பொது மாநாடு
சவாலான நேரங்களில் தனிப்பட்ட சமாதானம்
அக்டோபர் 2021 பொது மாநாடு


13:48

சவாலான நேரங்களில் தனிப்பட்ட சமாதானம்

தனிப்பட்ட சமாதானத்தை தேடுவது ஒருபோதும் மிக முக்கியமானதாக இருந்ததில்லை.

வரலாற்றுச் சிறப்புமிக்க நாவூவின் ஒரு பகுதியை பிரதிஷ்டை செய்ய நான் அண்மையில் பணிக்கப்பட்டேன். பணியின் ஒரு பகுதியாக, மிசவுரியிலுள்ள லிபர்ட்டி சிறைச்சாலைக்கு செல்ல என்னால் முடிந்தது. நான் சிறைச்சாலையைப் பார்த்தபோது, சபை வரலாற்றின் குறிப்பிடத்தக்க பகுதியாக அதை ஆக்கிய நிகழ்வுகளை நான் நினைத்துப் பார்த்தேன். மிசவுரி அரசால் வெளியிடப்பட்ட வெளியேற்றும் ஆணையின் விளைவாக பரிசுத்தவான்களின் வாழ்க்கை பயமுறுத்தப்பட்டது. கூடுதலாக, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தும் சில நெருக்கமான தோழர்களும் அநியாயமாக லிபர்ட்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். நமது உறுப்பினர்களுக்கு வன்முறையான எதிர்ப்பின் காரணங்களில் ஒன்று, அவர்களில் பெரும்பாலோர் அடிமைத்தனத்தை எதிர்த்தனர்.1 ஜோசப் ஸ்மித் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களின் மீது கடுமையான துன்புறுத்தல், நீதியான ஜனங்களை பாதிக்கக்கூடிய சுயாதீனத்தின் அநீதியான செயலின் அதிகபட்ச உதாரணம். லிபர்ட்டி சிறையில் ஜோசப் இருந்த காலம், துன்பம் என்பது கர்த்தரின் வெறுப்பிற்கோ அல்லது அவருடைய ஆசீர்வாதத்தை திரும்பப் பெறுவதற்கோ அல்ல என்பதை நிரூபிக்கிறது.

ஜோசப் ஸ்மித் லிபர்ட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அறிவித்ததை வாசித்தபோது நான் மிகவும் ஆழமாக நெகிழ்ந்தேன்: “தேவனே, நீர் எங்கே இருக்கிறீர்? உம்முடைய மறைவான இடத்தை மூடியிருக்கிற கூடாரம் எங்கே?”2 கர்த்தரின் ஜனம் எவ்வளவு காலம் “இந்த தவறுகளையும் சட்டவிரோத ஒடுக்குமுறைகளையும் அனுபவிப்பார்கள்” என்று ஜோசப் விசாரித்தார்.3

மூப்பர் குக் லிபர்டி சிறைச்சாலையைப் பார்த்தல்

நான் லிபர்ட்டி சிறையில் நின்றிருந்தபோது, கர்த்தரின் பதிலைப் படித்தபோது நான் ஆழமாகத் தொடப்பட்டேன்: “என் மகனே உன் ஆத்துமாவுக்கு சமாதானம் உண்டாவதாக. உன் கஷ்டமும் வேதனைகளும் கொஞ்ச காலத்துக்குத்தான். பின்பு இதை நீ நன்கு சகித்தால் தேவன் உன்னை உன்னதத்துக்கு உயர்த்துவார்.”4 ஒரு நித்திய, சிலஸ்டியல் இலக்குக்காக எதிர்ப்பானது நம்மை புடமிட முடியும் என்பது தெளிவு.5

“என் மகனே, உன் ஆத்துமாவுக்கு சமாதானம் உண்டாவதாக”6 என்ற இரட்சகரின் விலைமதிப்பற்ற வார்த்தைகள் தனிப்பட்ட முறையில் என்னுள் எதிரொலிக்கிறது மற்றும் நமது நாளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவருடைய பூலோக ஊழியத்தின் போது அவருடைய சீஷர்களுக்கு அவரது போதனைகளை அவைகள் எனக்கு நினைவூட்டுகின்றன.

