2010–2019
மரித்தவர்களின் மீட்பு பற்றிய தரிசனம்
அக்டோபர் 2018


15:20

மரித்தவர்களின் மீட்பு பற்றிய தரிசனம்

தலைவர் எப். ஸ்மித் கண்ட தரிசனம் உண்மை என நான் சாட்சியளிக்கிறேன். இது உண்மை என ஒவ்வொருவரும் அறிய முடியும் என நான் சாட்சியளிக்கிறேன்.

என் சகோதர சகோதரிகளே, என் செய்தி என் அன்பு மனைவி பார்பரா மரிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே ஆயத்தப்படுத்தப்பட்டது. என் குடும்பமும் நானும் உங்கள் அன்புக்காகவும் உங்கள் தயவான அணுகுதலுக்கும் நன்றி செலுத்துகிறோம். இக்காலையில் நான் பேசும்போது கர்த்தர் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என நான் ஜெபிக்கிறேன்.

அக்டோபர் 1918ல், 100 ஆண்டுகளுக்கு முன்பு, தலைவர் ஜோசப் எப். ஸ்மித் ஒரு மகிமையான தரிசனத்தைப் பெற்றார். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் ஏறக்குறைய 65 ஆண்டுகள் கர்த்தருக்கு அர்ப்பணிப்பான சேவைக்குப் பின்னர், நவம்பர் 19, 1918ல் அவருடைய மரணத்திற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு, கிறிஸ்துவின் பாவநிவர்த்தியை, தியானித்துக்கொண்டும், இரட்சகரின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் ஆவி உலகத்தில் அவருடைய ஊழியம் பற்றிய அப்போஸ்தலனாகிய பேதுருவின் விவரிப்பைப் படித்துக்கொண்டும் அவருடைய அறையில் அவர் அமர்ந்திருந்தார்.

அவர் பதிவு செய்தார்: “நான் படித்துக்கொண்டிருந்தபோது பின்வரும் பகுதிகளில் முன்பு ஒருபோதுமில்லாத அளவுக்கு நான் அதிகமாய் கவரப்பட்டேன். எழுதப்பட்ட இந்தக் காரியங்களைக்குறித்து நான் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய புரிந்துகொள்ளுதலின் கண்கள் திறக்கப்பட்டு, கர்த்தரின் ஆவி என் மீது இறங்கியது, மரித்தோரின் சேனைகளை நான் கண்டேன்.” 1 தரிசனத்தின் முழு உரையும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகம் 138ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த குறிப்பிடத்தக்க வெளிப்படுத்தலைப் பெற ஜோசப் எப். ஸ்மித்தின் வாழ்நாள் ஆயத்தத்தை நாம் முழுமையாக பாராட்டும்படியாக சில பின்னணிகளை நான் கொடுக்கிறேன்.

குதிரை மீது ஜோசப்பும் ஹைரம் ஸ்மித்தும்

அவர் சபையின் தலைவராக இருந்தபோது 1906ல் நாவூவுக்கு அவர் சென்ற அவருக்கு ஐந்து வயதாயிருந்தபோதுள்ள ஒரு ஞாபகத்தை நினைவுபடுத்தினார். அவர் சொன்னார், “ [என்னுடைய பெரியப்பா, ஜோசப்பும் என்னுடைய அப்பா ஹைரமும்] கார்தேஜூக்கு போகிற வழியில் சவாரிசெய்து கொண்டிருந்தபோது இதுதான் சரியாக நான் நின்றுகொண்டிருந்த இடம். அவருடைய குதிரையிலிருந்து இறங்காமலே சேணம்மீது சாய்ந்து தரையிலிருந்து என்னைத் தூக்கினார். அவர் வழியனுப்ப என்னை முத்தமிட்டு, மீண்டும் என்னைத் தரையில் விட்டார், அவர் சவாரி செய்துபோகிறதை நான் பார்த்தேன்.” 2

