சுயநலமற்ற சேவையின் மகிழ்ச்சி
அவருக்கும் மற்றவர்களுக்கும் அன்போடு சேவை செய்வோமென்றும் சகல காரியங்களிலும் அவருடைய சித்தத்தின்படி செய்வோமென்றும் பரலோகத்திலுள்ள நமது பிதாவுக்கு நாம் வாக்களித்திருக்கிறோம்.
கடந்த பொது மாநாட்டிற்குப் பின்னர், அதே கேள்வியுடன் அநேக மக்கள் என்னை அணுகினார்கள். “அந்த நாற்காலிகள் வசதியாயிருந்தனவா?” ஒவ்வொரு சமயத்திலும் என்னுடைய பதில் ஒன்றாகவே இருந்த்து. “நீங்கள் பேசவேண்டியதில்லாதிருந்தால் அந்த நாற்காலிகள் மிக வசதியாயிருக்கின்றன.” இது உண்மை, இல்லையா? இந்த மாநாட்டில் எனது நாற்காலி அவ்வளவு வசதியாயில்லை, ஆனால், இந்த மாலை நேரத்தில் உங்களோடு பேசிக்கொண்டிருப்பதன் ஆசீர்வாதத்திற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவளாயிருக்கிறேன்.
நாம் சேவை செய்துகொண்டிருக்கும்போது, சில நேரங்களில், வெவ்வேறு இருக்கைகளில் நாம் இருக்கவேண்டியதிருக்கலாம். சில மிக வசதியுள்ளவையாயிருக்கும், சில வசதியில்லாதவையாயிருக்கும், ஆனால் அவருக்கும் மற்றவர்களுக்கும் அன்போடு சேவை செய்வோமென்றும் சகல காரியங்களிலும் அவருடைய சித்தத்தின்படி செய்வோமென்றும் பரலோகத்திலுள்ள நமது பிதாவுக்கு நாம் வாக்களித்திருக்கிறோம்.
“சில வருடங்களுக்கு முன் நீங்கள் ‘தேவனுடைய ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும்போது,’ [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4:2], என்றென்றுமுள்ள மகத்தான பயணத்தில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள் என சபையின் இளைஞர்கள் கற்றனர். அவருடைய பணியை தேவன் துரிதப்படுத்துவதில் நீங்கள் உதவிக்கொண்டிருக்கிறீர்கள், இது ஒரு பெரிய, மகிழ்ச்சியான, அற்புதமான அனுபவமாக இருக்கிறது”. 1 எந்த வயதிலுமுள்ள எல்லோருக்கும் இந்த பயணம் கிடைக்கும், “உடன்படிக்கையின் பாதை” என நமது அன்பான தீர்க்கதரிசி பேசிய அதன் வழியே நம்மைக் கொண்டுபோகிற பயணமாகவும் இது இருக்கிறது. 2
துரதிருஷ்டவசமாக, எப்படியாயினும், “இன்று நான் யாருக்கு உதவமுடியும்?” அல்லது “என்னுடைய அழைப்பில் கர்த்தருக்கு எவ்வாறு நான் சிறப்பாக ஊழியம் செய்யமுடியும்?” அல்லது “எனக்குள்ள எல்லாவற்றையும் நான் கர்த்தருக்குக் கொடுக்கிறேனா?” என கேட்பதற்குப் பதிலாக “எனக்கு இதில் என்ன இருக்கிறது?” என தொடர்ந்து மக்கள் கேட்கிற ஒரு சுயநலமான உலகத்தில் நாம் வாழ்கிறோம்.
சுயநலமற்ற சேவைக்கு, என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய எடுத்துக்காட்டு, சகோதரி விக்டோரியா அன்டோனியெட்டி. நான் அர்ஜென்டினாவில் வளர்ந்து வந்தபோது என்னுடைய கிளையில் ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களில் ஒருவர் விக்டோரியா. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலையிலும் ஆரம்ப வகுப்பில் நாங்கள் ஒன்றுகூடும்போது, ஒரு சாக்லேட் கேக்கை அவர் எங்களுக்குக் கொண்டுவந்தார். என்னைத்தவிர எல்லோருக்கும் அந்த கேக் மிகவும் பிடிக்கும். சாக்லேட் கேக்கை நான் வெறுத்தேன். என்னோடு கேக்கை பகிர்ந்துகொள்ள அவர் முயற்சி செய்தாலும் அவர் கொடுப்பதை நான் நிராகரித்துவிடுவேன்.
