் சில இவை.
-
உலகத்தின் இரட்சகர் இயேசு கிறிஸ்து.
-
மார்மன் புஸ்தகம் தேவனின் வார்த்தை.
-
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை பூமியில் தேவனின் இராஜ்ஜியம்.
-
ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசி, இன்று பூமியில் ஜீவிக்கிற தீர்க்கதரிசிகள் நமக்கிருக்கிறார்கள்.
தலைவர் நெல்சன் ஒரு அப்போஸ்தலராக முதலில் அழைக்கப்பட்டதிலிருந்து அவர் கொடுத்த ஒவ்வொரு பொது மாநாட்டு உரையையும் சமீப மாதங்களில், நான் கேட்டிருக்கிறேன். இந்த பயிற்சி என்னுடைய வாழ்க்கையை மாற்றியது. நான் ஆராய்ந்து, தியானித்தபோது, 34 ஆண்டுகளாக தலைவர் நெல்சனின் சேகரிக்கப்பட்ட ஞானம், தெளிவான, சீரான கருப்பொருள்கள் அவருடைய போதனைகளிலிருந்து வெளிப்பட்டன. இந்த கருப்பொருள்கள் ஒவ்வொன்றும் குறிப்பிடப்பட்டதைப்போல அந்த கட்டிட கற்களுக்கு சம்பந்தப்படுகிறது, அல்லது நமது தனிப்பட்ட ஆலயங்களுக்கு மற்றொரு முக்கிய கட்டிட கல்லாயிருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புருதல், பாவங்களின் மீட்புக்காக ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரம், மரித்தவர்களுக்கான மீட்பு மற்றும் ஆலயப்பணி, ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரித்தல், மனதில் முடிவை நினைத்து ஆரம்பித்தல், உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருத்தல் அவற்றில் அடங்கும். அவைகள் அனைத்தையும் அன்புடனும் பக்தியுடனும் தலைவர் நெல்சன் பேசினார்.
சபைக்கும் நமது வாழ்க்கைக்கும் தலையான மூலைக்கல்லும், கட்டிட கல்லும் இயேசு கிறிஸ்துவே. இது அவருடைய சபை. தலைவர் நெல்சன் அவருடைய தீர்க்கதரிசி. தலைவர் நெல்சனின் போதனைகள் நமது வாழ்க்கையின் பலனையும் இயேசு கிறிஸ்துவின் பாத்திரத்தையும் சாட்சியளித்து, வெளிப்படுத்துகிறது. இரட்சகரின் இயல்பையும் அவருடைய ஊழியத்தையும்பற்றி அவர் நேசத்தோடும் அறிந்திருந்தும் பேசுகிறார். யாருக்குக் கீழ் அவர் சேவைசெய்கிறாரோ, அந்த, சபையின் தலைவர்களான, ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் தெய்வீக அழைப்பைப்பற்றி அவர் அடிக்கடியும் சிரத்தையோடும் சாட்சி பகருகிறார்.
இப்போது, இன்று பூமியின்மேல் கர்த்தரின் ஜீவிக்கிற தீர்க்கதரிசியாக அவரை ஆதரிப்பது நமது சிலாக்கியம். நமது ஏற்றுகொள்ளலையும் ஆதரவையும் வெளிப்படுத்த நமது கைகளை சதுரவடிவில் உயர்த்தும் தெய்வீக மாதிரியின் மூலமாக சபைத் தலைவர்களை ஆதரிப்பதில் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு இதை நாம் செய்தோம். ஆனால், உண்மையான ஆதரித்தல் இந்த சரீர அடையாளத்திற்கும் மிக அப்பால் போகிறது. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:22ல் குறிப்பிடப்பட்டதைப்போல, நம்பிக்கை, விசுவாசம், சபையின் ஜெபத்தால் பிரதான தலைமை, ஆதரிக்கப்படுகிறார்கள். அவருடைய வார்த்தைகளில் நம்பிக்கை வைப்பதின் மாதிரியை நாம் அபிவிருத்தி செய்யும்போது, அவைகளின்படி செயல்பட விசுவாசம் வைக்கும்போது, பின்னர் அவர் மீது தொடர்ந்து கர்த்தரின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்கும்போது ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளை முழுமையாகவும் உண்மையாகவும் நாம் ஆதரிக்கிறோம்.
தலைவர் ரசல் எம். நெல்சனைப்பற்றி நான் நினைக்கும்போது, “என்னுடைய சத்தத்திற்கும், என்னுடைய ஜனங்களை வழிநடத்த நான் நியமித்த என்னுடைய ஊழியக்காரர்களின் சத்தத்திற்கும் என்னுடைய ஜனங்கள் செவிகொடுத்தால், இதோ, அவர்களுடைய இடங்களைவிட்டு அவர்கள் அகன்றுபோகமாட்டார்கள் என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124:45) என்று இரட்சகர் சொன்ன அவருடைய வார்த்தைகளில் நான் ஆறுதலடைகிறேன்..
ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளைக் கவனித்தலும், அவர்களுக்குச் செவிமடுத்தலும் நமது வாழ்க்கையில் ஆழ்ந்த, வாழ்க்கை மாற்றத்தின் விளைவுகளையும் கூட ஏற்படுத்தும். நாம் பலப்படுத்தப்படுகிறோம். நாம் அதிகமாக உறுதியாயும் தன்னம்பிக்கையாயுமிருக்கிறோம். நாம் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறோம். கர்த்தரின் அன்பை நாம் உணருகிறோம். ஒரு நோக்கத்துடன் எவ்வாறு நமது வாழ்க்கையை நடத்துவதென்று நாம் அறிவோம்.
தலைவர் ரசல் எம். நெல்சனையும், தீர்க்கதரிசிகளாக, ஞானதிருஷ்டிக்காரர்களாக, வெளிப்படுத்துபவர்களாக அழைக்கப்பட்ட மற்றவர்களையும் நான் நேசிக்கிறேன், ஆதரிக்கிறேன். அவருடைய தலையின்மேல் கர்த்தர் அருளிய வரங்கள் அவரிடமிருக்கிறது என நான் சாட்சியளிக்கிறேன், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் குரலைக் கேட்டு, செவிகொடுத்தலின் பழக்கத்தை நமது வாழ்க்கையில் நாம் உறுதி செய்யும்போது, நமக்காக கர்த்தருடைய தெய்வீக மாதிரியின்படி நமது வாழ்க்கை கட்டப்படுமென்றும், வாக்களிக்கப்பட்ட நித்திய ஆசீர்வாதங்களை நாம் அறுவடை செய்வோமென்றும் நான் சாட்சியளிக்கிறேன். இந்த அழைப்பு எல்லோருக்கும் விடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள், தீர்க்கதரிசியின் குரலைக் கேளுங்கள், ஆம், கிறிஸ்துவண்டை வந்து வாழ்ந்திருங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.