கெத்செமனே தோட்டத்தில் மற்றும் சிலுவையில் கிறிஸ்து துன்பப்படுவதற்கு முன்பு, அவர் தம்முடைய அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிட்டார்: “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோலவே நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்”7 பின்னர் இந்த வார்த்தைகளால் அவர்களை ஆறுதல்படுத்தினார்: சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.”8

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் மிகவும் நேசத்துக்குரிய தலைப்புகளில் ஒன்று “சமாதான பிரபு.”9 இறுதியில் அவருடைய ராஜ்யம் சமாதானத்துடனும் அன்புடனும் நிறுவப்படும்.10 மேசியாவின் ஆயிர வருட அரசாட்சியை நாம் எதிர்நோக்குகிறோம்.

ஆயிர வருட அரசாட்சியின் இந்த பார்வை இருந்தபோதிலும், உலக சமாதானமும் நல்லிணக்கமும் நம் நாளில் இல்லை என்பதை நாம் அறிவோம்.11 என் வாழ்நாளில், நாகரிகம் அதிகமாய் இல்லாததை ஒருபோதும் நான் பார்த்ததில்லை. நாம் கோபமான, சர்ச்சைக்குரிய மொழி மற்றும் ஆத்திரமூட்டும், அழிவுகரமான செயல்களால் சமாதானத்தையும் அமைதியையும் அழிக்கும் செயல்களால் தாக்கப்படுகிறோம்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகை வரை உலகில் சமாதானம் வாக்களிக்கப்படவில்லை அல்லது உறுதி செய்யப்படவில்லை. அவருடைய பூலோக ஊழியம் உலகளாவிய சமாதானத்தை அடையாது என்பதை இரட்சகர் பன்னிரு அப்போஸ்தலர்களுக்கு அறிவுறுத்தினார். அவர் போதித்தார், “பூமியில் சமாதானத்தை அனுப்ப நான் வந்தேன் என்று எண்ணாதீர்கள்.”12 உலகளாவிய சமாதானம் இரட்சகரின் ஆரம்ப பூலோக ஊழியத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. உலகளாவிய சமாதானம் இன்று இல்லை.

இருப்பினும், இன்று நம் உலகத்தை துன்புறுத்துகிற மற்றும் சிதைக்கிற, கோபம், பிணக்கு மற்றும் பிரிவினை இருந்தும் தனிப்பட்ட சமாதானத்தை அடைய முடியும். தனிப்பட்ட சமாதானத்தை தேடுவது ஒருபோதும் மிக முக்கியமானதாக இருந்ததில்லை. இன்றைய இளைஞர்களுக்காக “கிறிஸ்துவில் சமாதானம்” என்ற தலைப்பில் சகோதரர் நிக் டே எழுதிய அழகான மற்றும் பிரியமான புதிய பாடல், “பூமியில் சமாதானம் இல்லாதபோது, கிறிஸ்துவில் சமாதானம் இருக்கிறது” என்று அறிவிக்கிறது.13 உலகளாவிய கோவிட் -19 தொற்றுநோய்க்கு சற்று முன்பு இந்த பாடலை நாம் பெறுகிற ஆசீர்வாதத்தைப் பெற்றோம்.

இந்த பாடல் சமாதானத்துக்கான விருப்பத்தை ஒரு அழகான பாணியில் பிரதிபலிக்கிறது மற்றும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் அமைதி நங்கூரமிடப்பட்டுள்ளது என்பதை பொருத்தமான முறையில் வலியுறுத்துகிறது. “சமாதானம் மற்றும் அன்பின் ஆவி உலகத்திற்கு ஒருபோதும் வர முடியாது … மனிதகுலம் தேவனின் சத்தியத்தையும் தேவனின் செய்தியையும் பெறும் வரை, … அவருடைய தெய்வீகமான வல்லமையையும் அதிகாரத்தையும் அங்கீகரிக்கும் வரை” என்று தலைவர் ஜோசப் எப். ஸ்மித் அறிவித்தார்.14

