தேவனின் அன்பு: ஆத்துமாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி
நமது வாழ்க்கையின் சூழ்நிலைகளில் தேவனின் அன்பு காணப்படாது, ஆனால் நமது வாழ்க்கையில் அவருடைய பிரசன்னம் காணப்படுகிறது.
சகோதர சகோதரிகளே, நமது பரலோக பிதாவாகிய தேவன் உங்களை எவ்வளவு முழுமையாக நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய ஆத்துமாவின் ஆழத்தில் அவருடைய அன்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
தேவனின் ஒரு பிள்ளையாக எவ்வளவு முழுமையாக நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து புரிந்துகொள்ளும்போது இது எல்லாவற்றையும் மாற்றுகிறது. நீங்கள் தவறுகளைச் செய்யும்போது உங்களைப்பற்றி நீங்கள் உணருகிற வழியை அது மாற்றுகிறது. கடினமான காரியங்கள் நடக்கும்போது உங்களைப்பற்றி நீங்கள் உணருகிற வழியை அது மாற்றுகிறது. தேவனின் கட்டளைகளைப்பற்றிய உங்கள் பார்வையை அது மாற்றுகிறது. மற்றவர்களைப்பற்றிய உங்கள் பார்வையையும், ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ண உங்களுடைய திறனையும் அது மாற்றுகிறது.
மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் போதித்தார்: “நமது முழு இருதயத்தோடும், வலிமையோடும், மனதோடும் பெலத்தோடும் தேவனை நேசிப்பதென்பது சகல நித்தியத்துக்குமான முதல் மகத்தான கட்டளை. ஆனால் தேவன் அவருடைய முழு இருதயத்தோடும், வலிமையோடும், மனதோடும், பெலத்தோடும் நம்மை நேசிக்கிறாரென்பது சகல நித்தியத்துக்குமான முதல் மகத்தான உண்மை.”1
அந்த மகத்தான நித்தியத்துக்குமான உண்மையை, நமது ஆத்துமாக்களின் ஆழத்தில் நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு அறிந்துகொள்வோம்?
தேவனின் அன்பின் மிக வல்லமையான நிரூபணம், தீர்க்கதரிசி நேபிக்கு ஒரு தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது. ஜீவ விருட்சத்தை பார்த்தபின், அதைப்பற்றிய விளக்கத்தை அறிய நேபி கேட்டான். பதிலாக, ஒரு பட்டணம், ஒரு தாய், ஒரு குழந்தையை ஒரு தூதன் நேபிக்குக் காட்டினான். நாசரேத் பட்டணத்தையும், குழந்தை இயேசுவை தனது கரங்களில் தூக்கி வைத்திருந்த நீதியுள்ள தாய் மரியாளையும் நேபி கண்டபோது, “இதோ, தேவ ஆட்டுக்குட்டி, ஆம் அவரே நித்திய பிதாவின் குமாரன்!”2 என தூதன் அறிவித்தான்.
இரட்சகரின் பிறப்பில், தேவன் தனது தூய்மையான மற்றும் முழுமையான அன்பை வெளிப்படுத்துகிறார் என்பதை அந்த பரிசுத்த தருணத்தில், நேபி புரிந்து கொண்டான். “மனுபுத்திரரின் இருதயங்களில் எங்கும் ஊற்றப்படுகிறதான” தேவனின் அன்பு3 என நேபி சாட்சியளித்தான்.
பூமி முழுவதிலும் மனுபுத்திரரின் இருதயங்களில் எங்கும் ஊற்றப்படுகிறதான, ஜீவ விருட்சத்திலிருந்து வெளிப்படுகிற ஒளியாக தேவனின் அன்பை நாம் சித்தரிக்க முடியும். தேவனின் ஒளியும் அன்பும் அவருடைய எல்லா சிருஷ்டிகளிலும் ஊடுருவுகின்றன.4
இருப்புக் கோலை நாம் பின்பற்றி, கனியைப் புசித்த பின் மட்டுமே நாம் தேவ அன்பை உணரமுடியுமென சிலசமயங்களில் நாம் தவறாக நினைக்கிறோம். எவ்வாறாயினும் தேவனின் அன்பு, விருட்சத்திற்கு வருபவர்களால் மட்டுமே பெறப்படுவதன்றி, அந்த விருட்சத்தைத் தேட நம்மைத் தூண்டும் வல்லமையாகும்.
“ஆகையால் அது எல்லாக் காரியங்களுக்கும் மேலாக வாஞ்சிக்கத்தக்கது” என நேபி போதித்தான், “ஆம் ஆத்துமாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக்கூடியது” என தூதன் வியந்தான்.5
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அன்பான குடும்ப உறுப்பினர் சபையை விட்டு வெளியேறினார். அவரிடம் பதில் தெரியாத அநேக கேள்விகள் இருந்தன. மனமாறிய அவருடைய மனைவி அவளுடைய விசுவாசத்திற்கு உண்மையாயிருந்தாள். எழுந்த வேறுபாடுகளில் தங்கள் திருமணத்தைப் பாதுகாக்க அவர்கள் கடுமையாக உழைத்தனர்
கடந்த ஆண்டு அவர் சபையைப்பற்றி சமரசம் செய்ய கடினமாயிருந்த மூன்று கேள்விகளை எழுதி பல ஆண்டுகளாக அவருக்கு நண்பர்களாக இருந்த இரண்டு தம்பதியினருக்கு அவற்றை அனுப்பினார். அந்தக் கேள்விகளைப்பற்றி சிந்திக்கவும், இரவு உணவிற்கு வந்து தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும்படியும் அவர் அவர்களை அழைத்தார்.