அடுத்த முறை ஜோசப் எப். ஸ்மித் அவர்களைப் பார்த்த்து, ஜூன் 27, 1844ல் கார்தேஜ் சிறைச்சாலையில் கொடூரமாக கொலை செய்த பின்னர் அருகருகே கிடத்தப்பட்டிருந்த இரத்த சாட்சிகளைப் பார்க்க, மேரி பீல்டிங் ஸ்மித் அவரைத் தூக்கியபோது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜோசப் எப். ஸ்மித் அவருடைய குடும்பத்துடனும், அவருடைய விசுவாசமிக்க தாய் மேரி பீல்டிங்குடனும் நாவூவிலுள்ள தன் வீட்டைவிட்டு வின்டர் குவார்ட்டஸுக்கு போனார். இன்னும் 8 வயது கூட ஆகாதிருந்தும் மான்ட்ரோஸ், அயோவாவிலிருந்து வின்டர் குவார்ட்டஸூக்கு, பின்னர் அங்கு வந்து சேர்ந்தபோது ஏறக்குறைய 10 வயதாகி இருந்த அவர், சால்ட் லேக் சிட்டிக்கு, காளைவண்டி குழு ஒன்றை ஒட்ட வேண்டிதிருந்தது. அவருடைய இளமைப்பருவத்தில் ஜோசப் எப். மீதிருந்த பொறுப்பையும் அவர் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்பையும் சிறுவர்களான, இளம் ஆண்களான நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள், உணர்ந்துகொண்டிருக்கிறீர்களென்று நான் நம்புகிறேன்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், 1852ல், அவருக்கு 13 வயதாயிருந்தபோது, ஜோசப்பையும் அவருடைய கூடப்பிறந்தவர்களையும் அனாதைகளாக விட்டுவிட்டு அவருடைய அன்பான தாய் மரித்தார். 3

ஜோசப் எப். ஸ்மித்துக்கு 15 வயதாயிருந்தபோது 1854ல் ஹவாய் தீவுகளில் ஊழியம் செய்ய அவர் அழைக்கப்பட்டார். இந்த ஊழியம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சபையில் சேவை வாழ்க்கையின் ஆரம்பமானது.

யூட்டாவிற்கு அவர் திரும்பியபோது 1859ல் ஜோசப் எப். திருமணம் செய்துகொண்டார். 4 அடுத்த ஐந்து ஆண்டுகள் அவருடைய வாழ்க்கை, வேலை, குடும்பப் பொறுப்புகள், மற்றும் கூடுதலான இரண்டு ஊழியங்களால் நிறைந்தது. ஜூலை 1, 1866ல், 27 வயதில், தலைவர் பிரிகாம் யங்கால் ஒரு அப்போஸ்தலராக அவர் நியமிக்கப்பட்டபோது ஜோசப் எப்.-ன் வாழ்க்கை என்றென்றைக்குமாக மாறியது. அடுத்த ஆண்டு அக்டோபரில் பன்னிருவர் குழுமத்திலிருந்த ஒரு காலி இடத்தை அவர் நிரப்பினார். 5 1901ல் அவரே தலைவராவதற்கு முன்பு பிரிகாம் யங்குக்கும், ஜான் டெய்லருக்கும், வில்பர்ட் வுட்ரப்புக்கும், லோரன்சோ ஸ்னோவுக்கும் அவர் ஆலோசகராயிருந்தார். 6