உலகளாவிய சமாதானத்தை அடைவதற்கான முயற்சிகளில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றாலும், கிறிஸ்து போதிக்கிறதைப் போல தனிப்பட்ட சமாதானத்தை நாம் பெற முடியும் என்று நமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் குறிப்பிடப்பட்டுள்ளது: “ஆனால் நீதியின் கிரியைகளைச் செய்கிறவன் அவனது பலனைப் பெறுவான், இம்மையில் சமாதானத்தையும் மறுமையில் நித்திய ஜீவனையும் அடைவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”15

வாக்குவாதங்களைச் சமாளிக்கவும், பிணக்கைக் குறைக்கவும், இந்த உலகில் சமாதானத்தைக் காணவும் உதவும் சில “நீதியின் கிரியைகள்” யாவை? கிறிஸ்துவின் போதனைகள் அனைத்தும் இந்த திசையில் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக முக்கியமானவை என்று நான் நம்பும் சிலவற்றை நான் குறிப்பிடுகிறேன்.

முதலாவது: தேவனை நேசியுங்கள், அவருடைய கட்டளைகள்படி வாழுங்கள், அனைவரையும் மன்னியுங்கள்.

தலைவர் ஜார்ஜ் ஆல்பர்ட் ஸ்மித் 1945 ல் சபையின் தலைவரானார். அவர் அப்போஸ்தலராக, சமாதானத்தை விரும்பும் தலைவராக இருந்த ஆண்டுகளில் அறியப்பட்டார். அவர் தலைவராக வருவதற்கு முந்தைய 15 வருடங்களில், இரண்டாம் உலகப் போரால் மரணம் மற்றும் அழிவு தொடர்ந்து, மாபெரும் உலகளாவிய மந்தநிலையின் சவால்கள் மற்றும் சோதனைகள் இருந்தன, ஆனால் சமாதானமிருந்தது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், அக்டோபர் 1945 ல் தலைவராக அவரது முதல் பொது மாநாட்டின் போது, தலைவர் ஸ்மித் பரிசுத்தவான்களை தங்கள் அண்டை வீட்டாரை நேசிக்கவும், சத்துருக்களை மன்னிக்கவும், பின்னர் கற்பிக்கவும் இரட்சகரின் அழைப்பை நினைவூட்டி பின்னர் போதித்தார், “அனைத்து பிற்காலப் பரிசுத்தவான்களும் ஓர்நாளில் அவருடைய சமூகத்தில் நின்று அவரது கைகளில் ஒரு அற்புதமான வீட்டுக்கு வரவேற்பு பெறுவார்கள் என்று நம்பினால் அதைக் கொண்டிருக்க அந்த உற்சாகத்தையே அவர்கள் நாடவேண்டும்.”16

இரண்டாவது: ஆவியின் கனிகளைத் தேடுங்கள்

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியர்களுக்கு எழுதிய நிருபத்தில் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க நம்மை தகுதிப்படுத்தும் நீதியின் செயல்களுக்கும், மனந்திரும்பாமல் நம்மை தகுதி நீக்கம் செய்யக்கூடிய வேலைகளுக்கும், இடையேயான இரு கருத்தை முன்வைக்கிறான். நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கும் அவைகளுக்கு மத்தியில் ஆவியின் கனிகளிருக்கின்றன: “அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், நீடிய பொறுமை, மென்மை, நற்குணம், விசுவாசம், சாந்தம், [மற்றும்] இச்சையடக்கம்” ஆகியவை.17 ஒருவருக்கொருவர் சுமைகளைச் சுமப்பதையும், நல்ல செயல்களில் சோர்வடையாமல் இருப்பதையும் பவுல் சேர்க்கிறான்.18 நீதியற்ற அந்த வேலைகளில், வெறுப்பு, கோபம் மற்றும் சச்சரவையும் அவன் உள்ளடக்கியுள்ளான்.19