ஒரு நாள் மற்ற பிள்ளைகளுடன் அவர் சாக்லேட் கேக்கைப் பகிர்ந்ததற்குப் பின்னர், “ஆரஞ்ச் அல்லது வெனிலா போன்ற வித்தியாசமான வகையில் நீங்கள் ஏன் கொண்டுவரக்கூடாது?” என நான் அவரிடம் கேட்டேன்.
சிறிது சிரித்த பின்னர் அவர் என்னிடம் கேட்டார், “நீ ஏன் ஒரு சிறிய துண்டை ருசி பார்க்கக்கூடாது? இந்தக் கேக் ஒரு விசேஷித்த மூலப்பொருளால் தயாரிக்கப்பட்டது, இதை நீ சாப்பிட முயற்சித்தால் உனக்கு இது பிடிக்குமென நான் உனக்கு வாக்களிக்கிறேன்!”
நான் சுற்றிலும் பார்த்தேன், கேக்கை எல்லோரும் அனுபவித்து ருசித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது ஆச்சரியமாயிருந்தது. நான் முயற்சித்துப் பார்க்க சம்மதித்தேன். என்ன நடந்ததென உங்களால் யூகிக்கமுடிகிறதா? அது எனக்குப் பிடித்தது! சாக்லேட் கேக்கை ருசித்து அனுபவித்தது அதுதான் முதல் தடவை.
சகோதரி அன்டோனியட்டியின் சாக்லேட் கேக்கில் என்ன இரகசியமான மூலப்பொருளிருந்தது என்பதை அநேக ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நான் கண்டுபிடித்தேன். என்னுடைய பிள்ளைகளும் நானும் ஒவ்வொரு வாரமும் எனது அம்மாவை சந்திப்போம். இந்த சந்திப்புகள் ஒன்றில், சாக்லேட் கேக் துண்டு ஒன்றை அம்மாவும் நானும் சுவைத்துக்கொண்டிருந்தோம். முதல் தடவையாக எவ்வாறு கேக் எனக்குப் பிடிக்க ஆரம்பித்ததென்று அவருக்கு நான் சொன்னேன். மீதியுள்ள கதையை அவர் எனக்கு விவரித்தார்.
என்னுடைய தாய் சொன்னார், “கிறிஸ், விக்டோரியாவிடமும் அவளுடைய குடும்பத்தினரிடமும் போதிய பணவசதி இல்லாமலிருந்தது, ஒவ்வொரு வாரமும் ஆரம்ப வகுப்பிற்கு வருவதற்கு அவளுக்கும் அவளுடைய நான்கு பிள்ளைகளுக்கும் பேருந்திற்கு பயணச்சீட்டு வாங்குவதா அல்லது அவளுடைய ஆரம்ப வகுப்புக்கு கேக் தயாரிக்க பொருட்கள் வாங்குவதா என அவள் தேர்ந்தெடுக்கவேண்டியதிருந்தது. அவள் எப்போதுமே பேருந்தைவிட சாக்லேட் கேக்கையே தேர்ந்தெடுத்து, சீதோஷ்ண நிலையைப் பொருட்படுத்தாமல் ஒரு வழியில் இரண்டு மைல்களுக்கும் [3 கி.மீ] அதிகமாக அவளும் அவளுடைய பிள்ளைகளும் நடந்து சென்றார்கள்.”
அன்றைய தினம் அவருடைய சாக்லேட் கேக்கை நான் அதிகமாக பாராட்டினேன். மிகமுக்கியமாக, விக்டோரியாவின் கேக்கிலிருந்த இரகசியமான மூலப்பொருள் அவர் சேவை செய்தவர்களின்மேல் அவருக்கிருந்த அன்பும் எங்களுக்காக அவருடைய சுயநலமற்ற தியாகமும் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
விக்டோரியாவின் கேக்கைப்பற்றி மீண்டும் நினைத்துப் பார்க்கும்போது, ஆலயத்தின் பொக்கிஷத்தை நோக்கி கர்த்தர் நடந்தபோது அவருடைய சீஷர்களுக்கு அவரால் போதிக்கப்பட்ட பாடத்திலுள்ள சுயநலமற்ற ஒரு தியாகத்தை நினைக்க எனக்குதவுகிறது. கதை உங்களுக்குத் தெரியும். 13 பெட்டகங்கள் அங்கே இருந்ததாகவும் “பெட்டிகளில் பொறிக்கப்பட்டிருந்தவைகளால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த வெவ்வேறு நோக்கங்களுக்காக இவைகளுக்குள் மக்கள் தங்கள் காணிக்கைகளைப் போட்டனர்” என மூப்பர் ஜேம்ஸ் இ. டால்மேஜ் போதித்தார். வெவ்வேறு வகையான மக்களால் உருவாக்கப்பட்டிருந்த நன்கொடையாளிகளின் வரிசைகளை இயேசு கவனித்தார். “நேர்மையின் நோக்கத்தோடு” தங்களுடைய நன்கொடைகளை சிலர் கொடுத்தனர். பார்க்கப்படுவதாகவும், கவனிக்கப்படுவதாகவும், தங்களுடைய நன்கொடைகளுக்காக புகழப்படுகிறதாகவும் நம்பி “அதிகளவில் வெள்ளியையும் தங்கத்தையும் மற்றவர்கள் போட்டனர்”.