ஜோசப் எப்.-ம் அவர் மனைவி ஜூலியானாவும் தங்களுடைய முதல் குழந்தை மெர்சி ஜோசபினை குடும்பத்திற்கு வரவேற்றனர். 7 அவளுக்கு இரண்டரை வயதே இருக்கும்போது அவள் மரித்தாள். சிறிது காலத்திற்குப் பின்னர் ஜோசப் எப். எழுதினார், “எனக்கன்பான ஜோசபின் மரித்து நேற்றோடு ஒரு மாதமாகிறது. அவள் தாய்மையடைய வளருவதற்கு நான் அவளை காப்பாற்றியிருக்கலாம். ஒவ்வொரு நாளும் நான் அவளை இழந்து தவிக்கிறேன், நான் தனிமையிலிருக்கிறேன். நான் அவர்களை நேசிக்கிறதைப்போல, என்னுடைய சிறுபிள்ளைகளை நேசிப்பது தவறானால், தேவனே என் பலவீனத்தை மன்னியும்.” 8

அவருடைய வாழ்நாளில், தலைவர் ஸ்மித், தன் தகப்பன், தன் தாய், ஒரு சகோதரர், இரண்டு சகோதரிகள், இரண்டு மனைவிமார்கள் மற்றும் 13 பிள்ளைகளை அவர் இழந்தார். துக்கத்தையும் அன்பானவர்களை இழப்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார்.

அவருடைய மகன் ஆல்பர்ட் ஜெஸ்ஸி மரித்தபோது, அவனை காப்பாற்றும்படி கர்த்தரிடம் அவர் வேண்டிக்கொண்டதாக ஜோசப் எப். தனது சகோதரி மார்த்தா ஆன்னுக்கு எழுதி, “ஏன் இப்படி நடக்கிறது? தேவனே, ஏன் இது இப்படி நடக்க வேண்டும்?” 9 என கேட்டார்.

அந்த நேரத்தில் அவர் ஜெபித்திருந்தாலும் இந்த காரியத்திற்காக ஜோசப் எப், எந்தப் பதிலையும் பெறவில்லை. மரணத்தையும் ஆவி உலகத்தையும் குறித்து கர்த்தரிடமிருந்து அவரால் “எந்த பதிலையும் பெறமுடிவில்லை” என அவர் உணர்ந்த்தாக அவர் மார்த்தா ஆனிடம் சொன்னார். ஆயினும் கர்த்தருடைய நித்திய வாக்குத்தத்தங்களில் அவருடைய விசுவாசம் உறுதியாயும் நிலைத்துமிருந்தது. 10

கர்த்தருடைய ஏற்ற காலத்தில் கூடுதலான பதில்களும், ஆறுதலும், அவர் தேடிக்கொண்டிருந்த ஆவி உலகத்தைப்பற்றிய புரிந்துகொள்ளுதலும் அக்டோபர் 1918ல் அவர் பெற்ற அற்புதமான தரிசனத்தின் மூலமாக தலைவர் ஸ்மித்துக்கு வந்தது.

அந்த ஆண்டு குறிப்பாக அவருக்கு வேதனையானதாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருந்த 20 மில்லியன் மக்களுக்கும் மேல் கொல்லப்பட்ட மகா உலகப்போரின் இறப்பு எண்ணிக்கைக்காக அவர் துக்கப்பட்டார். கூடுதலாக, 100 மில்லியன் மக்களுக்கும் மேலானவர்களின் உயிர்களை எடுத்து, ஒரு தொற்றுக்காய்ச்சல் உலகத்தைச்சுற்றி பரவிவந்தது.

மூப்பர் ஹைரம் மாக் ஸ்மித்

அந்த ஆண்டில், தலைவர் ஸ்மித் மிகவும் அருமையான மூன்று குடும்ப அங்கத்தினர்களை இழந்தார். அவருடைய முதல் மகனும் என்னுடைய தாத்தாவுமான பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் ஹைரம் மேக் ஸ்மித், சேதமடைந்த குடல் வாலால் திடீரென்று மரித்தார். தலைவர் ஸ்மித் எழுதினார்.