பழைய ஏற்பாட்டுக் காலத்தின் சிறந்த பாடங்களில் ஒன்று தகப்பனாகிய ஆபிரகாமுடன் தொடர்புடையது. ஆபிரகாமும் அவனது தம்பி மகனான லோத்தும் பணக்காரர்கள், ஆனால் அவர்களால் ஒன்றாக வாழ முடியாது என கண்டனர். சர்ச்சையை அகற்ற, ஆபிரகாம் லோத்தை அவன் விரும்பிய நிலத்தை தேர்ந்தெடுக்க அனுமதித்தான். லோத்து யோர்தானின் சமவெளியைத் தேர்ந்தெடுத்தான், அது நன்கு தண்ணீருள்ள, அழகானதாக இருந்தது. ஆபிரகாம் மாம்ரேயின் குறைந்த வளமான சமவெளியை எடுத்துக் கொண்டான். பின்னர், ஆபிரகாம் தன் கூடாரத்தை அமைத்து, “கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை” கட்டியதாக வேதங்கள் கூறுகின்றன.20 லோத், மறுபுறம், “சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.”21 சமாதான உறவுகளைக் கொண்டிருப்பதற்கு, பாடம் தெளிவாக உள்ளது: நீதி சம்பந்தப்படாத காரியங்களில் நாம் சமரசம் செய்து சச்சரவுகளை அகற்ற விருப்பமுள்ளவர்களாக இருக்க வேண்டும். பென்யமீன் ராஜா கற்பித்தபடி, “ஒருவருக்கொருவர் காயப்படுத்திக் கொள்ள மனமில்லாதவர்களாய், சமாதானமாய் ஜீவியுங்கள்.”22 ஆனால் நீதி மற்றும் கோட்பாட்டு கட்டாயங்கள் தொடர்பான நடத்தையில், நாம் உறுதியாகவும் திடமாகவும் இருக்க வேண்டும்.

நீதியின் செயல்களின் வெகுமதியான சமாதானத்தை நாம் பெற விரும்பினால், நாம் உலகத்தை நோக்கி நமது கூடாரங்களை அமைக்க மாட்டோம். ஆலயத்தை நோக்கி நமது கூடாரங்களை நாம் அமைப்போம்.

மூன்றாவது: நீதியை தேர்ந்தெடுக்க சுயாதீனத்தைப் பிரயோகியுங்கள்

இரட்சிப்பின் திட்டத்தின் அத்தியாவசிய கூறுகளாக சமாதானமும் சுயாதீனமும் பின்னிப் பிணைந்துள்ளன. “சுயாதீனம் மற்றும் பொறுப்பேற்றல்” பற்றி சுவிசேஷத் தலைப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி, “சுயாதீனம் என்பது தேவன் நாமே தேர்ந்தெடுத்து செயல்பட அளிக்கும் திறன் மற்றும் சிலாக்கியம்.”23 இவ்வாறு, நாம் இரட்சகரைப் பின்பற்றும்போது, சுயாதீனம், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் அனுபவத்தின் மையமாக இருந்து நம்மை ஆசீர்வதிக்கிறது.24

சுயாதீனம் என்பது பரலோகத்தில் உள்ள அநித்தியத்துக்கு முந்தய ஆலோசனைக்குழு மற்றும் கிறிஸ்துவைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தவர்களுக்கும் சாத்தானின் சீடர்களுக்கும் இடையிலான முக்கிய பிரச்சினையாக இருந்தது.25 பெருமையையும் கட்டுப்பாட்டையும் விட்டு, இரட்சகரைத் தேர்ந்தெடுப்பது, அவருடைய ஒளியையும் அவருடைய சமாதானத்தையும் பெற நம்மை அனுமதிக்கும். ஆனால் ஜனங்கள் தங்கள் சுயாதீனத்தை தீங்கு விளைவிக்கும் மற்றும் புண்படுத்தும் வழிகளில் பயன்படுத்தும்போது தனிப்பட்ட சமாதானம் சவாலாக இருக்கும்.

