பொது மாநாடு
“இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?”
அக்டோபர் 2021 பொது மாநாடு


13:6

“இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?”

கர்த்தரை முதன்மையாக நேசிக்கிறீர்கள் என்பதைக் காட்ட உங்கள் சொந்த வாழ்க்கையில் என்ன காரியங்களை உங்களால் செய்யமுடியும்?

2019 நவம்பரில், என்னுடைய நண்பரும் நானும் பரிசுத்த தேசத்திற்குச் சென்றிருந்தோம். அங்கிருந்தபோது, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப்பற்றிய வசனங்களை நாங்கள் பரிசீலித்து படித்தோம். ஒரு காலையில், கலிலேயா கடலின் வடமேற்கு கடற்கரையில் இயேசு உயிர்த்தெழுந்ததைத் தொடர்ந்து அவருடைய சீஷர்களை சந்தித்த இடத்தில் நாங்கள் நின்றோம்.

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், யோவான் அதிகாரம் 21ல், நாம் வாசிப்பதைப்போல, பலன் ஒன்றுமில்லாமல், பேதுருவும் பிற சீஷர்களும் இரவு முழுவதும் மீன் பிடிக்க முயன்றனர்.1 காலையில், தங்களுடைய வலையை படகின் மறுபக்கம் போடும்படி அவர்களுக்குக் கூறிய ஒரு மனிதர் கடற்கரையில் நின்றுகொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் வலை அற்புதமாக நிரம்பியிருந்தது.2

அந்த மனிதர் கர்த்தர் என்பதை அவர்கள் உடனேயே கண்டறிந்து அவரை வரவேற்க விரைந்து சென்றனர்.

மீன்கள் நிரம்பியிருந்த வலையை அவர்கள் கடற்கரைக்கு இழுத்தபோது, இயேசு சொன்னார், “வாருங்கள் போஜனம்பண்ணுங்கள்.”3 “அவர்கள் போஜனம் பண்ணின பின்பு இயேசு சீமோன் பேதுருவை நோக்கி, யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்றார்.4

அதே கடற்கரையில் நான் நின்றுகொண்டிருந்தபோது, இரட்சகர் ஒருநாள் என்னிடம் கேட்கக்கூடிய மிக முக்கியமான கேள்விகளில் அவருடைய கேள்வி ஒன்றாயிருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். “ரசல், இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்ட அவருடைய குரலை நான் ஏறக்குறைய கேட்க முடிந்தது.

“இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என அவர் பேதுருவிடம் கேட்டபோது, இயேசு எதைக் குறிப்பிட்டார் என நீங்கள் ஆச்சரியப்பட்டீர்களா.

நம்முடைய நாளில் இந்தக் கேள்வியை நமக்கு நாம் தொடர்புபடுத்தும்போது, நாம் எவ்வளவு சுறுசுறுப்பாயிருக்கிறோம் என்பதைப்பற்றியும், நமது கவனத்தையும் நமது நேரத்தையும் போட்டியிடுகிற அநேக நேர்மறையான எதிர்மறையான தாக்கங்களைப்பற்றியும் கர்த்தர் நம்மிடம் கேட்கக்கூடும். இந்த உலகக் காரியங்களை விட நாம் அவரிடத்தில் அன்பாயிருக்கிறோமா என நம் ஒவ்வொருவரிடம் அவர் கேட்கக்கூடும். வாழ்க்கையில் உண்மையில் நாம் எதை மதிக்கிறோம், யாரைப் பின்பற்றுகிறோம், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டைவீட்டாருடன் நமது உறவுகளை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப்பற்றிய ஒரு கேள்வியாக இது இருக்கலாம். அல்லது உண்மையில் எது நமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டு வருகிறது என்றும் அவர் கேட்கக்கூடும்.

இரட்சகர் அவருடைய சீஷர்களுக்கு வழங்கிய, அவர் நமக்கு வழங்குகிற மகிழ்ச்சியை, சந்தோஷத்தை, சமாதானத்தை இந்த உலகத்தின் காரியங்கள் நமக்குக் கொண்டு வருகிறதா? அவரை நேசிப்பதன் மூலம், அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியை, சந்தோஷத்தை, சமாதானத்தை அவர் மட்டுமே நமக்குக் கொண்டு வரமுடியும்.

“இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்ற கேள்விக்கு எவ்வாறு நாம் பதிலளிப்போம்.

இந்தக் கேள்விக்கு ஒரு முழு பதிலை நாம் கண்டுபிடிக்கும்போது, நாம் சிறந்த குடும்ப உறுப்பினர்களாக, அண்டை வீட்டாராக, குடிமக்களாக, சபையின் உறுப்பினர்களாக, தேவனின் குமாரர்களாக, குமாரத்திகளாக நாம் மாற முடியும்.

என்னுடைய வயதில் அநேக இறுதிச் சடங்குகளில் நான் பங்கேற்றிருக்கிறேன். நிச்சயமாக, நான் கவனித்தவைகளை உங்களில் அநேகர் கவனித்திருப்பீர்கள். மரித்துப்போன ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரின் வாழ்க்கையை கொண்டாடும் போது, ஒரு பேச்சாளர் அந்த நபரின் வீட்டின் அளவு, கார்களின் எண்ணிக்கை அல்லது வங்கி கணக்கு நிலுவைகளைப்பற்றி பேசுவது அரிது. வழக்கமாக அவர்கள் சமுக ஊடக பதிவுகளைப்பற்றி பேசுவதில்லை. நான் கலந்துகொண்ட அநேக இறுதிச் சடங்குகளில், தங்களுக்கு அன்பிற்குரியவர்களின் உறவுகளைப்பற்றி, மற்றவர்களுக்கு சேவை, வாழ்க்கைப் பாடங்கள், அனுபவங்கள் மற்றும் இயேசு கிறிஸ்து மீதான அவர்களின் அன்பைப்பற்றி அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.

என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். ஒரு நேர்த்தியான வீடு அல்லது ஒரு நேர்த்தியான காரை வைத்திருப்பது தவறு அல்லது சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவது மோசம் என நான் சொல்லவில்லை. நான் சொல்லுவது என்னவென்றால், இறுதியில், இரட்சகரை நேசிப்பதுடன் ஒப்பிடும்போது, அந்தக் காரியங்கள் மிகச் சிறியதாக காணப்படும்.

நாம் அவரை நேசித்து, அவரைப் பின்பற்றும்போது, அவரில் நமக்கு விசுவாசமிருக்கும். நாம் மனந்திரும்புகிறோம். அவருடைய எடுத்துக்காட்டை நாம் பின்பற்றி ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியைப் பெறுகிறோம். நாம் இறுதிவரை நிலைத்திருந்து, உடன்படிக்கை பாதையில் தங்குகிறோம். நாம் வைத்திருக்கும் மனக்கசப்பைக் கைவிடுவதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டாரை மன்னிக்கிறோம். தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள நாம் தீவிரமாய் முயற்சிக்கிறோம். கீழ்ப்படிதலாயிருக்க நாம் முயற்சிக்கிறோம். நாம் உடன்படிக்கையைச் செய்து அவைகளைக் கைக்கொள்ளுகிறோம். நமது தகப்பன்மார்களையும் தாய்மார்களையும் நாம் மதிக்கிறோம். எதிர்மறையான உலக செல்வாக்குகளை நாம் ஒதுக்கி வைக்கிறோம். அவருடைய இரண்டாம் வருகைக்காக நம்மை நாம் ஆயத்தப்படுத்துகிறோம்.