தலைவர் ஸ்மித் எழுதினார், “துக்கத்தால் நான் பேச்சற்றவனானேன்! [மரத்துப்போகுதல்] என்னுடைய உள்ளம் உடைந்தது, உயிருக்காக படபடக்கிறது! நான் அவரை நேசித்தேன்! இன்னும் என்றென்றும் அவரை நான் நேசிப்பேன். அது அப்படியே இருக்கும், என்னுடைய எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் என்றென்றும் அது அப்படியே இருக்கும்! ஆனால் அவன் என்னுடைய முதல் மகன், ஒரு முடிவில்லாத சந்தோஷத்தையும் நம்பிக்கையையும், மனிதர்களுக்கு மத்தியில் கண்ணியமான பெயரையும் கொண்டுவந்த முதல்வனாக இருந்தான். என்னுடைய ஆத்துமாவின் ஆழத்திலிருந்து அவனுக்காக தேவனுக்கு நான் நன்றிசெலுத்துகிறேன்! ஆனால் எனக்கு அவன் வேண்டும்! எங்கள் எல்லோருக்கும் அவன் வேண்டும்! சபைக்கு அவன் அதிக பலனுள்ளவனாயிருந்தான்! இப்போது நான் என்ன செய்வேன்! தேவனே எனக்கு உதவும்!” 11

அடுத்த மாதம், தலைவர் ஸ்மித்தின் மருமகன் அலோன்சோ கெஸ்லர் ஒரு துயர விபத்தில் மரித்தார். 12 தலைவர் ஸ்மித் தனது நாட்குறிப்பில் எழுதினார், “இந்த மிகவும் கொடூரமான, இதயத்தை பிளக்கிற மரண விபத்து என் குடும்பம் முழுவதையும் இருண்ட மேகம் சூழ வைத்தது.” 13

ஏழு மாதங்களுக்குப் பின்னர், செப்டம்பர் 1918ல் தலைவர் ஸ்மித்தின் மருமகளும் எனது பாட்டியுமான இடா போவ்மென் ஸ்மித், எனது மாமா ஹைரம் ஸ்மித்தான அவளுடைய ஐந்தாவது பிள்ளை பிறந்த பின் மரித்தார். 14

இது இப்படியிருக்க, உலகத்தில் யுத்தங்களினாலும் வியாதிகளினாலும் மரணமடைந்த மில்லியன் கணக்கானோருக்காகவும், அப்படியே அவருடைய குடும்ப அங்கத்தினர்களின் மரணத்திற்காகவும் தீவிரமான துக்கத்தை அனுபவித்ததில், அக்டோபர் 3, 1918ல் “மரித்தவர்களின் மீட்பு பற்றிய தரிசனம்” என்றறியப்பட்ட பரலோக வெளிப்படுத்தலை அவர் பெற்றார்.

தலைவர் ஜோசப் எப். ஸ்மித்

வெளிப்படுத்தலுக்கு அடுத்த நாள் அக்டோபர் பொது மாநாட்டின் ஆரம்ப கூட்டத்தில் வெளிப்படுத்தலை அவர் ஜாடையாக குறிப்பிட்டார். தலைவர் ஸ்மித்தின் ஆரோக்கியம் குறைந்து கொண்டிருந்தது, இருந்தும் அவர் சுருக்கமாக பேசினார். “இன்று காலை என் மனதில் மறைந்திருக்கிற அநேகக் காரியங்களில் நான் பிரவேசிக்க முயற்சிக்கமாட்டேன், எனக்கு தைரியமுமில்லை. என்னுடைய மனதிலிருக்கிற, என் இதயத்தில் இருக்கிற சில காரியங்களை கர்த்தரின் சித்தப்படி உங்களுக்குக் கூற என்னுடைய முயற்சியை எதிர்காலம்வரை நான் தள்ளிப்போடுவேன். இந்த கடந்த ஐந்து மாதங்களில் நான் தனியாக வாழவில்லை. ஜெபம், விசுவாசம், தீர்மானம் மற்றும் வேண்டுதலின் ஆவியில் நான் வாழ்ந்தேன். தொடர்ந்து கர்த்தரின் ஆவியுடன் எனக்கு தொடர்பிருந்தது.” 15