உலகத்தின் மீட்பர் நம் சார்பாக என்ன சாதிப்பார் என்ற அறிவால் நம் இருதயங்களில் நாம் உணர்ந்த சமாதானமான உறுதி பலப்படுத்தப்பட்டது என்று நான் நம்புகிறேன். இது என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்களில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது: “நாம் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியை சார்ந்திருக்கும்போது, நம்முடைய சோதனைகள், நோய்கள் மற்றும் வலிகளைத் தாங்க அவர் நமக்கு உதவ முடியும். நாம் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் ஆறுதலால் நிரப்பப்படலாம். வாழ்க்கையில் அநீதியான அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலமாக சரிசெய்யப்பட முடியும்”26.

நான்காவது: நமது இருதயங்கள் மற்றும் வீடுகளில் சீயோனை உருவாக்குங்கள்

நாம் தேவனின் பிள்ளைகள் மற்றும் அவருடைய குடும்பத்தின் ஒரு பகுதி. நாம் பிறந்த குடும்பத்தில் நாமும் ஒரு பகுதியாக இருக்கிறோம். குடும்பம் என்னும் அமைப்பு மகிழ்ச்சி மற்றும் சமாதானம் ஆகிய இரண்டிற்கும் அடித்தளம். தலைவர் ரசல் எம். நெல்சன் நமக்கு போதித்திருக்கிறார், இந்த தொற்றுநோயின் போது நாம் கற்றுக்கொண்டோம், வீட்டை மையமாகக் கொண்ட, சபையால் ஆதரிக்கப்படுகிற மத பழக்கம், “குடும்பங்களின் வல்லமையை வெளிக்கொணர்ந்து … [நமது] வீடு[களை] விசுவாசத்தின் சரணாலயமாக மாற்ற” முடியும்.27 நம் வீடுகளில் இந்த மத பழக்கம் இருந்தால், நமக்கும் இரட்சகரின் சமாதானம் கிடைக்கும்.28 உங்களில் பலருக்கு நீதியான வீடுகளின் ஆசீர்வாதங்களில்லை, அநீதியைத் தேர்ந்தெடுப்பவர்களுடன் தொடர்ந்து பிணக்கு கொள்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். வாழ்க்கைப் புயல்களிலிருந்து பாதுகாப்பு மற்றும் புகலிடத்திற்கு உங்களை வழிநடத்த இரட்சகர் பாதுகாப்பையும் சமாதானத்தையும் வழங்க முடியும்.

அன்பான, நீதியான குடும்பங்களில் அனுபவிக்கப்படும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் நிறைவானது சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்குகிறது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அன்பும் தயவும் நம் இருதயங்களிலும் வீடுகளிலும் சீயோன் இருப்பதை மையமாகக் கொண்டுள்ளன.29

ஐந்தாவது: நமது தீர்க்கதரிசியின் தற்போதைய அறிவுரைகளைப் பின்பற்றவும்

கர்த்தரின் தீர்க்கதரிசியான தலைவர் ரசல் எம். நெல்சனை நாம் பின்பற்றும்போது நமது சமாதானம் பெரிதும் மேம்படுகிறது. அவரிடமிருந்து கேட்க நமக்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும். இந்த அழைப்பிற்காக அவர் உலகின் அஸ்திபாரத்திலிருந்து ஆயத்தப்படுத்தப்பட்டார். அவரது தனிப்பட்ட ஆயத்தம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.30

நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் போல மாற நாம் முயற்சிப்பதால், “கொந்தளிப்பான காலங்களில் கூட நீடித்த சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும்”32 என்று அவர் நமக்குக் கற்பித்தார். “தினமும் மனந்திரும்பவும்,” கர்த்தரின் “சுத்திகரிப்பு, குணப்படுத்துதல் மற்றும் பலப்படுத்தும் வல்லமையைப்” பெறவும் அவர் நமக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.32 நம்முடைய அன்புக்குரிய தீர்க்கதரிசியால் வெளிப்படுத்தல் பரலோகத்திலிருந்து பெறப்பட்டது மற்றும் தொடர்ந்து பெறப்படுகிறது என்பதற்கு நான் தனிப்பட்ட சாட்சி.