நண்பர்களுடன் இந்த சந்திப்பைத் தொடர்ந்து, ஒரு பணியில் பணியாற்ற ஆரம்பித்தார். மாலை உரையாடல் மற்றும் அவரது நண்பர்கள் அவரிடம் காட்டிய அன்பு ஆகியவை அவரது மனதின் முன் வந்தன. அவருடைய வேலையை அவர் நிறுத்த வேண்டி கட்டாயப்படுத்தப்பட்டார் என பின்னர் அவர் எழுதினார். அவர் சொன்னார், “ஒரு பிரகாசமான ஒளி என்னுடைய ஆத்துமாவை நிரப்பியது. … தெளிவின் இந்த ஆழமான உணர்வை நான் நன்கு அறிந்திருந்தேன், ஆனால் இந்த காரியத்தில் அது முன்பை விட வலுவாக வளர்ந்து பல நிமிடங்கள் நீடித்தது. என்மீது தேவ அன்பின் ஒரு வெளிப்பாடாக நான் புரிந்துகொண்ட உணர்வோடு நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். … நான் ஒரு ஆவிக்குரிய எண்ணத்தை உணர்ந்தேன், நான் சபைக்குத் திரும்பலாம் மற்றும் நான் அங்கு என்ன செய்கிறேன் என்பதில் தேவனின் இந்த அன்பை வெளிப்படுத்த அது எனக்குக் கூறிற்று.”
பின்னர் அவருடைய கேள்விகளைப்பற்றி அவர் வியப்புற்றார். தேவன் அவருடைய கேள்விகளுக்கு மதிப்பளித்தார், மேலும் தெளிவான பதில்கள் இல்லாதது அவர் முன்னேறுவதைத் தடுக்கக்கூடாது என்ற உணர்வை அவர் பெற்றார்.6 அவர் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும்போது தேவனின் அன்பை அனைவருடனும் அவர் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர் அந்த எண்ணத்தில் செயல்பட்டபோது, “என் ஆத்துமா அன்பால் நிரம்பியது, அநேக நாட்கள் நான் மிகுந்த மகிழ்ச்சியால் களிகூரமுடிந்தது”7 என தனது முதல் தரிசனத்திற்குப் பின்னர் குறிப்பிட்ட ஜோசப் ஸ்மித்துடன் ஒரு உறவை அவர் உணர்ந்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், சில குறுகிய மாதங்களுக்குப் பிறகு, 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடும்ப உறுப்பினர் தரித்திருந்த அதே அழைப்பை அவர் பெற்றார். முதல் முறையாக அவர் அழைப்பை பெற்றிருந்த, அவர் சபையின் கடமைமிக்க உறுப்பினராக தனது பொறுப்புகளைச் செய்தார். இப்போது அவருக்கான கேள்வி “இந்த அழைப்பை நான் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?” என்பதில்லை, ஆனால் “எனது சேவையின் மூலம் தேவனின் அன்பை நான் எவ்வாறு காட்ட முடியும்?” என்பதே. இந்த புதிய அணுகுமுறையுடன் அவர் தனது அழைப்பின் அனைத்து அம்சங்களிலும் மகிழ்ச்சி, அர்த்தம் மற்றும் நோக்கத்தை உணர்ந்தார்.
சகோதரிகளே, சகோதரரே,தேவ அன்பின் மாற்றக்கூடிய வல்லமையை நாம் எவ்வாறு பெறமுடியும்? “பிதா தம்முடைய குமாரனான, இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுகிறவர்களாய் இருக்கிற யாவர் மேலும், அவர் அருளின இந்த அன்பினால் நீங்களும் நிரப்பப்பட அவரிடத்தில் இருதயத்தின் முழு ஊக்கத்தோடும் ஜெபியுங்கள்”8 என தீர்க்கதரிசி மார்மன் நம்மை அழைக்கிறான். மற்றவர்களுக்காக அவருடைய அன்பினால் நாம் நிரப்பப்பட ஜெபிக்க மட்டும் மார்மன் நம்மை அழைக்கவில்லை, ஆனால் நமக்காகவும் தேவனுடைய தூய அன்பை நாம் அறிந்துகொள்ளும்படியாக ஜெபிக்கவும் அழைக்கிறான்.9
அவருடைய அன்பை நாம் பெறும்போது, “அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்” உண்மையான பின்பற்றுபவர்களாக மாறி அவர் செய்ததைப்போல அன்பு செலுத்தவும் சேவிக்கவும் முயற்சிப்பதில் அதிக மகிழ்ச்சியை நாம் காண்கிறோம்.10
நமது வாழ்க்கையின் சூழ்நிலைகளில் தேவனின் அன்பு காணப்படாது, ஆனால் நமது வாழ்க்கையில் அவருடைய பிரசன்னத்தில் காணப்படுகிறது. நம்முடைய சொந்த பலத்திற்கும் அப்பால் பெலனை நாம் பெறும்போது, அவருடைய ஆவி சமாதானம், ஆறுதல் மற்றும் வழிகாட்டுதலை கொண்டு வரும்போது அவருடைய அன்பை நாம் அறிவோம். சிலசமயங்களில் அவருடைய அன்பை உணருவது கடினமாக இருக்கக்கூடும். அவருடைய கரத்தைப் பார்க்கவும், அவருடைய சிருஷ்டிப்புகளின் அழகில் அவருடைய அன்பைப் பார்க்கவும் நமது கண்கள் திறந்திருக்க நாம் ஜெபிக்கலாம்.