அக்டோபர் 3ல் அவர் பெற்ற வெளிப்படுத்தல் அவருடைய இருதயத்தை ஆறுதல்படுத்தி அவருடைய அநேக கேள்விகளுக்கு பதில்களைக் கொடுத்தது. நாமும்கூட ஆறுதல்படுத்தப்பட்டு, இந்த வெளிப்படுத்தலைப படிப்பதாலும், ஒவ்வொரு நாளும் நாம் வாழுகிற வழியில் அதன் முக்கியத்துவத்தை தியானிப்பதாலும், நாம் மரித்து ஆவி உலகத்திற்கு போகும்போது நமது வருங்காலத்தைப்பற்றி அதிகமாக அறிந்துகொள்ளலாம்.

சிலுவையில் இரட்சகரின் மரணத்திற்குப் பின் விசுவாசமுள்ளவர்களை ஆவி உலகத்தில் அவர் சந்தித்ததை, அநேக காரியங்களுக்கு மத்தியில் தலைவர் ஸ்மித் பார்த்தார். அந்த சந்திப்பிலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன்:

“ஆனால் இதோ, நீதிமான்களுக்கு மத்தியிலே அவருடைய பராக்கிரமங்களை நிர்வகித்து, தூதர்களை நியமித்து, வல்லமையுடனும் அதிகாரத்துடனும் வஸ்திரம் தரித்து அந்தகாரத்திலிருப்பவர்களுக்கும், மனுஷர்களின்[மற்றும் ஸ்திரீகளின்] சகல ஆவிகளுக்கும்போய் சுவிசேஷத்தின் ஒளியை எடுத்துப்போகுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார், 16 அப்படியாக மரித்தவர்களுக்கு சுவிசேஷம் பிரசிங்கிக்கப்பட்டது. …

“தேவனில் விசுவாசம், பாவத்திலிருந்து மனந்திரும்புதல், பாவங்களின் மீட்பிற்காக பதிலி ஞானஸ்நானம், கைகள் வைக்கப்படுவதால் பரிசுத்த ஆவியின் வரம் இவற்றாலும்,

“மனுஷர் முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன் முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக அவர்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக அவர்களுக்கு அறிந்துகொள்ள அவசியமான பிற எல்லா சுவிசேஷக் கொள்கைகளும் போதிக்கப்பட்டன. …

“ஏனெனில் மரித்தவர்கள் நீண்ட நாட்களாக தங்களுடைய சரீரங்களில் ஆவிகளில்லாததை ஒரு அடிமைத்தனமாக நினைத்தார்கள்.

“மரணத்திலிருந்து அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின், அநித்தியத்துடனும் நித்திய ஜீவனுடனும் அங்கே கிரீடம் சூட்டப்பட்டு, அவருடைய பிதாவின் இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க இவைகளை கர்த்தர் போதித்து வெளியே வர அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார்.

“கர்த்தரால் வாக்களிக்கப்பட்டதைப்போல அவர்களுடைய பிரயாசத்தில் தொடர்ந்து, அவரை நேசிக்கிறவர்களுக்காக காக்கப்பட்டிருக்கிற சகல ஆசீர்வாதங்களிலும் பங்கேற்பவர்களாயிருப்பார்கள்.” 17