நாம் அவரை நம் தீர்க்கதரிசியாக மதித்து ஆதரிக்கும்போது, நம் பரலோக பிதாவையும் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும் ஆராதிக்கிறோம். நாம் பரிசுத்த ஆவியால் ஊழியம் செய்யப்படுகிறோம்.

உலகின் இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்து தமது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையை வழிநடத்துகிறார் என்பதற்கு எனது தனிப்பட்ட அப்போஸ்தல சாட்சியை நான் சாட்சியமளித்து வழங்குகிறேன். அவருடைய வாழ்க்கையும் பாவநிவாரண ஊழியமும் சமாதானத்தின் உண்மையான ஆதாரம். அவர் சமாதானப் பிரபு. அவர் ஜீவிக்கிறார் என்பதற்கு நான் உறுதியாகவும் பரிசுத்தமுடனும் சாட்சி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. “இண்டிப்பெண்டன்ஸில் உள்ள மக்கள் பரிசுத்தவான்கள் செவ்விந்தியர்களுக்கு உபதேசம் செய்ததை விரும்பவில்லை மற்றும் அடிமைத்தனத்தை ஏற்கவில்லை” (Saints: The Story of the Church of Jesus Christ in the Latter Days, vol. 1, The Standard of Truth, 1815–1846 [2018], 172).

  2. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:1.

  3. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:3.

  4. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7–8.

  5. 2 நேபி 2:11–15 பார்க்கவும்.

  6. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7.

  7. யோவான் 13:34.

  8. யோவான் 14:27.

  9. ஏசாயா 9:6; 2 நேபி 19:6. இரட்சகர் தனது ஆசீர்வாத பிரசங்கத்தில், “சமாதானம் செய்பவர்கள் பாக்கியவான்கள்: ஏனென்றால் அவர்கள் தேவனின் குமாரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்” என்று போதித்தார் (மத்தேயு 5:9).

  10. “என்றென்றைக்கும் … நியாயத்திலும் நீதியிலும்” (ஏசாயா 9:6–7;; 2 நேபி 19:6–7 பார்க்கவும்; கலாத்தியர் 5:22 ஐயும் பார்க்கவும்).

  11. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:35 பார்க்கவும். தலைவர் வில்போர்ட் உட்ரப் இதை 1894 மற்றும் மீண்டும் 1896 இல் அறிவித்தார் (The Discourses of Wilford Woodruff, sel. G. Homer Durham [1946], 251–52 பார்க்கவும்; Marion G. Romney, in Conference Report, Apr. 1967, 79–82; Ezra Taft Benson, “The Power of the Word,” Ensign, May 1986, 79–80; Dallin H. Oaks, “Preparation for the Second Coming,” Liahona, May 2004, 9 ஐயும் பார்க்கவும்).

  12. மத்தேயு 10:34.

  13. Nik Day, “Peace in Christ,” 2018 Mutual theme song, Liahona, Jan. 2018, 54–55; New Era, Jan. 2018, 24–25. “கிறிஸ்துவில் சமாதானம்” என்ற பாடல் கற்பிக்கிறது:

    அவர் வாழ்ந்த வழியில் நாம் வாழும்போது,

    கிறிஸ்துவில் சமாதானம் இருக்கிறது.

    அவர் நமக்கு நம்பிக்கை தருகிறார்

    நம்பிக்கை போய்விட்டால்.

    அவர் நமக்கு பலம் தருகிறார்

    நாம் செல்ல முடியாத போது

    அவர் நமக்கு அடைக்கலம் தருகிறார்

    வாழ்க்கையின் புயல்களில்.

    பூமியில் சமாதானம் இல்லாதபோது,

    கிறிஸ்துவில் சமாதானம் இருக்கிறது.

  14. Teachings of Presidents of the Church: Joseph F. Smith (1998), 400.

  15. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:23.

  16. George Albert Smith, in Conference Report, Oct. 1945, 169–70 பார்க்கவும்.

  17. கலாத்தியர் 5:22–23.

  18. கலாத்தியர் 6:2, 9 பார்க்கவும்.

  19. கலாத்தியர் 5:20 பார்க்கவும்.