“அநேகருக்கு மத்தியில், ஒரு ஏழை விதவை, காசுகள் என்றறியப்பட்ட இரண்டு சிறிய நாணயங்களை காணிக்கைப் பெட்டிகள் ஒன்றில் போட்டாள்; அவளுடைய தொகை அமெரிக்கப் பணத்தில் அரை சென்டுக்கும் குறைவான மதிப்புள்ளதாயிருந்தது. கர்த்தர் தமது சீஷர்களை தம்பக்கம் அழைத்து, வறுமையில் வாடுகிற விதவையிடத்தும் அவளின் செயலிடத்தும் தங்கள் கவனத்தைத் திருப்பச் சொல்லி, சொன்னார், ‘இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப் போட்டார்கள், இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்’ [மாற்கு 12:43–44].”3
அவளுடைய காலத்தில், சமுதாயத்தில் கவனிக்கத்தக்க ஒரு ஸ்தானத்தில் இந்த விதவை இருந்ததாகத் தோன்றவில்லை. உண்மையில் சில மிகமுக்கியமான ஒன்று அவளிடமிருந்தது. அவளுடைய நோக்கங்கள் தூய்மையாயிருந்தன, கொடுப்பதற்கிருந்த எல்லாவற்றையும் அவள் கொடுத்தாள். ஒருவேளை மற்றவர்கள் கொடுத்ததைவிட குறைவாக அவள் கொடுத்தாள், மற்றவர்களைவிட அமைதியாக அவள் கொடுத்தாள், மற்றவர்களைவிட வித்தியாசமாகக் கொடுத்தாள். சிலரின் கண்களில் அவள் கொடுத்தது அற்பமாயிருந்தது, ஆனால் “சிந்தனைகளையும், இருதயத்தின் நோக்கங்களையும் பிரித்தறிகிற” 4 இரட்சகரின் பார்வையில், அவள் தனக்கிருந்த எல்லாவற்றையும் கொடுத்தாள்.
சகோதரிகளே, தயக்கமில்லாமல் நமக்குள்ள எல்லாவற்றையும் கர்த்தருக்கு நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோமா? கர்த்தரை நேசிக்கவும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவும் வளர்ந்துவரும் தலைமுறைகள் கற்றுக்கொள்வதற்காக நமது நேரத்தையும் திறமைகளையும் நாம் தியாகம் செய்கிறோமா? நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும், நமக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கும், பிறவழிகளில் பயன்படக்கூடிய நேரத்தையும் சக்தியையும் அக்கறையுடனும் சிரத்தையுடனும் தியாகம் செய்து நாம் ஊழியம் செய்கிறோமா? தேவனையும் அவருடைய பிள்ளைகளையும் நேசிக்க கொடுக்கப்பட்ட மகத்தான இரண்டு கற்பனைகளின்படி நாம் வாழ்கிறோமா? 5 வழக்கமாக அந்த அன்பு சேவையாக வெளிப்படுகிறது.
“சுயநலமற்ற சேவையில் நமது இரட்சகர் தம்மையே கொடுத்தார். மற்றவர்களுக்கு சேவை செய்யும்படியாக சுயநலமான அக்கறைகளை மறுத்து, நாம் ஒவ்வொருவரும் அவரைப் பின்பற்றவேண்டும் என அவர் போதித்தார்”, என தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்தார்.