ஜோசப் மற்றும் ஹைரம் ஸ்மித் சிலைகள்

தரிசனத்தில், அவருடைய தகப்பன் ஹைரமையும், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தையும் தலைவர் ஸ்மித் பார்த்தார். நாவூவில் ஒரு சிறுவனாக கடைசியாக அவர்களைப் பார்த்து 74 ஆண்டுகளாகிவிட்டன. அவருடைய அன்பான தகப்பனையும் பெரியப்பாவையும் பார்த்த அவருடைய சந்தோஷத்தை நம்மால் கற்பனை மட்டுமே செய்யமுடியும். எல்லா ஆவிகளும் அவர்களுடைய அநித்திய சரீரத்தின் சாயலை தக்கவைத்திருக்கிறார்கள் என்றும், வாக்களிக்கப்பட்ட தங்களுடைய உயிர்த்தெழுதலின் நாளுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்களென்றும் அறிந்து, அவர் உணர்த்தப்பட்டு ஆறுதல்படுத்தப்பட்டிருப்பார். அவருடைய பிள்ளைகளுக்காக பரலோக பிதாவினுடைய திட்டத்தின், கிறிஸ்துவின் மீட்பின் அன்பின், அவருடைய ஒப்பிடமுடியாத பாவநிவர்த்தியின் வல்லமையின் ஆழத்தை, அகலத்தை மிக முழுமையாக தரிசனம் வெளிப்படுத்தியது. 18

இந்த விசேஷித்த 100வது ஆண்டுநிறைவில், இந்த வெளிப்படுத்தலை சிந்தனையோடு படிக்க நான் உங்களை வரவேற்கிறேன். நீங்கள் அப்படிச்செய்யும்போது, அவருடைய பிள்ளைகளின் மீது தேவனுடைய அன்பையும் அவருடைய இரட்சிப்பின், சந்தோஷத்தின் திட்டத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளவும் பாராட்டவும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

தலைவர் ஜோசப் எப். ஸ்மித் பெற்ற தரிசனம் உண்மை என நான் சாட்சியளிக்கிறேன். அதை ஒவ்வொருவரும் படித்து அது உண்மையென அறிய வருவார்கள் என நான் சாட்சி பகருகிறேன். இந்த வாழ்க்கையில் இந்த ஞானத்தைப் பெறாதவர்கள், ஆவி உலகத்தில் அனைவரும் வந்தடையும்போது இதன் உண்மையை நிச்சயமாய் அறிவார்கள். அங்கே, இரட்சிப்பின் மகா திட்டத்திற்காகவும், மீண்டும் எப்போதுமே பிரிக்கப்படாதிருக்கிற, சரீரமும் ஆவியும் மீண்டும் ஒருமுறை இணைக்கப்படும்போது வாக்களிக்கப்பட்ட உயிர்த்தெழுதலுக்காகவும், தேவன்மீதும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேலும் அன்பு செலுத்தி, துதிப்பார்கள். 19

சகோதரி பார்பரா பல்லார்ட்

எனதருமை பார்பரா எங்கிருக்கிறாள், மற்றும் நாங்கள் மீண்டும் ஒன்றாக இருப்போம் என அறிவதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போதும் என்றென்றைக்கும் கர்த்தரின் சமாதானம் நம்மோடு தரித்திருப்பதாக என்பதே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எனது தாழ்மையான ஜெபமாகும்.

குறிப்புகள்

  1. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:6, 11.

  2. Joseph F. Smith, in Preston Nibley, The Presidents of the Church (1959), 228.

  3. See Joseph Fielding Smith, Life of Joseph F. Smith (1938), 13.

  4. அவர் லெவிரா க்ளார்க்கை 1859லும், ஜூலியானா லாம்ப்சனை 1866லும், சாரா ரிச்சர்ட்ஸை 1868லும், எட்னா லாம்ப்சனை 1871லும், ஆலிஸ் கிம்பலை 18883லும், மேரி ஸ்வாட்ஸை 1884லும் மணந்தார்.

  5. ஜோசப் எப். ஸ்மித் பிரதான தலைமையில் கூடுதல் ஆலோசகராக அழைக்கப்பட்டார் (பிரிகாம் யங், ஹீபர் சி. கிம்பல், டேனியல் எச். வெல்ஸ்). அவர் மூன்று சபைத் தலைவர்களுக்கு பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராக சேவையாற்றினார்: தலைவர்கள் ஜான் டெய்லர், வில்போர்ட் உட்ரப், மற்றும் லோரன்சோ ஸ்நோ.