இரட்சகரின் வாழ்க்கையையும், எல்லையற்ற தியாகத்தையும் நாம் சிந்திக்கும்போது, அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பை நாம் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். எலிசா ஆர். ஸ்நோவின் வார்த்தைகளை நாம் பயபக்தியுடன் பாடுகிறோம்: “அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை அவர் இலவசமாக சிந்தினார், அவருடைய ஜீவனை அவர் இலவசமாகக் கொடுத்தார்.”11 நமக்காக பாடுபட்ட இயேசுவின் மனத்தாழ்மை நம் ஆத்துமாக்களின் மீது வடிந்து, அவருடைய கரத்தில் மன்னிப்பைத் தேட நமது இருதயங்களைத் திறந்து, அவரைப் போலவே வாழ ஒரு விருப்பத்துடன் நம்மை நிரப்புகிறது.12
“அவரைப்போல நம் வாழ்க்கையை வடிவமைக்க நாம் அதிக அர்ப்பணிப்புள்ளவர்களாக மாறும்போது நமது அன்பு தூய்மையாகவும் அதிக தெய்வீகமாகவும் மாறுகிறது”13 என தலைவர் ரசல் எம். நெல்சன் எழுதினார்.
எங்களுடைய மகன் சொன்னான்: “எனக்கு 11 வயதாயிருந்தபோது, எங்களுடைய ஆரம்ப வகுப்பில் எங்களுடைய ஆசிரியரிடமிருந்து ஒளிந்துகொள்ளவும் வகுப்பின் முதல் பாகத்தை தவிர்க்கவும், என்னுடைய நண்பர்களும் நானும் தீர்மானித்தோம். இறுதியாக நாங்கள் வந்து சேர்ந்தபோது, ஆசிரியர் எங்களை அன்புடன் வாழ்த்தியது எங்களை வியப்புக்குள்ளாக்கியது. பின்னர் அவர் ஒரு இதயபூர்வமான ஜெபம் செய்தார், அந்த நேரத்தில், எங்கள் சொந்த விருப்பத்தின்படி நாங்கள் வகுப்புக்கு வர முடிவு செய்ததற்காக கர்த்தருக்கு மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்தார். பாடம் எதைப்பற்றியது அல்லது எங்கள் ஆசிரியரின் பெயரைக் கூட என்னால் நினைவுகூற முடியவில்லை, ஆனால் இப்போது, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், அன்று அவர் என்னிடம் காட்டிய தூய அன்பால் நான் இன்னும் தொடப்படுகிறேன்.”
ஐந்து வருடங்களுக்கு முன்பு, ரஷ்யாவில் ஆரம்ப வகுப்பில் கலந்துகொண்டபோது தெய்வீக அன்பின் ஒரு உதாரணத்தை நான் கவனித்தேன். விசுவாசமுள்ள ஒரு சகோதரி இரண்டு பிள்ளைகளுக்கு முன்னால் மண்டியிட்டு, அவர்கள் மட்டுமே பூமியில் வாழ்ந்தாலும், இயேசு அவர்களுக்காக பாடுபட்டு மரித்திருப்பார் என அவர்களுக்கு சாட்சியம் அளிப்பதை நான் கண்டேன்.
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமானவர் உண்மையில் நம் ஒவ்வொருவருக்காகவும் மரித்தார் என்று நான் சாட்சியமளிக்கிறேன். அது நம்மீதும் அவரது பிதாவின் மீதுமான அளவற்ற அன்பின் வெளிப்பாடாக இருந்தது.
“என் மீட்பர் உயிரோடிருக்கிறாரென நான் அறிவேன். என்ன ஒரு ஆறுதலை இந்த இனிய வாக்கியம் கொடு்க்கிறது! … அவருடைய அன்புடன் [நம்மை] ஆசீர்வதிக்க அவர் ஜீவிக்கிறார்.”14
நமக்காக தேவனிடமுள்ள தூய அன்பைப் பெற நமது இருதயங்களை நாம் திறப்போமாக, பின்னர், நாம் செய்கிற, இருக்கிற எல்லாவற்றிலும் அவருடைய அன்பைக் கொட்டுவோமாக. இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.