அவர் தொடர்ந்தார்,
“மற்றவர்களுக்கான சேவையில் நம்மையே இழப்பதன் ஒரு பிரசித்திபெற்ற எடுத்துக்காட்டு, தங்கள் பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் செய்கிற தியாகம். ஒவ்வொரு பிள்ளையையும் சுமக்கவும் வளர்க்கவும் தாய்மார்கள் வேதனையை அனுபவித்து, தனிப்பட்ட முன்னுரிமைகளையும் வசதிகளையும் இழக்கிறார்கள். ஒரு குடும்பத்தைத் தாங்க, தகப்பன்மார்கள் தங்கள் வாழ்க்கையையும் முன்னுரிமைகளையும் அனுசரிக்கிறார்கள். …
“… மாற்றுதிறனாளிகளான குடும்ப அங்கத்தினர்களையும், வயதான பெற்றோரையும் கவனித்துக்கொள்பவர்களுக்காகவும் நாம் சந்தோஷப்படுகிறோம். இந்த சேவை எதிலுமே, இதில் எனக்கென்ன இருக்கிறதென்ற கேள்வியைக் கேட்பதில்லை? இவை எல்லாவற்றிற்கும், சுயநலமற்ற சேவைக்கு, தனிப்பட்ட சௌகர்யத்தை ஒரு பக்கம் ஒதுக்கிவைப்பதே தேவையாயிருக்கிறது. …
“நாம் பெற்றுக்கொள்வதற்கல்ல, நாம் என்ன கொடுக்கிறோமென்பதற்காக, நாம் செயல்பட்டு, சேவைசெய்யும்போது, நாம் அதிக சந்தோஷமடைகிறோம், அதிக நிறைவுள்ளவர்களாகிறோம் என்ற நித்திய கொள்கையை இவை யாவும் விளக்குகிறது.
“மற்றவர்களுக்கான சுயநலமற்ற சேவையில் நம்மையே இழக்க தேவையான தியாகத்தைச் செய்வதில் அவரைப் பின்பற்ற இரட்சகர் நமக்குப் போதிக்கிறார்.” 6
“ஒருவேளை நமது சிருஷ்டிகருடன் நாம் நேருக்கு நேர் தொடர்பை ஏற்படுத்தும்போது, நீங்கள் ‘எத்தனை பதவி வகுத்தீர்களென’ நாம் கேட்கப்படமாட்டோம், ஆனால் மாறாக, எத்தனை மக்களுக்கு நீங்கள் உதவினீர்களென்று கேட்கப்படுவோம்? உண்மையில், அவருடைய மக்களுக்கு சேவை செய்வதால் அவருக்கு சேவை செய்யும்வரை கர்த்தரை நீங்கள் ஒருபோதும் நேசிக்கமுடியாதென” 7 இதைப்போன்று தலைவர் தாமஸ் எஸ். மான்சன் போதித்தார்.
வேறு வார்த்தைகளிலெனில், சகோதரிகளே, நீங்கள் வசதியான இருக்கைகளில் அமர்ந்திருந்தால் அல்லது பின் வரிசையில் ஒரு துருப்பிடித்த மடக்கு நாற்காலியில் கூட்டம் முடியும்வரை அமர்ந்திருக்க போராடிக்கொண்டிருப்பது பொருட்டல்ல. அழுதுகொண்டிருக்கிற ஒரு குழந்தையை சமாதானப்படுத்த தனிஅறைக்குள் நாம் கால்வைக்க தேவைப்பட்டாலும்கூட அது பொருட்டல்ல. எது பொருட்டாகுமென்றால், சேவை செய்ய ஒரு விருப்பத்துடன் நாம் வருவது, நாம் ஊழியம் செய்கிறவர்களை நாம் கவனித்து சந்தோஷமாக அவர்களை வாழ்த்துவது, அவர்களுக்கு ஊழியம் செய்ய நாம் நியமிக்கப்படாமல் இருந்தாலும் நட்புடன் அவர்களை அணுகி மடக்கு நாற்காலிகளின் வரிசையை அவர்களுக்கு பகிர்ந்து நம்மை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது. அன்புடனும் தியாகத்துடனும் இணைக்கப்பட்ட விசேஷித்த காரியத்துடன் நாம் செய்கிற எல்லாவற்றையும் நாம் செய்யும்போது நிச்சயமாக அது பொருட்டாகும்.
ஒரு வெற்றிகரமான அல்லது அர்ப்பணிப்புள்ள ஆரம்ப வகுப்பு ஆசிரியராக இருக்க ஒரு சாக்லேட் கேக்கை நாம் செய்யவேண்டியதில்லை என்பதை நான் அறிந்தேன், ஏனெனில் இது கேக்கைப்பற்றியதல்ல. இது செயலுக்கு பின்னாலுள்ள அன்பு.
தியாகத்தின் மூலமாக அன்பு பரிசுத்தமாக்கப்பட்டது, ஒரு ஆசிரியரின் தியாகத்தின், இன்னும் அதிகமாக தேவ குமாரனின் நித்திய தியாகத்தின் மூலமாக, என நான் சாட்சியளிக்கிறேன். அவர் ஜீவிக்கிறாரென நான் சாட்சி பகருகிறேன். நான் அவரை நேசிக்கிறேன், அவர் செய்கிறதைப்போல, அன்பு செலுத்தவும் ஊழியம் செய்யும்படியாகவும் சுயநல ஆசைகளை விட்டுவிட விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.