  6. பிரிகாம் யங்கின் நிர்வாகத்தின்போது, ஜோசப் எப். ஸ்மித் பிரதான தலைமையில் ஒரு ஆலோசகராக சேவை செய்தார். ஜான் டெய்லர், வில்போர்ட் உட்ரப், மற்றும் லோரன்சோ ஸ்நோ நிர்வாகத்தின் போது, இரண்டாம் ஆலோசகராக பணியாற்றினார். தலைவராக அழைக்கப்படுவதற்கு முன்பே, பிரதான தலைமையில் சேவை செய்த முதல் சபைத் தலைவர் அவரே.

  7. ஜோசப் எப்.-ன் முதல் குழந்தையாகிய மேரி ஜோசபின் ஆகஸ்டு 14, 1867ல் பிறந்து, ஜூன் 6, 1870ல் மரித்தாள்.

  8. Joseph F. Smith, journal, July 7, 1870, Church History Library, The Church of Jesus Christ of Latter-day Saints, Salt Lake City, Utah.

  9. Joseph F. Smith to Martha Ann Smith Harris, Aug. 26, 1883, Church History Library; see Richard Neitzel Holzapfel and David M. Whitchurch, My Dear Sister: The Letters between Joseph F. Smith and His Sister Martha Ann (2018), 290–91.

  10. அநேக சூழ்நிலைகளில், ஜோசப் எப். ஸ்மித்தை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், ஒரு அப்போஸ்தலராகவும், சபைத் தலைவராகவும் உணர்த்தப்பட்ட கனவுகள், வெளிப்படுத்தல்கள், மற்றும் தரிசனங்கள் மூலம் கர்த்தர் வழிநடத்தினார். கர்த்திடமிருந்து வந்த இவ்வருமையான வரங்கள் அடிக்கடி அவருடைய குறிப்பிதழ்களிலும், பிரசங்கங்களிலும், நினைவுகளாகவும், சபையின் அதிகாரபூர்வ பதிவேடுகளாகவும் பதிவு செய்யப்பட்டன.

  11. Joseph F. Smith, journal, Jan. 23, 1918, Church History Library; spelling and capitalization modernized; see Joseph Fielding Smith, Life of Joseph F. Smith, 473–74.

  12. See “A. [P.] Kesler Is Killed in Fall from a Building,” Ogden Standard, Feb. 5, 1918, 5.

  13. Joseph F. Smith, journal, Feb. 4, 1918, Church History Library.

  14. See “Ida Bowman Smith,” Salt Lake Herald-Republican, Sept. 26, 1918, 4.

  15. Joseph F. Smith, in Conference Report, Oct. 1918, 2.

  16. See the reference to “our glorious Mother Eve” and the “faithful daughters who … worshiped the true and living God” (Doctrine and Covenants 138:39).

  17. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:30, 33–34, 50–52.

  18. தரிசனம் பற்றிய எழுத்து, முதலில் நவம்பர் 30, 1918, Deseret News, பதிப்பில் நவம்பர் 19ல் தலைவர் ஸ்மித் மரித்த 11 நாட்களுக்குப் பின்னர், வந்தது. December Improvement Era and in January 1919 editions of the Relief Society Magazine, the Utah Genealogical and Historical Magazine, the Young Woman’s Journal, and the Millennial Starஆகியனவற்றில் இவை அச்சிடப்பட்டன.

  19. கேட்டின் மகன்கள் உயிர்த்தெழுப்பப்பட்டாலும், மகிமையின் இராஜ்யத்தைப் பெறுபவர்கள் போல, பரலோக பிதாவையும், இயேசு கிறிஸ்துவையும் நேசித்து துதிக்க மாட்டார்கள். ஆல்மா 11:41; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:32–35 பார்க்கவும்.