“ஜீவிக்கிற கிறிஸ்து: அப்போஸ்தலர்களின் சாட்சியில்,” நாம் வாசிக்கிறோம்: “ஒரு நாள் [இயேசு] பூமிக்குத் திரும்புவார். … அவர் ராஜாதி ராஜாவாக ஆட்சி செய்வார், கர்த்தாதி கர்த்தாவாக ஆளுகை செய்வார், ஒவ்வொரு முழங்காலும் முடங்கும், அவருக்கு முன்பாக ஒவ்வொரு நாவும் வணங்கிப் பேசும். நமது கிரியைகள் மற்றும் நமது இருதயத்தின் விருப்பங்களுக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் அவரால் நியாயந்தீர்க்கப்பட நின்றுகொண்டிருப்போம்.”5

“ஜீவிக்கிற கிறிஸ்து” ஆவணத்தில் கையெழுத்திட்ட அப்போஸ்தலர்களில் ஒருவராக, இயேசு “உலகத்தின் ஒளி, ஜீவன் மற்றும் நம்பிக்கை”6 என்று அறிந்திருப்பது, அவரை ஒவ்வொரு நாளும் அதிகமாக நேசிக்க எனக்கு அதிக விருப்பம் தருகிறது என என்னால் சொல்ல முடியும்.

பரலோக பிதாவும், இயேசு கிறிஸ்துவும் ஜீவிக்கிறார்கள் என நான் சாட்சியளிக்கிறேன். அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள் என நான் சாட்சியளிக்கிறேன் “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்”7 எனவும் வேதங்கள் போதிக்கிறது. இயேசு “அவரை நம்புகிற அநேகரும் தேவனுடைய குமாரர்களாக [குமாரத்திகளாக] ஆகும்படிக்கு, தனது ஜீவனைக் கொடுக்குமளவுக்கு, உலகத்தில் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்”8 எனவும் வேதங்கள் போதிக்கின்றன.

அவர் ஒரு இரட்சகரை மைய நபராகக் கொண்டு தனது இரட்சிப்பின் திட்டத்தை தயார் செய்தார் என்பதால் பரலோக பிதா நம்மை மிகவும் நேசித்தார். பரலோகத்தில் மகா ஆலோசனை சபையில் “நான் யாரை அனுப்புவேன்?” என பரலோக பிதா கேட்டபோது, இயேசு நம்மை மிகவும் நேசித்தார். பிதாவின் ஆவிக் குழந்தைகள் அனைவருக்கும் முதற்பேரான இயேசு பதிலளித்தார், “இதோ இருக்கிறேன், என்னை அனுப்பும்.”9 அவர் பிதாவிடம் சொன்னார், “பிதாவே உமது சித்தம் செய்யப்படும், மகிமை என்றென்றைக்கும் உம்முடையதாகும்.”10 அவர்களைப் போலாகவும், அவர்களுடைய பிரசன்னத்திற்குத் திரும்பும்படிக்கும் நமது இரட்சகராகவும் மீட்பராகவுமிருக்க இயேசு மனமுவந்து முன்வந்தார்.

அவர்களுடைய பிரசன்னத்திற்கு திரும்ப நாம் நம்ப வேண்டும் என்று இந்த இரண்டு வசனங்களும் கற்பிக்கின்றன. இயேசுவிலும், தேவனுடைய மகிழ்ச்சியின் திட்டத்திலும் நாம் நம்பவேண்டும். நம்புவது என்பது, நமது இரட்சகரை நேசிக்கவும் பின்பற்றவும், சோதனைகளுக்கும், சச்சரவுகளுக்கும் மத்தியிலும் கட்டளைகளைக் கைக்கொள்ளுவதுமே.

இன்றைய உலகம் அமைதியற்றது. ஏமாற்றங்கள், கருத்து வேறுபாடுகள், துன்பங்கள் மற்றும் கவனச்சிதறல்கள் உள்ளன.

தலைவர் டாலின் எச். ஓக்ஸ் 2017ல் பேசும்போது பின்வருபவற்றைக் குறிப்பிட்டார்: “அதிக கவலைகள் நிரம்பிய இவை சவாலான காலங்கள்: போர்கள் மற்றும் போர்கள் பற்றிய வதந்திகள், தொற்று நோய்களின் சாத்தியமான பரவும் நோய்கள், வறட்சிகள், வெள்ளம் மற்றும் புவி வெப்பமடைதல்.”11

பெரும் சவால்களை நாம் எதிர்கொண்டாலும், இயேசுவின் மீதான அன்பையும் நம்பிக்கையையும் நாம் இழக்க முடியாது. பரலோக பிதாவும் இயேசுவும் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை. அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள்.