  20. ஆதியாகமம் 13:18.

  21. ஆதியாகமம் 13:12.

  22. மோசியா 4:13.

  23. Gospel Topics, “Agency and Accountability,” topics.ChurchofJesusChrist.org.

  24. “அனைத்து மனிதர்களின் சிறந்த மத்தியஸ்தர் மூலம் நாம் சுதந்திரம் மற்றும் நித்திய ஜீவனை, தேர்ந்தெடுக்க சுதந்திரமாக இருக்கிறோம்.” (2 நேபி 2:27). மற்றவர்களின் அழிவுகரமான தீய தேர்ந்தெடுப்புகள் வலியையும் துன்பத்தையும் சில சமயங்களில் மரணத்தையும் கூட ஏற்படுத்த சுயாதீனம் அனுமதிக்கிறது. கர்த்தராகிய தேவன் நல்லதை அல்லது தீயதை தேர்ந்தெடுப்பதற்காக சுயாதீனம் கொடுத்தார் என்று வேதங்கள் தெளிவுபடுத்துகின்றன.(2 Nephi 2:16 பார்க்கவும்).

  25. Gospel Topics, “Agency and Accountability,” topics.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

  26. Preach My Gospel: A Guide to Missionary Service (2019), 52, ChurchofJesusChrist.org; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது.

  27. Russell M. Nelson, “Becoming Exemplary Latter-day Saints,” Liahona, Nov. 2018, 113.

  28. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:23 பார்க்கவும்.

  29. சமாதானம் நிலவும் வீட்டில் நான் வளர அதிர்ஷ்டசாலியாக இருந்தேன். இது முதன்மையாக சபையின் விசுவாசமிக்க உறுப்பினராக இருந்த எங்கள் தாயின் செல்வாக்கு காரணமாக இருந்தது. என் அப்பா எல்லா வகையிலும் சிறந்து விளங்கினார், ஆனால் ஆர்வம் குறைவாக இருந்தார். அம்மா எங்கள் தகப்பனை கவுரவித்தார் மற்றும் பிணக்கைத் தவிர்த்தார். பிள்ளைகளாகிய எங்களுக்கு அவர் ஜெபிக்கவும் சபையில் கலந்து கொள்ளவும் கற்றுக்கொடுத்தார். ஒருவரை ஒருவர் நேசிக்கவும் சேவை செய்யவும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார் (மோசியா 4: 14–15 பார்க்கவும்). அத்தகைய வீட்டில் வளர்ந்தது சமாதானம் அளித்தது மற்றும் என் வாழ்க்கையில் ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருந்தது.

  30. ரசல் எம். நெல்சன் தனது 22 வயதில் தனது வகுப்பில் முதல் மாணவராக யூட்டா மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்றார். அவர் நீண்ட காலமாக அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்று விரும்பினார் மற்றும் முக்கிய மருத்துவ நிறுவனங்களில் சிறந்த பயிற்சி பெற்றார். அவர் கொரியா மற்றும் ஜப்பானில் இராணுவக் கடமைகளை உண்மையுடன் நிறைவேற்றினார். பல ஆண்டுகளாக அவர் திறந்த இதய அறுவை சிகிச்சையில் முன்னோடியாக இருந்தார் மற்றும் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டார். இந்த ஆயத்தம் உலகெங்கிலும் உள்ள மக்களை தனது மருத்துவ திறன்களால் ஆசீர்வதிப்பது குறிப்பிடத்தக்கது, தலைவர் நெல்சனின் ஆவிக்குரிய ஆயத்தம் இன்னும் முக்கியமானது. அவர் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப்பேரக்குழந்தைகளின் பெரிய குடும்பத்தின் தகப்பன் ஆவார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் தனது குடும்பத்திற்கும் சபைக்கும் உண்மையாக சேவை செய்துள்ளார்.

  31. Russell M. Nelson, “Opening Message,” Liahona, May 2020, 6; see also Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” Liahona, Nov. 2016, 81–84 பார்க்கவும்.

  32. Russell M. Nelson, “Opening Message,” 6.