நமது வாழ்க்கையில் பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் முதன்மையாக வைப்பதின் முக்கியத்துவத்தை கடந்த அக்டோபரில் தலைவர் ரசல் எம். நெல்சன் நமக்குப் போதித்தார். இஸ்ரவேல் என்ற வார்த்தையின் அர்த்தங்களில் ஒன்று “தேவன் மேலோங்கட்டும்” என தலைவர் நெல்சன் போதித்தார்.12

இந்தக் கேள்விகளை நம் ஒவ்வொருவரிடமும் அவர் கேட்டார்: “உங்கள் வாழ்க்கையில் தேவன் மேலோங்க அனுமதிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வாக்கு, தேவனாக இருக்க அனுமதிக்க நீங்கள் விருப்பமாயிருக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் செயல்களில் செல்வாக்கு செலுத்த அவருடைய வார்த்தைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய உடன்படிக்கைகளையும் நீங்கள் அனுமதிப்பீர்களா? வேறு எதையும் விட அவருடைய குரல் முன்னுரிமை எடுக்க நீங்கள் அனுமதிப்பீர்களா? மற்ற எல்லா லட்சியங்களுக்கும் மேலாக, அவர் நீங்கள் செய்ய விரும்புவற்கு முன்னுரிமை அளிக்க நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்களா? உங்கள் விருப்பம் அவரது சித்தத்தால் விழுங்கப்படுவதற்கு நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்களா?”13

நம்முடைய உண்மையான மகிழ்ச்சி, தேவனுடன், இயேசு கிறிஸ்துவுடன், ஒவ்வொருவருடனும் நமது உறவுகளைப் பொருத்திருக்கிறதென்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஒருவருக்கொருவர் சிறப்பாக சேவை செய்ய சில சிறிய காரியங்களைச் செய்வதில் குடும்பத்தை, நண்பர்களை, அண்டைவீட்டாரை சேர்ப்பது நமது அன்பைக் காட்டுவதற்கான ஒரு வழி. இந்த உலகத்தை ஒரு சிறப்பான இடமாகச் செய்கிற காரியங்களைச் செய்யுங்கள்.

கர்த்தரை முதன்மையாக நேசிக்கிறீர்கள் என்பதைக் காட்ட உங்கள் சொந்த வாழ்க்கையில் என்ன காரியங்களை உங்களால் செய்யமுடியும்?

நமது அண்டைவீட்டாரை அவர் நேசிப்பதைப்போல அவர்களை நேசிக்க நாம் கவனம் செலுத்தும்போது, நம்மைச் சுற்றியிருப்பவர்களை உண்மையாக நேசிக்க நாம் ஆரம்பிப்போம்.14

“இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்ற இரட்சகரின் கேள்விக்கு எவ்வாறு நாம் பதிலளிப்போம் என நான் மீண்டும் கேட்கிறேன்.

நான் செய்ததைப்போல, இந்தக் கேள்வியை நீங்கள் கருதும் போது, மிக நீண்ட காலத்திற்கு முன்பு பேதுரு செய்ததைப்போல “ஆம், ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்,”15 என நீங்கள் பதிலளிக்கும்படி நான் ஜெபிக்கிறேன், பின்னர் தேவனையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் நேசிப்பதாலும் சேவிப்பதாலும் அதைக் காட்டுங்கள்.

நாம் வாழுகிற வழியிலும், ஒருவருக்கொருவரை நடத்துகிறதிலும் நம்மை வழிநடத்த இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பெற்றிருக்க நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என நான் சாட்சியளிக்கிறேன். தேவனுடைய ஒவ்வொரு குமாரத்தியும் குமாரனும் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள் என்பதை அவரில் நாம் கண்டுபிடிக்கிறோம்.

இயேசு கிறிஸ்து நம் அன்பான இரட்சகர் என்று நான் சாட்சியளிக்கிறேன். அவர் ஒரே பேரான தேவ குமாரன். இந்த சாட்சியை இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், தாழ்மையுடன் சாட்சியளிக்கிறேன், ஆமென்.